வரம் 30
வர்ஷனாவின்கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன்னில் சரிபாதியாக அவளை ஏற்றுக் கொண்டான் யதுநந்தன். சூழநின்ற உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த, இருவரின் பெற்றோரின் மனங்களும் மகிழ்ச்சியில் நிறைய இனிய தருணமாக அது அமைந்தது.
அவள் நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமத்தை இட்டான். தொடர்ந்து அதன்பின் நடக்க வேண்டிய சம்பிரதாய நிகழ்வுகளை ஐயர் முறைப்படி செய்து வைத்தார். பெரியவர்களின் காலில் விழுந்து மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கினர். வந்திருந்த உறவினர்க்கு கோயில் மண்டபத்திலேயே விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்து முடிந்ததும் கோவிலில் இருந்து இருவீட்டினரும் யதுநந்தனின் வீட்டிற்குச் சென்றனர்.
அவர்கள் வீட்டிற்குள் கார் நுழையவே வர்ஷனாவிற்குப் படபடப்பாக இருந்தது. வாசலில் வைத்து ஆலாத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் வரவேற்றார்கள். தனது வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழையும்போதே 'இனிமேல் என் வாழ்வு இந்த வீட்டோடுதான். என்னால் இந்த வீட்டுக்குள் எப்போதும் சந்தோஷம் நிலைபெறவேண்டும்' என்று மனதார வேண்டினாள். வீட்டிற்குள் வந்தவர்களைச் சந்திரமதி முதலில் சாமியறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே விளக்கேற்றி வைத்து இறைவனை மனதார வேண்டினாள்.
மாலைவரை அங்கே இருந்த வர்ஷனாவின் வீட்டினர் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். மறுவீட்டு விசேஷத்திற்கு அனைவரையும் வருமாறு அழைப்பு விடுத்தனர். என்றும் திடமாக இருக்கும் மாலதி புறப்படும்போது அழுதுவிட்டாள். தன் தாய் அழுவதைக் கண்ட வர்ஷனா ஓடிச்சென்று தாயை அணைத்துக் கொண்டாள்.
"என் மாலுவா அழுவது... அச்சச்சோ என் மாலுச்செல்லத்துக்கு அழக்கூடத் தெரியுமா...?" என்று தன் தாயை சமாதானப்படுத்தக் கூறினாள். ஆனால், அவளாலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் நின்ற வருணியனுக்கும் தன் தமக்கையைப் பிரிவதை நினைக்க அழுகை வந்தது. கலையரசனும் கண்கலங்கி நின்றார். எல்லோருமே கலங்கிப் போய் நின்றவேளை, ஒரு மழலையின் குரல் மட்டும் தனித்துக் கேட்டது. "அம்மா... நீங்களெல்லாம் ஏன் அழுவுறிங்க. குட்டிப் பாப்பா நானே அழலையே" என்று வர்ஷனாவின் புடவையின் முந்தானையைப் பிடித்திழுத்தபடி கேட்டாள் இலக்கியா. அம் மழலை கேட்ட அழகில் தன் கவலையை மறந்து அதனைத் தூக்கி அதன் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
வர்ஷனாவின் உறவுகள் விடைபெற்றுச் சென்றதும் வீட்டினர் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். யதுநந்தன் உள்ளே சென்று விட்டான். வர்ஷனா புது வீடு, புது உறவுகள் என்பதால் சங்கோஜத்தில் நெளிந்து கொண்டிருந்தாள். அவளது நிலையை உணர்ந்து கொண்ட பானுமதி அவள் அருகில் சென்று அமர்ந்தாள். "அண்ணி, என்ன ரொம்ப நெர்வஸா இருக்கிங்க? இதுதான் இனி உங்கள் வீடு. எனக்குக் கூட இந்த வீட்டில் இனிமேல் உரிமையில்லை. என்ன செய்யுறதாயிருந்தாலும் உங்ககிட்டதான் நான் பெர்மிஷன் கேட்டு செய்யணும்."
"என்ன நீங்க இப்படிச் சொல்லுறிங்க"
"உண்மைதான் அண்ணி, இனி இந்த வீட்டின் மகாராணி நீங்கதான்."
ஐயையோ, இதைக் கேட்டால் அத்தையும் மாமாவும் தப்பாக நினைக்கப் போகின்றார்களே என்ற பயத்தில் அவர்களைப் பார்த்தாள். ஆனால், அவர்களோ பானுமதி சொல்வதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
"அப்போ நானு நானு..." என்று அவர்கள் நடுவில் வந்து நின்று கேட்டாள் இலக்கியா.
"எங்க இலக்கிக் குட்டிதான் இந்த அரண்மனையின் பிரின்சஸ்." என்றார் சந்திரமதி.
"ஐ நான் பிரின்சஸ்..." என்று சோஃபாவில் ஏறித் துள்ளிக்குதித்தாள். அப்போது உள்ளே வந்த சிவானந்த் "அம்மா, நந்தன் எங்கம்மா? புதுமாப்பிள்ளையைக் காணல."
"ரூமுக்குப் போனான் சிவா." எனவும் அவனைத் தேடி அவனது அறைக்குச் சென்றான். அங்கே யதுநந்தன் அறையின் பால்கனியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
"என்ன மச்சி, பொண்டாட்டிய விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்துட்ட"
"ம்ச்.."
"என்னடா மச்சி சலிச்சுக்குற. நீ ஆசைப்பட்டபடி வர்ஷனாவைத்தானே மேரேஜ் பண்ணின. அப்புறம் எதுக்குடா சலிப்பு."
"ஒன்றுமில்லடா. சும்மா... நீ எங்கே கோயிலில் இருந்து திடீரெனக் காணாமல் போய்விட்ட"
"அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். வா கீழே போவோம். எனக்கு ரொம்பப் பசிக்குதுடா." என்று அவனைக் கீழே அழைத்து வந்தான்.
இரவு உணவை அனைவரும் உண்டதும் வர்ஷனாவைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் பானுமதி. அவளது திருமணப் பட்டு, நகைகள் அனைத்தையும் களைந்துவிட்டு வெண்மையில் சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் அங்கங்கே பரவியிருந்த அழகிய ஷிபான் சேலையை உடுத்திவிட்டாள். கழுத்தில் தாலியுடன் மெல்லிய சங்கிலியும் கையில் தங்க வளையல்கள் இரண்டும் அணிவித்தாள். ஒற்றைப் பின்னலிட்டு தலைநிறைய மல்லிகைச் சரம் தொடுத்து விட்டாள். பார்த்துத் தயார்படுத்தியவள் ஒருமுறை தன் அண்ணியைச் சுற்றிப் பார்த்தாள். "அண்ணி, நீங்க ரொம்ப அழகாய் இருக்கிங்க" என்றாள். வெட்கத்தில் முகம் சிவந்தவளை அழைத்துக் கொண்டு அண்ணனின் அறைக்குச் சென்றாள். அங்கே இலக்கியாவைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தான் யதுநந்தன். "அண்ணா, இலக்கிக்குட்டி என்கூட படுத்துக்கட்டும் " என்றவள் குழந்தையைத் தூக்கிச் சென்றாள்.
அவன் குளியலறைக்குச் செல்லவும் அந்த அறையைச் சுற்றி நோட்டம் விட்டாள். சகல வசதிகளுடனும் மிகப் பிரமாண்டமாக இருந்தது அந்த அறை. அதுவே ஒரு சிறிய வீடுபோல அவளுக்குத் தோன்றியது. அறையை ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த பால்கனியருகே சென்றாள். கண்ணாடிக் கதவைத் திறந்தவள், குளிர்காற்று வீசவும் இதமாக உணர்ந்தாள். நிலவு வெளிச்சத்திலே வீட்டைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான தோட்டத்தையும் அங்கங்கே எரியவிடப்பட்டிருந்த மின் விளக்குகள் தோட்டத்தின் அழகை மேலும் எடுத்துக் காட்டுவதையும் பார்த்து ரசித்தாள். இருள் சூழ்ந்த வானில் ஒளிவிளக்காய் பிரகாசித்தது நிலவு.
"ஹேய்... என்ன இங்க வந்திட்ட. நேற்று நான் ரென்சனாய் இருந்தேன். அதுதான் உன் கூடப் பேசல்ல. சாரி..." என்று நிலவைப் பார்த்துப் பேசினாள். "நீ ரொம்ப பாவம். நேற்றைவிட இன்று கொஞ்சம் மெலிந்து விட்டாய்." என்றாள். அப்போது மேகம் ஒன்று நிலவை மூடிச் சென்றது. "ஏய், ஏய் எதுக்காக என் நிலாவை மூடுகின்றாய்?" என்று மேகத்திடம் கோபித்துக் கொண்டாள்.
குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் அவள் பால்கனியில் நிலவுடனும் மேகத்துடனும் பேசிக் கொண்டிருப்பதைக் பார்த்தான். அந்த இரவின் விளக்கொளியும் நிலவின் ஒளியும் சேர்ந்து அவள் அழகை எடுத்துக் காட்டியது. அவள் கட்டியிருந்த சேலையும் தலைநிறைய சூடியிருந்த மல்லிகைப்பூ பூவும் தேவதையொன்று அங்கே நிற்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. மெல்ல அவள் அருகே சென்றான். அவளோ இவன் வந்ததைக் கவனிக்காமல் நிலவுடன் பேசிக் கொண்டே இருந்தாள். மிக அருகில் சென்றவன் "ஷனா, யார் அது உன் பிரண்ட்ஸா" என்று கேட்டான். அவன் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பியவள் மிக நெருக்கத்தில் அவன் முகத்தைக் காணவும் தடுமாறிப் போனாள். அவன் கண்கள் தன் முகத்தில் ஊடுருவதைக் கண்டவள் கண்கள் படபடக்க நின்றாள். அவன் அருகாமை அவள் உடலைச் சிலிர்க்கச் செய்தது. அவள் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டவன் மேலும் அவளை இம்சிக்காமல் திரும்பி உள்ளே சென்றான். அவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.
உள்ளே சென்றவன் கட்டிலில் சென்று அமர்ந்தான். அவள் தயங்கி நிற்கவும் "வர்ஷனா, இங்கே வந்து உட்காரு" என அழைத்தான். அவள் வந்து அமரவும் எதுவும் பேசாது சிறிதுநேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தான். அந்த அமைதி அவளை என்னவோ பண்ணியது. நெஞ்சம் படபடக்க தன் கைவிரல்களை ஆராய்ந்தபடி இருந்தாள்.
மெல்லிய குரலில் வர்ஷனா என அழைத்தான். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. "ம்ம்" என்று மட்டும் கூறினாள்.
"வர்ஷனா... நான் சொல்வதைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதே. நாம் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கல. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் உண்மையான காதல் என்னும் அடித்தளம் இல்லாமல் இந்தத் தாலியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே அப்படியொரு வாழ்க்கையைத் தொடங்கி அதில் தோற்றுப் போய் நின்றேன்..." என்றவன் சில நொடிகள் அமைதியாகிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
"நம் வாழ்க்கையை இந்தக் கல்யாணம் மட்டும் முடிவு பண்ணக் கூடாது. எந்தக் காரணமும் நம்மைப் பிரிக்காத அளவுக்கு இருவரின் அன்பும் உறுதியாக இருக்கின்றது என்பதை இருவரும் உணரணும். எந்த சூழ்நிலையிலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டோம் என்று நம்பணும். அந்த நம்பிக்கை எப்போது நமக்கிடையே உருவாகின்றதோ அன்று நாம் கணவன் மனைவியாக வாழ்வோம். அதுவரை நல்ல நண்பர்களாக இருப்போம்... என்னடா தாலிகட்டிக் கூட்டிட்டு வந்திட்டு இப்படி நண்பர்களாக இருப்போம் என்று சொல்கின்றானே என்று யோசிக்கின்றாயா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அதனால்தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தன். ஆனால், இன்னும் என் மனதில் ஏற்கனவே பட்ட காயத்தால் உண்டான பயம் முழுமையாக நீங்கவில்லை. நம் இருவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கப் புரிதல் அவசியம். சிறிதுகாலம் நண்பர்களாகப் பழகுவோம். உனக்கு இதில் சம்மதமா?" என்று அவளிடம் கேட்டான்.
அவனின் தவிப்பும் பயமும் முழுமையாகப் புரிந்தது அவளுக்கு.
"நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி." என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அவளின் புரிதலைக் கண்டவன் சந்தோஷத்தில் அவள் கைகளைப் பற்றி "தங்க்யூ வெரிமச் ஷனா" என்றான். அவனின் ஷனா என்னும் அழைப்பே அவளின் மனதுக்கு நிறைவைத் தந்தது.
அவள் தூங்குவதற்காகப் போர்வையையும் தலையணையையும் எடுத்தாள்.
"ஏன் ஷனா என்ன செய்யப் போகின்றாய்?"
"தூங்குவதற்குத்தான்..."
"அதற்கேன் கீழே படுக்க வேண்டும்?"
"வேறு..."
"நண்பர்களாகப் பழகுவோம் என்றுதான் சொன்னேன். அதற்காகக் கிட்டயே நெருங்கக் கூடாது என்று சொல்லவில்லையே. கட்டிலிலேயே படுத்துக்க."
"நான் கீழேயே.."
"வேண்டாம் நீ இங்கேயே படு."
"சரி" என்றவள் கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள். அவனும் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி மல்லாக்கப் படுத்தான்.
வர்ஷனா அவனைப் பார்த்தபடி படுத்தாள். இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவனை ரசித்தாள். அவள் பார்வையை உணர்ந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். "என்ன...?" என்றான். ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள் கண்களை மூடி அவன் அருகாமை தந்த இதத்திலேயே தூங்கிப் போனாள். அவனும் அவளைப் பார்த்தபடி உறங்கினான்.