Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 15
“என்னங்க.. மதும்மா என்ன பண்றாளோ தெரியல. நம்ம ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வரலாமா?” என ஈகைச்செல்வி அன்பழகனிடம் கேட்க,
“எனக்கும் அதான் மனசுல ஓடிட்டே இருக்கு. மச்சான் போன் பண்றேன் அப்புறம் வாங்கனு சொன்னார், அதான் யோசனையா இருக்கு”
“அப்போ அவருக்குப் போன் போடுங்களேன்.. என்ன பண்றாங்கனு கேளுங்க. காலையில இருந்து மதுக்கு போன் போட்டேன் ஸ்விட்ச் ஆப்னு வருது”
“போடாமலா இருப்பேன் அவர் போனே எடுக்கல ஈகை”
“அப்போ போய்ட்டே வந்திடலாங்க” எனக்கூறினார்.
அங்கிருந்த வைரம் பாட்டியோ “நானும் வரேன் நேத்து அந்த ஆட்டம் ஆடிட்டா நான் பெத்த மகராசி.. நானும் வரேன் அவள இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்” எனக்கூற, அங்கு வந்த அகிலாவோ,
“பாட்டி.. ஆனந்தி பெரியம்மா ரொம்ப பேசுவாங்க. மாமாவ எல்லாம் அங்க கூட்டிட்டு போக வேண்டாம். வேணும்ணா நீங்க, நான் அத்தை மூணுபேரும் போய் என்ன பண்றாங்கனு பார்த்துட்டு வரலாம்” எனக்கூற,
“அதுவும் சரி தான். நீ கிளம்பி வா. நம்ம போய்ட்டு வரலாம்” என அவரும் கிளம்ப அறைக்குச் சென்றார். அகிலாவும் அவளறைக்கு சென்று பரபரவெனக் கிளம்ப,
“காலையில எங்கடி இவ்ளோ அவசரமா கிளம்புற?” என அஸ்வந்த் கேட்க,
“ஹ்ம்ம். சித்தார்த் அண்ணன் வீட்டுக்கு. மது என்ன பண்றானு பார்த்துட்டு வரலாம்னு கிளம்புறேண்டா”
“அத்தை ஆடுமேடி. அதுவும் உன்னைப் பார்த்தா உக்கிரமா ஆடும்” எனக்கூற முறைத்தவள்,
“அத்தை மாமாவ கூட்டுட்டு போறேனு நிக்கிறாங்க. உங்கத்த வாயில தான் வண்ண வண்ணமா வருமே.. மாமாவால தாங்க முடியாதுங்க. அதான் நானும், பாட்டியும் அவங்க கூட கிளம்புறோம்”
“இல்லடி அம்மாவும், பாட்டியும் கூட வேணாம். அத்தை மரியாதை இல்லாம பேசும். நம்ம இரண்டு பேரும் போய்ட்டு வரலாம். நம்மள பேசாத பேச்சா. நம்ம தாங்கிப்போம் ஆனா பெரியவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க”
“சரி. அவ டிரெஸ் எல்லாம் காலையில பேக் பண்ணி வச்சிட்டேன். அத குடுக்குற மாதிரி போய்ட்டு வந்துருவோம்”
“சரி. கீழ போய் அம்மாட்ட சொல்லிட்டு ரெடியா இரு. நான் கிளம்பி வாரேன்”
“சீக்கிரம் வாடா”
“ஹ்ம்ம். வரேன் முதல்ல நீ ரெடியாகு” எனக் குளியறையில் புகுந்தான்.
கீழே வந்தவள் ஈகையிடம் “அத்தை நீங்க யாரும் வரவேணாம் உங்க புள்ள என் கூட வரேனு சொன்னார். நாங்க போய் என்னனு பார்த்துட்டு வரோம்”
வைரம் பாட்டி “அகிலா! என் மவ எப்படி பேசுவானு எனக்குத் தெரியும்த்தா.. நீங்க மட்டும் போனா கூடம்புட்டு ஆடுவா. நானும் வரேன்த்தா”
ஈகை “நானும் வரேன். அவ என்ன பண்றானு என் கண்ணால பார்த்தா தான் என் மனசு அமைதியா இருக்கும்”
“பாட்டி அத்த.. பெரியம்மா ரொம்ப பேசுவாங்க. நாங்கனா சின்னபுள்ளைக தான பொறுத்துப்போம், உங்கள பேசினா பிரச்சனையாகிடும் அத்தை.. அதான் வேணாம்னு சொல்றோம். நான் மதுவ பார்த்துக்க மாட்டேனா? நாங்க போய்ட்டு வரோம்த்த”
ஈகை “எனக்கு அவள பார்க்கனும் போல இருக்கே”
“நிலைமை எப்படி இருக்குனு பார்த்துட்டு, மறுவீட்டுக்கும் அழைச்சுட்டும் வரோம் அத்தை. அப்போ பார்க்கலாம்” எனக்கூறிக் கொண்டிருக்கும் போதே அஸ்வந்த் வந்துவிட்டான்.
“அம்மா! நாங்க முதல்ல போறோம் அப்புறமா வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்ம்மா. அந்த முரடேன் வேற கோபத்துல இருக்கான்”
“சித்தார்த் என்னை ஒன்னும் பேசமாட்டான். நானும் வரேண்டா”
“அதான் மண்டபத்துல எல்லாரும் அத்தனை கெஞ்சியும் விட்டுட்டு போனானே. அவன் வீட்டு வாசல்ல பிச்சைகாரங்க மாதிரி நின்னோம் உள்ள இருந்துக்கிட்டே வெளிய வரல. கோபத்துல என்னை எதுவும் பேசினா கூட நண்பனு மறந்துடுவேன்ம்மா. உன்னையும், அப்பாவையும் பேசிட்டா என்னால தாங்க முடியாது. புரிஞ்சுக்கோங்க. என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா. நான் போய்ட்டு வரேன்” என ஒருவாறு அனைவரையும் சமாளித்து, மதுவின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அஸ்வந்தும், அகிலாவும் மதுவை பார்க்கச் சித்தார்த் வீட்டுக்குக் கிளம்பினர்.
இங்கோ வாசலிலேயே அமர்ந்திருந்தார் ஆனந்தி. இவர்களைப் பார்க்கவும் எழுந்து முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுகி, தலைமுடியை கொண்டை போட்டுச் சண்டைக்குத் தயாரானார். சும்மாவே இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தால் கோபம் வரும், இன்னைக்கு நிலைமைக்கு ஆத்திரம் அதீதமாக இருந்தது.
அவர்கள் அருகில் வரவும் “உங்களுக்கு எல்லாம் சொரணையே இருக்காதா? என்வூட்டு வாசல் வராதீங்கனு நேத்தீக்கு தான விரட்டிவுட்டேன். மறுக்கா மறுக்கா வந்து நிக்கிறீங்க. உங்களை எல்லாம் என்வூட்டுக்கு வெத்தலை பாக்கு வச்சா அழச்சேன்?” என அதீத சத்தமாகப் பேச, அடுக்களையில் நின்ற மதுவுக்கு புரிந்து போனது வந்தது அவர்கள் வீட்டினர் என்று.
அவள் அடுக்களையிலிருந்து வெளியே வர, இளங்கோ வாசலுக்குச் சென்று, ஆனந்தியை “இப்போ வாய மூடுறியா இன்னா? பஜாரி மாதிரி கத்திகினிருக்க.. ஓவரா பேசுன போடி உங்கொப்பன் வூட்டுக்குனு விரட்டி விட்டுருவேன். அப்ப எந்தாண்ட போவனு யோசிச்சுக்கோ” எனக்கூற அதிர்ந்து நின்றுவிட்டார் ஆனந்தி. வாய் பேசாத மனுஷன், தான் என்ன சொன்னாலும், அது அவருக்குப் பிடிக்காவிட்டாலும் கூடத் தலையாட்டும் மனுஷன் இப்படி பேசினால் அதிர்ச்சியாகத் தான இருக்கும்.
“வாங்கப்பா இரண்டு பேரும். உள்ள வாங்க” என வாசலை மறைத்து நின்ற ஆனந்தியை நகர்த்திவிட்டு, இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார். இதற்கிடையில் எதுவும் சண்டை ஆகிடுமோ எனப் பயந்த மது சித்தார்த்தை அழைக்க அறைக்குச் சென்றிருந்தாள்.
“சித்தத்து.. சித்தத்து”
“இப்படி கூப்பிடாதனு சொல்றேன்ல”
“அத விடுங்க. வெளியே அண்ணா, அண்ணி வந்திருக்காங்க”
“அதுக்கு நான் என்ன பண்ண போய் ஆராத்தி எடுக்கனுமா?”
“அத்தை உள்ள விடாம சண்டை பிடிக்கிறாங்க”
“நல்லது”
“என்ன இப்படி பேசுறீங்க. அவங்கள உள்ள கூப்பிடுங்க”
“உன்னை இந்த வீட்டுக்குள்ள வரும்போது என்ன சொல்லி உள்ள விட்டேனு மறந்துட்டியா?” எனக் கேட்க, அதிர்ந்து நின்றாள்.
“அந்த வீட்டுல இருந்து இனி யாரும் இங்க வரக் கூடாது. நீயும் அங்க போகக் கூடாது. நான் போய்ப் பேச வேண்டியத பேசிக்கிறேன். நான் கூப்பிடாம நீ ரூம்மவிட்டு வெளிய வரக் கூடாது” என அவளை உள்ளேயே விட்டு, கதவடைத்துவிட்டு சித்தார்த் அறையிலிருந்து வெளியே வரவும், அஸ்வந்த் அகிலா வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.
“நில்லுங்க” எனச் சித்தார்த் கூற, இருவரும் அவனைப் பார்த்த படி ஒரு அடிகூட முன்னேறாமல் அப்படியே நின்றனர்.
“என்னை வேணாம்னு நினைச்ச உங்க யார் உறவும் எனக்குத் தேவையில்லனு சொல்லிட்டு தான வந்தேன். பின்ன எதுக்கு என் வீட்டுக்கு வரீங்க?” என மூஞ்சில் அடித்தார் போலக் கேட்டான். அவர்கள் அவமானத்தால் கூனிகுறுகி நிற்க, உள்ளிருந்த மதுவுக்கு தாரைத் தாரையாகக் கண்ணீர் ஊற்றியது.
“சித்தார்த்து இன்னா பேசுற நீயி?” என இளங்கோ கத்த,
“சரியா தான் பேசுறேன். நீங்க அவங்ககூட சேர்ந்து இதுவரை எனக்குப் பண்ணின நல்லகாரியம் எல்லாம் போதும். இனி இந்த விஷயத்துல தலையிடாதீங்கப்பா. அதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது” எனக்கூற,
அஸ்வந்த் “மாமா நான் பேசிக்கிறேன்” என்றவன் சித்தார்த்திடம் “மச்சான் நாங்க பண்ணினது தப்பு தான். ஆனா நம்ம எல்லார் நல்லதுக்காகவும் தான் அப்படி பண்ணினோம்”
“எல்லார் நல்லது.. ஓ.கே ஓ.கே உங்க எல்லாருக்கும் நல்லது. சரி. அப்புறம்” என நக்கலாகக் கூற, இப்படி பேசுபவனிடம் அடுத்து என்ன பேசுவது என்றே அஸ்வந்த்க்கு புரியவில்லை.
“பழச எல்லாம் மறந்திடு மச்சான். மதுவ கூட்டிட்டு வீட்டுக்கு வா”
“வீட்டுல தான இருக்கேன்”
“நம்ம வீட்டுக்கு வாடா”
“திருத்தம் உங்க வீடு. என்னை வேணாம்னு தள்ளிவச்ச வீடு என்னைக்கும் எனக்கு வேணாம். இனி இந்தச் சித்தார்த்தின் இ..து கூட அங்க வராது” எனத் தன் தலைமுடி பிடித்துக்காட்டினான்.
“உன்ன தள்ளி எல்லாம் வைக்கலடா.. என்னடா இப்படி எல்லாம் பேசுற?”
“மரியாதை.. மரியாதை கொடுத்தா திருப்பிக் கிடைக்கும்.. வாடா போடானு கூப்பிடுறதெல்லாம் இங்க வேண்டாம்”
“சரி இனி கூப்பிடல மச்சான். பழச விடுங்க. மதுவ கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க”
“நான் எங்கயும் வரதா இல்ல. உங்க தங்கச்சி வந்தா கூட்டிட்டு போங்க மொத்தமா. அப்புறம் அவ இங்க வரக் கூடாது”
“என்ன பேசுற மச்சான்? அப்பா, அம்மா எல்லாம் ரொம்ப வருத்தப்படுறாங்க”
“யார பத்தியும் எனக்குக் கவலை இல்லை. எல்லாம் புரிய மாதிரி சொல்லிட்டேன்ல. இனி யாரும் அங்க இருந்து இங்க வரக் கூடாது. அவ்ளோ தான் புரியுதா? திரும்பத் திரும்ப வந்தா நான் மனுஷனா இருக்க மாட்டேன். மது..” எனக் கத்தினான்.
அவன் சத்தத்தில் அடித்துப் பிடித்து வெளியே வந்தாள் மது.
“தாலிய தவிற மத்த நகை எல்லாம் கழட்டி, நேத்து கட்டிட்டு வந்த புடவையில இருந்து போன் வரைக்கும் அத்தனையையும் கொண்டுவா. போ” எனக்கூற, தயங்கி நின்றாள்.
“போக மாட்டல.. அப்போ உன் அண்ணன் கூடவே போய்டு. என் வீட்டுல இருக்காத” எனக்கூற அழுதுகொண்டே அறைக்குள் சென்றுவிட்டாள். அஸ்வந்தின் கண் முழுக்க மதுவின் தலையில் உள்ள காயத்தில் தான் இருந்தது.
மது வெளியே வந்ததிலிருந்து அவன் அதை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தான். சித்தார்த் பேசிய எதுவும் அவன் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவில்லை. அவள் அறைக்குள் செல்லவும், கோபத்துடன் சித்தார்த்தின் சட்டை காலரை ஏற்றிப் பிடித்தான் அஸ்வந்த். அகிலா அவன தடுக்க பார்க்க முடியவில்லை.
“என் தங்கச்சிய எதுக்குடா அடிச்ச. அவ தலையில இவ்ளோ அடி படுற அளவுக்கு என்னடா பண்ணின அவள? உன்னை நம்பி தானடா அவள இங்க விட்டுட்டு போனோம். என்னடா பண்ணின?” எனச் சட்டைக் காலரை பற்றியபடி கத்திக்கொண்டிருக்க, அறையிலிருந்து அறக்க, பறக்க ஓடி வந்தாள் மது.
“அண்ணா! அண்ணா.. சித்தத்து ஒன்னும் பண்ணல. நான் தான் கட்டில இடிச்சுக்கிட்டேன். விடுண்ணா” என அவன் கையைப் பிடித்து எடுத்து விட, அஸ்வந்தோ அவள் காயத்தைத் தொட வந்தான்.
அஸ்வந்தின் கை மது மீது படும்முன் அவளைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்திருந்தான் சித்தார்த். அதில் கோபமாக அஸ்வந்த் சித்தார்த்தைப் பார்க்க,
“அவ என் பொண்டாட்டி. இனி அவ எனக்கு மட்டும் தான். உனக்கு வேணும்னா கூப்பிட்டு பாரு.. வந்தா கூட்டிட்டுப் போ” எனக்கூற தலைகவிழ்ந்து நின்றாள் மது. அவள் தான் நேற்றே தன் குடும்பத்தை விட்டுக்கொடுத்து விட்டளே அவனுக்காக.
மதுவின் கையிலிருந்த பையை வாங்கி, அஸ்வந்த் முன் வைத்தான். “எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்றவன் தன் சட்டை பையிலிருந்து கொஞ்சம் பணத்தையும் சேர்த்து வைத்தான்.
“தாலிக்கான பணம். இனி உறவுனு சொல்லிட்டு இங்க யாரும் வரக் கூடாது. அப்படி வந்தா இனி இவ இங்க இருக்க மாட்டா. கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க. என்ன கிளம்புறியா?” என மதுவைப் பார்த்துக் கேட்க, அவளோ இருகரம் கூப்பி தன் அண்ணனிடம் “இனி யாரும் என்னைத் தேடி வராதீங்க அண்ணா. ப்ளீஸ் போயிடுங்க” எனக் கூறிவிட்டு அழுது கொண்டே சென்றுவிட்டாள்.
“உனக்குக் கோபம் எங்க மேல தான. எங்களுக்கு என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு. ஆனா அவள காயப்படுத்தாத. உடம்பு முடியாதவ.. தாங்க மாட்டா” எனக் கண்களில் கண்ணீருடன் கிளம்பிவிட்டனர்.
கிளம்பியவர்களை சொடக்கிட்டு அழைத்து “இது எல்லாத்தையும் எடுத்துட்டு போயிடுங்க” எனக் கீழே இருந்த மதுவின் பொருட்களை எல்லாம் கண்ணால் காட்ட, அத்தனையையும் எடுத்துக்கொண்டு வேதனையுடன் வெளியேறினர்.
என்ன தவம் செஞ்சிபுட்டோம்..
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்.
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா?
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா?
காணும் காய்ச்சி தீ புடிக்க..
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க..
மீள நானும் கரைசேர்த்து போறேனே!
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே!
மதுவோ கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, அறைக்குள் வந்தவன் எதுவுமே நடக்காதது போல நேற்று வாங்கிய நகைகளை அவளிடம் கொடுத்தான்.
“இத போட்டுக்கோ”
“ஒன்னும் தேவல. ஏன் சித்தத்து இப்படி ஆகிட்ட” என அழுதுகொண்டே கேட்க, பலமாகச் சிரித்தவன்,
“மாத்தினதே நீங்கத் தான. இப்போ இத போடுறீயா இல்லையா?”
“முடியாது. என்ன பண்ணுவ?”
“கிளம்புடி உன் வீட்டுக்கு” எனக்கத்த, “போட்டுத் தொலைக்கிறேன்” என அவன் வாங்கி வந்ததை கருப்பா, சிவப்பானு கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்பாகப் போட்டாள்.
அங்கு அன்பழகன் வீட்டிலோ அத்தனை பேரும் இடி விழுந்தது போல அமர்ந்திருந்தனர். அவர்கள் வீட்டு செல்லக்குட்டி இனி அவர்களுக்கு இல்லையென நினைக்கவே வேதனையாக இருந்தது.
வைரம் “இதுக்குத்தேன் நான் வரேன்னேன்.. அந்த ஆடுகாளி தான் ஆட்டமா ஆடுவா.. அவ புருஷனும் இன்னும் அவளுக்கு அடங்கியே கிடப்பாருனு பார்த்தா.. இந்தப் பயல்ல ஆடிருக்கான்.
நான் மட்டும் வந்திருந்தேன் கொமட்டுல நாழு குத்து குத்திருப்பேன். அங்க போய் உட்கார்ந்துக்கிட்டு ஆத்தாளோட சேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கானா! ஆத்தா பெத்ததோட முடிச்சுப்புட்டு போய்ட்டா.. நல்லது கெட்டது பார்த்து வளர்த்ததெல்லாம் நாம.. இப்போ நம்மள பார்த்தா கசக்குதாம்மா.
நம்ம கசக்க நம்ம புள்ள மட்டும் இனிச்சு கிடந்தான்னா வம்மா தாலிய கட்டிட்டு போய் மண்டைய வீங்க வச்சிருக்கானே! இரு நான் போய் என்னனு கேட்டுட்டு வாரேன்” எனக்கிளம்ப,
அன்பு “அம்மா! நீ எதாவது சண்டை பிடிக்கப் போய் மதும்மாவுக்கு எதுவும் பிரச்சனையாகிட போகுதும்மா. வேணாம். நானே சித்தார்த் கிட்ட பேசுறேன்” என அவனுக்கு அழைக்க, அவன் எண்ணுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அவன் தான் அனைவரின் எண்ணையும் நிறுத்தி (ப்ளாக்) வைத்திருந்தானே.
அஸ்வந்த் “அவன் ப்ளாக் பண்ணிருக்கான்ப்பா. கால் போகல. நம்ம கடைக்குப் போய் மாமாக்கிட்ட முதல்ல பேசுவோம்”
அன்பு “சரிப்பா” எனக்கூறி தளர்ந்து அமர்ந்தார் ஏற்கனவே அவருக்கு இதயத்தில் கோளாரு. இப்போ இதுவும் சேர பத்து வயசு முதுர்ந்த போல தொய்ந்து போய் அமர்ந்தார். இது அத்தனைக்கும் காரணமான ஆதவன் மேல் தான் கோபம் வந்தது அகிலாவுக்கு. எழுந்து கிளம்பிவிட்டாள் அவள் வீட்டுக்கு.
சொல்லாமல் கொள்ளாமல் செல்லும் மனைவி பின்னாலே அஸ்வந்த் செல்ல, தன் வீட்டுக்கு வந்தவளோ, தம்பியின் அறைக்குச் செல்ல, அவள் உடன்பிறப்போ சுகமான உறக்கத்தில். வந்த ஆத்திரத்திற்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை அவன் முகத்தில் சரித்திருந்தாள்.
“ஐயோ அம்மா!” என அடித்துப் பிடித்து அவன் எழ, காளியாக நின்றிருந்தாள் அவன் அக்கா அகிலா.