பெரும் மழைக்காலம் அது.
அவன் உடலில் இருந்து குருதிக் குறையில்லாமல் வழிந்து மழை வெள்ளத்தோடு வெள்ளமாய்ப் பாதையில் ஒடியது.
நடந்தேறிய விபத்தின் விளைவாகக் கீழே விழுந்த வேகத்தில் அவன் முகம் முழுவதும் சாலையில் இருந்த கற்கள், தன் கை வண்ணத்தைக் காட்டியிருந்தது.
இந்தப் பூமியில் தன் பயணம் இன்றோடு முடிந்தது என்று, அவனை விட்டுப் பிரிந்துச்செல்லும் நினைவுகளைத் தன்னிடம் பிடித்து வைக்க வெகுவாகப் போராடினான்.
தன் பயணத்தின் கடைசி நிமிடத்தில், அவன் விழிகளில் தோன்றிய முகம், அதன் நெற்றியில் வீற்றிருக்கும் வட்டப் பொட்டு அந்த முகத்திற்கு அழகு மட்டுமல்ல, கம்பீரத்தையும் தந்தது, அந்த முகத்தின் விழிகளில் கடந்த சில நாட்களாகத் தன்னிடம் எதையோ எதிர்பார்த்து ஏமாந்ததை அவனுக்கு உணர்த்தியது.
அந்த ஏமாற்றத்தை இந்த நிமிடம் சரி செய்யத் துடிக்கும் எண்ணம், மனதின் அடி ஆழத்தில் இருந்து தோன்றியதன் விளைவாக, தன் போகும் உயிரைப் பிடித்து வைக்க மரணத்திடமிருந்து போராடினான் ....
ஐயோ பாவம்! அவனால் அது மட்டும் முடியவில்லை. தன் உடலைச் சிறிதளவுக் கூட அசைக்க முடியாமல் போனது துயரத்தின் உச்சம்.
மனதின் வேட்கையை நிறைவேற்ற முடியாத தன் இயலமையை இந்த நொடி வெறுத்தான். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் இனி தன் உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை மனதில் அறைந்தது.
உதட்டோரம் தோன்றிய விரக்திப் புன்னகையோடு , மெல்லக் கண்களின் இமையை மூடினான்.