எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 11

S.Theeba

Moderator

திடீரென தமிழினியன் தள்ளி விட்டதும் மீண்டும் விழப் போனவள் சுதாரித்துக் கொண்டு அருகிலிருந்த கதவை எட்டிப் பிடித்து கீழே விழாமல் தப்பித்தாள். வெளியே செல்ல வந்தவள் அவன் தள்ளிவிட்ட எரிச்சலில் மீண்டும் உள்ளே வந்து முன்பகுதியில் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.
ஏன் என்னை தள்ளிவிட வேண்டும். நான் என்ன ஆசைப்பட்டு அவர் மேல் போய் விழுந்தனா? அவரிடம் கேட்டே ஆகணும்.. வெளியில் வரட்டும்' என்று கோபத்தில் புலம்பும் சிறு குழந்தை போல செல்லக் கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

குளியலறை சென்று சுத்தப்படுத்தி, உடைமாற்றி வெளியில் வந்தவன் அவள் இருந்ததைப் பொருட்படுத்தாமல் உள்ளறைக்குச் சென்றான். அவர் ஏன் என்னை தள்ளிவிட்டார் என்பதை கேட்டேயாகணும் என்ற முடிவோடு இருந்தவள் அவன் தன்னைக் கவனிக்காமல் செல்லவும் எழுந்த எரிச்சலில் விறுவிறுவென அவன் பின்னால் சென்றாள். அவனுக்கு மிக சமீபத்தில் அவள் செல்லவும் பின்னால் கேட்ட கொலுசுச் சத்தத்தில் அவன் திரும்பவும் சரியாக இருந்தது. எதிர்பாராமல் இருவரும் மீண்டும் மோதிக் கொள்ளவும் அவள் மீண்டும் கீழே விழுந்தே விட்டாள். அவனோ இப்போது அவளைத் தாங்கிப் பிடிக்காமல் விழுவதைப் பார்த்தபடி எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் கைகளைக் கட்டியபடி நின்றான்.

ஒருவாறு எழுந்து தன் சாரியை சரிப்படுத்தியவள் குழப்பத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
'ஒரு உதவி கூடச் செய்யாமல் நிற்கிறதைப் பார்.. சரியான கல்லுளிமங்கன்' என்று மனதிற்குள் அர்ச்சனை செய்தாள்.
அப்போது "இடியற்.. பார்த்து வரத் தெரியாதா உனக்கு?" என்று காட்டமாகக் கேட்டான் அவன்.
“நான் பார்த்துத் தான் வந்தன். திடீரென்று நீங்க நின்றதாலதான்..”
“ஓகோ இப்போ மேடம் அவ்வளவு அவசரமா எங்க போறிங்களாம்?” என்று நக்கலாகக் கேட்டான்.
“உங்… நான்..”
உங்களைப் பார்க்கத்தான் என்று ஒரு வரிப் பதிலை அவனுக்குச் சொல்ல முடியாமல் தடுமாறினாள். அவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறவும், அவளை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "ஓகோ.. இப்போதான் புரியுது. வேணும்னுதான் திரும்ப வந்து மோதினாயா?”
“நான்.. ஏன்?” என்று அவன் கேள்வி புரியாமல் குழம்பி நின்றாள். அவளது ல் குழப்பத்தைத் தீர்ப்பவன் போல
“அதுதான் அப்போது போலவே இப்போதும் நீ விழப் போகும் போது உன்னை தாங்கிப் பிடித்து அணைப்பேன் என்று ஆசைப்பட்டாயோ? இப்படி மேல வந்து விழுந்தா உன் மேல எனக்கு ஆசை வந்திடும்னு நினைத்தாயோ..? ம்ம்.. அதெல்லாம் சினிமாவுக்குதான் செட்டாகும். அணைத்ததும் காதல் பெருகி கணவன் மயங்கிப் போவதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். இந்தத் தமிழினியனுக்கு அது செட் ஆகாது. வெல்.. நல்லாக் கேட்டுக்கோ, என்னால உன்னை எப்போதுமே மனைவியா ஏத்துக்க முடியாது. எந்த சூழ்நிலையும் என்னை மாற்றாது. சோ, நீ இப்படி எல்லாம் முயற்சிக்காத. அது வீண் முயற்சி. ஏமாந்து தான் போவாய்" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு, தன் எதிரே நின்றவளை உறுத்துப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் விளங்கவும் சிறிது தள்ளி நின்றாள் அவள். அவன் சட்டென்று உள்ளே சென்று விட்டான்.

கீழே விழுந்த போது முழங்கை நிலத்தில் அடிபட்டதில் வலித்தது. ஆனால், அந்த வலியைவிட அவன் கூறிச் சென்ற வார்த்தைகளால் ஏற்பட்ட வலி நூறு மடங்கு பெரிதாக இருந்தது. காயப்பட்ட அவள் மனமோ தன் வேதனையைக் கண்ணீர்த் துளிகளாக வெளிப்படுத்தியது.
இதற்கு மேலும் இங்கே இருந்தாலோ அழுவதைப் பார்த்தாலோ மேலும் ஏதாவது பேசி விடுவானோ என்று பயந்தவள் தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். இப்போது வீட்டில் யாருடனும் பேச அவளால் முடியாது எனத் தோணவும் பின்பக்கம் இருந்த பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்தின் கரையில் அமர்ந்தவள் மனம் வேதனையில் துவள கண்ணீரை அதற்கு வடிகாலாக்கினாள்.

‘இது நான் எதிர்பார்த்த வாழ்வு தானே. அவர் வேண்டாம் என்றதையும் மீறி கல்யாணம் பண்ணி விட்டு அவர் சந்தோசமாய் பேசுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அப்படி அவர் நடக்காவிட்டாலும் அவரைக் குறைகூற முடியாதே. எதிர்பார்க்கும் நான்தான் முட்டாள். நடக்காத காரியத்தை எதிர்பார்த்தால்?
ஆனால், நான் எங்கே எதிர் பார்த்தேன்? தற்செயலாகத் தானே நான் விழுந்தேன். இரண்டாவது தடவை இந்தச் சேலை தடுக்கித்தானே விழுந்தேன். அதற்கு ஏன் அவர் கோபப்பட வேண்டும். நான் ஏதோ வேண்டும் என்றே அவர்மீது மோதி விழுந்ததாகக் கூறுகின்றார்.

ஆனாலும், ஏதோ ஒன்று உறுத்துதே. என்னை அணைத்தப்படி நின்றபோது அவர் முகத்தில் விரும்பக்கூடிய ஓர் உணர்வு தென்பட்டதே. அவரது முகத்தில் தெரிந்தது ஏக்கமா... அல்லது காதலா... அதில் ஏதோ ஒன்று தான். ப்ச்… எதுவும் புரியவில்லையே.. ஆனால், சடுதியில் அந்த உணர்வு மறைந்து அவர் முகத்தில் எரிச்சல் தோன்றியதே. திடீரென ஏன் அப்படி மாறினார்? என்ன காரணமாயிருக்கும்?
நான் வேண்டுமென்று அவர் மீது மோதவில்லையே. நான் விழாமல் தாங்கிப் பிடித்தபோது அவரது கைகளில் உறுதி இருந்தபோதும் ஒரு மென்மையும் இருந்ததே. அதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அந்த மென்மையும் கண்களில் தோன்றிய காதல் உணர்வும் பொய்யோ என்னும் வகையில் நொடியில் அவர் தன்னை மாற்றிக் கொண்டதேன்?' யோசிக்க யோசிக்க குழப்பமே மிஞ்சியது.
'ஏதோ ஒன்று இருக்கு. அது என்னவென்று முதலில் தெரிய வேண்டும்' என
யோசிக்க ஆரம்பித்ததுமே அவளது அழுகை நின்றுவிட்டது. தன் கன்னங்களில் இருந்த கண்ணீர் தடங்களை மெதுவாகத் துடைத்தாள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றாள்.

இங்கே அறையில் இருந்த தமிழினியனின் நிலையோ அவளது நிலைக்கு சற்றும் குறைவானது அல்ல. அங்கு நிலைமையும் மோசமாகத் தான் இருந்தது. அவள் வெளியே சென்றதும் கட்டிலில் வந்து அமர்ந்தவன் சிறிது நேரம் கண்களை மூடி தன்னை சமனப்படுத்திக் கொண்டான். எங்கே தன் மனதை அவள் அறிந்து விடுவாளோ என்ற பயத்தில் எரிச்சலாக அவளிடம் பேசிவிட்டு வந்து விட்டான். அதனால் அவளது மனம் என்ன பாடுபடும்? பாவம் என் வார்த்தைகளால் எவ்வளவு தவிச்சுப் போயிருப்பாள். ச்சே.. என்ன மடத்தனம் செய்து விட்டேன். எவ்வளவு அழகாகத் தயாராகி நின்றாள். ரசிக்க வேண்டியவளை காலால் எட்டி உதைப்பது போல் செய்து விட்டேனே.
நான் என்ன செய்ய? அவள் அருகாமை என்னை நிலைகுலையச் செய்து விடுகின்றதே. அவளை விழவிடாமல் தாங்கித்தான் பிடித்தேன். ஆனால், அதன் பிறகு சில நொடிகள் என் மனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. என்னை மறந்து அவளை நான் முத்தமிட்டிருந்தால் அதன் பிறகு அவள் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியுமா? இப்படி எத்தனை நாளைக்குத்தான் நானும் தவிப்புடன் இருந்து அவளையும் வேதனைப்படுத்துவது. ஆனால், அவள் என்னை விட்டு போகநேர்ந்தால் என்னால் அவளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. இரண்டு நாட்கள் கூட அவள் அருகாமையில் என்னால் விலகி இருக்க முடியவில்லையே.... என்னதான் செய்வேன்' என்று மனதிற்குள் புலம்பினான். எதிர்காலத்தில் அவளது முடிவு எப்படி இருக்கும். அவள் என்னை விட்டுப் போனாலும் உயிரையே பறித்தது போல் ஆகிவிடுவேனே.. என்னதான் செய்ய... என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு தலைவலி ஏற்பட்டது. எழுந்து மீண்டும் குளியலறைக்குள் சென்று ஷவரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்று கொண்டான்.

சிறிது நேரத்தில் ஆயத்தமாகி கீழே வந்தான். அபிராமிக்கு மேட்சிங்காக கிரீம் நிறத்தில் ஜூன்சும் அரக்கு நிறத்தில் சேர்ட்டும் அணிந்திருந்தான். அவனைப் பார்த்ததும் அபிராமிக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. அவன் கூறிய வார்த்தைகள் மனதின் ஓரத்தில் குத்திக் கொண்டிருந்தாலும், அவன் தன் உடைக்குப் பொருத்தமாக உடை அணிந்து வந்தது சிறு குழந்தையைப் போல அவளுக்கு சந்தோசத்தையே கொடுத்தது.

வரவேற்பறையில் அபிராமியுடன் பேசிக்கொண்டிருந்த சாவித்திரி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
"வாவ் அண்ணா ரொம்ப சூப்பரா, ஹான்ட்ஸமா இருக்கிறாய். அண்ணி நீங்களும் தான் கியூட்டா இருக்கிறிங்க. அதைவிட இரண்டு பேரும் மாட்சிங் மாட்சிங்.." என்றாள் சாவித்திரி.
அவள் சொல்லிக்கொண்டிருந்த போதே பாலாவின் நண்பர் கேசவன், மனைவி மற்றும் மகளோடு வீட்டிற்குள் வந்தார். அவர்களை வரவேற்று உபசரித்தனர். அவர்கள் தம்பதிக்கு வாழ்த்துக்களைச் சொன்னதோடு பரிசுப் பொருட்களையும் வழங்கினர். அவர்கள் வீட்டிற்கு வந்தநேரம் தொடங்கி, இரவு உணவு உபசாரத்தையும் ஏற்று அவர்கள் சென்ற நேரம்வரை தமிழினியன் அபிராமியோடு மிக நெருக்கமாக இருந்தான். புதிதாகக் கல்யாணம் செய்தவர்கள் எப்படி ஒட்டி இருப்பார்களோ அந்தளவு நெருக்கத்தைப் பேணினான். அடிக்கடி அவளைத் தொட்டுப் பேசுவதும் ஃசோபாவில் மிக நெருக்கமாக அமர்வதும், அவளிடம் பேசும்போது ஆதர்ச தம்பதிகள் போலவே குழைந்து குழைந்து பேசுவதுமாக இருந்தான். அவனது செய்கைகளால் அபிராமிதான் தடுமாறிப் போனாள். என்னதான் அவன் வெளியாட்களுக்காகவும் தன் பெற்றோருக்காகவும் அப்படி நடந்து கொண்டாலும் பேதையவள் நெஞ்சில் ஒரு குறு குறுப்பு உண்டாகக்தான் செய்தது

இரவு அறைக்குள் சென்று உடைமாற்றி படுக்கத் தயாராகி கட்டிலில் வந்து அமர்ந்தவள் அன்று நடந்தவைகளை ஆராய்ந்து பார்த்தாள். மற்றவர்களுக்காக என்றாலும் அவன் தன்னுடன் இயல்பாக இருந்தது அவளுக்கு மிகவும் சந்தோசத்தையே தந்தது. இவன் எப்போதும் இப்படியே இருக்க மாட்டானா என்று ஏங்கவும் வைத்தது.

ஏன் என்னைப் பிடிக்கவில்லை என்று அவனிடமே கேட்டுவிடுவோமா என்றும் சிந்தித்துப் பார்த்தாள். கேட்கலாம்தான்.. ஆனால் அதற்கான பதிலை சொல்வதற்கும் அவன் தயாராய் இல்லையே....

பலவாறு யோசித்துக் கொண்டிருந்தவள் தன்னையறியாது உறங்கி விட்டாள். இருந்த நிலையிலேயே கட்டிலின் ஓரத்தில் தலைசாய்த்துத் தூங்கிவிட்டாள்.

தந்தையுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவன் தன் அறைக்குள் வந்தான். கட்டில் ஓரத்தில் இருந்தவாறே தூங்கிப் போயிருந்த தன் மனைவியை இமைக்கவும் மறந்து ஆசை தீரப் பார்த்தான்.
 
Top