எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 4

S.Theeba

Moderator

திங்கட்கிழமை மதியத்திலிருந்தே வீட்டில் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அதிலும் சரோஜா காலில் இறக்கை கட்டிக்கொண்டே பறந்தார் என்று சொல்லலாம். வீட்டில் யாரையும் ஒரு இடத்தில் அப்பாடா என்று இருக்க விடவில்லை. அன்று குமாரும் அபிராமியும் தங்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தனர். அவர்களையும் அவர் ஓய்ந்திருக்க விடவில்லை. குமாரை அடிக்கடி கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கி வரச் செய்தார். அபிராமியை சுத்தமாக இருந்த வீட்டையே மீண்டும் சுத்தம் செய்ய வைத்தார். நளாயினியும் தானும் சேர்ந்து பலகாரங்கள் செய்வதில் ஈடுபட்டார்.
இவ்வளவு அமளிக்குக் காரணம் அன்று அபிராமியைப் பெண் பார்க்க வருகின்றார்கள். அவளுக்கு பெண் பார்க்கும் சம்பிரதாயம் பிடிக்கவில்லை. "என்னம்மா இந்தக் காலத்தில் போய் பெண்பார்க்கிற, மாப்பிள்ளை பார்க்கிறதென்று ஒரு நிகழ்வு தேவையா?" என்று தன் தாயிடம் அதுபற்றிப் பேசியும் பார்த்தாள். ஆனால், சரோஜா இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம். சிலவற்றை நாம் அப்படியேதான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.
மாலை நான்கு மணியளவில் அவர்கள் வந்தார்கள். இவர்கள் எதிர்பார்த்தது போல் நாலைந்து கார்களில் நிறைந்த உறவினர் கூட்டம் என்று அவர்கள் வரவில்லை. மாப்பிள்ளையும் அவரின் பெற்றோரும் தாயின் தங்கையும் அவர் கணவருமென ஐவர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே குமாருக்கும் சரோஜாவிற்கும் மிகவும் பிடித்து விட்டது. மாப்பிள்ளையின் பெற்றோர் வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் மிகவும் எளிமையான தோற்றத்தில் இனிமையான குணமுடையவர்களாக இருந்தனர். சித்திக்காரி கொஞ்சம் பகட்டாக இருந்தபோதும் அவரின் பேச்சுகளை தன் பார்வையாலே தமக்கை அடக்கினார்.
சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்ததும் சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அபிராமியை அழைத்து வந்து இருக்க வைத்தார்கள். வெட்கத்தில் குனிந்த தலை நிமிராமல் இருந்தவள் ஓரக் கண்ணால் வந்திருந்தவனைப் பார்த்தாள். அப்போது மாப்பிள்ளையாக வந்திருந்த தமிழினியனும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் வெட்கம் அவளை ஆட்கொள்ள குனிந்தாள்.
பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மணமுடிக்கப்போகும் இருவரும் அமைதியாக இருக்கவும் இருவரும் தனியாகப் பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தனர்.
வீட்டின் பின்புறம் தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல்லாலான பெஞ்சில் அவனை உட்கார வைத்தாள். பெரிய அந்த இருக்கையின் மறுபுறத்தை சுட்டிக் காட்டியவன்
"இதில் உட்காரலாமே" என்றான்.
மறுப்பேதும் சொல்லாமல் உட்கார்ந்தவள் தன் விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் ஆகியும் அவன் எதுவும் பேசவில்லையே என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் இவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் நெஞ்சம் படபடக்க தலையைக் குனிந்து கொண்டாள்.
அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனது போட்டோவை முதன்முதலாகத் தந்தை தந்துவிட்டு சென்றபோது அதனை எடுத்துப் பார்த்ததுமே முன் ஜென்ம பந்தமம் போல மனது பூரா அவன் உருவம் நிறைந்தது. மீண்டும் மீண்டும் அதனை எடுத்துப் பார்த்து அவன் உருவத்தை தன் நெஞ்சிலே ஆழப் பதித்திருந்தாள். இவன்தான் உன் மணாளன் என மனம் உரைத்ததை தவிப்புடன் உணர்ந்து கொண்டாள்.
இப்பொழுது அவனை நேரில் பார்த்ததும் தனக்கு உரிமையான ஒன்று மீண்டும் கைசேர்ந்த உணர்வே அவளுக்கு உண்டானது.
'என்ன பேசுவதென அறியாமல் நான் தான் தவிக்கின்றேன் என்றால் இவருக்கு என்ன ஆச்சு...? ஏன் இப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்....?' எனத் தவித்தாள் அபிராமி.
அப்போது மெதுவாக, ஆனால் கம்பீரமான குரலில் தமிழினியன் ''ஹலோ...!" என்று அழைத்தான்.
'இவர் என்ன அடுத்த ஊரிலிருந்து போன் பேசுறாரா? ஹலோவாம் ஹலோ....! என் பெயர் சொல்லிக் கூப்பிடலாம் தானே...?' என்று அபிராமி மனதிற்குள் புலம்பினாள்.
"உன்னைத்தான் கூப்பிட்டேன். இப்போ பேசலாமா?" என்றான்.
'ம்க்கும்..பேசத்தானே இங்கே அனுப்பி வைத்தார்கள். பின்ன விளையாடவா வந்தோம் ' என்று தனக்குள்ளே நொடித்துக் கொண்டாள்.
தனது தொண்டையைச் செருமிக் கொண்டவன்,
"நான் சொல்ல வருவதை முதலில் சரியாகப் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்..... எனக்கு.. எனக்கு இந்தக் கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை... நீ இந்த கல்யாணப் பேச்சை எப்படியாவது நிறுத்திவிடு. உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று உன் பேரன்சிடம் சொல்லிவிடு. அதற்காக என்னைப் பற்றி தப்பாகச் சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பட், இந்தக் கல்யாணப் பேச்சு இத்தோட நிற்கணும்..... உன்கிட்ட இதை நேரில் சொல்லணும் என்று தான் வந்தன்."
அவன் கூறுவதைக் கேட்டதும் அபிராமிக்கு சிறிது நேரம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. திகைப்பூண்டை மிதித்தாற் போல் அசையாது நின்றாள்.
அவளது முகத்தையே பார்த்து பேசிக் கொண்டிருந்த தமிழினியனுக்கு அவளில் தோன்றிய அதிர்ச்சியும் கலக்கமும் காண கண்களில் ஒருவித வலி தோன்றி மறைந்தது. விநாடிக்குக் குறைவாக தோன்றிய வலியை மறைந்தவன்
"இதோ பார், நமக்கிடையே நடக்கவிருக்கும் இந்தக் கல்யாணம் உனக்கு ஒருநாள் கூட சந்தோசத்தைத் தராது. எதிர்காலத்தில் ஏமாறுவதைவிட இப்போதே முடிவெடுத்துக்கொள். இப்படி ஒரு கல்யாணம் உனக்குத் தேவையில்லையே. எனக்கும் கல்யாணத்தில் விருப்பமில்லை. மீறி நடந்தாலும் உன்னுடன் வாழ்வதென்பது நடவாத காரியம். சோ, உன் வீட்டில் சொல்லி நீ இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்திவிடு" என்றான்.
"ஏன்....?"
"எனக்கு கல்யாணம் என்பதிலேயே பிடிப்பில்லை. இந்தக் கல்யாணம் நடந்தால் நீ என்னுடன் சந்தோசமாய் வாழ மாட்டாய்... சோ, இதை எப்படியாவது உன் பேரன்சிடம் சொல்லி நிறுத்திவிடு" என்றான் கறார்க்குரலில்.
அவளால் எதுவும் பேச முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே இருந்தாள்.
அவளைத் திருப்பிப் பார்த்தவன்
"ஓகே இனி உன் கையில் தான் இருக்கு. எப்படியாவது நிறுத்திவிடு" என்றவன் அத்தோடு தான் பேச வந்தது முடிந்துவிட்டது என்று நினைத்தான் போலும் கடகடவென உள்ளே சென்று அமர்ந்து விட்டான்.
அருகே வந்து அமர்ந்த மகனின் முகத்தை ஆராய்ந்த பாலா அதிலிருந்து எதனையும் கண்டுபிடிக்க முடியாமல் அவனிடம் ரகசியமாக "என்ன இனியா உனக்கு அபிராமியைப் பிடிச்சிருக்கா...? அவர்களிடம் என்ன சொல்ல. ஓகே சொல்லவா?" என்று கேட்டார். அவனும் "ம்ம் சம்மதம்" என்று தலையாட்டினான்.
பாலா "எங்க இனியனுக்கு உங்க பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு நாம பேசலாம். அதற்கு முதல் நீங்களும் உங்க பொண்ணுகிட்ட பேசிற்று நல்ல பதிலாக சொல்லுங்க.. அவசரமில்லை. நாங்க இப்போ புறப்படுறோம். நீங்க சாவகாசமா உங்கள் மகள் கிட்ட பேசிற்று, அப்புறமா ஹோல் பண்ணி சொல்லுங்க. நாங்க உங்க போனுக்காக வெயிட் பண்ணுறம்." என்றார். அவர்கள் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.
உள்ளறையிலிருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அபிராமிக்கு பெரும் குழப்பமே உண்டானது. தன்னிடம் கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு எல்லோரிடமும் சம்மதம் என்று ஏன் சொன்னான்...? என்னைப் பிடிக்கவில்லையா....? என்று குழம்பி நின்றாள். ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவன் அப்போது பேசியபோது உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே என்று ஒரு சின்ன ஆறுதல் மட்டும் ஏற்பட்டது.
மறுநாள் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை. அன்று சரஸ்வதி ஒரு அரசியல்வாதியைப் பேட்டி எடுக்கவென வெளியில் சென்றிருந்தமையால் தனியாக அமர்ந்து உணவை உண்ண முடியாது அளைந்து கொண்டிருந்தாள். மனம் முழுவதும் நேற்று நடந்ததே ஓடிக்கொண்டிருந்தது. எப்படித் தன் பெற்றோரிடம் இந்த சம்பந்தத்தை நிறுத்துமாறு கூறமுடியும். அவர்கள் திருமணப் பேச்சு எடுக்கும் போதே எல்லாம் உங்கள் விருப்பம். நீங்கள் எது செய்தாலும் எனக்கு சம்மதமே எனக் கூறிவிட்டு இப்போது போய் நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அவளது அலைபேசி அழைத்தது. புது எண்ணிலிருந்து அழைத்தார்கள். யாராக இருக்கும் என்று யோசித்தபடியே அழைப்பை ஏற்றாள். மறுமுனையில் அழைத்தது தமிழினியன் தான்.
"ஹலோ, நான் தமிழினியன் பேசுறன். நீங்க அபிராமி தானே?" என்றான். அவனது குரலைக் கேட்டதும் தன் மனம் ஏன் இவ்வளவு ஆனந்தப்படுகின்றது என்று மனதிற்கு ஒரு குட்டை வைத்தவள்
"ம்ம், சொல்லுங்க..." என்றாள்.
கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அபிராமியே ஹலோ என அழைத்துப் பார்த்தாள்.
"ஆ.. நான் நேற்று சொன்னதை உன் வீட்டில் சொல்லிவிட்டாயா?"
"இ.. இன்னும் சொல்லல."
"ம்ச்.. தாமதிக்காமல் கட்டாயம் இன்று சொல்லி விடு. இதுதான் என் நம்பர். நீ வீட்டில் சொன்னதும் எனக்குத் தெரியப்படுத்து."
என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காது போனை கட் பண்ணி விட்டான்.

அபிராமியும் இதற்கு மேல் தாமதிக்காமல் இன்று எப்படியாவது வீட்டில் சொல்வதுதான் சரி என்று முடிவு எடுத்தாள்.
 

Nagajothi

Member
அருமை ???, அபிக்கு இனியனை பார்த்ததும் பிடித்துவிட்டது ஆனால் இனியனுக்கு அபி பிடிக்கவில்லை என்று சொல்ல வில்லை ஆனால் என்னை பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி நிறுத்த சொல்கிறான் என்னவாக இருக்கும் ??????
 
Top