பொறுப்புத்துறப்பு:
இந்த கதையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் என் சொந்த கற்பனையே! இதில் வரும் கதை மாந்தர்கள், காட்சிகள் மற்றும் உயிரினங்கள் என அனைத்தும் என் கற்பனைக்கு உட்பட்டவை. இவை உண்மையாக இருக்கும் இடங்கள் மற்றும் தயாரிப்புகளுடன் ஒற்று போகுமாயின் அவை தற்செயலானதே ஆகும்.
சமுத்திரா - 1:
நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற பூமி, எழுபத்தியொரு சதவிகிதம் ஐம்பூதங்களில் ஒன்றான நீரால் சூழப்பட்டுள்ளதே ஆகும். அந்த எழுபத்தியொரு சதவிகிதத்தில் கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஏழு சதவிகிதத்தை ஆக்கிரமித்திருப்பது அறுசுவைகளில் ஒன்றான உவர்ப்பு சுவையை உடைய பெருங்கடலே!
அலை, ஆழி, உவரி, சுழி, சாகரம், சமுத்திரம் என்று கடலிற்கு பலப்பெயர்கள் இருந்தாலும், அந்தந்த இடத்திற்கும், நாட்டிற்கும் தகுந்தவாறு கடலிற்கு பெயர்களை சூட்டி அதற்கு எல்லை வகுக்கின்றனர்.
அத்தகைய பரந்து விரிந்த பெருங்கடல் எண்ணிக்கையில் அடங்காத பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைந்தது மட்டுமின்றி, நீர்வழி பயணத்தையும் நம் மனித உலகிற்கு சாத்தியபடுத்தியுள்ளது.
எண்ணற்ற பல ஸ்வாரஸ்யங்களையும், அமானுஷ்யங்களையும், ஆச்சர்யங்களையும், விடை தெரியாத பல மர்மங்களையும் தனது அடி ஆழத்தில் புதைத்திருக்கும் கடல் நம் பார்வைக்கு கரையை கடக்க முடியாமல் தீண்டிச்செல்லும் அமைதியான அலையாகவே காட்சியளிக்கிறது!
ஆயிரம் ஆண்டுகள் கடந்து, கிளை பரப்பி திடமாக நிலத்தில் நிமிர்ந்து நிற்கும் மரத்தை கூட எந்த வருடம் விதையாக மண்ணில் விழுந்து விருட்சமாக வளர்ந்தது என்று குறிப்பிட்டு விடலாம். ஆனால், “கடல் தோன்றி இத்தனை வருடங்கள் ஆகிறது..” என்று எந்த ஒரு சரியான ஆதிமூலமும் (தொடக்கம்); “இவ்வளவு தான் கடலின் ஆழம்” என்று துல்லியமாக குறிப்பிட்ட எந்தவொரு அந்தமும்(முடிவு) இல்லாத பெருங்கடலின் சிறு துளியைப் பற்றி தான் இக்கதையில் நாம் காணப்போகிறோம்.
நீல நிற ஆகாயத்தில் இவ்வளவு நேரம் வலம் வந்துக்கொண்டு, மண்ணிலிருந்த அனைத்து உயிரினங்களையும் தன் உஷ்ணங்களால் சுட்டெரித்த சூரியன், தன் ஒளி கரங்களை மெல்ல தனக்குள் சுருட்டிக் கொண்டே, வெப்பத்தை தணிக்கக் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ச்சி நிறைந்த கடலிற்குள் மூழ்கி மறைய தொடங்கிய மாலை நேரமது.
அன்று வெள்ளிக்கிழமை. ஆதலால், சென்னையை தாண்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் மிகவேகமாக இங்குமங்குமாய் விரைந்துக் கொண்டிருந்தது.
'இருதினங்கள் விடுமுறையென வேலைக்கு சென்றவர், அவரவர் வீட்டிற்கு விரைய.. சிலர் விடுமுறையை கொண்டாட வேறொரு ஊரிற்கு பயணிக்க..' என்று அந்த சாலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட சற்று அதிகமாகதான் இருந்தது. எனவே அங்கு போக்குவரத்து நெரிசலிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
இதற்கிடையில், போக்குவரத்து சிக்னலில் பச்சை நிறத்திற்காக தன் இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தான் அவன். அவனின் கைபேசியின் அழைப்பில் அதை எடுத்து காதில் வைத்தவன், "சொல்லுடா சக்தி.." என்றான் சிறிதும் பதட்டமில்லாமல்.
"தடிமாடு! இன்னும் எவ்ளோ நேரமாகும்?" என்று மறுபுறம் சிறிதும் பொறுமையின்றி கத்தினான், சக்தி என்று அழைக்கப்பட்ட சக்திவேல்.
"இன்னும் பத்து நிமிஷ.." என்று கூற வந்தவனை இடையிட்டு, "நீ பத்து நிமிஷம்னு சொன்னா..? எப்ப வருவன்னு இவ்வளவு வருஷம் உன்கூட இருக்க எனக்கு நல்லாவே தெரியும். மரியாதையா எங்க இருக்கனு உண்மைய மட்டும் சொல்லு ப்ரதீப்" என்றான் சக்திவேல் பல்லைகடித்துக் கொண்டே,
'சிக்னலில் பச்சை விழுகாதா..?' என்று பார்த்துக் கொண்டே, "இங்க பக்கத்துல வந்துட்டேன் டா.." என சமாளிக்க முயன்றான்.
பறந்துக்கொண்டிருந்த பொறுமையை இழுப்பிடித்த சக்திவேல் நிதானமாக, "ப்ரதீப்! மணி இப்பவே ஐந்து ஆகப்போகுது. ஆறு மணிக்குள்ள கப்பல் கடல்ல இறங்கியிருக்கணும். லேட் பண்ணாம சீக்கிரமா வா மேன்!" என்றான்.
சக்தி பொறுமையாக இவ்வளவு பேசியதே அதிகம் என்றுணர்ந்தவன், "ஈ.. சரிடா மச்சா! இன்னும் அரை மணிநேரம் டா.. சீக்கிரமா வந்துடுவேன்" சிக்னலை கவனித்துக் கொண்டே உறுதியளித்தான்.
"எது? அரைமணி நேரமா..!” என்று அதிர்ந்த சக்திவேல், “நீ வரலனாலும் பிரச்சனை இல்ல டா.. நாங்க மட்டும் போவோம்!" என்று ப்ரதீப்பை கடுப்பேற்றிவிட்டே வைத்தான்.
"டேய்.. டேய்.. ச்ச கட் பண்ணிட்டானா..! எப்படியும் நானில்லாம நீ கிளம்பமாட்ட. இருடா உன்கிட்ட வந்து பேசிக்கிறேன்" என்று புலம்பிக் கொண்டே கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்தான் ப்ரதீப்.
பின், சிவப்பு நிறத்தில் இருந்த சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறியதும், தன் வாகனத்தின் வேகத்தை கூட்டியவன் போக்குவரத்து நெரிசலில் கலந்து, கோவளம் நோக்கி செல்லும் குறுக்கு வழியில் விரைந்தான்.
சற்றுமுன் பார்த்த போக்குவரத்து நெரிசலிற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல், கடலலையின் ஓசையால் மட்டுமே நிறைந்திருந்தது அந்த கடற்கரை.
சுற்றிலும் பல வண்ணங்களில் சிறு படகுகள் கயிற்றால் கட்டப்பட்டு அந்த கடலில் மீதந்த வண்ணம் இருந்தது. அதனின் அருகில் சற்று தள்ளி, வந்து மோதும் அலையின் வேகத்திற்கு மலையை போல் அழுத்தமாக கடலிற்குள் நங்கூரமிட்டு நின்றுக் கொண்டிருந்தது, அவர்கள் செல்லவிருக்கும் சிறு உல்லாசக்கப்பல்!
அந்த கப்பல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் அனைத்து வசதிகளை கொண்டது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட நூறு நபர்கள் வரை தாராளமாக பயணிக்கும் வகையில் அனைத்து வசதியுடன் இருந்தது. புயல், மழை, வெயில் என்று அனைத்து விதமான இயற்கை சீற்றத்தையும் தாங்கி நிற்கும் அளவிற்கு மிக வலிமையுடன் அந்த கடலில் நிமிர்ந்து நின்றுக் கொண்டிருந்தது.
கடல் காற்றில் பறந்த கேசத்தை கோதிக்கொண்டே, "இந்தவாட்டி என்னடா சொன்னான் ப்ரதீப்..?" என அமரன் கிண்டலுடன் கேட்டான்.
"வேறென்ன சொல்வான்? வந்துட்டே இருக்கானாம். வழக்கம் போல பத்து நிமிஷத்துல வந்துருவேன்னு உருட்டினான். அப்புறம் அரை மணி நேரமாகும்னு சொன்னான்" கையை விரித்து இதழ் பிரியாமல் சிரிப்புடன் கூறினான் சக்தி.
"ம்ம்ம்..” என்று தலையசைத்த அமரன், கடலை பார்த்துக்கொண்டே கல்லூரி நினைவுகளில், “ப்ரதீப் இன்னும் மாறவேயில்லை! காலேஜ்ல எப்படி இருந்தானோ இப்பவும் அப்படி தான் இருக்கான். அதே லாஸ்ட் மினிட் ரஷ்!" என்றவன்,
"ரங்காகிட்ட பேசிட்டியா சக்தி? அவன் எப்ப வருவானாம்?" என்று கைகடிக்காரத்தில் பார்வையை பதித்தபடி கேட்டான்.
"பேசிட்டேன் அமர். அவன், விலோ, விலோவோட ஃபிரண்ட் எல்லாரும் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம்"
"ஓ.. ஓகே. விலோ கூட ஷிவன்யா தான வர போறா?"
"அதப்பத்தி எனக்கு தெரியாது!" என்ற சக்திவேல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவன் முகம் திருப்புவதிலேயே 'ஷிவன்யா தான் வருகிறாள்!' என்று தெரிந்துக் கொண்டவன், மேலும் அதை பற்றி அவனிடம் விசாரிக்கவில்லை.
'இவனே இப்படி இருக்கிறானே? ஷிவன்யாயை எப்படி விலோவும் ரங்காவும் கூட்டிட்டு வராங்களோ?' என அவர்களை பற்றியும் நினைத்துக் கொண்டான்.
அதன்பின், "நான் ஐயாவை பார்த்துட்டு, அப்படியே ப்ரதீப் வந்தா கூட்டிட்டு வரேன் டா. ப்ரதீப்கிட்ட என்ட்ரி பாஸ் இல்லை" என்றவன், “ரங்கா வந்ததும் எனக்கு மறக்காம ஃபோன் பண்ணு.." என்றான்.
"ஹ்ம்ம், ஓகே அமர்" என்ற சக்திவேலுக்கு தலையசைத்தபடி நகர்ந்தான் அமரன் அந்தோணி.
கடற்கரையையும் அவர்கள் செல்லவிருக்கும் கப்பல் நிற்கும் இடத்தையும் இணைக்குமாறு போடப்பட்ட மரப்பாலத்தின் கைப்பிடியில் இருகைகளையும் ஊன்றி நின்றுக் கொண்டிருந்தான் சக்திவேல்.
நன்றாக வளர்ந்து உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் முழுமனிதனிடம் தவழ்ந்து வந்து கொஞ்சும் குழந்தையை போல் அங்கே நின்றுக் கொண்டிருந்த உல்லாசக் கப்பலிடம் தவழ்ந்து வந்து மோதும் அலையையே பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலிற்கு தற்சமயம் அதனை ரசிக்கும் மனநிலை தான் இல்லை.
'ஏனோ இனம் புரியாத உணர்வு காலையில் இருந்து அவனது மனதை ஒருநிலையில் இல்லாமல் ஆட்டம் போட வைக்க' கண் முன்னே ஆர்ப்பரிக்கும் கடலலையை போல் அவனது மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. 'மனது இந்த பயணம் வேண்டாம்!' என்று சொன்னாலும், அவனது பிரியமான தோழி விலோச்சனாவின் ஆசைக்கிணங்க ஏற்பாடு செய்த பயணத்தை ரத்து செய்ய அவனது மதி இடம் கொடுக்கவில்லை. எனவே அங்கே மனதினை மதி வென்றுவிட்டது!
மூச்சை இழுத்து நன்றாக சுவாசித்த சக்தி மறைந்துக் கொண்டிருந்த சூரியனையே பார்த்தபடி அவனின் கழுத்தில் அணிந்திருந்த முருகனின் வேல் டாலர் பதித்த சங்கிலியையும் ஒருமுறை வருடிக் கொண்டான்.
என்னதான் மனது சஞ்சலம் கொண்டு தவித்தாலும் பல மாதங்கள் கழித்து சந்திக்க போகும் நட்புகளை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தான். பின் அவனின் நண்பர்கள் பட்டாளத்தின் வருகையை நோக்கி காத்திருந்தான்.
__________
தாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் நான்கு சக்கர வாகனம் கோவளத்தை தாண்டி ஒரு கிளை சாலையில் பயணிப்பதை பார்த்துவிட்டு, "எங்க டி நாம போறோம்? இப்ப சொல்ல போறீயா இல்லையா?" காரில் முன் பக்கம் உட்கார்ந்திருந்தவளை கண்ணாடி வழியில் பார்த்துக் கொண்டே கேட்டாள் பின்னாடி அமர்ந்திருந்தவள்.
முன்னாடி செல்லும் வாகனங்களை பார்த்துக் கொண்டே அசட்டையாக, "இன்னும் பத்து நிமிஷம் பேபி, ஆல்மோஸ்ட் இடத்தை நெருங்கி விட்டோம்" என்றாள் முன்னிருந்தவள்.
"இது உனக்கே ஓவரா தெரியல விலோ! காலைல ஃபோன் பண்ணி இரண்டு நாள் ட்ரிப் போறோம். அதுக்கு ஏத்த மாதிரி பேக் பண்ண சொன்ன! எங்கன்னு கேட்டா மட்டும் காலைல இருந்து வாயவே திறக்க மாட்டீங்குற?" என்று குறைப்பட்டுக் கொண்டாள் பின்னமர்ந்திருந்த ஷிவன்யா.
திரும்பி, பின் சீட்டை பார்த்தவாறு அமர்ந்த விலோச்சனா, "அட! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு பார்த்தா? விடுறீயா என்னை?" என்றாள் முறைப்புடன். தோழியின் முறைப்பில் அமைதியடைந்த ஷிவன்யா வெளிய வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
'இந்த சாலையில் சென்றால்..? தனியார் ரிசார்ட்டுகள் தான் நிறையவரும். ஆனா அதற்காகவெல்லாம் விலோ இவ்வளவு பில்டப் கொடுக்கமாட்டாளே..' என தோழியைப்பற்றி நன்கு அறிந்தவளாய் இதற்குமேல் இவக்கிட்ட பேசி பயனில்லை என்றுணர்ந்தவள், “ரங்காண்ணா! நீங்க கூட சொல்ல மாட்டீங்களா? நான் உங்க செல்ல தங்கச்சி தான?", என்று வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனிடம் செல்லம் கொஞ்சினாள்.
‘எப்பொழுதும் ரங்கா என்றழைப்பவள் காரியம் சாதிக்க மட்டும் அண்ணாவையும் இணைத்துக் கொள்ளுவாள்' என்றுணர்ந்த விலோச்சனா, ரங்கராஜனை சொல்லக்கூடாது என்று பார்வையால் மிரட்டினாள்.
தன் பக்கத்தில் அமர்ந்திருப்பவளை ஒரு பார்வை பார்த்த ரங்கராஜ் வண்டியை ஓட்டிக்கொண்டே, "நான் சொல்லிடுவேன் ஷிவ். அப்புறம் இவக்கிட்ட யாரு வாங்கி கட்டிக்கிறது!" என்றான் நமட்டு சிரிப்புடன்.
அவன் கூறியதில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவன்யா சிரிக்க முன்னிருந்த விலோச்சனா, "ரங்ஸ்.." என்று சிணுங்கிக்கொண்டே அவன் தோளில் இரண்டு அடி போட்டாள்.
அந்த அடிகளை தூசிப்போல் தட்டியபடி, "பார்த்தியா ஷிவ்! எங்க போறோம்னு நான் சொல்லத்தப்பவே அடிக்கிறா.. நான் மட்டும் சொல்லிருந்தா..? என் நிலமை அவ்வளவுதான் போல!" என்றான் ரங்கா போலியான பயத்துடன்.
அவன் கூறியதை கேட்ட விலோச்சனா, "ம்க்கும் ரொம்பத்தான். இரண்டு பேரும் சேர்ந்தா.. என்னை தான கலாய்ப்பீங்க..? இருங்க அங்க போனதும் எனக்கும் சப்போர்ட்க்கு ஆள் வந்துடுவாங்க” என்று நொடித்துக் கொண்டு ஜன்னல் வழியே திரும்பிக் கொண்டாள்.
ரங்கா, "யாரு..? ப்ரதீப் வருவானா.. உனக்கு சப்போர்ட்டுக்கு..?" என்றான் கிண்டலுடன்.
'ப்ரதீப்' என்ற பெயரை கேட்டதும் இஞ்சி தின்ற குரங்கை போல் முகத்தை வைத்துக்கொண்ட விலோச்சனா, "ரங்ஸ்.. ப்ரதீப்பும் வரானா..?" என்றாள்.
ரங்கா நக்கலுடன், "யெஸ் மை டியர்! ப்ரதீப் இல்லாம சக்தி கண்டிப்பா ட்ரிப் பிளான் பண்ணவே மாட்டானே.." என்றான் தெளிவான குரலில்.
"இந்த சக்தி எனக்கு ஃப்ரென்டா..? இல்ல அவனுக்கா..?", என்று சக்தியை வருத்தெடுத்தவள், கோபத்தில் முகம் சிவக்க, "இருக்கு அவனுக்கு இன்னைக்கு இருக்கு.." என்று புலம்பினாள்.
அவளின் புலம்பலை கேட்ட ஷிவன்யா, "நீ எதுக்கு விலோ டென்ஷன் ஆகுற? அவங்களும் வந்தா தான் என்ன இப்ப?" என்று கண்ணாடி வழியே அவளை பார்த்தபடி வினவினாள்.
முகத்தை அஷ்டகோணலாக வைத்த விலோச்சனா, "உன்கிட்ட சொலிருக்கேன்ல ஷிவ்? எனக்கு ஆகாதவன்னு.. அது அந்த ப்ரதீப் லூசு தான்!" என்று கடுப்புடன் உரைத்தாள்.
“அடிப்பாவி! நீயும் அவனும் எப்ப சேர்ந்துப்பீங்க.. எப்ப சண்டை போடுவீங்கன்னு உங்களுக்கே தெரியாது? இதுல உனக்கு அவன் ஆகாதவனா?” அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரங்கா கூறினான்.
ஷிவன்யாயை தவிர சக்திவேல், ப்ரதீப், ரங்கராஜ், அமரன், விலோச்சனா என்று ஐவரும் ஓரே கல்லூரியில் பயின்றவர்கள். கல்லூரி காலத்தில் பயிலும் பொழுது தான், கடலில் சேரும் நதியை போல் நதியாகிய ஐவரும் நட்பெனும் கடலில் இணைந்தனர்.
ப்ரதீப்பிற்கும் விலோவிருக்கும் கொஞ்சமும் ஒத்துபோகாது. சில நேரம் அவர்களை போல் நண்பர்கள் இல்லை என்றளவுக்கு ஓட்டிக்கொண்டு திரிவார்கள். சில நேரம்,
இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு சுற்றி இருப்போரை திணரடித்து கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்குள் அவர்கள் இருவரும் என்றுமே புரியாத புதிர் தான்.
"அப்படியெல்லாம் ப்ரதீப்ப விட முடியாது ரங்ஸ். இன்னைக்கு அவன் கூட சண்டை தான்" என்று அவனுடன் சண்டை போடுவதற்கு இப்பொழுதே தயாரானவள் அறியவில்லை தங்களின் சண்டையால், இன்றிரவு நடுக்கடலில் அனைவரின் உயிரையும் பணயம் வைக்க போகிறாள் என்று!
தனக்கு அருகில், மாக்ஸி ஸ்கர்ட்டும் அதற்கு தகுந்தவாறு கையில்லா கருப்பு டாப்ஸும் அணிந்து முன்னுச்சி முடியை ஒரு கிளிப்பில் அடக்கிவிட்டு படப்பட பட்டாசாய் பொறிந்தவளை ஓரக்கண்ணால் ரசித்த ரங்கா, "இந்த ரோடுல கடைசிக்கு போனா ரீச் ஆகிடுவோம் விலோ. கொஞ்சம் கூலாகு.." என்றான்.
'வேவ்ஸ் சாலை' என்ற பெயரை கொண்ட அந்த சாலையில், இரு புறமும் வீடுகள் சற்று தள்ளி தள்ளி ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் மரங்களுக்கு இடையே, பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அந்த சாலையை ரசித்துக்கொண்டே, விலோவும் ஷிவன்யாயும் அமைதியாக வந்தனர்.
இயற்கை கொஞ்சும் மரங்கள் நிறைந்த அந்த சாலையின் இறுதியில் "செலபிரேட் வித் வேவ்ஸ்..!" (அலைகளோடு கொண்டாடுங்கள்..!) என்று பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பெயர்பலகையை தன் வாயிலில் தாங்கி இயங்கிக் கொண்டிருந்தது, அந்த தனியார் ரிசார்ட் மற்றும் போட் கிளப்!
அந்த போட் கிளப்பின் முன் வண்டி நின்றதும் அங்கிருந்த வாயிலை பார்த்து, "விலோ! இது பிரைவேட் பீச் ரிசார்ட் தான? இங்க? நாம எதுக்கு வந்திருக்கோம்..?" என்ற கேள்வியுடன் சுற்றி பார்த்தாள் ஷிவன்யா.
இவர்களின் வாகனத்தை பார்த்த வாயிற்காவலன் வந்து கதவை திறக்க வண்டி உள்ளே வந்து நின்றதும்,
"இது பீச் ரிசார்ட் மட்டுமில்லை ஷிவ், போட் கிளப்பும் கூட. மீதியை நாம உள்ளே போய் பேசலாம்" என்று வண்டியைவிட்டு இறங்கினர் மூவரும்.
பயணபொதிகளை எடுத்து வெளிய வைத்த ரங்கராஜ், வண்டியின் சாவியை அங்கிருந்த வாலெட்டிடம் பார்க் செய்ய கொடுக்க, அவர்கள் அந்த காரினை பார்க் செய்வதற்கு அடித்தளத்திற்குக் கொண்டுச் சென்றார்கள்.
நுழைவாயிலின் ஒருப்பக்கம் செயற்கை நீரூற்று இருந்தது. அதனை சுற்றியும் பல வண்ண மலர்கள் பூத்துக்குழுங்கி பார்ப்பவரின் கண்ணிற்கும் மனதிற்கும் இதமளித்தது. சுற்றி இயற்கை நிறைந்த இடத்தை ரசித்துக்கொண்டே, "இந்த எண்ட்ரன்ஸ் அழகா இருக்குல.." என்று வியந்த விலோ, "என்னையும் ரங்ஸையும் ஒரு பிக் எடு ஷிவ்" என்றாள்.
கருப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்த ரங்கா, தன் வலகரத்தை பேண்ட் பக்கெட்டினுள் விட்டு இடக்கரத்தை விலோவின் தோளில் போட்டு அழகாக போஸ் கொடுத்தான்.
தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கேமராவின் மூலம் அவர்களை புகைப்படம் எடுத்த ஷிவன்யா, "செம்மையா வந்திருக்கு ஃபோட்டோ! பேசி வெச்ச மாதிரி ரெண்டு பேரும் கருப்பு கலர்ல ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..?" என கிண்டலுடன் வினவியவள், "ஹே! உண்மையை சொல்லுங்க. உங்க ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட்டிற்கு வந்தோமா..?" சந்தேக பார்வையுடன் விலோவின் காதில் கேட்டாள்.
அவள் அப்படி கேட்பதற்கும் காரணம் இருந்தது. இன்னும் மூன்று மாதத்தில் விலோச்சனாவிற்கும் ரங்கராஜனிற்கும் திருமணம் முடிவாகி இருந்தது.
கல்லூரியில் அவர்கள் இருவருக்குள் மலர்ந்த காதல், மெல்ல மெல்ல பல்கி பெருகி இன்னும் சில மாதங்களில் திருமணம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. அதனாலே அனைவரும் ரங்கா என்று அழைக்கும் ரங்கராஜ் விலோச்சனாவிற்கு மட்டும் ‘ரங்ஸ்’ ஆகிப்போனான்.
"உன் பத்திரிக்கை மூளையை கொஞ்சநேரம் மூட்டை கட்டி வை" என்று ஷிவன்யாவை அதட்டிய விலோ குரலை தழைத்துக்கொண்டு, "எங்க ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்கு.. நாங்க எதுக்கு டி கரடி மாதிரி உன்னை கூடவே கூட்டிட்டு சுத்த போறோம்?" என்று கண்ணடித்து கேட்டாள்.
அதை கேட்டு தனது சிரிப்பை மீசைக்குள் அடக்கிய ரங்கா காதில் விழாததுபோல், "சரி உள்ள போகலாம் வாங்க.." என்க, மூவரும் அவர்களின் பயண பொதிகளுடன் உள்ளே செல்ல தொடங்கினர்.
சிலுசிலுவென காற்று சற்று பலமாகவே வீசியது. விரித்துவிட்ட கூந்தல் காற்றில் பறக்க, காற்றின் மூலம் கண்ணில் வந்து விழுந்த தூசியின் விளைவால் நுழைவாயிலின் படிகளில் எறிக்கொண்டிருந்த ஷிவன்யா கால்கள் தடுக்கி கீழே விழ பார்க்க, ரங்கா அவளை பிடித்துவிட்டான். "பார்த்து வரமாட்டியா ஷிவ்" என்றான் அதட்டும் குரலில்.
கண்களை தேய்த்துக்கொண்டே, “தூசி கண்ணுல விழுந்துடுச்சி ரங்கா..” என்றவள் கண்ணை தேய்த்துக்கொண்டே சற்று நிதானித்தாள்.
ஷிவன்யாவை பார்த்த விலோ கவலையுடன், "உனக்கு ஒன்னும் இல்லை தான ஷிவ்?” என்று அவளை தலைமுதல் கால் வரை ஆராய்ந்தாள்.
“எனக்கு ஒண்ணுமில்ல விலோ. லேசா தடுக்கிடுச்சி. அவ்வளவு தான்”
“வாசல்லையே தடுக்குதே.." என மேலும் விலோச்சனா கவலைக்கொள்ள,
"உன் மூஞ்சி. கண்ணுல தூசி விழுந்து தடுத்ததுக்கும் நாம உள்ள போறதுக்கு என்ன சம்பந்தம்? இதெல்லாமா நீ நம்புற?" என கேலியுடன் தோழியிடம் கூறிய ஷிவன்யா முன்னே நடக்க தொடங்கினாள்.
தயக்கத்துடன் ரங்கராஜை ஏறிட்டாள் விலோ. இது போன்ற விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட விலோவை சமாதான படுத்தும் விதமாக, "நாம ஒண்ணா தான இருக்க போறோம். நம்மள மீறி என்னாகிடும் விலோ?" என்று அவளின் தோளில் கைப்போட்டு நம்பிக்கையாக அழுத்தம் கொடுத்தான். அதில் சற்று தெளிந்தாள் விலோச்சனா. அதன்பின் இருவரும் ஷிவன்யாவை தொடர்ந்து உள்ளே சென்றனர்.
‘நம்மளை மீறி என்னாகிடும்..?’ என்றவன், ‘மனிதர்களை மீறி பிரபஞ்சம் என்ற மாபெரும் சக்தி ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது!’ என்பதை அந்நொடி மறந்திருந்தான் போல! அந்த பிரபஞ்சத்தின் ஆற்றல், அவர்களால் கற்பனை கூட செய்ய முடியாதளவுக்கு செயல்பட்டு அவர்கள் அனைவரையும் மீளா சுழலில் சிக்கவைக்க போவதை அவ்விரவே அவர்கள் அறிந்துக்கொள்ள போகின்றனர்.
- சமுத்திரா வருவாள்