Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 4
அன்று
2010 ம் வருடம் சித்தார்த்தும், அஸ்வந்தும் அவர்களது பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்து வீட்டிலிருந்தனர். மீதி இருந்த குழந்தைகளும் கூடப் பரீட்சை முடிந்து வீட்டிலிருக்க அனைவரும் மதுவீட்டில் தான் இருந்தனர். இரவு தூங்குவதற்கு மட்டுமே அத்தனை பேரும் அவரவர் இல்லத்துக்குச் சென்றனர்.
சித்தார்த் இன்னமும் அவன் மாமா வீட்டில் தான் இருக்கிறான். ஆனந்திக்கும் அவனைத் தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஆசை இல்லை. அவனும் அவன் வீட்டுக்குச் செல்வான். அப்பா, அம்மா, தாத்தாவைப் பார்ப்பான், கூட இருப்பான், எல்லாம் செய்வான் ஆனால் சாப்பிடுவதும், தூங்குவதும் அஸ்வந்துடன் தான். சிறுவயது பழக்கம் இன்னும் மாறவில்லை. ஈகைச்செல்வியுமே சித்தார்த்தை தன் வீட்டு உறுப்பினராகத் தான் வைத்திருந்தார்.
இப்போது விடுமுறை வேறு அத்தனை பேரும் ஒன்று கூடி அவர்களது பிடித்தமான விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர். அப்போது கண்ணாம்பூச்சி ஆட்டம் தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அஸ்வந்த் தான் அனைவரையும் கண்டு பிடிக்க வேண்டும். அனைவரும் மறைவான இடம் தேடி ஒளிந்தனர். மதுவோ அதவனுடன் சேர்ந்து மாடிப்படிக்கு கீழே ஒளிய போக,
சித்தார்த் “தாரா! இங்க ஒளிஞ்சா சீக்கிரம் மாட்டிப்போம் வா. வேற இடத்துல ஒளியலாம்”
மது “டேய் ஆது! இங்க இருந்தா மாட்டிப்பியாம் டா. வா நம்ம சித்தத்து கூட ஒளியலாம்”
சித்தார்த் “எல்லாரும் ஒரே இடத்துல இருந்தா தான் மாட்டிப்போம். அவன் இங்கயே இருக்கட்டும் நீ வா” என அவளின் கையைப் பிடித்துத் தன்னுடன் இழுத்து வந்தான்.
ஆதவன் “சித்துண்ணா நானும் வரேன்”
சித்தார்த் “மொத்தமா இருந்தா மாட்டிப்போம் டா. அடுத்த தடவை நீயும் நானும் ஒளியலாம். ஓ.கே வா?” எனக் கூறி மதுவை கூட்டிக்கொண்டு சென்றான்.
சித்தார்த்தும், மதுவும் ஒளிய இடம் தேடி ஒரு புதிதாக வீடு கட்டும் கட்டிடத்திற்கான கட்டுமான பொருட்கள், மரக்கட்டைகள் எல்லாம் போட்டு இருக்கும் இடத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் ஒளிந்தனர்.
அஸ்வந்தும் ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து விட்டான் இவர்கள் இருவரைத் தவிற. அவனும் இவர்களைத் தேடி இங்கும் அங்கும் அழைய, இவர்கள் ஒளிந்துருக்கும் இடத்தைப் பத்து தடவைக்கும் மேல் கடந்து நடந்து போய்த் தேடிக் கொண்டிருந்தான்.
மதுவுக்கோ அந்த இடத்தில் கொஞ்ச நேரத்துக்கு மேல் இருக்க முடியவில்லை.
“சித்தத்து! வா நம்ம போய் அண்ணாக்கு ஐஸ் அடிக்கலாம்” என அழைக்க,
“இரு தாரா! அவன் என்ன பண்றானு பார்ப்போம்” என அவளை அடக்கி அமைதியாக இருக்கும்படியும் சைகை செய்தான்.
அந்தச் சமயம் தான் மரக்கட்டைகளின் இடையிலிருந்த ஒரு பாம்பு வெளியே வர, இருவருமே அதைப் பார்க்கவில்லை. அவர்கள் இருவரின் கவனமும் அஸ்வந்த் வருகிறானா என்பதிலே இருந்தது.
அப்போது தான் மதுவின் காலில் ஏதோ உரச, குனிந்து பாத்துவிட்டாள் அந்தப் பாம்பை. அவளோ பாம்பைப் பார்த்துப் பயந்து கத்த, பாம்போ அவளைப் பார்த்துப் பயந்து அவள் காலில் கொத்திவிட்டது.
பாம்பு கொத்தவும் வலியில் கத்த, அந்த நேரம் பார்த்து அஸ்வந்தும் இவர்கள் இடத்திற்கு அருகே வர, சித்தார்த் மதுவின் வாயைத் தன் கையால் மூடிவிட்டான். எங்கே இவள் சத்தத்தால் மாட்டிக்கொள்வோமோ என. பாவம் அவளைப் பாம்பு கடித்ததை கவனிக்கவில்லை.
கத்தமுடியாமல் வாயும் பொத்தப்பட்டிருக்க வலியில் மயங்கிவிட்டாள் மது. ஆனால் இவள் கத்திய சத்தத்தில் அஸ்வந்தும் இவர்கள் இடத்தைக் கண்டுபிடித்துவிட, சித்தார்த் அவளை விட்டு எழுந்தரிக்கவும், அவள் மயங்கிச் சரியவும் சரியாக இருந்தது. அவள் மயங்கவும் பதறிவிட்டனர் இருவரும்.
சித்து “தாரா! தாரா! எந்திரி என்னாச்சு” எனப் பதற,
அஸ்வந்த் “மதுகுட்டி! மதுகுட்டி! என்னாச்சுடா” என அவள் கண்ணத்தை தட்ட, பாம்பைப் பார்த்துவிட்டான் சித்தார்த்.
சித்து “அஸூ! நகரு.. தாராவ பாம்பு கடிச்சிருக்கு நகரு” என அவனை நகர்த்தி அவளைத் தூக்கிக்கொண்டான்.
மதுவோ அப்போது கொஞ்சம் பூசின உடற்வாகு தான். இவனும் பத்தாவது முடிச்ச விடலை பையன் தான். முடியாவிட்டாலும் கஷ்டப்பட்டு அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
அவசர அவசரமாக வைத்தியர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் மதுதாரா. சித்தார்த்தோ குற்ற உணர்ச்சியில் இருந்தான்.
சித்தார்த் “என்னால தான் அஸூ தாராக்கு இப்படி ஆச்சு. அவ படிக்குக் கீழ தான் ஒளிஞ்சா.. நான் தான் அங்க கூட்டிட்டு போனேன்”
அஸ்வந்த் “உனக்கு அறிவே இல்ல. அங்க எதுக்குடா போனீங்க?”
சித்தார்த் “அங்கனா நீ எங்கள கண்டுபிடிக்க மாட்டேனு தான் நினைச்சேன். அதான் அங்க போனேன். ஆனா பாம்பு இருக்கும்னு எனக்கு எப்படிடா தெரியாம்?”
அஸ்வந்த் “சரி விடு. பாப்பாக்கு சரியாகிடும். ஆனா அப்பா என்ன சொல்லுவாரோனு தான் பயமா இருக்கு”
சித்து “ஆமாம் டா எனக்கும் அதான் பயமா இருக்கு. தாராவுக்கும் சரியாகிடனும்”
ஆதவன் “அதுக்கு தான் நானும் கூட வரேனு சொன்னேன். என்னையும் கூட்டிட்டு போயிருந்தா நான் ஸ்னேக் கூட ஃபைட் பண்ணி என் மதுவ சேவ் பண்ணிருப்பேன் சூப்பர் மேன் மாதிரி. நீங்க ஒன்னுமே பண்ணல” எனச் சித்தார்த்தை வம்புக்கு இழுத்தான் அந்தப் பொடியன்.
அஸ்வந்த் “இவன் ஒருபக்கம் குறுக்க குறுக்க வருவான். டேய் அவன் சும்மாவே டென்ஸன்ல இருக்கான் அடிவாங்கிறாத ஓடிப்போயிறு”
என அவனை அனுப்பிவிட்டுவிட்டு இவர்கள் இருவரும் பயத்தில் அமர்ந்திருந்தனர். திரும்பி வந்து தங்களை அடிப்பார்களோ எனப் பயம் அவ்விருவருக்கும்.
வைத்தியர் “ஆபத்து இல்ல. கடிச்சது விஷபாம்பு இல்ல அதுனால பிரச்சனை இல்ல. இந்த மருத்து மட்டும் கொடுங்கனு” எனப் பச்சிலையும், மருந்துபொடிகளும் கொடுத்து, எப்படி பார்க்க வேண்டும் எனச் சில பல அறிவுரைகளையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
இவர்கள் வீட்டிற்கு வரும் முன்னரே சித்தார்த் அப்பா இளங்கோவுக்கு விஷயம் தெரிந்து வந்து, சித்தார்த்துக்கு அடி விழுந்து கொண்டிருக்க, மதுதாரா வீட்டுற்கு வந்துவிட்டாள். வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கண்டது இளங்கோ சித்தார்த்தை அடிப்பதைத்தான்.
“மச்சான்! மச்சான் ஏன் அவன அடிக்கிறிங்க?” என அன்பழகன் பதறிக் கொண்டு வர,
“புள்ளைய கண்ட இடத்துக்கும் இட்டுன்னு போய் இப்படி பாம்பு கடிக்கிற அளவுக்கு வந்துருச்சே! ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா இன்னா பண்ண முடியும்? இன்னுமும் இவன் இன்னா பொடிப்பயலா?”
“விடுங்க மச்சான் விளையாடத் தான் செஞ்சதுங்க.. பாம்பு வரும்னு பிள்ளைகளுக்கு தெரியுமா என்ன?”
“சரி மாப்பிள்ளை.. வைத்தியர் இன்னா சொன்னாரு?”
“பயப்பட ஒன்னுமில்ல மச்சான் ஓலப்பாம்புத்தேன்”
“நல்லவேலை யாரு செஞ்ச புன்னியமோ நம்ம புள்ளைக்கு ஒன்னீயுமாகல” என்றவர் மீண்டும் ஒருமுறை சித்தார்த்துக்கு அறிவுறை வழங்கிவிட்டே கிளம்பினார்.
ஆதவன் மதுவிடம் வந்து “பேசாம நீ என் கூடவே இருந்திருக்கலாம். இந்தச் சித்தண்ணா உன்னைச் சேவ் பண்ணாம விட்டுட்டாங்க” என்றான் பாவமாக.
ஆனால் அவளோ மெல்ல சித்தார்த் அருகில் வந்தவள் “மாமா ரொம்ப அடிச்சுட்டாங்களா சித்தத்து? வலிக்குதா?” என அவன் முதுகை தடவிவிட அந்த விடலைப் பையன் மனதில் ஏதோ முளைவிடத்தான் ஆரம்பித்தது ஆனால் அது என்னவென அறியாப்பருவம் அது.
அன்று முதல் அஸ்வந்தும், சித்தார்த்தும் மதுதாராவை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டனர். இரண்டு வாரம் கடந்திருக்கும் கன்னியாகுமரி அருகே உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்குக் கிளம்பினர். மதுவுக்கு பாம்பு கடித்தபோது நேர்த்திவைத்தது.
அன்பழகன், இளங்கோ மற்றும் பூபாலன் குடும்பம் மொத்தமும் கிளம்பியது வைரம் பாட்டி உட்பட. பதினாங்கு பேர் அமரக்கூடிய ஒரு சின்ன வேனில் கிளம்பினர்.
ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அன்பழகன் அமர அவருக்குப் பின்னால் இருந்த மூன்று ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் இளங்கோ, இளங்கோவின் அப்பா, பூபாலன் அமர, அவர்களுக்கு எதிர்திசையில் இருவர் அமரும் இருக்கைகளில் வைரம்-ஈகை, ஆனந்தி அவள் மகள், எழில் அவள் மகள் என அமரக் கடைசியில் நான்கு பேர் அமரக்கூடிய இருக்கையில் ஜன்னலோர இருக்கை இரண்டையும் அஸ்வந்தும், ஆதவனும் பிடிக்க அவர்களுக்கு நடுவில் சித்தார்த்தும், மதுதாராவும் அமர்ந்தனர். இனிதே ஆரம்பமாகியது பயணம்.
கிட்டத்தட்ட எழநூறு கிலோமிட்டர் அதாவது பன்னிரெண்டு மணிநேர பயணம். சென்னையிலிருந்து இரவு உணவை முடித்துவிட்டு ஒன்பது மணிக்குக் கிளம்பியவர்கள் காலை ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தான் கன்னியாகுமரி அடைந்தனர்.
வாகனமும் கிளம்பி ஒரு இரண்டு மணி நேரம் நகர்ந்திருக்கும் சித்தார்த்தின் கைகளைச் சுரண்டினாள் மதுதாரா.
“என்ன தாரா?” என்றான்.
“சித்தத்து உச்சா வருது”
“அதுக்கு தான் கிளம்பும்போது வீட்டுலயே போகச் சொன்னேன். நீ போனியா? இல்லையா?”
“போனேன் சித்தத்து ஆனாலும் வருது. அர்ஜெண்ட்டா”
“இரு மாமாக்கிட்ட சொல்றேன்” எனக்கூறியவன் மாமனிடம் கூறி ஒரு பெட்ரோல் பங்க்கில் வண்டியை நிறுத்தி, அனைவரும் சென்று வந்தனர். மீண்டும் ஆரம்பமானது பயணம்.
அடுத்து இரண்டு முணு மணிநேர பயணம் கழித்து ஓட்டுநருக்குத் தேநீர் குடிக்க நிறுத்த, அனைவரும் இறங்கி டீ, காபி குடித்து, கழிவறை செல்பவர்களும் செனறு வந்தனர். மீண்டும் ஆரம்பமானது பயணம். மேலும் இரண்டு மணிநேரம் சென்றிருக்கும் மீண்டும் உறங்கிக்கொண்டிருந்த சித்தார்த்தின் கைகளைச் சுரண்டினாள் மதுதாரா.
“என்ன தாரா? தூங்கு எதுக்கு எழுப்புற?”
“சித்தத்து உச்சா அர்ஜெண்ட்”
“டீக்குடிக்கும்போது எல்லாரும் போனாங்கல அப்போ போயிருக்கலாம்ல.. இப்போ வந்து சொல்ற?”
“போனேன் சித்தத்து” என்றாள் பாவமாக.
“நல்லா பொய்யா சொல்லிட்டு திரியுற.. அடி வாங்க போற பாரு. தூங்கு”
“நிஜமா சித்தத்து அர்ஜெண்ட்” என்றாள் அழுதுவிடுவது போல. அவள் முகம் காட்டும் பாவனைகளைப் பார்த்தவன் மீண்டும் வண்டியை நிறுத்தினான்.
இப்படியே ஒருவாறு காலைக் கன்னியாகுமரி வந்தடைந்தனர். முதலில் ஒரு உணவகத்தில் அறையை எடுத்து அனைவரும் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து காலை உணவை முடித்து, குலதெய்வ கோவிலுக்குக் கிளம்பினர்.
அங்கே சென்று பொங்கல் வைத்து, அவர்கள் நேர்த்திக்கடனை மது கைகளால் செலுத்தினர். அங்கு அனைத்து காரியங்களும் முடிய மாலைபோலக் கிளம்பி அருகில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சென்றனர். அங்குத் தொட்டிப்பாலத்தை பார்த்து, அங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அருகில் உள்ள ஆற்றில் குளித்து ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
இரவு உணவை வெளியில் முடித்து, அறைக்கு வந்தனர். மறுநாள் காலைச் சூரிய உதயம் காண அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்துக் கிளம்பி கடற்கரைக்கு வந்தனர் அன்றைய சூரிய உதயம் காண.
மது “சித்தத்து என்ன இன்னும் சன் காணோம்”
சித்தார்த் “பொறு தாரா இப்போ வந்துரும்” என்றான். சிறிது நேரம் கழித்து,
“சித்தத்து என்ன இன்னும் சன் வரல? இன்னுமா தூங்குது?”
“கொஞ்சம் பொறு தாரா வந்திரும்”
“சித்தத்து வானம் நல்ல வெளிச்சம் ஆகிடுச்சு இன்னுமா வரல” என நச்சரிக்க தொடங்கினாள். அந்தோ பாவம் அன்று சூரியன் மேக மூட்டத்தின் மறைவில் உதயமானது அந்தச் சிறுமிக்குத் தெரியவில்லை. தெரிந்த பெரியவர்கள் அடுத்ததடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.
“ம்ச்.. சூரியன் வெளிய வந்துருச்சு ஆனா மேகம் மறச்சிடுச்சு தாரா. அதுனால தான் தெரியல”
“மேகத்தை யாரு இன்னைக்கு வரச் சொன்னா? நான் சூரியன் பார்க்கனும்” என அழுக,
அஸ்வந்த் “கொஞ்ச நேரம் பொறு சூரியன் உச்சிக்கு வந்திருவார் அப்போ பாரு. இப்போ வா எல்லாரும் கிளம்பிட்டாங்க”
“போ.. நான் வரமாட்டேன் எனக்குச் சூரியன் பார்க்கனும்”
“வரலனா இங்கயே நில்லு. நாங்க போட்ல போகப் போறோம். டேய் சித்து வா டா கிளம்பலாம் இவ நிக்கட்டும்”
“நானும் வருவேன்.. நானும் வருவேன்” என இருவரின் கைகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டே சென்றாள்.
முதலில் விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றனர். முதன்முதலில் சிறுவர்கள் அனைவரும் படகில் செல்ல அத்தனை குதூகலம் அவர்களுக்கு. சித்தார்த்க்கு அருகில் தான் அமர்திருந்தாள் மதுதாரா. படகு கடலில் செல்லும்போது அலைகளால் ஆடும்போது அத்தனை பரவசம் அச்சிறுவர்களுக்கு. சித்தார்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு குதூகலித்தாள் அவனின் தாரா.
அங்கு அனைத்தும் பார்த்து முடித்துத் திருவள்ளுவர் சிலைக்குச் சென்றனர். அங்குத் திருவள்ளுவரின் 133 அடி சிலையைப் பார்த்துப் பிரமித்து நின்றனர்.
அன்பழகன் “மதும்மா! இந்தச் சிலைக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னனு சொல்லு பார்ப்போம்”
மது “எனக்கா? தெரியலப்பா”
“உனக்கும் இந்தச் சிலைக்கும் ஒரே வயது. நீ பிறந்த அன்னைக்கு தான் இந்தச் சிலை திறந்தாங்க”
மது “அப்போ எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல பர்த்டே யா?”
“ஆமாம்டா” எனக்கூற அத்தனை பேரிடமும் சென்று கூறி மகிழ்ந்தாள். அன்று இரவே மீண்டும் சென்னைக்கு திரும்ப, அன்று வரும்போது செய்தது போலவே அத்தனை தடவை இயற்கை அழைப்புக்காக வண்டியை நிறுத்தச் செய்திருந்தாள். அப்போது தான் அன்பழகனுக்கும், சித்தார்த்துக்கும் ஏதோ தவறாகப் பட்டது. வீட்டிற்கு வந்த மறுநாள் சித்தார்த் அன்பழகனிடம்,
“மாமா தாராவ நோட் பண்ணீங்களா? அவ அளவுக்கு அதிகமா பாத்ரூம் போற மாதிரி இல்ல? எத்தனை தடவை நிறுத்தச் சொன்னா பார்த்தீங்களா?”
“ஆமா சித்தார்த். நானும் கவனிச்சேன். இன்னைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் என்ன ஏதுனு பார்ப்போம்” என அவளை மருத்துவமனை அழைத்துச் சென்றவர்களுக்குத் தலையில் இடி போல அவள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது.
உடற்பருமன் மற்றும் வாழ்வியல் முறையால் வந்திருக்கலாம் அல்லது மதுவை கர்பமாக இருக்கும்போது ஈகைக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயால் வந்திருக்கலாம். அல்லது அவளது அப்பத்தா வைரம் அவருக்கு இருக்கும் வியாதி மரபணுக்கள் மூலமா வந்திருக்கலாம். எப்படி வந்தது என ஆராய்வதற்கில்லை. வந்துவிட்டது இனி அவளைக் கவனமாகக் கையாள வேண்டும்.
ஆனால் இந்த வியாதி அவள் வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப் போடப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.