Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 20
ஆட்டோவில் வந்து இறங்கிய மதுவைப் பார்த்ததும் இளங்கோ
“எந்தாண்டமா போன? நான் பதறிக்கினேன் உன்ன காணாம. அவளாண்ட கேட்டா தெரியாதுன்னுட்டா.. இவன் இப்போ தான் வூட்டுக்கு வந்தான் அவனாண்ட கேட்டாலும் ஒரு பதிலயும் காணோம், என்னாண்ட முறச்சிட்டு போய்கினான்.. எங்கம்மா போன?”
“கோவிலுக்குப் போனேன் மாமா”
“இனி எந்தாண்ட போறதா இருந்தாலும் எனக்கு ஒரு போன் போட்டுச் சொல்லிக்கினு போம்மா”
“சரிங்க மாமா” என்றாள். பாவம் அவள் அவசரம் அவருக்குப் புரியவில்லை.
“நாஸ்டா துண்ணுட்டியாமா?”
“இல்ல மாமா”
“அப்போ வாம்மா சேர்ந்தே துண்ணலாம்” என அழைக்க, “இன்னும் ஊசி போடல மாமா போட்டுட்டு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” எனக்கூறி அவளறைக்கு ஓடினாள். செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் இளங்கோ.
உள்ளே சித்தார்த்தோ அவன் உடைகளை எல்லாம் எடுத்துப் பையில் அடுக்கிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கோ நெஞ்சில் நீர் வத்திப்போன நிலை. கதவில் சாய்ந்து நின்றுவிட்டாள் ஒரு கணம். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“சித்தத்து! சாரி சாரி சித்தத்து” என அவனைப் பின்னிலிருந்து அணைத்து அழுது கொண்டே கூறினாள். அவனோ ஜடம் போல அமைதியாய் நின்றான்.
“நான் தெரியாம பண்ணிட்டேன். இனி பேசமாட்டேன் சித்தத்து. நீ சொல்லாம யார்கிட்டயும் பேசமாட்டேன். என்னை மன்னிச்சிடு”
அவனிடம் பதிலே இல்லை. அவனிடமிருந்து பிரிந்து முன்னால் வந்தாள். அவன் முகமே கோபத்தில் சிவந்து கிடந்தது. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு,
“சாரி சித்தத்து. இனி இப்படி பண்ணமாட்டேன். துணி எல்லாம் எதுக்கு எடுக்குற.. ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாத சித்தத்து. நீ இல்லாம என்னால இருக்க முடியாது. சாரி சாரி சித்தத்து” எனக் கதறினாள்.
உள்ளங்கையை இறுக மூடிக்கொண்டதோடு அவன் மனதையும் மூடிக் கொண்டானோ! அசைவேயில்லை அவனிடம்.
“எதாவது பேசேன் சித்தத்து. இரண்டு அடி கூட அடிச்சிக்கோ ஆனா பேசாம மட்டும் இருக்காத” எனக் கதறினாள்.
அவனோ அவளாகத் தன் கையை விடும்வரை அமைதியாக இருந்து, அவள் கையை விட்டதும் மீண்டும் தன் துணிகளை எடுத்துப் பையில் வைத்தான். அவளோ பையை ஒரு கையால் எடுத்துத் தன் பின்னால் வைத்துக்கொண்டு,
“தரமாட்டேன். உன்னை எங்கயும் விடமாட்டேன்” எனக்கூறி மறுகையால் அவனைக் கட்டி அணைத்தாள். இப்போதும் அவனிடம் அசைவே இல்லை. அவன் கைகள் அவளைத் தழுவவில்லை, சிலைபோல அப்படியே நின்றான்.
அவனுக்கு இப்போது மனதில் ஓடியது அனைத்தும் தன் தாய் என்ன செய்தார்? வெளியில் சொல்ல முடியாத அளவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம் என அவர்கள் கூறுகிறார்கள் என்றால் எதற்காகக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள்? என்ன நடந்ததென இன்னமும் என்னிடம் சொல்லாமல் இருக்க காரணம் என்ன? என்ன நடந்தது? எனச் சரியான வழியில் சிந்திக்க ஆரம்பித்தான். அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான்.
“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு, ஏன் ஆதவனுக்கும் உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க?” எனக்கேட்க, சலெரென நிமிர்ந்தவள்.
“அத மட்டும் என்னால சொல்ல முடியாது சித்தத்து. உன்கிட்ட சொல்லமாட்டேனு அப்பாக்கு சத்தியம் பண்ணிருக்கேன்”
“அப்போ என்னை விடு” என அவளிடமிருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். “சித்தத்து” என அழைத்துக்கொண்டே அவளும் பின்னாடியே வந்தாள்.
கூடத்திலிருந்த இளங்கோவோ “இன்னாடா பிரச்சனை? இன்னாத்துக்கு மதும்மா அழுது? நீ பையோட எங்க கிளம்பிக்கின?” எனக்கேட்க, அறையிலிருந்து வெளியே வந்தனர் ஆனந்தியும், சிந்துவும். மது அழுவதைப் பார்க்க அவர்களுக்குக் குளுகுளுவென இருக்க, ஆனாலும் விஷயம் என்னவெனத் தெரியாமல் வேடிக்கை பார்த்தனர்.
“நான் திரும்ப டிரைனிங் கிளம்புறேன்” எனக்கூறினான்.
“புதன்கிழமைக்கு தான டிக்கெட் போட்ட, இன்னைக்கே இன்னாத்துக்கு கிளம்புற?”
“வரச் சொன்னாங்க கிளம்புறேன். எல்லாத்துக்கும் எதுக்கு இப்படி கேள்வி கேட்குறீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” எனக் குரல் அதிகார தோரணையோடு வர அடங்கி விட்டார் இளங்கோ. அவருக்கு அவர் மகன் வேண்டுமே அவன் என்ன கூறினாலும் சரி சரியென மண்டையை ஆட்டும் நிலைமைக்கு வந்துவிட்டார். முன்னாடி ஆனந்திக்கு ஆட்டினார் இப்போ சித்தார்த்துக்கு ஆட்டுகிறார்.
“ஏன் இப்போவே கிளம்பிகினனு தான கேட்டேன். அதுக்கு இன்னாதிக்கு கோபப்படுற? சரி பார்த்துப் போய்ட்டு வாப்பா” எனக்கூற, சித்தார்த்தின் கையைப் பிடித்தாள் மது. அவள் கையை எடுத்து விட்டவன்,
“அப்பா! நான் கட்டாய கல்யாணம் பண்ணிட்டேனு யாரும் கட்டாயத்துக்காக இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்க எங்க இருக்கனும்னு நினைக்கிறாங்களோ அங்கயே இருக்கட்டும். அவங்களுக்கு யார் கூட இருந்தா சந்தோஷமா இருக்குமோ அவங்க கூடவே போய் இருக்கட்டும். எனக்காக யாரும் கஷ்டப்படனும்னு அவசியம் இல்லை. அவங்க இஷ்டம் அவங்க எங்க வேணும்னாலும் இருக்கலாம் அவங்கள இங்க தான் இருக்கனும்னு நான் கட்டாயப்படுத்தல” எனக்கூறி வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான்.
செல்லும் அவனையே கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள் மது வாயிலில் நின்று. தன் உயிரை வேரோடு பிடுங்கி எடுத்துச் செல்லும் அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன் பின்னால் நின்று தன்னையே பார்க்கிறாளெனத் தெரிந்தும் மனதை கல்லாக்கிக் கொண்டு சென்றான் அவளின் மன்னவன்.
ஏன் ஏதும் கூறாமல் போனாயோ?
ஏன் நேற்றை பூட்டாமல் போனாயோ?
சாம்பலாய் வரம்.. எங்கே என் மேகம்?
விடுகதையாய் கணம்.. கண்ணீரில் போகும் பாதம்.
தூரமாய் போனதே.. காதலின் கீர்த்தனை.
வீழ்ந்திடும் நீரெல்லாம்.. தேடுதலின் பிரார்த்தனை.
ஊரை தாண்டி.. போனான் என்றால்.. அங்கும்.. இங்கும்.. கண் தேடும்.
வேரை தாண்டி.. போனான் என்றால்.. உண்மை.. உள்ளே.. பந்தாடும்.
இரு உயிருமே மனம் நிறைய காதலிருந்தும், பிரிந்து தனித்தனியாய் இருக்கும் நிலை. அதுவும் அதற்குக் காரணமாவர்கள் கூடவே இருக்க வேண்டிய நிலை. அவன் கோபத்தை தணிக்க முடியாமல் அதிகப்படுத்திவிட்ட வேதனை அவளுக்கு. தன்னை யாருமே சேர்த்துக்கொள்ளாமல் தனிமை படுத்திவிட்டனரே என்ற ஆதங்கம் அவனுக்கு.
எந்தத் தப்பும் செய்யாமல் மகளையும், மகன்போல் வளர்த்தவனையும் பிரிந்து நிற்கும் புத்திர சோகம் மதுவின் பெற்றவர்களுக்கு. தன் மனைவி செய்த காரியம் அறிந்தால் மகன் தங்களை விட்டுப் பிரிந்துவிடுவானோ என்ற கவலை அவனைப் பெற்றவருக்கு. யாருக்கும் நிம்மதியான மனநிலை இல்லை.
இது அனைத்திற்கும் காரணமாக இரு புண்ணிய ஆத்மாக்களோ கறியும், சோறும் தின்று தங்களது சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டனர். அழுதுகொண்டே அறையில் அடைந்தாள். பசி மறந்தது, சந்தோஷம் மறந்தது, நிம்மதி மறந்தது எல்லாத்துக்கும் மேல தன்னையே அவள் மறந்தாள். அழுது கரைந்தாள். எவ்வளவு அழகாய் ஆரம்பித்த நாள் இப்படி முடிந்துவிட்டதே என்ற துக்கம் நெஞ்சை அடைத்தது இருவருக்குமே.
இளங்கோ தான் சென்று அவளுக்கு இரு சப்பாத்தியை வாங்கிகொண்டுவந்து வம்படியாகச் சாப்பிட வைத்தார் இரவு. காலையிலும் சாப்பிட வரமாட்டேன் எனக் கூறியவளை கட்டாயப்படுத்தி அவருடனேயே சாப்பிட வைத்துவிட்டே கடைக்குச் சென்றார். மதியம் கடையிலிருந்த இளங்கோ மது சாப்பிட்டாளா எனத் தெரிந்துகொள்ள, ஆனந்திக்கு அழைத்தார்.
“இன்னாய்யா? போனுலாம் போடுற?”
“இல்ல மருமக சோறு துண்ணுடுச்சா?” எனக்கேட்க, ஆனந்திக்கோ அத்தனை கோபம்.
“ஏய்யா பொண்டாட்டி துண்ணாலானு ஒரு நாள் போனு போட்டுக் கேட்டுகினியா? இல்ல நீ பெத்த புள்ள மாசமா இருக்காளே அவ துண்ணுட்டாளானு கேட்டிகினியா? ஆனா அந்தச் சீக்குக்காரிய மட்டும் போனு போட்டுக் கேட்குற? வையா போன” என வைத்துவிட்டார்.
அவருக்கோ வருத்தமாக இருந்தாலும், மாலை போய்க் கேட்டுக்கொள்ளலாமென இருந்துவிட்டார். ஆனால் அவர் மருமகளோ சாப்பிடவும் இல்லை, அவளுக்கான ஊசியையும் போடவில்லை. மருந்து நேற்று இரவே தீர்ந்திருக்க, சித்தார்த்தும் வாங்கி கொடுக்கும் முன் கோபத்தில் ஊரைவிட்டே கிளம்பிவிட்டான்.
அவளுக்கோ யாரிடம் கேட்டு வாங்க மனம் வரவில்லை. அன்று முழுவதும் ஊசியும் போடாமல், சாப்பிடாமல் அறையிலே இருந்தவள் இளங்கோ வரும்போது அறை உயிராக மயக்கமாக இருந்தாள். உடனடியாக ஆட்டோவை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் இளங்கோ.
அவர் மது வீட்டுக்குத் தகவல் சொல்ல மது வீட்டு வாயிலில் நிறுத்த, தடுத்துவிட்டாள் அறை மயக்கத்திலும். தன் சித்தத்துக்காக அவன் கூறியதை காலம் தவறி இப்போது கடைப்பிடித்தாள் மது. மருத்துவனையில் சிகிச்சை எடுத்து மாத்திரை, மருந்து எல்லாம் வாங்கிக்கொண்டிருக்க, பதறி ஓடிவந்தான் ஆதவன் விஷயமறிந்து.
“பெரியப்பா மது எங்க?”
“உள்ள இருக்காப்பா. நீ போய்ப் பாரு நான் மாத்திரை வாங்கிட்டு வரேன்”
“சரிங்க பெரியப்பா” எனக்கூறி மதுவிடம் வந்தான்.
“மது! என்னடி ஆச்சு?”
“ஒன்னுமில்ல ஆது. கொஞ்சம் வீக் ஆயிடுச்சு”
“ஏன் நேத்து நல்லா தான இருந்த?” எனக்கேட்க தலைகவிழ்ந்தாள் மது.
“ஊசி போடல” எனக்கூற, “ஏன் போடல?” எனக் கோபத்துடன் கேட்டான் ஆதவன்.
“தீர்ந்திடுச்சு” என மெதுவாகக் கூறினாள்.
“ஏன் நேத்து சித்தண்ணா கிட்ட பிரிஷ்கிரிப்ஷன் கொடுத்தேனே வாங்கிக் கொடுக்கலயா அவரு?” என்றான்.
“அவர் கோயம்புத்தூர் போய்ட்டார்” எனக் குரல்கம்ம கூறினாள் மது.
“தெரியும்! அதான் ஏன் திடீருனு கேட்குறேன்?”
“நேத்து சாயந்தரம் கோவில்ல நான் அப்பா அம்மாவ பார்த்தேன். சித்தத்து சொன்னத மறந்து அவங்கிட்ட பேசிட்டேன். அவர் அதைப் பார்த்துட்டு கோச்சுட்டு போய்ட்டார்” என அவன் தோளில் சாய்ந்து அழுதாள். அவனுக்கும் என்ன கூறுவதென்றே தெரியவில்லை அவள் தலையை மட்டும் தடவிக்கொடுத்தான் ஆறுதலாக.
“என்னால முடியல ஆது. நான் மறந்துட்டேன் நிஜமா. அப்பாவ பார்த்ததும் சந்தோஷத்துல ஓடிட்டேன். அதுக்கு கேச்சுட்டு போய்ட்டார் டா” என அழுதாள்.
“சரி விடு பார்த்துக்கலாம்”
“இனி என்கிட்ட பேசமாட்டாரா டா?” என அழுது கொண்டே கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்ல. பெரியப்பா உனக்கு உடம்புக்கு முடியலனு சித்தாண்ணாட்ட சொல்லிருப்பார் போல. அவர் தான் என்கிட்ட சொன்னார். உன்னை அவர் வரும் வரை பத்திரமா பார்த்துக்க சொன்னார்? நீ வேணா வீட்டுக்கு வரீயா? உனக்குக் கஷ்டமா இருந்தா நம்ம வீட்டுல கொண்டு விடச் சொன்னார்” எனக்கேட்க அழுகையுடன் மறுப்பாகத் தலையசைத்தாள். அதற்குள் இளங்கோவும் வந்துவிட, ஆட்டோவில் மது இளங்கோவுடன் கிளம்ப, ஆதவன் பின்னாலே வந்தவன் பின் அவன் கடைக்குச் சென்றுவிட்டான்.
இரவு ஊசி போட்டு இரவு உணவையும் உண்ண வைத்தே பிறகே நிம்மதியாக அமர்ந்தார் இளங்கோ. கொஞ்ச நேரத்தில் ஆதவன் வந்தவன், இளங்கோவிடம் மட்டும் “மதுவ பார்க்க வந்தேன் பெரியப்பா” எனக்கூறிவிட்டு நேராக மதுவின் அறைக்குச் சென்றவன் “மது! மது” என கதவைத் தட்ட, அவள் “வா ஆது” எனக் கூறவும் உள்ளே சென்றான்.
வெளியில் ஆனந்தியோ “வர வர இந்த வூட்ட லாட்ஜ் ஆக்கிக்கினாங்க.. ஆராரோ வாரானுங்க போறானுங்க.. இன்னாய்யா நீயும் பேசாம குத்துக்கல்லாக்கிற? வரட்டும் அவன் இன்னைக்கிருக்குது” எனக்கத்திக் கொண்டிருந்தாள்.
ஆதவன் “மது! இப்ப எப்படி இருக்கு?”
“ஹ்ம்ம் பரவாயில்லடா”
“ஊசி போட்டியா? சாப்பிட்டியா?”
“ஹ்ம்ம்” என்றாள்.
“இந்தா இத கொடுக்கத்தான் வந்தேன்” என ஒரு புது கைபேசியைக் கொடுத்தான்.
“என்னடா இது? எனக்கெதுக்கு இப்போ? வேண்டாம். அப்புறம் சித்தத்து கோபப்பட்டாலும் படும்”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உங்கப்பா கொடுத்தா தான் வாங்கமாட்ட நான் தான கொடுக்குறேன். இது என் காசு போதுமா.. வாங்கிக்கோ” எனக் கொடுக்க, மனமே இல்லாமல் அவனுக்காக வாங்கிக் கொண்டாள்.
“உன்னோட பழய சிம்மையே எடுத்துப் போட்டுருக்கேன். சரியா” எனக்கூற, “சரி” எனத் தலையசைத்தாள்.
“அப்போ தூங்கு.. நான் கிளம்புறேன்” எனக்கிளம்ப, வெளியில் ஆனந்தி ஆட்டம் ஆடக் காத்திருந்தார். வெளியே வந்தவனை,
“ஏய் இந்தாடா நில்லு. இன்னா உன் இஷ்டத்துக்கு வரப் போற.. இன்னா நினைச்சிகின?”
“மது இங்க தான இருக்கா. அவ இங்கனு இல்ல.. எங்க இருந்தாலும் நான் பார்க்க வருவேன்”
“இது ஒன்னியும் சத்திரமில்ல ஆளாளுக்கு வர.. அதான் என்புள்ளையே உங்க சங்காத்தம் ஆவாது சொல்லிகினானே! அப்புறம் இன்னாத்திக்கு வரீங்க”
“என்கிட்ட யாரும் சொல்லல. அப்படி சொன்னாலும் நான் வரத்தான் செய்வேன். வரட்டா பெரியம்மா” எனக் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.
“சாவுகிராக்கிங்க எனக்குன்னே வருதுங்க” எனத் திட்டிக்கொண்டே அவரும் உறங்கச் சென்றுவிட்டார்.
அனைவரும் உறங்க இரு உள்ளங்கள் மட்டும் உறங்காமல் தவித்துக்கொடிருந்தது. ஒன்று ஏமாற்றத்தால் தவித்தது என்றால் இன்னொன்று குற்ற உணர்வினால் தவித்தது.
ஏமாற்றத்தால் விளைந்த கோபத்தில் அவளை விட்டு விட்டு வந்துவிட்டான் தான். ஆனால் மனம் அடித்துக்கொண்டே இருந்தது. ஏன் இப்படி இருக்கிறதென அவனுக்கும் தெரியவில்லை. எதோ இழக்கக்கூடாததை இழந்தது போலத் துடித்தது மனது. தான் செய்வது சரியா தவறா எனக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஏற்கனவே தன் தாய் ஏதோ குளறுபடி செய்துவைத்திருக்கிறது எனத் தெரிந்து தான் இருந்தது. மீதியிருந்த இந்த ஒரு மாசம் டிரைனிங்க்கே அவளை விட்டுவிட்டு வர அவனுக்கு மனமே இல்லை. தானிருக்கும் போதே மதுவை அவன் தாய் பேசியதெல்லாம் பார்த்தவனுக்கு அவரிடம் மதுவை விட மனதில்லை, கூடவே அன்புவிடமும் விட மனமில்லை.
என்ன செய்வதெனக் குழப்பத்தில் இருந்தவன் அந்தத் தெருவிலேயே அன்பு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு வாடகை வீட்டினைப் பிடித்து இருந்தான். அவன் போகும்முன் அவளைத் தனியாக அங்குக் குடித்தனம் வைத்துவிட்டு செல்ல நினைத்துத் தான் பிடித்திருந்தான்.
மூன்று நாட்களில் வீட்டைச் செட் செய்துவிட்டு அவளை அவ்வீட்டில் விட்டுவிட்டு சென்றால், அருகில் அவள் தாய்வீடு இருப்பதால் பத்திரமாக இருப்பாளென எண்ணி அவளுக்காகவே யோசித்து முடிவெடுத்து வைத்திருந்தான்.
ஆனால் அவள் தன் கோபம் குறையும் வரையிலாவது அவன் பேச்சைக் கேட்டு அவனுக்காக இருப்பாளென அவன் நினைத்திருக்க, பசுவைக்கண்ட கன்றோ அவனை மறந்ததில் கோபம். ஆனால் ஈகை அழுததில் மனம் ஏனோ அடித்துக் கொண்டே இருந்தது.
அவன்மேல் தான் தவறோ? என நினைக்கும் அளவுக்கு அவன் குற்றவுணர்வு மேலோங்க, அனைத்தையும் சரிசெய்ய முடியுமா என நினைத்துத் தான் ஆதவனோடான கல்யாண காரணத்தைக் கேட்க அவள் கூறமறுக்கவும் மீண்டும் கோபம் கண்ணை மறைக்க அவளை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான்.
அனைவரின் மேலும் உள்ள கோபத்தில் வந்துவிட்டான், ஆனால் இன்று தகப்பனிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க அதை எடுத்தவனுக்கோ தன் உயிரானவள் அரை உயிராய் கிடக்கிறாள் என்ற செய்தி தான் கிடைத்தது. பதறிவிட்டான். மருத்துவமனையில் மதுவுக்கு பரிசோதனை நடக்கும்போது தான் அழைத்துக்கூறியிருந்தார் இளங்கோ.
அவன் கோபம், ஏமாற்றம், துக்கம் அனைத்தும் மறந்து அவனே ஆதவனுக்கு அழைத்து விஷயத்தைக்கூறி அவளைத் தான் வரும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் படி கூறினான். அத்தனையையும் நினைத்துக்கொண்டே படுத்தவனை தூக்கம் எட்ட நின்று வேடிக்கைப் பார்த்தது.
அவன் காதலும், உடைமையும் (பொஸஸிவ்னெஸ்) சேர்த்து அவளை யாருடனும் பங்கிட்டுக் கொள்ள அவனுடைய மனம் இடம்கொடுக்கவில்லை. அவள் தனக்கே தனக்கானவள் அதே போல் அவளுக்கும் இருக்க வேண்டும் என்ற நினைப்பு தான் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம். இன்று அவளுக்காக அவளை அவள் அப்பா அம்மாவிடம் விடக்கூட சம்மதித்துவிட்டான். ஆனால் அவள் தான் செல்ல மறுத்துவிட்டாள்.
அவளுக்கோ இன்று ஒரு நாள் அவன் இல்லாமல் கடத்துவதே பெரிய போராட்டமாக இருந்தது. அறை முழுவதும் எங்குப் பார்த்தாலும் நேற்றைய இன்பமான ஞாபகங்கள் கொட்டிக்கிடந்தது. அந்தச் சந்தோஷ மழையின் சாரல் நிற்கும் முன் எரிமலைக்குழம்பாய் கோபம் பீறிட்டு அதன் இனிமையை நாசம் செய்துவிட்டதே என்ற ஆதங்கம். அதற்கும் அவள் தான் மூலக்காரணம் என்பது தான் அவளுடைய தூக்கம் கெடக்காரணமே.
‘அத்தனை கோபத்திலிருந்தவன் இறங்கி வந்து என்னுடன் ஒரு அழகான வாழ்க்கையை, நான் விரும்பிய வாழ்க்கையை வாழ வந்தானே! ஆனால் என்னோட கூறுகெட்டத்தனத்தால் அத்தனையையும் பாலாக்கிவிட்டேனே! இனி அவனை எப்படி சாந்தப்படுத்துவது? அவன் நம்பிக்கையை எப்படி பெறுவது? அவனை என்று மீண்டும் காண்பது?
திரும்பவும் என்னை மன்னிப்பானா? திரும்பவும் என்னை ஏற்பானா? திரும்பவும் அவன் காதலை என்னிடம் கொட்டுவானா? திரும்பவும் நான் அவன் கைக்குள் இருப்பேனா? திரும்பவும் எனக்கு என் சித்தத்து கிடைப்பானா?’ என நினைத்து நினைத்துக் கண்ணீருடன் அவனின் தலையணையை கட்டிக்கொண்டு, அவன் பிரத்யேக மனத்தை நுரையிரலில் நிரப்பியபடி உறக்கத்தை தழுவினாள் மது.