Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 10
அன்பு வீட்டுக்கு இனி செல்லக்கூடாது என தன் மகனை தன் வீட்டிலே ஆனந்தி தங்கவைக்க, மறுநாள் காலையில் இளங்கோவுடன் கடைக்குச் சென்றுவிட்டான் சித்தார்த். அன்பழகன் இளங்கோ கடைக்கே வந்துவிட்டார்.
“மச்சான்”
“வா அன்பு”
“மச்சான் விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். நான் நேரா விஷயத்துக்கே வரேன். ஆனந்தி அஸ்வந்த்க்கு சிந்துவ தரேனு சொன்னப்போ எனக்குமே விருப்பம் தான். ஆனா அஸ்வந்த் விருப்பம் வேறா இருக்கும்போது நான் என்ன பண்ணுவேன் மச்சான்?”
“புரியுது அன்பு. விடு அந்தக் கயிதை அப்படிதேன் சலப்பிட்டு திரிவா. லூசுலவுடு”
அன்பழகன் “மனசு ஒரு மாதிரியே இருக்கு மச்சான்”
“ஒன்னியும் நினைக்காத சீக்கிரம் சட்டு புட்டுனு அந்தக் கல்யாணத்தை நடத்திப்புடு. அப்புறம் இவளுக அடங்கிடுவாளுக. இல்ல நாங்க எத்தீனீ மாப்பிள்ளை கொண்டு வந்தாலும் ஆத்தாளும், மகளும் விரட்டிடுவாளுக”
“சரிங்க மச்சான்” எனக் கூறிவிட்டு சித்தார்த்தைப் பார்த்து “சித்தார்த் இன்னைக்கு வீட்டுக்கு வந்துருவ தான” எனக் கேட்டார் அன்பு.
“மாமா! வந்துருவேன் மாமா. நேத்தே வந்துருப்பேன். அப்பா தான் அம்மா வாய அடைக்க அங்கயே படுன்னுட்டார்”
இளங்கோ “நைட் நேரம் அன்பு. இவ கரைச்சல கூட்டினா அதான் அந்தாண்டயே படுக்கச் சொல்லிட்டேன். இன்னைக்கு வருவான்” என்றார். ஆனாலும் அவர் மனதில் தன் மகனைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாத ஏக்கம் இருந்தது.
அன்பழகன் “புள்ளையாட்ட வளர்த்துட்டேன். அவன் இல்லாம நைட் தூக்கமே இல்ல மச்சான்”
சித்தார்த் “நைட்டு வந்திருவேன் மாமா. நீங்க பூபாலன் சித்தப்பாட்ட பேசி என்னனு பாருங்க. சீக்கிரம் அஸ்வந்த் கல்யாணத்த முடிச்சிடுவோம்” எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
அதன் பிறகு எல்லாமே வேகம் வேகம் தான். அடுத்த மாதமே திருமணம் முடிவானது. ஆனந்தியும், சிந்துவும் என்ன கூப்பாடு போட்டும் பிரயோஜனம் இல்லாமல் போக, அம்மாவையும், மகளையும் தவிற அனைவரும் விருவிருப்பாக, தடபுடலாகக் கல்யாணத்தை நடத்தி முடித்தனர்.
அவர்கள் திருமணம் முடிந்த கையோடு சிந்துவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது சிந்து மறுக்க, ஆனந்தியே சிந்துவை அடித்து, மிரட்டி ஒத்துக்கொள்ள வைத்தார்.
பின்ன என்ன செய்வது அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, இவள் இன்னமும் அவன் நினைப்பிலேயே இருந்தால் சரியாக வராது என நினைத்துத் தானே மகளை ஒத்துக்கொள்ள வைத்து உள்ளூரிலே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தனர்.
சிந்துவின் திருமணத்திற்கு அன்பழகன் மற்றும் பூபாலன் வீட்டினரை இளங்கோ மட்டுமே சென்று அழைத்தார். அவர்களும் நான்கு பேர்போல ஐந்தாம் ஆளாக மண்டபத்திற்கு மட்டும் சென்று வந்தனர். ஆனால் கல்யாண வீட்டு வேலையில் இளங்கோவுக்கும், சித்தார்த்துக்கும் பக்க பலமாக இருந்தனர்.
அதற்குப் பிறகு கூட ஆனந்தி அண்ணன் வீட்டினருடன் உறவைப் பேணவில்லை. தன் மகளை எடுக்காத குடும்பம் தனக்கும் வேண்டாமென ஒதுக்கிவிட்டார். தினமும் இளங்கோவிடம் சண்டை தான் சித்தார்த் அன்பு வீட்டிலேயே இருப்பதற்கு. என்ன செய்வது தன் குழந்தையைத் தானே பார்த்திருந்திருக்க வேண்டும். அன்று அவன் பொறுப்பு கூடுதல் வேலையெனத் தட்டிக்கழிக்க, இன்று அவன் அவர்களுடனே ஒட்டுதலோடு இருக்கிறான்.
அம்மாவுக்காகக் கூட அவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. சிறு வயது முதல் பழக்கம் ஒருபக்கம் இருந்தாலும், மாமன் மகள்மேல் காதல் வேறு உள்ளதல்லவா! அது அவனை அவளை விட்டு எட்டி நிற்க அனுமதிக்கவில்லை. எங்கே எட்டி நின்றால் தன் தாயே தங்களை பிரித்து விடுவாரென நிச்சியமாக நம்பினான் சித்தார்த்.
திருமணம் முடிந்த கையோடு அகிலாவுக்கு குழந்தை பாக்கியமும் கிடைத்துவிட்டது, சிந்துவுக்கு கிடைக்கவில்லை என்பது வேற அவர்களுக்குப் புகைச்சல். இப்படியே நாட்கள் தேயத் தேய சித்தார்த், மதுவின் இரகசிய காதல் வளர்ந்து கொண்டே சென்றது இரண்டாண்டு காலம்.
சித்தார்த்தும் அவனது அப்பா கடையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தான். வெற்றிகரமாக லாபங்களை எடுத்தான். தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தான். அப்போது தான் அவன் வாழ்விலும் அந்த நல்ல விஷயம் நடந்தது. பல நாட்களாக முயற்சிசெய்த எஸ்.ஐ தேர்வில் தேர்வாகி பயிற்சிக்கு அழைத்திருந்தனர். அவனுக்குப் பயிற்சி முகாம் கோயம்புத்தூரில் இருக்க அங்கே செல்ல வேண்டிய கட்டாயம்.
பயிற்சிக்குக் கிளம்ப ஆயத்தமானான். பயிற்சி காலம் முடிந்து அவன் வேலையுடன் வருவதற்கும், அவனது தாரா படிப்பை முடிப்பதற்கும் சரியாக இருக்கும் என நினைத்தான். அதனால் வந்ததும் தன்னவளை உரிமையுடன் தன்னவளாக்க நினைத்தவன் தன் மாமனிடம் வந்தான்.
“மாமா டிரைனிங்க்கு இன்னும் இரண்டு நாள்ல கிளம்பனும் மாமா”
“நல்லது சித்து. பார்த்துப் பத்திரமா போய்ட்டு வா. நீ இல்லாட்டி எனக்குத் தான் தூக்கமே வராது. என்ன செய்யப் போறேனு தெரியல”
“அய்யோ மாமா! அது அன்னைக்கு அம்மா சண்டை போட்டதால உங்களுக்குத் தூக்கம் வந்திருக்காது. ஆனா இப்போ அப்படி இல்லைல. அதனால இப்போ நல்லா தூக்கம் வரும்”
ஈகைச்செல்வி “கைக்குள்ளயே இருந்துட்டு ஆறுமாசம் வெளியூர்க்கு போறேனு சொல்லவும் மனசே சரியில்ல. ஆனா அது உன் நல்லதுக்குன்றதால பழகிக்கனும்” எனக் கூற, மௌனமாக ‘ஆமாம்’ என்னும் விதமாகத் தலையசைத்தார் அன்பு.
“மாமா அத்தை! இன்னொன்னு சொல்லனும். உண்மைய சொல்லனும்னா இத நான் சொல்லவோ, கேட்கவோ கூடாது. ஆனா இப்போ நானே கேட்க வேண்டிய கட்டாயத்துல கேட்குறேன்”
“என்ன சித்து என்னென்னமோ சொல்ற? நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு”
“ம்ம். தாராவ எனக்குத் தரீங்களா?” என நேரடியாகக் கேட்டேவிட்டான். ஆனால் அன்புவும், ஈகையும் இதை ஏற்கனவே எதிர்பார்த்தது போலத் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் முன்னரே இதுபத்தி பேசியிருப்பார்களோ என்னவோ!
அன்பு “சந்தோஷமான விஷயம் தான் சந்தோஷப் படத்தான் முடியல. ஆனந்தி..” என இழுக்க,
“அம்மாவோட சம்மதத்தோட தான் மாமா நடக்கும். நான் சம்மதம் வாங்கிடுவேன்”
ஈகை “உங்க எல்லாரையும் என் பிள்ளைபோலத் தான் வளர்த்தேன். அப்போலாம் உனக்கு மதுவ கொடுக்கனும், அகிலாவ அஸ்வந்துக்கு எடுக்கனும்னு எந்த உள்நோக்கமும் இல்ல. நீங்க எல்லாருமே என் பிள்ளைகள் தான்.
அப்புறம் ஒரு நாள் மதுவ உனக்குக் கொடுக்கனும்னு எனக்குத் தோனுச்சு. எப்போ தெரியுமா? கொரோனால நீ அவ கூடவே இருந்து பார்த்தீயே அப்போ! நீ காப்பாத்தி கொடுத்த உசுற உனக்கே கொடுக்கனும்னு எங்களுக்குத் தோனுச்சு.
ஆனா இப்போ அதெல்லாம் சாத்தியம்னு எங்களுக்குத் தோனலயேப்பா. நீயே கேட்டும் கொடுக்குறேனு சொல்ல முடியாத நிலையில கடவுள் நிறுத்திட்டாரே!” என வாயை மூடி அழுகவும்,
“அத்தை! நீங்க யோசிக்கிற ஒரே விஷயம் அம்மா தான. நான் அம்மாவ மாத்திருவேன். சம்மதம் வாங்கிடுவேன். அம்மா வந்து மதுவ எனக்குக் கேட்டா நீங்கக் கொடுப்பீங்க தான?”
“அது மட்டும் நடந்துட்டா எங்களுக்கு வேற என்ன வேணும். உன் தாரா உனக்குத் தானு அவ கைய பிடிச்சு உன்கையில ஒப்படச்சிட்டு நிம்மதியா இருப்போம்” எனக்கூற,
“அப்போ சரி மாமா. நான் டிரைனிங் முடிந்து வந்து, அம்மாவ சமாதானம் பண்ணி அம்மா, அப்பாவோட தாராவ பொண்ணு கேட்டு வரேன். என் தாரா எனக்குத் தான்” எனச் சந்தோஷமாகக் கூறிவிட்டு படுக்கச் சென்றான்.
மறுநாள் தாராவிடமும் “பத்திரமா இரு. சாக்லெட்ஸ் அதிகமா சாப்பிடாத. தினமும் ஒன்னு ஆதவன வாங்கி தரச் சொல்றேன், ஆனா அதுக்கு மேல நீ சாப்பிட கூடாது. சுகர் கன்ரோல்லயே வச்சிக்கோ. உடம்ப பார்த்துக்கோ. டிரெயின் முடியவும் உன்ன பார்க்க ஓடி வந்துருவேன்” எனக்கூற,
“என்னைத் தனியா விட்டுட்டு போறல.. போ.. போ.. என் கூடப் பேசாத” என முறுக்கிக் கொண்டாள் மது. அவளுக்கு அவனது பிரிவைத் தாங்கும் சக்தி இல்லை. அவனிடம் இன்னமும் பேசினால் அவளது காதல் அவள் அறியாமலேயே வெளிப்படுத்தி விடுவாள், அழுதும்விடுவாளெனப் பயந்தே அவனிடம் சண்டை போட்டு முறுக்கிக் கொள்வது போல ஓடியே விட்டாள்.
அவனுக்குத் தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. சரி ஆறு மாதம் தான. முடிச்சுட்டு வந்து அவளை மொத்தமா சமாதானம் பண்ணி காதலை சொல்லிச் சர்ப்ரைஸ் பண்ணிடலாமென நினைத்து அன்று அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான். அஸ்வந்த் தான் இரல்வே நிலையம்வரை அழைத்துச் சென்றான். அப்போது,
“அஸூ. தாராவ பத்திரமா பார்த்துக்கோடா”
“என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா? நீ எதப்பத்தியும் யோசிக்காதடா. நிம்மதியா போய்ட்டு வா”
“நீ உன் பொண்டாட்டி, புள்ளையோட லூட்டி அடிச்சுட்டு என் பொண்டாட்டிய விட்டுறாத” எனத் தன்னையறியாமல் மனதிலுள்ளதை கூறிவிட்டான் சித்தார்த்.
“என்ன? என்ன சொன்ன இப்ப நீ?” எனக் கேட்கவும், அவசரப்பட்டு வாயை விட்டுவிட்டதை நினைத்து உதட்டைக் கடித்தான் சித்தார்த்.
“ஏய் சித்து. இப்போ நீ மதுவ உன் பொண்டாட்டினு தான சொன்ன? சொல்லுடா” என வண்டியை நிறுத்திவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
“இல்லையே.. நீ உன் பொண்டாட்டியோட லூட்டி அடிச்சுட்டு என் தாராவ விட்டுறாதனு தான் சொன்னேன்”
“இல்ல என் காதுல நல்லா விழுந்துச்சு. பொய் சொல்லாத. உன் முகமே காட்டிக் கொடுக்குது. உண்மைய சொல்லுடா”
“ஆமா அப்படி தான் சொன்னேன். ஏன் அவள எனக்குத் தர மாட்டீங்களா? அவ எனக்கு முறை தான?”
“நாங்க எங்கடா தர மாட்டோம்னு சொன்னோன். ரொம்ப சந்தோஷம் டா. எங்க நான் உன் தங்கச்சிய கட்டிக்கிடலனு நீயும் மதுவ கட்டிக்க மாட்டியோனு நினைச்சு தான் இத பேசாமயே இருந்தேன்”
“லூசு மாதிரி பேசாத உன் நிலைமை வேற, என் நிலைமை வேற. எனக்கு என் தாராவ பிறந்ததிலிருந்தே பிடிக்கும். அவள நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன் டா”
“லவ் பண்றியாடா பாடி சோடா.. இத்தனை நாளும் சொல்லவே இல்லை. என்னை மட்டும் எப்படி கேலி பண்ணின?”
“அதான் சொல்லல. சொன்னா நீ தாரா முன்னாடியே கிண்டல் பண்ணுவ. அப்போ அவளுக்குத் தெரிஞ்சுடும்ல”
“அடப்பாவி நீ லவ் பண்றது மதுவுக்கே தெரியாதா?”
“தெரியாது நான் சொன்னதில்ல. டிரைனிங் முடிச்சுட்டு வேலையோட வந்து தான் ப்ரபோஸ் பண்ணுவேன்”
“கலக்குடா மாப்பிள்ளை”
“அதுவரை நீங்களும் யாரும் சொல்லாதீங்க. உன் மனசுல வச்சிக்கோ உன் தங்கச்சியும் என்னை லவ் பண்றா. அத நான் அவ கண்ணுல பார்த்திருக்கேன். ஆனா அவளும் இன்னும் அதை என்கிட்ட சொல்லல”
“இது வேறயா? என்னடா நீங்க. ஒரே வீட்டுல லவ் பண்றது எவ்ளோ ஜாலி ஃபீல் அத மிஸ் பண்ணிட்டீங்களே!” எனத் தலையில் அடிக்க,
“எது மாடியில தண்ணீ தொட்டிக்குக் கீழ நின்னு கிஸ் அடிப்பீங்களே! அந்தப் பீலீங்கா?”
“அடப்பாவி! அதெல்லாமா பார்த்த?”
“நீ அகிலா உதட்ட உறிஞ்சுறதுல உலகம் மறந்து நின்னா நான் என்ன பண்ணுவேன்? ஃபீரிஷோ காட்டின உங்களுக்கே வெட்கமில்ல பார்க்குற எனக்கு ஏண்டா வரனும்?”
“மானத்தை வாங்காத ராசா. நீ கல்யாணம் பண்ணிட்டே ரொமான்ஸ் பண்ணு. என்னை ஆள விடு” எனக் கை எடுத்துக் கும்பிட,
“டேய் வண்டிய பிடிச்சு ஓட்டுடா.. எங்கயாவது கொண்டு கவுத்தி விட்டுறாத”
காதல் நீதானா? காதல் நீதானா?
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா?
நெஞ்சம் இது ஒன்றுதான்..
அங்கும் இங்கும் உள்ளது..
உனக்கதை தருகிறேன் உயிர் எனச் சுமந்திரு..
வானமும் என் பூமியும் உன்னிடம்..
காதல் நீதானா? காதல் நீதானா?
என அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு காதல் வானில் பறக்க இரயில்வே நிலையம் வந்துவிட்டது.
“ம்ம்.. ம்ம்ம்ம்.. போதும் டா கனவு காண்டது. பார்த்துப் போய்ட்டு வா. அதுவரை என் தங்கச்சிய பத்திரமா உனக்காகப் பாதுகாத்து வைக்கிறேன்” எனப் பேசிக் கொண்டே இரயில் அவனை ஏற்றிவிட்டு சென்றான் அஸ்வந்த்.
அன்றிலிருந்து இன்றுவரை தினமும் ஒரு முறையாவது அஸ்வந்திடமும் அவன் மாமனிடமும் பேசிவிடுவான். தாரா தான் இன்னமும் அவனது அழைப்பை எடுப்பதில்லை. எடுத்தால் அவளால் அவளைக் கட்டுப்படுத்திக்க முடியாது அழுதுவிடுவாள் அதனாலே எடுக்கவில்லை, அவனும் அழைப்பதை நிறுத்தவில்லை.
அவன் வாழ்வில் நடந்தது அனைத்தையும் நினைத்து முடித்தவனுக்கு அவ்வளவு ஆதங்கம்.
‘அஸ்வந்த், மாமா, அப்பா என அனைவரிடமும் தினமும் பேசி, நலம் விசாரித்துக் கொண்டு இருக்கும் போதே எனக்கே தெரியாமல், என்னிடம் ஒரு வார்த்தைக் கூறாமல் இப்படியொரு நிகழ்வு நடக்கிறதென்றால் எதோ ஒன்னு பெரிதாக நடந்திருக்க வேண்டும்.
அது என்னான்னு தெரியல. எதுவாவேணாலும் இருக்கட்டுமே, அதுக்காக எனக்கு அவங்க பண்ணியது துரோகம் தான! ஏன் என்னை இப்படி எல்லாரும் சேர்ந்து ஏமாற்றினார்கள்? யாரையும் நான் மன்னிக்கப் போவதில்லை’ என்ற முடிவுடன் சென்னையில் காலடி எடுத்து வைத்தான் சித்தார்த். இனி சித்தார்த்தின் ஆட்டம் தொடரும். இதில் பலியாகப் போவது யார்? பொருத்திருந்து பார்ப்போம்.