Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 16
அகிலா “சனியனே! சனியனே! எல்லாம் உன்னால தான். உன்னை எல்லாம்..” எனச் சுற்றி முற்றிப் பார்த்து அருகே கிடந்த துடப்பத்தை எடுத்தவள் அடிக்க ஆரம்பிக்க,
ஆதவன் “ஆ.. எருமை.. எருமை.. ஏண்டி அடிக்கிற?”
“நீ பண்ணினதுக்கு உன்னைக் கொல்லனும்டா” என்றாள், ஆனால் அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவள் அடியிலிருந்து துள்ளித் துள்ளித் தப்பித்துக் கொண்டே,
“நான் என்னடி பண்ணினேன்? நான் பாட்டுக்கு அக்கடானு தூங்கிட்டு இருந்தேன்.. தூங்கினவன எழுப்பி அடிக்கிற சனியனே.. அடிக்கிறத நிறுத்துடி” எனக் கத்தினான்.
இவர்கள் கத்தின சத்தத்தில் பூபாலனும், எழிலரசியும் அடித்துப் பிடித்துக் கூடத்திற்கு வர, அங்கு அஸ்வந்தும் வரச் சரியாக இருந்தது.
பூபாலன் “என்ன மாப்பிள்ளை.. என்னாச்சு?”
அஸ்வந்த் “அகிலா கோபத்துல வந்தா மாமா அதான் பின்னாடி வந்தேன்”
எழிலரசி “ரெண்டும் ஆரம்பிச்சிருங்க.. கல்யாணம் ஆகியும் கூட அடிச்சிக்கிட்டு சாகுது ரெண்டும். இதுகள” என ஆதவன் அறைக்குச் செல்ல மாடிக்கு ஏறினார்.
எழில் “ஏய் அகிலா! வந்ததும் வராததுமா இவண்ட்ட ஏண்டி வம்பு பண்ணிட்டு இருக்க?”
“எல்லாம் இவனால தாம்மா..” என்றவள் கையில் உள்ள துடப்பத்தை அவன் மூஞ்சியில் எறிய, லாவகமாக நகர்ந்து தப்பித்தான்.
அகிலா “மூஞ்சையும், முகரையையும் பாரு. கொஞ்ச நாள் பொறுப்பா இருக்கானு சந்தோஷப்பட்டேன். இப்போ இவனால மொத்த குடும்பமும் அழுதுட்டு இருக்கு” எனக் கண்ணீர் வடித்தாள்.
பூபாலன் “ஏம்மா அழற என்னாச்சு?”
அகிலா “எல்லாம் இவனால தான்ப்பா” என்றாள் அழுதுகொண்டே,
பூபாலன் “கொஞ்ச நாளா பொறுப்பா இருந்தனால தான் இந்தக் கல்யாணம் பேசினோம். இந்தத் தறுதலை இப்படி பண்ணுவானு யாருமே எதிர்பார்க்கலயே! இப்போ என்ன பிரச்சனை? ஏன் அழற?” எனக்கேட்க, அவள் அழுது கொண்டே இருந்தாள்.
அஸ்வந்த் தான் சித்தார்த் வீட்டில் நடந்ததைக் கூறினான். பூபாலனும், எழிலரசியும் தலையில் கைவைத்து இடிந்து போய்க் கட்டிலில் அமர்ந்தனர்.
ஆதவன் “மதுக்கு காயம் வர அளவுக்குச் சித்தண்ணா அடிச்சிருக்காங்களா.. நீங்க நல்லா பார்த்தீங்களா அத்தான்?” என அஸ்வந்திடம் கேட்க, அஸ்வந்துக்கு ஆதவனுடன் பேசவே விருப்பம் இல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அகிலா “ஏண்டா கேட்க மாட்ட, எல்லாம் உன்னால தாண்டா. கைவரைக்கும் வந்த தாலிய தூக்கி அவர் கிட்ட குடுப்பீயா? உனக்கென்னா கிறுக்கா பிடிச்சிருக்கு?”
பூபாலன் “இத தான் நானும் நேத்துல இருந்து கேட்குறேன். வாய திறப்பேனான்றான்”
அகிலா “ஏண்டா இப்படி பண்ணித் தொலைச்ச. சொல்லித் தொலையேன்” எனத் திரும்ப அவனை அடிக்க, அவள் கையைப் பிடித்துத் தடுத்தவாறு கண்ணில் கனல் பறக்க,
ஆதவன் “நான் கேட்டது பதில் நீ சொல்லு.. காயம் சித்தண்ணாவால வந்ததா? இல்ல நீ தப்பா புரிஞ்சுக்கிட்டியா?”
அகிலா “நான் என்ன கேட்குறேன்.. நீ என்ன கேட்குற?”
ஆதவன் “முதல்ல நான் கேட்டது பதில் சொல்லு. மது சொன்னாளா? சித்தண்ணா அடிச்சு காயமாச்சுனு மது சொன்னாளா?” கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல அதிலேயே நின்றான்.
அகிலா “இல்ல.. கட்டில்ல இடிச்சிக்கிட்டேனு சொன்னா.. ஆனா எங்களுக்கு நம்பிக்கை இல்ல. அவள மிரட்டிப் பேச வச்ச போல இருந்துச்சு. சித்தார்த் அண்ணன் பேச்சே சரியில்ல. எங்கள வீட்டுக்கே வரக் கூடாது அசிங்கப்படுத்தி அனுப்பிட்டார்”
“உங்க யூகத்துக்கு என்னை அடிக்காத.. அவ உண்மையிலேயே இடிச்சிருந்தா?”
“அவன் தள்ளிவிட்டிருந்தா?” என அஸ்வந்த் ஆத்திரமாகக் கேட்க, உடனே சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.
அகிலா “டேய் இத்தனை பேர் கேட்குறோம்ல. நேத்து ஏன் அப்படி பண்ணினனு? பதில் சொல்றா நாயே.. எஸ்கேப் ஆகி எங்கடா போற?”
“மதுவ பார்க்க”
அஸ்வந்த் “உன்னை மட்டும் தலவாழை விருந்துக்கு அழைக்கிறாங்க போ” எனக் கடுப்பாக முனங்கினான்.
அகிலா “மதுவ பாக்குறது இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்டா முதல்ல”
“அந்தத் தாலிய நான் கட்டிருந்தா மனசுக்குள்ள நொந்தே அவ செத்துப் போயிருப்பா.. அவ வாழட்டும்னு தான் அப்படி பண்ணினேன்” என விருவிருவென வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராக வந்தது சித்தார்த் வீட்டுக்கு.
ஆனந்தி “அட வெட்கங்கெட்டங்களா! உங்களுக்குச் சூடு, சொரணையே இல்லையா? இப்ப தான எம்புள்ள உங்கக்காள விரட்டிவுட்டியான் அடுத்து நீ வந்துகின.. இன்னா இருந்தாலும் என்புள்ள உங்கள விரட்டி அடிக்கும்போது நல்லாத்தாண்டா இருக்கு. உங்கக்காக்காரி எம்புள்ள வாழ வேண்டிய வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கல.. அதுக்குகோசரம் தான் நல்ல பரிசு இப்போ என் புள்ள குடுத்துவிட்டான். நீயும் வாங்கிக்கட்டத்தேன் வந்துகின போல.. எம்புள்ள விரட்டுறதுக்குள்ள நீயே கிளம்பிடு” எனக்கூற,
“சித்தண்ணா.. சித்தண்ணா..” எனக் கத்தினான். அவனது சத்தத்தில் அமைதியாக வந்து நின்றான் சித்தார்த்.
“மது எங்க? அவளுக்கு எப்படி காயமாச்சு?” எனச் சத்தமாகக் கேட்க, ஓடிவந்த மது, எங்கே இவனையும் சித்தார்த் திட்டிவிடுவானோ என்ற பயத்தில்,
“ஏன் ஆது இங்க வந்த? நான் தான் யாரையும் வர வேண்டாம்னு சொல்லித்தான அவங்களை அனுப்பிவிட்டேன். இப்போ எதுக்கு நீ வந்த?”
“அது இருக்கட்டும் தலையில என்னடி காயம்?” என்றான் கோபமாக, அவனை அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
“அய்யோ கட்டில்ல முட்டிக்கிட்டேனு எத்தனை தடவை சொல்றது. இனி யாரும் இங்க வராதீங்க. அசிங்கப்படாதீங்க.. போய்டுங்க” என அழுதவாறு அறைக்குள் ஓடினாள்.
“அவ அழுதே நாம பார்த்ததில்லை. இப்போ ஒவ்வொரு தடவையும் அவ அழறதுக்கு காரணம் இந்த வீட்டாளுங்க தான். இனி அவ கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன். என்னமோ வீராப்பா கட்டிட்டு வந்தீங்க.. இதுக்கு தானா?” எனக் கோபமாகக் கேட்டான்.
“நானா வந்து கட்டிக்கிட்டேன். நீ தான தாலிய குடுத்த?” என நக்கலாகக் கேட்க, சித்தார்த்தை முறைத்தவாறு வெளியேறினான் ஆதவன்.
அறைக்குள்ளோ தன் குடும்பத்தை நினைத்து அழுதுகொண்டிருந்தாள் மது. அதைப் பார்த்த சித்தார்த்துக்கோ அத்தனை ஆத்திரமாக வந்தது.
“இப்போ எதுக்கு அழற? வாரவன் போறவன்லாம் நான் என்னமோ உன்னைக் கொடுமை படுத்துற மாதிரி பேசிட்டு போறதுக்கா? இப்படி அழுது கஷ்டப்பட்டு எல்லாம் இங்க இருக்க வேண்டிய அவசியமில்ல. உங்கப்பன் வீட்டுக்குக் கிளம்பு”
“இங்கபாரு சித்தத்து அப்பன் கிப்பனு மரியாதை இல்லாம பேசாத ஆம சொல்லிட்டேன்”
“ஹ்ம்ம் ரூம்குள்ள மட்டும் இப்படி எகிறிக்கிட்டு சண்டைக்கு வா. வெளியே வந்தா பாவமா மூஞ்ச வச்சிக்கிட்டு நான் கொடுமை பண்றமாதிரி சீன் போட்டு என்ன வில்லனாக்கிடு”
“வர வர நீ வில்லனா தான் அகிட்டு இருக்க”
“அப்போ உன் ஹீரோ இப்போ தான் வந்துட்டு போறாரு கூப்பிடவா? போறீயா?” எனக்கேட்க, அவளோ அவனை முறைத்துக் கொண்டிருக்கும் போதே ஆனந்தி அறைக்கதவைத் தட்டினார்.
“என்னம்மா?” என்றான் கதவைத் திறந்து.
“சிந்துக்கு உடம்புக்கு நோவாம். என்னை வரச் சொன்னா.. ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போவ போறேன். அடுப்புல அப்படியே கிடக்கு. மஹாராணிய வந்து பார்க்கச் சொல்லு. நான் கிளம்புறேன்” எனக் கிளம்பிவிட்டார்.
அவர் பேசுவது மதுவுக்கும் கேட்க, எழுந்து சமையலறைக்குச் சென்றாள். சித்தார்த்தும் வெளியே கிளம்பிவிட்டான். இளங்கோ காலையிலேயே கடைக்குச் சென்றிருக்க, தனியாக இருந்தாள் மது.
‘இது என்னது எல்லா காயும் நறுக்கி வச்சிருக்காங்க.. இத என்ன பண்றது? வீராப்பா கிட்சனுக்குள்ள வந்துட்டோம் என்ன பண்றதுனு தெரியலயே! யூட்டூப் கிட்ட கேட்டாலாவது என்ன பண்றதுன்னு சொல்லும் இப்போ அதுவும் இல்ல” என யோசித்தவள் தட்டுத்தடுமாறி, கைக்காலைச் சுட்டு, சாதம், சாம்பாரும், ஒரு காயும் பொறித்து வைத்தாள்.
இளங்கோ எப்போதும் மதிய சாப்பாடுக்கு வீட்டுக்கு வருவதில்லை. அவருக்கு டிப்பனில் அடைத்து வைத்தால் ஒருவர் வந்து வாங்கிச் செல்வார் அது அவளுக்குத் தெரியுமாதலால் தயார் செய்து வைத்துவிட்டாள்.
ஆனந்தியும், சித்தார்த்தும் வரவே இல்லை. இவளுக்குப் பசிக்கவேற ஆரம்பித்தது ஊசியைப் போட்டுவிட்டாள். சித்தார்த்துக்கு அழைத்துப் பார்க்கலாமென நினைத்தாலும் கையில் அலைபேசி இல்லை, அப்போது கையில் ஒரு சைவ சாப்பாடு பார்சலுடன் வந்தவன், தானே பிரித்து வைத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
“சித்தத்து.. நான் சமைச்சுட்டேன்”
“அதுக்கு அவார்ட் கொடுக்கட்டுமா?”
“ஏன் கடையில வாங்கிட்டு வந்தீங்க. நான் வீட்டு சாப்பாடு எடுத்துட்டு வரேன்”
“தேவையில்ல” எனத் தான் வாங்கிவந்ததை சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிடும் வரை அங்கேயே நின்றாள். சாப்பிட்டவன் மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். அவளுக்குப் பசி வறண்டுபோன உணர்வு.
சமையலறைக்கு சென்றவள் ஒரு டம்ளர் தண்ணீயைக் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்துவிட்டாள். மீண்டும் கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்..
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்..
தேன்நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை? வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை..
எனை தான் அன்பே மறந்தாயோ? மறப்பேன் என்றே நினைத்தாயோ?
என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக..
சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடி இந்நாள் நல்ல தேதி.. நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்.. சேர்ந்ததே நம் ஜீவனே!
மாலைபோல ஆனந்தி சிந்துவுடன் வீட்டிற்குள் நுழைந்தார் முகம் முழுவதும் சிரிப்பும், பூரிப்புமாக. மது என ஒரு ஜீவன் அங்கு இருப்பதே இருவருக்கும் தெரியாத மாதிரி தங்களுக்குள் பேசிக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர்.
சமையலறைக்கு சென்ற ஆனந்தி, மது சமைத்த எதையும் தொடக்கூட இல்லை. தானாக ஏதோ இனிப்பு செய்தார். சிந்துவுக்கு குடுத்தார். கொஞ்சம் எடுத்து ஒரு டப்பாவில் அடைத்துச் சிந்து வீட்டு கொடுத்தனுப்பினார். மது முதன்முறையாகக் கஷ்டப்பட்டு செய்த சாப்பாடை சீண்ட ஆளில்லை.
இரவு அனைவரும் வீட்டுக்கு வர, தடபுடலாக இரவு உணவைச் சமைத்திருந்தாள் ஆனந்தி. சித்தார்த்தும், இளங்கோவும் அவளது புன்னகை முகத்தைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். இளங்கோ மதுவையும் சேர்த்து தங்களுடன் சாப்பிட வைத்தார். சாப்பிட்டு முடித்தபிறகு,
ஆனந்தி “வூட்டுல ஒரு நல்ல சேதி நடந்திருக்கு.. சிந்து மாசமா இருக்கா” எனச் சந்தோஷமாகக் கூற, அனைவருக்கும் சந்தோஷமே!
இளங்கோ “பரவாயில்லையே என் மருமவ வூட்டுக்கு வந்த முதல் நாளே வூட்டுல நல்ல விஷயம் நடந்துருக்கே! எல்லாமென மருமவ ராசிதேன்” எனக்கூற,
“இந்தாருய்யா.. நான் கோயிலு குளம்முனு நேத்தி வச்சதுக்கு கடவுள் கொடுத்த வரம். எந்தச் சீக்குக்காரி ராசியுமில்ல” எனக்கத்தினார்.
இரவு உணவு வேலை முடிந்து சமையலறையை சுத்தம் செய்யும்போது, மது மதியம் செய்த அத்தனையும் குப்பைக்குச் சென்றது. இவ்வீட்டில் அவளது நிலையும் அதுவோ எனக் கலங்கிய கண்களைத் துடைத்தவாறு, சுத்தம் செய்து விட்டு அறைக்கு வந்தால், நேற்று போல இன்றும் படுக்கையுடன் வெளியேறினான் சித்தார்த்.
இப்படியே விட்டால் சரிவர மாட்டானென நினைத்தவள், தனக்கும் ஒரு படுக்கையை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வர, அங்கு ஏற்கனவே இளங்கோ படுத்திருந்தார். சிந்து ஆனந்தியுடன் அறையில் படுக்க, இளங்கோ கூடத்தில் படுத்திருந்த இளங்கோவுக்கு அன்று மாலை அன்பு வந்து தன்னை சந்தித்த நினைவு தான்.
“என்ன மச்சான்.. சித்தார்த் இப்படி எல்லாம் பண்றான்?”
“அதான் அன்பு எனக்கும் புரியமாட்டுது. நல்லா இருந்த புள்ள இப்படி செய்றான். கேட்டா குண்டக்க மண்டக்க தான் பதில் சொல்றான். ஆனா மெய்யாலுமே அவன் மதுவ அடிச்சிருக்க மாட்டான், மது தான் தெரியாம இடிச்சிருக்கும். ஏன்னா அவன் நேத்து ஹால்ல தான் தூங்கினான். மதும்மா மட்டும் தான் ரூம்ல தூங்குச்சு”
“தனித்தனியா இருக்காங்களா?” என்றார் அதிர்வாக. அவருக்குப் பயம் பிடித்துக்கொண்டது. “எங்க மேல தான் கோபம், அதான் இப்படி இருக்கானு நினைச்சேன் ஆனா மதும்மாக்கிட்டயும் ஏன் தள்ளி இருக்கான். பிடிச்சு தான கட்டிக்கிட்டான். அப்போ மதும்மா மேலயும் கோபமா இருக்கானா? அவளயும் கஷ்டப்படுத்துறானா? வேற வழியில்லாம அவன நம்பி தான என் பொண்ண விட்டேன்” என நெஞ்சை நீவியபடி அங்கிருந்த இருக்கையில் அமர,
இளங்கோ “நீ பேஜாராகாத அன்பு. நான் அந்தாண்ட தான இருக்கேன் எம்மருவள நான் பத்திரமா பார்த்துக்கிறேன். இன்னைக்கு காலையில நாஸ்ட்டா கூட மதும்மாவ என்னோட சேர்த்தி துண்ண வச்சின்னு தான் வந்தேன். அவேன் காண்டாக்கிறான் சரியாகிடுவான். நீங்களும் கொஞ்சம் பொறுமையாருங்க” என நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்திருந்தார்.
இப்போது பார்க்க மதுவும், சித்தார்த்தும் ஆளுக்கொரு பாய், தலையணையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, இளங்கோ “இங்க பாரு சித்தார்த்து.. நாங்க வேணாம் வேணாம்னு சொல்ல, வம்மா கட்டிக்கிட்டு வந்த பொண்ண நோவடிக்காத. ஒழுங்கா அந்தப் புள்ளையோட வாழுற வழியபாரு. உள்ளே போ” எனக்கூறி படுத்துவிட்டார். அறைக்குள் வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நின்றனர்.
சித்தார்த் “நீ மேல படு.. நான் கீழ படுக்குறேன்”
“நானும் கீழ தான் படுப்பேன்”
“அப்போ நீ கீழ படு.. நான் மேல படுக்குறேன்”
“நானும் மேல தான் படுப்பேன்” எனக்கூற முறைத்தவன்,
“கொழுப்பு டி உனக்கு”
“கொழுப்புலாம் இன்னும் வரல.. இப்போதைக்கு சுகர் மட்டும் தான் இருக்கு. ஏதுக்கும் அடுத்த தடவை ஹாஸ்பிடல் போகும்போது கொலஸ்ட்ரால் செக் பண்றேன்”
“அதான என்னடா இரண்டு நாளா வாய திறக்கலயே.. ஒருவேலை திருந்திடுச்சோனு நினைச்சேன்.. நீ திருந்துற கேஸ் இல்ல” என்றவன் கட்டிலில் தலையணையை போட்டு நெற்றியில் கையை வைத்துப் படுத்தான்.
வேகமாக அவளும் கட்டிலில் அவனுக்கருகில் தலையணையை போட்டு அவனைப் பார்த்தபடி படுத்திருந்தாள். வெகுநாள் கனவல்லவா அவனுடனான வாழ்க்கை. அருகில் படுத்துக் குறுகுறுவென அவள் பார்ப்பது அவனுக்கும் தெரியும் ஆனால் அவள் மேலுள்ள கோபத்தில்,
“அந்தப் பக்கம் திரும்பிப் படுக்குறியா இல்ல நான் மாடிக்குப் போய்ப் படுக்கவா?” எனக் கடுப்பாகக் கத்தினான்.
“கத்தாத.. கத்தாத சித்தத்து” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். என்னதான் அவனுடன் சரிக்கு சரி வாய் பேசினாலும், அவன் கோபத்தில் தள்ளி இருக்கும்போது வலிய சென்று பேசினாலும் மனதோரம் அவன் கோபமும், அந்தக் கோபத்தால் அவள் பெற்றவர்களையும், கூடப் பிறந்தவனையும் தள்ளி வைத்து, அவர்களை அவமானப்படுத்தியது அவள் மனதின் இரணவேதனையாகத் தான் இருந்தது.
ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவன் கோபத்தை தணிக்க வேண்டும் என நினைத்தாள். அவன் கோபம் தணிந்தாலே எல்லாமே சரியாகிவிடுமே! அவன் ஒன்றும் அவர்களின் எதிரியல்லவே! அதனால்தான் தான் என்ன அவமானப்பட்டாலும் பரவாயில்லையெனப் பொறுத்துக்கொண்டாள். அவளுக்கு அவன் கோபம் குறைய வேண்டும் அவ்வளவே!
அதையே நினைத்துக்கொண்டு படுத்தவள் மனதில் இன்று காலை அஸ்வந்த் வந்தது, ஆது வந்தது எல்லாம் ஓடியது ஆனால் இதை எல்லாம் தாண்டி அவளுக்குப் பெற்றவர்களைத் தேடியது. என்ன இருந்தாலும் பெற்றவர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவள்? அன்புவையும், ஈகையையும் மனது வெகுவாகத் தேடியது.
சித்தார்த்திடம் கேட்கவும் முடியாது. அங்குச் செல்லமாட்டேன் எனக்கூறி தானே இந்த வீட்டிற்கு வந்தாள். அப்படியிருக்கும்போது அங்குச் செல்கிறேன் எனக் கேட்கவே முடியவில்லை அவளால். தாய்வீட்டு ஏக்கத்திலேயே கண்களில் கண்ணீர்வடிய எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.
காயப்பட்டவளுக்கு ஏற்பட்ட வலியைவிட அதிகமாக வலித்தது காயப்படுத்தியவனுக்கு. மெல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள்.
“சாரிடி.. என்னால முடியல.. நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றியத என்னால தாங்க முடியல.. நானே நினைச்சாலும் தடுக்க முடியாம வார்த்தை உன்னைக் காயப்படுத்துற போலத் தான் வருது. என்ன செய்யச் சொல்ற? இப்போ இப்படி வலிய வலிய வரீயே ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை என் கால் அட்டன் பண்ணி விஷயத்தைச் சொல்லிருக்கலாம்ல.
எங்கம்மா நம்ம கல்யாணம் நடந்திடக்கூடாதுனு என்கிட்டயே அவ்ளோ திருகுதாளம் பண்ணுச்சு. நான் குடிக்கிற பால்ல என்னமோ கலந்தத என் கண்ணால பார்த்தேனே! அப்போவே தெரியும் என் அம்மாவும், தங்கச்சியும் எந்த எல்லைக்கும் போய் நம்மள சேரவிடமாட்டங்கனு.
என்கிட்டயே இப்படினா உங்ககிட்ட என்னெல்லாம் வில்லத்தனம் பண்ணிச்சோ! ஆனா அதை மறச்சி நீங்கப் பண்ணினதும் பெரிய தப்பு தான. அவங்க என்ன பண்ணினாங்கனு என்கிட்ட சொல்லிருந்தா எல்லாத்தையும் நான் சரி பண்ணி நம்ம கல்யாணத்த நல்லபடியா நடத்திருந்துப்பேனே! இப்படி பண்ணீட்டிங்களே நீங்க அந்தக் கோபம் தான் மனசுல கிடந்து அறுக்குது.
எங்கம்மாவும், தங்கச்சியும் என்ன பண்ணினாங்கனு எனக்குத் தெரியுற அன்னைக்கு இருக்கு அவங்களுக்கு. நானும் உன்கிட்ட கோப படக்கூடாதுனு தான் நினைக்கிறேன் ஆனா என்ன அறியாம கோபம் வருது என்ன பண்ண நீயே சொல்லு?
நான் இங்க இருந்தா உன்னைக் காயப்படுத்திட்டே தான் இருப்பேன். நான் திரும்ப டிரைனிங் கிளம்புறேண்டி. காலம் எல்லாத்தையும் மாற்றும் திரும்பி வரும்போது உன்னோட சித்தத்துவா வர முயற்சி பண்றேன்” எனத் தூங்கிக் கொண்டிருந்தவள் நெற்றியில் முத்தத்தைப் பதித்து உறக்கத்தைத் தழுவினான்.