Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 9
அன்று
சிந்து அஸ்வந்தை மட்டும் தான் திருமணம் முடிப்பேன் எனக்கூறியதைக் கேட்ட அகிலாவுக்கோ மனதிற்குள் திகில் பரவ ஆரம்பித்தது. பின்னர் அவர்கள் காதலுக்கு எந்த வகையிலும் தங்கள் பெற்றோர் தடங்கலாக இருக்க மாட்டார்கள் என்ற இறுமாப்பில் இருந்தவர்களுக்கு தலையில் இப்படியொரு இடியை இறக்கினால் என்னவாகும்.
அதையே நினைத்தபடி குழப்பத்தில் அகிலா இருக்க, அன்று வேலையை முடித்துவிட்டு அப்போது தான் வீடு திரும்பினான் அஸ்வந்த். வாசலிலேயே ஆனந்தியையும், சிந்துவையும் பார்த்தவன் அவர்களை வரவேற்று விட்டு, சிந்துவைப் பார்த்துக் கொண்டே அவன் தகப்பனிடம்,
“அப்பா! இன்னைக்கு மழை அடிச்சு ஊத்துமோ? ஒரு ஆள் நம்ம வீட்டுக்கெல்லாம் வந்திருக்காங்க” எனச் சிந்துவை அத்தை மகள் என்ற உரிமையில் இங்கு நடந்தது தெரியாமல் கேலி பேச,
‘மழையா வரும்டா வரும்.. நீ என் கையில சிக்கும்போது புயல் வரும் பாரு. மரமண்டை மரமண்டை அவ உன்னை ஸ்வாகா பண்ண வந்திருக்கா.. இந்த எருமையும் அவகிட்ட இழிச்சுட்டு நிக்குது’ என அகிலா மனதில் அவனை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொண்டிருந்தான்.
சிந்துவோ அஸ்வந்தின் சகஜமான பேச்சில் வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள். ‘அய்யய்யோ இவ வேற வெட்கப் படுறாளே! கருமம் அது வேற எனக்கு வந்து தொலையாது.. மவனே நீ வாடா உனக்கு இருக்கு’ என மனதிற்குள் பேசிக்கொண்டு நடப்பதை நகத்தைக் கடித்த படி வேடிக்கை பார்த்தாள் அகிலா.
ஆனந்தி “மருமகன் இப்படி நக்கல் பண்றதால தான் என் மக இந்தாண்ட சரியா வரவே மாட்றா” எனப் பேசிச் சிரித்துக்கொண்டே,
“இனிமே வாழ்க்கை முழுக்க இந்தாண்ட தான இருக்க போறா..” என இடைசொருகளாகக் கூற, அஸ்வந்த்க்கு அவர்களின் பேச்சின் அர்த்தம் அப்போது தான் புரிய ஆரம்பித்தது.
“எதுக்கு.. ஏன் சிந்து அண்ணீ வாழ்க்கை முழுக்க இங்க இருக்கனும்?” என்றாள் மது அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தபடி.
“உங்க அண்ணனைக் கட்டிக்கிட்டா என் மக இந்தாண்ட தான இருக்கனும்” என ஆனந்தி சிரிப்புடன் கூற,
“அதுக்கு அண்ணன் சம்மதிக்கனுமே? சம்மதிச்சுட்டாங்களா என்ன?” என்றாள் அகிலாவைப் பார்த்துக்கொண்டே, அவள் அண்ணனோ திக் பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்தான்.
“இன்னாமா மருமகளே! வந்ததும் அச்சாணியமா பேசுற? அதெல்லா எல்லாருக்கும் சம்மதம் தான். மருமகன்கூட என் மககிட்ட தமாசா ஜோக்காதான பேசீட்டுந்துச்சி. நீ என்னாத்தீக்கி பேஜாரா பேசுற. வந்தீயா சாப்பீட்டீயானு இரு சும்மா கிழவியாட்ட பேசிக்கீண்ணுருப்பா. வூட்டுக்குள்ளாண்ட போ”
அன்பு “ஆனந்தி.. பொறும்மா.. ஏன் மதுவ திட்டுற? அவ சரியா தான சொல்றா? பொண்ணு கிட்ட கேட்ட மாதிரிப் பையன் கிட்டயும் கேட்டா தான தெரியும்.. அத தான மதும்மா சொல்றா.. அம்மா மது நீ உள்ள போடா. அப்பா பேசிக்கிறேன்” என அவளை உள்ளே அனுப்பினார்.
உள்ளே சென்றவளோ அகிலாவிடம் “என்ன அண்ணி! என்ன நடக்குது இங்க? அண்ணே ஏன் அப்படி நிக்குது?”
“அவன் அப்படி தான் நிக்கிறான். வாயில என்னத்த வச்சிருக்கானோ! சிலையாட்ட நிக்கிறான் பாரு. ஒருவேளை உங்கண்ணன் என்ன கலட்டிவிட்டுட்டு அவள உசார் பண்ண நினைக்கிறானா? அப்படி மட்டும் எதாவது பண்ணினான் கொன்றுவேன் அவன”
“பொறுமை! பொறுமை! ஏன் பொங்கிறீங்க.. இப்போ தான பேசுறாங்க.. இருங்க பார்க்கலாம்” என இருவரும் என்ன நடக்குதுனு பார்க்க,
அன்பு “அஸ்வந்த்! அத்தை சிந்துவ உனக்குக் கொடுக்கலாம்னு நினைக்கிறாங்க.. நீ என்ன நினைக்கிற?”
அவனோ சிந்துவையே பார்த்துக்கொண்டு நின்னானே தவிற ஒன்றும் பேவில்லை.
அகிலா “எதாவது பேசுறானானு பாரு இந்தத் தீவெட்டி தலையன்.. அவளையே முழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்கான். நான் போய் நங்கு நங்குனு அவன் மண்டையில கொட்டிட்டு வரவா?”
மது “இருங்க அண்ணீ நீங்க வேற.. அதுவே ஷாக்குல நிக்குதுனு நினைக்குறேன்”
அகிலா “அய்யோ அவ வேற வெட்கப்படுறாளே! உங்கண்ணுக்கு வேற வெட்கப்பட்டா பிடிக்குமே! என்கிட்ட ஏண்டி உனக்கு வெட்கமே வராதானு கேட்பான். இவ வெட்கப்பட்டே கவுத்திடுவா போலயே!” எனப் புலம்ப, மதுவோ வாயை மூடிச் சிரித்தாள்.
அன்பு “சொல்லுப்பா உனக்குச் சிந்துவ கட்டிக்க சம்மதமா?”
ஆனந்தி “அண்ணே அதான் மாப்பிள்ளை என் பொண்ண வச்ச கண்ணு எடுக்காம பார்த்துகிண்ணுகீறாறே! அதாலயே தெரியவூணாம். அதெல்லாம் சம்மதம் தான்”
அகிலா “போச்சு போச்சு. கவுத்திட்டா என் வாழ்க்கையே போச்சு” என அஸ்வந்தை பார்த்துக் கொண்டே கோபமாகக் கூற, அப்போது தான் சிந்துவிடமிருந்து கண்களை அகற்றி, சுற்றி தேடி அகிலாவைப் பார்த்தான்.
அவன் பார்த்ததும் கோபத்தில் முகத்தைத் திருப்பிய அகிலாவோ மதுவின் அறையில் நுழைந்து கொள்ள, தன் தங்கையைப் பார்த்து அகிலாவைப் பார்த்துக்கொள்ளும் படி ஜாடை செய்துவிட்டு தகப்பனை நோக்கினான்.
“எனக்குச் சிந்துவ கல்யாணம் பண்ண விருப்பமே இல்ல. எனக்கு வேற பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணம்னு ஒன்னு பண்ணா அந்தப் பொண்ணத்தான் பண்ணுவேன்”
எனக்கூற சிந்துவின் கண்களில் தாரைத் தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அன்புவோ அவனை பார்த்தது பார்த்தபடி நின்றார். இதை அவர் எதிர்பார்கவே இல்லை.
ஆனந்தி “ஏன் என் பொண்ணுக்கு என்னாத்தீல கொறைன்னூ எவளையோ கட்டீக்க போற மாப்பிள்ளை. என்புள்ள உன் மேல பிரியமாக்கீறா.. இப்படி சொல்லலாமா? அத்தை உங்க நல்லதிக்கு தான் சொல்லுவேன் என் மகள கட்டிக்கீன்னா நல்லா இருப்பயா” எனக்கூற இனிமேலும் மறைப்பதில் பிரயோஜனம் இல்லையென நினைத்தவன்,
“எனக்குச் சிந்து மேல அப்படியொரு எண்ணமே வரல. நானும், அகிலாவும் விரும்புறோம். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம்” என வெளிப்படையாகவே கூறிவிட அன்பு மனதில் சந்தோஷ சாரல் தான்.
“அதான்ண பாத்தேன் இன்னாடா மருமகன் பையன் இப்படி பேசுறாறேனு.. அந்தச் சொக்குபுடி கும்பலு உண்ணாண்டையும் வேலைய காட்டீங்கினாளுகளா? அதுங்கள நம்பாத மருமகனே, இந்த அத்தைக்கின்ன இருந்து உன்னைப் பிரிக்கத்தே அவளுக்கு நாடகம் நடத்துறாளுங்க”
“அத்தை உங்களுக்கு அவ்ளோ தான் மரியாதை. யாரையும் மரியாதை குறையா பேசாதீங்க. நான் தான் அகிலாவ விரும்பினேன். நான் தான் அவ பின்னாடியே சுத்தினேன். எதுவும் தெரியாம பேசாதீங்க”
சிந்து “அத்தான் நீங்க இல்லாக்கீன்னா நான் செத்து போவேன்”
“ஏய் லூசு மாதிரி பேசாத” என ஒரே நேரத்தில் அன்பும், அஸ்வந்தும் கூற,
“நான் லூசு தான். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது. உங்கள கட்டிக்க நான் இன்னா வேணா செய்வேன்”
“உன்னால ஆனத செஞ்சுக்கோ. முதல்ல இங்கிருந்து கிளம்பு” எனக்கூறினான் அஸ்வந்த்.
“இன்னாண்ணே உன் மகன் எங்கள வூட்ட விட்டுப் போங்கீறான். நீயும் கம்முனுக்கீற?”
“அவனுக்குக் கல்யாணத்துல விருப்பமில்லனு சொல்லிட்டானேம்மா. அதுல என்னால அவன கட்டாயப்படுத்த முடியாது. அஸ்வந்த் நீயும் இப்படி வீட்ட விட்டுப் போனு சொல்லக் கூடாது” என இரண்டு பேருக்கும் பொதுவாவே பேசினார் அன்பு.
“இன்னாண்ணே நீயும் அவனுக்குச் சாதகமாத்தே பேசுற?”
“விரும்பினங்கள எப்படிம்மா பிரிக்கிறது. நீ தான் சிந்து புரிய வைக்கனும்”
“அவளும் தான விரும்பீக்கினா.. அவளுக்கு மட்டும் வலிக்காதா?”
“சரிம்மா இப்போவே எல்லாம் பேசனுமா? கொஞ்சம் பொறுமையா யோசிம்மா. அப்புறம் மச்சான் கிட்ட பேசிக்கிறேன்”
“அத்தாளாண்ட இன்னா பேசபோற நீயி?” என்றவள் “எம்மா நீ இன்னம்மா ஒன்னுமே பேசாமக்கீற? உன் பேத்தி வாழ வேண்டிய இடத்துல இவங்க வேற ஒருத்திய வைக்கப் பாக்குறாங்க.. எல்லாத்தையும் கேட்டுட்டு வாய திறக்காமக்கீற?” என வைரம் பாட்டிய பார்த்துக்கேட்க, அவரோ,
“நான் எப்படி இருக்கேன் அதே போல நீயும் இரு. இவ என் பேத்தினா அவளும் என் பேத்திதேன். என் பேரன் யார ஆசைபடுறானோ அவதான் எங்க வீட்டு மருமக”
“நீ என்னைக்குதான் எனக்கோசரம் ஏத்தூக்கீண்ணு பேசிருக்க.. நல்லா இருக்க மாட்டீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க. என் மக கண்ணீரு உங்கள சும்மாவே விடாது” எனக் கத்திவிட்டு சென்றார்.
மனது முழுவதும் அத்தனை பேர் மேலும் வெறுப்புடன் அவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர். அஸ்வந்த், அகிலாவைக் காட்டிலும் மது மேல் அத்தனை கோபம்.
“சீக்குபிடிச்சவ வூட்டுக்குள்ளாண்ட வரும் போதே அச்சாணியமா பேசீக்கீன்னே வந்தா.. அது விளங்காமயே போச்சு” என மதுவின் மேல் தான் வன்மம் அதிகமாக வளர்த்தனர்.
இது எதுவுமே அறியாத சித்தார்த் அவன் அப்பாவின் துணிக்கடையில் தான் இருந்தான். கல்லூரி முடித்ததிலிருந்து இளங்கோவின் கடையில் தான் இருக்கிறான். கூடவே எஸ்.ஐ தேர்வுக்குத் தாயாரிக் கொண்டிருந்தான்.
கடைமுடித்து வழக்கம்போல அவன் மாமா வீட்டுக்குச் சென்றான். இன்னமும் அஸ்வந்துடன் தான் அவன் இரவு தூக்கம். பிறந்ததிலிருந்து அவன் வீட்டில் அவன் தூங்கியதே கிடையாது. என்ன தான் தங்கை தங்களை சபிப்பது போலப் பேசினாலும் தங்கை மகனிடம் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார் அன்பழகன்.
ஈகைச் செல்வியும் இரவு உணவை அனைவருக்கும் எடுத்து வைத்தார் சித்தார்த் உட்பட. அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஆனந்தியிடமிருந்து அழைப்பு வந்தது அவனது கைப்பேசியில்.
ஆனந்தி “சித்தார்த்து.. இனி அந்தாண்ட நீ இருக்கவே கூடாது. நம்மூட்டுக்கு வா”
“ஏம்மா? ஏன்? என்னாச்சு? ஏன் இப்படி பேசுற?”
“எல்லாம் சொல்றேன் நம்மூட்டு வா”
“இரும்மா வரேன்” என்றவன் மாமனிடம் “என்ன மாமா? எதுவும் பிரச்சனையா? அம்மா என்னை அங்க கூப்பிடுறாங்க” எனக் கூறவும் மது முகத்தில் கலவரம்.
இத்தனை நேரமும் சிந்துவிடமிருந்து தப்பி அண்ணன் தன் அண்ணியுடன் இணைய போகிறானென மகிழ்ந்தவளுக்கு, இனி சித்தார்த்துடனான தன் உறவில் சிக்கல் வரும் எனத் தோன்றவேயில்லை.
இப்போது ஆனந்தி சித்தார்த்தை அவர்களது வீட்டுக்கு அழைக்க முகம் கலவரமானது. அனைவரின் முகமும் ஒவ்வொரு பாவனைகளை வெளிப்படுத்த,
“என்னாச்சு மாமா?” எனக்கேட்டான். அவர் முற்றும் முழுதுமாக அனைத்தையும் கூற, விஷயம் புரிந்தது. தன் காதலுக்கு இனி ஏற்படபோகும் நிலையும் அவனுக்குப் புரிந்தது. கூடவே மது மேலையும் கோபமும் வந்தது. பெரியவங்க பேச முன்ன முந்திரி கொட்டை மாதிரி பேசி வச்சிருக்காளேயென.
“ஓஹ். சரிங்க மாமா. நான் வீட்டுக்குப் போய்ட்டு என்னனு கேட்டுட்டு வரேன்”
“சித்தத்து வந்துருவல” என்றாள் பதட்டமாக. அவளது பதட்டம் அவனுக்கு இதமாகத் தான் இருந்தது.
“வராம.. எனக்கு இங்க படுத்தா தான் தூக்கமே வரும். போய் என்னனு கேட்டுட்டு வரேன். சிந்துவ இரண்டு மிரட்டு மிரட்டினா தான் ஒழுங்கா இருப்பா. எல்லாம் அவ செய்யுறது தான்”
“சரி சித்து. பார்த்துக் கோபப்படாம பேசிப் புரிய வை. நாளைக்கு நான் மச்சான் கிட்ட பேசிக்கிறேன்” என அன்பு கூற,
“சரிங்க மாமா. நான் போய்ட்டு வரேன்”
“சித்து.. முதல்ல சாப்பிட்டு அப்புறம் போ” என ஈகை அவன் வயிற்றை நிறைப்பதில் குறியாக இருந்தார். அது தான் ஈகையின் குணம். அத்தனை பிள்ளைகளையும் தன் பிள்ளையாகப் பார்க்கும் அருமையான குணம்.
“சரித்த” என அவனும் சாப்பிட்டு கிளம்பினான். சித்தார்த் அவன் வீட்டுக்குச் செல்ல அங்க அப்போது தான் ஓய்ந்திருந்தது சண்டை. ஆம்! சித்தார்த் வருவதற்கு முன்பே இளங்கோவிடம் ஒரு பாடு ஆடித் தீர்த்திருந்தார்.
“அம்மா” என அழைத்துக்கொண்டே செல்ல, ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்து அங்கு நடந்தை ஒன்றுக்கு நாலாகத் திரித்து கூற, அவனுக்குத் தாயின் உள்நோக்கம் நன்றாகப் புரிந்தது.
இளங்கோ “இவ என்னாண்ட பேசாம அவளா போய்ப் பேசினதே தப்பு. அந்தப் பையனும், பொண்ணும் விரும்புறாங்கனா பேசாம வருணுமா இல்லையா? அங்க சலம்பல கூட்டிருக்கா. இங்க வந்து என்னாண்ட சட்டை கட்டினா நான் என்ன பண்ண? நம்ம பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்காதா? என்னாத்தீக்கு இப்படி சண்டைகட்டனும்கீறேன்?”
“ம்மா அப்பா சொல்றதும் சரிதான. அஸ்வதும், அகிலாவும் விரும்புறாங்க. அது எனக்கே நல்லா தெரியும். நீ இந்தப் பிரச்சனைய இத்தோட விடு. சிந்துக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாம் நாம”
“நான் அஸ்வந்த் அத்தான தான் கட்டிப்பேன்” எனக் கத்தினாள் சிந்து.
“அடிச்சு முகறைய பேத்துருவேன். ஒழுக்கமா இரு சொல்லிட்டேன். எதாவது கலாட்டா பண்ணின கொன்றுவேன்” எனக் கைகளை ஓங்கி அடிக்கப் போக, பயந்து ஆனந்தியிடம் ஒதுங்கினாள்.
“அவள ஏண்டா அடிக்க வர?”
“புரிஞ்சுக்கோம்மா பிடிக்காதவன எப்படிமா கட்டாயப்படுத்துறது?”
“போறானுங்க போ. நாசமா போவானுங்க.. எங்க சாபமெல்லாம் அவங்கள வாழவிடாது. இனி நீ அந்தாண்ட போகக் கூடாது. இனி நமக்கும் அவங்களுக்கும் ஒட்டு உறவு இல்ல”
“அம்மா சும்மா பிரச்சனை பண்ணாத. போய்த் தூங்கு. நான் போய்த் தூங்கிட்டு காலையில கடைக்கு வேற போகனும்”
“அந்தாண்ட போகாதனு சொல்றேன். நீ என்ன பேசிக்கிட்டு இருக்க? நம்மவூட்டுலயே இரு அவ்ளோ தான் சொல்லிட்டேன்”
“அப்பா என்னப்பா இது?” என ஆயாசமாகக் கேட்டான்.
“இப்ப இங்க படு காலையில பார்த்துக்கலாம்” என அவரும் கூற, அந்தக் கூடத்திலேயே படுத்துவிட்டான்.
இங்கு மது வீட்டில் அவனுக்காக அத்தனை பேரும் காத்திருக்க, அஸ்வந்த் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் சித்தார்த்.
“அம்மா சண்டை பிடிக்குதுடா. நீங்கத் தூங்குங்க நான் காலையில வரேன்” என்று, அவன் அதை வீட்டில் கூறவும், மனமேயின்றி அனைவரும் படுக்கச் செல்ல, மது மட்டும் அங்குமிங்குமாக அழைந்து கொண்டிருந்தாள். அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்து. இந்தப் பிரிவு நிரந்தர பழக்கமாக மாறிவிடுமோ என.
என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை..
நான் தேடினேன் என் கண்ணனை.. புயல் சூழ்ந்ததே என் கண்களை..
நான் வேறெங்கும் மறையவில்லை.. என் வேர் என்றும் அழிவதில்லை.. உன் வானம் முடிவதில்லை.. உறவே..
உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன..
Last edited: