எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 5

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 5


இன்று

இன்னும் மூன்றே நாளில் அவன் உயிரானவளுக்கும், வேரொருவனுக்கும் திருமணம். இதை எப்படி அவன் தாங்குவான். இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து அவனுக்கு எதிலும் மனம் ஓடவில்லை.


‘எப்படி? எப்படி அவள் சம்மதித்தாள்? என்னுடைனயே இருந்தாளே! என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தாளே! என்னிடமே அனைத்தையும் கேட்டாளே! என் உயிராய் இருந்தாளே! ஒருவேளை வாய்விட்டுக் காதலிக்கிறேன் எனக் கூறாததால் அவளுக்கு என் காதல் புரியவில்லையோ? இல்லயே என் கண்ணைப் பார்த்து நான் நினைப்பதை புரிந்து கொண்டாளே! காதல் இல்லாமல் இது சாத்தியமா? கடைசியில் கூட அவளிடம் சென்று எனக்காகக் காத்திரு சீக்கிரம் வருவேன் எனக் கூறிவிட்டு தானே வந்தேன்’ எனப் பலவாறு குழம்பியவன் அவன் பயிற்சியிலும் தப்பு தவறாகவே செய்தான்.


பயிற்சி முடிந்து தன்னறைக்கு வந்தவன் முதலில் அழைத்தது தன் தகப்பனுக்கு.


“என்ன நடக்குதுப்பா அங்க?” என எடுத்த எடுப்பில் கேட்க, மகனுக்கு விஷயம் தெரிந்துவிட்டது எனப் புரிந்து கொண்டார் அந்தத் தகப்பன்.


“இன்னப்பா கேட்குற? ஒன்னியும் புரியலயே?”


“புரியலயா? இல்ல புரியாதது போல நடிக்கிறீங்களா?” சில நிமிடம் மௌனம் அவரிடம்.


“உன்னால உங்கம்மா மனசையும், உன் தங்கச்சி குணத்தையும் மாத்த முடியுமா?” எனக்கேட்க இப்போது மௌனிப்பது அவன் முறையாயிற்று.


“இந்த அமைதி தான் நான் கம்மினீருக்க காரணம்”


“அவளுக்குச் சுகர் இருக்குறதால உங்களுக்கும் அவள பிடிக்கலயா? உங்களுக்கும் அவ குறைதான் பெருசா தோனுதாப்பா?”


“அப்படிக்கா நினைக்க நான் உங்கம்மா இல்ல. நான் இளங்கோ.. நெஞ்சுல ஈரமுள்ள இளங்கோ.. உன் மாமன் உழைப்புல கொஞ்சமாச்சும் சாப்பிட்ட இளங்கோ.. அதுகோசரம் தான் இந்தக் கல்யாணம் பத்தி மூச்சு விடல”


“அப்போ உங்களுக்கும் தெரிஞ்சு, உங்க சம்மதத்தோட தான் நடக்குதுல எல்லாம்”


“ஆமா. அன்பு என்கிட்ட கேட்டுத் தான் எல்லாம் செய்றான். முழு மனசோடு தான் நானும் அவனுக்கு உதவி செய்றேன்”


“ஏம்ப்பா? அவ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏம்ப்பா நீங்களும் மாமாவும் இப்படி முடிவு பண்ணீங்க?” என மகன் மனமுடைந்து கேட்க, அவருக்கும் உள்ளுக்குள் வேதனையாகத்தான் இருந்தது.


“மதுவோட நல்லதுக்கு தான். உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சா, நீ சந்தோஷமா இருப்ப ஆனா அந்தபொண்ணு சந்தோஷமா ஒரு நாளும் இருக்க முடியாது. ஆனா அதே நேரம் அவங்க தாய்மாமா வீட்டுல அந்தபொண்ணு ராணி மானிக்கு வாழ்வா”


“அப்போ நான் காவி கட்டி சந்நியாசம் போனாலும் பரவாயில்லனு முடிவு பண்ணிட்டியாப்பா?”


“நீ ஏன் சன்னியாசம் போவனும்? உங்கம்மா உனக்கு ரிச் பொண்ணா பார்த்துக் கட்டிவைப்பா.. கட்டிக்கோ” எனக்கூற, படக்கென அலைபேசியை வைத்துவிட்டான் சித்தார்த். அலைபேசியை வெறித்துப் பார்த்தவர் அன்பழகனிடம் விரைந்தார்.


அன்பழகன் “வாங்க மச்சான். காலையில வீட்டுக்கு வருவீங்கனு எதிர்பார்த்தேன்”


இளங்கோ “நீ சந்தோஷமா விஷேசத்தை முடி மாப்பிள்ளை. நான் வந்தா பொறத்தால அந்த ராட்சஷி வந்துருவா. அப்புறம் நல்ல விஷயம் நிம்மதியா நடக்காது. நல்ல நாள் அதுவுமா அவ கலீஜா பேசுறத கேட்கனுமா? அதான் வரல”


“திருந்தவே மாட்டாளா அவ? ஒத்த தங்கச்சி அவள ஒதுக்கிட்டு பண்றதும் மனசை அறுக்குது”


“அதுக்கீட்டும் மாப்பிள்ளை. அத விடப் பெரிய விஷயம் ஒன்னு நடந்துருக்கு. இப்போ எனக்கு அதான் பகீர்னு இருக்கு”


“என்னாச்சு மச்சான்?”


“சித்தார்த்துக்கு விஷயம் தெரிஞ்சிருச்சுப்பா” எனக்கூற நெஞ்சில் கையை வைத்து அமர்ந்துவிட்டார் அன்பழகன்.


“அன்பு.. அன்பு.. இன்னாச்சுயா?”


“கல்யாணத்துல பிரச்சனை வந்துராதே மச்சான்?”


“அதெல்லாம் ஒன்னியும் வராது நான் பார்த்துக்கிறேன். நீ பதறாத. கல்யாண வேலையைப் பாரு”


“அவன் திரும்ப வந்து கேட்பானே.. ஏன் இப்படி மதுக்கு கல்யாணம் பண்ணீங்கனு கேட்பானே.. நான் கட்டிக்கிறேனு சொல்லிட்டு தான போனேன் ஏன் இப்படி பண்ணீங்கனு கேட்பானே.. நான் என்ன சொல்லுவேன்?”


“இங்க பாரு மாப்பிள்ளை நீ பதறாத. பார்த்துக்கலாம். அதெல்லாம் அவன் புரிஞ்சுப்பான். முதல்ல கொஞ்ச கஷ்டப்படுவான் தான் ஆனா அப்புறம் அவனைச் சரிக்கட்டிடலாம்” எனக் கூறியவருக்கும் கண்களில் கண்ணீர் கசிந்தது தன் மகனின் வேதனையை நினைத்து.


“ஆசைப்பட்ட சிறுசுகளை இப்படி பிரிச்சு வைக்கிறோமேனு நினைக்கும்போது நெஞ்சுல பாரமேறினமாதிரி இருக்கு மச்சான். வீட்டுல மது முகத்த கூட என்னால பார்க்க முடியல. நான் வருத்தப்பட கூடாதுனு அந்தப் புள்ளயும் என் முன்னாடி சிரிச்சுட்டு இருக்கு. ஆனா அது முகமே காட்டிக் கொடுக்குது”


“என்ன பண்றது இது தான் பிள்ளைக வாழ்க்கைக்கு நல்லதுனு நம்ம பேசித் தான இந்த முடிவுக்கு வந்தோம். உன் தங்கச்சியும், என் பொண்ணும் இருக்குற இடத்துல மதுவால நிம்மதியா இருக்கவே முடியாதுன்றதால தான நாம இந்த முடிவுக்கு வந்தோம்” எனப்பேசி கொண்டிருக்கும் போதே மது இரண்டு சக்கர வாகனத்தில் அன்பழகனை தேடி வந்தாள் காலையில் அணிந்திருந்த பட்டுப் புடவையுடன்.


“மதும்மா என்னாச்சு ஏன் நீ வெளிய எல்லாம் வந்த? என்னாச்சு?”


“உங்க போனுக்கு என்னாச்சுப்பா? நான் ரொம்ப நேரமா டிரை பண்ணி லைன் கிடைக்காம பதறிப் போய் வந்தேன்”


“போனு” என அவர் சட்டைப்பையில் தேட அது எப்பவோ உயிரை விட்டிருந்தது.


“சார்ஜ் இல்ல போலமா”


“உங்களைத் தான் எங்கயும் தனியா போகாதீங்கனு சொன்னேன்லப்பா. அப்புறம் ஏன் தனியா வரீங்க?”


“அந்தப் பூக்காரனை பார்த்து மாலைக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வரலாம்னு வந்தேன்ம்மா” என்றார். அப்போது அவர் அருகிலிருந்த இளங்கோவை கண்டாள் மது.


“நல்லா இருக்கீங்களா மாமா?”


“கீறேன்ம்மா.. நீ எப்படீக்கீற?” எனக்கேட்க சிரித்தாள் மது ஆனால் அந்தச் சிரிப்பில் தான் எத்தனை அர்த்தங்கள்.


“உனக்கு இனி எல்லாமே நல்லதே நடக்கும்மா. நீ நல்லா இருப்ப. இந்த மாமாவோட ஆசிர்வாதம் உனக்கு எப்பயுமிருக்கும்” எனக்கூற, வீதியென்றும் பாராமல் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.


அன்பு “சரிம்மா நீ வீட்டுக்குப் போ. இந்தா போன் போய்ச் சார்ஜ் போடு. நான் போய்ப் பூக்கடைக்காரனை பார்த்துட்டு வரேன். மச்சான் கூடத் தான் போறேன் பயப்படாம போம்மா” எனக்கூற தலையாட்டிவிட்டு நகர்ந்தவள் திரும்ப இளங்கோவிடம் வந்து,


“மாமா சித்தத்து எப்படி இருக்காங்க?” என்றாள் குரல் தழுதழுக்க, கண்களில் கண்ணீரோ இதோ வந்துவிடுவேன் என்பது போல நின்றது.


“நல்லா இருப்பானு தான் நினைக்கிறேன். நல்லா இருப்பான்ம்மா. நீ பத்திரமா வீட்டுக்குப் போ” எனக்கூறி அனுப்பிவிட்டனர்.


அவள் திரும்ப வரும் வழி எங்கும் அவன் நினைவு தான். இதே வீதியில் அவனுடன் சைக்கிள் பழகியதென்ன? மோட்டார் சைக்கிள் பழகியதென்ன? அவனோடு ஒட்டி உறவாடிச் சென்றதென்ன? இப்படி எத்தனையோ நினைவுகள் வந்து அவளைக் காயப்படுத்தியது.


கடைசியாக அவன் அவளிடம் வந்து, “உடம்ப பார்த்துக்கோ.. பத்திரமா இரு.. சீக்கிரமா உன்னைப் பார்க்க ஓடி வந்துருவேன் சரியா” எனக் கண்களில் அத்தனை காதலுடன் அவன் கூறிச்சென்றது மனதில் வாள்கொண்டு அறுத்தது போல இருந்தது.


வீட்டுக்கு வந்தவள் அவளறைக்கு சென்று அழுது கரைந்தாள். அவனை மறக்கவும் முடியவில்லை, இவனை ஏற்றகவும் முடியவில்லை. தன் நிலைமையை எண்ணியவளுக்கு எப்போதும் போல அழுகை மட்டுமே துணையாக இருந்தது.



சோகத்தால் எதுதான் மாறிடும்?

கண்ணீர் விட்டால் செடியா பூத்திடும்?

என்னாகும்.. வா வாழ்ந்தே பார்த்திடலாம்..

தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுமே..

அது உனக்கான காலம் வந்தால் உனைச் சேருமே..

சுடரி சுடரி முரங்கள் மாறாதே!

மனம்தான் தெளிந்தால் மயக்கம் நேராதே!

அழகே.. சுடரி.. அடி ஏங்காதே..

பரிவின் தினவை வலி தாங்காதே..

இதுவும் கடந்து போகும்..

இதுவும் கடந்து போகும்..



இங்கு ஒருத்தி அவன்மேல் உள்ள காதலை எல்லாம் கண்ணீராக மாற்றினாள் என்றால் அங்கோ ஒருவன் அவள்மீது உள்ள காதலை எல்லாம் வெறுப்பாக மாற்றிக்கொண்டிருந்தான்.


‘எல்லாரும் வந்து அவனைக் கட்டிக்கோனு சொன்னா நீ கட்டிப்பியா? என்னைப் பத்தி நீ நினைக்கக் கூட இல்லைல. உன்னோட சுயநலம் மட்டும் தான் உனக்கு முக்கியம் என்ன? என்னைக் கட்டிக்கிட்டா கஷ்டப்படுவனு எல்லாரும் சொன்னா என்னை விட்டுட்டு போய்டுவியா? ஏன் உன்னோட சித்தத்துக்காக உன்னால கொஞ்சம் எங்கம்மாவ சகிச்சிக்கிட முடியாதா? இல்ல எங்கம்மாட்ட உன்னை விட்டுட்டு நான் பரதேசமா போகப் போறேன்.


பிறந்ததுல இருந்து உன்ன கண்ணுக்குள்ள வைச்சி பார்க்குறவன், கல்யாணத்துக்குப் பிறகு உன்னை அம்போனு விட்டுட்டு ஓடிடவா போறேன்? ஆனா நீ அடுத்தவன் கையால தாலி வாங்க ரெடி ஆகிட்டல. மன்னிக்க மாட்டேண்டி உன்னை என் வாழ்நாள் முழுசும் மன்னிக்கவே மாட்டேண்டி’ எனக் கோபத்தில் பிதற்றிக் கொண்டிருந்தான்.


ஆனால் இதற்கெல்லாம் காரணமானவர்களோ வன்மத்தில் குமைந்து கொண்டிருந்தனர்.


ஆனந்தி “இன்னாடீ சொல்ற?”


சிந்து “என் ரெண்டு கண்ணால பார்த்தேன். உன் அண்ணனும் அப்பாவும் நின்னு பேசிட்டு இருந்தாங்க. இவ நல்லா ஜோடனையா வந்தா.. கொணட்டி கொணட்டி என்னமோ பேசினா.. பட்டாருனு அப்பா காழுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா”


“எதே! இந்தாளு சும்மாவே அவளுக்கு ஏத்துக்கின்னு பேசுவான்.. இப்போ இந்தாளையும் கவுத்திட்டாள்களா? இன்னாமாது ஏடாகூடமாச்சு நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்”


“அண்ணாண்ட சொல்லிட்டாங்களா? அவனுக்குத் தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டேனே! எதாவது பேஜாராகிட போகுதுமா”


“என்ன தான் அந்தாண்ட வளர்ந்தாலும் என்புள்ளைக்கு என்மேல எப்பவும் பாசம் ஜாஸ்திடி. என்னை மீறி அவன் ஒண்ணியும் பண்ணமாட்டான்”


“எனக்கு இன்னமோ ராங்காவே படுது. வேற எதோ பிளான் பண்றாங்கனு”


“அப்டீங்கீற வரட்டும் அந்தாளு இன்னீக்கு. வச்சுக்கிறேன் கச்சேரிய”


“கடைசியா ஒன்னே ஒன்னு சொல்றேம்மா. அவ அண்ணாண்ட மேல கொள்ளை பிரியம் வச்சிருக்கா. வீட்டுல சொன்னாங்கனு தான் இந்தக் கல்யாணத்து ஒ.கே சொல்லிருப்பா. அதுனால இவன் கிடைக்கலனா கண்டிப்பா அவளால சந்தோஷமா இருக்க முடியாது. இப்போ நம்ம பண்ண வேண்டியதெல்லாம் கல்யாணம் முடியுற வரைக்கும் அண்ணன இந்த ஊர் பக்கமே வராத மாதிரி பண்றது தான்”


“சரிடீ பார்த்துக்கலாம்” என இவர்கள் ஒருபுறம் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, மது வீட்டில்


“மது! மது!” கத்திக்கொண்டிந்தான் ஆதவன். அவன் சத்தத்தில் அழுது சிவந்த முகத்தை அழுத்தித் துணியால் துடைத்துவிட்டு வெளியே வந்தவள்,


“என்ன ஆது? எதுக்கு இப்படி கத்துற? உன்னைத் தான் கல்யாணம் முடியுற வர இங்க வர வேண்டாம்னு சொல்லிருக்காங்கல.. அப்புறம் எதுக்கு வந்த? கால் பண்ணிருக்கலாம்ல?” என்றாள் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு,


“அது சரி. நான் உன்னைக் கேட்க வந்தா நீ என்னைக் கேட்குறீயா? காலையில தான முகூர்த்த கால் ஊண்டினாங்க.. முகூர்த்த கால் ஊண்டிட்டா எங்கயும் வெளிய போகக் கூடாதுனு தெரியாதா? சாயந்தரம் எங்கோ ஸ்கூட்டில வெளிய போனீயாம்? எங்க போன?”


“அப்பாவ தேடி போனேன். அவருக்குக் கால் பண்ணா ரீச் ஆகவே இல்ல. அண்ணனும் கல்யாண வேலையா எங்கயோ போய்ட்டான், அப்பாவ காணோம்னு அம்மாவும், பாட்டியும் பயந்துட்டாங்க. அதான் நான் போய்ப் பார்த்தேன். ஏன்?”


“இல்ல சும்மா தான். ம்ச் நீ ஏன் வெளிய எல்லாம் போற? எனக்குக் கால் பண்ணிருந்தா நான் போய் மாமா எங்கனு பார்த்திருப்பேன்ல?”


“நான் ஸ்கூல் வரைக்கும் போய்ப் பார்ப்போம் இல்லனா உனக்குக் கால் பண்ணலாம்னு தான் இருந்தேன். ஆனா அப்பா பஜார் கிட்டயே இருந்தாங்க அதான் பார்த்துட்டு வந்துட்டேன்”


“சரி எதுனாலும் எனக்குக் கால் பண்ணு. இனி கல்யாணம் முடியுற வரை எங்கயும் வெளிய போகாத. புரியுதா?”


“புரியுது.. அப்புறம் நீ மட்டும் இப்போ என்னத்து வெளிய வந்தீயாம்? ம்ம்?” எனக்கேட்க அவன் முறைக்கவும்,


“சரி அத விடு நீ சாப்பிட்டியா ஆது?”


“இல்ல. இனி தான்”


“சரி வா சாப்பிடு”


“இல்ல கடையில ஒருவேலை இருக்கு. அங்க தான் போறேன் அங்க போய்ச் சாப்பிட்டுக்கிறேன்” என்றான். பி.இ முடித்ததுவுடன் வந்த வேலையை எல்லாம் உதறிவிட்டு, தகப்பனுக்கு ஓய்வளித்து விட்டுத் தகப்பனின் உணவகத்தை இவன் தான் பார்த்துக் கொள்கிறான். மது மட்டுமே மேற்படிப்பு படித்தாள் அதுவும் இப்போது முடியும் தருவாயில் உள்ளது.


“ரொம்ப பண்ணாத வா சாப்பிடலாம்”


“நீயும் இன்னும் சாப்பிடலயா?”


“ம்கூம் சாப்பிடல. வா ஆது” என்க,


“சரி வா..” என இருவரும் ஒன்றாக அவர்களது உணவை அருந்தினர். ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் இருவர் மனதிலும் இதே இடத்தில் நடந்த பல சம்பவங்கள் வலம் வந்துகொண்டிருந்தது. அவ்வளவு சந்தோஷமான தேன்க்கூட்டில் கல்லை விட்டெறிந்து கலைத்தது எதனால்?
 
Last edited:

Mathykarthy

Well-known member
ரெண்டு பேரும் எவ்வளவு விரும்புறாங்கன்னு தெரிஞ்சே எல்லாரும் சித்தார்த்க்கு தெரியாம இந்த கல்யாணத்த நடத்த பார்க்கிறாங்க 😤😡

பொண்டாட்டி பொண்ணை அடக்க வழி இல்லாம பையன் மனசு தெரிஞ்சும் அவனுக்கு எதிரா சதி செய்றாரு இளங்கோ 😡

தேவையில்லாம எல்லாரும் சேர்ந்து சித் மனசுல வெறுப்பை வளர்த்து விட்டுட்டாங்க 😣
 

Lufa Novels

Moderator
ரெண்டு பேரும் எவ்வளவு விரும்புறாங்கன்னு தெரிஞ்சே எல்லாரும் சித்தார்த்க்கு தெரியாம இந்த கல்யாணத்த நடத்த பார்க்கிறாங்க 😤😡

பொண்டாட்டி பொண்ணை அடக்க வழி இல்லாம பையன் மனசு தெரிஞ்சும் அவனுக்கு எதிரா சதி செய்றாரு இளங்கோ 😡

தேவையில்லாம எல்லாரும் சேர்ந்து சித் மனசுல வெறுப்பை வளர்த்து விட்டுட்டாங்க 😣
அதே தான் சிஸ். Thank you so much🥰🥰
 
Top