Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 11
இனி
இரவு பத்து முப்பதுக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது அந்த விமானம். தன்னுடைய பயணப்பொதியை எடுத்துக் கொண்டு வேக நடையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியவன் வாடகை காரின் உதவியால் அவனது வீட்டிற்கு நேரடியாகச் சென்றான். அந்த வாகனம் பூபாலன் வீடு, அவன் மாமா வீட்டைத் தாண்டித் தான் அவனது வீட்டுக்குச் சென்றது.
இருவரின் வீட்டு வாசலிலும் தோரணம் கட்டி பந்தல் போடப்பட்டிருந்தது. மாமன் வீட்டைக் கடக்கும்போது, திரும்பிப் பார்க்கக் கூறிய மனதை அடக்கி, கண்களைத் தெருவை விட்டு அகற்றாமல் அமர்ந்திருந்தான்.
ஆனால் காது மட்டும் கூர்மையாக அந்த வீட்டிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டது. ஆம்! அது அவனவள் குரல் தான்.
“தரூண் அத்தையை ஓட விடாத. நேரமாச்சு வா தூங்கலாம். அத்தைக்கு கால் வலிக்குதுடா” என அண்ணன் மகனிடம் கத்திக் கொண்டிருந்தாள்.
ஐந்துமாதம் கழித்து கேட்கிறான் அந்தக் குரலை. காது வலியாகச் சென்று அவன் மனதை அடைந்தது. அவளைப் பார்க்கத் துடித்தது மனம், அதை அடக்க அவன் பட்டப்பாடு அப்பப்பா. கண்களை இறுக மூடியபடி அமர்ந்திருந்தான்.
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ..
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ..
நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ..
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ..
இது வேண்டாம் அன்பே போ..
நிஜம் தேடும் பெண்ணே போ..
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ..
தனியாகத் தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ..
என நேரம் காலம் தெரியாமல் வாகனத்தில் பண்பலை (fm) வாயிலாகப் பாடல் வேறு ஒலிக்க, வாகனம் அவன் வீட்டை வந்தடைந்தது.
வீட்டு வாயிலில் ஏதோ வாகனம் வந்து நிற்க, யாரெனப் பார்க்க வந்த இளங்கோ அதிர்ச்சியாகி நின்றார். அவரைத் தொடர்ந்து வந்த ஆனந்திக்கோ நெஞ்சு வலி வராதது ஆச்சரியமே! அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் இன்று நடப்பதோ வேறு.
ஆனந்தி “யோவ் உன் புத்திய காட்டீட்டல. அவன் கிட்ட சொல்லி வர வச்சிட்டீல. இவன் போய் அந்தக் கண்ணாலத்த கெடுத்து, அந்தச் சீக்குகாரிய வூட்டுக்கு இட்டுகின்னு வந்தான் நான் சாமியாடிருவேன்”
“ஏய்! போடி அந்தாண்ட. நானே இவன் இப்படி வந்தீர்க்கீறானே தலைமேல கண்ணாலத்த வச்சிக்கீன்னு இவன் பேஜாராக்கிட்ட போறோனோனு மெர்சலாகிகீறேன் இவ வேற” என இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவனோ வாடகை காருக்கு வாடகையை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
இளங்கோ “இன்னாப்பா? இப்போ வந்திருக்க? இன்னும் உனக்கு டிரைனிங் முடிஞ்சிருக்காதே?”
“அதெல்லாம் தெரிஞ்சு தான கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிருக்கீங்க?” என வெடுக்கெனக் கேட்கக் கொஞ்சம் தடுமாறியவர் சமாளித்து,
“இல்ல சொல்லீக்காம வந்திருக்கீயே.. அத்துதான் இன்னா பிரச்சனையினு கேட்டேன்..” எனச் சுருதி குறைத்து இழுவையாகக் கூறினார்.
“ஒரு வாரம் லீவ் போட்டு வந்துருக்கேன்”
“தீடீர்னு இன்னாப்பா லீவூ?” எனக்கேட்டார் ஆனந்தி.
“சில பேர் சில பல நல்லது எல்லாம் எனக்குச் செஞ்சிருக்காங்கல. அதான் அவங்கள எல்லாம் பார்த்து நன்றி சொல்ல வந்தேன்” எனக்கூறிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்.
அதிர்ச்சியில் நின்ற இளங்கோவிடம் “இன்னாய்யா இது?” எனக் கேட்டு முறைத்தார் ஆனந்தி. ஆனால் அவர் மகனோ யாரையும் கண்டுகொள்ளாமல் உடையை மாற்றிவிட்டு கூடத்திலேயே ஒரு பாயைப்போட்டு படுத்தான்.
இளங்கோ “சாப்பிட்டியா சித்தார்த்து?”
“மனசும், வயிரும் நிறைஞ்சு போயிருக்கு.. அதுவே போதும்” எனக்கூறும்போது அந்தக் குரலில் கோபத்தை விட வேதனையே அதிகமாக இருந்தது.
“இருப்பா தூங்கிடாத நான் போய்க் கடையில இன்னமாது வாங்கின்னுவரேன். வெறும் வயித்தோட படுக்காத” எனச் சட்டையை மாட்டிக்கொண்டு ஓடினார் இளங்கோ.
சிறிது நேரத்தில் மூணு பரோட்டாவுடன் வீட்டுக்குள் நுழைந்து மகனுக்குச் சாப்பாட்டை கொடுக்க, ஆனந்தி தண்ணீர் கொண்டு வந்து வைத்து அவனருகில் அமர்ந்தார்.
“என்னப்பா பரோட்டா வாங்குற சாக்குல இன்னேரம் நான் வந்தத அங்க சொல்லீருப்பல”
“இல்ல.. இல்லப்பா நான் யார் கிட்டயும் ஒன்னியும் சொல்லல. தெரிஞ்சா அவங்க பயந்துகீன்னு இருப்பாங்க”
ஆனந்தி “சித்தார்த்து! அந்தாண்ட என்னமோ பண்ணிக்கின்னு போவட்டும். நீ ஒன்னியும் பண்ணக் கூடாது. எங்கீயும் போகக் கூடாது”
“ஆமாம்மா நம்மள மதிக்காத வீட்டுக்கு நம்ம ஏன் போகனும்?” எனக்கேட்க, ஆனந்தி மனதில் குளுகுளுவென இருந்தது. “மண்டபத்துக்கு மட்டும் போய்க் கல்யாணத்தை நிறுத்திட்டு வந்துருவோம். அவ்ளோதான். என்னம்மா சொல்ற?” எனக்கேட்க,
“அடிஆத்தி!” என ஆனந்தி நெஞ்சில் கையை வைக்க, அதிர்ச்சியாகி நின்றார் இளங்கோ.
இளங்கோ “இன்னாப்பா இப்படி சொல்ற. வேணாம்ப்பா.. பாவம்பா அது. பொட்டப்புள்ளயோட வாழ்க்கைய கெடுக்க வேணாம். சாப்புட்டு கிளம்பு. நம்ம மூணு பேரும் எங்கயாது ஒரு நாழு நாளைக்கு போய்ட்டு வருவோம். வா”
ஆனந்தி “ஆமா வா நம்ம மதுரை மீனாட்சிய போய்ப் பார்த்துட்டு வருவோம், தங்கச்சிக்கு குழந்தை பாக்கியத்துக்கு நேத்தி இருக்கு. வா உடனே கிளம்புவோம்” என்ற ஆனந்தி அவசர அவசரமாகக் கிளம்ப, மகனோ உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.
“வா போய்ட்டு வரலாம்” என இளங்கோ, ஆனந்தி இருவரும் மல்லுக்கட்ட, “இப்போதான் கோயம்புத்தூர்ல இருந்து வந்துருக்கேன். டயர்டா இருக்கு நீங்கக் கிளம்புங்க. நான் வீட்டிலயே இருக்கேன்” எனக்கூறி கைகளை மடக்கி படுக்கையில் சாய்ந்தான்.
கையில் உள்ள பையைத் தூக்கி எறிந்த ஆனந்தி “இன்னாய்யா அப்பனும், புள்ளையும் சேர்ந்துக்கின்னு நாடகமா போடுறீங்க? நீ தாய்யா அவனுக்குப் போன் போட்டுக் கல்யாண விஷயத்தைச் சொல்லிருப்ப? இப்போ ஒன்னியும் தெரியாத மாதிரி ஆக்ட்குடுகிறியா?”
“இந்தாடீ எனக்கே தெரியாது நான் ஒன்னியும் அவன்கிட்ட சொல்லல. இவனுக்கு எந்தக் கஸ்மாலம் போட்டுக்குடுத்தானோ.. அந்த மட்டும் கையில கிடைக்கட்டும் கீசிடுறேன். சரியான காண்டுலகீறேன் நீ எதாது சலம்புன மெரிச்சிருவேன் போய்டு”
எனக்கத்த, காதைக் குடைந்தவாறே எழுந்தவன் “என்னா இன்னுமா கிளம்பல? நிங்கயே நின்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா மதுரை பஸ் போய்ட போகுது. கிளம்புங்க” என்றானே!
“நாங்க எங்கீயும் போகல. நீயும் வூட்டவுட்டு எங்கீயும் போவ கூடாது. நீ போகனும்னு நினைச்சாலும் உடமாட்டேன்” என்றவர் வீட்டைப்பூட்டி சாவியை இடுப்பில் சொறுகியவாறு அவனைப் பார்த்துக்கொண்டே சென்று ஒரு தலையணையும் பாயையும் கொண்டு வந்து அவனருகில் போட்டுப் படுத்தார்.
இளங்கோ ஒரு படிமேல் சென்று பாய் தலையணையை கதவை ஒட்டி விரித்து அதனருகிலேயே படுத்துக் கொண்டார். மகனை அங்குச் செல்லாதவாறு தடுக்கிறார்களாம் இருவரும். ஆனால் தடுக்கும் காரணம் தான் வேறு. இளங்கோவுக்கோ மதுவின் வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டும். ஆனந்திக்கோ மகன் அந்தச் சீக்குகாரிய கட்டிட்டு வந்திடக் கூடாது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. காற்றுக்கு அணை கட்ட முடியுமா? அதுபோலத் தான் சித்தார்த்தும். அவன் நினைத்தால் தான் அவன் இங்கு இருப்பதும், அங்குச் செல்வதும். அவனுக்கு இப்போதைக்கு அங்குச் செல்ல விருப்பமில்லை.
ஏன் சொல்லப்போனால் தன்னை வேண்டாம் என்று நினைத்தவர்கள் தனக்கும் வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தான். ஆனாலும் அவர்களைப் பதறவைக்கவே இந்த வரவு. சிந்தார்த் வந்துவிட்டானெனத் தெரிந்தால் இனி அவர்களால் நிம்மதியாகத் திருமண வேலையில் ஈடுபட முடியுமா என்ன? அவர்கள் நிம்மதியை குழைக்கவே இந்தப் பிரவேஷம்.
மறுநாள் யாருக்கும் காத்திருக்காமல் உதயமானது. அன்று இரவு தான் நிச்சியதார்த்தம் நாளைக் காலை முகூர்த்தம். மும்மரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அன்பழகன் குடும்பத்திற்கு நேற்று இரவு சித்தார்த் வந்துவிட்டானெனத் தெரிந்தது ஒரு உறவினர் மூலமாக. இளங்கோ அவர்களைப் பதட்டப்படுத்த வேண்டாமென மறைத்துவிட்டார்.
அஸ்வந்த் “அப்பா என்னப்பா செய்றது? எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கான். இங்க வராம நேரா அங்க போயிருக்கான்னா ரொம்ப கோபமா இருப்பானு நினைக்கிறேன்பா”
அன்பு “கோபம் இல்லாம எப்படி இருக்கும்? இரண்டு நாள் முன்ன வரைக்கும் கூடப் பேசினான். நம்ம ஒன்னுமே அவன்கிட்ட சொல்லலையே. அப்போ கோபம் இருக்கத்தான செய்யும்”
அஸ்வந்த் “என்ன பண்றதுப்பா? அவன் வந்து பிரச்சனை பண்ணுவானா?”
அன்பு “கல்யாண மாப்பிள்ளை என்ன யாரோவா? பிரச்சனை பண்ணினதும் கோபப்பட்டு போக, நம்ம ஆது தான.. சித்து வந்து பிரச்சனை பண்ணினா நம்ம நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரியவச்சுட்டு ஆது, மது கல்யாணத்தை பண்ண வேண்டியது தான். ஆனாலும் மச்சான் அவனைப் பிரச்சனை பண்ண விடமாட்டார்னு தான் தோனுது”
அஸ்வந்த் “அப்பா! அவன் அத்தை, மாமாவுக்குப் பயப்படுற ஆளா? உங்க வார்த்தையைத் தவிற அவன் யார் பேச்சுக்கும் அடங்கமாட்டான். ஆனா இப்போ நம்ம மேல கோபமா இருக்கும்போது.. அந்த முரடன் என்ன பண்ணுவானு தெரியலயேப்பா”
அன்பு “சொல்லிப் புரிய வைக்கனும். வேற வழி இல்லை”
அஸ்வந்த் “இதத்தான் நான் அன்னைக்கே சொன்னேன். அவன் கிட்ட சொல்லிட்டு, அவனுக்குப் புரியவச்சிட்டு பண்ணுவோம்னு. நீங்க யாருமே அப்போ என் பேச்சைக் கேட்கல”
அன்பு “நம்ம என்ன இப்படி வந்து நிப்பானு கனவா கண்டோம்?”
அஸ்வந்த் “நம்ம சொல்லாட்டி, ஊருல யாரும் சொல்லமாட்டாங்களாப்பா!”
அன்பு “அவன் தான் யார் கிட்டயும் அந்தளவுக்கு போன் பண்ணிலாம் பேசுற ஆள் இல்லையே! தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்குறவன். நேரில பார்த்தா பேசுறதோட சரி. நீயும் உன்கூட படிச்சவனுங்க கிட்ட சொல்லாதனு சொல்லிட்ட. இப்படி அவன் கிட்ட வேணும்னே போட்டுக்குடுத்த ஆசாமி யாருனு தெரியல” எனப் புலம்பிக்கொண்டிருந்தார்.
அந்த ஆசாமியைத் தான் அவர் மாப்பிள்ளையாகவே தேர்ந்தெடுத்திருக்கிறாரெனத் தெரியும்போது அவர்நிலை என்னவோ! ஆதவன் சித்தார்த்தை வரவழைத்த காரணம் என்ன? மது எனக்குத் தானென மார்த்தட்டி அவனை வேதனைப்படுத்தவா? அவனுக்கும் சித்தார்த்தும் என்ன பகை? ஆதவன் சித்தார்த்தை ஏன் சீண்டுகிறான் என்பதை எல்லாம் அறிந்தவர் யாரோ?
இங்குச் சித்தார்த் வீட்டிலோ காலையிலிருந்து ஆனந்தி சித்தார்த்தின் பின்னாலே திரிந்தார். அவன் பின்பக்கம் போனால் இவரும் கூடவே போவது, வாசலில் நின்றால் தானும் அவனுடன் சேர்ந்து நிற்பது, மாடிக்குச் சென்றால் கூடப் பின்னாடியே சென்றார். அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
கடுப்பில் எங்காவது வெளியே செல்லலாமெனக் கிளம்ப, ஆனந்தி இளங்கோவிடம் அவனை வெளியே விடக் கூடாது எனச் சண்டைக்கட்ட, அவன் அப்பா அதற்கும் மேல் வெளியே கிளம்பியவனிடம்,
“எங்கப்பா கிளம்புற?”
“கடைக்கு”
“கடை இன்னைக்கு லீவு”
“உங்க கடைக்குத் தான் லீவு. எல்லா கடையும் லீவு இல்ல”
“நீ எந்தக் கடைக்கு போற?”
“அய்யய்ய! பல் தேய்க்க பிரஸ் இல்ல வாங்க போறேன். ஏன் நச்சரிக்கிறிங்க?”
“இரு என்கிட்ட புது பிரஸ் இருக்கு. நான் தாரேன்”
“சோப்பும் இல்ல” என்றான் தெனாவட்டாக,
“நான் போய் வாங்கினு வரேன். நீ இரு. ஏய் ஆனந்தி பார்த்துக்கோடீ” என்று கடைக்கு ஓடினார்.
அவனோ ‘எவ்வளவு தூரம் போறீங்கனு நானும் பார்க்கிறேன்’ என மனதில் நினைத்தவன் கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தான்.
அவர் வாங்கி கொண்டு வரவும் குளித்து, சாப்பிட்டு மீண்டும் வெளியே கிளம்ப,
“எங்கப்பா போற? என்ன வேணும் சொல்லு அப்பா வாங்கிட்டு வாரேன்”
“ம்ம்.. என்ன சொன்னாலும் வாங்கீட்டு வருவீங்களா? சரி எனக்கு ஆஃப் விஸ்கியும், கோல்ட் ஃப்ளேக் சிகரெட் பாக்கெட் இரண்டு வேணும்” என்றானே பார்க்கலாம். இளங்கோவோ திருதிருவென முழிக்க, ஆனந்தி நெஞ்சில் கைவைத்து நின்றார்.
“என்னப்பா நிக்கிறீங்க? போங்க.. எனக்கு இல்ல, இது மகனுக்குனு சொல்லி வாங்கிட்டு வாங்க”
“தம்பி உனக்கு அந்தப் பழக்கமே இல்லையேய்யா” என்றார் பாவமாக,
“இல்லாட்டி என்ன பழகிட்டா போச்சு. போங்க போய் வாங்கிட்டு வாங்க. எனக்கு டென்சனா இருக்கு” எனக்கூற, தலைமேல் கையை வைத்து அமர்ந்தார் இளங்கோ.
“என்னை வீட்டுக்குள்ள அடைச்சு வைக்க முடியும்னு இரண்டு பேரும் நினைக்கிறீங்களா? முடியுமா உங்களால? நேத்துல இருந்து நானா தான் இங்க இருக்கேன். நீங்கப் பிடிச்சு வச்சதால இல்ல அத முதல்ல புரிஞ்சுக்கோங்க. இப்படி என் பின்னாடி சுத்தி கோமாளி தனம் பண்ணாதீங்க”
“இல்ல அது வந்து நீ கண்ணாலத்த நிறுத்துவேனு” என ஆனந்தி இழுக்க,
“இப்ப அந்த ஐடியா இல்ல” என்றதும் ஆசுவாசமாக மூச்சை விட்டார்.
“என்னப்பா நீங்களும் கிளம்புங்க.. போய் உங்க அன்புக்கு உதவி பண்ணுங்க. அதுக்காகத் தான இன்னைக்கு கடைக்கு லீவு எல்லாம் விட்டீங்க. ஆனா எனக்கு அவ்ளோ பெரிய மனசு எல்லாம் இல்ல, காதலிச்சவ கல்யாணத்து போய் எச்சல எடுக்க. நான் கொஞ்சம் வெளிய போறேன். நைட்டு வீட்டுக்கு வந்துருவேன். சாப்பாடு எல்லாம் வேணாம்” எனக் கிளம்பி விட்டான்.
“சரி நானும் கிளம்புறேன்” என இளங்கோ கிளம்ப,
ஆனந்தி “யோவ் நில்லு. இப்போ நீ இன்னாத்துக்கு அந்தாண்ட போய் வேலை பார்க்கப் போற? அந்தாண்ட போனா நல்லார்க்காது பார்த்துக்கோ. அப்புறம் நான் அங்க வந்தேன் சந்தி சிரிச்சுடும்” என்றாள் கோவமாக.
“நான் எங்கீயும் போகல ஆத்தா. இங்கனயே குந்திக்கீறேன். கல்யாணம் நல்லபடியா நடந்தா போதும்”
காலையில் வீட்டை விட்டுச் சென்றவன் எங்குச் சென்றான் என்றே தெரியவில்லை. இங்குக் கல்யாண வீட்டிலோ ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் முள்மேல் நிற்பது போல வாசலையே பார்த்துப் பார்த்து வேலை செய்து கொண்டிருந்தனர்.
மாலை ஆறு மணிக்கு ஆரம்பமானது நிச்சயதார்த்த விழா. அழகு பதுமை போல அலங்காரம் செய்து அமர்ந்திருந்தாள் மணப்பெண். அனைவரின் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் மணப்பெண்ணுக்கு மட்டும் மனதில் ஒரு ஆசுவாசம் வரத்தான் செய்தது.
புகைப்படம் எடுப்பவர்கள் வளைச்சு வளைச்சு புகைப்படம் எடுத்துத் தள்ளினர். அதுவும் உடனுக்குடன் சித்தார்த்தின் கைபேசிக்கு சென்றது ஆதவனின் உபயத்தால்.
கண்கள் ரெண்டும் நீரிலே மீனைப் போல வாழுதே..
கடவுளும் பெண் இதயமும் இருக்குதா? அட இல்லையா?
ஓஹோ..
நானும் இங்கே வலியிலே! நீயும் அங்கோ சிரிப்பிலே!
காற்றில் எங்கும் தேடினேன்.. பேசிப் போன வார்த்தையை!
இது நியாயமா? மனம் தாங்குமா? என் ஆசைகள் அது பாவமா..
வரிசையாகச் சிரித்தமுகமாக மணக்கோலத்தில் வரும் தன்னவளின் புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க ஒரு கட்டத்திற்கு மேல் அதைத் தூக்கிப்போட்டு உடைக்கும் வெறியே வந்தது.
“உன்னைக் கொன்றுவேண்டா ராஸ்கல். என்னைச் சீண்டாத..” என ஆதவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கைபேசியை அணைத்து விட்டுக் கடற்கரையில் அமர்ந்திருந்தான். குளிர்ந்த காற்றினால் கூட அவனைக் குளிர்விக்க முடியவில்லை.
குளிர்விக்க கூடியவள் மணமகளாக இவனை எதிர்நோக்கி காத்திருக்கிறாளென அறிவானா? தன்னவளைக் தனக்கு உரிமையாக்க அங்குச் செல்வானா? அவன் ஊருக்குள் வந்துவிட்டானெனத் தெரிந்ததிலிருந்து அவனை எதிர்பார்த்து காத்திருக்கும் அவளை இன்னுமும் காக்க விடுவானா? பொருந்திருந்து பார்ப்போம்.
Last edited: