என அந்தத் தெருவுக்கே கேட்கும்படி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அந்தக் கல்யாண வீட்டில். அன்று தான் முகூர்த்தக்கால் ஊன்றும் விசேஷம் நடைபெறுகிறது அதற்கே மைக்செட்போட்டு பாட்டும், தோரணையும் களைகட்டியது. வீடு களைகட்டியிருந்தது போல அங்குள்ள மனிதர்கள் மனம் இருக்கவில்லை. அனைவரின் முகத்திலும் ஒரு வேதனை குடியிருந்தது.
தன் வீட்டில் மாடி பால்கெனியில் நின்று வீட்டு வாசலில் நடக்கும் வைபவங்களை பார்த்தவளுக்கு இரசித்து, மகிழும் மனநிலை நிச்சயமாக இல்லை, ஆனால் அவள் தான் மணப்பெண். நடப்பதைத் தடுக்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை, கையறு நிலையில் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுதாரா.
“டேய் பாட்டுச் சத்தத்தை இன்னும் அதிகமா வை.. சத்தம் தெருல முதல் வீட்டிலிருந்து கடைசி வீடுவரை அதிரனும்” எனக் கூறியவன் மனதிலும் சந்தோஷம் இல்லை. கடமையேயெனத் தான் செய்தான் மதுதாராவின் அண்ணன் அஸ்வந்த்.
பந்தக்கால் நட்டுவிட்டு அனைத்து சடங்களும் முடிய வீட்டிற்குள் நுழைந்த மதுதாராவின் அப்பா தான் இந்தத் திருமணத்திற்கே காரணம். ஆனால் அவராலும் மகிழமுடியவில்லை. தன் மகள் வாழ்வு இத்திருமணத்தால் தான் மலரும் என்ற நினைப்பு தான் அவரது இப்போதைய மனநிலை. அவர் மனம் முழுவதும் உள்ள துக்கம் நெஞ்சை அடைக்க, ஒருநிமிடம் தடுமாறி விழப் போன அன்பழகனை தாங்கிப் பிடித்தார் அவரின் சகதர்மினி ஈகைச்செல்வி.
அவர் தடுமாற்றத்தை பார்த்து மதுதாராவின் இதயம் நின்று தான் துடித்தது காரணம் அன்பழகனுக்கு இதயத்தில் ஏற்பட்ட பலவீனம். இந்தத் திருமணம் நடந்தாலொழிய அவர் நிம்மதியாக இருக்கப்போவதில்லையெனத் தெரிந்ததால் தான் எதற்கும் எதிர்ப்பும், மறுப்பும் கூறாமல் இருந்தாள்.
ஆனால் அதை அவள் விழிகள் கேட்க வேண்டுமே! அது தான் அவள் பேச்சைக் கேட்காமல் கோமாதா கன்றின் பசியாற்ற பால் சுரப்பது போல, பொழுதுக்கும் கண்ணீரைச் சுரக்கிறதே! விழியில் வழியும் நீரைத் துடைக்கக்கூட மனம் இல்லாமல் வந்து கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
“அம்மா தாயே என் தம்பிய கட்டிக்கிறது உனக்கு அவ்ளோ பெரிய இரணவேதனையா என்ன? இப்படி எப்போதும் அழுது சாகுற? அவன் நல்லாத்தாண்டி வச்சிப்பான் உன்னை” என அவளின் அழுகையைப் பார்த்து, பார்த்துக் கடுப்பில் கத்தியிருந்தாள் மதுதாராவின் அண்ணன் மனைவி அகிலா கூடவே மதுதாராவின் தாய்மாமன் மகள்.
ஆம்! மதுதாராவின் தாய்மாமா மகன் ஆதவனுக்கும், மதுதாராவிற்கும் தான் திருமணம் நடக்க இருக்கிறது.
“அண்ணீ! வாழ்க்கை முழுக்க ஆதவ் கூட இருக்கச் சொன்னா கூடச் சந்தோஷமா இருப்பேன் அவனோட தோழியா ஆனா க.. கல்யாணம்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை அவள் அழுகை. தேம்பி தேம்பி அழுதாள்.
“இங்க பாரு மது! இந்தக் கல்யாணம் நடந்தே ஆகனும் வேற வழியில்ல. அந்தப் பொம்பள பண்ணின வேலைக்கு ஆது தவிற வேற யாரும் உன்னைக் கட்டிக்க மாட்டாங்க. எங்க எல்லாருக்கும் உண்மையும் தெரியும், உன்னையும் தெரியும். ஆனா மத்தவங்களுக்கு எதுவுமே தெரியாது இல்லையா! கல்யாணத்துக்கு அப்புறம் ஆது உன்னை நல்லா பார்த்துப்பான் அழாதடி”
“இப்பவும் அவன் தான் என்னைப் பார்த்துக்கிறான்” என மூக்கை உறிஞ்சிக்கொண்டே, அருகில் அதிர்த்த கைபேசியை கண்களால் சுட்டிக் காட்டினாள். அதில் ஆதவ் எனப் பெயரைத்தாங்கி அழைப்பு வந்து கொண்டிருந்தது.
மதுதாரா “ஹலோ” என்றாள். அவள் குறலை வைத்தே அவளைக்கணித்த ஆதவனோ,
“அழுத மவளே கொன்றுவேன் உன்னை. இன்னும் எதுக்குடி இப்படி அழற? எல்லாம் நல்லா தான நடக்குது.. நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேனு சொன்னேன்ல”
“உன்னை எப்படி நான் க.. கல்?”
“என்னை எப்படி?” என இழுத்தான்.
“நீ போனை வை. நான் சாப்பிட போறேன். பசிக்குது”
“இப்போ போனை வச்ச அடுத்த நிமிஷம் உன் வீட்டுல இருப்பேன்”
“என்ன தாண்டா வேணும் உனக்கு?”
“ஹான் நீ தான் வேணும். உன் சந்தோஷம் தான் வேணும். உன் சிரிப்பு தான் வேணும். உன் சேட்டை தான் வேணும்”
“எப்பா சாமி நிறுத்து.. என்னால முடியல.. நீ கேட்குற எதுவுமே இப்போ என் கிட்ட இல்ல”
“அப்போ என்னை ஏமாத்தப்பார்க்குறீங்க.. பொண்ண மாத்தி வச்சீருக்கீங்க.. எனக்கு என்னோட மது தான் வேணும். இந்தப் போலி மது வேணாம் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லு” எனக் கேலி பேசினான்.
“அத செய் முதல்ல” என வைக்கப் போனவள் அவன் கூறிய வார்த்தையில் அப்படியே விக்கித்து நின்றாள்.
“இந்தக் கல்யாணம் யார் தடுத்தாலும் நடக்கும். நடந்தே தீரும். உன்னால கூடத் தடுக்க முடியாது. நடத்தி காட்டுவேன் நான்” என்றவன் பட்டென அழைப்பை நிறுத்தியிருந்தான்.
நிறுத்தப்பட்ட அழைபேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுதாரா. அப்போது அவள் அறைக்குள் நுழைந்தார் வைரம். மதுதாராவின் அப்பத்தா.
“கண்ணு! நீ அழுகுறனு அகிலா சொன்னா? ஏண்டா கண்ணு இப்படி அழுற? இப்படி அழுது அழுது உன் உடம்பை புண்ணாக்கிகாத ஆத்தா என்னைப் பெத்தவளே!” என அவளருகில் அமர்ந்தவர் அவளைப் பார்த்தார்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்தவளுக்கு ஈகைச்செல்வி அவளின் தலையை முன்னால் வாறி பின்னால் நீளமான கூந்தல் நுனிமுடியில் கொண்டையிட்டு தலை முடிகாயுமாறு விட்டிருந்திருந்தார்.
நெற்றியில் சாமி கும்பிட்டு இருப்பதற்கான அடையாளமாய் திருநீறு கீற்றாய் இருந்தது, அதன் கீழே குங்கும நிறத்தில் ஒரு குட்டி பொட்டு. அதைத் தவிற எந்த மேல்பூச்சும் இல்லாமலே பால் வண்ணத்தில் இருந்தாள்.
இன்றைக்கு பூஜைக்காகப் பாசிபச்சை நிறத்தில் பட்டும், அரக்கு நிற சட்டையும் அணிந்திருந்திருந்தாள். ஈகை அணிவித்திருந்த சில நகைகள் அவளை மேலும் அழகாய் காட்டியது. ஆனால் மேனி தான் உருகி, மெலிந்து தேரமாட்டேன் என்பதைப் போல் இருந்தது சில காரணத்தால்.
வைரம் பாட்டி “அந்தக் காலத்து கதையில சொல்லுவாக இந்திரலோக ரம்பைனு, அவளலாம் எங்கன பார்த்தேன் இந்தக் கிழவி. ஆனா கண்ணு! உன்னைப் பார்த்தா அந்த ரம்பை இப்படி தான் இருந்திருப்பாளோ இருக்கு! அம்பூட்டு அழகு. ஆனா இதை எல்லாம் ஆண்டு அனுபவிக்க அவனுக்குக் கொடுப்பினை இல்லாம போச்சு. எல்லாம் நான் பெத்த சீமசித்தராங்கியாலயும், அவ பெத்த மூதேவியாலையும்” என வாயைப் பொத்தி அழுதார், சமாதானம் பண்ண வந்த வைரம்.
“நல்லா சமாதானம் பண்றீங்க அம்மாச்சி. உங்கள போய் அனுப்பீனேன் பாருங்க” எனத் தலையில் அடித்துக் கொண்ட அகிலா,
“கீழ வாங்க இரண்டு பேரும் சாப்பிடலாம்”
“இல்லத்தா இப்பத்தே மேமூச்சு கீமூச்சு வாங்க மேல ஏறி வந்தேன். உடனே திரும்ப இறங்க முடியாது. செத்த எனக்கு இரண்டு இட்லியும் சாம்பாரும் ஊத்தி இங்கயே கொண்டாந்திரு” என்றார் வைரம் பாட்டி.
“என்னடி நீ கீழ வரீயா? இல்ல உனக்கும் சேர்த்து கொண்டு வரவா?” என்றாள் அகிலா, அவள் இடுப்பில் அமர்ந்து நை நைனு சிணுங்கிக் கொண்டிருந்தான் அவள் மகன் தருண்.
“அப்பா கீழ இருக்காங்களா அண்ணீ? இல்ல ஸ்கூல் கிளம்பிட்டாங்களா?”
“இல்ல இன்னைக்கு மாமா லீவ். எங்கப்பாம்மா வாராங்க உனக்குத் தாய்மாமன் சீர் செய்ய, அதுனால மாமா லீவ் சொல்லிட்டாங்க. கீழ தான் இருக்காங்க”
“அப்போ எனக்கும் மேல கொண்டு வந்துருங்க அண்ணீ”
“ஏன்?” என ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் அகிலா.
“என்ன பார்த்தா திரும்ப வேதனை படுவாங்க, கண் கலங்குவாங்க. எதுக்கு? நான் அப்பத்தா கூடவே சாப்புட்டுக்கிறேன்” என்றவள் எழுத்து தருணை வாங்க கையை நீட்டினாள். அவனோ அம்மாவிடமிருந்து வரமாட்டேன் என அலுச்சாட்டியம் செய்ய,
“சரி பார்த்துக்கோ நான் கொண்டு வரேன். ரூம்ல தண்ணீ இருக்குல?”
“இருக்கு அண்ணீ”
“சரி ஊசியைப் போடுங்க வரேன்” எனக் கீழே இறங்கி சென்றாள் அகிலா. மதுவோ தன் அலைபேசியில் குழந்தைக்கான பாடல்களைப் போட்டுவிட்டு அவனைக் கட்டிலில் அமரவைத்து, சர்க்கரை நோய்க்காக போடும் இன்சுலீன் ஊசியை எடுத்தவள் பாட்டிக்குப் போட்டுவிட்டாள்.
பின் தன் சேலையை ஒதுக்கி அவள் நாபிக்குழியின் அருகே அவளுக்கான ஊசியையும் போட்டாள். ஆம்! மதுதாராவும் டைப்1 டயாபிட்டீஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அகிலா உணவையும் கொண்டுவர, இருவருமாய் சாப்பிட்டு அவள் பொழுதை அப்பத்தாவுடனும், தருணுடனும் கழிக்க, கீழே அகிலாவின் அம்மாப்பா வந்தது போலச் சத்தம்மேல் வரை கேட்டது.
“கண்ணு உன்ற மாமே வீட்டுலேருந்து வந்துட்டாகப் போல. வாத்தா வந்து ஒரு வார்த்தை வாங்கனு கேட்டுப்போட்டு வந்துரு” எனக் கூறி அவர் எழுந்திரிக்க, அவளும் தருணை தூக்கிக்கொண்டு அப்பத்தாவையும் கையில் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.
“வாங்க! எல்லாரும் வாங்க!” எனச் சபையில் உள்ள அனைவரையும் கண்களுக்கு எட்டாத, உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன் அவள் கேட்க, மத்த ஆட்களுக்குத் தெரியாவிட்டாலும், அவள்மீது பாசமாய் இருக்கும் அந்தத் தாய்மாமனுக்கு தெரியாமல் போகுமா? அதில் மனம் நொந்தாலும் விரைவில் அவளைச் சரிசெய்துவிடலாமென நினைத்தார் பூபாலன் ஈகைச்செல்வியின் அண்ணன்.
“வா மது.. வா” எனப் பாசமாய் அழைத்து அவளைத் தன் அருகில் அமர வைத்தார் பூபாலனின் மனைவி, அகிலா ஆதவனின் அம்மா, மதுவின் டார்லிங் எழிலரசி.
என்ன தான் அவர்கள் வீட்டிற்கே மருமகளாக அவள் வந்தாலும், தாய்மாமன் முறையை நிறைவேற்ற வேண்டிச் சீர் செய்ய வந்துள்ளனர் பூபாலனும், எழிலரசியும்.
எழிலரசியை கண்டவுடன் மதுவிடமிருந்த தருண் எழிலிடம் தாவிவிட்டான். பேரனை வைத்துக் கொண்டே அனைத்தையும் செய்தார் எழிலரசி.
அவர் தான் அவர் வீட்டின் இராணி. பூபாலன், ஈகைச்செல்வியின் அம்மாப்பா இருவரும் இறந்து விடச் சிறு வயதிலேயே தனியாக இருந்த இருவரையும் அரவணைத்தது எழிலரசி தான். அவர் தான் முன்னே நின்று ஈகைக்கே திருமணம் நடத்தி வைத்தவர். பம்பரமாய் சுழன்று அனைத்து வேலையையும் செய்பவர். ஈகையே அவரிடம் கேட்பார் எல்லாவற்றையும்.
இன்றும் அதே போலத் தாங்கள் கொண்டு வந்த பொருட்களைத் தட்டில் பரப்பி வைத்துச் சேலையோடு, நகை, பணம் அனைத்தும் வைத்து மதுவின் கையில் கொடுக்க, அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டு அவர்கள் பாதம் பணிந்து எழுந்தாள் மதுதாரா. இவை அணைத்தும் புகைப்படமாக மணமகனுக்கு சென்று கொண்டிருந்தது அகிலாவின் உபயத்தால்.
அன்றைய விசேஷம் சிறப்பாக முடிய இரவில் அவள் தலையணை மட்டும் விடாமல் தூறும் தூறலில் நனைந்துகொண்டிருந்தது. அதற்கு மாறாய் ஒருவன் நெருப்பில் குளித்துக்கொண்டிருந்தான். அவன் காதால் கேட்டறிந்தது உண்மை தானா என்ற குழப்பத்தை எல்லாம் அவன் கையில் உள்ள கைப்பேசியில் புன்னகை முகமாகக் கையில் சீர்தட்டுடன் நிற்கும் மதுவின் புகைப்படம் சில்லு சில்லாக உடைத்தது கூடவே அவன் மனதையும்.
யாரிவன்? எதற்காக மதுதாராவின் புகைப்படத்தைப் பார்த்து வருந்துகிறான்? மதுதாராவுக்கு ஏன் இந்தத் திருமணம் பிடிக்கவில்லை? ஆதவன் இத்திருமணத்தை நடத்தியே தீர வேண்டுமென நிற்பதற்கு என்ன காரணம்? என்பதை எல்லாம் சற்று பின்னோக்கி சென்று நாமும் பார்த்துவிட்டு வருவோம்.
மதுக்கு சுகர் இருக்கறதால ஏற்கெனவே நடக்க இருந்த கல்யாணம் நின்ருச்சா? போட்டோவை பார்த்து கோபப்பட்டவன்தான் மாப்பிள்ளையா? அவன் அம்மாவும் காரணமா? என்ன ஆச்சு தோழனாக இருந்த ஆதவன் மணமகன் ஆனது ஏன்?
மதுக்கு சுகர் இருக்கறதால ஏற்கெனவே நடக்க இருந்த கல்யாணம் நின்ருச்சா? போட்டோவை பார்த்து கோபப்பட்டவன்தான் மாப்பிள்ளையா? அவன் அம்மாவும் காரணமா? என்ன ஆச்சு தோழனாக இருந்த ஆதவன் மணமகன் ஆனது ஏன்?