Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 13
தன் வீட்டு வாயிலில் வந்து நின்ற ஆட்களைப் பார்த்த ஆனந்திக்கோ ஆத்திரம் தலைக்கேற,
“ஆரும் என் வூட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது. ஒட்டும்மில்ல ஒரவுமில்லனு அத்துவிட்டுக்கின்னேனே, அப்புறம் என்னாத்தீக்கு என் முறைவாசலுக்கு வெட்கமில்லாம வந்து நிக்கிறீங்க?”
இளங்கோ “இந்தா பாருடீ வாய மூடல இப்ப.. நான் உன் வாய உடச்சேபுடுவேன். பொம்பளயா நீ பஜாரியாட்ட நின்னு கத்தீனுக்கீற? அவங்களுக்கு ஒன்னியும் உன்கிட்ட வந்து நிக்கனும்னு அவசியமில்ல, ஆனா உன் புள்ள பண்ணிவச்ச வேலைக்குத் தான் இந்தாண்ட வந்து நிக்கிறாங்க”
“அவனே அம்போனு வுட்டுபோட்டு வந்துட்டியானே.. பின்ன இன்னாத்துக்கு இப்படி வந்து நிக்கனும்றேன்? போகச் சொல்லுயா அந்தாண்ட. வூட்டுக்குள்ள ஆரும் கால வச்சா மரியாதை கெட்டுப்போவும்” எனப் பஜாரியாட்ட கத்தினார். அம்மாவும், புள்ளையும் செய்கிற செயலில் என்ன செய்வதெனத் தெரியாமல் முழித்த இளங்கோ,
“அன்பு! நிலைமை சரியில்லாமகீது. நீங்க வீட்டுக்குப் போங்க. அப்புறம் பொறுமையா பேசி மகனை விட்டு மருமகள கூட்டிட்டு வந்துருக்கீறேன்” எனக்கூறவும், என்ன செய்வது எனத் தவித்தவர்களும் வேறுவழியின்றி வீடு திரும்ப எண்ணும்போது,
“அப்பா! நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நான் இங்கயே இருந்துக்கிறேன்” என்றாள் மது.
அன்பு “மதும்மா! எப்படிடா இப்படியே விட்டுட்டு போகச் சொல்ற? அது சரி வராதும்மா..”
“சித்தத்து ஏற்கனவே கோபமா இருக்காங்க. ஆனாலும் என்னை விட்டுக்கொடுக்க முடியாம தான் இப்படி பண்ணினாங்க. இப்பவும் நான் அங்க வந்தா சரியா இருக்காதுப்பா. நான் இங்க இருக்குறது தான் நல்லதுப்பா”
“இல்ல அப்புறம் பொறுமையா பேசிட்டு வரலாம்மா” என அனைவரும் எவ்வளவோ சொல்ல, மது மட்டும் அசைந்தாளில்லை.
“நான் பார்த்துக்கிறேன். நீங்கக் கிளம்புங்க. அதான் மாமா, சித்தத்து எல்லாம் இருக்காங்களே! நான் பார்த்துகிறேன்ப்பா” என மது கூறவும் அனைவரும், வருத்தத்துடனும், கண்ணீருடனும் கிளம்பினர்.
அனைவரையும் அனுப்பிவிட்டு வாசலுக்கு வர, மீண்டும் கத்தினார் ஆனந்தி.
“நில்லுடி! என் வூட்டுக்குள்ள யாரும் வரக் கூடாது”
“இந்த வீட்டை நீங்க உழைச்சு, சொந்தமா வாங்கினதா எனக்கு ஞாபகமில்லையேத்த. எப்போ வாங்கீனீங்க?” என்றாள் நக்கலாக.
“ஏய்! இன்னாடி திமிரா? இது என் புருஷன் வூடு”
“அப்போ இது எனக்கும் புருஷன் வீடு தான். உங்களுக்கு இங்க இருக்க ரைட்ஸ் இருக்குற மாதிரி எனக்கும் இருக்கு” எனக் கழுத்தில் உள்ள தாலியை கையில் பிடித்துக்கொண்டு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டிக் கொண்டே கூறினாள்.
இளங்கோ “சபாஷ் சரியான பதில்” எனக்கூறியவர் ‘என் மருமகளுக்கு ஆரத்தி எடுக்கக் கூட ஆளில்லையே’ என நினைத்து, தானே சென்று கரைத்து எடுத்து வந்தார்.
ஆனந்தியை எடுக்கச் சொல்ல அவருக்கு என்னா கிறுக்கா பிடிச்சிருக்கு? ஆதலால் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் அக்கம் பக்கத்தினரை அழைக்க, அவர்களோ ஆனந்தியின் வாய்க்குப் பயந்து ஒதுங்க, அதில் ஒருத்தி தானே முன்வந்து,
“கொண்டாங்க சித்தப்பா. என் கொலுந்தியாளுக்கு நானே எடுக்குறேன்” என இளங்கோவின் தூரத்து அண்ணன் மகள் ஆரத்தியை எடுத்தாள்.
இளங்கோ “மதும்மா! சோத்தாங்காலை எடுத்து வைச்சு உள்ள வாம்மா” எனக் கூற, “இந்தாருய்யா” என ஆனந்தி ஆரம்பிக்கும் போதே,
“இனிமேல் அந்த வீட்டுக்குப் போகமாட்டானா.. இனிமேல் அந்த வீட்டோட உறவு கொண்டாட மாட்டானா.. உள்ள வரச்சொல்லுங்கப்பா. இல்ல இப்படியே அங்கயே போகட்டும் நிரந்தரமா..” எனக் கர்ஜிக்கும் குரலில் சித்தார்த் கூற,
அந்நேரம் வரை தைரியமாக இருந்த மதுவுக்குள் பூகம்பம் தான். பிறந்த வீட்டு உறவைவிடச் சொன்னால் எந்தப் பெண்ணுக்குத் தான் மனது வரும். ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உதறிவிட்டு, வரசொல்லும் தன் கணவனை நினைத்துக் கோபம் ஒருபுறம் வந்தாலும், அவனது கோபத்திலும் நியாயம் இருப்பதால், இது தங்களுக்கான தண்டனையென நினைத்து, முழுமனதுடன் சித்தார்த்தின் மனைவியாக மட்டும் அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து உள்ளே வந்தாள் மது.
உள்ளே வந்தவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் தன்னறையில் சென்று கதவடைத்துக் கொண்டான் சித்தார்த். ஆனந்தி ஒரு அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள். இளங்கோ தான் மருமகளை வீட்டின் கூடத்தில் அமரவைத்தவர், தன் சொந்தத்தில் உள்ள மூத்த பெண்மணியை அழைக்கச் சென்றார், அடுத்தடுத்த சம்பிரதாயங்களைச் செய்வதற்காக. அதற்குள் விஷயம் தெரிந்து அரக்க பரக்க ஓடிவந்தாள் சிந்து.
“எம்மா! எம்மா!” எனக் கூடத்தில் அமர்ந்திருந்த மதுவை கண்டுகொள்ளாமல் அறையிலிருந்த ஆனந்தியிடம் வந்தாள் சிந்து.
“வா சிந்து. இங்க நடக்குற கொடுமைய பார்த்தீயா? இந்தப் பையன் இப்படி பண்ணிப்புட்டானே! என் நினைப்புல மண்ணள்ளி போட்டுட்டானே! அந்தச் சீக்குகாரியும் சட்டமா உள்ள வந்து குந்தீக்குனு வியாக்கானம் பேசுறா.. கட்டுன புருஷன் என்ன மதிச்சால பெத்த புள்ளை என்ன மதிக்கும்” எனக் கத்தி கூப்பாடு போட்டார்.
“நான் அம்மாந்தூரம் சொல்லிட்டு போனேன்ல. பால்ல தூக்க மாத்திரய கலந்து குடு. அவன் தூங்கிடுவான் கல்யாணம் முடிஞ்சிடும்னு. இன்னத்தம்மா பண்ணிக்கின நீ?” எனப் பல்லைக் கடித்தபடி மெல்லமாகக் கேட்க,
“நேத்து ராத்திரியே குடுத்துட்டேன் டீ. அப்புறமும் எப்படி முழுச்சிக்கினானு தெரியல. நீ இரண்ட தான கலக்க சொன்ன நான் மூணு கலக்கினேண்டீ. நல்லா தூங்கட்டும்னு. ஆனா எப்படி இப்படி நடந்துச்சுனு தெரியல” என்றார் முனுமுனுப்பாக.
“குடிச்சானா? அவன் குடிச்சத நீ பார்த்தீயா?”
“குடுத்தேன். சரி குடிக்கிறேன் சூடா இருக்குனு சொன்னான். அதேட வந்துட்டேன். கொஞ்ச நேரம் செண்டு போய்ப் பார்த்தேன் காலிடம்ளரு தான் இருந்துச்சு. குடிச்சானு நினைச்சு அசால்டா இருந்து போட்டேன்”
“அப்போ அவன் குடிச்சிருக்க மாட்டான். நீ எதோ சொதப்பிருப்ப, அவனுக்குச் சந்தேகம் வந்திருக்கும், கீழ ஊத்திருப்பான்” எனக்கூற முழித்தார் ஆனந்தி.
உண்மையிலுமே சிந்து சொன்னது தான் நடந்தது. ஆனந்தி பாலில் ஏதோ கலக்குவதை சித்தார்த் பார்த்துவிட்டான். அதில் சந்தேகம் வர, குடிக்கிறேன் எனக்கூறி பாலை வாங்கி வைத்தவன், அதைக் கீழே ஊற்றிவிட்டான். அதனால் தான் அம்மாவும், மகளும் போட்ட அத்தனை சதிதிட்டமும் தகடுபிடியானது.
இங்கு இளங்கோ தன் அண்ணீ முறையில் உள்ள பெண்மணியை அழைத்துவந்தார். அவர் வந்து தான் மதுவை வீட்டில் உள்ள பூஜைஅறையில் விளக்கேற்றிச் செய்ய வேண்டிய அத்தனை சம்பிரதாயங்களையும் செய்தார். பால், பழம் மட்டும் கொடுக்கவில்லை அம்மாவும், மகனும் தான் அவரவர் அறையின் கதவுகளை அடைத்துக் கொண்டு வெளிவரவில்லையே!
மாலை மங்கி இரவும் விட்டது. யாரும் யாருடனும் பேசவில்லை. மதியம் ஊசியும் போடவில்லை சாப்பிடவும் இல்லை அதுவே மயக்கமாக இருந்தது. இரவாது இன்சுலின் ஊசி பேட வேண்டுமே, பின் சாப்பிட்டு மாத்திரைகளை எடுக்க வேண்டுமே! ஆனால் எதுவுமே இப்போதைக்கு இங்கு இல்லை. அனைத்தும் அங்கே அவள் வீட்டில் தான் இருந்தது.
“மாமா” என இளங்கோவை அழைத்தாள் மது.
“என்னம்மா?”
“வீட்டுல என் மாத்திரை, ஊசி, என் மொபைல், மாத்துறதுக்கு டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வரனும்”
“சரிம்மா. நான் போய் வாங்கீனு வாரேன்” எனக்கூறி இளங்கோ சென்று வாங்கி வந்தார். இப்போதைக்கு இரவுக்கும், காலையில் மாத்துவதற்கு மட்டுமே அவசரத்துக்கு கொடுத்துவிட்டனர். வரும் வழியில் வீட்டில் உள்ள அனைவருக்கும் கடையில் உணவையும் வாங்கிக் கொண்டுவந்தார்.
அதன் பின் தான் உடையைக் கூடத்திலிருந்த குளிக்கும் அறையில் மாற்றி, ஊசியைப் போட்டாள். அரை மணி நேரத்தில் சாப்பிட வேண்டும். கல்யாணம் ஆனதிலிருந்து அவனும் சாப்பிடவில்லை, அவன் இல்லாமல் சாப்பிட அவளுக்கு விருப்பமுமில்லை. அதனால் அவனறை வாயிலுக்குத் துணிந்து சென்றாள்.
“சித்தத்து” எனக் கதவைத்தட்ட, எதோ ஒரு பொருள் பறந்து வந்து கதவில் மோதிக் கீழே விழுந்த சத்தம் கதவுக்கு வெளியில் நிற்கும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகக் கேட்க, அவனை அழைக்கும் முறையை மாற்றி “என்னங்க” என்றாள். கதவு திறந்த பாடில்லை. பின் விடாமல் தட்ட ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் படாரெனக் கதவு திறந்து ஒருகை அவளைப் பிடித்து உள்ளே இழுத்து சுவரோரம் தள்ளியது. சமாளித்து நின்றாள் சுவரில் சாய்ந்து.
“என்னடி வேணும் உனக்கு?”
“சித்…” சித்தத்து எனக் கூற அவள் வாயைத் திறக்கும் முன்,
“கொன்றுவேன்”
“அது. உள்ளயே இருக்கீங்க. மதியமும் சாப்பிடல. மாமா சாப்பிட வாங்கிட்டு வந்துட்டாங்க. சாப்பிட கூப்பிட தான் தட்டினேன்”
“அக்கறை? ம்ம் இத்தனை நாளா அது எங்க போச்சு? ஒத்த போன் பண்ணி கேட்டு இருப்பீயா? இல்ல நான் பண்ணின கால அட்டன் பண்ணிருப்பீயா? இப்போ என்ன அக்கறை பொத்துக்கிட்டு வருது?” எனக்கேட்க தலை கவிழ்ந்து நின்றாள்.
‘என்ன சொல்றது. பேசினா நான் உடைஞ்சு என் காதல் வெளிப்படும்னு பேசாம இருந்தேனு சொன்னா நம்பவா போறீங்க. அதுக்கப்புறம் ஆது கூடக் கல்யாணம்னு முடிவு பண்ணின பிறகு நான் எப்படி பேசுவேன்? எந்த மூஞ்சியை வச்சிட்டு பேசுவேன்? எப்படி பேச முடியும் என்னால?’ என மனதில் நினைத்துப் பேசாமல் இருந்தாள்.
“என்னடி ஓயாம பேசுற வாய் ஒட்டிக்கிச்சு?” என்றவன் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “இந்தப் புடவை எப்படி வந்தது?”
“அது.. மாமா தான் போய் வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்தாங்க. ஊசி, மாத்திரை வாங்க சொன்னேன் அப்போ வாங்கிட்டு வந்தாங்க”
எனக்கூறவும் மணியைப் பார்த்தான். அவள் ஊசி போடும் நேரம் கடந்துவிட்டது. அவன் கடிகாரத்தை பார்க்கவும், இதைத் தான் சிந்திப்பானென நினைத்தவள்,
“ஊசி போட்டுட்டேன். சாப்பிட வாங்களேன். தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. பசிக்குது” எனக்கூறவும், அவன் கோபத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, அவளுடன் வெளியேறினான்.
அவள் தான் அனைத்தையும் எடுத்து வைத்தாள், ஆனந்தி வரமறுத்துவிட, சிந்துவிடம் அவர்கள் இருவருக்குமான உணவைத் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டு, இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக அமர, முதலில் பாலும், பழமும் கொடுத்துவிட்டே இரவு உணவை உண்ண வைத்தார் இளங்கோவின் அண்ணி. உணவு முடிந்ததும் சித்தார்த் வெளியே கிளம்ப,
“சித்தார்த்து எங்கப்பா கிளம்புற? இருப்பா இன்னைக்கு ராத்திரி சடங்கு இருக்குல” எனக்கூறினார் அவனின் பெரியம்மா.
“கடைவரைக்கும் போறேன் பெரியம்மா. வந்திருவேன்” என நில்லாமல் சென்றுவிட்டான். இவரும் மதுவை சாமி கும்பிட வைத்து, அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களும் முடித்துச் சித்தாத்தின் அறைக்குள் விட்டுவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். சிந்துவும் அவள் வீட்டுக்குச் செல்ல, இளங்கோவும் அவரறைக்கு சென்று விட்டனர். சித்தார்த் இன்னும் வந்த பாடில்லை.
நேரம் ஆக ஆகப் பயத்தில் அவனுக்கு அழைத்தாள் அலைபேசியில். அவளது எண்ணைப் பார்க்கவும் அழைப்பை நிறுத்திவிட்டான் அந்த முரடன். அவளைக் காக்கவிட்டு கையில் மல்லிகைப்பூவும், அல்வாவுமாக அறைக்குள் நுழைந்தான் அந்தக் கள்வன்.
மந்தகாசமான மயக்கும் புன்னகையுடன், கையில் உள்ள பூவையும், அல்வாவையும் அவளிடம் நீட்ட, பயம் இருந்த இடத்தில் இப்போது பட்டாம்பூச்சி பறந்தது.
“வெட்க படலா வருமா என் தாராக்கு?” எனக் குணிந்திருந்த அவள் தலையை, அவள் நாடியில் ஒற்றை விரவை வைத்துத் தூக்கினான்.
“சித்..” என்றவள் வாயை மூடிக் கொள்ள,
“கூப்பிடு. அது உனக்கு மட்டுமே உரிமையான வார்த்தை” எனக்கூறவும்,
“சித்தத்து” என்றாள் கண்ணில் கண்ணீருடன்.
அவள் கண்ணீரைத் துடைத்தவன், அவள் கண்ணத்திலிருந்து கையை எடுக்க வில்லை. கண்ணத்தை வருடி, “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருந்த” என மூக்கை பிடித்துக் கொஞ்சி, கைகளால் அவள் கண்ணத்தில் தடவ, தடவ இவளுக்குத் தான் படபடவென வந்தது.
மெல்ல கைகளை இறக்கி அவள் செர்ரி உதட்டை இரு விரலாலும் இருக்கி பிடிக்க, மீன்குஞ்சு வாய்போல் ஆனது அவளது உதடு.
“எப்படி இப்படி ரோஸ் கலர்ல வச்சிருக்க? தேன்ல போட்ட ரோஜா குல்கந்து போல மின்னுது” என உதட்டைத் தவட, குல்கந்தை சாப்பிட்டுவிட துடித்தது அவனது உதடு.
கைகளை இறக்கியவன் மெல்ல அவள் கழுத்தை வருட, கூச்சத்தில் நெளிந்தாள் அவள். கைகளைக் கழுத்துக்கு பின்னால் கொண்டு சென்றவன், அவளைக் கழுத்தை அசைக்க முடியாதவாறு காதோடு சேர்த்து பிடித்துக்கொண்டு அவளது குல்கந்தை சுவைக்க ஆரம்பித்தான்.
சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே..
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே..
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே..
எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே..
கூடுதே ஆவல் கூடுதே! தேகமே அதில் மூழ்குதே! ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹே அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா?
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா?
இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா ஓ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
முதலில் மிரண்டவள், பின் அவனது கைகளும், உதடும் செய்யும் மாயத்தில் மெல்ல மெல்ல தன்னை மறந்து மயக்கத்தில் ஆழ்ந்து விட, தூரத்தில் எங்கோ கதவு தட்டும் சத்தம் கேட்டது, மயக்கத்திலிருந்து விழிக்க, அவளருகில் யாருமில்லை. கண்டது அனைத்தும் கனவு. அவள் கணவன் இன்னும் வீட்டுக்கே வரவில்லை.
கதவுதட்டும் சத்தம் கேட்க, அடித்துப் பிடித்துச் சென்று கதவைத் திறந்தாள்.
“எவ்ளோ நேரம் கதவ தட்டுறது? காதுல விழல?” எனக் கரடிபோல் கத்தினான் அவளின் அன்பு கணவன்.