Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 12
காலை ஆறு மணிக்கு முகூர்த்தம். அவசர அவசரமாகத் திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் நேற்று இருந்த பதற்றம் இன்று கொஞ்சம் குறைந்திருந்தது. ஏனெனில் பிரச்சனை செய்வதாக இருந்தால் நேற்றே அவன் வந்து செய்திருக்கலாம்.
கூடவே நேற்று அன்பழகன் இளங்கோவிடம் பேசிவிட்டார்.
“என்ன மச்சான் சித்து வந்துட்டானாமே?”
“ஆமாம் அன்பு. படாத பாடு படுத்திபோட்டியான்”
“ஏன் கோபப்பட்டு சண்டை எதுவும் போட்டானா?”
“இல்ல. அவன் இன்னாமாது கோளாரு பண்ணீடுவானு அவன் புறத்தாலேயே உன் தங்கச்சியும் நானும் சுத்த, அவன் எங்கள சுத்த வைச்சிக்கினான். அப்புறம் கண்ணாலத்துல பேஜாரு பண்ண மாட்டேனு சொல்லிபோட்டு காத்தாலயே வெளிய போனவன் இராவுக்கு தான் வருவேனுட்டான்”
“சரி மச்சான் எதுனாலும் போன் பண்ணுங்க. எங்களுக்குத் தான் கொஞ்சம் பதட்டமாவே இருக்கு”
“ஒன்னியும் ஆகாது அன்பு. ஆத்தா துணை இருப்பா. நல்ல படியா கண்ணாலம் நடக்கும்”
“நீங்க வரலியா மச்சான்?”
“உன் தங்கச்சி சாமியாடுறா. நீங்க நல்லபடியா கண்ணாலத்தை முடிங்க. அப்புறம் பாக்கலாம்”
“சரிங்க மச்சான்” என நேற்று காலையிலேயே பேசியிருந்தார். சித்துவும் நேற்று முழுக்க வராமலிருக்க, அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தனர்.
ஆனால் மணப்பெண்ணுக்கு தான் மீண்டும் கலக்கம். அவன் திரும்பி வந்துவிட்டானெனத் தெரிந்ததிலிருந்து இப்போ வருவான் அப்போ வருவானென வாசலையே பார்த்துப் பார்த்து ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம். அவன் வந்தபாடில்லை.
இனி இருப்பதோ சொற்ப நேரம் அதில் அவனும் வரப்போவதில்லை, எந்த அதிசயமும் நடந்து தன் சித்தத்துவை அவள் அடைய போவதுமில்லை. நடக்க போகும் திருமணத்திற்காக மீண்டும் தன்னை தயார்படுத்த ஆரம்பித்தாள். முதலில் தயாரான நிலையில் இருந்தவள் மனதை நேற்றைய சித்தார்த்தின் வருகை கொஞ்சம் கலைத்திருந்தது.
இருக்காதா பின்ன. பிறந்ததிலிருந்து அவனிடமே வளர்ந்து, அவனோடவே இருந்து, அவன்மேல் கொள்ளை பிரியம் வைத்திருந்தவளுக்கு அவன்மேல் காதல் வந்தபோது தவறாக நினைத்துவிடுவானோ எனத் தனக்குள் மறைத்தவளுக்கு, அவனும் தன்னை காதலித்திருக்கிறான், தன்னை அவனுக்குக் தரும்படி தன் குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறானெனத் தெரிந்தபோது உலகையே வென்ற சந்தோஷம் வந்திருக்க வேண்டும் ஆனால் அவள் அதைத் தெரிந்து கொண்ட சமயமானது மிகவும் மோசமானது.
அவள் காதலுக்கு உயிர் இருக்கிறது எனத் தெரிந்தபோது, அதை வேரோடு பிடிங்கி எறிய வேண்டிய கட்டாயம். தன் காதலைக் காப்பாற்றும் வழி இல்லாமல் நிற்கதியாய் நிற்க வேண்டிய சூழல். அவளுக்காகவும், அவள் காதலுக்காகவும் அவள் தகப்பனிடம் ஒற்றை வார்த்தைகூட கேட்கமுடியாத நிலை.
கூடவே இருந்த நண்பனை வருங்கால கணவன் எனக் கைக்காட்ட, எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாத நிர்பந்தம். பொத்தி பொத்தி துளிர்விட்டு வளர்த்த காதலை வேரோடு பிடிங்கி எரிய வேண்டிய கட்டாயம். தயார் படுத்தினாள் தன் மனதை தன் குடும்பத்திற்காக.
இன்னும் சில நிமிடங்களே எல்லாம் முடிந்துவிடும். குடும்ப ஆட்கள் அத்தனை பேரின் மன அமைதிக்காகத் தன்னைத் தானே மாற்றிக்கொண்டு, மனதிலில் உள்ள அத்தனையையும் இன்றுடன் விட்டுட்டு ஆதவனோடு வாழப் போகும் வாழ்க்கைக்கு மனதை ஆயத்தபடுத்தினாள்.
வெளியே திருமணத்திற்கான சடங்குகளும் ஆரம்பம் ஆகியது. அப்போது தான் மண்டபத்திற்குள் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக, அருகில் இருப்பவர்களைக் குள்ளமாக்கி மிடுக்காகப் பிரவேசித்தான் சித்தார்த். மணமேடையில் நின்ற குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் மீண்டும் படபடப்பு. அஸ்வந்த் தான் சித்தார்த்தை நோக்கி ஓடிவந்தான்.
“சித்து! சித்து! எதுவும் பிரச்சனை பண்ணிடாத ப்ளீஸ். கல்யாணம் முடியவும் பேசிக்கலாம்” எனப் பதட்டமாகக் கூற,
“வெயிட் வெயிட் நான் ஏன் பிரச்சனை பண்ண போறேன்? எங்க வீட்டுக்குக் கல்யாண இன்விடேஷன் வந்திருந்தது, எங்க அப்பாவால வர முடியல, அதான் என்னை அட்டன் பண்ணிட்டு வான்னு சொன்னார், அதான் வந்தேன். நான் ஏன் உங்க வீட்டுல பிரச்சனை பண்ணனும்? நீங்க யார் எனக்கு? நமக்குள்ள சண்டையா? சச்சரவா?” எனப் பேசிக்கொண்டே நடந்து வந்து முதல் வரிசையில் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
அஸ்வந்த் தான் ஒன்னும் புரியாமல் முழிக்க, பின்னாலயே பதட்டமாக ஓடி வந்தார் இளங்கோ.
அஸ்வந்த “என்ன மாமா?” என அவரிடம் கேட்க,
“தெரியலயே காலையிலயே இப்படி கிளம்பி வந்திருக்கான். எதுவும் கன்பீஸ் பண்ணிடுவானு பேஜாராகி நானும் ஓடிவந்தே”
“கோபமா இருக்கான். முன்ன பின்னத் தெரியாதவங்க கிட்ட பேசுற மாதிரி பேசுறான்”
“சரி அமைதியா தான இருக்கான் பார்ப்போம். நீ மேடைக்குப் போ. நான் அவன் பக்கத்துலயே குந்திக்கீறேன்” எனக் கூறவும் மணமேடைக்கு சென்றான் அஸ்வந்த்.
மாப்பிள்ளையை மேடைக்கு அழைக்க, மணக்கோலத்தில் அம்சமாக வந்தான் ஆதவன். அவனுக்குக் கொடுத்த அறை வாசலிருந்து மேடைக்கு வரும் இடைப்பட்ட நேரத்திலேயே சித்தார்த் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டவன், சித்தார்த்தை நோக்கி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்து, மாலையைச் சரிசெய்வது போலச் சைகை செய்து, அவனைச் சீண்டியபடியே வந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து மணமேடையில் நின்றான். அவர்களது முறைப்படி அந்தச் சமுதாயத்தின் பெரியவர் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் நின்றவாறே மணமகள் கழுத்தில் தாலி கட்டுவான்.
சித்தார்த் மனதில் எள்ளும் கொள்ளும் தான் வெடித்தது. ‘தன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் சேர்ந்து, தான் நிற்கக்கூடிய இடத்தில் வேறொருனை நிற்க வைத்துவிட்டனரே’ என மனதில் அத்தனை பேருக்கும் அர்ச்சனை தான். ஆனால் வெளியில் பார்க்கும்போது அவன் சாந்தமாக, திருமணத்திற்கு வந்த விருந்தாளிபோல அமைதியாக அமர்ந்திருந்தான்.
மணமகளை மேடைக்கு அழைக்க, அவளும் குனிந்த தலை நிமிராமல் வந்து பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஆதவன் அருகில் நின்றாள். அவளுக்கு இன்னமும் சித்தார்த் இங்கு வந்த விஷயம் தெரியாது. அவளும் நிமிர்ந்து பார்க்காததால் எதிரிலுள்ளவன் அவள் கண்ணிலேயே படவில்லை.
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே..
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே..
திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன்..
நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன்..
கனவே கனவே கலைவதேனோ! கணங்கள் ரணமாய் கரைவதேனோ! நினைவே நினைவே அரைவதேனோ! எனது உலகம் உடைவதேனோ!
மணக்கோலத்தில் வந்து தன்னை விட்டுவிட்டு அடுத்தவன் அருகில் நிற்கும் தன்னவளை பார்த்துப் பொங்கி வந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாலும் மனதில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
எல்லா சடங்கும் முறைப்படி நடந்தது. அங்கிருக்கும் பெரியவர் தாலி இருக்கும் தாம்பூல தட்டில் கையை வைக்கும்போது இருக்கையிலிருந்து எழுந்தான் சித்தார்த்.
இளங்கோ “தம்பி சித்தார்த்து.. எங்கயா போற? உட்காரு..”
“அப்பா தாலி கட்ட போறாங்கப்பா. வாங்க அர்ச்சனை போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வரலாம்” எனக் கையோடு அவரை இழுத்துக்கொண்டே மணமேடைக்கு ஏறினான்.
அனைவரும் பதட்டத்துடனே நின்றிருந்தனர். அன்பழகன் முகத்தைக் கூட ஏறெடுத்து கூடப் பார்க்கவில்லை சித்தார்த். ஏன் சொல்லப்போனால் யார் முகத்தையுமே அவன் பார்க்கவில்லை. அஸ்வந்த் தான் அவனருகில் வந்து,
“டேய் மச்சான்” எனக் கையைப் பிடிக்க, அவன் கையை உதறிவிட்டவன் “அப்படியா!” எனக் கேட்டவாறே முன்னேறிச் சென்றான். இதுவரை நடக்கும் எதையும் காணாமல் இருந்த மதுவுக்கு மணமேடையிலுள்ளவர்கள் முனுமுனுப்பில் திரும்பிப் பார்க்க ஆதவன் அருகில் நின்றிருந்தான் சித்தார்த்.
அவளுக்கு ஆதியும் புரியவில்லை, அந்தமும் புரியவில்லை. தான் காண்பது நிஜம்தானா என்பது கூடத் தெரியவில்லை. நம் மனதில் இப்படி நடந்துவிடாதா என ஏங்கிய ஏக்கத்தின் விளைவால் ஏற்பட்ட பிரம்மை என்றே நினைத்தாள்.
கீழே திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்குக்கூட வித்தியாசமாகத் தெரியவில்லை. ஏனெனில் மணமேடையில் குடும்ப உறுப்பினர்கள் இருப்பது சகஜம் தானே. அதனால் அனைவரும் தாலி கட்டும்போது அர்ச்சனை தூவ ரெடியாகக் காத்திருந்தனர்.
அங்கிருந்த பெரியவரோ தாலியை எடுத்து ஆதவன் கையில் கொடுத்தார். கையில் தாலியுடன் நிற்பவனின் அருகில் வந்து நின்றான் சித்தார்த். மணமேடையில் எல்லாரும் ஒருவரை ஒருவர் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தனரே ஒழிய யாரும் எதுவும் பேசவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது போல் தான் இருந்தது.
“தாலிய கட்டுப்பா” எனக்கூற, யாரும் எதிர்பாராத வண்ணம் ஆதவனே தாலியை சித்தார்த்திடம் கொடுத்து ஒதுங்கி நின்றான். அதைக் கையில் வாங்கியவன் அனைவரின் அதிர்ந்த முகத்தையும் ஒருமுறை திருப்தியாகப் பார்த்துவிட்டுப் புன்னகை முகமாக மதுவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் சித்தார்த்.
மதுவுக்கோ மனதின் சந்தோஷம் ஆனந்த கண்ணீராக மாறிக் கண்களில் பிரவேசிக்க, ஆனந்த கண்ணீருடன் “சித்தத்து” எனக்கூறி அவன் கைகளைப் பிடிக்க,
“கொன்றுவேன் இனி அப்படி சொன்னீனா. அந்தப் பேர சொல்ல இனி உனக்கு உரிமையே இல்ல” என அவள் கைகளை உதறிவிட்டு, அனைவரும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரும் முன் மணமேடையிலிருந்து இறங்கி விருவிருவென வாயிலை நோக்கி நடந்தான். இளங்கோ தான் அவன் பின்னாலயே சென்றார்.
“சித்தார்த்து நில்லுயா நில்லுயா” என அவர் அவன் பின்னாலே செல்ல, மற்றவர்களும் அவர் பின்னால் சென்றனர். மேடையிலிருந்த பூபாலன் தான் ஆதவனை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தார். திருமணம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் யார் மனதிலும் நிம்மதியில்லை.
தாலி கட்டிய கையோடு அவளை உதறித் தள்ளிவிட்டுச் செல்லும் அவனை எப்படி சமாளிப்பது என அனைவரும் அவன் பின்னால் செல்ல, இங்கு ஒருத்தியோ மனதில் குத்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.
அவளவன் கையால் தாலி வாங்கியாகிவிட்டது. இனி என்ன நடந்தால் என்ன? அவள் விரும்பியவனோடு அவள் வாழ்க்கை. அதில் என்ன ஏற்றத்தாழ்வு, இன்பதுன்பம் எது வந்தாலும் சமாளிக்கும் மனதைரியம் வந்துவிட்டது. பல நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் உண்மையான சிரிப்பு.
மது “டேய் ஆது! தங்க்ஸ் டா. தங்க்ஸ் டா. அய்யோ! இப்ப நான் என்ன பண்ணுவேன்.. சந்தோஷமா இருக்கே.. பறக்குற மாதிரி இருக்கே..” என இவள் ஆதவன் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆனந்த கண்ணீருடன் கூறிக் கொண்டிருந்தாள்.
“அட லூசே! நானே அடி வாங்கிட்டு நிக்கிறேன் உனக்குச் சந்தோஷமா இருக்கா? அடியேய் உன் சித்தத்து கோச்சுட்டு போறார்டீ”
“எங்க போகப் போறாரு.. அதான் தாலி கட்டியாச்சே.. இது போதும் எனக்கு இது போதுமே.. வேறென்ன வேணும் இது போதுமே..” எனப் பாட்டு பாடியபடி நிற்க, அங்கே வந்த அகிலா, மதுவின் தலையில் நறுக்கெனக் கொட்டினாள்.
“மூணு பேரும் சேர்ந்து நாடகமா போடுறீங்க? இப்போ எவ்ளோ பிரச்சனை தெரியுமா? உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தனமா போச்சா?”
“அய்யோ அண்ணீ இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. எனக்கே தெரியாது இப்படி நடக்கும்னு. ஆனா நல்லா இருக்குல” என மனதார சிரித்தாள்.
“இருக்கும்டி இருக்கும். அங்க உன் புருஷன் கோச்சுக்கிட்டு போறாரு. உன் அண்ணன், அப்பாம்மா எல்லாம் அவர் பின்னாடி ஓடிட்டு இருக்காங்க. இங்க நீங்க இரண்டு பேரும் கூத்தடிச்சுட்டு இருக்கீங்களா? அத்தனை பேரும் உங்க கூத்த தான் பார்க்குறாங்க. நீ முதல்ல ரூம்க்கு போ” என மதுவை அனுப்பியவள் “உனக்கு இருக்குடா அப்புறமா” எனத் தம்பியை மிரட்டி விட்டுச் சென்றாள்.
அவனோ “இது வேற கசகசன்னு” எனக் கழுத்தில் உள்ள மாலையைக் கழட்டிவிட்டு வாசலில் நடப்பதை வேடிக்கை பார்க்கச் சென்றான். இவ்வளவு கூத்தும் இங்க நடக்க, சாப்பிடும் அறையில் முதல் பந்தியை ஆரம்பித்துவிட்டனர் நம்மக்கள். சித்தார்த்தோ யார் அழைத்தும் கேட்காது தன் வீடு நோக்கி விருவிருவெனச் சென்றுவிட்டான்.
ஆனந்தியோ காலையில் பட்டு வேட்டி அணிந்து இவன் கல்யாணத்து செல்ல, வீட்டில் ஒரு இரணகலத்தையே உண்டாக்கி விட்டவர், இளங்கோவை அனுப்பியதே அவனை இழுத்துக்கொண்டு வரத்தான்.
எங்கே மகன் அண்ணன் மகளை அதுவும் சீக்குகாரியை கல்யாணம் செய்து மாலையும், கழுத்துமாக வந்துவிடுவானோ என்ற பயம் தான் அவருக்கு. கல்யாணத்துக்கு போன புருஷனையும், புள்ளையையும் காணாமல் இங்குப் புலம்பிக் கொண்டிருக்க, வாயிலில் மகன் மட்டும் வந்து நிற்கவும் தான் அவருக்கு உயிரே வந்தது. பாவம் அதற்கு ஆயுள் குறைவு எனத் தெரியவில்லை.
“நீ இன்னாத்துக்கு சித்தார்த்து அந்தாண்ட எல்லாம் போற? அம்மாக்கு டர்ராயிடுச்சு தெரியுமா? வா.. வா.. வந்து உட்காரு” என அவனை அழைக்க, அவன் மனதிலோ ‘எது நடக்கக்கூடாதுனு நீ நினைச்சயோ அத நடத்திக்காட்டிட்டேன் நான். இனி என்ன பண்ண போறனு பார்க்கிறேன்’
என நினைத்து அவரை ஒரு முறை நன்றாகப் பார்த்து, நக்கல் சிரிப்பு ஒன்றை சிந்திவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான். சிந்துவின் அறையாக இதுவரை இருந்த அறையைச் சில நாட்களாக அவனறையாக மாற்றியிருந்தான்.
மண்டபத்திலிந்து அவன் பின்னாடியே லொங்கு லொங்குனு ஓடி வந்த இளங்கோ அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்.
“எங்கடி அவன?”
“இன்னாயா அவன இஸ்துக்குனு வானு உன்னைய அனுப்பினா.. அவன அனுப்பிவிட்டுட்டு நீ அந்தாண்ட உறவு கொண்டாடிட்டு வந்தீயோ?” எனக் கேட்க,
“அவன் இன்னா செஞ்சானு தெரியுமா?”
“இன்னா செஞ்சிருப்பான்? கண்ணாலத்த பார்த்துட்டு கைய நினைக்காம வந்துட்டான் அதான? சோத்துக்கு இல்லாம நீ போய் அங்க கைய நனை.. எம்புள்ள என்னை மாதிரியே ரோசக்காரன்”
“ஆமாம் ரோசக்காரன்ந்தேன். அதான் அந்தப் புள்ளை கழுத்துல தாலிய கட்டிபோட்டு இந்தாண்ட வந்து குந்திக்கினான்”
“யாத்தீ! இன்னாயா சொல்ற? தாலி கட்டிட்டானா?”
“ஆமா”
“தெரியும்யா இப்படி என்னமானது நடக்கும்னு அதான் நானும் வரேனு மல்லுக்கட்டினேன். நல்லா ஏமாத்தீட்டிலயா நீ.. நம்ம வச்சி ஏமாத்திட்டல” என அவர் சட்டையை பிடித்துக்கத்த,
“நான் இன்னாடி பண்ணேன்? உன் புள்ள பண்ணதுக்கு என்னாண்ட சட்டைக்கட்டினா?” என தள்ளிவிட, தடுமாறி தரையில் அமர்ந்து,
“படுபாவி பய என் நெஞ்சில தீயள்ளி போட்டுட்டானே.. அந்தச் சிறுக்கி என் வூட்டுக்கு வரக்கூடாதுனு நான் எம்புட்டு பாடுபட்டேன்? அம்புட்டையும் ஒன்னுமில்லாம ஆக்கிட்டானே.. அவன் வாழ்க்கைய அவனே நாசமாக்கிக்கினானே” எனக் கோபத்தில் தலையிலும், மாரிலும் அடித்துக்கொண்டு கத்த, வீட்டு வாயிலில் அன்பழகன் மொத்த குடும்பத்துடன் மகளையும் அழைத்துக் கொண்டு வந்து நின்றார்.
Last edited: