எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 18

Lufa Novels

Moderator

சக்கரை தழுவிய நொடியல்லவா!


அத்தியாயம் 18


தன்னை யாரோ இறுக்குவது போல இருக்க, நல்ல உறக்கத்திலிருந்த விழிகளைக் கஷ்டப்பட்டு பிரித்தாள் மது. அருகில் மிக அருகில் ஏதோ உருவம், தலையைத் தூக்கிப்பார்த்தாள். அவள் சித்தார்த்தின் வெற்று மார்பில் தலைவைத்து படுத்திருக்க, அவனோ அவளை இறுக்கியபடி தூங்கிக்கொண்டிருந்தான்.


சட்டெனக் காலை நடந்த நிகழ்வு கண்முன் விரிந்தது. ‘கனவா? நிஜமா? ஆது வந்துட்டு போனான் அதுக்கு பிறகு நடந்தது எல்லாம்..’ எனக் குழம்பியவள் குனிந்து தன்னைப் பார்க்க, அவள் கோலமே நடந்தது அத்தனையும் நிஜம் என வெளிச்சம் போட்டுக் காட்டியது.


பதறி அருகிலிருந்த போர்வையை எடுத்து மார்போடு மூடிக்கொண்டாள். ‘அப்போ நிஜம் தானா? அச்சோ!’ என வெட்கத்தில் சிவந்தவள், ‘எப்படி போறது இந்த நிலைமையில’ என நினைத்து எட்டி தன் உடைகளைக் கண்களால் தேட, அய்யோ பாவம் ஒன்றுமே கைக்கு அருகில் இல்லை. மூலைக்கு ஒன்றாகச் சிதறிக்கிடந்தது.


‘சித்தத்து தூங்கும் போதே மெதுவா எழுந்து ஓடிரு மது’ என மனதில் நினைத்தவள், மெல்ல அசைந்து எழப்போக, அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அவன் மீதே போட்டுக்கொண்டவன்,


“எங்கடி போற?” எனக் கேட்டுக்கொண்டே கழுத்தில் முகம் பதித்து செல்லமாகக் கடித்தான்.


“அய்யோ விடு சித்தத்து.. மணிய பாரேன் நாழாச்சு. ரூம்குள்ள காலையில வந்தோம், இப்போ வரை வெளியே போகல.. தப்பா நினைக்கப் போறாங்க.. நான் போகனும் விடு”


“போகலாம் போகலாம்” என்றவனின் குரலே அடுத்த கூடலுக்கு அடித்தளம் போடுவது போல இருக்க,


“விடு சித்தத்து நேரம் ஆச்சு” என இவள் சிணுங்கி அவன் மோகத்தை மேலும் கூட்ட, அவளைக் கீழே தள்ளி அவள்மேல் அவன் படர்ந்தான்.


“அய்யோ விடு சித்தத்து” என அவனைக் கீழே தள்ளினாள். அதில் “ம்ச்” எனச் சலித்துக் கொண்டு அவளைப் பார்த்தவாறே படுத்திருக்க, நகத்தைக் கடித்துக் கொண்டே,


“சித்தத்து! அந்தப் புடவைய கொஞ்சம் எடுத்துத் தாயேன்” எனத் தயங்கி, தயங்கி கேட்க அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது அவளின் தயக்கமும், கூச்சமும்.


“என்னால முடியாது. நீயே போய் எடுத்துக்கோ” எனக் கைகளைத் தலைக்குக் கீழாகக் கொடுத்து மல்லாக்க படுத்துவிட்டான்.


“அப்போ பெட்ஷீட்டயாது விடு சித்தத்து”


“ஹான். அப்போ நான் பப்பரப்பானு படுக்கவா? எங்களுக்கும் கூச்சம் இருக்கு. உனக்கு வேணுனா நீயே போய் எடு”


“அப்போ கண்ண மூடு”


“முடியாது. என் கண்ணு என் உரிமை. நான் என்ன வேணா பார்ப்பேன்.. என்ன வேணா பண்ணுவேன்.. அதெல்லாம் நீ சொல்லக் கூடாது”


“அய்யோ இம்சை டா” என நெற்றியில் அடித்து “கொஞ்சம் கருணை காட்டு சித்தத்து” எனக் கெஞ்ச,


“அப்போ ஒரு கால் மணிநேரம் நான் சொல்றத மட்டும் தான் செய்யனும்.. அப்படி பண்ணிட்ட நான் உன்னை விட்டுறேன்” என ஒப்பந்தம் பேசி, அவளைச் சம்மதிக்க வைத்து அவனுக்குத் தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் கடந்து தான் அவளை வெளியே விட்டான் அந்தக் கள்வன்.


போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே!


நாள்முழுக்க உன்னை.. கண்கள் தின்ற பின்னும்.. உந்தன் சொற்கள் பெய்து.. நான் நனைந்த பின்னும்..


இன்னும் இன்னும் பக்கம் வந்தும், கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும், மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்..


போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே!



குளித்து வேறு உடை மாற்றுவதற்குள் அவளுக்குக் கிறுகிறுத்தது. அவளுக்கு மூன்று வேலையும் ஊசியும், சாப்பாடும் மிக முக்கியம். சாப்பிடாவிட்டால் இப்படிதான் இருக்கும். குளிக்கச் செல்லும் முன்னே ஊசியைப் போட்டவள் குளித்து முடித்து, வந்ததும் பசி கண்ணைக் கட்டியது.


நேராகச் சமையலறைக்குள் நுழைந்தவள் சாப்பிடத் தேட, ஒன்றுமே இல்லை. அப்போது தான் டீ வைத்துக் கொண்டிருந்த ஆனந்தி இவளைப் பார்த்த பார்வை அவ்வளவு கீழ்த்தரமாக இருந்தது. பார்வை மட்டும் தானா..


“இன்னா ஜென்மங்களோ ச்சீ! பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒருத்திய நான் பார்க்கவே இல்ல. மானங்கெட்ட ஜென்மங்க.. இப்படி தான் தலையணை மந்திரம் போட்டு ஆம்பிள்ளைகளை மயக்கி வச்சிருக்கீதுக. காலையில அடச்ச கதவு சாய்ந்தரம் வரை திறக்குறதில்லை கருமம் இப்படியா..” என வார்த்தையில் வக்கிரத்தைக் கொட்ட, துடித்துப்போனாள் பெண்ணவள்.


அங்கே அவள் மாமியார் கடைபரப்புவது அவளின் அந்தரங்கத்தை அல்லவா! விமர்சிப்பது அவள் தாம்பத்தியத்தை அல்லவா! அசிங்கப்படுத்துவது அவர்களது காதலை அல்லவா! ஆசையாக வாழ ஆரம்பித்த முதல் நாளே அவர்கள் வாழ்க்கையில் தணலை அள்ளிக் கொட்டிக்கொண்டல்லவா இருக்கிறார்!


கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக ஊற்றியது. பசி மயக்கமும், மனதின் துக்கமும் ஒருசேர தாக்கக் கால்கள் வலுவிழந்து கீழே விழப்போகும் நேரம் அரணாய் வந்து தோளோடு அணைத்துப் பிடித்தான் சித்தார்த்.


சித்தார்த் “இதுக்கு மேல ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை எங்கள பத்தி வந்துச்சு நல்லா இருக்காது சொல்லிட்டேன். ஆமா காலையில் அடச்ச கதவ இப்போ தான் திறந்தோம், அதுல உங்களுக்கு என்ன வருத்தம்னு கேட்குறேன்” எனக்கேட்க,


“டேய்! உங்கம்மாட்ட பேசுற ஞாபகமீக்கட்டும்”


“நீங்களும் மருமக கிட்ட பேசுற பேச்சு பேசலயே! எங்க பெர்சனல தான பேசினீங்க?”


“ச்சீ சரியான அமுக்குனிடீ நீ. இம்மாநாளும் ஒத்த வார்த்தை என்னாண்ட இப்படி அழுத்தமா பேசாதவன, ஒத்த நாளுல கலீஜா பேசுறமேனி கொண்டுவந்துட்டல”


“அவ ஒன்னும் பண்ணல.. பேசினது எல்லாம் நீங்க”


“இன்னடா பேசினேன்.. இல்லை இன்னா பேசினேனுங்குறேன்? வூட்டுல இரண்டு பொம்பளைங்க இருக்காங்கனு நினைப்பீருக்கா உங்களாண்ட? பகல்லயே கூத்தடிக்கிறீங்க.. அப்போ கேட்கத்தான் செய்வேன்” எனக்கூற காதுகளைப் பொத்திக் கொண்டாள் மது.


“வேணாம் சித்தத்து.. பேச பேச பேச்சு வளரும். அது வேண்டாமே” எனக்கூறினாள். அவளுக்குத் தான் ஆனந்தி வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் அத்துபடியே! இதுக்கு மேல் சித்தார்த் என்ன பேசினாலும் அவர்களது மானத்தையும், தாம்பத்தியத்தையும் தோரணம் கட்டி தொங்கவிடுவாள் தன் மாமியாரென நினைத்தவள் அவன் கைகளைப் பிடித்து இழுத்து அறைக்குச் சென்றாள்.


“ஆத்தாடி ஆத்தா! ஆம்பிள்ளைய இப்படி தான் கைகுள்ள போடுறதா? பொட்டிப்பாம்பா இவனும் போறானே! அடேய் அதுங்க பாம்புகடா.. நம்பாத..” எனக்கூற, பதில் பேசப் போன சித்தார்த்தை வம்படியாக இழுத்துக் கொண்டு அறைக்கு வந்துவிட்டாள்.


“என்னை ஏண்டி இழுத்துட்டு வர? அது என்னா பேச்சு பேசுது.. என்னை இழுத்துட்டு வாரா இவ”


“இல்ல சித்தத்து வேணாம்.. அவங்க அசிங்கமா பேசுவாங்க.. வேணாம்.. என்னால கேட்க முடியாது” என அழுக, அவள் அழுவதை காண சகிக்காதவன், அவள் எண்ணத்தைத் திசைதிருப்புவதற்காக,


“சரி விடு. கிளம்பு நம்ம வெளியே போய்ட்டு வரலாம்”


“எங்க?”


“எங்கயாது”


“இல்ல நான் வரல”


“கோயிலுக்குப் போலாம்டீ. நம்ம வாழ்க்கையை இன்னைக்கு முதல்முதலா ஆரம்பிச்சிருக்கோம். வா போய்ட்டு வரலாம். எல்லாம் நல்லதா நடக்கும்” என அழைக்க, கிளம்பிவிட்டாள்.


திருமணம் ஆனபிறகு, மனதார வாழ்க்கையை துவங்கிய பிறகு முதன்முதலாக வெளியே கூட்டிச்செல்கிறான். அழகாகக் கிளம்பி வந்தாள் அவளும். இருவரும் சற்று முன்னர் நடந்த நிகழ்வை ஒதுக்கிவிட்டு சந்தோஷமாகக் கிளம்பினர். அவன் இருசக்கர வாகனத்தில் பல்லாயிரம் தடவை ஏறியிருந்தாலும், முதன் முதலாய் உரிமையாய் அவனுடைய மனைவியாய் அமரும்போது சிலிர்த்தது.


“என்னடி சிலுக்குற?”


“ஃபஸ்ட் டைம் உன்னோட வைஃப்பா இந்தப் பைக்ல ஏறுறேன்ல அதான் சித்தத்து ஒரு மாதிரி ஆகிட்டு”


“அடேங்கப்பா.. சரிதான்” என்றவன் பைக்கை கிளப்பினான். பிரதான சாலைக்குச் செல்ல வேண்டுமானால் அவள் வீடு வழியாகத் தான் செல்ல வேண்டும். வண்டியில் ஏறியதும் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டாள் அவள் வீட்டை. அவள் அம்மா வாயிலில் நிற்பதும் அவள் கண்களுக்குப் புலப்பட்டது. மனம் பரபரத்தது.


ஈகையும் பார்த்துவிட்டார் மகள் மருமகனுடன் வெளியே கிளம்புவதை. வெள்ளிக்கிழமை திருமணத்தன்று காலையில் அவளைப் பார்த்தது இன்று ஞாயிறு மாலை, மொத்தமாகப் பார்த்தாலும் மூன்று நாளைத் தாண்டவில்லை ஆனால் மூவாண்டுகாலம் பார்க்காததை போல உள்ளம் தவியாய் தவித்தது.


வீட்டின் உள்ளே சென்று மறைவாக நின்று மகளைப் பார்க்கக் காத்திருந்தார். இங்கே சித்தார்த் வண்டியை ஓட்டி வர, மதுவின் வீடு வரும்போது வண்டியின் வேகம் அதிகரித்தது. மதுவுக்கும் தன் தாய் மறைவாக நின்று பார்ப்பாரெனத் தோன்ற, கோவிலுக்குச் செல்வதை சொல்லும் விதமாகக் கையை வைத்திருந்தாள்.


அவள் கண்ணுக்குத் தாய் எங்கு நிற்கிறாரெனப் பார்க்க முடியவில்லை வண்டியின் வேகம் அப்படி. ஆனால் மறைவாக நின்று மகளை மட்டுமே பார்த்த ஈகைக்கு மகள் கோவிலுக்குச் செல்வதாகச் சைகை காட்டியது புரிந்துவிட்டது. வேகமாகக் கணவனைத் தேடிச் சென்றார்.


“என்னங்க! என்னங்க!” எனக் கத்திக் கொண்டே வர,


“என்ன ஈகை ஏன் பதட்டமா வர?”


“நான் மதுவ பார்த்தேன்” எனக்கூற


“எங்க? எங்க?” எனப் பரபரப்பாக வெளியே வந்தார்.


“போய்ட்டாங்க. சித்து கூடப் பைக்கில போனங்க. கோயிலுக்குப் போறாங்க போல” எனக்கூற தளர்ந்து அமர்ந்தார். மகளைக் கண்ணால் கூடக் காண முடியாத சோகம் அவர்க்கு.


“வாங்கங்க நம்மளும் கோயிலுக்குப் போகலாம். அவங்க வீட்டுக்குத் தான போக முடியாது. கோயில் பொது தான அங்க போய்ப் பார்க்கலாம். முடிஞ்சா சித்துக்கிட்ட பேசிப் பார்க்கலாம்”


“அவங்க எந்தக் கோயிலுக்குப் போயிருக்காங்கனு யாருக்கு தெரியும்?” என்றார் கவலையாக,


“உங்க மகள பத்தி தெரியாதா? அவ அவ புள்ளையார தான் பார்க்கப் போவா”


“அப்போ போவோன்றயா?”


“ஆமாங்க கிளம்புங்க. நானும் கிளம்பி வாரேன்” என அவசர அவசரமாகக் கிளம்பினர் இருவரும். தரூண் தானும் வருவதாகக் கூற, அவனையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினர் மகளைப் பார்க்க.


******


கணவனுடன் அவனது இருசக்கர வாகனத்தில், அவன் தோல் மேல் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு செல்லும் நகர்வலத்துக்கு ஈடு இணை இருக்குதா என்ன? சந்தோஷமாக, மன நிறைவுடன் அவனோடு பயணித்தாள் பெண்.


மது “எந்தக் கோவிலுக்குப் போறோம் சித்தத்து?”


“எல்லாம் உன் ஆள பார்க்கத் தான். உன் பிள்ளையாரப்பாவ விட்டுட்டு வேற எங்கயும் நீ வந்துருவீயா என்ன?”


“அதான் நானும் சொல்ல வந்தேன். அங்கயே போகலாம்”


“சரி” என்றவனின் வண்டி கோயில் இருக்கும் திசைக்குச் செல்லாமல் வழிமாறிச் செல்ல,


“சித்தத்து! கோயிலுக்கு அந்தப்பக்கம்ல போகனும். எங்க போறோம்?” என்றாள்.


“கோயிலுக்குப் போலாம் அதுக்கு முன்னாடி சாப்பிட்டு போலாம். நீ காலையில இருந்து சாப்பிடல.. ஊசி வேற போட்டு இருக்க சாப்பிடனும்ல”


“ம்ம்” என்றாள் வருத்தமாக.


“சாரி! அம்மா பேசினது தப்பு. அவங்களுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன்”


“அய்யோ சித்தத்து! நீங்க வேற.. விடுங்க அதை..”


“ம்ம். எனக்கும் கஷ்டமா போயிடுச்சு. என்னால தான உனக்கும் இந்த அவமானம்”


“நம்மாள தான. உன்னால மட்டும் இல்ல” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே கூறினாள்.


“அடியேய் கோயிலுக்குப் போகனுமா? இல்ல சாப்பிட்டு வீட்டுக்கு வண்டிய விடவா?”


“அய்யோ சித்தத்து.. கோயிலுக்குப் போகனும்” எனச் சிணுங்க,


“அப்போ இப்படி எல்லாம் பேசாதடி.. எனக்கு மூடே மாறிடும் போல” என்றான். வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை இன்னும் அவன் பார்க்கவில்லை, பார்த்திருந்த்தால் உடனேயே வீட்டுக்குத் தான் சென்றிருப்பான்.


இருவரும் ஒரு உணவகத்துக்குச் சென்றனர். அவளுக்குப் பிடித்தமான உணவையே இருவருக்கும் வாங்கினான். என்ன தான் அவளோடு நல்லவிதமாகப் பழகினாலும் அவனின் ‘தாரா’ என்னும் அழைப்பு இதுவரை வரவேயில்லை. அவளும் அதற்கு ஏங்கினாலும் அவனுக்காகப் பொறுத்துக் கொண்டாள். அவன் மனக்காயம் ஆறவும் நாட்கள் வேண்டுமல்லவா!


இருவரும் அவர்களுக்குள் சந்தோஷமாய் பேசி, சிரித்து சாப்பிட்டு முடிக்க, பணியாளர் வந்தார்.


“மேம் டெஸர்ட், ஐஸ்கீரீம், ஜூஸ் எதுவும் வேணுமா?” எனக்கேட்க, கண்களில் மின்னல் வெட்டச் சித்தார்த்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதற்குப் பார்க்கிறாளென அறியாதவனா அவள் சித்தத்து.


சித்தார்த் “அதெல்லாம் வேணாம்” எனக்கூற, அவள் முகமே விழுந்துவிட்டது. அவள் முகத்தைப் பார்த்து விட்டு என்ன நினைத்தானோ பின் தானே அவரை அழைத்து “ஐஞ்சு ரூபா டைரிமில்க் இருக்கா?” எனக்கேட்க,


“சின்னது இல்ல சார்.. ஐம்பது ரூபா டைரி மில்க் தான் இருக்கு” எனக்கூற, சித்தார்த் பதிலளிக்கும் முன் முந்திக்கொண்டு “பரவாயில்ல கொண்டு வாங்க” எனத் தானே கூறினாள்.


“சுகர் கூடிடும்டி”


“நிறைய சாப்பிட மாட்டேன். ஃபிரிஜ்ல வைச்சு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா? நீ ஊருக்குப் போனபிறகு ஸ்டார்ட்டிங்ல ஆது வாங்கி தந்தான் தான்.. ஆனா அப்புறம் அவனும் கடை, வேலைனு மறந்துட்டான். நானும் சாப்பிடுறத விட்டுட்டேன். இன்னைக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் நீ வாங்கித்தர”


என மனதிலுள்ளதை மறைக்காமல் அவள் கூற, உள்மனதில் திருநீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டே இருந்த கோபம் வெளிவர, தனக்குள் மறைத்துக்கொண்டான் அவனவளுக்காக. அவளுடன் இருக்கும் இந்தச் சந்தோஷமான தருணத்தை இழக்க மனமில்லை அவனுக்கு.


*********


அன்பு “என்ன ஈகை கோயிலுக்கு வந்திருக்கானு சொன்ன, இப்போ ஆள காணோமே இங்க. சரியா பார்த்தீயா?”


“இல்லங்க அவள் சாமி கும்பிடுற போறேனு சொல்ற மாதிரி கைய வச்சிக் காட்டினாங்க. நான் பார்த்தேன்”


“அப்போ காணோமேடி. ஒரு வேலை வேற கோயிலுக்குப் போய்ருப்பாங்களா?”


“தெரியலயேங்க. ஆனா அவளுக்குப் பிள்ளையார் தான ரொம்ப பிடிக்கும். அதான் இங்க வந்திருப்பானு நினைச்சேன். ஒருவேலை வேற எங்கயும் போயிருக்காங்களோ!”


“தெரியல ஈகை. புள்ளைய கண்ணு தேடுது. கண்ணுலயாவது பார்த்திட மாட்டோமானு தான் சின்னபையன் மாதிரி ஓடிவந்தேன்” எனக் கூறியவர் கண்களில் விழிநீர் கசிந்தது.


“என்னங்க கோயிலுல கண்ணக் கசக்கிட்டு. சும்மா இருங்க” எனக் கணவனுக்கு ஆறுதல் கூறினாலும், கணவனின் நிலையையும், மகளின் நிலையையும் நினைத்து அவருக்குமே கண்ணீர் ஆறாய் பெருகியது.


மகளைத் தேடி காத்திருக்கும் இவர்களுக்கு மகளின் தரிசனம் கிடைக்குமா? மருமகனுடன் சமாதானம் பேச வந்திருப்பவர்களின் பேச்சுக்குக் காது கொடுப்பானா சித்தார்த்? அவர்களோடு சேர்ந்து நாமும் காத்திருப்போம்.
 

santhinagaraj

Well-known member
டேய் சித்தார்த் நீ இருக்கும் போதே உங்க அம்மா என்ன பேச்சு பேசுது பாரு அவளை விட்டுட்டு போயிட்டா அவ எப்படிடா தனியா சமாளிப்பா அந்த வீட்ல
அன்புவோட தவிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா கிட்ட இருந்து பொண்ண பிரிக்கிறது ரொம்ப தப்பு சித்தார்த்து.
 

Lufa Novels

Moderator
டேய் சித்தார்த் நீ இருக்கும் போதே உங்க அம்மா என்ன பேச்சு பேசுது பாரு அவளை விட்டுட்டு போயிட்டா அவ எப்படிடா தனியா சமாளிப்பா அந்த வீட்ல
அன்புவோட தவிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா கிட்ட இருந்து பொண்ண பிரிக்கிறது ரொம்ப தப்பு சித்தார்த்து.
Thank you dear🥰🥰

Seekiram purinjupan nu
Ninaikkuren
 

Mathykarthy

Well-known member
ஆனந்தி வாயைத் திறந்தாலே சாக்கடை தான் 😡😡😡😡

பொண்ணைப் பார்க்கக் கூட முடியாம பெத்தவங்க நிலையை நினைச்சா கஷ்டமா இருக்கு..... 😔

இவங்க கொஞ்சம் சித்தார்த்தையும் யோசிச்சு அன்னைக்கு முடிவு பண்ணியிருக்கலாம்....
 

Lufa Novels

Moderator
ஆனந்தி வாயைத் திறந்தாலே சாக்கடை தான் 😡😡😡😡

பொண்ணைப் பார்க்கக் கூட முடியாம பெத்தவங்க நிலையை நினைச்சா கஷ்டமா இருக்கு..... 😔

இவங்க கொஞ்சம் சித்தார்த்தையும் யோசிச்சு அன்னைக்கு முடிவு பண்ணியிருக்கலாம்....
Aamaa..

Thank you sis🥰🥰
 
Top