அத்தியாயம் : 12
நாளை நிச்சயதார்த்தம் நடக்கவிருக்க, இன்று பேங்க் லக்கரில் இருந்து எடுத்து வந்திருந்த நகைகளில் எதை சரிகாவுக்கு போட்டு விடுவது என ஆலோசித்துக் கொண்டிருந்தனர். கட்டில் முழுவதும் நகை பெட்டிகளாக குவிந்திருக்க,
" உனக்கு எதெது வேணுமோ? அதையெல்லாம் எடுத்துக்கோ சரிகா. இல்லை எல்லாமே வேணுமென்றாலும் எடுத்துக்கோ. உன் தங்கச்சிகளுக்கு வேறு வாங்கிக்கலாம் " என்றார் சுலோச்சனா.
"எனக்கு இதெல்லாம் தெரியாது சித்தி. நீங்க எதை போட்டுக்க சொல்றீங்களோ அதை போட்டுக்கிறேன். எதை எடுத்த சொல்றீங்களோ அதை எடுத்துக்கிறேன் " என்று விட்டாள்.
" தாரிகா, நாளைக்கு நீ எந்த நகை போடுற?" என்றார் சித்ரா
"சிம்பிளா எதாவது கொடுங்கம்மா " என்று விட்டாள்.
" நயனி, உனக்கு எது வேணும்?" என்று பாட்டி கேட்க,
" எனக்கு நகை இருக்கு பாட்டி. அதையே போட்டுக் கொள்கிறேன்"
"அது சும்மா, நார்மலா வீட்டில் அணிவது. நிச்சயத்துக்கு எவ்வளவு பெரிய மனுசங்க எல்லாம் வருவாங்க. சாதாரணமாக எல்லாம் நிற்க முடியாது " என்றார் கண்டிப்புடன்.
" அது.. " என்று தயங்கியவள். " திலீபன் வாங்கிக் கொடுத்ததில் நகையும் இருந்தது பாட்டி " என்றாள் மெதுவாக
பெண்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள!
" எங்கே? எடுத்துட்டு வா பார்ப்போம் " என்றார்.
நயனி, தனது அறைக்கு சென்று திலீபன் கொடுத்த பையை அவர்கள் முன் நீட்டினாள்.
அதை வாங்கி பிரித்து பார்க்க! அடர் ரோஜா நிறத்தில், வெள்ளை நிற கற்கள் உடல் முழுவதும் பரவியிருக்க, பார்க்வே கண்களை விட்டு நகர்த்த முடியாது போல! அவ்வளவு அழகாக இருந்தது. அதில் சில நகை பெட்டிகள் இருக்க, திறந்து பார்த்தனர். அடர்த்தியான நெற்றி சுட்டி அதேநிற கற்கள் பதிந்திருந்தது. அதே போன்று காதணிகள், நான்கு வளையல்கள், மெல்லிய இடுப்பு சங்கிலி, தங்கத்தில் கொலுசுகள் இருக்க, வாயடைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதலில் சுதாரித்த தாரிகா, " ஏன் நயனி இதுவரை தாத்தா கொடுத்த சம்பளத்தை எல்லாம் ஒரே நாளில் உனக்கே செலவி பண்ணிட்டாரா திலீபன்?' என்றாள் ஆச்சரியமாக
"ரொம்பவே நல்லாயிருக்கு நயனி. உனக்காவது தேடி தேடி வாங்கிட்டு வர புருசன் கிடைச்சிருக்காரே அதுவரை சந்தோஷம் " என்றார் பாட்டி
" சரிகா, நீயும் ராகுலை வாங்கிட்டு வர ஆரம்பத்திலேயே டிரைன் பண்ணிடு" என்றார் தாரிகா கிண்டலாக
"ரொம்ப பயந்துட்டே இருந்தேன் அத்தை. திடீர்னு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்களே எப்படி பார்த்துப்பாரோ? என்னவோன்னு!. ஆனால் இந்த ஒரு விசயத்தை வைத்து பார்க்கும் போதே! நயனிக்கு அவரே எல்லாம் பார்த்து பார்த்து செய்வார்னு தெரியுது. இனி என் பொண்ணை பற்றி கவலையில்லை. நல்லவர் கையில் தான் கடவுள் அவளை ஒப்படைத்திருக்கார்" என்ற சுலோச்சனாவுக்கு கண்கள் கலங்கியது.
"எல்லாம் நல்லதாக தான் நடக்கும். நீ கவலைப்படாதே" என்றார் சித்ரா ஆறுதலாக
மறுநாள் இரவே, விழா சம்பந்தப்பட்ட ஆர்டர்கள் யார் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விவரம், போன் நம்பர், கொடுக்கப்பட்டிருந்த அட்வான்ஸ் தொகை, எத்தனை நபர்கள் என அனைத்து விசயங்களையும் தனித்தனியாக தேவராஜிடம் ஒப்படைத்து விட்டான்.
" காலையில் சீக்கிரமே கிளம்பி விடு திலீபா. மீட்டிங் அட்டெண் பண்ணிட்டு என்ன விவரம்னு பொறுமையாக மறுநாள் கூட வந்து சொல்லு. ஒன்னும் அவசரமில்லை " என்றார் தேவராஜ்.
" சரி " என்று விட்டு, வீட்டுக்கு வந்தவனை தான். நயனியின் பரிசுகள் வரவேற்றன. அதை வெறித்து பார்த்தவன். இருந்த இடத்திலேயே வைத்து விட்டு, நாளை கிளம்ப வேண்டிய ஆயத்த பணிகளில் ஈடுபட்டான். அனைத்தையும் எடுத்து வைத்து, குளித்து விட்டு வந்து படுத்த போது, நயனியிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை இணைத்தவன். எடுத்தவுடனேயே,
" என்ன விசயம்?" என்றிருந்தான்.
"டிரஸ் ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்ப பிடிச்சிருக்கு "
" ம்ம் "
"அந்த ஜூவல்ஸ் எல்லாம் டைமண்ட்டா? ரொம்ப செலவு ஆகியிருக்குமே?"
"உன் தாத்தா கொடுத்த பணத்தை, அவர் பேத்திக்கே திரும்ப கொடுத்திருக்கேன்" என்றான் பூடகமாக
"அவர் ஒன்னும் சும்மா கொடுக்கலையே? நீங்க உழைச்சதனால தானே கொடுத்தார் " என்றாள் திலீபனை விட்டுக் கொடுக்காமல்
மறுமுனையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அடுத்து, " சாப்பிட்டீங்களா?" என்று பேச்சை வளர்க்க
"எனக்கு தூக்கம் வருது " என்றான் கத்திரிப்பது போன்று
"உங்களுக்கு டிரஸ் வைச்சிருந்தேன். பார்த்தீங்களா?" என்றாள் விடாமல்
திலீபனுக்கு தான் ஐயோ என்றிருந்தது. முகத்திலடிப்பது போல பேசினாலும், திரும்ப திரும்ப பேசுபவளை என்ன செய்வது?
இருந்தும். அவளது கேள்விக்கு, " ம்ம்" என்றான் அழுத்தமாக
"நாளைக்கு நீங்க அந்த டிரஸ் தான் போட்டுக்கனும். ப்ளீஸ் எனக்காக " என்றாள் . கெஞ்சலாக இல்லாமல் கொஞ்சல் போல தெரிந்தது.
திலீபன் பதிலே பேசவில்லை.
" நான் ரொம்ப ஆசையாக தேடி தேடி உங்களுக்காக பார்த்து பார்த்து வாங்கியது. ப்ளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க" என்றதும்.
" லுக் !. நீ கேட்டதால் உனக்கு டிரஸ் வாங்கி கொடுத்தேன். அவ்வளவு தான். நீ எனக்கு வாங்கி கொடுக்க வேண்டி அவசியமே இல்லை. இன்னொரு முறை இது போல பண்ணாதே!. அதோடு, இந்த உறவு நிலையானது இல்லை. தேவையில்லாத ஆசைகள் எதையும் வளர்த்துக்காதே. உன் படிப்பில் கவனம் வை " என்றான் கண்டிப்புடன்.
முற்பகுதியை விட்டவள். பின் பகுதியை மட்டும் கவனத்தில் கொண்டவள். "பாடம் தானே! மெதுவா படிப்போம்" என்றவள். " நாளைக்கு நான் கொடுத்த டிரஸை தான் , நீங்க போட்டுட்டு வர்றீங்க. நான் எதிர்பார்ப்பேன். பை " என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
' என்ன சொன்னாலும் இந்த பெண் புரிந்து கொள்ள மாட்டேங்குறாளே?' என்று திலீபனுக்கு தலை வேதனையாக இருந்தது.
மறு நாள் நிச்சயதார்த்த விழா. கல்யாணம் போன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்திற்கும் தனித்தனியான ஆட்கள். அதை மேற்பார்வையிட சூப்பர்வைசர்கள். எந்த சத்தமுமில்லாத வேலைகள் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தனர்.
வீட்டிலிருந்து மணப்பெண் சரிகாவை அழைத்துக் கொண்டு, பெண்கள் முன்னே வர, அகிலேஷ் ஆண்களுடன் வந்தான். சரிகா, மணப்பெண்ணுக்கு உரித்தான அலங்காரத்துடன் பட்டுப்புடவையில், தங்கத்தால் அலங்கரிக்கய்பட்டு, ராகுலுடன் மணமேடையில் நின்றாள். கோட்சூட்டில் ராகுல் கம்பீரமாக நின்றிருந்தான்.
அகிலேஷ் கருநீல கோட் சூட்டில் நின்றிருக்க, மனதின் மகிழ்ச்சியை அப்பட்டமாக காட்டுவது போல முகம் பிரகாசமாக இருந்தது. அனன்யா அழகு பதுமையாக அகிலேஷ் அருகில் வந்து நின்றாள்.
நல்ல நேரம் தொடங்க, நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். விருந்தினர்கள் மணமேடையில் நின்றிருந்த மணமக்களிடம் வாழ்த்து தெரிவித்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென உள்ளே வரும் பாதையில் இளம்பெண்கள், இளம் ஆண்கள் என கூட்டம் வேகவேகமாக வர, இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் என்ன? என்பது போல! திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தனர்.
என்னாச்சு? என்று பெரியவர்கள் அங்கே வர, திடீரென பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
"யாரோ.. யாரோடி.. உன்னோட புருசன்..
ஆத்தி அவன் தான்டி உன் திமிருக்கு அரசன்.. " என்று பாடல் ஒலிக்க,
நடுவிலிருந்து நயனியும், தாரிகாவும் குறும்பு சிரிப்புடன் மணப்பெண்களை பார்த்து பாட ஆரம்பிக்க, கூடவே மணமகனையும் இணைத்து பாட, நடனக் குழுவினர் அதற்கேற்ப நடனம் ஆட, ஆட்டம் களைகட்டியது.
அத்தனை பேர் நடுவிலும் தாரிகாவை விட, நயனியே அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள். திலீபன் கொடுத்த சோலி அதற்கேற்ப நகைகள் , அவள் அழகை அதிகப்படுத்தும் புன்சிரிப்பு என காண்போர் அத்தனை பேரையும் வாய்ப்பிளக்க வைத்தாள்.
இங்கே, திலீபன் அந்த ஏழு அந்தஸ்த்துள்ள நட்சத்திர ஹோட்டலில், உள்ளே அணைத்துக் கொள்ளும் சொகுசு மெத்தையில் அமர்ந்து, நயனியின் நடத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் ரசனையோ, மென் சிரிப்போ எதுவுமே இல்லை. சினிமா தியேட்டரில் அமர்ந்து நடனத்தை பார்க்கும் மனநிலை மட்டுமே!
அறையின் காலிங் பெல் இசைக்க, போனை மெத்தையில் வைத்து விட்டு போய் அறைக்கதவை திறந்தான். சத்யா குரூப் ஆப் கம்பெனிஸின் சி. இ. ஓ. திரு. சத்யராஜும் உடன் அவரது பேரன் அசோக்கும் நின்றிருந்தனர்.
எதுவும் பேசாமல் அவர்களுக்கு வழி விட, உள்ளே வந்தனர். அறைக்கதவை சாற்றி விட்டு, உள்ளே வந்தவன். நேரே கண்ணாடியின் முன் நின்றபடி, அருகே இருந்த டையை எடுத்து கழுத்தில் கட்ட ஆரம்பித்தான்.
சத்யராஜ் அங்கே கிடந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டார். அசோக், மெத்தையில் கிடந்த போனை எடுக்க, அதில் நயனி அழகாக ஆடிக் கொண்டிருப்பது தெரிய,
" ஹேய்! இது நயனிகா தானே!" என்றான் ஆச்சரியமாக
" ம்ம்ம் " என்றான் திலீபன் கண்ணாடியில் டை சரியாக போட்டிருக்கிறானா? என்று குரல்வளை அருகில் லேசாக இறுக்கி பொருத்தியபடி
"எந்த நயனிகா?" என்றார் சத்யராஜ்.
"உங்களிடம் கூட மார்க்கெட்டில் பண்ணாளே! காலேஜ் ஸ்டூடெண்ட். தாத்தா. சர்பிகேட் கூட வாங்க வரலைனு சொன்னீங்களே" என்று அசோக் நியாபடுத்த முனைய
" தேவராஜோட பேத்தி " என்றிருந்தான் திலீபன் ஒரே வரியில்
" அந்த பொண்ணா? இங்கே கொடு பார்ப்போம் " என்று செல்போனை அசோக்கிடமிருந்து வாங்கி பார்த்தார். நடனம் ஆடி முடித்து, வியர்வை சுரக்க மூச்சு வாங்க சிரித்தபடி இருந்தாள் நயனி.
" ஆமாம். அந்த பொண்ணு தான்!" என்றார் சத்யராஜ்
பக்கத்தில் இருப்பது தேவராஜோட இன்னொரு பேத்தி தாரிகா. டாக்டர் " என்றான் அசோக்கை ஓர பார்வை பார்த்தபடி
அசோக் அதை காதில் வாங்கியதாக கூட காட்டிக் கொள்ளவில்லை.
"நல்ல புத்திசாலி பொண்ணு!. கொஞ்சம் குறும்புக்காரி கூட, ஆனால் அந்த வீட்டில் எப்படி பிறந்தான்னு தான் தெரியலை" என்றார் சத்யராஜ்.
"ம்க்கும் " என்று உதடு சுழித்துக் கொண்டவன். சத்யராஜ் முன்பு கிடந்த இருக்கையில் வந்து அமர்ந்து, " நான் கிளம்பலாம்னு இருக்கேன்" என்றான்.
"நீ அங்கே போனதே எங்களுக்கு பிடிக்கலை " என்று தனது அதிருப்தியை காட்டினார் சத்யராஜ்.
"அப்போது இருந்த கோவம் போனேன். ஆனால் இதுக்கு மேல அங்கே இருக்க முடியாது " என்றான். எங்கேயோ வெறித்து பார்த்தபடி
" சரி. எப்போ வர?. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கவா?" என்றான் அசோக்.
"நான் லண்டன் கிளம்பறேன் அசோக். என்னோட பிஸ்ளஸை எத்தனை நாளுக்கு தான் ஆன்லைனில் பார்க்கிறது. இதுக்கு மேல் சரியாக வராது. அதோடு, தேவராஜோட தொல்லை இனி, நமக்கு இருக்காது.
ஏகப்பட்ட டெண்டர்ஸ் எடுத்து கொடுத்திருக்கிறேன். அதை முடிச்சு கொடுக்கவே சில வருசங்கள் டைம் எடுக்கும். புதுசா பெரிய ப்ராஜக்ட்னு அவரால இப்போதைக்கு எதும் எடுக்க முடியாது. அதுக்குள்ள, அவரால இழந்த பணத்தை விட, பல மடங்கு நாம சம்பாதிச்சுடலாம் " .
"அவர லேசாக எடை போடாதே தீபன். எதுவும் எடுக்க முடியாமலா? இந்த கம்பெனிக்கு உன்னை அனுப்பி வைச்சிருக்கார்." என்றான் அசோக்.
"இண்டர்நேஷனலைஸ் கம்பெனியோட மீட்டிங்கு, அவர் கம்பெனியில் எந்த பொறுப்பிலும் இல்லாத என்னை அனுப்பி வைச்சிருக்கார். இதிலிருந்தே தெரியலையா ? . அவருக்கு இதில் விருப்பமில்லைனு " என்றான்.
"ம்ம் " என்றார் சத்யராஜ்.
"ஆமாம். இத்தனை நாட்கள் இல்லாமல் திடீர்னு இப்போ என்ன கிளம்பனும் அவசியம்? நாங்க சொல்லும் போது கூட கேட்கலையே!. அதனால் கேட்டேன் " என்றான் அசோக்.
"ஒரு பெண்ணோட பழி பாவத்துக்கு ஆளாக விரும்பலை" என்றான் பட்டென்று
" என்ன தீபன் சொல்ற?" என்று படபடப்போடு எழுந்து விட்டார் சத்யராஜ்.
"அப்படி எதுவும் ஆகலை தாத்தா. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாகுங்க! " என்று ஆசுவாசப்படுத்தியவன்.
"தேவராஜ் அவர் பேத்தி மேல் உள்ள கோவத்தில், எனக்கும் அவர் பேத்திக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் வரை போய்விட்டார் " என்றவன். விசயத்தை கடகடவென கூறி முடித்தான்.
"அடப்பாவமே! இப்படியும் ஒரு மனுசன் இருப்பானா? இவன் வியாபாரத்தில் மட்டுமில்லை குடும்ப விசயத்தில் கூட, கேடு கெட்டவனாக இருக்கான்" என்றார் கோவமாக
"ம்ம். அதுதான் தாத்தா. தேவையில்லாமல் அந்த பொண்ணோட மனசில எந்த எதிர்பார்ப்பும் வளர்த்து விட விரும்பலை " என்றான் பெருமூச்சு விட்டபடி
"எதிர்பார்ப்பை வளர்த்து விட விரும்பலைனா என்ன அர்த்தம்? அந்த பொண்ணு, உன்னிடம் எதிர்பார்ப்போட நடந்துக்கிற மாதிரி தெரியுதா?" என்றான் அசோக்.
"ப்பூபூ " என்று வாயை குவித்து மூச்சு விட்டவன். " டைம் ஆச்சு கிளம்பலாம் தாத்தா " என்றபடி எழுந்து கொண்டான்.
"தேவராஜ்க்கு முன்று பேத்திங்கன்னு கேள்வி பட்டேன். ஒருத்திக்கு இன்றைக்கு நிச்சயதார்த்தம். மற்ற இரண்டு பேர் இருக்காங்க. அதில் யாரு? உனக்கு பார்த்தது" என்றார் தாத்தா ஆர்வமாக
"முடிஞ்சு போன விசயம் தாத்தா. திரும்பவும் ஆரம்பிக்காதீங்க" என்றபடி அங்கிருந்த கோட்டை, கண்ணாடியை பார்த்து எடுத்து போட்டுக் கொண்டு, அறையை விட்டு வெளியே விட்டான்.
அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்க, மீட்டிங் ஹால் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பட்ட ஒரு இளைஞன். " சார். நீங்க சொன்ன மாதிரியே! கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். பிறகு, எனக்கான அதாரிட்டி பேப்பரை கேட்டாங்க. இல்லை என்றதும்!. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு அனுப்பிட்டாங்க சார் " என்றான்.
" ஒ. கே " என்றவன். அவனிடம் பச்சை நோட்டு கற்றை கொடுத்து, அனுப்பி வைத்தான்.
"சத்யா குரூப் ஆப் கம்பெனிஸ் " என்று பெயர் அழைக்கப்பட, திலீபன் மட்டும் உள்ளே சென்றான்.
அடுத்த அரைமணி நேரம் கழித்து வெளியே வந்ததும், " ஈவினிங் மற்றொரு மீட்டிங் இருக்கு அநேகமாக நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு " என்றான் சாதாரணமாக
"கண்டிப்பா இது உனக்கு தான் கிடைக்கும் " என்றார் சத்யராஜ்
மதியம் மூன்று மணியளவிலேயே, நிச்சயதார்த்த விழா முடிந்து விட்டது. நயனி, சிரிப்புடனே வலம் வந்து கொண்டிருந்தாள். ஆனாலும் அவ்வப்போது திலீபனுக்கு அழைக்காமல் இல்லை. ரிங் முழுதாக போய் கட் ஆனதே தவிர, அவன் அழைப்பை இணைக்கவில்லை.
'ஏன்? திலீபன் வரவில்லை? ' என மற்றவர்களிடம் கேட்கவும் முடியவில்லை. என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் தனிமையில் அவனிடம் பேசும் போது வரும் உரிமையை, மற்றவர்களின் முன்பு வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் காரில் வீடு திரும்பும் போது, மகளை கவனித்தார் சுலோச்சனா. திலீபன் கொடுத்த ஆடையில் அழகில் மிளிர்ந்து கொண்டிருந்தவளை கண்டு, மகிழ்ந்தார். நயனியின் மனமும் புரிந்தது. ஆனால் இன்று முழுவதும் திலீபன் கண்ணிலேயே அகப்படவில்லையே?' என யோசிக்கும் போதே! அதே கேள்வியை சித்ரா கேட்டிருந்தார்.
" ஏன் அத்தை? திலீபன் தம்பியை இன்றைக்கு வரும் வரை நான் பார்க்கவே இல்லை. நீங்க பார்த்தீங்களா?" என்றார்.
"ம்ஹூம் " என்று பெருமூச்சு விட்டவர். " மும்பையில் இருக்கிறவனை இங்கே எங்கே பார்க்க முடியும்?" என்றார் அங்கலாய்ப்பாக
வெளியில் வேடிக்கை பார்த்தபடி வந்தாலும், திலீபன் பெயர் அடிபட்டதும், காதுகளை கூர்மையாக்கியவளுக்கு, பாட்டி சொன்ன செய்தியை கேட்டு, டக்கென்று திரும்பி பார்த்தாள்.
"என்ன அத்தை சொல்றீங்க? மும்பைக்கா? எப்போ?" என்றார் நயனியை பார்த்தபடி, அவளது வாடிய முகத்தை கண்டு தானே திலீபனை பற்றி விசாரித்தார்.
" இன்னைக்கு காலையில் நான்கு மணி பிளைட்டாம்!. உங்க மாமா தான் முக்கிய வேலை என்பதால்! நம்ம வீட்டில் யாரும் போக முடியாத சூழல் என்பதால்! திலீபனை அனுப்பியிருக்கிறார். ஒரு வாரம் முன்பே முடிவு செய்துட்டாங்களாம்!. எனக்கே! இன்னைக்கு காலையில் தான் சொன்னார்" என்றார் பாட்டி
நயனி முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக் காட்டாது அமர்ந்திருந்தாள். வீடு வந்து விட, சரிகா, தாரிகா, நயனி என மூன்று பேருக்குமே ஆரத்தி சுற்றி, உள்ளே அழைத்துச் சென்றனர்.
மாலையில் திலீபன், தேவராஜ்க்கு அழைப்பு விடுத்தான். அழைப்பு இணைக்கப்பட,
"ஹலோ சொல்லு திலீபா? போய் சேர்ந்துட்டியா? மீட்டிங் எத்தனை மணிக்கு ஆரம்பிக்குது?" என்றார்.
"மீட்டிங் முடிஞ்சிடுச்சு சார். ஆனால் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் உள்ளவங்க தான் கலந்து கொள்ளனுமாம். நீங்க யாரு கேட்டாங்க?. கிளர்க்குன்னு சொன்னேன். அட்லீஸ்ட் ஜி. எம் போஜ்டிங்கில் உள்ளவங்களாவது தான் இந்த மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலாம்னு சொல்லி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிட்டாங்க " என்றான்.
" அடடே! இது தெரியாமல் போச்சே!' என்று பொய்யாக வருத்தப்பட்டார்.
" சார். நான் இங்கே என்னோட பிரண்ட் ஒருத்தனை பார்த்தேன். வெளிநாட்டில் வேலை செய்யறானாம். எனக்கும் விசா எடுக்குறேன்னு சொன்னான். நானும் சரினு சொல்லிட்டேன் " என்றதும்
"உன்னோட படிப்பு சம்மந்தமான சர்பிகேட்லாம் இன்னும் கைக்கு வரலையேப்பா! எப்படி போவாய்?" என்றார் பொய்யான ஆதங்கத்துடன்.
"பாஸ்போர்ட் இருக்கே சார். என்ன சர்பிகேட் கேட்டாங்க! விசயத்தை சொன்னேன். இப்போதைக்கு சின்ன வேலையில் சேர்ந்துக் கொள். சர்பிகேட் கிடைத்த பிறகு , அதற்கேற்ற வேலையில் சேர்ந்துக்கலாம்னு சொல்லியிருக்கான். நானும் சரினு சொல்லிட்டேன். உங்க ஆசிர்வாதம் வேணும்" என்றார்.
சற்று நேரம் அமைதி நிலவியது. எதையோ யோசிக்கிறார் என புரிய, அமைதி காத்தான். பிறகு ஒரு வழியாக, " சரி திலீபா. நீ ஏற்பாடு பண்ணிடு " என்று அழைப்பை துண்டித்தார்.
பிறகு, இரு கம்பெனிகளுக்கான பரஸ்பர புரிந்துணர்வு சம்மந்தமான விசயங்கள்! இருவரின் நிபந்தனைகள் என அனைத்து பேசி முடிக்கப்பட்டது. இது முழுவதும் திலீபனின் சொந்த கம்பெனிக்கான ஒப்பந்தம் மட்டுமே. எனவே இதில் அவன் மட்டுமே கலந்து கொண்டான்.
இரவு சக்ஸஸ் பார்ட்டி கலை கட்டியது. திலீபன் மற்றவர்களிடம் அறிமுகமாகிக் கொண்டிருக்க! நயனியிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பார்த்தவன். இம்முறை அழைப்பை துண்டித்து இருந்தான். காலையிலிருந்து பலமுறை அழைத்து விட்டாள். அவளுக்கு நம்பிக்கை கொடுப்பது போல! சின்ன செயலையும் செய்து விடக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறான். அதனால் தான் அழைப்பை ஏற்கவில்லை.
நயனிக்கு இதுவரை இருந்த கோவம் அதிகமாகி, போனை தூக்கி எறிந்தவள். கட்டிலில் குப்புற படுத்து அழ ஆரம்பித்தாள். காலையிலிருந்து அவனை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள். பாட்டி சொல்லும் வரை அவளுக்கு விசயம் தெரியாதே!. இப்போது தற்செயலாக மாடி வராண்டாவில் நிற்க, கீழே சிட் அவுட்டில் அமர்ந்தபடி , தாத்தா பேசியதை வைத்தே விசயத்தை யூகித்து விட்டாளே!.