Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 8
இன்று
மதுவும், ஆதவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கே வந்தாள் அகிலா, அவள் மகன் தருணுடன்.
“மாமா.. மாமா..” என ஆதவனைப் பார்த்த தருண் குதிக்க,
மது “கொஞ்சம் நேரம் என்கிட்ட வரனும்னா போனை லஞ்சமா கொடுத்தா தான் வருவ.. உன் மாமாவ பார்த்ததும் சும்மா துள்ளுற. உன்னை அடி வெளுக்கப் போறேன் பாருடா..” என அண்ணன் மகனைத் திட்ட, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் மாமனிடம் தாவுவதிலேயே குறியாய் இருந்தான். அக்கா மகனை இன்னொரு கையால் வாங்கிக் கொண்டே சாப்பிட்டான் ஆதவன்.
“தருண் ஆ காட்டு” எனக் கூற, அவனும் புறாக்குஞ்சு வாயைப் பிளப்பது போலப் பிளந்தான்.
“பார்த்தீங்களா அண்ணீ இந்த வாண்ட, நம்ம இரண்டு பேரையும் அரை இட்லிய ஊட்டக்குள்ள டயர்ட் ஆக்கிடுவான். இப்போ எப்படி வாய திறக்குறான் பாருங்க”
“அங்க நல்லா பாருடீ நீ. அவன் என்னத்தை ஊட்டுறானு.. சாக்லேட்ட அவன்இல்ல யார் கொடுத்தாலும் இப்படி தான் தின்பான். அப்படியே உன்னை மாதிரி” என மதுவுக்கும் சேர்த்து ஒரு குட்டு.
ஆமாம்! என்ன தான் சுகர் இருந்தாலும் மதுவுக்கு இனிப்பு என்றால் உயிர். ஆனால் வீட்டில் யாரும் கொடுப்பதில்லை. ஆனாலும் எப்படியாவது தினமும் ஒன்றை சித்தார்த்திடம் காரியம் சாதித்து வாங்கிக் கொள்வாள்.
சின்னதிலிருந்து அவன் பழக்கிய பழக்கம் இது. பள்ளி முடித்து வரும்போது அவளுக்குத் தினமும் ஒரு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதை அவன் வழமையாக வைத்திருந்தான் அவள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாளென அறியும் வரை.
அதன் பிறகு பெரியவர்கள் அவளுக்கு முற்றும் முழுதாக மிட்டாய்களை எல்லாம் தடுக்க, அவளால் இருக்க முடியவில்லை. சித்தார்த்திடம் அழுது அடம்பிடித்து தினமும் ஒரு மிட்டாய் வாங்கிவிடுவாள் ஆனால் இப்போ அளவை குறைத்துவிட்டான். முன்னர் எல்லாம் இருபது ரூபாய் மிட்டாயாக இருந்தது அதன்பிறகு ஐந்து ரூபாய் மிட்டாயாக மாறியிருந்தது. அளவு தான் குறைந்ததே தவிற அவர்கள் பழக்கம் மாறவேயில்லை.
இன்று அதையே அகிலா சொல்லிக்காட்ட, ஆதவனைப் பார்த்ததிலிருந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை திரும்பவும் எட்டிப் பார்ப்பது போல இருந்தது.
“அக்கா! உனக்கு அறிவே இல்ல. எதை எப்போ பேசனும்னே தெரியாது”
“நான் என்னடா சொன்னேன். அவன் அவனோட அத்தை மாதிரினு சொன்னேன். இது ஒரு குத்தமா?”
“அவ மூஞ்சை பாரு”
“நான் சொன்னதால ஒன்னும் அம்மணி அப்படி இல்ல. காலையில இருந்து அவ மூஞ்சி இப்படி தான் இருக்கு”
“அது சரி. காலையில நீ அனுப்பின போட்டோவ பார்த்தபோது அப்படி இல்லையே! என் கண்ணுக்கு நல்லா குளிர்ச்சியா இருந்ததே! ஆனா அதே போட்டோவ சிலர் பார்த்தா அப்படியே பத்திக்கிட்டு வந்திருக்கும்”
“யாரு யார சொல்ற நீ?” எனப் பதட்டமாக அகிலா ஆதவனிடம் கேட்க,
“அது.. அது அந்தச் சிந்துவோட அம்மாவ சொன்னேன்”
“அவுங்க எப்படி பார்ப்பாங்க? நீ யாருக்கும் அந்தப் போட்டோவ அனுப்பல தான? சிந்துக்கோ, சித்தார்த்துக்கோ அனுப்பினியா?” என்றார் அகிலா பதட்டத்துடன். அதே பதட்டத்துடன் ஆதவனையே பார்த்துக் கொண்டிருந்த மது,
“ஆது.. நீ சித்தத்துக்கு அனுப்புனியா?” என்றாள் பாவமாக.
“ம்ச்ச்ச் நான் ஏன் அனுப்ப போறேன்? சும்மா அவங்க பார்த்தா அப்படி இருக்கும்னு சொன்னேன். அவ்ளோ தான்” என்றான் ஆனால் மனதில் ‘அனுப்பியாச்சு.. அதைப் பார்க்க வேண்டியவங்க பார்த்தாச்சு.. அடுத்து நடக்க போறத மட்டும் வேடிக்கை பாரு மது.. உன்னை இப்படி அழவிட்டவங்களை எப்படி அழ விடுறேனு மட்டும் பாரு.. அவங்க நினைச்சது ஒரு நாளும் நடக்காது.. அத நடக்க விடமாட்டான் உன் ஆது. உன் முகத்துல கண்ணீரயே பார்க்காத எங்கள இப்போ கண்ணீரை மட்டுமே பார்க்க வச்ச அத்தனை பேரையும் வச்சு செய்யல நான் உன் ஆது இல்ல மது’ என்றவன் மனம் முழுதும் ஒருவித இதம் பரவ, தான் செய்ய நினைக்கும் காரியம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் புன்னகை முகமாகவே நின்றான்.
மது “இங்க பாரு ஆது தயவு செஞ்சி யாருக்கும் எந்தப் போட்டோவும் அனுப்பிறாத. யாரும் எதையும் பார்க்க வேண்டாம். யாரும் கஷடப்பட வேண்டாம். யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம். யாரும் என் முகத்த பார்க்க வேணாம் நானும் யாரையும் இனி பார்க்கமாட்டேன். இனி இதைப் பத்தி பேசாத ஆது” என்றவள் சாப்பாட்டை பாதியிலேயே விட்டுவிட்டு மாடிக்குத் தனதறைக்கு ஓடினாள்.
வானவில் தானே நம் சொந்தங்கள்.. வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்?
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்.. யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்?
வலை தேடி நீயே.. அதில் வீணாக விழாதே நீ விழாதே..
யாரோ யார் யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சினில் தான் யாரோ?
காதல் தேன் தானோ? காதல் நீ தானோ? விடை சொல்பவர் தான் யாரோ?
மறுநாள் காலையில் காலைச் சாப்பாட்டு வேலை எல்லாம் முடிய அகிலா மதுவை தேடி வந்தாள். அனைவரும் ஆளுக்கொரு வேலையாகக் கல்யாண வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
“மது! மது!” என அவள் அறைக்கதவைத் தட்டிவிட்டு, அறைக்குள் நுழையக் கலங்கி, வீங்கிய விழிகளுடன் கட்டிலில் படுத்திருந்தாள் மது.
“என்னண்ணீ?” என எழுந்து அமர்ந்தாள்.
“என்னா இன்னைக்கு டியூட்டிய இப்பவே ஆரம்பிச்சுட்ட போல?”
“என்ன டியூட்டி? புரியலேண்ணீ”
“அழுகுற டியூட்டி தான்” எனக்கூறிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து, தான் கையோடு கொண்டு வந்த ஜாக்கெட்டுகளை எடுத்தாள்.
“இந்தா மது.. டெய்லர் அண்ணா கொடுத்துட்டுட்டாங்க. நீ ஃபிட்டிங் சரியா இருக்கானு பாரு. இல்லனா ஆல்ட்டர் பண்ண குடுக்கனும்” என்றாள்.
அதை வாங்கி பிரித்துப் பார்த்தவள், “என்னண்ணீ இவ்ளோ வெயிட்டா கிராண்டா இருக்கு?”
“அப்புறம் கல்யாணத்து எப்படி போடுவாங்க? ஆரி வொர்க் பண்ணா வெயிட்டா தான் இருக்கும். பாரேன் டிசைன் எவ்ளோ அழகா வந்துருக்குனு.. பார்த்துப் பார்த்து டிசைன் செலக்ட் பண்ணி கொடுத்தேன். நீ தான் எதுக்கும் அசையலயே நானே தான அழைஞ்சேன். கல்யாண புடவை எடுக்ககூட வரலயே மஹாராணி”
“அதான் நீங்க நல்லா செலக்ட் பண்ணுவீங்களே அண்ணீ. அப்புறம் நான் எதுக்கு? அத விடுங்க இத எப்படி போட்டுக்க முடியும்? இவ்ளோ வெயிட்டா?”
“நீ என்ன தினமுமா போடப் போற? கல்யாணத்தன்னைக்கு அத விட்டா எதாவது நல்ல நாளுக்குத் தான. இப்படி போட்டா தான் அழகா இருக்கும்”
“என்னமோ போங்க. செக் பண்ணிட்டு வாரேன்”
“ம்ம். போட்டுட்டு கூப்பிடு நான் வந்து செக் பண்றேன்”
“எனக்குக் கண் இருக்கு அண்ணீ நானே செக் பண்ணிக்கிறேன்”
“என் வாயில நல்லா வருது.. இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம் தெரியும்ல.. இதுக்கே கூச்சப்பட்டா அப்புறம் என் தம்பி..” என அவள் பேசிக்கொண்டு இருக்கும்போது துணிமாத்தும் அறையைத் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி,
“அண்ணீ வேணாம் எதுவும் பேசாதீங்க. ப்ளீஸ்”
“போய்த் தொல. சீக்கிரம் செக் பண்ணிட்டு சொல்லு. இந்தப் பியூட்டீஷன இன்னைக்கு வரச் சொன்னேன் இன்னும் ஆள காணோம். நான் அந்தப் பொண்ணுக்கு போன் போடுறேன்” எனப் போனுடன் பால்கெனிக்கு சென்றாள் அகிலா.
சட்டையைப் போட்டுப் பார்க்க, அது கச்சிதமாகப் பொருந்தியிருந்தது அவளுக்கு. ஆனால் அதன் எடை தான் இப்போது அவளது பயமே. அதைப் போட்டு இருந்தால் எதையோ தூக்கி சுமப்பது போல இருந்தது.
“அண்ணீ. பெர்பக்ட் பிட்டிங்”
“அப்போ சரி. அந்த வேலை முடிஞ்சது. குடு, கையோட அதை எங்க வீட்டுல போய்ப் புடவை கூடச் சேர்த்து வச்சிட்டு வரேன்” எனக் கிளம்ப அழகுகலை நிபுணர் வந்து விட்டாள்.
“வாங்க வாங்க. இப்போ தான் போன் போட்டேன். பிஸியா இருந்துச்சு நீங்களே வந்துட்டீங்க”
“அம்மாக்கிட்ட பேசிட்டே வந்தேன் மேடம்”
“ஓஹ் சரி சரி. இவங்க தான் கல்யாண பொண்ணு”
“சரிங்க மேடம். என்னனென்ன பண்ணனும்?”
“கோல்டன் ஃபேஷியல், திரெட்டிங், பெடிக்கூர், மெனிக்கூர், மெஹந்தி எல்லாம் பண்ணிடுங்க”
“அண்ணீ திரெட்டிங், மெஹந்தி மட்டும் போதும்”
“நீ சும்மா இருடீ. நீங்க நான் சொன்ன எல்லாம் பண்ணிடுங்க”
“சரிங்க மேடம்”
“ம்ம். பாருங்க நான் தருண தூங்க வச்சிட்டு வரேன் எனக்கும் பண்ணனும்”
“சரிங்க மேடம்” எனக்கூறி மதுவுக்கான வேலைகளை ஆரம்பித்தார்.
ஒவ்வொன்றாக முடிக்க, அகிலாவும் வந்துவிட்டார் அவருக்கும் செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடிக்க மாலை ஆகிவிட்டது. இடையில் மதிய உணவும் அறையிலேயே கொண்டு வந்து கொடுத்திருந்தார் ஈகைச்செல்வி.
“எல்லாம் முடிஞ்சது மேடம். புடவை கலருக்கு மேட்சிங்கா பூ அலங்காரம் நானே பண்ணி கொண்டு வந்துருவேன் மேடம்”
“நாளைக்கு ஈவினிங் கரெக்ட்டா டைமிங்க்கு வந்துருங்க. என்கேஜ்மெண்ட் ஈவினிங் ஆறு டூ ஏழு”
“அதெல்லாம் பக்காவா நான் வந்துருவேன். எனக்கு நீங்கத் தான் மேடம் டைமிங் ஒதுக்கித் தரணும். சில வீட்டுல பொண்ணு அவங்க லேட்டாக்கிட்டு கடைசி நேரத்துல எங்கள ப்ரஸர் பண்ணுவாங்க. நீங்க எங்களுக்கு நேரம் மட்டும் கரெட்டா கொடுத்தா போதும் இந்த அழகிய இன்னும் அழகாக்கி தேவதைபோல ஆக்கிடலாம்” எனக்கூற மதுவுக்கு தான் ஆயசமாக இருந்தது.
நாளை மாலை நிச்சியதார்த்தம் மறுநாள் காலையில் திருமணம். வீட்டில் அனைவரும் ஆளுக்கொரு வேலையாகப் பம்பரமாகச் சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரின் வீட்டிலுமே இது கடைசி திருமணம் என்பதால் கொஞ்சம் விமர்சையாகவே திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ஆனால் இவர்கள் இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்து, இவ்வளவு திட்டமிட்டு நடத்த இருக்கும் திருமணம் நல்லபடியாக நடக்குமா? மதுதாரா கழுத்தில் தாலி கட்டுவானா ஆதவன்? சித்தார்த் அவனின் தாராவை ஆதவனுக்கு தாரைவார்த்துக் கொடுப்பானா? இல்லை ஆதவனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவானா?
கோயம்புத்தூர் விமான நிலையம்.
ஒரே ஒரு முதுகுபுறம் அணியும் பையைப் பின்னால் போட்டுக்கொண்டு நடந்து வந்தான் சித்தார்த். ஆறடி உயரத்திலிருந்தவன் அணிந்திருந்த அந்த ஜீன்ஸ் அவனின் நீளக் கால்களை இன்னும் நீளமாகக் காட்டியது. அவன் அணிந்திருந்த அந்த டீ-சர்ட் அவன் புஜங்களை எடுப்பாகக் காட்டியது.
மாநிறத்தில் முறுக்கேறிய புஜத்துடன், கட்டுக்கோப்பான உடலில் பார்த்ததும் அவன் காவல்காரனாக இருப்பானெனக் கூறுமளவுக்கு இருந்தது அவனது உடல்வாகு. ‘போலீஸ் கட்’ வகையில் தலை முடியை வெட்டியிருந்தது கூடுதல் அம்சமாக அவனுக்குப் பொருத்தமாக இருந்தது.
எஸ்.ஐ தேர்வு எழுதித் தேர்வாகிகி கோயம்புத்தூரில் இருக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கவே இங்க வந்துள்ளான். இன்னும் பயிற்சி காலம் முடியவே இல்லை, ஆனால் அதற்குள் அவனுக்கு முடிக்க வேண்டிய வேறொரு முக்கியமான வேலை இருக்க, வேக எட்டுக்களுடன் அங்கிருந்தவர்களை குள்ளமாக்கியபடி விமான நிலையத்திற்குள் நுழைந்தான். இன்னுமும் அவன் அதிகாரபூர்வமாகக் காவல் அதிகாரி ஆகவில்லைதான் அவன் தோற்றத்தைப் பார்த்தே அவனுக்கு மரியாதை கிடைத்தது.
இரவு ஒன்பதே காலுக்கு விமானம். சரியாக ஒன்னேகால் மணி நேரத்தில் சென்னையில் தரையிறங்கிவிடும். பயண நேரம் முழுவதும் நிதானமாக இருக்க வேண்டும். அவசரப்படக் கூடாது. கோபத்தில் வார்த்தைகளைவிடக் கூடாது என மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே வந்தான். ஆனால் மனதில் சிறு துளி அளவு கூட அவன் தாராவை ஆதவனுக்கு விட்டுக்கொடுக்கும் மனம் இல்லை.
இங்கோ தடபுடலாகக் கல்யாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. மணமகளுக்கு விருப்பம் இல்லாவிடினும் தந்தைக்காக, அவர் வார்த்தைக்காகத் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள். இதை எல்லாம் தடுத்து நிறுத்தவே வருகிறான் ஒருவன். நாளை நிச்சியதார்த்தம் மறுநாள் திருமணம் நடைபெறுமா? பொருந்திருந்து பார்ப்போம்.