எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 9

S.Theeba

Moderator
வழமைபோல காலையில் எழுந்ததும் தன் உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களில் ஒற்றிவிட்டு 'சிவாயநம' சொல்லித் தன் கண்களைத் திறந்தாள் அபிராமி. எழுந்து நின்று சோம்பல் முறித்தவள் கண்களுக்கு அங்கே மாட்டியிருந்த பெரிய கடிகாரம் கண்ணில் பட்டது. எவ்வளவு அழகான கடிகாரம். இதை அப்பா எப்போது வாங்கி மாட்டினாரோ தெரியலையே என்று யோசித்தபடி அதில் நேரத்தைப் பார்த்தவள் பதறிப் போனாள். “அச்சோ ஏழு மணி ஆயிடுச்சா? இந்த அம்மா கூட என்னை எழுப்பலையே?” என்று முணுமுணுத்தபடி தலைமுடியை அள்ளி முடியப் போனாள். அப்போது இரவில் வைத்திருந்த பூச்சரம் தட்டுப்பட யோசனை செய்தவள் அறையையும் சுற்றும்முற்றும் பார்த்தாள். சிறிதுநேரம் அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை. இது யாருடைய அறை, இங்கே நான் ஏன் வந்தேன் என்று மலங்க விழித்தபடி யோசித்தாள்.

நிஜம் புரிந்தபோதுதான் அந்த அறையில் இன்னுமொரு ஜூவன் இருந்ததே என்று நினைவு வந்தது. அவன் படுத்திருந்த சோஃபாவைத் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவன் இல்லை எனவும் அறை முழுவதும் கண்களால் அலசினாள். எங்கும் அவனைக் காணவில்லை. அவன் இரவு உபயோகித்த தலையணையுடன் போர்வையும் கட்டிலின் ஓரத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

அறையின் முன்பகுதிக்கு வந்தவள் அங்கிருந்த பால்கனிக்கு செல்லும் கண்ணாடிக் கதவைத் திறந்தாள். பால்கனிக்குச் சென்று அங்கிருந்தே வீட்டின் தோட்டத்தைப் பார்த்தாள். பார்த்ததும் அதிலேயே லயித்துப் போய் நின்றாள்.

வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பெரிய பதிலுக்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் தலையசைத்துக் கொண்டிருந்தன. பதிலுக்கு உட்புறமும் சிறிய தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. தோட்டத்தின் நடுவே சிறிய குளம் போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் செயற்கைத் தாமரைப் பூக்களும் இலைகளும் பரவியிருந்தன. சற்றுத் தள்ளி ஆளுயரத்திற்கு பெரிய பந்தல் ஒன்று போடப்பட்டு மல்லிகைக் கொடி படரவிடப்பட்டிருந்தது. தோட்டத்தில் அங்காங்கே பல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளும் செம்பருத்தி, செவ்வந்திச் செடிகளும் வைக்கப்பட்டு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் தேன் குடிக்கவென பல வண்ண வண்ணத்துப்பூச்சிகள் தோட்டத்தைச் சுற்றின. சிறு பறவைகளும் அங்கங்கே அமர்ந்திருந்து இசைத்துக் கொண்டிருந்தன.

அவை தவிர்த்து வெற்றிலை, கற்பூரவள்ளி, கற்றாழை என்று மூலிகைச் செடிகளும் அங்கே காணப்பட்டன.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த அபிராமிக்கு மனம் லேசானதைப் போல் தோன்றியது. ஏனெனில் அவளுக்கு மரங்கள் மீது தனிப் பிரியம் உண்டு. அதிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகளைப் பார்த்தால் அப்படியே நின்று விடுவாள். சிறிது நேரம் தன்னை மறந்து அந்தத் தோட்டத்தை ரசித்தாள். அப்போது பின்புறத்திலிருந்த சிறிய கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் தமிழினியன். தென்னந் தோட்டத்தினூடே ஜாகிங் செய்துவிட்டு வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்டதும் நேரத்தை உணர்ந்து அவ்விடத்தை விட்டு அகன்றவள் குளியலறைக்குள் புகுந்தாள். குளித்துவிட்டு பச்சை நிறத்தில் மஞ்சளும் சிவப்புமாக சிறிய பூக்கள் அலங்கரித்திருந்த நீளமான சுடிதாரை அணிந்து கொண்டாள். காதிலும் கழுத்திலும் தன்னிடமிருந்த சிறிய நகைகளை அணிந்தால். முகத்திற்கு ஒப்பனை எதுவுமின்றி குங்குமத்தில் பொட்டிட்டாள். நெற்றி வகிட்டில் சிறிதளவு குங்குமத்தை வைக்கும்போது, இதனை அவர் வைத்து விட்டால் எவ்வளவு பாந்தமாக இருக்கும் என்ற எண்ணம் ஓடியது. உடனேயே தன் தலையில் தானே குட்டிக்கொண்டாள். ஒருத்திக்கு புருஷனோட குடும்பம் நடத்தவே வழியில்லையாம். இதில் பொட்டு வேறு அவர் வைத்துவிட வேண்டுமாம். ஆசைப் படலாம். பேராசைப்படலாமா என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

அந்நேரத்தில் உள்ளே வந்தவன் அவள் பொட்டிட்டு கொண்டிருப்பதைக் பார்த்துவிட்டு எதுவுமே பேசாமல் குளியலறைக்குள் செல்ல முயன்றான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், எச்சிலை முழுங்கி விட்டு “குட்மோர்னிங்” என்றாள். ஒரு சில விநாடிகள் அசைவற்று அப்படியே நின்றவன் திரும்பிப் பார்க்காமல் “குட்மோர்னிங்” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.
“சரியான முசுடு” என்று முணுமுணுத்தபடி தயாரானாள் . அறையை விட்டு வெளியே வந்தபோது சாவித்திரி எதிர்ப்பட்டு "குட்மார்னிங் அண்ணி.." என்றாள். பதிலுக்கு குட்மார்னிங் சொன்னவள், சாவித்திரி யுடன் சிறிது நேரம் அவ்விடத்திலேயே நின்று கலகலவென்று பேசினாள். “ஓகே ஓகே அப்புறமாய் நிறைய பேசுவோம்” என்றுவிட்டு பூஜையறைக்குச் சென்றாள். விளக்கேற்றிவிட்டு கண்மூடி இறைவனைக் கும்பிட்டாள்.

சமையலறை சென்றவேளை காலை சமையலையே முடித்திருந்தார் நிலா. இவளுக்குத்தான் சங்கடமாகி விட்டது.
“சாரி அத்தை கொஞ்சம் தூங்கிட்டேன். சாரி”
“என்னம்மா இதுக்கெல்லாம் சாரி கேட்கிறாய். விடும்மா.. இது உன் வீடு. உன் இஷ்டம் போல இருந்துக்கலாம்.” என்றார்.
“புதுசா கல்யாணமானவங்க. இவ்வளவு நேரத்துக்கு வந்ததே அதிசயம்தானே நிலாம்மா” என்று சிரித்தபடி கூறினார் ரேவதியம்மா.
‘ம்கும்.. எனக்கு அது மட்டும் தான் குறைச்சல்' என்று மனதிற்குள் புலம்பியவள், வெளியில் வெட்கப்படுவது போல் சமாளித்தாள்.

"நான் ஏதாவது வேலை செய்து தரவா அத்தை" என்று கேட்டாள்.
"முதல்ல இந்த டீயைக் குடியம்மா.." என்று கப்பில் டீயை ஊற்றிக் கொடுத்தவர் "உனக்கு சமைக்கத் தெரியுமா அபிராமி"என்று கேட்டார். "அவ்வளவு நல்லாத் தெரியாது அத்தை. கல்யாணம் என்றதும் அம்மா கொஞ்சம் கொஞ்சம் சொல்லித் தந்தாங்க. அவ்வளவு தான்... உங்ககிட்ட இருந்து பழகிக்கிறனே" என்றவள்

சிறிது நேரம் கழித்து வரவேற்பறையிலிருந்து தமிழினியனதும் பாலாவினதும் பேச்சுக் குரல் கேட்டது. அதைக் கேட்டதும் நிலா இருவருக்கும் டீயை ஊற்றி அபிராமியிடம் கொடுத்து விட்டார்.

அபிராமி அங்கே சென்ற போது பாலா "என்னப்பா நீ... கல்யாணம் ஆகி இரண்டு நாள் கூட ஆகல. நினைவிருக்கா உனக்கு... இன்றே ஸ்டோருக்கு போகணும் என்று சொல்கிறாய். நானே இன்று ஹொஸ்பிடல் போகல. சாவித்திரி கூட மூன்று நாளைக்கு காலேஜூக்கு லீவ் போட்டிருக்கா... நீ என்னடா என்றால் இன்றே ஸ்டோருக்கு போயாகணும் என்கிறாய்" என்று கடிந்து கொண்டிருந்தார்

"அப்பா.., இன்று டீலர்ஸோட மீட்டிங் இருக்கு. அதை அவாய்ட் பண்ணவே முடியாது. அத்தோடு நாளை ஸலறி டேற். இன்றைக்கு போய் கணக்கு பார்க்கிற வேர்க் கொஞ்சம் இருக்கு. அப்புறம் இன்றைக்கு மதியம் கொஞ்சம் திங்ஸ் பெங்களூரிலிருந்து வந்திடும். செக் பண்ணியாகணும். இப்படி நிறைய வேர்க் இருக்குப்பா. சோ, நான் கட்டாயம் போயாகணும்" என்றான் தமிழினியன். "என்னவோ பண்ணிக்க. பட் இன்றைக்கு ஈவினிங் என் பிரண்ட் கேசவன் நம்ம வீட்டுக்கு வாரான். அவனுக்கு ஒரு இம்போர்ட்டன்ட் சேர்ஜரி இருந்ததால் மரேஜூக்கு வர முடியல. சோ, இன்று பமிலியோட நம்ம வீட்டுக்கு வர்றேன் என்று போன் பண்ணியிருந்தான். நீ கட்டாயம் வந்திடு" என்று கூறினார். அவன் அதற்குச் சம்மதம் சொன்னான்.

இதற்கு மேலும் காத்திருந்தால் டீ ஆறிவிடும் என்பதை உணர்ந்த அபிராமி அவர்கள் அருகில் சென்று பரிமாறினாள். தமிழினியனிடம் கொடுக்கும்போது அவளைப் பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு "நீ டீ குடிச்சியா அபி " என்று அக்கறையாகக் கேட்டான். அது போதாது என்று அவளிடமிருந்து டீ கப்பை வாங்கும்போது அவளது கைகளை வேண்டுமென்றே பற்றிப் பிடித்து வாங்கியது போலத்தான் தோன்றியது. இந்தத் தொடுகையும் அவனது அக்கறையான பேச்சும் அவளைத் திக்குமுக்காட வைத்தது. தன் கையில் தோன்றிய குறுகுறுப்பு உடல் முழுவதும் பரவுவது போல் உணர்ந்தாள்.
“ஏம்மா நீயும் உட்காரேன்” என்றார் பாலா.
“இல்ல மாமா பரவாயில்லை. நான் நிற்கிறேன்”
“இங்க பாரம்மா உன் புருஷனை.. இன்றைக்கே ஸ்டோருக்கு போகணும்கிறான். நீயாவது சொல்லக் கூடாதா?”
“என் பொண்டாட்டிக்கு என் அர்ஜன்ட் தெரியும்பா..” என்றான் தமிழினியன்.
'என்னது பொண்டாட்டியா? இவர் வாயால் சொல்லுறாரா?' என்று விழிவிரித்துப் பார்த்தாள்.
எழுந்து அவளருகே வந்தவன்,
“ஓகே அபி, டைம் ஆச்சு.. லஞ்சுக்கு வரமாட்டேன். பாய்” என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான்.

'என்னடா இவர் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாரார். முடியல சாமி' என்று நினைத்தவள் தட்டை அங்கேயே வைத்துவிட்டு, சாவி கொடுத்த பொம்மைபோல நடந்து தன் அறைக்குச் சென்றாள்.
 

Nagajothi

Member
அருமை ???, இனியன் அபியிடம் பாய் சொல்லி கன்னத்தை தட்டி விட்டு சென்றதை நினைத்து திக்கு ப்ரமை பிடித்தது போல் அறைக்கு செல்கிறாள் அவன் குடும்பத்தார்க்காக வெளியில் நடிக்கிறான் என்று இவளுக்கு தெரியாமல் போய் விட்டதோ முதல் நாளில் அறையில் சொன்னது மறந்து விட்டாள் பாவம் அபி ?????
 

S.Theeba

Moderator
அவளுக்கு கணவன் மேல் அன்பிருக்கே அதனால் அந்தத் தொடுகை அவளை தடுமாற வைக்கும்
 
Top