Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 6
அன்று
2020 ஆம் ஆண்டு. மதுதாராவும், ஆதவனும் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. உலகமே கொரானா நோயால் அவதியுற்ற காலமது. அனைவரும் ஊரடுங்கு சட்டத்தால் தத்தமது வீட்டிலேயே இருந்த காலம். அப்போது கல்லூரி வகுப்புகள் கூட அலைபேசி மூலமாகத் தான் நடந்து கொண்டிருந்தது.
மதுவும், ஆதவனும் படிக்கிறேன் என்ற பேரில் வீட்டிலேயே கூத்தடிக்கொண்டிருந்தனர். மைக்கை மியூட் செய்து கேமராவையும் ஆஃப் செய்துவிட்டு, இஷ்டம் போலச் சுத்திக்கொண்டிருந்தனர்.
அஸ்வந்த் படிக்கும் போதே வளாக நேர்காணல் மூலமாகத் தேர்வாகி பிரபல தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலையில் இருக்க, இப்போது வீட்டிலிருந்தே வேலையும் செய்துகொண்டிருந்தான்.
அகிலா ஆதவனின் அக்கா முதுகலை பயின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு அன்பழகன் போலத் தமிழ் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக எம்.ஏ தமிழ் படித்துக்கொண்டிருந்தாள்.
அன்பழகன் அருமையான தமிழ் வாத்தியார். சென்னையில் சென்னை பாஷை சரளமாகப் பேசக்கூடிய இடத்தில் இருந்தாலும் அவர் வீட்டில் சுத்தமான அழகான தமிழ் பேச அனைவரையும் பழக்கியவர் அதில் விதிவிலக்கு சித்தார்த்தின் குடும்பம் அவனைத் தவிற. வைரம் பாட்டியைக் கூட மாற்றிவிட்டார் அந்தளவுக்கு அவருக்குத் தமிழ் மீது பற்று. அதே பற்று அவரின் மருமகளுக்கும் இருக்க அவரின் செல்லபிள்ளையானாள் அகிலா.
சித்தார்த் படிப்பு முடிந்து அவர் தந்தையின் துணிக்கடையில் தான் இருந்தான் கூடவே காவலர் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இந்தக் கொரானா பலருக்கு இன்னல்களைக் கொடுத்தது தான் ஆனால் இந்த இளவட்டங்களுக்கு அது வரமாகத்தான் இருந்தது அந்த ஒரு நிகழ்வு நடக்கும் வரையிலும்.
சித்தார்த்தின் தங்கை சிந்து எப்போதும் இவர்களுடன் சேர்வதே கிடையாது. அவளுக்கு அவள் அம்மா இருக்குமிடம் தான் சொர்க்கம் போலும் அவரை விட்டு அசையவே மாட்டாள். மீதி ஐவரும் ஒரே வீட்டில் தான் இருந்தனர். அந்த ஆறு மாதமும் அவர்களுக்குப் பொன்னான காலம் தான்.
வீட்டிற்குள்ளேயே இருந்து சிலநேரம் படிக்க, சில நேரம் பொழுதுபோக்கிற்காக விளையாட, காணொலிகளைப் பார்த்துச் சமைக்க என அவர்களின் நேரத்தை ஒன்றாகக் கழித்த சமயம் தான் அஸ்வந்தும், அகிலாவும் காதலில் மிதந்த சமயம். இயல்பாகவே வரும் முறைப்பெண், முறைப்பையன் ஈர்ப்பு காதலாக மாறி இருந்த சமயம் அவர்களது காதலை இந்த ஊரடுங்கு உயிர்காதலாக்கி விட்டிருந்தது.
இவர்கள் இப்படி காதலை வளர்க்க, சித்தார்த்துகோ சின்னதிலிருந்து அவன் தாரா மேல் கொள்ளை பிரியம். ஏன் காதலே இருந்தது ஆனால் அதை உணரத்தான் இல்லை அவன். அதை உணரும் நேரமும் வந்தது.
குதூகலமாகச் சென்று கொண்டிருந்த ஊரடங்கில் ஆட்டம் கண்ட படகுபோல மதுவுக்கு காய்ச்சல். அவளது அறிகுறி அத்தனையும் கொரானா நோயின் அறிகுறியை ஒற்றது போலவே இருக்க, அவள் தனி அறையில் ஒதுங்கினாள். அவள் அறைக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
அவளுக்குச் சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோயும் இருக்க இப்போ கொரானாவென அனைவரும் பதறினர். அப்போது தான் அவனுக்குப் புரிந்தது அவளுக்கு ஒன்றொன்றால் தன்னால் தாங்க இயலாது என.
ஈகை “என்னங்க இது? காய்ச்சல்னு இவ ரூம்ல போய் லாக் பண்ணிக்கிட்டா? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாலும் இப்போ பிரச்சனையில அவங்களும் தனிமைபடுத்தனும் அது இதுனு சொல்வாங்க என்னங்க பண்றது? இவ சின்ன வலிக்கூட தாங்க மாட்டேளே தனியா என்ன பண்றாளோ தெரியலயே” என அன்பிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
சித்து “அத்தை! அவளுக்கு ஏற்கனவே சுகர் வேற இருக்கு அதுக்கே இன்சுலின் எடுக்குறா.. இது வேற சேர்ந்தா என்ன பண்றது? பேசாம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது தான் சரி”
அன்பழகன் “அங்க போனா நம்மள எல்லாம் உள்ளயே விடமாட்டாங்களே சித்து. யாரும் இல்லாம புள்ள என்ன பண்ணுவா? நம்மளும் தான் எப்படி இருக்க முடியும் இவ என்ன நிலைமையில இருக்கான தெரியாம?”
சித்து “இருங்க மாமா என் ஃப்ரண்டோட அம்மா நர்ஸ்ஸா வேலை பார்க்குறாங்க அவங்க கிட்ட கேட்டுப் பார்ப்போம்”
அன்பு “கேளுப்பா.. யாராவது ஒருத்தர் கூட வரலாமானு கேளு”
சித்து “மாமா கூட எல்லாம் கண்டிப்பா விடமாட்டாங்க. முதல்ல ஹாஸ்பிடல்ல இடமிருக்கானு கேட்கனும்”
“கடவுளே! ஏன் என் பொண்ணை சோதிக்கிற” எனப் பூஜை அறைக்குள் நுழைந்தார் ஈகை. சித்து அவன் தோழனுக்கு அழைத்து அவன் அம்மாவின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களுக்கு அழைக்க,
“சித்தார்த்.. கொஞ்சம் பொறுப்பா இன்னைக்கு டியூட்டி முடியும்போது நானே வந்து செக்கப் பண்றேன். அப்புறம் என்னனு முடிவு பண்ணுவோம்” எனக்கூறியிருக்க, மதுவோ யாரையும் அவள் அறைக்குள் அனுமதிக்கவில்லை. அவளால் மற்றவர்களும் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை அவள்.
சித்து “மது! நாங்க யாரும் வரல வெளியே கொஞ்சம் கஞ்சியும், மாத்திரையும் வச்சிருக்கோம். நீ எடுத்துக் குடிச்சுட்டு மாத்திரை போடு. சாப்பிடாம உன்னால இருக்க முடியாது ஊசி வேற போடனும்ல”
மது “சித்தத்து நீங்க யாரும் இங்க வராதீங்க. எல்லாரும் கீழ போங்க நான் எடுத்துக்கிறேன். உங்க நல்லதுக்கு தான் சித்தத்து சொல்றேன்”
என்னதான் வெளியே அவன் தைரியமாகக் காட்டிக்கொண்டாலும் அவள் உடல்நிலையை நினைத்துப் பயம் அதிகரித்து கொண்டே இருந்தது. அவள் தான் சின்ன வயதிலிருந்தே ஒரு காய்சல் தலைவலி தாங்கமாட்டாளே! இப்போது தனியே எப்படி இருக்காளோ எனப் பயந்தவன் அவளை ஏமாற்றி அவளறைக்குள் நுழைய முடிவெடுத்து விட்டான்.
அதனால் அவள் கீழே போகும்படி கூறியபோது அவளிடம் சரி எனக்கூறிவிட்டு ஒதுங்கி நின்றான். சரியாக இரண்டு நிமிடம் கழித்து அவள் கதவைத் திறக்க, கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“சித்தத்து..” எனக் கோபத்துடன் கத்தி அவளை வெளியே தள்ள முயன்றாள். ஆம் முயன்றாள் ஆனால் பாவம் பலவீனமான அந்தப் பெண்மானால் அந்தப் பலம்பொருந்திய சிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
அதில் கோபத்துடன் அவன் நெஞ்சில் தன் கைக்கொண்டு அடிக்க, அவளை நெஞ்சோடு அணைத்தான் ஆறுதலுக்காக.
“ஏன் சித்தத்து” என்றவளின் கேவலுடன் அவள் உடல்சூட்டையும் உணர்ந்தவன் அவளை மெதுவாக விடுவித்தவன். அவள் கழுத்து, கண்ணம் எனத் தொட்டு உடல்சூட்டை ஆராய்ந்தான்.
“என்ன தாரா இப்படி சுடுது? லேசா தான் காய்ச்சல்னு சொன்ன?”
“அது.. அது”
“பொய் சொன்னியா தாரா?” எனக் கோபத்துடன் கேட்கத் தலைகவிழ்ந்தாள்.
“பதில் சொல்லு” என மீண்டும் அவன் கர்ஜிக்க,
“ஹாஸ்பிடல் போகப் பயமா இருக்கு சித்தத்து. நான் எங்கயும் போகமாட்டேன் வீட்டுல தான் இருப்பேன். செத்தா கூட இந்த ரூம்குள்ளயே செத்து போறேன்” எனக்கூறி அழ, ஆணவன் நெஞ்சில் பூகம்பம் தான் நிகழ்ந்தது.
அவள் இல்லாத வாழ்வு தனக்கு எப்படி இருக்குமென மனக்கண்ணில் தெரிய, அந்த நொடி அவள்மேல் உள்ள காதலை உணர்ந்தான் அவன். நிச்சியமாக அவள் இல்லாத வாழ்வு அவனுக்குச் சாத்தியமே இல்லையெனத் தான் அவனுக்குத் தோன்றியதுது.
“இப்படியே பேசிட்டு இருந்த நானே உன்னைக் கொன்றுவேன். இவ்ளோ காய்ச்சல் இருக்கு, யாரையும் உள்ள விடாம நாடகமா நடத்துற.. மரியாதையா கிளம்பு என்னோட..” என்றவன் உடனடியாக ஆம்புலன்ஸ்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் மற்ற யாரையும் தங்களை நெறுங்க விடவில்லை. தனியாகச் சென்றனர் மருத்துவமனைக்கு. அன்புவும் மதுவுடன் சித்தார்த் செல்வதால் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மகள் நலத்துக்கான வேண்டுதலுடன் வீட்டிலேயே இருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவியாகக் காய்ச்சலுக்கான சிகிச்சை செய்து முடித்துப் பின் கொரானா சோதனை செய்ய வந்தனர். மருத்துவமனையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் கவச உடை அணிந்து இருந்தனர். அந்த உடையில அவர்களைப் பார்க்கவுமே மதுவுக்கு பயம் வந்தமர்ந்து கொண்டது.
செவிழியர் “இங்க உட்காரு பாப்பா, நிமிர்ந்து மேல பாரு” என மூக்கிற்குள் சொறுகும் பட்ஸ் போல் ஒன்னை கொண்டுவரவும் பயந்தவள், சித்தார்த்தின் கைகளை இருக்கி பிடித்தாள்.
செவிழியர் “இந்தா பாப்பா.. யாரையும் தொடாத.. அந்தப் பையன் கைய விடு” என மிரட்ட, பயத்தில் பட்டென விட்டுவிட்டாள். அவர்கள் அவர் வேலையைச் செய்து முடிக்க,
“அக்கா!” என்றாள் மது.
“என்ன பாப்பா?”
“இவருக்கும் டெஸ்ட் எடுங்க”
“ஏன்? அந்தப் பையன் நல்லா தான இருக்கான்?”
“இல்ல அது.. அதுவந்து சித்தத்து என்னை இறுக்கி கட்டி பிடிச்சது. அதான்” என இழுக்க, அந்தச் செவிழியரோ சித்தார்த்தை பார்த்துச் சிரிக்க, அவனுக்கோ வெட்கத்தில் எங்காவது ஓடிவிடலாம் போல இருந்தது. வெட்கத்தால் சிவந்தே விட்டது அவன் முகம்.
‘அய்யோ இவள வச்சிக்கிட்டு’ என மனதில் அவளைத் திட்டுவது போலக் கொஞ்சிக்கொண்டான். செவிழியரும் விடாமல் அவனுக்கும் டெஸ்டை எடுத்தனர்.
செவிழியர் “வீட்டுலயே குவாரண்டைன் பண்ணிக்கோங்க. தனி ரூம்ல இருங்க. நாளைக்கு டெஸ்ட் ரிப்போர்ட் வந்துரும். நாங்க உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றோம்” எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
வீட்டுக்கு வந்தவர்கள் இப்போதும் யாரையும் அவர்களை நெருங்க அனுமதிக்கவில்லை. இருவரையும் தனித்தனியா ஒரு அறையில் இருக்கும்படி செவிழியர் கூறியதை இருவரும் தவறாகப் புரிந்து கொண்டார்களா இல்லை அவன் வேண்டுமென்றே செய்தானோ இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தனிமைப்படுத்திக் கொண்டனர். ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்த பிள்ளைகள் என்பதால் பெரியவர்களும் எதுவும் சொல்லவில்லை. அதுமட்டும் காரணமில்லை மது தனியாக இருப்பதை விட அவளுடன் துணையாகச் சித்தார்த் இருப்பதே நல்லது என நினைத்துவிட்டிருந்தனர்.
இரவில் அவளுக்குச் சாப்பாடு கொடுத்து மருந்து எல்லாம் கொடுத்து அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டான். அவனைப் பார்க்கப் பார்க்க அவள் மனதிலும் சலனம் வரத்தான் செய்தது. மதியம் அவளைக் கட்டிப்பிடித்தது அவள் மனதிலும் அன்று விதையாகத் தான் விழுந்துவிட்டதோ!
அவனைப் பார்க்கும்போது அவளுக்கும், அவளைப் பார்க்கும்போது அவனுக்கும் உள்ளூற ஒருவித குறுகுறுப்பு வந்தது. இத்தனை காலமும் இல்லாத குறுகுறுப்பு. மற்றொருவர் பார்க்காதபோது பார்ப்பதும், அவர் பார்த்துவிட்டால் பார்வையை மாற்றுவதுமாக இருவரும் கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டனர்.
ஏழு ஸ்வரம் எட்டாய் ஆஹாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தைப் பாட..
தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னைப் பார்க்கையில் நாணத்தை மூட..
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை.. இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை.. இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது.. நீ தந்தது..
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே..
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே!
இரவு நேரம் ஆக ஆக அவளுக்குக் காய்ச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது. மூச்சு விடுவதற்கு கூடச் சிரமமாக ஆரம்பித்தது. அவள் கட்டிலில் உறங்க அவன் கீழே படுத்திருந்தான். எட்டி அவனை எழுப்பினாள்.
“சித்தத்து என்னமோ பண்ணுது”
“என்ன தாரா? என்னாச்சு?”
“ஒரு மாதிரி மூச்சு விடச் சிரமமா இருக்கு சித்தத்து”
“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல பதறாத.. கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இரு. இரு பால்கெனி கதவைக் கொஞ்சம் திறந்து வைக்கிறேன். வெளிக்காற்று வாந்தா நார்மலா ஆகும்” எனத் திறக்கப் போக இவளோ எழுந்து நிற்க, தலையைச் சுற்றி வாந்தி எடுத்திருந்தாள்.
பின் அவளைக் கவனித்து, அந்த இடத்தையும் சுத்தம் செய்து, அவளுக்குக் காய்ச்சல் குறைய மாத்திரை கொடுத்து, அவள் அருகிலேயே அமர்ந்து அவளை ஆறுதல் படுத்த படுத்த பெண்ணவள் மனதிற்குள் அவன் உருவம் பல பல அடி பெரிதாகப் போய்க்கொண்டே இருந்தது.
மனதில் முளைத்த காதலை இருவரும் வார்த்தையால் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ! அவள் படிப்பு கெடக் கூடாது என அவனும், அவன் தன்னை பாசமாகப் பார்க்க நான் அவனைக் காதலிக்கிறேன் எனக்கூறினால் அவன் பார்வையில் தான் கீழறங்கிவிடுவோம் என்ற பயத்தில் அவளும் எதுவுமே வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
Last edited: