எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 8

S.Theeba

Moderator
சிங்கத்தின் குகைக்குள் செல்லும் சிறு முயல் போல நெஞ்சம் படபடக்க தமிழினியனின் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள். வரவேற்பறை போல இருந்த முன் பகுதியில் ஒரிரு சிறிய மின்விளக்குகள் மட்டும் போடப்பட்டிருந்தன. ஆனால் அந்த பகுதியே சொர்க்கலோகம் போல தோன்றும் வகையில் பெரிய, சிறிய மெழுகுவர்த்திகள் காணும் இடமெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அங்காங்கே வாசனை மலர்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி படுக்கை இருந்த பகுதிக்குள் மெல்லச் சென்றாள். அந்த இடம் முன்னைய பகுதியைவிட இன்னும் ஜொலித்தது. சிவப்பு, வெள்ளை நிறத்தில் இதய வடிவ பலூன்களாலும் சிறிய மின்குமிழ்களாலும் அறை முழுதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கங்கே மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டிருந்தன. கட்டிலில் மல்லிகை மற்றும் ரோஜா இதழ்கள் கொண்டு இதய வடிவம் போடப்பட்டிருந்தது. அறை முழுவதும் மனதைக் கிறங்க வைக்கும் ஒருவித வாசனை வீசியது.
இந்த அலங்கார வேலைகளைத் தமிழினியனின் நண்பர்களான லக்ஷ்மனும் ஈசனும் சேர்ந்து செய்திருந்தனர். அவர்களின் ரசனையை மனதாரப் பாராட்டினாள்

அந்த அறையின் நேர்த்தியிலும் அலங்காரத்திலும் தன்னை மறந்து லயித்திருந்தவளுக்கு திடீரென தன் சூழ்நிலை புரிய சுற்றும்முற்றும் மிரட்சியுடன் தேடினாள். அறையில் தமிழினியன் இல்லை எனவும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
‘அவனை மறந்து போய் இப்படி ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டிருந்தேனே. அவன் அங்கே இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பான்'

பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. மெதுவாக சென்று கட்டிலிற்கு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். பாத்ரூமிலிருந்து வரப்போவது புயலா? சூறாவளியா? அல்லது சுனாமியா? என்று தெரியவில்லையே... அவன் என்ன மனநிலையில் இருக்கின்றானோ... இதுவரை எதுவுமே அவன் பேசவில்லை என்னும் போது உள்ளுக்குள் ஏதாவது இருக்குமோ?' என சிந்தித்த அபிராமியின் நெஞ்சிற்குள் பயத்தில் ரயில் ஓடியது. வரப்போகின்றவனை எதிர்கொள்ளத் தைரியம் இன்றிப் பெரும் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்துக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தான் தமிழினியன். ட்ராக் சூட்டும் கையில்லாத பனியனும் அணிந்திருந்தான். வெளியில் வந்தவன் அவள் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டதும் அருகில் வராது சற்றுத் தள்ளி நின்று, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியபடி அவளையே பார்த்து நின்றான்.

அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அதை வெளிக்காட்டாமல் எழுந்து நின்றாள். அவன் என்ன சொல்லப் போகின்றானோ? என்ன கேள்வி கேட்கப் போகின்றானோ? பார்வையைப் பார்த்தால் பேச்சை விடுத்து அறைதான் விழும்போல இருக்கு. அல்லது என்னை கழுத்தைப் பிடித்து இந்த அறையை விட்டு வெளியே தள்ளிவிட்டால்.. ஐயையோ… அப்பனே முருகா.. எதுவானாலும் பரவாயில்லை. இந்த அறைக்குள்ளேயே நடக்கட்டும். அது அடியே ஆனாலும் தாங்கும் சக்தியைத்தா. வேறு எதுவும் நடந்திக் கூடாது முருகா' என்று மனதிற்குள் பிரார்த்தனை வேறு செய்தாள்.

"ம்ம்.. உனக்கு ரொம்பத் தைரியம்தான். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் செய்வதெல்லாம் செய்துவிட்டு என்ன தெனாவெட்டாய் என் முன்னால் நிற்கிறாய்..."என்று குரலில் அழுத்தத்துடன் கூறினான்.
'ஐயோ.. ஐயோ.. பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மன்ட் வீக்கு என்பது அவனுக்குத் தெரியாதே' என உள்ளூரப் புலம்பினவள் வெளியில்,
"நான்… நான் அப்படி என்ன செய்தேன்? தப்பெதுவும் செய்யலையே...." என்று இழுத்தாள்.
"ஓகோ... நீ செய்தது தப்பேயில்லையா... என்ன ஒரு அப்பாவித்தனம். நான் உன்னிடம் படித்து படித்து எத்தனை தடவை சொன்னேன். இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடு என்று. ஆனால், நீ என்னை ஏமாற்றியது மட்டுமில்லாமல் உன்னையும்... அதைப்பற்றி எந்த கில்டி ஃபீலும் இல்லாமல் இங்கே என் அறையில்.... அதுசரி.. அப்பவும் சொன்னேன். என்னைக் கல்யாணம் செய்தால் நீ ரொம்பக் கஷ்டப்படுவாய் என்று... ஆனால், அதை மதிக்காமல் உன் இஷ்டத்துக்கு நடந்து கொண்டாய். என் பேச்சை மீறி நீயாய் தேர்ந்தெடுத்தது அனுபவித்துத்தான் ஆகணும். ஆனால் அது… உன்.. எனக்கு.. இனி எது நடந்தாலும் அது உன் முடிவுக்கு கிடைத்த பரிசே.. அதை நீதான் அனுபவிக்கணும்" என்று நிதானமாகப் பேசினான். ஆனாலும் சில இடங்களில் அவன் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் நிறுத்திவிட்டு வேறு பேசினான்.

அவன் பேசியதற்கு உடனடியாக அவளால் பதில் சொல்ல முடியவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நின்றாள் அபிராமி.

அவள் ஏதாவது பேசுவாள் என்று சிறிது நேரம் அமைதியாக நின்றவன், அவள் எதுவும் சொல்ல முன்வரவில்லை என்பதை உணர்ந்ததும் "மகாராணியார் ஒரு வார்த்தை பேசவும் யோசிக்கிறிங்க. பேசினால் முத்து உதிர்ந்திடுமோ..?" என்றான்.

"எ.. என்ன... சொ..சொல்ல.."

"ரொம்பப் பெரிய காரியம் எல்லாம் செய்ய முடியும். பேச மட்டும் முடியாதா?"

"எனக்கு... என்ன செய்யுறதென்றே தெரியல. வீட்டில் நீங்க சொன்னதை சொல்லத்தான் ட்ரை பண்ணினன். ஆனால்... திடீரென அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. இதை சொன்னால் அவரால் தாங்கிக்க ல்முடியாது. உங்களை.. இந்தக் கல்யாணத்தை அவர் ரொம்ப எதிர்பார்த்தார். இதைச் சொல்லி அவரைக் கஸ்ரப்படுத்த முடியல. அதுதான்..." என்று இழுத்தாள் அபிராமி.

"அதற்காக மேடம் ரொம்பப் பெரிய தியாகம் பண்ணினதாய் நினைப்போ... அது தியாகம் அல்ல. அது உனக்குத் தண்டனைதான். நீ என்ன ரீசன் சொன்னாலும் என் பேச்சின் வீரியத்தை நீ புரிஞ்சுக்கலை என்று தான் அர்த்தம். முடிவா ஒன்று சொல்றன் கேட்டுக்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது. நடந்தது நடந்ததுதான். எதுவும் மாறப் போவதில்லை… பட், உன் கழுத்தில் தாலி கட்டிட்டன் என்பதால் என்கிட்ட இருந்து புருஷனுக்குரிய எந்த உரிமையையும் நீ எடுத்துக்க முடியாது. எதிர்பார்க்கவும் வேண்டாம். என் கிட்ட நெருங்கவும் முயற்சிக்காத. இந்த வீட்டில் நீ சுதந்திரமாய் இருக்க எந்தத் தடையும் இல்லை. இந்த வீட்டில் எல்லா உரிமையும் உனக்கு உண்டு. உன் இஷ்டம் போல இருக்கலாம். பட், அது இந்த அறைக்கு வெளியில் மட்டுமே. இந்த அறைக்குள் நீ வேறு நான் வேறு. இந்த அறைக்குள் நீ சாதாரண கெஸ்ட் மட்டுமே." என்று மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் பேசி முடித்தான்.

சிறிது நேரம் கழித்து ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களில் ஒருவித இறைஞ்சலுடன் "ஏன்... என்னைக் கல்யாணம் செய்வதில் உங்களுக்கு ஏன் வெறுப்பு? ஏதாவது காரணம் இருக்கா?" என்று அவன் வெறுப்பிற்கு காரணம் அறியக் கேட்டாள்.

ஒருநொடி அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவனின் மனம் சற்று இளகத் தொடங்கியது. அவளை அணைக்கத் தூண்டிய தன் கைகளுக்கும் மனதிற்கும் கடிவாளம் இட்டவன் "எல்லாம் முடிந்தபிறகு அதைத் தெரிந்து என்ன பயன். எதற்கும் தயாராகத்தானே என் கையால் தாலி வாங்கினாய். எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் எப்படியும் வாழ்ந்திட்டு போகலாம் என்று எண்ணித்தானே இங்கே வந்தாய். அது.. நீ விரும்பிய வாழ்வு உனக்கு கிடைக்கும். மனைவி என்ற அந்தஸ்து கிடைக்கும்.. அதாவது வெளியுலகுக்கு மட்டும். என்னிடமல்ல" சுள்ளென்று கூறிவிட்டு கட்டிலில் இருந்து தலையணையையும் போர்வையையும் எடுத்தவன் "நீ கட்டிலிலேயே படுத்துக்க" என்றான்.

அறைக்குள் கிடந்த சோபாவில் தலையணையைப் போட்டவன் அதிலேயே
படுத்தான். சிறிதுநேரம் அப்படியே நின்றவள்,
“அது வந்து..” என்று எதையோ சொல்ல முயன்றாள்.
முதுகு காட்டி படுத்திருந்தவன் திரும்பி படுத்து அவளைப் பார்த்தான்.
“என்ன?” என்றான்.
“நான் இங்கே கீழேயே படுக்குறன். நீங்க பெட்டில் படுக்க”
“பரவாயில்ல. நான் இதிலேயே தூங்குறன். நீ பெட்டிலேயே படு. பெரிய லைட்ஸ்ஸ ஓவ் பண்ணிடு” என்று விட்டு கைகளைக் கட்டியபடி கண்களை மூடினான்.

‘அப்பாடா ஜஸ்டு மிஸ்ஸூ. அடியே அபிராமி தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனமாதிரி அவன் பேச்சோடு மட்டும் நிறுத்திட்டான். அவன் ஒரு அடி போட்டால் தாங்குவியா? அல்லது வெளியே தள்ளி கதவை சாத்தியிருந்தால் என்ன பண்ணியிருப்பாய்? தப்பிச்சாய் அபிராமி' என்று தனக்குத் தானே தைரியம் சொன்னாள். இதற்கு மேல் பேசினால் தான் நினைத்ததெல்லாம் நிஜத்தில் என்று பயந்தவள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அபிராமிக்குத்தான் தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. புதிய இடம் அவளுக்குத் தூக்கத்தைத் தூர நிறுத்தியிருந்தது. அவனுக்கு முதுகு காட்டி ஒருக்களித்துப் படுத்திருந்தவள் திரும்பிப் படுத்தாள். அப்போது அறையில் போட்டிருந்த சிறிய மின்விளக்கின் வெளிச்சத்தில் அவன் ஆழ்ந்து உறங்குவது தெரிந்தது.

அவன் முகத்தை அப்போதுதான் நன்றாக உற்றுப் பார்த்தாள். கம்பீரமான, தெளிவான முகம். தூக்கத்திலும் அவனது உதடுகள் இறுக்கத்துடனேயே காணப்பட்டது.
'சரியான கல்லுளி மங்கன். இவருக்கு என்னதான் பிரச்சினை. என்னை ஏன் அவாய்ட் பண்ணுகிறார்? எதையோ மறைக்க முயற்சி பண்ணுறாரா? ஒருவேளை யாரையாவது லவ் பண்ணினாரோ? அவளை மறக்க முடியாமல் கஸ்ரப்படுகின்றாரோ? அப்படி என்றால் அதைத் தன் வீட்டில் சொல்லியிருக்கலாமே? அத்தையையும் மாமாவையும் பார்த்தால் லவ்வுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் மாதிரித் தெரியலையே? நல்ல புரிந்துணர்வு உள்ளவர்கள். அப்புறம் ஏன் சொல்லவில்லை? ஒன்றுமே புரியவில்லை. ஏதோ

இதுதான் எனக்காக விதித்திருக்கும் வாழ்வு போல எதுவானாலும்இந்த நாலு சுவருக்குளே என்ன நடந்தாலும் பரவாயில்லை. அதை நான் சமாளிக்க வேண்டும். வெளியில் யாருக்கும் எதுவும் காட்டக்கூடாது' என்று தனக்குத் தானே பேசியபடி தூங்கிப் போனாள்.
 

Nagajothi

Member
அருமை ???, அபி எதிர் பார்த்த அளவுக்கு இல்லை பேசியத்தோடு முடித்துகொண்டான் இனியன் என்ன காரணம் என்று சொல்ல மாட்டிங்கின்றான் காதல் தோல்வியோ என்னவாக இருக்கும் திருமணத்தை நிறுத்த சொன்னதற்கு ??????
 
Top