எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 13

S.Theeba

Moderator
பாப்கார்னைக் கொறித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் யாரோ உட்கார்வது போல தோன்றவும் திரும்பிப் பார்த்தாள். ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருக்கவும் அவருக்கு அருகில் ஒரு இளம் பெண் நிற்கவும் கண்டாள். அவர்களைப் பார்த்ததும் சிநேகமாகப் புன்னகைத்தவள் திரும்பி தன் வேலையைத் தொடர்ந்தாள். அதுதான் பாப்கார்ன் கொறிக்கும் வேலை.

அந்த வயதான பெண்மணி தன் தொண்டையை சற்று செருமிவிட்டு
“இதோ பாரும்மா.. நீதானே நிஷாந்தினி.” என்றார்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இன்றுவரை இந்த அம்மாவை நான் கண்டதேயில்லை. ஆனால் அவரோ தன் பெயரைத் தெரிந்து வைத்துக் கேட்கின்றாரே' என்று யோசித்தவள்
“ஆமா பாட்டி, என் நேம்தான்.. நீங்க யாரென்று தெரியலையே?”
“என்னையோ இவளையோ யாரென்று தெரியாது. ஆனா எங்க வீட்டுப் பையன் கூட ஊர் சுத்த மட்டும் தெரியுது என்ன?”
என்று அவர் சொல்லவும் சொற்ப நொடி குழம்பியவள் உடனேயே புரிந்துகொண்டு,
“ஓ.. நீங்க மா… தனஞ்சயனின் பாட்டி தானே? வணக்கம் பாட்டி” என்றவள் உடனேயே மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள்.
அப்போது பக்கத்தில் நின்ற பெண்
“மரியாதையெல்லாம் தெரியுதா உனக்கு?” என்று நக்கலாகக் கேட்டாள்.
நிஷாந்தினி அவளது பேச்சை ஒதுக்கிவிட்டு பாட்டியின் முகத்தைப் பார்த்தாள். ஆனால் அவரது முகத்தில் தோன்றிய ஏதோ ஒன்று அவளை சங்கடப்படுத்தியது. அது வெறுப்பா? அருவருப்பா? என்று அவளால் இனங்காண முடியவில்லை. அவளை மேலிருந்து கீழ் வரை நோக்கிய பாட்டி,
“நீ என்ன செய்கிறாய்?”
“பிஎஸ்ஸி செகன்ட் இயர் படிக்கிறேன்”
“ஓஓ.. உங்க அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க”
“என் அப்பா, அம்மா இரண்டுபேரும் இல்லை. அக்கா மட்டும்தான்”
“ஓகோ ..அதுதான் அவர்கள் இருந்து நல்லது கெட்டது எதுவும் உனக்கு சொல்லித்தராததால்தான் இப்படி நடந்துக்கிறாயா?”
அவர் எதற்காக அப்படி சொல்கிறார் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.


“இங்க பாரும்மா. இது என் பேர்த்தி மிருணாளினி. இவளுக்கும் என் பேரனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சுது. அவன் திரும்பி வந்ததும் நாள் பார்த்து கல்யாணத்தை முடிக்கலாம் என்றிருக்கான்” என்று பட்டென்று சொன்னார்.
சில கணங்கள் தன் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. இருக்காது பொய். இவர்கள் வேண்டுமென்றே ஏதோ சொல்கின்றார்கள். ஆனால் ஏன்? என்று கேள்வியாய் பெரியவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னம்மா நான் சொன்னது புரியலையா? என் பேர்த்திக்கும் பேரனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சுது. கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவோம். எல்லாமே அவன் இவளை விரும்பி கேட்டபடியால்தான் நடந்தது. நீ ஏதோ அவன் கூட பழகிறதா கேள்விப்பட்டேன். அவனிடம் கேட்டால் அது சும்மா ஜாலிக்கு என்கிறான். எனக்கு மனம் கேட்கல. அதுதான் உன்னைப் பார்த்து சொல்ல வந்தேன்.
அதைக் கேட்டதும் வானமே இடிந்து தலையில் விழுந்தது போன்ற உணர்வு தோன்றியது. “இறைவா, இவர்கள் ஏதேதோ சொல்கின்றார்களே.. எனக்கு எனக்கு.. ” என்று தன் நெஞ்சைத் தொட்டு வாய்விட்டே புலம்பினாள்.
அவளது தவிப்பை கண்களில் மின்னும் சந்தோச பளபளப்புடன் பார்த்து ரசித்தாள் மிருணாளினி.
பாட்டிக்கோ இயல்பிலேயே இருந்த இரக்க குணம் எட்டிப்பார்க்க அவளது தவிப்பைக் கண்டு மனம் தாளாமல் அவளது தோளை ஆதரவாகத் தடவி “ஸ்ஸ்.. இது..” என்று என்னவோ சொல்லத் தலைப்பட்டார். அதனைக் கண்ணுற்ற மிருணாளினியோ பாட்டி ஏதாவது உளறிவிடுவார் என்று பயந்து “பாட்டி..” பல்லைக் கடித்தபடி உறுமினாள்.
உடனேயே தன்னைக் கட்டுப்படுத்திய பாட்டி எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.
“இங்க பார் நீ என்னதான் அழுதாலும் உண்மையை மாற்ற முடியாது” என்றாள் மிருணாளினி.
“இல்லை.. அவர் என்னை இப்படி ஏமாற்ற மாட்டார். அவர் என்னை உயிருக்குயிராய் காதலிக்கிறார்”
“காதல்..?” என்று ஏளனமாய் சிரித்தவள்,
“காதலா? யாருக்கு யார்மேல?”
“என் மா.. தனஞ்சயனுக்கு என்மேல. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிராய் காதலிக்கிறோம்”
“அவர் அப்படித்தான் சொல்லுவார். ஒரு பெண்ணை ஏமாற்றி தன் வழிக்கு கொண்டுவர ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் அதுதானே”
“இல்லை.. அவர் என்னைத்தான் லவ் பண்ணுறார், பண்ணுவார்” என் நிஷாந்தினி கூறவும் வாய்விட்டு பெரிய சத்தத்தில் சிரித்தாள் மிருணாளினி. அந்தப் பார்க்கில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர்.
இல்லை என் மாமா என்னை அப்படி ஏமாற்ற மாட்டார் என்று அவளது மனது உள்ளுக்குள் கதறியது. அவளது மனதின் வலியை கண்களில் கண்ட மிருணாளினியின் மனமோ ஆனந்தக் கூத்தாடியது. அவள் எண்ணி வந்த காரியம் எளிதில் நிறேவேறும் என்று நம்பிக்கை உண்டானது.

“ஓகே ஓகே… உனக்கு இதைக் காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை. பட் உனக்கு ஒரு தெளிவு வரட்டும் என்பதற்காக காட்டுறேன்.” என்றவள் தன் அலைபேசியில் இருந்த படங்கள் சிலவற்றைக் காட்டினாள். அவற்றில் தனஞ்சயனும் மிருணாளினியும் மாலைகளுடன் மேடையொன்றில் நிற்பதையும், மிருணாளினியை அணைத்தபடி தனஞ்சயன் நிற்பதுமாகப் பல படங்கள் காணப்பட்டன. இவை எல்லாம் தற்போதைய தொழில்நுட்பத்தில் சாதாரணமாகி விட்டன என்பதை பாவம் அந்தப் பேதையின் உள்ளம் மறந்துவிட்டது.
அவற்றில் ரெஸ்டாரன்டில் இருவருமாக எடுத்துக் கொண்ட படங்களும் காணப்பட்டன.
சற்று நேரம் அந்த சூழலே இருட்டிவிட்டது போல் தோன்றியது நிஷாந்தினிக்கு. நடப்பு எதுவுமே உறைக்காமல் எல்லாமே சூனியமாகிவிட்டது. உடல் குளிர்ந்து உணர்வற்றுப் போனது போல் மரத்தது. இமை தட்டவே மறந்துபோய் அப்படியே அசையாமல் இருந்தாள். அவளது துன்பம் மிருணாளினிக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
அவள்முன் சொடக்குப் போட்டவள் “ஏய்.. என்ன அப்படியே செத்துகித்துப் போயிட்டியா?” என்றாள்.
அவள் கேட்டதும் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் இமைகளைக் கடந்து கன்னங்களில் வழிந்தன.
மிகவும் சிரமப்பட்டு தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு பேச முயன்றாள்.
“நான்… அவர்..” அவளால் தொடர்ந்து பேச முடியாமல் தொண்டை அடைத்தது. கேவல் மட்டுமே வந்தது.

பாட்டியைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் பார்வையும் பரிதவிப்பும் பார்த்து பாட்டியின் மனமும் இரக்கம் கொண்டது. ஆனாலும் தன் பேர்த்தியின் ஆசை அந்த இரக்கத்தையும் துடைத்து எறிந்தது.
“ஏம்மா அவன்தான் அப்படி பேசினான் என்றால் நீ யோசிக்கிறதேயில்லையா?”
“அதெப்படி உங்களை நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டு என்கூடப் பழகுவார்.”
“ஐயோ ஐயோ நீ இன்னும் உலகம் தெரியாமல் இருக்காய்… இதெல்லாம் பணக்காரப் பசங்களுக்கு சகஜம்.. வீட்டில் கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி கேட்கும் என்பார்கள். என் அத்தான் மட்டும் விதிவிலக்கா என்ன? இவ்வளவு அழகான பொண்டாட்டி நான் இருக்கும் போது உன்னையும் வப்பாட்டியா வச்சிருக்க ஆசைப்பட்டிருக்கார்.. எனக்கு அதில் அவ்வளவு உடன்பாடு இல்லைதான். ஆனால் இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்கிறதுதானே.. அத்தானின் ஆசைக்காக அதைப் பொறுத்துப் போகத்தான் நினைத்தேன். பட் இந்தப் பாட்டிதான் பாவம் ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கை வீணாகப் போகக்கூடாது என்று நல்ல மனது பண்ணி உன்னிடம் பேச வேண்டும் என்றார். சரி போனாப் போகுதென்று கூட்டி வந்தேன். இல்லை உனக்கும் அப்படி வப்பாட்டியாக இருப்பதுதான் பிடிக்கும். உடம்பு சுகம் கிடைத்தால் மட்டும் போதும் என்றால் இனி உன் தலையெழுத்து” என்று தோளைக் குலுக்கினாள்.

நிஷாந்தினிக்கோ மனம் கனத்தது. அருவருப்பு, அழுகை எல்லாம் ஒன்றாக உருவானது.
‘இவ்வளவு கேவலமாகவும் ஒருத்தியால் பேசமுடியுமா? தனக்கு கணவனாக வரப் போகின்றவன் இன்னுமொருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பது பிரச்சினை இல்லை என்கிறாளே. என்ன மாதிரியான பெண் இவள்.
இந்தப் பாட்டியும் அவளது பேச்சிற்கு எந்தவித தடையும் சொல்லாமல் இருக்கிறார்களே. தன் பேர்த்தி பேசும் பேச்சின் தார்ப்பரியத்தை புரிந்து அவளிடம் சொல்ல வேண்டாமா என்று உள்ளூர வேதனையுடன் எண்ணினாள்.
இவர்கள் சொல்வது நிஜமாக இருக்கக்கூடுமா? இதோ கண்ணால் ஆதாரங்களைக் கண்டுவிட்டேன். அவரது பாட்டியின் வாய் வார்த்தையாகவும் கேட்டு விட்டேன். இதன் பின்னரும் நம்பாமல் எப்படி இருப்பது.
ஆனாலும் என்னவன் என்று நான் நம்பியவர் இவ்வளவு கேவலமாகவா என்னை எடை போட்டுவிட்டார். எப்படி முடிந்தது அவரால்? ஏழைகள் என்றால் இவர்களுக்கெல்லாம் அவ்வளவு இளக்காரமாய் போய்விட்டதா? சேச்சே.. நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கேன்' என்று மனதிற்குள் புலம்பினாள்.
பித்துப் பிடித்தவள் போல தன் பாட்டில் எழுந்து வெறித்த பார்வையோடு நடக்கத் தொடங்கினாள்.
அவள் எழுந்து செல்வதைக் கண்ட மிருணாளினியோ,
“ஏய், ஏய் நில்லு. என்ன உன் பாட்டில் எழுந்து போறாய்? ஓகோ வப்பாட்டியாக இருப்பதென்றே முடிவெடுத்து விட்டாயோ?” என்று நக்கலாகக் கேட்டாள். எங்கே அடித்தால் கோல் போடலாம் என்று சரியாகத் தெரிந்து கொண்டு அடித்தாள்.
“சீச்சி.. அவ்வளவு கேவலமான புத்தி எனக்கில்லை.” என்றாள் ஒரு நிமிர்வோடு.
“அப்போ அத்தானின் காலில் விழுந்து என்னை ஏற்றுக்கொள் என்று கதறப் போகின்றாயா?” என் கேட்கவும் வெறித்த பார்வையொன்றை அவளை நோக்கி வீசினாள்.
“இன்னமும் அடிமுட்டாளாக நான் இல்லை. கவலைப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கையை பங்குபோட நான் வரமாட்டேன்” என்றவள் கடகடவென்று அந்த பார்க்கை விட்டு வெளியேறினாள்.
அப்பாடா ஒரு தொல்லை விட்டது என்ற சந்தோசத்தோடு அங்கிருந்து புறப்பட்டாள் மிருணாளினி.

ஒரு சிறு பெண்ணின் மனதை நோகடித்தது மனதை வேதனையில் ஆழ்த்த கனத்த மனதோடு அவளுடன் கூட சென்றார் ராஜலட்சுமி பாட்டி.
 

rajisriram

New member
superb epi. but yen romba chinnatha podureenga. intha story i think weekly once than podureenga, but athaiye perusa poda parunga. romba nalla story but one week wait panna vendi irukku
 
Top