Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 3
இன்று
“மருதாணிக் கோலம் போட்டு..
மணிக்கையில் வளையல் பூட்டு..
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு..”
எனப் பாட்டுச் சத்தம் அஸ்வந்த் உபயத்தால் தெரு முழுக்க ஒழிக்க, அந்தத் தெருவில் கடைசி வீட்டிலிருக்கும் ஆனந்தியின் இரத்த கொதிப்பை ஏற்றியது.
“ஏம்மா! இவனுங்க இன்னம்மா இன்னைக்கே இப்படி பாட்ட போட்டு அதிரவிடுறானுங்க? ஊருல இல்லாத அழகினு இந்தச் சீக்கு பிடிச்சவளுக்கு இம்பூட்டு தடபுடலா பண்றானுங்க. அப்போ நாம நினைச்சது எல்லாம் வேஸ்டா? இவ்ளோ சந்தோஷமா இருக்கானுங்க.. எனக்குக் காண்டாகுதும்மா” என்றாள் ஆனந்தியின் மகள் சிந்து. சித்தார்த்தின் அருமை தங்கை.
“எனக்கும் தாண்டிக் காண்டாகுது. அந்த எழிலும், ஈகையும் என்னைப் பார்த்துக்கின்னே போய் அடுத்த வீட்டு வனஜா கிட்ட முகூர்த்தகால் ஊண்ட சொல்லும்போது, அவளுங்க குடுமிய பிடிச்சு அறுக்கனும் போல அத்தனை ஆத்திரம் வந்துச்சு” என்றார் ஆனந்தி.
“எல்லாத்துக்கும் உன் நொண்ணாத்தையும், உங்கொம்மா கிழவியும் தான் காரணம். ஈகை அத்தை சொல்றது தான் அவங்க அண்ணன் கேட்குறாரு. நீ சொல்றத உன்நொண்ணன் கேட்குறாரா இல்ல உங்கொம்மா கிழவி தான் கேட்குதா?”
“ஈகை நொத்தை.. அவளுக்கு மருவாத ஒன்னு தான் கொறைச்சல்.. தலையணை மந்தரம் போட்டு எங்கண்ணன வளைச்சு வச்சது போதாதுனு இன்னா சொக்குபொடி போட்டாளே எங்காத்தாவும் அவ பேச்சத்தேன் கேட்குது”
“இந்தச் சீக்குக்காரிய கதற வச்சு பார்க்கனுன்னு நினைச்சேன்ம்மா.. ஆனா அவ எப்படிம்மா உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா?”
“அவ அந்தக் கைகாரி மவ தான.. அவளமாதிரி அவ மவளும் கைதேர்ந்த கைகாரித்தேன்”
“அவள்க குஜாலா இருக்குறத பார்க்கும் போதெல்லாம் என் மனசு எரியுதும்மா.. என்னை அழவிட்ட அவளுங்க நாசமாத்தான் போவாள்க”
என அதீத சத்தத்தில் ஒழிக்கும் பாட்டையும் மீறிக் கத்திக்கொண்டிருந்தாள் சிந்து. அதைக் கேட்டபடியே அறையிலிருந்து வெளியே வந்தார் ஆனந்தியின் கணவர் இளங்கோ.
“இப்படி அடுத்தவங்கள நாசமாக்க நினைக்கிற நீங்க இரண்டு பேரும் தான் நாசமா போகப் போறீங்க. அந்தப் புள்ள வாழ்க்கை ஆரம்பமாகும் போதே இம்மா சாபம் கொடுக்கீறீங்களே ஆத்தாளும் மகளும். அந்தாண்ட வீட்டுல தின்ன நன்றீக்கிதா இரண்டு பேருக்கும்.
உங்கண்ணனாண்ட உனக்கு எம்மா செஞ்சிருப்பாரு. இது வேணும் அது வேணும்னு போய்க் கேட்டுக் கேட்டு வாங்கும்போது எங்கண்ணே மகராசன் நல்லா இருக்கனும்னு சொன்ன வாய் நாரவாயாடி? நன்றி கெட்ட ஜென்மங்களா!
இத்தனை வன்மம் ஆகாது ஒரு பொம்பளைக்கு. எல்லாத்தும் காரணம் நீ தான். ஒழுங்கா இப்போ உன் புருஷன் வூட்டுக்கு கிளம்புறீயா இல்லையா? இதெல்லாம் உன் புருஷனுக்கு தெரிஞ்சா இன்னாகும்னு தெரியும்ல உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுறாத கிளம்பு” எனக் காட்டமாகக் கூற கண்ணைக் கசக்கினாள் சிந்து.
“இன்னாத்துக்கு இப்போ எவ்வூட்டுக்கு வந்த புள்ளைய போவ சொல்றயா நீயி. பெத்த பிள்ளை மேல உனக்கே ஆசாபாசம் இல்ல, இதுல அடுத்தவகளுக்கு எங்கிருந்து வரும்? போயா அந்தாண்ட.. என்புள்ள போறப்ப தான் போவா”
“இவ இப்படி கண்ண கசக்கி கசக்கி தான் நம்மூட்டுக்கு வர இருந்த மகராசி வேற வூட்டுக்குப் போறா. இதுனால உடஞ்சு போய் நிற்கப் போறது யாரு தெரியுமா உம்மகன் தான்”
“இந்தாருய்யா இந்தக் கல்யாணம் பத்தி அவனுக்கு மூச்சுவிடக் கூடாது ஆமா சொல்லிட்டேன். என் மவனுக்கு நான் ரிச்சு பொண்ணா பார்த்துக் கட்டிவைப்பேன். இப்போ என்மவன் போலீஸ் தெரியும்ல?”
“நான் இன்னத்துக்கு அவன் கிட்ட சொல்லப் போறேன்? சொன்னா அவன் இன்னா செய்வானு எனக்குத் தெரியாது. அப்புறம் அந்தப்புள்ள உங்க இரண்டு பேர் கிட்டயும் கிடந்து நாயா பேயா அல்லல்படனும். அதுக்கு அந்தாண்ட வீட்டுல அது ராணியா இருந்துட்டு போகட்டும்”
“எவளோ எக்கேடு கெட்டோ போவட்டும் ஆனா எவ்வூட்டுக்கு எந்தச் சிறுக்கியும் வரக் கூடாது. என் மகனுக்கு அழகு புள்ளைய பார்த்துக் கட்டிவைப்பேன்”
“அப்புடி நடந்தா எனக்கும் சந்தோஷம் தான். என்மகன் வாழ்க்கை நல்லா இருந்தா சந்தோஷப்படுற முதல் ஆளும் நான்தேன். அதுக்கு நீ இன்னா பாடுபடனும் தெரியுமா? உன் மகன் லேசுல அந்தபுள்ளைய மறப்பானா?”
“அது அவள்க போட்ட சொக்குபொடில தான் என் மவேன் அவகிட்ட மயங்கிக் கிடந்தான். இனி அவளுக சங்காத்தமே வேணாம்னு அவனே வந்துருவான்”
“ச்சை நீ திருந்தவே மாட்ட.. எக்கேடு கெட்டும் போ” எனக் கோபமாக வீட்டை விட்டு வெளியேறியவர் மனதில் அவர் மகன்பற்றிய நினைப்பு தான். கடைசியாக அவன் பேசிச் சென்ற வார்த்தை தான் ஓடியது.
“அப்பா உனக்கு மருமகனு ஒருத்தி இருந்தா அது அவதான். அவ இல்ல நான் இல்ல.. இந்த டிரைனிங் முடிச்சுட்டு, வேலைய கையில வாங்கிட்டு வந்து அவள பொண்ணு கேட்டுப் போவோம். தரமுடியாதுனு சொன்னா தூக்கிட்டு வந்துருவோம்”
என மகன் கூறிச்சென்றது மனதை தைத்தது. இந்தக் கல்யாணம் பத்தி மகனிடம் கூறாமல் இருக்க காரணம் அன்பழகனின் உடல்நிலையும், மதுவின் நல்வாழ்வும் தான் காரணம்.
தன் மனைவி என்றைக்கும் மதுவை நன்றாக வைத்துக் கொள்ளமாட்டாரெனத் தீர்க்கமாக நம்பினார் இளங்கோ. அதனால் தன் மகனிடம் இந்தக் கல்யாணத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை.
அங்கு அவர் மகனோ தனக்கு வந்த அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆத்திரம் அத்தனை பேர் மேலும் ஆத்திரம் தன் மாமா குடும்பம், தன் தகப்பன் என அத்தனை பேர் மேலும் ஆத்திரம்.
மாமனிடம் “திரும்ப வந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம்” எனக் கூறிவிட்டு தான் வந்தான். தன் தகப்பனிடமும் தன் மனதை திறந்துவிட்டு தான் வந்தான். ஆனால் அத்தனை பேரும் சேர்ந்து நான் இல்லாத சமயம் பார்த்து அவளுக்கு வேறொருவனுடன் திருமணத்தை நடத்த முக்கிய காரணம் தன் தாயும், தங்கையும் என அறியாதவனும் இல்லை. ஆனாலும் அவனுள் அத்தனை கோபம். இப்போது அவன் எதிரில் யார் வந்தாலும் சூரசம்ஹாரம் செய்து விடுவான்.
கனவே நீ நான் விழிக்கவில்லை!
கலைவாய் என்றே நினைக்கவில்லை!
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை!
தொலைந்தேன் தனியே யாருமில்லை!
நீ நிஜம்தானா?
இல்லை நிழல்தானா?
பதில் கேட்கிறேன் கிடைக்காதா?
நம் ஞாபகங்கள்..
அதை நினைத்திருப்பேன்..
எனை தேடியே திரும்பாதா!
காதல் நீ! காயம் நீ நீ!
கானல் நீயே மறைந்தாயே!
வேஷம் நீ! பொய்கள் நீயே!
மாற்றம் நீ! நான் உடைந்தேனே!
கனவே நீ நான்..
“எப்படி டீ? எப்படி உன்னால இதுக்கு சம்மதிக்க முடிஞ்சது? இத்தனை நாளும் நமக்கிடையே இருந்த அன்பு, பாசம், நெருக்கம் எல்லாம் பொய்யா? அது காதல் இல்லையா? அப்போ நான் உன் மனசுல இல்லையா? என் காதலுக்கு மதிப்பே இல்லையா? நீ பிறந்ததிலிருந்து இந்தக் கைக்குள்ள பொத்தி பொத்தி வச்சேனே, நீயும் என் கைகுள்ளயே இருந்தீயே அப்போ அந்த உறவுக்குப் பேர் என்னடி?
உன் அண்ணன் கிட்டக்கூட நீ எல்லாத்தையும் சொல்லுவியானு எனக்குத் தெரியல ஆனா என்கிட்ட எதுவுமே மறச்சதில்லையேடி இப்போ இவ்ளோ பெரிய விஷயத்தை மறைக்கிற? நேத்து கூட உனக்குப் போன் போட்டேனே எடுத்துச் சொல்லிருக்க கூடாதா? அப்போ நீயும் இதுக்கு உடந்தை தானடி”
என்றவனுக்கு அவளுடனான அவனது சிறுவயது நினைவுகள் நினைவடுக்கிலிருந்து வெளிவந்தது.
Last edited: