Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 14
இரவு சாப்பிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராகச் சென்றது சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைக்கு. அங்குச் சென்றவன் மதுவுக்கு தங்கத்தில் ஒரு தாலிசங்கிலியுடன் கூடவே வீட்டில் அணிவதற்கு ஒரு ஜோடி தோடும், வளையலும், கொலுசும் வாங்கிக் கொண்டான் அவனது பணத்தில்.
அடுத்து சென்றது அவர்களது துணிக்கடைக்கு தான். அங்குப் பெண்களின் ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று, மதுவுக்கு பொருத்தமான ஆடைகளில் சிலவற்றை எடுத்தான் உள்ளாடைகள் முதற்கொண்டு. அவள் ஆடைகளின் அளவு தான் அவனுக்கு அத்துபடி ஆச்சே.
முன்னரே அவளுக்குத் தேவையான ஆடைகளை அவனுடன் வந்து இங்குத் தானே எடுப்பாள். அதனால் அளவுகள் எல்லாம் அவனுக்குத் தெரியுமானதால், தானே அவளுக்குத் தேவையானதை எடுத்தான். அனைத்தும் அவளுக்கு விருப்பமான நிறத்தில், அவளுக்குப் பிடித்தமான விதத்தில்.
அன்பு வீட்டிலிருந்து எதுவுமே வாங்கக் கூடாது என்ற முடிவில் இருந்தான், அதனால் தான் அவளுக்குத் தேவையான ஆடைகள் கூட அவனே எடுத்துக் கொடுக்க நினைத்தான் ஆனால் அவள்மேல் அத்தனை கோபம் இருந்தும் அவளுக்குப் பிடித்தமாக ஏன் எடுக்கிறானென அவனுக்கே புரியவில்லை.
அத்தனையும் வாங்கிகொண்டு வீட்டுக்கு வந்து கதவைத் தட்ட, யாருமே திறக்கவில்லை. பின் பலமாகத் தட்ட, யாரோ வருவது போலச் சத்தம் கேட்டது. பின் கதவு திறக்கும் சத்தம், கதவைத் திறந்து கனவு கண்டதன் விளைவால் கன்னங்கள் சிவக்க வந்து நின்றாள் மது.
கொள்ளை அழகு. கன்னம் வேறு சிவந்து அவனைக் கிறங்கடிக்க, அவளை அப்படியே அள்ளிக் கொஞ்ச துடித்தது அவன் காதல் மனம். அதில் அவன் மேலே அவனுக்குக் கோபம் வர, அதை அவள்மேல் காட்டினான்.
“எவ்ளோ நேரம் கதவ தட்றது? காதுல விழல? அவன கட்டிக்க முடியலனு அவன நினைச்சு கனா கண்டுண்டு இருந்தியோ?” எனத் தேளாகக் கொத்தினான். அதில் பலமான மரணகாயம் பட்டவளுக்கு வார்த்தையே வரவில்லை.
“இல்ல.. அது வந்து” எனத் திணற,
“தள்ளு” என அவளைத் தள்ளிக்கொண்டு பைகளுடன் வீட்டிற்குள் நுழைந்து அவனறைக்குள் புகுந்தான். பைகளை ஓரமாக வைத்து விட்டு, நகையை அலமாரியில் வைத்துவிட்டு குளியறை புகுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான்.
அவளோ என்ன செய்வதெனத் தெரியாமல் கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். குளித்து முடித்து வந்தவன் எதுவுமே பேசவில்லை ஒரு தலையணையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறப் போக,
“சித்தத்து” என்றாள்.
“கொன்றுவேன்” எனக் கையில் உள்ள தலையணையை அவள்மீது எறிந்து அவளை நோக்கி வர, அவளோ என்ன பேசுவதெனத் தெரியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
“இனிமேல் சித்தத்துனு உன் வாயில இருந்து வந்துச்சு அவ்ளோ தான்” என அவள் கழுத்தை இருக்கி பிடிக்கவும், வலி எடுக்கக் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“ஸ்ஸ்ஸ்” என வலியில் சத்தம் கொடுக்கவும் “ச்சை” கழுத்தை விட்டவன், கட்டிலில் பொத்தென அமர்ந்தான்.
“உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தேன்? உயிரா இருந்தேன்டி உன்மேல.. இதே நல்ல படியா இந்தக் கல்யாணம் நடந்திருந்தா இந்த ரூம்க்குள்ள இப்போ எவ்ளோ சந்தோஷம் நிறைஞ்சு இருந்திருக்கும் தெரியுமா? ஆனா இப்போ..” என்றவன் கைகளை இறுக மூடிக் கட்டிலில் ஓங்கி குத்தினான்.
“சித்தத்து வலிக்கப் போகுது” எனக் கைகளைப் பிடித்தாள். அவள் கையை உதறிவிட்டு,
“அந்தப் பேரைச் சொல்லாத.. அந்தப் பேர் என் தாரா என்னைப் பாசமா கூப்பிடுற பேரு. அத நீ கூப்பிடாத மது” என்றான் ஆவேசமாக.
“நான் மது இல்ல எப்பவும் உங்க தாரா தான்” என்றாள் கண்களில் கண்ணீருடன்.
“இல்ல. நீ மது. அன்புவோட மக மது மட்டும் தான். என்னோட தாரா எப்போவோ போய்ட்டா. என்னை விட்டுட்டு போய்ட்டா.. என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா.. வேறொருத்தன் கையால தாலி வாங்கிக்க போய்ட்டா. அவ்ளோ தான் இனி அவ எப்பவும் வரமாட்டா.. நீ மது.. மது மட்டும் தான்”
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ். அப்பாக்காகத் தான் நான் சம்மதிச்சேன்”
“தெரியுமே! அதான சொல்றேன் நீ அன்போட மகனு”
“இப்படி பேசாதீங்க ப்ளீஸ். நாங்க தப்பு பண்ணிட்டோம் தான். ஆனா அதுக்கு காரணம் இருக்கு”
“இருக்கட்டுமே! என்ன காரணம் வேணாலும் இருக்கட்டுமே. அத நீ என்கிட்ட சொல்லிருக்கலாமே? சொன்னியா?” எனக் கேட்கத் தலைகவிழ்ந்தாள். எப்படி கூறுவாள் அந்த நாள் அவர்கள் இருந்த நிலையை, அவர்கள் பட்ட அசிங்கத்தை எப்படி கூறுவாள்? இப்பவும் அதை வெளியில் சொல்லமுடியாமல் கட்டுப்பட்டு இருக்கும்போது எப்படி கூறுவாள்?
“எவ்வளவு சந்தோஷமா நடக்க வேண்டிய கல்யாணம். இப்படி எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டிங்களே! என் காதலை நீ கடைசி வரைக்கும் உணரவே இல்லல?” எனக்கூற சலேரென நிமிர்ந்தாள்.
‘இந்தக் காதலை நீ வாய்விட்டுச் சொல்லிட மாட்டியானு நான் ஒவ்வொரு நாளும் தவிச்ச தவிப்பென்ன? படிப்பு முடியும் வரை என் காதலையும் உன்கிட்ட காட்டமுடியாம நான் பட்ட பாடு என்ன? ஒவ்வொரு நாளும் என் காதலை உன்கிட்ட எப்படி சொல்றது கண்ணாடி முன்னாடி ஒத்திகை பார்த்ததென்ன? நான் அதைச் சொல்லும்போது உன் முகம் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணியதென்ன?
ஆனா எல்லாத்தையும் புரட்டிப் போட்டது அந்த ஓருநாள். அது மட்டும் எங்க வாழ்க்கையில வராம இருந்திருக்க கூடாதா? இப்படி நான் உன் முன்னாடி குற்றவாளியா நிற்காம இருந்திருப்பேனே? அந்த நாள் என்ன நடந்ததுனு சொன்னா தாங்குவியா சித்தத்து?’ என நினைத்தவள் தன் முகத்தை மூடி அழுதாள்.
அவள் அழுவதை என்று கண்டான் அவன். அவள் அழுதே பார்த்ததில்லையே! பிறந்ததிலிருந்து அவளை அழவிடாமல் பார்த்துக் கொண்டவனாச்சே! அவன் கிடைக்க மாட்டானெனத் தினமும் அவள் அழுது கரைந்தது அவனுக்குத் தெரியாதல்லவா! இன்று அவள் அழுவதைக் காண மனதில் சக்தி இல்லாமல் கைகளை நீட்டி அவளை இழுத்துக் கட்டிக்கொண்டான்.
“அழாத. என்னால நீ அழறத பார்க்க முடியல. இனி நீ அழவே கூடாது” என அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்தான். கனவில் நடந்தது போலத் தான் நடந்தது நேரிலும். அவள் கன்னதிலிருந்து கைகளை எடுக்க மனமில்லை அவனுக்கு.
அவன் மனமோ அவளை மொத்தமாக எடுத்துக்கொள் எனக் கூப்பாடுப்போட, அனைவரின் மேலும் இருந்த கோபம் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற அவனை அனுமதிக்கவில்லை. ஆனாலும் கைகளால் அவளது கன்னத்தைத் தடவிய படியே இருக்க, அவளோ கண்களில் ஏக்கத்தோடு அவனையே காதலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தப் பார்வை, இரவு, தனிமை, புதுமஞ்சல் தாலியென அவன் உணர்வுகளைத் தூண்ட ஆயிரம் காரணங்கள் இருந்த போதிலும், அத்தனையையும் அவன் கோபம் வென்றது. நொடி நேரத்தில் அவளிடமிருந்து விலகி நின்றான்.
“நான் உன்னை எனக்கே எனக்கா எடுத்துக்கும்போது என் மனசுல கோபமோ, வன்மமோ இருக்க கூடாது, காதல் மட்டும் தான் இருக்கனும். ஆனா இப்போ என் மனசுல உன் மேல இருந்த அந்தப் பழைய காதல் இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்வேன். ஏன்னா அதவிட கோபமும், வன்மமும் தான் இருக்கு.
இப்போ நான் உன்னை எடுத்துக்கிட்டா அது காதலா இருக்காது, வெறும் காமம் மட்டும் தான் இருக்கும். கண்டிப்பா அது உன்னைக் காயப்படுத்தும். எனக்குக் காமமா உன்னை எடுக்க வேண்டாம்னு தோனுது” என அவளை விட்டு விலக,
“சித்தத்து” என அவன் கையைப் பிடித்து இழுத்து அவனை மீண்டும் கட்டி அணைத்தாள்.
“வேணாம் ரொம்ப காயப்படுவ. விடு” என அவளை உதறி தள்ளிவிட்டு, தலையணையுடன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அறையைவிட்டு வெளியேறினான்.
அவன் உதறிச் சென்றதில் தடுமாறி விழுந்தவள் கட்டில் முனையில் பலமாக மோத, அது அவள் தலையில் காயத்தை உண்டுபண்ணியது. தலையைப் பிடித்தபடியே எழுந்து பார்க்க அவ்விடம் நன்றாகச் சிவந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் பனியாரம் போல வீக்கீயும் விட்டது.
இங்குத் தைலம் கூட எங்கிருக்குனு தெரியாமல், அங்கிருந்த அலமாரியில் உள்ள தேங்காய் எண்ணையை பூசிக்கொண்டு, தலைவலியுடன் கூடவே அவன் கொடுத்த மனவலியையும் சுமந்து கொண்டு உறங்கினாள்.
காலையில் கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தை அவன் அம்மா அடுப்படியில் எதோ உருட்டும் சத்தம் தான் எழுப்பிவிட்டது. இளங்கோவோ அங்கிருந்த ஒரு நார்காழியில் அமர்ந்து அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மேலும் கோபம் தான அவனுக்கு அதனால் எதுவும் பேசாமல் எழுந்து தன் அறைக்குச் செல்ல, மது குளித்து விட்டு டவலைச் சுத்திக்கொண்டு வெளியே வந்தாள். அவளை அந்தக் கோலத்தில் எதிர்பாராதவன் திரும்பி நின்று கொண்டான். அதில் அவளின் நெற்றி காயத்தையும் அவன் பார்க்கவில்லை.
“அறிவு இருக்கா? இப்படியா வந்து நிப்ப? டோர்லாக் பண்ண தெரியாது?”
“ஹான். லாக் பண்ணி எனக்குப் பழக்கம் இல்ல. ஏன்னா என் ரூம்ல லாக் இருக்காது. அதுக்கு காரணம் யார் தெரியுமா?” என்றாள்.
முன்னாள் அவள் கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஒரு நாள் கதவை மூடிக்கொண்டு தூங்கும்போது, சர்க்கரை அளவு சீராக இல்லாமல் மயக்கம் வந்து அறைக்குள்ளேயே மயங்கிவிட, கதவின் தாளை உடைத்து காப்பாற்றினான் சித்து. அன்று முதல் இன்று வரை அவளறைக்கு தாள் இல்லை, தானாகக் கதவை மூடும் கருவி(hydraulic door closer) மட்டுமே.
“அதோட என் வீட்டுல யார் என் ரூம்க்கு வந்தாலும் கதவ தட்டிட்டு தான் வருவாங்க. ஒருத்தர் மட்டும் தான் விதிவிலக்கு. அவர் யாருனு கதவ தட்டாம வரவருக்கு தெரியும்” என நக்கலாகக் கூறினாள்.
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நைட் வரும்போது ஒரு கட்டப்பை கொண்டு வந்தேன்ல அதுல உனக்கு டிரஸ் இருக்கு. அதுல ஒன்னை எடுத்துப் போட்டுட்டு வெளிய வா” என அவளைத் திரும்பிப் பார்க்காமலே கூறினான்.
“ம்ம். சரி” என்றவள், அவளைப் பார்க்காமலே திரும்பி வெளியேறப் போனவனைப் பார்த்து “நான் டவல் கட்டி இருக்கும் போதே பார்க்காம போற புருஷன் தான் நான் அதுகூட இல்லாம இருந்தபோது பார்த்தார்” என நக்கலாகக் கூறி அவனைச் சீண்டினாள் பெண்.
“கொன்றுவேன்டி உன்னை..” என அவளை நோக்கித் திரும்பியவன் அவள் நெற்றிக் காயத்தைப் பார்த்துவிட்டான்.
“என்னடி காயம்?” என அவளருகில் வந்து நெற்றியை தொட்டு பார்க்க, வலியில் “ஸ்ஸ்ஸ்” என்றாள்.
“நேத்து நீ தான தள்ளிவிட்டுட்டு போனது. இப்போ வந்து என்ன விசாரனை வேண்டியிருக்கு” எனச் சிணுங்க,
“நான் எப்போ உன்னைத் தள்ளிவிட்டேன்? பொய் சொல்லாத”
“கடைசியா போகும்போது உதறிவிட்டு போனீயே அப்போ”
“அப்பவே சொல்றதுக்கு என்ன? வாயில கொலுக்கட்டையா இருக்கு..” எனக்கூறியவன் அலமாரியில் உள்ள மருந்தை எடுத்துப் பூசினான்.
அவளோ ‘அவ்ளோதான் சித்தத்து உன் கோபம். ஒரு நாள் தாண்டாது. எனக்கு ஒன்னுனா உன்னால பார்க்கமுடியாதுனு எனக்குத் தெரியாதா. சோ சுவீட்’ என மனதில் கொஞ்சிக்கொண்டு மோகபார்வை பார்க்க, அவள் பார்வை வித்தியாசத்தைக் கண்டு கொண்டவன், அவளை முழுதாகப் பார்த்துவிட்டு,
“மயக்கப் பார்க்குறியாடி?” என்றான் கடுப்பாக,
“க்கூம் இனிமே தான் மயக்கனுமா? நீ ஏற்கனவே மயங்கி இருக்கனுல நான் நினைச்சேன்.. இல்லையா? அப்போ மயக்கவா மச்சான்?” என்றாள் மயக்கும் பார்வை பார்த்துக்கொண்டே. இன்னும் ஒரு நிமிஷம் அவள் கண்ணை அவன் பார்த்திருந்தாலும் இன்று அவன் பிரம்மச்சரியம் முடிஞ்சிருக்கும். தலையை உலுக்கிவிட்டு,
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா.. ஒழுங்கா கிளம்பி வெளிய வாடி. நான் குளிக்கனும்” எனக்கூறி வெளியேறி மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான். அவன் நினைப்பு முழுவதும் இப்போ அவள் தூண்டிவிட்ட பழைய நினைப்பில்.
அன்றொரு நாள் மாலைநேரம் காலேஜ்ஜிலிருந்து அவளை வீட்டிற்கு அழைத்துவந்து விட்டவன், வரும்போது அவள் கேட்ட சிக்கன்ரோலை வாங்கச் சென்றான். வீட்டில் அன்று யாருமே இல்லை. ஒரு துக்கம் விசாரிக்க வெளியூர் சென்றிருந்தனர் பெரியவர்கள்.
“சித்தத்து கதவ வெளியே கூடி பூட்டிட்டு போ. நான் குளிக்கப் போறேன்”
“சரி. நீ உள்ள போ. நான் வாங்கிட்டு வாரேன்” எனக் கதவைப் பூட்டிவிட்டு சென்றான். பின் வீடு திரும்பியவன் அவள் குளிக்கசென்றதை மறந்துவிட்டு எப்போதும் போல அவளறைத் திறக்க, அவளோ துண்டை மட்டும் சுத்திக்கொண்டு அலமாரியில் இரவு உடையைத் தேடிக்கொண்டிருக்க, கதவு படாரெனத் திறந்த அதிர்வில் திரும்பும்போது துண்டும் பயந்து கீழே விழுந்துவிட்டது.
சிக்கன் ரோல் வாங்கிட்டு வந்தவன் கண்களுக்கு ஒரு தலைவாழை விருந்தை இலவசமாகக் காட்டிவிட்டாள் அவனின் தாரா. ஒரு நிமிடம் தலைகால் புரியாமல் அதிர்ச்சியாகி அவன் நிற்க, அவளோ பதறிப் பெட்டிலிருந்த போர்வையை எடுத்து முழுதாகப் போர்த்திக்கொண்டாள்.
அதற்குப் பிறகே “சாரி.. சாரி” என அறையை விட்டு வெளியேறினான். அதற்குப் பிறகு இரு நாட்கள் ஒருவரை ஒருவர் தலைநிமிர்ந்து கூடப் பார்கக்கூட முடியாமல் சுற்றிக்கொண்டிருந்தனர். இன்று அதைச் சொல்லி அவனைச் சீண்டிவிட்டு, அவன் தாபத்தையும் தூண்டிவிட்டாள் அவனின் அருமை பொண்டாட்டி.
அவன் வீட்டில் கதவு தாளிடாமல் இருந்தால், காற்று அடித்தால் திறந்து கூடத்திலிருந்து அவர்களது அறையைப் பார்க்க வாய்ப்பிருந்தது. அவளுக்காக, அவளது தனிமைக்காக அன்றே தன் அறைக்குத் தானாகக் கதவை மூடும் கருவியைப் (hydraulic door) பொறுத்திவிட்டான்.