எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 11

S.Theeba

Moderator
காதல் 11

மிருணாளினியை நேராக அவளது வீட்டிலேயே கொண்டு வந்து இறக்கிவிட்டான் தனஞ்சயன். அவள் இறங்க முதல்

“மிருணா இப்பவும் எனக்கு எந்த கோபமோ வருத்தமோ இல்லை. உன் மீது எனக்கு நிறைய அன்பிருக்கின்றது. பட், அது நீ என் அத்தை பொண்ணு என்பதால் மட்டுமே. சோ, நீ எதையும் வீணா கற்பனை பண்ணி மனதைக் குழப்பாமல் சந்தோசமாக இரு” என்றுவிட்டு புறப்பட்டான்.
அப்படியே விட்டால் அவள் ரவிச்சந்திரனின் மகள் அல்லவே. காதல் என்பதெல்லாம் அவளுக்கு அடுத்த கட்டம் தான். இப்போது அவளுக்கு தனஞ்சயன் மேல் காதலோ மையலோ எதுவுமில்லை. ஒரு கிறஸ் மட்டும் உண்டு. ஆனால், இப்போது அவனை அடைய வேண்டும் என்று நினைக்க இரண்டு காரணங்கள் பெரிதாக அவள் முன் நின்றன.
ஒன்று ‘என்னையே ஒருத்தன் வேண்டாம் என்று சொல்வதா? அழகுக்கே இலக்கணமாய் இருக்கும் என்னை விடுத்து எவளோ ஒருத்திக்காக அதிலும் அவள் நிறமும் சைஸூம்…, என் அருகில் நிற்கக்கூடத் தகுதியில்லாத அவளுக்காக என்னை அவாய்ட் பண்ணுவதா? என் கடைக்கண் பார்வைக்காக எத்தனை பேர் தவமிருக்கிறார்கள். ஆனால் இவனோ நான் விருபுவதாகக் கூறியும் என்னையே வேண்டாம் என்பதா? விடமாட்டேன்…‘ என்ற வெறி அவளை உசுப்பேத்தியது.
இரண்டாவது, அவனது சொத்து. தமிழ்நாட்டிலே முதல் பத்து பணக்காரர்களில் ஒருவரான சுபத்திராவின் சொத்து மதிப்பு. அவளது சொத்துக்களை ஆளப்போவது தனஞ்சயன் தான். அடுத்து இரண்டு வாரிசுகள் இருந்தாலும், அவர்களுக்கு ஓரளவு கொடுத்து அனுப்பி விடலாம். மிகுதியெல்லாம் எனக்கே எனக்கு வேண்டும்’ என்ற பேராசை. இவை எல்லாம் சேர்ந்து அவளை திட்டம் போட வைத்தது.

இவ்வாறு மிருணாளினி ஒரு பக்கம் திட்டம் தீட்டிக் கொண்டு இருக்க மறுபக்கம் ரகு தன் திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கினான்.

முதல் வேலையாக சஞ்யுக்தாவை சந்திக்க மிகவும் பிரயத்தனங்களை மேற்கொண்டான். ஆமாம் அவனால் உடனடியாக அவளை நெருங்கி விடயத்தை கூற முடியவில்லை. அவள்தான் இவனைக் கண்டாலே மதிப்பதில்லையே. இவன் பேசவரும் போதெல்லாம் காது கொடுத்துக் கேட்காமல் அலட்சியப்படுத்தினாள். அல்லது தனத்திடம் மாட்டிக் கொள்வான். தனத்திற்கு அவனைப் பிடிக்காது. ஏற்கனவே அவன் தன் மகள் பின்னால் சுற்றுவதை கண்டுகொண்டவர் அவனைக் கண்டாலே திட்டத் தொடங்கிவிடுவார். தன் அழகான மகள் இவனைப் போல் பிச்சைக்காரனுக்கு மனைவியாவதா என்ற அகங்காரம் அவனைக் கண்டாலே திட்டத் தூண்டியது.
எனவே அவனால் எண்ணிய காரியத்தை உடனேயே செயற்படுத்த முடியவில்லை. வேறு வழிகளில் நிஷாந்தினியை அவனிடமிருந்து பிரிக்கவும் அவனால் யோசிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் திட்டம் போட சஞ்யுக்தாவால் மட்டுமே முடியும் என்று நம்பினான்.
இப்படியே ஒரு மாதமாகிவிட்டது. அவன் தவறாமல் நிஷாந்தினியையும் அவள் செல்லும் இடங்களையும் கண்காணித்துக் கொண்டான். சனி, ஞாயிறுகளில் இருவரும் சேர்ந்து சுற்றுகிறார்கள் என்பதைக் கண்டவனது மனமோ கொதித்தது. சஞ்யுக்தாதான் எனக்கு கிடைக்க மாட்டாள். ஆனால், நிஷாந்தினியைக் கட்டாயம் விடக் கூடாது என்று புலம்பினான்.

எப்படியோ ஒருநாள் சஞ்யுக்தாவுடன் பேசும் சந்தர்ப்பம் அவனுக்கு கிடைத்தது. வீட்டில் அவள் மட்டும் தனித்திருந்த சந்தர்ப்பம் பார்த்து அவளிடம் சென்றவன் நிஷாந்தினியைப் பற்றி தான் அறிந்த விடயங்களைக் கூறினான். அவன் எதிர்பார்த்தது போலவே அவளிடம் பொறாமைத் தீ பற்றி எரியத் தொடங்கியது.

தன் வீட்டில் வேலைக்காரிக்கு சமமாக வாழும் ஒருத்திக்கு கனவிலும் நினைக்க முடியாத பணக்காரன் கணவனாவதா? கூடாது.. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டாள்.

சஞ்யுக்தா, மிருணாளினி இருவரது திட்டங்களுக்கும் காலமே துணை புரிந்தது போல் சந்தர்ப்பமும் அமைந்தன.

தனஞ்சயனுக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய தவிர்க்க முடியாத வேலை ஒன்று வந்தது. அவர்களின் குடும்பத் தொழில் பல்வேறு கல்லூரிகளை உருவாக்கி நிர்வாகம் செய்வது. இவனுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் பெரும் ஆர்வம் இருந்தது. எனவே அதற்கென ஒரு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தான். அதன் ஆரம்ப கட்டப் பணிகளை சென்னையில் முடித்துவிட்டான். அடுத்த கட்டமாக சிங்கப்பூரில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி அதன் பணிகளை ஒழுங்குபடுத்தி விட்டு வரவேண்டும். மனேஜரை அனுப்புவதாக முதலில் முடிவெடுத்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் இவன் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. போட்டிக் கம்பனியின் தில்லுமுல்லு வேலைகள் பல நடைப்பெற்றதால் அவனால் மட்டுமே அதனைத் தீர்க்க முடியும் என எண்ணியவன் உடனேயே புறப்பட்டான்.

நாளை காலை புறப்பட வேண்டும் என்ற நிலையில் இது குறித்து நிஷாந்தினியிடம் நேரில் சென்று தெரிவிக்க நேரம் இல்லாததால் அவளது மொபைலுக்கு அழைப்பை மேற்கொண்டான். அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை விமான நிலையம் செல்லும் வரை முயற்சித்துப் பார்த்தான். ஆனால் மொபைல் அப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டே இருந்தது.
எனவே அவளுக்கு தான் அவசரமாக செல்ல வேண்டிய சூழலை குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பினான். தான் சிங்கப்பூர் சென்றதும் அவளுடன் தொடர்பு கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தான். ஆனால், இவன் அனுப்பிய மெசேஜ் அவன் சிங்கப்பூர் சென்று சேரும் வரை பபார்க்கபபடாமலேயே இருந்தது.

இங்கே முதல்நாள் கல்லூரிக்குப் புறப்பட்ட நிஷாந்தினி தனது மொபைலை தேடினாள். அவளது புத்தகப் பைக்குள்ளேயே எப்போதும் மொபைலை வைத்திருப்பாள். காலையில் குளிக்கப் போகும்போது தனஞ்சயனிடம் இருந்து வந்த மெசேஜுக்கு பதில் அனுப்பி விட்டு அதற்குள்ளே வைத்ததாகத் தான் அவளுக்கு நினைவு இருக்கிறது. ஆனால் இப்போது அதனைக் காணவில்லை எனவும் பெரும் பதட்டம் அவளைத் தொற்றிக் கொண்டது. வீட்டில் யாரிடமும் கேட்க முடியாது. அவளுக்கு எப்படி மொபைல் வந்ததென்று கேட்டு கொன்றே விடுவார்கள். எதுவும் புரியாமல் தடுமாற்றத்துடனேயே கல்லூரிக்குச் சென்றாள். அங்கும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன்னவனுடன் எப்படி தொடர்பு கொள்வது? மொபைல் தொலைந்ததை அவனுக்கு எப்படி தெரியப்படுத்துவது? எல்லாவற்றையும் விட அதனை யார் எடுத்திருப்பார்கள்? அதன்மூலம் என்ன பிரச்சினை ஏற்படப் போகின்றதோ? இவ்வாறான பல கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்தன. அவளது மொபைல் இல்லாததால் தனஞ்சயன் அனுப்பிய தகவல் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

அவளது மொபைலை எடுத்தவளோ அதனை நிறுத்திவிட்டு தன்னுடனேயே வைத்திருந்தாள். ஆம் அதனை எடுத்தவள் சாட்சாத் சஞ்யுக்தாவே.

ரகு வந்து கூறியதிலிருந்து நிஷாந்தினியை அவளறியாமலே கண்காணிக்க ஆரம்பித்தாள். அவன் கூறியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியவள் அவளிடம் ஒரு மொபைல் இருப்பதையும் அறிந்து கொண்டாள். தாயிடம் கூறினால் மொபைலையும் பறித்து அவளுக்கு நல்ல வசவும் விழும். அதனுடன் திருப்தி அடையும் மனது அவளது அல்ல. எனவே திட்டம் போட்டு அவளது காதலைப் பிரிக்க வேண்டும். அவள் அழுவதைக் கணீடு ரசிக்க வேண்டும் என முடிவெடுத்தாள். சந்தர்ப்பம் பார்த்து மொபைலையும் திருடி விட்டாள்.

உள்ளூர தன்னை நிராகரித்ததால் அவமானம் என்று எண்ணிக் கொண்டிருந்த மிருணாளினிக்கும் அவன் சிங்கப்பூர் சென்றது நல்ல சந்தர்ப்பமாகவே பட்டது.

உடனேயே தந்தையும் மகளுமாகத் திட்டம் போடத் தொடங்கினர். முதல்கட்டமாக நாளின் பெரும்பகுதியை தனஞ்சயன் வீட்டிலேயே கழிக்கத் தொடங்கினாள். பாட்டியும் கவிப்பிரியாவும் ஆதரவாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள். தான் அவன் மீது சிறு வயது முதலே காதல் கொண்டிருப்பதாகவும் இப்போது அவனில்லாவிட்டால் உயிரையே விட்டுவிடப் போவதாகவும் அழுது கரைந்தாள். அவள்மீது பாசம் கொண்ட அந்த பாட்டியின் மனம் தவித்தது. அவளுக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்று முடிவெடுத்தார். அவருடன் கவிப்பிரியாவும் இணைந்து கொண்டார்.

மெல்ல மெல்ல நிசாந்தினியின் விடயத்தை கூறினாள். அவனது சொத்துக்கு ஆசைப்பட்டு அவனை வளைத்துவிட்டாள் என்றும் தன் உண்மைக்காதல் அத்தானுக்கு புரியவில்லை என்றும் கூறினாள். அதற்கு ஒரே வழி தனக்கும் தனஞ்சயனுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அவளிடம் நம்பும்படியாகக் கூறவேண்டும் என்றாள். பாட்டி சொன்னால் மட்டுமே அது உண்மையாகத் தோன்றும் என்று அவள் திட்டம் போட்டு கொடுக்கவும். பாட்டியும் அவளது திட்டத்தில் விழுந்து விட்டார்.


இவர்களது காதலுக்கு இரு பக்கங்களிலும் இருந்து குழிபறிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் தனஞ்சயனுடன் தொடர்பு கொள்ள வழி தெரியாது இவள் இங்கு தவிக்க அவனும் அவளது நிலை தெரியாது தவித்துத்தான் போனான்.
சிங்கப்பூர் வந்ததிலிருந்து அவளுக்கு அழைப்பெடுத்து சோர்ந்து போனதை விட அவளது மொபைல் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவளுக்கு ஏதாவது பிரச்சினையோ என்ற தவிப்பே அவனைப் பெரிதும் வாட்டியது.

உஷாவுக்கு அழைப்பெடுத்து அவளைப் பற்றி அறியலாம் என நினைத்தான். அவளோ கணவனின் தந்தைக்கு உடல்நிலை சீரியசாக இருப்பதால் அவனது ஊரான டெல்லிக்கு குடும்பத்தோடே சென்றிருந்தாள். அவன் ஒரே மகன் என்பதால் அங்கேயே தொடர்ந்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே அவளைப் பற்றி எந்தத் தகவலையும் அவனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

சிங்கப்பூரில் அவர்களது அலுவலகத்தை உருவாக்கும் பணி இரண்டு வாரத்த்தில் முடிந்துவிடும் என்று எண்ணியே வந்திருந்தான். ஆனால் பல்வேறு தொல்லைகளை சமாளித்து அவ்வேலையை முடிக்க ஒரு மாதமாகி விட்டது.

அவன் ஊருக்கு வந்து இறங்கியதும் முதல் வேலையாக நிஷாந்தினியைத் தேடி அவளது கல்லூரிக்குச் சென்றான். அங்கே அவளைக் காணாது அவளது கல்லூரித் தோழிகளிடம் விசாரித்தான். அவள் இரண்டு வாரங்களாகப் கல்லூரிக்கு வருவதில்லை எனவும், அது குறித்து விசாரிக்க அவள் வீட்டுக்குப் போனபோது அவளை சந்திக்கவில்லை எனவும் அவளது அத்தையே அவள் இனி கல்லூரிக்கு வரமாட்டாள் என்று கூறி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் பெரும் குழப்பத்துக்கு உள்ளானவன், இனி அவளைக் காணாது தன்னால் ஒரு பொழுதுகூட இருக்க முடியாது என்பதை உணர்ந்து நேரே அவள் வீட்டுக்கே சென்றான்.

அங்கே அவனை வரவேற்றது தனமும் சஞ்யுக்தாவுமே. அவன் யாரென்பதை அறிந்ததும்
“தம்பி இதைப் பாருங்க. எங்க வீட்டுப் பொண்ணுக்கு நாங்க கல்யாணம் முடிவு பண்ணி வைச்சிருக்கோம். அமெரிக்கா மாப்பிள்ளை. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். நீங்க இப்படி வருவது அழகில்லை” என்றார் தனம்.
அவன் அதிர்ச்சி அடைந்தாலும் தன் பாப்பு மீது கொண்ட காதல் தந்த நம்பிக்கையில் நிமிர்வுடன் நின்று
“நான் பாப்பு… நிஷாந்தினியுடன் பேச வேண்டும். அவளைக் கூப்பிடுங்கள்” என்று கூறினான்.

எந்தவித மறுப்புமின்றி உள்ளே சென்று அவளை அழைத்தும் வந்தாள் சஞ்யுக்தா. அவளை ஒரு மாதம் கழித்து பார்ப்பதால் கண்களில் காதல் பொங்கப் பார்த்தான். ஆனால், அவளோ இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
 
Top