எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெல்ல மனம் மாறுதே - கதைத் திரி

Shambhavi

Moderator
விஜயதசமி வாழ்த்துக்கள் மக்களே ❤️

புது கதையோடு இந்த வருடத்திற்கான கணக்கைத் துவங்குகிறேன். நிச்சயம் முடித்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் மயூரனையும் லோபமுத்ராவையும் களத்தில் இறக்கியாகிற்கு.

கதையை வாசித்து உங்களின் மேலான கருத்துக்களை பகிருங்கள்.

ப்ரியங்களுடன்,
சாம்பவி திருநீலகண்டன்
👑
 
Last edited:

Shambhavi

Moderator

அத்தியாயம் - 01​


காலை மணி பத்தரையைக் கடந்திருக்க வெயிலின் தாக்கம் திடீரென அதிகரித்து அவளை மொத்தமாய் சுட்டுப் பொசுக்குவதைப் போல் உணர்ந்தாள் பெண்.


“இவளுக்கு மொத பன்சுவாலிட்டிய சொல்லிக் கொடுக்கனும். எரும, எத்தன நேரமா என்னைய ரோட்ல நிக்க வைக்கரா” என்று கடுகடுத்தபடி அவள் இருக்க,


“இந்தாமா, தள்ளி நில்லு. நடுரோட்ல பராக் பார்த்துட்டு நின்னா நா எப்படி போக?” என்று இருந்த கடுப்பை அவளிடம் காட்டிய வாகன ஓட்டியிடம் ஒரு மன்னிப்பைப் போட்டவள் தள்ளிக்கொண்டாள்.


இத்தனைக்கும் அவள் நின்றிருந்தது பாதசாரிகள் செல்லுமிடத்தில் தான். அதில் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றவனை என்ன சொல்ல?


அதிலும் அனிச்சையாய் வெளிப்பட்ட அவளின் மன்னிப்பு படலம் வேறு அவளை மேலும் கடுப்பாக்கிவிட்டது.


தலையில் லேசாய் தட்டியவள், “பைத்தியம் ஆகிட்ட நீ. அவன திட்டமா, ஸாரி கேட்கற கூமூட்ட” தன்னைத் தானே திட்டியபடி வெயிலிலேயே தான் நின்றிருந்தாள்.


பரபரப்பிற்குப் பெயர் போன மெட்ராஸ் மாநகரின் அண்ணா நகர் சிக்னல் ஓரத்தில் பதினைந்து நிமிடங்களாகக் காத்துக் காய்கிறாள் பெண்.


அவள் போட்டிருந்த சன்ஸ்கிரீன் வியர்வையில் கலந்து கரைந்திருந்தது. அடிக்கும் வெயிலில் மீண்டும் அதைப் பூசினால் தான் அவளால் மூச்சே விடமுடியும் என்ற அளவிற்கு இருந்தது அவள் உள்ளும் புறமும் தகித்த உஷ்ணம்.


பல்லைக் கடித்து கோபத்தை ஒத்திப்போட்டவள் அங்கிருந்து நகரப் பார்க்க, “ஹே லோப்ஸ்” என்று அவள் முதுகில் பளீரென ஒரு அடியைப் போட்டாள், சரண்யா.


அதில் சட்டென்று மூண்ட எரிச்சலில், “கூறுகெட்ட குந்தாணி, அறிவு இல்ல?” என்று கத்திக்கொண்டே தோளைத் தேய்த்தவள் முகம் சிவந்து போயிருந்தது.


சுற்றம் உணர்ந்து சரண்யா மெல்லிய குரலில், “ஹேய் அமைதியா இருடி, லோபா” என்றாள் கண்ணை உருட்டிக்கொண்டு.


“என்ன அமைதி சமாதின்னுட்டு இருக்க. அடிக்கற வெயில்ல தீஞ்சு போன காக்கா மாதிரி நிக்கறேன் நா. பத்து மணிக்கு க்ளாஸ் முடியும்னா வரத் தெரியாதா உனக்கு? இன்னிக்கு எந்த நாதாரி க்ளாஸ் எடுத்தான்? டைம்’க்கு விட தெரியாதா அவனுக்கு” என்க, பதறிவிட்டாள் சரண்யா.


அவள் குரலின் அடர்த்தி அருகில் இருப்போரைத் திரும்பிப் பார்க்க வைக்க, “லோபா” என்று சரண்யா கத்தி அவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு போகப் பார்த்தாள்.


சரண்யாவின் பிடி மேலும் அவளுக்கு உடல் எரிச்சலைத் தர, “விடுடி மொத, உன்னால என் முகம் கையெல்லாம் எரியுது. போட்ட சன்ஸ்கிரீன் மொத்தமும் போயி நா டேன் ஆனது தான் மிச்சம்” என்று அவள் மேலும் குதிக்க,


முறைப்புடன், “கம்முனு இரு, என் ஸார் பின்னாடி இருக்க பேக்கரியில தான் நின்னுட்டு இருக்கார்” என்க,


முகத்தைச் சுழித்தவள், “எவன் நின்னா எனக்கென்ன?” என்றவளிடம் அலட்சியம் இல்லாத கடுப்பு.


அது சரண்யாவை உசுப்பிவிடவும்,

“நின்னா என்னவா? கேட்டிருக்க மாட்டாரா நீ பேசினதை? நானே இல்லாத குட்டிக்கரணம் போட்டு அவர கவர் பண்ண பார்க்கறேன், நீ உன் கூவத்தைத் திறந்து உன் இல்லாத மானத்தேட என்னோடதையும் சேர்த்துப் பறக்க விட்டுடுவ போல” என்றாள் அதீத சிடுசிடுப்பாக.


சரண்யாவின் குணமும் பேச்சும் நன்கு தெரிந்தவளுக்கு அவளின் இப்பேச்சை ரசிக்க முடியவில்லை.


அது நிச்சயம் அவளைத் தாக்கியிருக்க வேண்டும். தன்மானத்தை சீண்டியிருக்க வேண்டும்.


அவள் வந்த வேலையை முற்றாக மறக்க வைத்துவிட்டது சரண்யாவின் பேச்சு.


ஒரு முழு நிமிடம் சரண்யாவை வெறித்துப் பார்த்தவள், “சர்தான் போடி” என்று அவள் முகத்திற்கு நேராகக் கையசைத்துச் சென்றவளை அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள், சரண்யா.


“ஹேய் லோபமுத்ரா” என்றவள் கத்தலுக்கெல்லாம் அவள் நிற்கவுமில்லை, பச்சை விளக்கு விழுந்த சிக்னலையும் மதிக்கவுமில்லை.


கோபம் கோரமாய் அவள் முகத்தில் தாண்டவமாடியது. அரைமணி நேரம் கால் வலிக்க வெயிலில் வெந்தது கூட இத்தனை எரிச்சலைக் கொடுக்கவில்லை. மாறாக, சரண்யாவின் ‘உன் இல்லாத மானம்’ என்ற சொல் அவளை மொத்தமாய் உருமாற்றி மூர்க்கமேற்றியிருந்தது.


குறுக்கு மறுக்காக வந்த வண்டிகளையும் அதில் இருந்தவர்களின் திட்டுக்களையும் காதில் வாங்காது கன்னத்துச் சதையைக் கடித்தபடி சாலையைக் கடந்து சென்றவளின் இறுகிய முகம் ஏனோ பேக்கரியில் நின்றிருந்தவனை உற்று கவனிக்க வைத்தது.


அதிலும் அவள் கண்களில் இருந்த கூர்மை, அவனைக் கூர்ந்து பார்க்க வைத்திருக்க அதை கலைக்கவென்றே, “சரியான பட்டாசா இருக்கும் போல’ண்ணா” என்று நிதானமாக டீயைப் பருகிக்கொண்டிருந்தவனிடம் சொன்னான், பூபதி .


வெள்ளை நிற முழு கை வைத்து இளஞ்சிவப்பில் பெரிய பெரிய பூக்கள் தெளித்தபடி இருந்த சல்வாரில் சற்றே உயரமாக இருந்தவளைத் கவனித்து பார்த்தது அவன் கண்கள்.


அதில் ஈர்த்தவனாக, சாலையைக் கடந்து எதிர்புறமாக நடந்து கொண்டிருந்தவளிடம் நிமிடத்திற்கு அதிகமான பார்வையைப் பாதித்திருந்தான்.


ஏதோ தூண்டவும் பூபதிக்கு பதிலாக, “ம்ம்..” என்றவன் பார்வையைத் திருப்பிக்கொள்ள, அங்கு முகம் கடுத்தபடி அவனை பார்த்து நின்றிருந்த சரண்யாவை கண்டான்.


அவனை நினைத்துத் தான் சரண்யாவின் எண்ணமும் இத்தனை நேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.


நிச்சயம் அவர்களின் உரையாடலை கேட்டிருப்பான் என்பது திண்ணம்.


இப்போது அவனின் பார்வை அவளிடம் இருப்பதைக் கண்டவள் எந்த எதிர்வினையும் புரியாது எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுவிட, அவனிடம் ஒரு ஆயாச பெருமூச்சு.


“உங்க கைடன்ஸ் எனக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு ஸார். உங்க டீச்சிங்ஸ் எல்லாம் எக்றோர்டினரி, நீங்க ரொம்ப வாவ். உங்க நம்பர் தரீங்களா, நான் வீட்டுல படிக்கும் போது டவுட்ஸ் வந்தா கேட்க” என்று காலை அவனிடம் பேசிய சரண்யாவின் முகம் நினைவில் வந்து போக, தலையை உலுக்கிக்கொண்டான்.


“என்ன’ண்ணா, நினைவலைகளா?” என்று பூபதி சிரித்தபடி கேட்க, சன்னமாய் சிரித்தவன் அதை ஆமோதித்தான்.


சரண்யாவின் பேச்சை அப்போதே கத்தரித்திருந்தான் அவன். இருந்தும் அவளின் பேச்சு இப்போது அவனிடம் பிசுபிசுத்தது‌.


பூபதியிடம், “ரொம்ப கேர் புல்லா இருக்கனும் பூபதி” என்க,


“நீங்கதான் இன்னும் கவனமா இருக்கனும் போல’ண்ணா” என்றுவிட்டான் ஒரு தோள் குலுக்களுடன்.


அதில் அவனை முறைத்தவன், “அப்போ நீ இருக்க மாட்ட?” என்க,


“என்கிட்ட டவுட்ஸ் தவிர வேற யார் வந்து வாலண்டியரா பேச போறா?” என்றான் சின்ன சிரிப்புடன்.


பெண்பிள்ளைகள் அதிகம் வந்து செல்லும் ஒரு பிரபலமான போட்டித்தேர்வு மையத்தில் தான் இருவரும் ஆசிரியர்களாக பணியில் உள்ளனர். அதிலும் பூபதி அங்கு முழுநேர ஊழியனாக இருப்பவன்.


கடுகடுப்பு இல்லை என்றாலும் ‘என்னிடம் தள்ளியே நில்’ என்ற பார்வையோடு தான் மையத்தில் வளம் வருவான், பூபதி.


“சரிதான்டா. இனி நானும் க்ளாஸ் லிமிட் தாண்டி டவுட்ஸ் க்ளியர் பண்ண கூடாது போல. சின்ன பிள்ளைங்கன்னு பார்த்தா, எல்லாம் படிக்க வந்த மாதிரியா இருக்குங்க” என்று ஆற்றாமையாக அவன் சொல்லிக்கொண்டிருக்க, அவன் ஆதங்கம் புரிந்தது பூபதிக்கு.


அவனிடம் ஒரு இலகு தன்மை இருக்கும் என்றாலும் எளிதில் பாடத்தைத் தவிர பிற பேச்சுக்களை வளர்க்க விரும்பாதவன்.


அப்படி பட்டவனிடத்தே எத்தகைய எண்ணத்தில் பழக பார்த்திருக்கிறாள் இந்த பெண் என்ற அசூயை வராமல் இல்லை பூபதியிடம்.


“ஸார், சால்ட் பிஸ்கட் இந்தாங்க. உங்க ஐட்டத்தை சாப்டாமையே டீ குடிச்சிட்டீங்களே இன்னிக்கு” என்று பேக்கரி பையன் வர,


பூபதி, “நீ கொடுக்க மறந்துட்டு அவர குறை சொல்லுறியாடா” என்க,


“என்னிக்காது மிஸ் ஆகுறது தான் அண்ணத்த” என்றவன்,


“பிஸ்கட்டுக்கு இன்னொரு டீ கொண்டாரவா ஸார்” என்று அவனைப் பார்த்து நின்றான்.


அவன் கவனம் இங்கில்லாது போக, “வேண்டாம். க்ளாஸ்கு டைம் ஆச்சு. எடுத்துட்டு போ” என்ற பூபதி, அவனைக் கிளப்பிக்கொண்டு மையத்தை நோக்கி சென்றான்.


தமிழகத்தில் அரசு சார் தேர்வுகளுக்கு படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும் படையெடுத்துச் சென்று படிக்கும் தேர்வு மையங்கள் மொத்தமும் குடியிருக்கும் இடம், சென்னை அண்ணா நகர்.


“நாங்க பார்த்துக்கறோம்” என்று இருகை விரித்து வரவேற்று பலரின் கனவை நனவாக்கிய மையங்களின் கடலில் ‘ஆலம் அகாடமி’யும் ஒன்று.


வங்கி தேர்வுகளுக்கு என்று பிரத்தியேகமாக திறக்கப்பட்ட புத்தம் புது கிளை இது. இதன் பிற துறை சார் மையங்கள் சென்னை சுற்றியும் தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்தாலும் வங்கிப் படிப்பிற்கானத் தனிப்பட்ட மையமாய் அண்ணா நகர் கிளை விளங்குகிறது.


பூபதி உட்பட எட்டு பேர் கொண்ட வங்கி தேர்வுக்கான பயிற்சியாளர்களைக் கொண்டு இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கும் கிளை இது.


அதிகாலை வகுப்பு முடிந்து மாணவர்கள் சென்றிருக்க, அடுத்து பதினொரு மணிக்கு இரண்டாம் வகுப்பிற்கு மாணவர்கள் தயாராக இருந்தனர்.


மாணவர்களை காட்டிலும் இங்கு மாணவிகளே அதிகம். அதற்கு தக்க பயிற்றுவிப்பவர்களும் இருந்தாலும் சில விதிமுறைகளும் வரைமுறைகளும் அனைவரும் பின் பற்ற வேண்டும் தானே?!


அந்த வரைமுறை இப்போது முரணாகப் போக, அதில் தான் உழன்றுகொண்டிருக்கிறான், மயூரன் பெரியசாமி.


யோசனையில் இருந்தவனை, “ஸார், நீங்க தான் முதல் க்ளாஸ்” என்று கலைத்தான் மையத்தின் பொறுப்பாளர், ஜிஷ்ணு.


சட்டென்று விடுபட்டவனாக, “ம்ம்.. மைக் செக் பண்ணி கொடு ஜிஷ்ணு. போன க்ளாஸ சவுண்ட் சரியா டெலிவரி ஆகல” என்க, அதற்கான வேலையில் ஈடுபட சென்றுவிட்டான் அவன்.


மயூரனின் மனநிலையை உணர்ந்தாற் போல் பூபதியும், “அண்ணா, விட்டுத்தள்ளுங்க. இனி அந்த பொண்ணே வந்து பேசினாலும் பிடி கொடுக்காதீங்க. டவுட் மட்டும் சொல்லிட்டு விட்டுடுங்க” என்றுவிட்டு அவன் தோள் தட்டி அகன்றான்.


ஒரு பெருமூச்சு தன்னைப் போல் எழுந்தது மயூரனிடம்.


‘பையன் பார்க்க நல்லா இருக்கானே’ என்று சொல்லும் படியான கலையான, திருத்த முகமும் பொன்னிற மேனியும் நடுத்தர உடலமைப்பும் கொண்டவன் உயரமும் சராசரியே.


அந்த சராசரி ஆணை சுற்றி சம்சாரியாக்கவே பற்பல பெண்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


அதில் இப்போது புதுவரவாக, சரண்யா.


மயூரன், பெண்களைத் தெரியாதவனில்லை. பழக்க வழக்கம் என்பதை தாண்டிய கண்ணிய கட்டுப்பாடுகளை கொண்டு வளர்ந்தவனிடம் சரண்யாவின் பேச்சிற்கான காரணம் விளங்கவும் தன்னைப் போல் ஒரு மெல்லிய அதிர்வு. அத்தோடான கசப்புணர்வு.


இதுவும் ஒரு அனுபவ பாடம் என்று நினைத்துக்கொண்டு அதை மொத்தமாய் புறந்தள்ளிவிட்டு வகுப்பிற்கு சென்றான்.


கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பேர் அவனின் பாடத்தை கவனிக்க காத்திருக்க, கவனத்தை அவர்களிடம் செலுத்தினான், மயூரன்.


மாணவர்களும் தயாராக இருக்க, பாடத்தில் மயூரனோடு சேர்ந்து அவர்களும் மூழ்கிவிட்டனர்.


ஒன்றரை மணிநேர வகுப்பின் முடிவில் மீண்டும்‌ ஒருமுறை எடுத்த பாடத்தை நினைவு கூர்ந்தவன் சந்தேகம் கேட்பவர்களுக்கு நிதானமாகவே மீண்டும் நடத்தினான்.


பதினெட்டு துவங்கி முப்பது வயதிற்குட்பட்டவர்கள் தான் பெரும்பாலும் வகுப்பில் இருந்தனர். அவங்களின் கிரகிப்பு திறணிற்கு ஏற்ப மயூரனின் விளக்கங்கள் இருக்கும்.


எளிதாக என்றில்லாது உதாரணங்கள் மூலமாக பாடங்களை புரிய வைப்பதில் அவனை மிஞ்ச ஆளில்லை எனலாம்.


“ஒரு எக்ஸாம்பில் வெச்சோ இல்ல உங்களுக்கு ஈசியா புருஞ்சுக்கற மாதிரியான ஷாட்கட் ட்ரிக் வெச்சு படிங்க. கஷ்டமா மொதல்ல இருந்த கன்டெண்ட் கூட மறக்காது” என்பான்.


பாட திட்டத்தின் பெரும் பகுதி கணிதம் சார்ந்திருக்க, அதை இந்த முறையில் கையாண்டால் தேர்வர்களுக்கு நினைவு கூர்வதற்கு எளிமையாக இருக்கும் என்பது அவன் எண்ணம்.


வகுப்பை முடித்துவிட்டு வந்தவனிடம் ஜிஷ்ணு, “ஸார், அடுத்த வாரம் உங்க க்ளாஸ் டைம் அலார்ட் பண்ணனும். எத்தன மணிக்கு க்ளாஸ் போட?” என்க,


நாற்காலியில் தளர்வாக அமர்ந்தவன், “பேங்க் இயர் எண்டிங் டைம் ஜிஷ்ணு. எர்லி மார்னிங் பேச் மட்டும் போடு. மதியம், ஈவினிங் பேச் இப்போ வேண்டாம்” என்றுவிட,


“நாளைக்கு ஸார்?” என்று இழுத்தான் ஜிஷ்ணு.


“சண்டேடா நாளைக்கு” என்றவன் குரலில் அத்தனை அலுப்பு.


“போர்சன்ஸ் முடிக்கனுமே ஸார்”


“ம்ப்ச்ச்” என்றவன் சலித்துக்கொண்டு,


“நாளைக்கு பத்து டூ ஒன்னு வரை எடுக்கறேன். மத்தது அடுத்த வாரம் பார்க்கலாம்” என்றுவிட, ஜிஷ்ணு மனதிற்கு ‘ஹப்பாடா’ போட்டுக்கொண்டான்.


மணியைப் பார்த்தவன், “ஜான்’ன வர சொல்லு ஜிஷ்ணு, கிளம்பறேன்” என்றான்.


“ரூம்ல இருங்க ஸார், பத்து நிமிஷத்துல வந்துருவான்” என்க,

அதீத களைப்புடன் அவர்களுக்கான அறைக்குள் சென்றான் மயூரன்.


பூபதி தவிர்த்து இருவர் அறையில் இருக்க, “மயூரன் ஸார், IBPS எக்ஸாம் டேட் தள்ளி போயிடுச்சு. நோட்டிபிகேஷன் பாருங்க” என்க,

தன்னைப் போல் ஒரு பரபரப்பு அவனிடம்.


“பரவாயில்லை, ரிவிஷன் பண்ண டைம் இருக்கும். இரண்டு வாரத்துல போர்சன்ஸ் முடிச்சா கூட போதும்” என்றவன் மனதுக்குள் ஒரு கணக்கு.


அதையே மற்றவர்களும் ஆமோதிக்க அவர்களிடம் ஒரு சிறு கலந்துரையாடல்.


நேரம் ஒன்றை தொடவும், ஜான் வந்துவிட்டான் மயூரனை வீட்டில் விடுவதற்கென்று.


சிறு தலையசைப்புடன் மயூரன் ஜானுடன் கிளம்பிவிட்டான்.


அவனின் வசிப்பு தற்சமயம் ஆழ்வார்பேட்டையில். அவனின் பிரதான பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறான் மயூரன்.


அக்னியை தலையில் கொட்டியதைப் போல் சூரியன் நடுமதிய நேரத்தில் மக்களை போட்டு தாளித்துக்கொண்டிருக்க, சரியாக சிக்னலில் சிக்கிக்கொண்டனர்.


“ஸார், மேக்ஸ் மெட்டீரியல் தரேன்னு சொன்னீங்க எனக்கு?” என்று ஜான் பேச்சை ஆரம்பிக்கவும்,


அவன் தோளில் தட்டியவனாக, “மறக்கலடா, எடுத்து வெச்சிருக்கேன். எடுத்துக்கோ ஆனா இன்ஸ்டிடியூட்’ல யாருக்கும் தரவேண்டாம்” என்றான் மறுத்து கூற முடியா குரலில்.


ஜான், மையத்தில் வேலை செய்து கொண்டே வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரி. கிடைக்கும் வாய்ப்புகளை அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற துடிக்கும் இளைஞன்.


அவன் லட்சியத்திற்கு ஒரு சதவீதமாவது உதவ முடிந்தால் போதும் என்ற எண்ணம் மயூரனிற்கு.


“தரல ஸார். இந்த தடவையாவது IBPS க்ளியர் பண்ணிடனும்னு இருக்கேன். அதான் உங்க மெட்டீரியல் ஒருதடவை ரெப்பர் பண்ணிக்கலாமேனு தான்” என்க, சிக்னல் விழுந்தது.


“பண்ணிடலாம்டா. நீ கரெண்ட் ந்யூஸ் மட்டும் இன்னும் நல்லா கவனம் வெச்சு படி. அதுல தான் உனக்கு மிஸ் ஆகுது” என்று அவனின் இடரை சுட்டிக்காட்டி மயூரன் சொல்ல,


“நீங்க சொன்ன மாதிரி தான் ஸார் நோட்ஸ் எடுத்து படிக்கறேன். வேற எந்த சோர்ஸ் பார்க்க” என்றவன் காதுகள் மயூரனிடம் தான்.


“யூடியூப்’ல *** சேனல் பாரு. இந்தியா இயர் புக் மொத்தமா படிச்சிட்டு அப்புறம் இந்த எக்ஸ்ஸாம் போ” என்றவன் சொல்லிக்கொண்டு இருக்க, எதிரே சாலையை கடந்தவளின் முகத்தில் நின்றது அவன் பார்வை.


அனிச்சையாய், “லோபமுத்ரா” என்று சொல்லியபடி ஜானின் தோளை அழுத்தமாய் அவன் பற்ற,


அதில், “என்ன ஸார்?” என்று ஜான் திரும்பவும், இடதுபுறத்தில் இருந்து எதிர்பாராதவிதமாய் கார் ஒன்று குறுக்கே வந்தது.


வண்டியை ஒடித்துத் திருப்ப நினைத்து த்ராட்டிலை ஜான் முறுக்கிவிட, சாலையைக் கடந்தவள் மீது வண்டி மோதிய வேகத்தில் அவளோட சேர்ந்து மயூரனும் ஜானும் நடுரோட்டில் விழுந்துகிடந்தனர்.

🌼
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 02

ஸ்ட்ரெட்செரின் க்ரீச் சப்தம் அதீதமாய் காதை நிறைத்துக் கூச வைக்க, காதைக் குடைந்தபடி அமர்ந்திருந்தான், ஜான்.

கையில் ஒரு சிறு சிராய்ப்பு, இடதுபுற முட்டியில் மட்டும் சற்று அதிகமாய் அடிப்பட்டிருக்க முதலுதவி செய்த கையுடன் ஜிஷ்ணுவிற்கு அழைத்துவிட்டான் தகவல் சொல்ல.

“மயூரன் அட்டெண்ட்டர்” என்ற நர்ஸ் வர,

“நான் தான் சிஸ்டர்” என்ற எழுந்தவனிடம் வலியின் சாயல் அப்பட்டமாக.

“ரிசப்ஷன்’ல பில் கட்டிடுங்க ஸார், ட்ரீட்மெண்ட் முடிஞ்சது” என்க,

“ஸார் எப்டி இருக்கார் சிஸ்டர்” என்றான் பரபரப்புடன்.

மயூரனை மருத்துவமனை அழைத்து வரும் போதே மயங்கியிருந்தான். தண்ணீர் தெளித்து எழுப்பிய போதும் அவனிடம் மெல்லிய அசைவுகள் தான் தெரிந்ததே தவிர முழுவதும் அவன் நிலையாக இருக்கவில்லை.

அது ஜானை பயங்கரமாய் பயமுறுத்தியிருந்தது.

அவனின் பதற்றம் புரிந்தவராக,
“பேஷன்ட் இன்னும் கண்ணு முழிக்கல ஸார். இடது கண்ணுகிட்ட காயம் ஆழமா பட்டிருக்கு, நாலு ஸ்டிச் போட்டிருக்கோம். இடதுகைல ரெண்டு விரல் ப்ராக்சர். ட்ரீட்மெண்ட் முடிச்சது, அரைமணி நேரம் போன பின்னப் போய் பாருங்க” என்று விட்டு நர்ஸ் போக, அதிர்ந்துவிட்டான் ஜான்.

“அய்யோ ஸார்” என்றவன் நெஞ்சில் கை வைத்து அலறவும்,

“எதுக்கு இப்படி கத்தரிங்க. மெல்ல” என்றாள் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த லோபமுத்ரா அப்பட்ட எரிச்சலில்.

“கத்தாம? என்னங்க செய்ய சொல்லுறீங்க”

“ம்ம்.. போய் பில்ல கட்டுங்க மொத”
என்றுவிட்டு வலி மிகுதியில் முகத்தைச் சுழித்துக்கொண்டு திரும்பிவிட்டாள்.

“இன்னிக்கு நரி மூஞ்சில தான் முழிச்சேன் போல” என்றவள் முணுமுணுப்பு ஸ்பஷ்டமாகக் கேட்டது ஜானிற்கு.

சரியாக ஜிஷ்ணுவும் வந்துவிட சற்று தெம்புற்றான் ஜான்.

“அண்ணா, மயூரன் ஸார்” என்றவன் எழுந்துகொள்ள, முட்டியில் வலி உயிர் போனது.

“டேய் உட்கார் மொத. ஸார் எப்டி இருக்கார்? கண்ணு முழிச்சாரா?” என்றவன் அடுக்கிக்கொண்டு போக, அவர்களின் காதை அடைக்கும் சப்தத்தை சுத்தமாய் ரசிக்க முடியாது அமர்ந்திருந்தாள் லோபமுத்ரா.

“இன்னும் கண்ணு முழிக்கல’ண்ணா” என்றவன் லோபமுத்ராவைப் பார்க்க,

“இவங்களுக்கு என்ன?” என்றான் ஜிஷ்ணு.

அவள் ரோட்டில் விழுந்த வேகத்தில் தோளில் இருந்து முழங்கை வரை தோல் சிராய்த்து மேற்புற சதை லேசாய் பிய்ந்து ரத்தம் வந்திருந்தது. போதாக் குறைக்கு வண்டியின் டையர் அவள் காலில் இடித்து சுடிதார் பேன்டை மீறி ஆழமான காயம் அங்கு.

வலி நிவாரணி கொடுத்து கட்டிட்டு அமர வைத்திருந்தாலும் அவள் உடல் அப்பட்டமான வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் இடதுக்கால் சல்வார் பேன்ட்டை வேறு பாதிக்கும் மேல் கிழித்துக் கட்டுப்போட்டிருந்தனர். அது வேறு சற்று அவஸ்தையை ஒருபக்கம் ஆற்றிக்கொண்டிருந்தது அவளுக்கு.

நடுவில், இருவரின் நாராச சப்தம் வேறு!

ஜான், “அவங்க மேல தான் வண்டி இடுச்சுது” என்க,

ஜிஷ்ணு, “சரி உட்கார்” என்று லோபமுத்ராவை விசாரிக்க எண்ணி அவள் அருகே செல்ல,

அதைப் புரிந்தவள், “ஸார், ஃப்ளீஸ். நான் நல்லா இருக்கேன். உள்ள இருக்கறவர் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்றாள் முகத்தை நிமிர்த்தாது.

“சொல்லிட்டுத் தான் மேடம் வந்தேன். நீங்க? உங்களுக்கு யாரும் வரலைங்களா?” என்றான் தெரிந்துகொள்ள வேண்டி.

“ப்ரெண்ட் வருவாங்க ஸார்” என்றவள் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.

அவள் ஓய்ந்த நிலையைப் பார்த்து
உள்ளூர குற்றவுணர்வு குறுகுறுக்க, “ஸாரிங்க” என்றுவிட்டான் ஜான்.

அதை அவள் ஏற்றதாகவும் தெரியவில்லை கேட்டதாகவும் பிடிபடவில்லை.

ஒரு சிறு தவறு எத்தனை பேரைப் பதைப்பிற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியிருக்கிறது என்று நினைத்த மாத்திரம் லோபமுத்ராவால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

எதிர்த்திசையில் வந்த கார்காரன் விதிகளைப் பின்பற்றியிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காதே என்று எண்ணாமல் இல்லை அவள்.

எல்லாம் விதியின் கணக்குப்படி அந்த அந்த நேரத்திற்குச் சரியாக நடந்து முடிந்திருந்தது.

இருந்தும் அவள் நெஞ்சம் உள்ளே படுத்திருப்பவனை நினைத்து நினைத்துப் படபடத்தது.

‘அவருக்கு ஒன்னு ஆகியிருக்கக் கூடாது வேலப்பா’ என்று அவள் முருகப்பனிடம் வேண்டுதலிட்டுக் கொண்டிருந்தாள் பெண்.

அவள் அடிபட்ட சுருண்டு விழுந்த போது அவனின் காயத்தையும் மீறி அவள் நிலையுணர்ந்து விரைந்து வந்தவனின் முகமும் செயலும் அவள் ஆழ் மனதில் ஆழப் பதிந்து போயிருந்தது.

அதிலும் அவளைக் காத்துவிட்டு அவள் அருகிலேயே அவன் மயங்கிச் சரிந்த காட்சியும் அவன் உதிரம் அவள் உடையில் பட்டுப் படர்ந்திருந்ததையும் பார்த்து இப்போதும் அவளால் நிலையாக இருக்க முடியவில்லை.

“ம்ப்ச்ச்” என்று அந்த நினைவு கொடுத்த தாக்கத்தில் கண்ணோரம் நீர் வழிய நிமிர்ந்தவளைக் கலைத்தது, “லோபா” என்ற அபிநயாவின் குரல்.

லோபமுத்ராவுடன் பிஜியில் தங்கி வேலைக்குச் செல்லும் தோழி தான் அபிநயா.

அவளுக்கு விபத்து என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோதே அபிநயாவிற்குத் தான் முதலில் அழைத்திருந்தாள் லோபமுத்ரா.

அவள் வீட்டிற்கு இன்னும் தகவல் சொல்லியிருக்கவில்லை. சொன்னாலும் உடனே வரும் தொலைவிலும் இல்லை அவள் குடும்பத்தார்.

“என்ன இத்தன பெரிய கட்டு. வேற எங்க அடி பட்டுருக்கு லோபா” அவள் கட்டிடப்பட்ட கையைப் பார்த்து அபிநயா பதற,

மெல்லிய குரலில், “கால்ல கொஞ்சம் அடி. மத்தபடி ஒன்னுமில்ல. எனக்கு ஹெல்ப் பண்ணவருக்குத் தான்.. அடி பலமா பட்டுருச்சு” என்றாள் மெல்லிய குரலில்.

அவள் அருகே நின்றிருந்த ஜிஷ்ணு, “டாக்சில வந்தீங்களா?” என்று ஆஜரானான்.

அபிநயா, “இல்ல ஸார், வண்டில போய்குவோம். தேங்க்ஸ்” என்றுவிட்டு லோபமுத்ராவை கிளம்பப் பணித்தாள்.

“பில் கட்டனும் அபி” என்று அவளின் கார்ட்டை லோபா நீட்ட, ஜான் ஜிஷ்ணுவின் காதைக் கடித்தான்.

“பணம் எவ்வளவு வருதுன்னு கேட்டுக்கலாம். பத்தலேனா அகாடமில சொல்லி வாங்கிக்கலாம், இரு” என்றான் மருத்துவமனையின் தோற்றம் கொடுத்த தாக்கத்தில்.

பில்லை கட்டிவிட்டு வந்த அபிநயா, “போகலாம் லோபா” என்க,
அவள் தயங்கி மயூரன் இருந்த அறையைப் பார்த்தாள்.

அதைப் புரிந்தவனாக ஜிஷ்ணு, “ஸாரோட அம்மா வந்துட்டு இருக்காங்க மேடம். மதுரையில இருந்து வர நைட் ஆகும். நீங்க கிளம்பிங்க” என்றுவிட, அதுதான் அபிநயாவிற்கும் சரியாகப் பட்டது.

மணி மாலை ஐந்தரை. அவர்கள் அங்கிருந்து வர நிச்சயம் நடுயிரவு ஆகும் என்று நினைத்தவள் லோபமுத்ராவுடன் கிளம்ப எத்தனித்தால்.

இருந்தும், “இரு அபி, அவர பார்த்துட்டாவது வரேன்” என்றவள் பரிதவிப்பு புரிந்தது அபிநயாவிற்கு.

விபத்தில் ஏற்பட்ட அதிர்வோடு அந்த நபர் மீதான பரிதாப வலி என்றவள் நினைத்துக்கொண்டால்.

அறையினுள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் மயூரன். சாந்தமான முகத்தில் அத்தனை அயர்ச்சியும் வலியின் வேதனையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

தலையிலும் கையிலும் கட்டிட்டு இருந்தனர். பரிதாபமாக அவனை ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள் மனது சுணங்கி பிசைந்தது அவன்பால்.

அவன் அருகில் சென்றவள், “தேங்க்யூ & கெட் வெல் சூன்” என்று சொல்லிக்கொண்டு அபிநயாவுடன் புறப்பட்டுவிட்டாள்.

மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை வாங்கியவர்கள் அருகே இருந்த பிஜியை அடைந்ததுமே லோபமுத்ராவிற்கு அத்தனை வலியெடுக்க ஆரம்பித்திருந்தது.

“வீட்டுக்குக் கால் பண்ணி சொல்லிடு லோபா. இந்த நிலமையில நீ வேலைக்கும் போக முடியாது. வீட்டுக்காவது போய் ரெஸ்ட் எடு” என்றார் அவளைப் பார்க்க வந்த வார்டன்.

அபிநயாவும் மற்ற ரூம் மேட்ஸும் அதையே ஆமோதிக்க, லோபமுத்யாவிற்குமே வீட்டிற்குச் செல்லலாம் என்று தான் எண்ணியிருந்தாள்.

விஷயத்தைக் கூற தந்தைக்கு அழைக்க, அவர் எடுக்கவில்லை. பணிமுடிந்து வந்திருக்கமாட்டார் என்று உரைக்கவும் அமைதியாகிவிட்டாள்.

லோபமுத்ராவின் தந்தை மாணிக்கவாசகம். தமிழ்நாடு மின்சார துறையில் டிவிஷனல் இன்ஜினியர்.

அவருக்கு வேலை எப்போதும் இருந்தவண்ணம் இருக்கும். அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூடலூரின் மின்சார தொடர்பு பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்க இரட்டிப்பு வேலைதான்.

அபிநயா, “அப்பா எடுக்கலையா லோபா?”

“ம்ம்.. வேலையா இருப்பார் போல. அவரே கூப்பிடட்டும்” என்க,

“தம்பிக்குக் கூப்பிட்டு பாரேன்” என்றாள்.

“இல்ல, அவன் அம்மாகிட்ட சொல்லிட்டா அவங்க ரொம்ப பயந்துடுவாங்க. அப்பாகிட்ட மட்டும் தான் சொல்ல முடியும்” என்றுவிட்டாள்.

லோபமுத்ராவின் தாய் அங்கயற்கண்ணி, அதி மென்மையானவர்.

வெகுளி என்று சொல்ல முடியாவிட்டாலும் அவரின் இயல்புகள் அவரை அப்படித்தான் காட்டும். மிகுந்த பொறுமையும் பொறுப்பு மிக்கவர் குடும்பத்தைச் சுற்றியே தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டார்.

அதில் அவர்களுக்கு ஒன்றென்றால் தாயுள்ளம் தாங்காது.

ஒருமணி நேரம் சென்றபின்னரே மகளின் அழைப்பைப் பார்த்துத் திரும்பவும் அழைத்தார், மாணிக்கவாசகம்.

சோர்வாக இருந்தவள் பீடிகை போடாது விஷயத்தைச் சொல்லிவிடவும், பதட்டம் சூழ்ந்துவிட்டது தந்தைக்கு.

“அப்போவே அப்பாக்கு கால் பண்ணியிருக்கலாமே முத்ரா? கிளம்பி இருப்பேன் இந்நேரம். கூட யார் இருக்கா?” அவர் பரபரக்க,

“அபிநயாவும் இன்னொரு ஃப்ரண்ட்டும் இருக்காங்க’ப்பா. வலிக்கு டெம்ப்ளேட் கொடுத்திருக்காங்க, போட்டுட்டேன்” என்றவள் முயன்று வலியை அடக்கப் பார்க்க, ம்ஹும் அவள் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மாணிக்கவாசகம், “அம்மாகிட்ட சொல்ல வேண்டாம். நான் மார்னிங் வந்துடறேன் முத்ரா. நைட் மட்டும் சமாளிச்சுக்க, ரொம்ப வலினா ஹாஸ்பிடல் போ, நான் உன் வார்டனுக்கு கால் பண்ணி பேசறேன்.” என்க,

தகப்பனின் குரலைக் கேட்டவளுக்கு வலியும் பதைபதைப்பும் சூழ, “ப்பா நாளைக்கு வந்து என்னைய கூட்டிட்டு போயிடுவீங்க தான? கை ரொம்ப வலிக்குது ப்பா” என்றாள் மெல்லிய அழு குரலில்.

சிறு குழந்தையென அவள் அழவும் அங்குப் பெற்றவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“அப்பா கெளம்பிட்டேன் முத்ரா. மார்னிங் வந்தறேன்டா பாப்பா, அழாம தூங்கு” என்றவர் தாமதிக்காது அன்று இரவே சென்னை நோக்கி பயணமானார்.

இரவு ஒன்பது மணி போல் மதுரையில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்திருந்தனர் மயூரனின் தாயும் அக்காவின் கணவனும்.

மாமியாரின் அழுகை தாங்காது மச்சினனின் நிலையறிந்து விரைந்து அவனை அழைத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான், அருளாளன்.

தகவல் கிடைந்ததில் இருந்து மகனை நினைத்தான ரேணுகாவின் ஓயாத அழுகை இப்போது மகனைப் பார்க்கப் போகிறோம் என்றறிந்த பின்னர் இன்னும் மனதினுள் அழுத்திக்கொண்டு வெளியேறியது.

“அத்த, அழாம வாங்க. அப்பு தான் பேசினானே” என்றபடி அருளாளன் அவரை மருத்துவமனை அழைத்துவர, தலையாட்டினார் ரேணுகா.

மயூரனின் தந்தை பெரியசாமிக்குத் தான் ஜிஷ்ணு தகவல் சொல்லியிருந்தான்.

உள்ளதை அவன் அப்படியே சொல்லாது ‘லேசான விபத்து’ என்று மட்டும் சொல்லியிருக்க, வியாபார விசயமாக குமுளியில் இருந்த மனிதருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

உடனே அவரால் வரமுடியாத சூழல்.
மகனை நினைத்தானக் கவலையும் மூல, மருமகனுக்கு அழைத்துவிட்டார்.

பதட்டம் சிறிதும் குறையாது, “அருளு, அப்புக்கு ஆக்ஸிடென்ட்’னு போன் பண்ணாங்க தம்பி. நா இங்க குமுளில இருக்கேன்’ய்யா.. உடனே வரவும் முடியாது” என்க,

நிலையின் தீவிரம் புரிந்த அருளாளன், “நா சென்னைக்கு கெளம்பறேன் மாமா. பயந்துக்காதீங்க. கால் பண்ணவங்க நம்பர் எனக்கு அனுப்பி வைங்க, நான் பேசிகிறேன்” என்றவனிடமும் பரபரப்பே.

மனைவி ஷஷ்டியைப் பிறந்த வீட்டில் விடுவதற்கு அழைத்துச் சென்றவனிடம் விஷயத்தைச் சேகரித்தவள் அதிர்ந்தவண்ணம் செய்தியைத் தாய் ரேணுகாவிடம் சொல்லிவிட்டால்.

மயூரன் எப்படி இருக்கிறான் என்று சரிவரத் தெரியாத பதைபதைப்பும் நடுக்கமும் ரேணுகாவை சரியாகச் செயல்பட வைக்கவில்லை.

மகனைப் பார்க்கவேண்டும், அது ஒன்று மட்டுமே தாயவரின் உள்ளத்தில் ரீங்காரமிட மருமகனை வற்புறுத்தி அவனுடனேயே சென்னையும் வந்துவிட்டார்.

ஜிஷ்ணு வாசலிலேயே நின்றிருந்தான் அருளாளன் வருகையை எதிர்பார்த்து.

“ஸார் முழிச்சுதான் இருக்கார் ப்ரோ. பயப்பட ஒன்னுமில்லை” என்றுவிட்டான் ரேணுகாவைப் பார்த்த மாத்திரம்.

அத்தனை சிவந்து வீங்கி போயிருந்தது அவர் முகம். அவரின் பரிதவிப்பை உணர்ந்தவனாக ஜிஷ்ணு சொல்லியதும் ஒருவகை நன்மைக்காக தான்.

அருள், “தேங்க்ஸ் ப்ரோ. எந்த ரூம்?” என்று ஜிஷ்ணுவுடன் சென்றனர்.

பூபதி வந்திருக்க அவனுடன் பேசிக்கொண்டிருந்தான், மயூரன்.

வலியின் மிகுதியாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது.

“என்னடா அப்பு, என்னாச்சு?” என்றபடி வந்த அருளாளன் மயூரனின் காயங்களை தான் ஆராய்ந்தான்.

கலங்கித் தவித்த விழிகளுடன், “பார்த்து இருக்கக் கூடாதா அப்பு” என்று ரேணுகா மயூரனிடம் செல்ல,

“அம்மா, என்னம்மா? எதுக்கு இத்தன அழுக. நா தான் உன்கிட்ட பேசினேன் தான?” என்றான் ரேணுகாவின் தோற்றம் கொடுத்த தாக்கத்தில்.

நலுங்கிய புடவையும் தலையெல்லாம் கலைந்து போய் அவர் நின்றிருந்த நிலை, அவனை கவலைகொள்ள வைத்தது.

“பேசாத, வலிக்கப் போகுது” என்று அவன் தலையைத் தடவிக் கொடுத்தவர், “இவ்வளவு பெரிய அடின்னு ஏன் சொல்லல அருள்?” என்று அருளைத் தாக்கினார்.

‘இப்போ நானா?’ என்று நினைத்தவன், “நீங்க உட்காருங்க அத்த. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்” என்றவன் செல்ல, பூபதியும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

மயூரனின் நலனை விசாரித்தவன் டிஸ்சார்ஜ் பற்றிப் பேசவும், “தாராளமா வீட்டுக்குப் போகலாம். நாளைக்கு காலேல செக் பண்ணிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க” என்றுவிட்டார் மருத்துவர்.

அப்போதே மணி பத்தை தொட்டிருந்தது. ஜிஷ்ணு அதுவரை கூடவே தான் இருந்தான்.

அவனிடம் வந்த அருள், “தேங்க்ஸ் ப்ரோ. டைம்லி ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. நாங்க வரவரை இருந்து மயூரன பார்த்துகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்க,

“ப்ரோ, இருக்கட்டும் ப்ரோ. நம்ம ஸாருக்கு இது கூட பண்ணலேனா எப்டி” என்றவன்,

“டிஸ்சார்ஜ் பண்ணும் போது சொல்லுங்க ப்ரோ. மார்னிங் வந்துடறேன்” என்று விடைபெற்றுக்கொண்டான்.

அருள் அறைக்கு வரவும், “மாமா டாக்டரைப் பார்க்க போயிருக்கார் ப்பா. நாளைக்கு காலேல அனேகமா கிளம்பிடுவோம்” என்று சொல்லிக்கொண்டிருந்தான் மயூரன்.

“அம்மா இன்னும் அழுது முடிக்கல’ப்பா. ஊருக்கு போய் ஷஷ்டிய நாலு அடி போட்டாதான் சரியாவா” என்றான் அம்மாவை முறைத்துக்கொண்டு.

அதைக் கேட்டபடி, “என் பொண்டாட்டி மேல கை வெச்சுடுவ நீ?” என்று உள்ளே வந்தான் அருளாளன்.

“அடிக்காம என்ன? அவள கும்மிடுறேன் கும்மி”

“வாடா மகனே, எந்த கையால அடிப்ப?” என்று அருள் வம்பு பேச ஆரம்பிக்கவும் அலைபேசியை அம்மாவிடம் தந்துவிட்டான் மயூரன்.

கணவரிடம் பேசியவுடன் தான் சற்று மட்டுப்பட்டார், ரேணுகா.

அதைக் கவனித்த மயூரனும், “அம்மாவ ஏன் கூட்டிட்டு வந்தீங்க மாமா? ரொம்ப பயந்துட்டாங்க” என்க,

“அழச்சிட்டு வரலேனா அவங்களே வந்திருப்பாங்கடா அப்பு. சரி நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டார் டாக்டர். கால்ல அடி எதுவும் இருக்கா?” என்று விசாரணையில் இறங்கிவிட்டான் அவன்.

“வலிதான் மாமா. இந்த கண்ண திறக்கவே முடியல” என்றவன்,

“ஷஷ்டிக்கு கால் பண்ணி கொடுங்க, பேசறேன்” என்க,

அருளாளன், “கம்முனு இருடா. வரும் போதே அழுகையோட தான் இருந்தா, நீ பேசின பின்ன தான் கொஞ்சம் அழுக நின்னு, இப்போதான் தூங்கினாலாம்”

மயூரன், “அப்பத்தா சொல்லுச்சா?”

“ம்ம்.. உன்னைய கேட்டு கூப்டாங்க, தூங்கிட்டேன்னு சொல்லிட்டேன்” என்றவன் தோளைக் குலுக்க, சிரித்துவிட்டான் மயூரன்.

“அக்காவ மட்டும் கேட்டுட்டு வெச்சுட்டீங்களோ?”

“பின்ன? கெழவி என் பொண்டாட்டிய பார்க்காம விட்டுருச்சுனா” என்றவன் கொடுத்த பாவனையில், வலியை மறந்து சிரித்து உறங்கினான், மயூரன்.

மறுநாள் காலை, மயூரனை டிஸ்சார்ஜ் செய்திருந்தனர். அருளின் துணையுடன் மெல்ல நடந்து வந்த மகனின் மீதே ரேணுகாவின் பார்வை இருந்தது.

நேற்று இரவெல்லாம் பொட்டுத் தூக்கம் இல்லாது மகனிடத்திலேயே தான் அமர்ந்திருந்தார், ரேணுகா.

மனது அத்தனை ஆதங்கத்துடன் பதறித் தவித்தது அந்த தாயாருக்கு.
கலங்கிய கண்களைத் துடைத்தபடி வந்தவர் கண்கள் எதிரே வந்துகொண்டிருந்த நபரைப் பார்த்து முதலில் இடுங்கி பின் அதிர்வாய் விரிந்தது.

அது கொடுத்த தாக்கத்தில், “ஷஷ்டி’ப்பா” என்றவர் நின்றுவிட, கணவரைத் தான் அந்த நேரம் அவர் மனம் தேடிச் சுழன்றது.

எத்தனை வருடங்கள் கடந்திருந்தாலும் அவர் எதிர்கொண்ட அதிர்ச்சி சற்றும் குறையவில்லை, அது இன்னும் அவரிடமிருந்து மறையவில்லை என்பதை அவர் உடல் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்த தருணம் அது.

அருளாளனும் மயூரனும் அவரை அணுகிய போதும் சரி அதன் பின்னான நேரங்களிலும் சரி ரேணுகாவின் அப்பட்ட அதிர்வு ஆண்கள் இருவரையும் கேள்வியால் நிறைத்துவிட்டது.



மாணிக்கவாசகம், லோபமுத்ரா தங்கியிருந்த பிஜியை அடையும் நேரம் காலை மணி பத்தாகியிருந்தது. வலியில் காய்ச்சல் கண்டு சுருண்டு படுத்திருந்தாள் பெண்.

மாணிக்கவாசகம் வந்தவுடன் அவளை மெல்ல எழுப்பி, உடையைத் திருத்தம் செய்து, ஓய்வறை அழைத்துச் சென்ற பின்னர் தான் பிஜியின் வரவேற்பு அறைக்கு அழைத்து வந்திருந்தாள், அபிநயா.

“முத்ரா’ம்மா” என்று மகளிடம் அவர் விரைய, அவள் உடம்பு சுத்தமாய் முடியாது போகத் தகப்பனின் மீதே மயங்கிச் சரிந்திருந்தாள், லோபமுத்ரா.

அபிநயாவோடு வந்திருந்த மற்ற தோழிகளும் அவளைத் தாங்கிக்கொள்ள, மாணிக்கவாசகத்திற்கு மகளை அந்த நிலையில் பார்த்து சர்வமும் ஆடிவிட்டது.

அபிநயா, “அங்கிள் ஹாஸ்பிடல் போயிடலாம். இங்க பக்கம் தான்” என்றவள் துரிதமாக ஆட்டோ ஒன்றைப் பிடித்து தோழிகளின் உதவியுடன் லோபமுத்ராவை ஏற்றிக்கொண்டு நேற்று காண்பித்தே அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாள் மாணிக்கவாசகத்துடன்.

நேற்று வெயிலில் அதிக நேரம் நின்றிருந்தது, உடல் சோர்வு எல்லாம் சேர்ந்து காய்ச்சல் கண்டிருந்தது.

அடிபட்டதால் ஏற்பட்ட காய்ச்சல் என்றார் மருத்துவர். உடல் நோவு தீர்வதற்காக ஐவி போடப்பட்டது.

மாணிக்கவாசகம், “ரொம்ப தேங்க்ஸ்’ம்மா. முத்ரா முழிச்சதும் நா ஊருக்கு கூட்டிட்டு போறேன், சாப்பிட்டீங்களா நீங்களாம்?” என்றார் லோபாவின் தோழிகளிடம்.

“நாங்க பார்த்துக்கறோம் ப்பா. நீங்க சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, நான் இங்க இருக்கேன். நீங்கச் சாப்பிட்டு வாங்க’ப்பா” என்க,

“இல்ல.. முத்ரா தேடுவா” என்றார் மகளை அறிந்தவராக.

“அப்போ நாங்க உங்களுக்கு வாங்கிட்டு வரோம். நீங்க உட்காருங்க’ப்பா” என்றவள் தோழிகளுடன் அகன்று விடவும், மகன் சச்சினுக்கு அழைத்துபீ பேசினார் மாணிக்கவாசகம்.

லோபமுத்ராவின் நலனைப் பகிர்ந்தவர், “அம்மாகிட்ட எதுவும் சொல்லாத சச்சு. ஆபிஸ் விஷயமா போறேன்னு தான் தெரியும், அதையே சொல்லு. நைட் அக்காவ கூட்டிட்டு கிளம்பிடுவேன்” என்க,

“எப்டிப்பா வருவீங்க? ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி கார் அரேஞ்ச் பண்ணவா?” என்றான்.

“நான் புக் பண்ணிக்கறேன். கெளம்பறப்போ கூப்பிடறேன்” என்றுவிட்டார்.

லோபமுத்ரா எழும்பவே மதியத்தைத் தாண்டிவிட, அவள் உடலில் அத்தனை அலுப்பும் வலியும்.

மாணிக்கவாசகத்தைப் பார்த்தவுடனேயே, “ப்பா கால் வலிக்குது’ப்பா.. இங்க கையெல்லாம் வலிக்குது ப்பா” என்று ஆரம்பித்துவிட்டாள்.

மருத்துவரிடம் மகளைப் பற்றிக் கேட்டறிந்திருந்தவர் லோபமுத்ராவின் காயத்தின் தீவிரம் புரிந்தது.

“மாத்தர பவர் முடிஞ்சிருக்கும் பாப்பா. சரியாகிடும் சீக்கிரம்” என்றவர் மகளின் கைபிடித்து அமர்ந்துவிட்டார்.

மகளை நினைத்தான எண்ணங்களுடன் மனைவியிடம் எப்படி விஷயத்தை மெல்லச் சொல்வது என்பதில் தான் அவரின் கவனம் இப்போது ஆழ்ந்திருந்தது.

“அவங்களுக்கு எக்ஸ்டர்னல் வுன்ட் தான். த்ரீ வீக்ஸ்ல சரியாகிடும்” என்று மருத்துவர் சொல்லியிருக்க, ஒரு ஆசுவாசம் வந்திருந்தது.

ஆனால் அங்கையை நினைத்த போது அச்சிறு நிம்மதி கூட சூழியமாய் போய்விட்டது போன்றானதொரு உணர்வு அவருக்கு.

“அம்மாவ எப்டி’ப்பா சமாளிக்க போறோம்” என்று மகளும் அப்
போது கேட்டுவிட,

அதில் கலைந்தவர், “கல்யாணம் ஆகி இத்தன வருஷம் ஆகியும் அந்த விஷயத்த மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியலையே முத்ரா” என்றுவிட,

லோபமுத்ரா, “அப்பா” என்றாள் பரிதாபமாக.

காரணம், அமைதி என்ற புயலை உள்ளூர அடக்கி ஆளும் அங்கயற்கண்ணியை சாமான்யத்தில் சமாளிக்கும் சமத்து யாருக்கும் இல்லை என்பதே உண்மை.

🌼
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 03


வான்மகள் குங்குமப்பூ நிறத்தை அள்ளித் தெளித்துப் பூசியிருக்க, அதை உள்வாங்கிக்கொண்டு இங்கும் அங்குமாய் உலாவிக்கொண்டிருந்த மேகங்கள் கூட அவளின் அரிதார அழகைச் சிறிதேனும் பூசிக்கொள்ள வேண்டி பரிதியிடமிருந்து
இளஞ்சிவப்பைக் கடன் வாங்கிக்கொண்டு அவளுக்கு இணையாக இங்கும் அங்குமாய் பறந்துகொண்டிருந்தன.

அவர்களின் கூற்றைப் பார்த்துச் சிரித்த காற்றோ பெருங்குரலெடுத்துச் சிரித்து தன் வேகத்தைக் காட்டியது.

மரங்களும் செடிகளும் வயல் வரப்பில் தங்கமாய் மின்னிக்கொண்டு தலையசைத்து நின்றிருந்த சூரியகாந்திப் பூக்களும் காற்றின் வேகத்தில் தங்களின் நகைப்பை வெளிப்படுத்த அசைந்தாட, அந்தக் கேளியைத் தாங்காத பூஞ்சை மனம் கொண்ட மேகங்கள் கலங்கி சில துளி சாரல் கண்ணீரைப் பூமியில் விசிறி அடித்தன.

வாசல் நனைத்த சாரலோடு சேர்ந்து நனைந்தவாறு சீதை முந்தானை கோலத்தைப் போட்டு முடித்திருந்தார், ரேணுகா.

இயற்கையின் வானவேடிக்கையை எப்போதும் ஆழ்ந்து ரசிப்பரிடம் இன்று மருந்திருக்கு கூட இலக்கம் இல்லாது இறுகி போயிருந்தது முகம்.

அன்றென்னமோ, கடமைக்கென்றும் செய்யவேண்டுமே என்று இருந்தது அவரின் ஒவ்வொரு வேலையும் அதில் தெறித்த அவரின் ஈடுபாடின்மையும்.

மயூரனுடன் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. மகனை அத்தனை பத்திரமாய் பார்த்துக்கொண்டவரிடம் பெரிதான மாற்றங்களைக் கண்டனர் வீட்டினர்.

கலகலப்பானவர் இல்லை என்றாலும் அமர்த்தலான அமரிக்கையானவர், ரேணுகா.

அவரின் அமைதி மயூரனைக் கொண்டு என்று வீட்டினர் எண்ணியிருக்க அது நிச்சயம் தன் பிள்ளையால் அல்ல என்று வந்தவுடனேயே கணித்துவிட்டார், பெரியசாமி.

இன்று காலை தான் மதுரைக்குக் கொள்முதல் முடித்த கையுடன் வந்திருந்தார், பெரியசாமி.

வயதை மறந்தவர் மகனிடம் விரைந்து, “தம்பி.. சாமி..” என்றவன் கைகளைப் பற்றி களங்கிவிட,

“வயசு திரும்புதோ? எதுக்கு இத்தன வேகமா வரிங்க’ப்பா” என்று அதட்டிக்கொண்டு வந்தாள், ஷஷ்டி.

தவிப்பாய் மகளைப் பார்த்தவர், “இல்லத்தா, அப்பு” என்று இன்னும் அவர் மருக,

“அவனுக்கென்ன சொகமாதென் இருக்கான். உங்களுக்கு இப்போ என்னாங்கறேன்?” என்றவள் மீண்டும் அதட்ட, அது கடுப்பாக்கியது மயூரனை.

ஷஷ்டி ஆனந்தி, மயூரனைவிட ஒரு வயது தான் பெரியவள். அவனுக்கு அவள் ‘அக்காள்’ என்று அவளே சொன்னால் ஒழியத் தான். இல்லையெனில் இரண்டும் டாம் & ஜெர்ரி வகையறா.

பெற்றோரிடம் நடக்கும் உரிமை போர் துவங்கி அத்தை மகனும் ஷஷ்டியின் கணவன் அருளாளனிடம் அடிக்கும் லூட்டிகள் வரை அனைத்திலும் இருவரும் சமமாக இருக்க வேண்டும்.

கிள்ளிக் குறைத்து என்று அவர்கள் சலம்பலின் அளவீடு ஒருவரைவிட மற்றொருவரிடம் குறைந்தாலும், நடக்கும் சம்பவத்திற்கு, கம்பெனி பொறுப்பாகாது சாமி.

அவளை முறைத்துக்கொண்டு, “நா சொகமா இருக்கறத நீ பாத்த?” என்றவன் ஆரம்பிக்க,

அதில், “உம் புத்திய புல் மேய விட்டுட்டுப் போய் நடுரோட்டுல மட்டமல்லாக்க விழுந்து வைப்ப. அதுக்கு எங்கப்பா கலங்கனுமோ” கோபத்தைத் தெளித்தன அவள் வார்த்தைகள்.

முன்னதை விட்டவனாக,, “பைத்தியமே அவர் எனக்கும் அப்பா தான்” என்றவன் எகிற,

“அப்போ நீ சென்னைல புல்லத் தான் மேயறேன்னு ஒத்துக்கறீயா என்ன?” என்க,

அதை கண்டுக்காது, “நானே வலி உயிர் போகுதுன்னு இருக்கேன். கண்டத பேசாத ஷஷ்டி” என்றவன் பல்லைக் கடித்துகொண்டு எழுந்துக்கொள்ள,

பெரியசாமி, “என்ன பேச்சு இதெல்லாம் அப்பு. அச்சாணியமா பேசாத சாமி” என்றுவிட்டார் மகனின் மொழியில்.

எரிச்சலில் அவன் கத்தினான் என்பதைவிட அவனின் விபத்தைப் பற்றி ஷஷ்டி பேசியதைத் திசை திருப்பவே அவன் கடுகடுத்தான்.

முகத்தை அதீத பாவமாய் வைத்துக்கொண்டு, “இன்னும் நா மாத்தர கூட போடலப்பா. வலிக்குது” என்றுவிட,

ரேணுகா, “நீதான அப்பு நேரம் போன பின்ன போடுறேன்ன, இப்போ வலி கூட ஆகற மாதிரி பண்ணிட்டு கண்டத பேசினா” என்று மாத்திரையோடு வந்தார் மகனின் எரிச்சல் பேச்சுக் கொடுத்த தாக்கத்தில்.

அவனின் வலி, அவனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய பேச்சை வலுவிழக்க வைத்திருந்தது.

ஆனால், அது ரேணுகாவிடம் ஆழப் பதிந்துபோனதை அவன் அறியவில்லை.

பெரியசாமி, “செத்த படுத்து எந்திரிய்யா. காய்ச்ச கண்டுச்சா ரேணு பிள்ளைக்கு?”

“இல்லைங்க. மொத நா மட்டும் லேசா உடம்பு சுட்டுச்சு” என்றவர் பார்வை மயூரனிடம் மட்டும்.

ஷஷ்டி, “ம்ம்.. அவன் குட்டி வயசு பப்பா.. இடுப்புல தூக்கிட்டு சுத்துங்க ரெண்டு பேரும்” என்று முகத்தைச் சுழிக்க,

மயூரன், “ஏதோ கருகுது போல’ம்மா.. நாத்தம் வரல” என்றவன் மூக்கை மூடவும், பெரியசாமி முகத்தில் கீற்றாய் புன்னகை இழையோடியது.

ரேணுகா, “ஷஷ்டி’ப்பா நீங்க வந்து சாப்பிடுங்க. அப்பு கொஞ்சம் தூங்கி எழுந்துக்கட்டும்” என்க,
அவர் அசைந்தார் இல்லை.

மயூரனின் கண்ணிற்கு மேல் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டரில் தான் அவரின் பார்வை இப்போது மையமிட்டிருந்தது.

அதைச் சுற்றி லேசாய் தோல் சிவந்து இருந்தது வேறு அவரை மேலும் வாட்ட மயூரனுக்கு அது தெளிவாகத் தெரிந்தது.

“நா நல்லா இருக்கேன்’ப்பா‌. வலி கூட அவ்வளவு இல்ல, போங்க‌. சாப்பிட்டு படுத்து எழுந்திரிங்க” என்றான் சமாதானமாக.

“கை எப்டி தம்பி இருக்கு. அசைக்காம இருய்யா, சாப்பிட முடியுது தான’ப்பு”

மீண்டும், “அவேன் குழந்த இல்ல” என்று ஷஷ்டி கடுப்படித்தால்.

“கண்ண உருட்டாதடி பத்ரகாளி. எங்கப்பாவுக்கு நா குழந்த தான்” என்றவன் அவளை இடித்துக் கொண்டு அறைக்குச் செல்ல,

கையை உதறிக்கொண்டு, “பாருங்கப்பா” என்று ஆரம்பித்தாள் ஷஷ்டி.

விட்டால் மகள் கணவனைச் சாப்பிட விடமாட்டாள் என்றறிந்த ரேணுகா, “அமைதியா இருக்கையா இல்ல உன் வீட்டுக்கு போறியா ஷஷ்டி” என்று அதட்டவும் அவள் முகமே மாறிவிட்டது.

அதைப் பொறுக்காது, “என்ன ரேணு?” என்ற பெரியசாமியைத் தடுத்தவர்,

“இவளுக்கு உங்கக்கா தான் சரி. ரெண்டு நாளா அப்புவ போட்டு அந்த பிறாண்டு பிறாண்டுறா. இன்னும் என்ன ரெண்டுக்கும் சின்ன பிள்ளைங்கன்னு நெனப்போ? கல்யாணம் கட்டி புள்ள பெக்கற வயசுல அப்புவோட இன்னும் ஆட்டமா ஆடிட்டிருக்கா உங்க மக” என்று பொரிந்து தள்ளியவர் மகளைக் கண்டுகொள்ளவே இல்லை.

அதில் ஷஷ்டிக்கு அம்மாவின் மீது கோபமான கோபம் வந்துவிட, முகத்தை தோளில் இடித்துக்கொண்டு ‘ஹும்’ என்றபடி அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

ரேணுகா, “திமிரப் பாருங்க” என்று செல்லும் மகளை முறைக்க,

பெரியசாமி, “விடுத்தா சின்ன புள்ள தான.. நீயும் வந்து சாப்பிடு” என்றவர் மனைவிக்குப் பரிமாறியபடி தானும் சாப்பிட்டு எழ,

“அயிர மீனும் வெள்ளாட்டங்கறியும் வாங்கிட்டு வர சொல்லுங்க ஷஷ்டி’ப்பா. ஷஷ்டிக்கு செஞ்சு தரணும்” என்க, மனைவியின் கூற்றில் சிரித்தபடி நகர்ந்தார் பெரியசாமி.

பெற்றவர்கள் மக்களைப் பேசுவதெல்லாம் அந்த நேர வெளிப்பாடாகத் தான் இருக்கும். கரிசனை மிகுந்திருந்தாலும் தவறைத் திருத்தம் செய்வதற்கே பெரும்பாலும் கடின வார்த்தைகள் வெளியாகும்.

அதைச் சரியான விதத்தில் எடுத்துக்கொண்டால் அது பாடமாகும். அல்ல தவறும் பட்சத்தில், வாழ்க்கை அதற்கான கூலியைத் தந்து தான் தீரும்.

கை நிறையச் சம்பாதித்த கூலி ரணமாய் அறுத்தாலும் அது முழுக்க நம்மின் உழைப்பற்ற செயலின் விளைவு என்று உணரும் தரும் யாவும் நம் கைவிட்டுப் போயிருக்கும்.

அயிரை மீன் குழம்பும் வெள்ளாட்டங்கறி மிளகு வறுவலும் கெட்டித் தயிரும் தாயிடம் இருந்த கோபத்தில் சில இணுக்கைக் குறைத்திருந்தது ஷஷ்டியிடம்.

வெறும் ரசத்தோடு எழுந்த மயூரனை கேள்வியாய் பார்த்தார், பெரியசாமி.

“சாப்ட முடியலைப்பா. போதும்” என்றவன் ஷஷ்டியைப் பார்க்க,

“அவளுக்கு பத்தாம போயிடும், அதான்” என்று நக்கலாகச் சொல்லவும்,

“நல்ல வேல பண்ணடா. பத்துமா பத்தாதானு இருந்தேன், நைட்டும் எனக்காச்சு” என்றவள் மண்டையிலேயே கொட்டினான் மயூரன்.

“மெல்ல சாப்பிடுடி” என்றபடி அவன் அகல, ரேணுகா அதில் கலந்துகொள்ளாது யோசனையூடு நின்றிருந்தார்.

“எனக்கு போதும் ரேணு. நீயும் சாப்பிடு, நா செத்த படுத்து எழறேன்” என்று அவரும் செல்ல, சாப்பாட்டுக் கடை பெண்களோடு மூடியது.

உண்ட களைப்பும், பயண களைப்பும், மாத்திரையின் வீரியம் என்று ஒவ்வொரு களைப்பில் வீடே அடங்கியிருந்தது.

நிசப்தத்தின் விளைவால் காலையில் இருந்து சற்றே மறைந்திருந்தவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ரேணுகாவிற்கு நினைவெலப்பட்டன .

அவர் மனதில் மயூரனின் காயமும் மருத்துவமனை நிகழ்வும் மாறி மாறி வந்து ரணமேற்ற, ஏறிய காயத்திற்கு மருந்திடாமல் தவியாய் அமர்ந்திருந்தார்.

இரு நாட்களாக மகன் மகள் என்று சுற்றியவரின் கவனம் கலைக்கப்பட்டு, வேண்டாம் என்ற எண்ணத்தின் எச்சங்கள் அனைத்தும் கூராய் கூர் தீட்டி நின்றது முன்னர் கசந்துபோன நினைவுகளை நினைவுறுத்தி.

நினைக்க நினைக்க, மூச்சு விடவே முடியாத படியான ஒரு நிலை அவருக்கு. பல வருடங்கள் கடந்தும் மயூரனின் விபத்து அவரை முழுதாய் வலுவிழக்கச் செய்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

“முருகா” என்று நெஞ்சைப் பிடித்தவரின் எண்ண வரிசையில் பற்பல நிகழ்வுகளின் கோர்ப்பு.

அந்த கோர்வை தாங்காது விருட்டென்று எழுந்தவர் மூச்சடைக்க மாடிக்கு விரைந்தார், எதிலிருந்தோ தப்பிக்கும் மார்க்கத்தைத் தேடிக்கொண்டு.

மனது படபடக்க, உள்ளம் தட தடக்க உடலோ கிடுகிடுத்து ஆட்டம் காட்டியது. தள்ளாடிய கால்களை அடக்கிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு சுடும் தரையில் அமர்ந்துவிட்டார்.

“ரேணு.. ரேணு.. ம்மா.. தேவி.. ரேணுகா.. ஆத்தா..” என்று எண்ணற்ற குரல்களின் பிசிறிய அழைப்பும் அதில் வெளிப்பட்ட அவருக்கேயான உரிமையும் அதைச் சுவீகரிக்க முடியாத அவரின் தவிப்பும் என்று அவருள்ளேயே சுழன்றவர் ஒரு கணத்தில் அது கொடுத்த கணம் தாங்காது தன்னை மறந்து தூங்கிவிட்டார்.

மாலை வழக்கம் போல் மயூரனின் வீட்டில் வேலையாட்கள் தோட்டத்தில் வேலையில் இருக்க, அதை மேற்பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள், ஷஷ்டி.

அவர்களுடைய பிரதானம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தான். இடையில் விவசாயமும் பூக்களின் மொத்த வியாபாரமும் பரம்பரையாகச் செய்யும் தொழில் என்பதால் அருளாளனோடு சேர்ந்து அதையும் பார்த்துக்கொள்வார், பெரியசாமி.

பூந்தோட்டத்தில் அதிகாலையே மல்லி, முல்லை, காக்கடா, வாடாமல்லி, பட் ரோஸ் பூக்களைப் பறித்து உள்ளூர் மட்டும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பர்.

மாலை வேளையில் மலரும் பூக்களை உள்ளூர் சந்தை வியாபாரிகள் வந்து வாங்கி சொல்வது வழமை.

வீட்டில் போட்டிருக்கும் சிறிய காய்கறி தோட்டத்தை மாலை நேரத்தில் சுத்தம் செய்து அதில் இருக்கும் காய்களைப் பறித்து வீட்டு உபயோகத்திற்கு வைத்துக்கொள்வர்.

அது முற்றிலும் மயூரன் அப்பாத்தாவின் வ(ப)ழக்கம்.

ஷஷ்டிக்கு வேலையை மேற்பார்வை பார்ப்பதைவிடத் தோட்டத்து ஈர மண்ணின் மணம் அவளை அலாதியாய் ஈர்க்கும்.

ஆழ நுகர்ந்தபடி அவள் நின்றிருக்க,
“ஆத்தா ஷ்ஷடி, அம்மா எங்க?” என்றபடி வந்தார் பெரியசாமி.

“அப்போவே மாடிக்கு போனாங்கனு மீனாக்கா சொன்னாங்க. இன்னும் வரல போலப்பா” என்க,

“சாப்டாளா?”

“ம்ம்.. நாதேன் பரிமாறுனேன்” என்றவள்,

“மாமா உங்கள கூப்ட சொன்னார் ப்பா. பேசிடுங்க” என்றுவிட்டு வேலையைப் பார்வையிடச் சென்றுவிட்டாள்.

அருளாளனிடம் வியாபார நிமித்தமாகப் பேசி வைத்தவர் கவனம் மனைவியிடம் திரும்பவே, மாடிக்கு விரைந்தார் பெரியசாமி.

காலையில் இருந்து ரேணுகா அவர் முகம் பார்த்துப் பேசவே இல்லை. அதைவிட அவர் முகத்தில் இருந்த ஒட்ட வைத்த இலகுத்தன்மையை கண்டுகொண்ட பெரியசாமிக்கு மனைவியிடம் பேசாமலும் இருக்க முடியவில்லை.

அங்குத் தூங்கி எழுந்தவரின் மனது நிர்மலமாக இருந்தாலும் ஏதோ ஒரு நமநமப்பும் உள்ளுக்குள் ஒரு முணுமுணுப்பு இருந்தவண்ணமிருந்தது.

அதை கலைக்கவென்றே, “என்ன ரேணு” என்று வந்துவிட்டார் பெரியசாமி.

அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் பட்டு அவர் தங்கத்தை ஒத்து ஜ்வளிக்க, பார்வை எதிரே இருந்த சின்ன ஆம்பல் குலத்தில் வெறித்திருந்தது‌.

மனம் வலியைக் கடந்த வலிமை பெற்றிருந்தாலும் கசப்பு என்றுணர்ந்த பின் உட்கொண்ட மருந்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் அந்த நினைப்பும் கசந்து தானே வரும்.

“மதுரவீரருக்குக் கெடா வெட்டனும் ஷஷ்டி’ப்பா” என்றார் பார்வை அகற்றாது.

“சரித்தா.. வேறென்ன?” என்று மனைவியின் முகம் பார்த்து மனிதர் தரையில் அமர,

“தர சுட போகுது, கவனம்” என்றாரே தவிரக் கணவரைத் தடுக்கவில்லை.

தடுத்தாலும் அவர் அமர்வார். மனைவியின் கால்கள் பிடித்துவிடுவார்.

“அப்பு நல்லாகற வர நீங்க வெளியூருக்கு போகதீங்க” என்றவர் வெறித்த பார்வை தாழ்ந்திருந்தது.

மனைவியின் முக மாறுதல்கள் எல்லாம் அத்தனை துல்லியமாய் கணித்துப் பார்த்த பெரியசாமியின் கண்களில் சிறு நகை.

“என்னத்த என்கிட்டயிருந்து மறைக்குறவ” என்றவர் கட்டைக் குரலுக்குப் பதிலில்லாது போனது ரேணுகாவிடம்.

முப்பது வருடத் திருமண வாழ்க்கையில் ஐம்பதைக் கடந்த மனைவியின் ஒவ்வொரு நுணுக்க செயல்பாடுகளும் அத்துப்படி பெரியசாமிக்கு.

மெய்யோ பொய்யோ அதை அப்போதே பெரியசாமியிடம் சொன்னால் தான் ரேணுகாவின் மூச்சே சீராகும் என்றபடி தான் இருக்கும் அவரின் செய்கைகள்.

காரணம், பெரியசாமியின் ரேணுகாவின் மீதான காதல்.

அந்த காதலைப் பார்த்து வளர்ந்த ஷஷ்டிக்கும் மயூரனுக்கும் இருவரின் அன்யோன்னியம் கூட அத்தனை ஆகர்ஷிக்கும்.

எதுவாக இருந்தாலும் நாம் வெளிப்படுத்தும் அன்பின் வழியில் தானே பதியவும் புரியவும் செய்யும்.

ரேணுகாவின் மௌனம் வெகுநேரமெல்லாம் இருக்காது என்று தெரிந்தவர் மெல்ல அழுத்தம் கொடுத்தார் அவர் காலில்.

அதில், “ஸ்ஸ்” என்று வலி மேலிட நடப்புக்கு வந்தவர், “வலிக்குது ஷஷ்டி’ப்பா” என்றவர் இப்போதும் பெரியசாமியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மாறாக அவர் தோள் புற சட்டை இறுகப் பற்றிக்கொண்டார் மனதின் மத்தள இடிபாடுகள் தாங்காது.

“கண்ட நோவையும் போட்டு இழுத்துக்காத ரேணு. எல்லாம் முடிஞ்சு முப்பது வருஷமாச்சு தானத்தா” என்க, அவர் உடல் அதிர்வுகளின் அலைவரிசையில் அலையாடியது.

“ஷஷ்டி’ப்பா.. அங்க.. அப்பு.. ஹாஸ்பிடல்..” என்றவர் கோர்வையற்று ஏதோ சொல்ல வரவும், பெரியசாமி நினைத்தது ஊர்ஜிதமானது.

அவர் நினைத்தது தான், அதை இப்போது திரும்பவும் நிறைக்க விரும்பவில்லை அவர்.

“விடுத்தா, நா இருக்கேன்” என்றவர்
ரேணுகாவின் கா
ல் விரல்களில் சொடுக்கு எடுக்க, தென்றலோடு வானிலையும் மாறியது.

மாடியில் இருந்த சந்தனமுல்லை மலர்கள் மாலை நேரமதில் விரிந்து மணத்தைப் பரப்பியவாறு காற்றோடுக் கலந்து பறந்து தம்பதியரைச் சூழ்ந்து அணைத்துக்கொண்டது!

🌼
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 04

ரொம்ப நேரம் படுத்திருந்ததாலோ அல்ல கையை அசைக்காது இருந்ததாலோ மயூரனுக்கு விரல்களில் பயங்கர வலி.

வலியின் வீரியத்தால் தூக்கம் கலைந்துவிட, எரிச்சலும் அசௌகரியமுமாய் உணர்ந்தான்.

“ம்ம்.. எப்போ தான் சரியாகுமோ” என்றவன் கை விரலைப் பார்த்தபடி எழுந்தமர, எதிரே அழகே திருவுருவாய் வீற்றிருந்த செந்தில்நாதன் சிரித்த முகமாய் அவனைப் பார்த்திருந்தார்.

தன்னைப் போல் அவன் அதரங்கள் விரிந்துகொண்டது செந்தூரனை பார்த்த கணம்.

“வை முருகா என்மேல இத்தன கொலவெறி” என்றவன் அப்புகைப்படத்தில் லைத்துவிட,

‘வேலப்பா’ என்ற குரல் அவன் காதினுள் மெல்ல முணுமுணுத்தது.

அந்த குரலின் ஈர்ப்பு தாங்காது அவன் மேனி கூச, அனிச்சையாய் தலையை ஒருபுறம் சாய்த்துக்கொண்டவன் காதோர ரோமங்கள் கூட குத்திட்டு நின்றிருந்தன.

“ஸ்ஸ்” என்றதொரு இனிப்பான உணர்வொன்று அவனைத் தாக்க,
மீசைக்கடியில் மறைந்திருந்த மேல் உதடுகளை மெல்லக் கடித்தபடி, “லோபமுத்ரா” என்றான் அதி மென்மையாய்.

அவன் அதுவரை கேட்டிராத பெயரைக் கொண்டவளின் முகமும் பெயரும் அதைவிட அவள் முகத்தில் இருந்த மச்சமும் அழியாது பதிந்துபோய் விட்டது அவனிடத்தில்.

காதோரத்தை மெல்லத் தேய்த்துக்கொண்டு, “ம்ம்.. என்னைய ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற பொண்ணே நீ” என்றவன் அவளை நினைத்தபடி சொல்லவும், உள்ளுக்குள் ஏதோ தித்தித்தது.

வலிகள் மறந்து மனம் உற்சாகமாய் இருப்பது போல் தோன்றவும் அவன் உடலில் புது ரத்தம் பாய்ந்த உணர்வு.

குளியலறையில் தன்னை சுத்தம் செய்தவன் கண்ணாடியில் முகம் பார்க்கவும் இன்னும் சில மில்லிமீட்டர் சிரிப்பு அவனை சூழ்ந்துகொள்ள, அதில் அவன் முகம் பொலிவுற்று விகசித்தது.

“அழகுடா மயூரா நீ” அவனுக்கு அவனே ஒரு கையால் நெட்டி முறித்துக்கொண்டு வெளியே வர, ஷஷ்டி காய்கறி கூடையைத் தூக்கியபடி உள்ள வந்தாள்.

“ஹே மூஞ்சூர், ஐயாக்குக் சூடா ஸ்ராங்கா ஒரு காஃபிய எடுத்துட்டு வா” என்க,

“பச்ச தண்ணீ தான? கொண்டாறேன் இரு” என்றவள் தரை அதிர சமையலறைக்குள் சென்று மறைய,

“ஷஷ்டி, நைட் மாமா வருவார்” அறிவித்தபடி மாடிக்குச் சென்றான் மயூரன்.

அங்கு அவன் பெற்றோர் அமர்ந்திருந்த அழகையும் அவர்களை இயற்கை வாழ்த்திய பாங்கையும் பார்த்து ரசித்தவன், “காதல் பண்ணி முடிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்” என்றபடி அவர்களிடம் சென்ற மயூரனின் முகத்தில் அத்தனை சிரிப்பு.

பெரியசாமி, “வா சாமி” என்றவர் ஆழ்ந்து மகனிடம் பார்வையை வைத்திருக்க,

ரேணுகா, “புள்ளைய இப்படி பார்க்காதீங்கன்னு எத்தன தரம் சொல்லுறது” என்று கணவனின் தோளில் மெல்லத் தட்டியவர்,

“காஃபி கொண்டு வரவா அப்பு” என்றார் உடனே.

நிமிடத்தில் மனைவியாய் தவித்து, தாயாய் மலர்ந்துவிட்டார், ரேணுகா.

பெண்களின் பல்வேறு அவதாரங்களின் ப்ரதானம் இதுவாகத் தான் இருக்கும் போல…

“இருங்க’ம்மா சும்மா. அதான் உங்க பொண்ணு இருக்காளே, கொண்டு வருவா பாருங்க. இந்நேரம் மூக்கு வேர்த்திருக்கும்” என்றவன் அம்மாவின்‌ மற்றைய புறத்தில் அமர்ந்துகொண்டான்.

மகனின் தலை கோதியவர் முகத்தில் இப்போது ஒரு சன்ன சிரிப்பு.

கணவரின் இருப்போ பேச்சோ கொடுக்காத ஒரு பிடிப்பை மகனின் வரவு தந்துவிட்டது போல.

தென்றலின் வருடலோடு தாயின் வாஞ்சையான அன்பு சேர்ந்துகொள்ளத் தகப்பனின் கைகளைப் பற்றிக்கொண்டான், மயூரன்.

கதிரவன் அஸ்தமித்து பகல் பொழுதிலிருந்து விடைபெற, அசைந்தாடி மேலேறி வந்த இராக்கதிரவள் (இராக்கதிரவன் - நிலவு) இரவு நேர பணிக்குத் தயாரானாள்.

மெல்ல மெல்ல வெளிச்சத்தின் மிச்சம் குறைய ஆரம்பிக்கவும், “எதுக்கும்மா அப்டி பயந்து நடுங்கி நின்னிங்க?” என்று திடீர் கேள்வியை சமயம் பாராது இறக்கினான், மயூரன்.

அதை பெரியசாமி எதிர்பார்க்கவில்லை.

“அப்பு” என்றார் மகனை மேற்கொண்டு பேசவிடாது.

உறுதியாய் அவன், “எனக்கு தெரியனும்” என்றுவிட, ரேணுகா முகத்தில் வெறுமை.

பெரியசாமி எதுவும் பேசாது மனைவி மகனையே பார்த்தபடி இருந்தார். இனி ரேணுகா தான் மயூரனுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம்.

சற்று பொருத்து, பெரியசாமியைப் புரிந்தவராக, “உங்க அப்பாவ தேடுனேன் மயூரா. ஏதோ மனசுக்கு ஒப்பாத ஒன்னு நடந்துருச்சு. அத கடந்து வர முடியாம மனசோட உடம்பும் சத்தில்லாம போன மாதிரி ஆகிடுச்சு” என்று மெல்லக் கலங்கியவண்ணம் பெரியசாமியைப் பார்த்தபடி கூறினார் ரேணுகா.

“என்னாலையா?” மகன் முகம் சுருங்கவும்,

“அதுவும் கூட” என்றுவிட்டு அவன் முடி ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டார்.

“ம்மா” என்றவன் ரேணுவின் மடியில் படுத்துவிட, பெரியசாமிக்கு உள்ளுக்குள் பெரும் தவிப்பு.

அதை விடுவிக்க முனைவதைப் போல், “உங்கப்பா நம்மகிட்ட எதையும் நெருங்கவிட மாட்டார் மயூரா” என்க, அது பெரியசாமியின் மீதான அவரின் பிணைப்பைக் காட்டியது, பெரியசாமியிடம் இன்னுமின்னும் கூட்டியது.

“சேரி போதும் வாங்க கீழ போகலாம். எம்புட்டு நேரமாச்சு” என்று பெரியசாமி பேச்சை நிறுத்த வழி செய்ய,

“உங்காருங்க. பிள்ள மடியில படுத்திருக்கான் எழும்பறதாம். நீங்க போங்களேன்” என்று ரேணுகா சட்டென்று தன்னை நிலைப்படுத்த முயன்று, வெற்றிக் கொடியையும் நட்டார்.

“உங்க பொண்ணில்லாம இருக்க முடியலையா ப்பா” என்று அவனும் தன் பங்கை நிறைவேற்ற,

“பின்ன ஆத்தா தேடாதா நம்மள” என்றவர் எழும்பப் போக,

“ப்பா உங்காருங்க.. கொலுசு சப்தம் கேட்கல?”

ரேணுகா, “ஷஷ்டி வரா” என்றவர் படியை நோக்கவும், முகத்தைச் சுருக்கியபடி மேலே வந்தால் ஷஷ்டி ஆனந்தி.

மயூரன் அவள் கையை பார்த்தபடி, “என்ன காஃபி வராம போன் வருது” என்றவன் எழுந்துகொள்ள, அதில் கோபம் வந்துவிட்டது ஷஷ்டிக்கு.

ரேணுகாவின் கையில் மயூரனின் அலைபேசியை வைத்தவள் பெரியசாமியின் அருகே வேகமாய் அமரவும்,

“எத்தா பைய உட்காருவ. என்னத்துக்கு இம்புட்டு கோபம்” என்க, தந்தையின் தோளில் முகம் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் ஷஷ்டி.

அதில் வெளிவரத் துடித்த சிரிப்பை அடக்கியவன், “உன்ன தான் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோமே இன்னும் என் அப்பாவோட என்ன ஈசிட்டு உட்கார, எழும்புடீ” என்று மயூரன் வழக்கமாய் செய்யும் சீண்டலை ஆரம்பிக்க,

ரேணுகா, “கொஞ்ச நேரம் உட்காரட்டும் அப்பு. அருள் வந்தவுடனேயே ஓடிடுவா வேற” என்க,

“ஆமா அப்டியே பல நூறு மைல் தூரத்தில இருக்கா, இந்த சுவர் ஏறி குதிச்சு அடுத்த தெரு போனா எங்கத்த வீடு. பொழுதுக்கும் அப்பாவோட தானம்மா இருக்கா, இன்னிக்கு என்ன ஸ்பெஷல் அகேஷன்?” என்று தந்தையையும் அக்காவையும் பார்க்க,

அவன் அலைபேசி மெல்லக் கூவியபடி ஜானின் பெயரைத் தாங்க ஒலிக்க, அவன் கவனம் அங்கு பொதிந்தது.

இப்போது பெரியசாமியைப் பக்கவாட்டாக அணைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் ஷஷ்டி.

அடமான அடம் அவள் செய்கையில் கொட்டிக்கிடந்தது பிடிவாதக் குழந்தையின் நகலை ஒத்து.

அதில் தந்தையின் முகம் பெரியதாய் புன்னகை பூக்க, மகளின் தலையை வருடியபடி இருந்தவரின் பார்வை மகனை வாஞ்சையாய் பார்த்தது.

“நீ பேசீட்டு வாய்யா” என்று மகனை அவர் அனுப்ப, ரேணுகாவும் எழுந்துகொண்டார்.

ஷஷ்டி, “காந்தம் ஈர்க்குதோ” என்றாள் அமைதியை உடைத்துக்கொண்டு.

ரேணுகா, “நீ வந்து சமைக்கறியா” என்றார் முறைப்பாக. அதில் ஷஷ்டி கப்சிப்.

பெரியசாமியிடம், “இவனுக்கு சென்னை போய் வாய் கூடிடுச்சுப்பா. மாமா கூட இவனோட பேச யோசிக்கறாங்க” என்றாள் புகாராக.

“உன்னோட தானத்தா பேசுறான். என்னத்த இருக்கு இதுல” என்றவர்,

“அருளு ஏதாவது சொன்னானத்தா?” என்று மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

பேச்சற்று தந்தையிடம் ஒடுங்கிக்கொண்டாள் மகள்.

இருபத்தெட்டு வயதுக்காரிக்கு உள்ளக் கிடங்கில் மலையளவு சேர்ந்திருக்கும் வருத்தங்களின் அணிவகுப்பு முடிவிலி இல்லாது போவது போலானதொரு தோற்றம்.

“ஆத்தா ஷஷ்டி.. சொல்லத்தான’த்தா?” என்று அவர் மகளை ஊக்கவும், தொண்டை அடைத்தது அவளுக்கு.

“நா வீட்லையே இருக்கேன்’ப்பா” என்றுவிட்டாள் முற்றுப்புள்ளியாய்.

“ஆத்தா” என்றவர் ஆதங்க குரலெழுப்ப,

“மாமா கிட்ட இதையே சொல்லிடுங்க’ப்பா” என்றவள் கண்களில் மெல்லியதாய் நீர் படலம்.

அதைத் தாங்கமுடியவில்லை மகளைப் பெற்றவருக்கு.

“ஆத்தா, அப்பா என் சாமிய நம்புதென்த்தா” என்றுவிட, விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் விழிகளில் தெரிந்த கலக்கம் குரலிலும் தெறிக்க, “உங்க அக்கா நம்பலையே” என்றதில் மொத்தமும் தன் உடன்பிறந்தவளிடம் விட்டுப்போனது போலான நிலை பெரியசாமிக்கு.

இரண்டு தவறிய அழைப்புகள் ஜானிடமிருந்து. அறைக்குள் வந்த மயூரன் அவனைத் தொடர்புகொண்டான்.

“சொல்லு ஜான். வலி பரவாயில்லாம இருக்கா?” என்க,

“ஊருக்கு வந்துட்டேன் ஸார். இங்க அம்மாகூட ஒரு வாரம் இருந்துட்டு தான் அகாடமி போவேன். நீங்க ஸார்?”

“நல்லா இருக்கேன் ஜான்” என்றவன் மனதை அடைத்தது அந்த கேள்வி.

அதை ஜானிடம் கேட்க அத்தனை தயக்கம் வேறு. மெல்ல யோசனையுடன் நடந்து பால்கனி வந்தவனை வரவேற்றுச் சிரித்தாள் வெண்ணிலா.

மேகங்கள் அற்ற வானத்தில் ஒய்யார சிருங்காரியாய் அவள் உலா வர, அவள் ஏனோ லோபமுத்ராவை நினைவுபடுத்துவது போல் தோன்றிய சமயத்தில், முகத்தை வலியில் சுருக்கி ரத்தம் தோய்ந்த கையுடன் அதீத பதட்டமான லோபமுத்ராவின் முகம் வந்து சென்றது மயூரனின் மனதில்.

ஒருமுறை அவன் உடல் குலுங்கிப் போட்டது. அவளுக்கு உதவி செய்தது மட்டுமே அவன் நினைவில் இருக்க, அவள் நிலையறியாது இன்னுமே அவனுள் ஒரு தகிப்பு இருந்துகொண்டு தான் இருக்கின்றது.

வெளிப்படையாய் அவளைப் பற்றி ஜானிடம் கேட்க ஏதோ போல் இருந்தாலும் அவளைப் பற்றித் தெரிந்தே ஆக வேண்டும் என்று எண்ணத்தின் ஸ்தீரம் வலுவாக ஆரம்பித்தது.

ஆழ மூச்சினை எடுத்தவன் ஒட்டிய நாவை பிரித்துக்கொண்டு, லோபமுத்ராவைப் பற்றிக் கேட்டுவிட்டான்.

“ம்ம்.. அந்த பொண்ணுக்கு யார் வந்தாங்க ஜான்?” என்க,

“அவங்க ஃப்ரண்ட் வந்து கூட்டிட்டு போனாங்க ஸார்” என்றவன் கொசுறாக,

“போகும் போது கூட உங்கள பார்த்துட்டு தான் போனாங்க. உங்க வீட்டுல இருந்து வந்ததும் தான் போவேன்னாங்க, ஜிஷ்ணு’ண்ணாவும் அவங்க ஃப்ரண்டும் தான் கெளம்ப சொல்லிட்டாங்க” என்றுவிட்டான்.

“ம்ம்” என்று உறைத்தவன் மனதில் லோபமுத்ராவுடனான நினைவுகள்.

அந்த முகம் தந்த பாதிப்பா அல்ல அதில் அவனை ஈர்த்த அந்த மச்சமா என்று தெரியாத ஏதோ ஒன்று அவளை அவனுள் மறக்க முடியாது செய்துவிட்டது.

அதிலும் அவள் அடிபட்டு ரோட்டில் கிடந்த சமயம், அவனையும் அறியா அவனின் செயலால் அவனுள் இன்னுமின்னும் அவனைப் பற்றிய அதிர்வுகளும் சுய அலசல்களும் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.

பார்ப்போம், பதில் யாருக்குச் சாதகமாய் அமையும் என்று.

“ஸார்..”

“இருக்கேன் ஜான், சொல்லு?”

“மெட்டீரியல்?”

“டேய் எக்ஸாம் வர இன்னும் டைம் இருக்கு. மொத உடம்பப் பாருடா” என்றுவிட்டான்.

“சரிங்க ஸார்” என்றவன் உள்ளத்தவிப்பு மயூரனுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் உடல் ஆரோக்கியம் முக்கியமல்லவோ?

“தினம் ரெண்டு மணிநேரம் மேக்ஸ் போடு. தனியா டைம் ஒதுக்கி ந்யூஸ் பார்த்து நோட்ஸ் எடு. போன வருஷத்தில இருந்து முக்கியமா நடந்த விஷயம், ஸ்போர்ட்ஸ், பட்ஜெட், அவார்ட்ஸ், அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் திரும்பத் திரும்ப பாரு. நா சென்னை வந்ததும் உனக்கு எல்லாம் எடுத்துக் கொடுக்கறேன்” என்கவும் தான் ஜானின் முகம் சற்று தெளிந்த பாவத்தைக் காட்டியது.

அன்று வானமும் மேகமும் முட்டிக்கொண்டு முகிழ்க்கக் காத்திருந்தது போல், ஏகாந்தமாய் ஏக்கம் தரும் விதமாய் மாறியிருந்தது வானிலை.

மயூரனுக்கு அந்த லேசான குளிர்கலர்ந்த ஈரப்பதமான சூழல் பிடித்துவிடவே, நட்சத்திரங்கள் அற்ற வானத்தினையும் அதில் உலா வரும் நிலாவையும் பார்த்தபடி நின்றவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

நேரம் ஏழைக் கடந்திருக்க அறைக்குள் அவன் நுழையவும், பால் தம்ளரோடு வந்தாள் ஷஷ்டி.

அவள் முகத்திலும் உடலிலும் வாட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதை அவள் என்னதான் தேர்ந்து மறைக்கப் பார்த்தாலும் தம்பியவனின் கண்களுக்குத் தப்பாது வெளிபட்டுவிட்டது.

டேபில் மேல் தம்ளரை வைத்தவள் இரவு மயூரனுக்கான மாத்திரைகளைப் பிரித்து வைத்தவள் நகரவும், “மாமாகிட்ட என்னைய அடி வாங்க வைக்கனும்னு எண்ணமா ஷஷ்டி?” என்றான் அவள் முகத்தில் பார்வையை வைத்துக்கொண்டு.

அதில் அவனை முறைத்தவள், “என்னைய நீங்க ரெண்டு பேரும் அடிக்காம இருந்தா சேரித்தான்” என்று கன்னத்தில் கை வைத்தபடி நிற்க, பழையதை நினைத்தபடி அவள் சொல்லியது கடுப்பைக் கிளப்பியது மயூரனுக்கு.

“வாய்டி உனக்கு” என்று அவள் மண்டையில் அவன் சற்றே வேகமாய் கொட்டவும்,

“பொம்பள புள்ள மேல கை வைக்காத சாமி” என்றபடி உள்ளே வந்தார், வண்ணக்கிளி.

“இவ பேச்சு அப்டி இருக்கு அப்பத்தா” என்றவரிடம் அவன் பொங்க, பெயர்த்தியை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார், வண்ணக்கிளி.

“என்ன கெழவி உம் மககிட்ட என்னைய போட்டுக்கொடுத்துட்டு வாரதுக்கு உனக்கு இத்தன நேரமாக்கும். டூ பேட்” என்று ஷஷ்டி அவரிடம் நக்கலடிக்கவும்,

சிலிர்த்துக்கொண்டு, “ஆருடீ போட்டுக்கொடுத்தா? புருஷன் வார நேரம் இன்னுமும் இங்கன நின்னு என்னடி ஆடிகிட்டு இருக்குறவ, போவத்தான ஒ வூட்டுக்கு. வந்துட்டா என்னிய பேசுததுக்கு” என்றவர் வயது எண்பதின் ஆரம்பத்தில்.

“ஓஓ.. அப்போ ஆரூடு இதுங்கேன்” என்றவள் முந்தானையை இடையில் சொருகி வண்ணக்கிளியை நெருங்க,

தண்டட்டி ஆட அவரும் வரிந்துகட்டிக்கொண்டு, “எம் வூடுடி இது. அதுதான் இல்லாத ஆர்ப்பாட்டமா கலியாணத்தப் பண்ணி போயிட்ட தான” என்க,

“அப்படிப் போடு அப்பத்தா. நா இத இத இதத்தான் ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன். உனக்குக் கல்யாணம் ஆனத அடிக்கடி நாங்க உன் மண்டைக்கு ஏத்த வேண்டியிருக்கு. இது எங்க ஏரியா, மயூரனோட கோட்டடி, மூஞ்சூரு” என்றவன் சட்டை காலரைத் தூக்கிக்கொண்டு வண்ணக்கிளியிடம் ஹை-பை போட, ஷஷ்டிக்கு அதுவரை இழுத்து நிறுத்தியிருந்த குறும்புத்தனம் குடி மூழ்கியது.

தம்பியை அப்பத்தாவை வம்பிழுத்து அதில் சற்று சமநிலையாக இருக்க அவள் நினைக்க, விளையாட்டான அவர்களின் வார்த்தை இப்போது விபரீதமாய் அவளுள் மருவி ஏறியது.

வெகுவான ஆழ்ந்த அமைதியை வெளிபடுத்தினாள், ஷஷ்டி.

வண்ணக்கிளி பேத்தியைப் பார்த்தபடி அவளை அவதானிக்க, அவளைக் கணிக்க முடியவில்லை அவரால்.

அவளின் அந்த அமைதி அதுவரை வம்பிழுத்த மயூரனால் கூட பொறுக்க முடியாது, “ஷஷ்டி” என்க,

கலங்கிப் போனவளாய், “அப்போ இங்க எனக்கு ஒன்னுமே இல்லிய்யா அப்பத்தா” என்றவள் குரலோ மொத்த வெறுமையையும் சுமந்திருந்தது.

அதில், “ஹே ஷஷ்டி” என்ற மயூரன் அதிர்ந்து போய் அவளை அணுக,

“ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ ஷஷ்டி?” என்ற குரலில் இருந்த அடர்த்தி அவளை அசைத்துப் பார்த்தது.

அது கொடுத்த தாக்கத்தில் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் கன்னத்தில் இறங்கிவிட்டது ஷஷ்டிக்கு.

அதைவிட அக்குரலுக்குச் சொந்தக்காரனை அச்சமயத்
தில் அக்கணத்தில் அவள் துளியும் எதிர்பார்க்காது தடுமாறியும் போயிருந்தாள்.

“ஏய்யா அருளு நீயும் அவளோட சேந்துட்டு என்ன பேசுற” என்று வண்ணக்கிளி மகள் வயித்துப் பெயரனை அதட்ட, மயூரன் மாமனைத் தான் அழுத்தமாய் பார்த்து நின்றிருந்தான்.


🌼
 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 05

மூடுபனியைப் போர்த்திக்கொண்டு மெல்லிய தூவலோடும் குளிரோடும் லோபமுத்ராவை வரவேற்றது, கூடலூர்.

மதியம் ஒரு மணி என்று சூடம் அடித்துச் சொன்னாலும் நம்பும்படியாக இல்லாது இரவின் துவக்கத்தில் இருப்பது போலானதொரு வானிலையைக் கொண்டிருந்த ஊரின் எழிலழகை காணவே தெவிட்டவில்லை.

பைன் மரங்களின் அணிவகுப்பைக் கடந்து சற்றே வளைந்து நெளிந்து மேலேறிச் சென்ற பாதையின் இரு மருங்கிலும் புது தளிர் துளிர் விட்டு லேசாய் பனி மூடியபடி காட்சி தரும் டீ செடிகளும் அதன் வேலியாய் நின்ற வானுயர் சில்வர் ஓக் மரத்தில் படர்ந்திருந்த மிளகு கொடிகளும் லோபமுத்ராவின் கண்களை நிறைத்தன.

இயற்கையோடு ஒன்றி இருத்தலின் மகோன்னதத்தை உணர்ந்து வளர்க்கப்பட்டவளாதலால் எத்தனை முறை பார்த்திருந்தாலும் தெவிட்டா மஞ்சிமமும் மீண்டும் புதுவித அவதாரத்தில் கண்ணைப் பறித்த ஊரின் வனப்பான கவினையும் புதியதாய் மீண்டும் பார்ப்பதைப் போன்று ரசித்தபடி வந்தாள் லோபமுத்ரா.

ஓர் நாள் முழுவதும் மருத்துவமனையில் இருந்துவிட்டு, மருத்துவ பரிசோதனை முடிந்த கையுடன் வாடகை காரில் கூடலூர் புறப்பட்டுவிட்டனர் தந்தையும் மகளும்.

எட்டு மணிநேர கார் பயணம். முதுகு கழன்டு விடும்படியான வலியோடு பயணித்தவளை வாரி அணைத்துக் கொண்டாடிவிட்டது கூடலூர் வானிலை.

பின் இருக்கையில் மகளோடு அமர்ந்திருந்த மாணிக்கவாசகம் இப்போதுதான் துயில் கலைந்திருந்தார்.

கைகளில் ஆழ்ந்த காயமிருக்க ஒரு கணமான சால்வையை மகளுக்குப் போர்த்திவிட்டிருந்தவர் இரண்டு நாள் அலைச்சலில் அசந்துவிட, லோபாவின் கவனம் வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநரிடம்.

சென்னையைத் தாண்டி அவர் கூடலூர் வரும் வரை அத்தனை கண்காணிப்பு அவளிடம்.

நல்ல செயல் தான். ஆனால் துளி ஓய்வில்லாது கொட்டக் கொட்ட முழித்துப் பார்த்து வந்ததெல்லாம் அவள் உடல் காயங்களை உசுப்பிவிட்டிருந்தது.

மலையேற ஆரம்பித்தவுடனேயே மாணிக்கவாசகத்தின் கவனம் முழுவதும் சுற்றுப்புறத்தில் தான் பதிந்திருந்தது.

அதைப் பார்த்த லோபாவிற்கு சலிப்பு ஒருபுறமிருந்தாலும் அலுப்பாய், “ப்பா” என்று மாணிக்கத்தின் தோளில் சாய்ந்துகொண்டாள் பெண்.

அதில் கலைந்தவராக, “குளிர் அதிகமா‌ இருக்கா முத்ரா? வலிக்கிதா?” என்க, தகப்பனின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவர் பெண்.

புருவஞ்சுருங்க அவளைப் பார்த்தவர் பின் அந்த பார்வைக்கான அர்த்தம் பிடிபடவே, “வழக்கமா செக் பண்ணுறது தானடா” என்றொரு சிரிப்பை அவர் உகுக்க,

புருவம் உயர்த்தி, “நானா, உங்க வர்க்கா?” என்றாள்.

மகளின் அழகியலில் ஈர்த்தவராக, “என் முத்ரா தான் பஸ்ட்” என்றுவிட்டார் எப்போதும் போல்‌.

அதில் ஒரு ஆத்ம திருப்தி வந்து அவளிடம் ஒட்டிக்கொள்ள, தகப்பனிடம் ஒண்டிக்கொண்டாள் தோளோடு.

“ப்பா” என்றபடி அவள் தோளில் முகம் தேய்த்து, கைகளைப் பிடித்துக்கொள்ள, சின்ன சிரிப்புடன் மகளின் செய்கைகளை ஏற்றமர்ந்திருந்தார், மாணிக்கவாசகம்.

மனம் அத்தனை லேசாய் பறந்தது போல் தோன்றியது அவருக்கு.

வாழ்க்கை அவருக்கு எத்தனையோ சோதனைகளை, வறுமையை, சகிப்புத்தன்மையை, மறக்க முடியா வடுக்களைக் கொடுத்திருந்தாலும் அவருக்கே அவருக்கென்று கொடுத்த மிக்கப் பெரும் வரம், அவர் முத்ரா.

‘இந்த முத்தை தருவதற்குத் தான் இத்தனை கஷ்டங்களைக் கடவுள் எனக்குக் கொடுத்தார் போல’ என்று மகளின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவருள் உள்ளம் கூக்குரலிடும்.

இப்போதும் அந்த நினைப்பின் வியாபனையில் இருந்தவருக்கு மெல்லிய புன்னகை மெட்டென்று அரும்பி மலரக் காத்திருந்தது.

வெளியே நீண்ட தூரம் பயணிக்கும் மின்சாரக் கம்பிகளும் அதன் இணைப்பு கம்பங்களிலும் பார்வையை வைத்திருந்தவர் இப்போது மொத்தமும் மகளின் செய்கையைத் துளித் துளியாய் உள்ளுக்குள் சேமிக்க ஆரம்பித்திருந்தார்.

இன்னும் அரை மணிநேரமாவது ஆகும் அவர்கள் வீடடைய. குளிரும் சற்று அதிகமாக ஆரம்பித்திருக்கவே தேநீர் அருந்த அவர் நா அரும்புகள் குத்தாட்டம் போட்டது.

லோபமுத்ராவிற்குமே குழம்பியை விடுத்து தேநீரென்றால் அமிதமில்லா காதல்.

சரியாகத் தந்தையும் மகளும் விரும்பி அருந்தும் டீ பூத் பக்கத்தில் வரவும்,

“டீ குடிச்சிட்டு போகலாமா முத்ரா” என்க, “ம்ம்” என்றவள் கண்கள் அபரிமிதமான அபிநயத்தைக் கொட்டிக் காட்டியது.

“தம்பி, அடுத்து வர டர்னிங் திரும்பினா டீ பூத் வரும். டீ சாப்பிட்டுப் போகலாம்” என்க, ஓட்டுநரும் தலையசைத்து சாலையில் கவனமானார்.

‘டீ’ என்றவுடனே லோபமுத்ராவினுள் சுருசுருவென்று உணர்வொன்று எழுந்து அவளை உற்சாகமூட்ட ஆரம்பித்திருந்தது.

வெளியே தெரிந்த மரங்களைப் பார்த்தபடி கைகளை மெல்லத் தேய்த்தவள், “இந்த குளிருக்கு ஒரு கட்டிங்க போட்டா தான் எனக்கு அடுத்த வேலையே ஓடும்” என்றவள் வழக்கமாய் சொல்ல, கார் ஓட்டுநரும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்.

அதில் மாணிக்கவாசகம், “முத்ரா” என்று அதட்ட, ஒரு அசட்டுச் சிரிப்பு பெண்ணவளிடம்.

“ப்ளாக் டீ தான் ண்ணா” என்றவள் முகம் போன போக்கில் ஓட்டுநருக்கும் சிரிப்பு வந்துவிட, காரை ஓரம் கட்டிவிட்டி டீயைப் பருகினர்.

சூடான ஃப்ளாக் டீ இதமாய் தொண்டை நனைத்தவுடன் தான் லோபமுத்ராவின் முகம் சற்று தெம்புற்ற உணர்வை ப்ரதிபளித்தது.

“ஹா” என்றவள் ரசனையாய் முகத்தை இங்கும் அங்கும் திருப்பிக்கொண்டு டீயைக் குடிக்க,

“ஆடாம குடி முத்ரா. சீக்கிரம்” என்ற மாணிக்கவாசகத்தின் பேச்செல்லாம் அவள் காதில் விழவில்லை.

தெள்ளமுதான தேநீரும் தேனினிக்கும் வானிலையும் தோளுறசும் மூடுபனியும் தொடர்ந்து கிளறும் மண்
மணமும்
தொட்டுணரும் தாந்தனமும் (காற்று)
தொடாமலே கவர்ந்திழுத்த கந்தரமும் (மேகம்)
தொடமுடியா சவுக்குகளும்
தென்றலாடும் செடிகளும் கொடிகளும் தாபரமும் (மலை)
அவற்றைத் தொட்டு வாழும் பட்சிகளும் அவற்றோடு ஒற்றிவிடும் இயம்பில் ஆழ்ந்திருந்தால், லோபமுத்ரா.

லோபமுத்ராவின் இளைப்பாறும், மனம் குளிரும் இடமென்றால் அது இத்தகு இயற்கையின் மடியில் தான்.

வியந்து ஆகர்ஷித்து அதிசய மூட்டும் லாளித பேரழகிடம் யார் தான் வீழ மாட்டார்கள்?

டீயைக் குடித்து முடித்தவள் சூடாய் இருந்த பழம் பொறியைக் குட்டிக் குட்டியாய் ஊதியபடி உண்ண, துளி நீர் அவள் மூக்கில் வந்து தரையிறங்கியது.

மெல்லிய பகல் வெளிச்சத்தில் வானைப் பார்க்க, அவளோ கமஞ்சூல் எழிலியாய் காட்சி தந்தால்.

“செம்ம மழ வெளுக்கப் போகுது போலப்பா” என்று மேலே வானத்தைப் பார்த்தபடி அவள் கூற,

“ம்ம்.. சீக்கிரம் வீட்டுக்கு போகனும் முத்ரா. அம்மா இப்போவே நாலு தடவை கால் பண்ணிட்டா” என்றவர் அலைபேசியைப் பார்க்க, சிரித்தபடி திரை நிறைத்திருந்தார் அவர் சரிபாதி.

வானிலையில் அத்தனை தடுமாற்றம் விரைவில் பற்றிக்கொண்டது.

மலைப் பிரதேசம் வேறாக இருக்க எங்கு, எப்போது மண் சரியும், திடீர் நீரூற்று உருவாகும், எந்த பாதை பிளவடையும் அதைவிட மின்சார கம்பங்கள், கேபிள்கள் அறுந்து விழும் என்பது தெரியாதாகையால் ஒரு பரபரப்புடன் காரை வீட்டை நோக்கிப் பயணிக்க உந்தினார், மாணிக்கவாசகம்.

மாணிக்கவாசகம், “தம்பி, மழ வழுத்தா நீங்க திரும்பச் சென்னை போக முடியாது. இங்க எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, திரும்ப முடியலேனே தங்கிக்கோங்க” என்றபடி ஓட்டுநரிடம் பேசிக்கொண்டு வர, லோபமுத்ராவின் மனதில் தந்தையின் வேலை நிழலாடியது.

சட்டென்று, “ப்பா, வீட்டுல தான இருப்பீங்க?” என்று அவரைப் பார்க்கவும், அவர் பார்வையில் மெல்லிய கண்டனம்.

புரிந்தவுடன், “ஸாரி” என்றுவிட்டாள் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு.

மழை நாட்களில் தான் மாணிக்கவாசகமும் அவரின் குழுவினரும் இன்னும் கவனமாய் இருப்பர்.‌

எப்போதும் என்ன வேணாலும் நடக்கலாம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பல திட்டங்களைத் தீட்டி வைத்து மக்களின் மேலான உயிரைக் காக்க அவர்களின் பங்கையும் சிரமேற்கொண்டு செய்வர்.

ஆகையால், மழையடித்தால் அவர் வீட்டில் இருப்பது அபூர்வம் தான். அவர் வேலையின் மீதான அவரின் அலாதி அன்பைப் புரிந்தவர்களுக்கு உள்ளூர மழையைத் தந்தையோடு ரசிக்க ஏங்கினாலும் அவர் நிலையறிந்து பிள்ளைகளைச் சமாளித்துக் காப்பது என்னவோ அங்கயற்கண்ணி தான்.

இன்று தந்தை தன்னுடன் இருப்பார் என்ற இன்பார்பரிப்பில் இருந்தவளுக்கு மழை வந்து அவள் மனநிலையை ‘தொஸ்’ என்று ஆக்கிவிட்டது.

பதினைந்து நிமிடங்களில் அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது அவர்கள் வந்த கார்.

மழையும் வலுக்காது தூற்றல் போட்டுத் துள்ளிக்கொண்டு பூமியில் விழுந்தபடி இருக்க, குளிரென்னமோ பற்களை நடுங்க வைத்தபடி இருந்தது.

மாணிக்கம், “நனையாம உள்ள போ முத்ரா” என்க,

“அக்கா” என்று வந்துவிட்டான் லோபமுத்ராவின் தம்பி, சச்சிதானந்தன்.

பரபரப்புடன் வந்தவன் லோபமுத்ராவிற்கு குடையைப் பிடித்து நின்றுவிட, “நந்து” என்று தம்பியுடன் ஒன்றிக்கொண்டாள்.

மாணிக்கவாசகம், “அக்காவ நனையாம கூட்டிட்டு போ சச்சு. காருக்கு செட்டில் பண்ணிட்டு வரேன்” என்க,

“அப்பா, தாத்தா வந்திருக்கார். நீங்க போங்க” என்றவன் லோபாவைப் பார்க்க,

கண்ணைச் சுருக்கிக்கொண்டு, “என்னவாமா?” என்றாள் மெல்லத் தம்பியிடம்.

“ரொட்டீன்” என்றவன் தோளைக் குலுக்கிக்கொண்டு நிற்க, கடுப்புகள் சூழ்ந்துவிட்டது லோபமுத்ராவிற்கு.

மாணிக்கவாசகத்திற்கு ஒரு ஆயாச பெருமூச்சு.

காரோட்டுநருக்கு வாடகை பணத்தைக் கொடுத்து செட்டில் செய்தவர், “தம்பி வழில மழ வந்தா நின்னு ஊர் போங்க. இங்க மழ வந்தா எப்போ நிக்கும்னே தெரியாது. பார்த்து போங்க” என்றவர் முத்ராவின் பயண பைகளுடன் முன்னேற, அக்காவும் தம்பியும் தேங்கி நின்றிருந்தனர்.

தாத்தா மேல் கொள்ளை கொள்ளை பாசமெல்லாம் இருவருக்கும் இல்லை. தந்தையைப் பெற்றவர் அந்த வகை மரியாதை மட்டுமே இருவரிடத்திலும்.

மாணிக்கவாசகம், “அங்கை” என்று குரல் கொடுத்தபடி வாசலில் நிற்க, முகத்தில் பதிந்திருந்த அப்பட்ட கலவரத்துடன் வந்தார், அங்கயற்கண்ணி.

“ஏங்க” என்று வந்தவர் முகத்தைப் படித்தவராக மாணிக்கவாசகம் ஏதும் பேசாது அவரை ஆழ்ந்து பார்த்தவருள் இனம் புரியா உணர்வென்று.

அவர் பார்வையைப் புறம் தள்ளியவராகக் குரலை வெகுவாய் தளர்த்தியபடி, “மாமா, முத்ரா கல்யாண விஷயமா பேச வந்திருக்கார்” என்றுவிட, சுருசுருவென்று கோபம் பொங்கிவிட்டது மாணிக்கவாசகத்திற்கு.

“பெத்த நமக்கு தெரியாதா எதை எப்போ செய்யனும்னு” என்று குரலுயர்த்தியபடி உள்ள வந்தவர் அங்கிருந்தவர்களைப் புருவம் நெறித்துப் பார்த்து வைத்தார்.

“வந்தோன என்னங்க பேசிட்டே வரீங்க? மாமா வந்திருக்கார் பாருங்க.. அண்ணி நீங்க இன்னும் டீ குடிக்கலையா? சாலி உன் மாமா வந்துட்டார் பார்” என்று ‘விருந்தினர்’ கவனத்தைத் தேர்ந்து அவர் மடைமாற்றி மாணிக்கவாசகத்தைத் தணிக்கும் படியாக சாயாலியை அவரிடம் போகுமாறு மாற்றியவர் சூழலை சுமுகமாக்கப் பார்க்க,

மாணிக்கவாசகத்தின், “வாங்க” என்ற ஒட்டாத பேச்சு சுமுகத்தைச் சமாதியாக்கியது.

‘சுத்தம்’ என்று மனதில் நினைத்தவராக மாணிக்கவாசகத்தின் அருகே நின்றிருந்தார், அங்கயற்கண்ணி.

மாணிக்கவாசகத்தின் தந்தையோடு அக்கா சரஸ்வதியின் குடும்பமும் வந்திருப்பதை அவர் அறியவில்லை.

அவர்கள் வரவை உண்மைக்கு அவர் விரும்பவுமில்லை.

அங்கை, “நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க, ஹீட்டர் போட்டிருக்கேன்” என்க, சாயாலி அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

“ஃப்ளெஸ் பண்ணுங்க மாமா. ஹயர் ஸ்டடீஸ் பண்ண ஜெர்மன் யூனிவர்சிட்டில செலக்ட் ஆகியிருக்கேன்” என்று சிரித்த பெண்ணை, வாழ்த்தி ஆசீர்வதித்தார் மாணிக்கவாசகம்.

“எல்லாம் எம் பொண்ணோட ஹார்ட் வர்க் தந்த ரிசல்ட் மாணிக்கம்” என்றார் தியாகராஜன், சரஸ்வதியின் கணவர்.

“நல்லதுங்க அத்திம்பேர்” என்றவர்,

“குளிச்சிட்டு வந்தறேன். வெயிட் பண்ணுங்க” என்றுவிட்டுச் சென்றவர் முக்கால் மணிநேரம் செல்லவும் தான் வெளியே வந்தார்.

அதில் அங்கயற்கண்ணிக்குத் தான் அத்தனை சங்கடங்கள்.

“காஃபி கொண்டு வா அங்க” என்று குரல் கொடுத்தபடி சோபாவில் வந்தமர்ந்தவர் முகம் நிர்மலமாக இருந்தது.

அதுவரை இமை சிமிட்டாது மகனின் பேச்சையும் செய்கைகளையும் தான் பார்த்தபடி இருந்தார், முருகானந்தம்.

முருகானந்தம், மாணிக்கவாசகத்தின் தந்தை. ஓய்வு பெற்ற அரசு உயிர் நீதிமன்ற வழக்கறிஞர்.

நீதிமன்றத்தில் அவர் பேசிய வாதங்களுக்கு வாங்கிய கைத்தட்டல் எல்லாம் இப்போது மகனின் வாழ்க்கையில் அவர் வீசிய பேச்சுக்களால் கை கோட்டி சிரித்தது.

இதோ இந்த தள்ளாத வயதில் தள்ளாடிய பேச்சோடு தன் ஒரே மகன் தன்னிடம் இயல்பாகப் பேசமாட்டானா என்று தவிக்கும் படியான நிலையவருக்கு.

மாணிக்கவாசகம் பேசும் வழியே இல்லாது அங்கையின் குழம்பியை பருகிக்கொண்டிருந்தார்.

தளர்ந்து தெரிந்த பெரியவர், “ஐயா.. மாணிக்கம்” என்று மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

நிமிர்ந்தமர்ந்த மாணிக்கவாசகம், “சொல்லுங்க..” என்றதில் தந்தை - மகனின் உறவு நிலையின்‌ வெளிச்சம் தெரிந்தது.

சரஸ்வதி ஏதோ முணுமுணுக்க ஆரம்பிக்கவும், “சொல்லு’க்கா. என்னமோ பேசற” என்க,

“மாமாவே சொல்லுவார் மாணிக்கம்” என்றுவிட்டார் தியாகராஜன்.

இப்போது முருகானந்தத்தை கேள்வியாய் பார்த்தார் அங்கயற்கண்ணி.

அங்கைக்கு இன்னும் அவர்களின் வரவு சரிவரப் பிடிபடவில்லை. இரு குடும்பத்தாருக்கும் போக்குவரத்து ஒன்றும் அத்தனை இலகுவாக இல்லாது இருந்தாலும் முருகானந்தத்தைக் கொண்டு இரண்டொரு வார்த்தை பேசிக்கொள்ளும் அளவிற்கு இருந்தது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மகனைப் பெயரப்பிள்ளைகளை காணவென முருகானந்தம் தான் கூடலூர் வருவார். அவர் வயதிற்குத் தேவையில்லாத செயலாகப் பட்டாளும் முன்னர் செய்யத் தவறியதை அவர் மனைவி அன்னலட்சுமி தவறிய பின்னர் அவரே செய்யவாரம்பித்து பழக்கமாக்கிக் கொண்டார்.

மகனோடானது அவரின் உறவு நிலை என்னமோ அவராகவே ஏற்படுத்திக்கொண்ட நீர்க் கோலம்.

அதைப் பெயரப்பிள்ளைகளை வைத்து சீராக்க முனையும் போதெல்லாம் மென்மேலும் சிக்கலாக்கி இப்போது சிக்கிக்கொண்டு முழிப்பவருக்கு அந்த சிக்கலிலிருந்து விடுபடும் உபயம் தான் தெரியாது போனது.

ம்ம்.. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!

அவர்களின் வரவு தான் மாணிக்கவாசகத்திற்குப் பிடிக்காத ஒன்று என்றாலும் வந்த நோக்கத்தின் நூலை அவரே பிடித்துவிட்டார் தியாகராஜன் போட்ட வார்த்தைகளில்.

“ம்ம்.. சொல்லுங்க” என்று முருகானந்தத்தை ஊக்க, அவரிடம் பெரும் தயக்கம்.

சொல்ல வேண்டிய கருத்தில் அவருக்குப் பிடித்தம் இருந்தாலும், அந்த பிடித்தம் எங்கு மகனுக்குப் பிடிக்காது போய் விடுமோ என்ற கலக்கம் அபிவிருத்தியாகியபடி இருந்தது.

இருந்தும் உடைத்துப் பேசித்தானே ஆகவேண்டும்.

“தம்பி.. நம்ம லோபாவுக்கு கல்யாண வயசு வந்துடுச்சே. எங்காலத்துக்குள்ள எம் பேத்தியோட கல்யாணத்தப் பார்த்த திருப்தி இருக்கட்டும் தான் நானே கேட்கறேன்” என்று பேசியவர் நிறுத்தி தண்ணீரைப் பருகிக்கொண்டார்.

அதிலேயே அங்கையின் மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்க, கணவரிடத்தில் தான் அவரின் மொத்த கவனமும் கூர்ந்தது இப்போது.

‘இவர் சட்டுனு வார்த்தைய விடாம இருக்கனும் கடவுளே’ என்றபடி அவர் நின்றிருக்க, மாணிக்கவாசகத்திடம் அப்படி ஒரு அமைதி.

‘சீக்கிரம் சொல்லத் தான’ என்று சரஸ்வதி ஒருபுறம் தவியாய் நினைக்க, “நம்ம மாப்பிள்ளையோட அண்ணே மகன் சாருகேசிக்கு லோபாவ கேட்கறாங்க தம்பி” என்றுவிட, சரஸ்வதி ஒரு ஆர்வமான பார்வையைத் தம்பியை நோக்கி வீசினார்.

நிச்சயம் அவர் புக்கஹத்தில் இருந்து வந்திருக்கும் இச்சம்பந்தத்தைத் தம்பி ஏற்றுக்கொள்வான் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.

“ம்ம்.. அத்திம்பேர் ஆம்’ல எல்லாருக்கும் சம்மதமா?” என்று கேட்டு நிறுத்த, அது என்னவோ மாணிக்கவாசகத்திற்கு இதில் சம்மதம் போலானதொரு தோற்றத்தைக் கொடுத்தது.

அதில் மகிழ்ந்த சரஸ்வதி, “மன்னி எல்லாருக்கும் லோபாவ தெரியுமோழியோடா. சாருவுக்கு பிடிச்சிருக்கப் போய் தான் பெரிய மாமா உன்னாண்ட பேசச் சொன்னார்” என்க,

தியாகராஜனிடம், “உங்களுக்கு இதுல விருப்பமா அத்திம்பேர்?” என்று மாணிக்கவாசகம் கேட்க, அவரிடம் பதிலில்லை.

தியாகராஜனின் முகமே அவரின் நிலையை விளக்க, “லோபமுத்ரா மாணிக்கவாசகத்தோட பொண்ணு மட்டும் இல்ல. அங்கயற்கண்ணியோட பொண்ணும் தான் அத்திம்பேர்” என்று அத்தனை அழுத்தமாய் சொல்ல, அத்தனை மௌனம் அங்கு.

“என்னைவிட என் மனைவிக்குத் தான் என் பசங்ககிட்ட உரிமையும் உறவும் அதிகம். ஒரு காலத்தில அவ உங்காந்த இடம் கூட தீட்டுன்னு ஜலத்த ஊத்தி கழுவினவங்க வீட்டுக்கு என் முத்ராவ நான் கொடுக்கனுமா?” என்க, சவுக்கடி வாங்கிய உணர்வு முருகானந்தத்திற்கு.

சரஸ்வதி, “எப்பையோ முடிஞ்சத இப்போ பேசப்டாதுடா”

“ம்ம்.. யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராம போகாது’க்கா. இப்போ வந்துடுச்சு, அப்போ பேசாதாத இப்போ பேசறேன்” என்றவர் தியாகராஜனிடம்,

“உங்களால என் அங்கை வெச்ச தண்ணீய கூட இன்னும் குடிக்க முடியலை” என்று அவர் முன்னர் இருந்த நீர் குவளையைக் காட்டியவர்,

“இதுல உங்க வீட்டுக்கு எம் பொண்ணக் கேட்டு வந்திருக்கீங்க? என்ன, என்கிட்ட இருக்கற பணமும் பதவியும் உங்க ஆச்சார அனுஷ்டானத்தைத் தூக்கி சாப்டுடுச்சோ அத்திம்பேர்” என்க, செருப்பால் அடித்த உணர்வு தான் தியாகராஜனுக்கு.

பொறுத்துக்கொண்டார். அவர் அண்ணன் மகனின் ஆசை இப்போது பெரியதாய் தோன்றியிருக்க இதையெல்லாம் அவர் கடந்துதான் ஆகவேண்டும் என்ற‌ கட்டாயக் கட்டில் கட்டப்பட்டு அமர்ந்திருந்தார் தியாகராஜன்.

எங்கு மாப்பிள்ளைக்கும் மகனுக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என்று எண்ணியவராக, “தம்பி” என்று மனம் வெதும்பிப் போய் அழைத்தார் முருகானந்தம்.

தாள முடியாத ஒரு சோகம் அவரிடத்தில். எத்தனை பேச்சுக்கள் எத்தனை ஆட்டங்கள் எத்தனை அநியாய நிகழ்வுகளை முருகானந்தத்துடன் தியாகராஜன் குடும்பத்தார் அங்கயற்கண்ணிக்குச் செய்திருக்கிறார்கள் என்று இப்போது எண்ண எண்ண, ‘ச்சீ’ என்று மொத்தமும் அருவருத்துப் போனது அம்முதியவருக்கு.

அடுத்துப் பேசவும் அவருக்கு நா எழவில்லை.


🌼
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 06


வெளியே மழையின் வரத்து அதிகரித்து சப்தமிட அப்போது தான் பிள்ளைகளின் நினைப்பே வந்தது மாணிக்கவாசகத்திற்கு.


நிச்சயம் அவர்கள் வெளியே தான் நின்றிருப்பார்கள். அதிலும் தற்சமயம் லோபமுத்ரா இருக்கும் நிலையில் இத்தனை குளிரும் மழையும் அவளுடல் தாங்கவே தாங்காது என்று தோன்றிய நொடி தடதடவென்று வேக எட்டுகளுடன் வெளியேறினார்.


“முத்ரா.. சச்சு” என்றவர் ஓங்கிய குரலில் அங்கையும் என்னமோ ஏதோ என்று பரபரப்புடன் வந்துவிட்டார்.


கார் செட் பக்கத்தில் அக்காவை ஒரு கையில் தோளோடு அணைத்துக்கொண்டு இருவருக்கும் குடையைப் பிடித்தபடி நின்றிருந்தான், சச்சிதானந்தன்.


லோபமுத்ராவிற்கு லேசாய் காயத்தில் உறுத்த ஆரம்பித்திருக்க, வலியில் முகத்தைத் தம்பியின் தோளில் சாய்த்தபடி நின்றிருந்தாள்.


மழையின் சப்தத்தையும் மீறிய அழுத்தமான காலடி ஓசையில் சச்சின் திரும்ப, “உள்ள வராம இத்தன நேரம் முத்ராவ வெளியவே நிக்க வெச்சியா சச்சின். வலிக்குது பார் அவளுக்கு” என்று கத்தியபடி மகளை அவர் நெருங்கியிருக்க,


மகளை எதிர்பார்க்காத அங்கையும் அவளின் சோர்வான நிலையைப் பார்த்துப் பதறிக்கொண்டு ஓடிவந்துவிட்டார்.


“என்ன, என்ன முத்ரா.. என்னாச்சுடீ” என்று வேகமாய் அவள் கையை பற்றிவிட,


“ஸ்ஸ்..ஆ” என்று கத்திவிட்டாள் வலி மிகுதியில்.


மாணிக்கவாசகம், “அங்கை.. பாப்பாக்கு அடி பட்டுருக்குடி” என்று அதட்டலாகச் சொன்னபடி மகளை உள்ளே அழைத்துவர, சரஸ்வதியும் தியாகராஜனும் பார்வையாளர்களாய் இருந்தனர்.


அலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்த அங்கையிடம், “அம்மா அக்காவுக்கு சின்ன ஆக்சிடென்ட். கைல அடி பட்டிருக்கு, அப்பா அவள கூப்டதான் சென்னை போனார்” சுருங்கி செய்தியைச் சொல்லியவன் அங்கையை அழைத்துச் செல்ல, மனதெல்லாம் பதறியது அவருக்கு.


அவள் போர்த்தியிருந்த சால்வை சற்று நனைந்திருக்கவே, அதைக் கழற்றிக் காற்றாட மகளை அமரவைத்தார் மாணிக்கவாசகம்.


அதில் அவள் கட்டு ஸ்பஷ்டமாக வெளியே தெரியவும், “என்னங்க.. என்னங்க இத்தன பெரிய கட்டு.. முத்ரா.. பாப்பா..” என்று அழுதேவிட்டார் அங்கை.


“அம்மா.. ஒன்னும் இல்லை. அமைதியாகு” என்று அடிக்குரலில் அதட்டியவளுக்குத் தந்தைப் பக்க சொந்தத்தின் முன்னர் அமரவும் முடியாது பேசவும் முடியாது வலியில் எதையும் வெளிக்காட்டவும் முடியாது கடுகடுப்புடன் இருக்க,

சாயாலி சூடான தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.


வலுக்கட்டாயமாய் ஒரு சிரிப்பைச் சிந்தியவள், “தேங்க்ஸ்” என்று வாங்கிப் பருகவும், தியாகராஜன்,


“நாங்க இன்னொரு நாள் வரோம் மாணிக்கம்” என்றவர் மாணிக்கவாசகத்திடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.


அதற்கு மேல் சிறு பிள்ளைகளின் முன்பு தாழ்ந்துபோகக் கூடாது என்று எண்ணம் வந்துவிட்டது போல. கருத்து இறுகிய முகத்துடன் விடைபெற்றார்.


‘அப்பா டேய்’ என்று லோபமுத்ரா சற்று ஆசுவாசமாக,


சரஸ்வதி, “வரேன்டா. உடம்ப பார் லோபா. சாலி போகலாம்” என்றவர் அங்கையிடம் தலையசைப்புடன் நகர, சச்சினுக்குச் சுருக்கென்று கோபம் வந்துவிட்டது.


முருகானந்தம் பெயர்த்தியின் கட்டைப் பார்த்தபடி, “என்னடா கொழந்தே, கவனமா இருக்கக் கூடாதா” என்க,


“எதிர்பார்க்கமா நடந்துருச்சு தாத்தா” என்றவள் தம்பியின் முகம் பார்க்க, பெரியவருக்குப் புரிந்தது.


அருகில் இருந்த மாணிக்கவாசகத்திடம், “கட்டு பெருசா இருக்கே வாசா, பயப்பட ஒன்னுமில்லையே” என்க,


மகளின் கையைப் பார்த்தபடி வாசகம், “மேல் தோல் சிராச்சுருக்கு. தண்ணீ எதுவும் படாம இருக்கத் தான் கட்டிருக்காங்க, வேற ஒன்னுமில்லை” என்றவர்,


“உள்ள வராம எதுக்கு மழல நின்னிங்க ரெண்டு பேரும்? காணாத மழைய கண்டுட்ட மாதிரி. இப்போ கட்டு நனைஞ்சிருக்கு பார் முத்ரா” மகளைக் கடிந்தபடி இருந்தவர் கவனம் இப்போது மனைவியிடம்.


அமைதியாய் மெல்ல விஷயத்தைச் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்ததெல்லாம் மொத்தமாய் படுத்த படுக்கையாகிவிட இனி அங்கை எவ்வாறு இதை எடுத்துக்கொள்வாள் என்ற சிந்தனையின் சுழலவாரம்பித்தார் மனிதர்.


சச்சின், “தாத்தா, சாப்டீங்களா? இல்ல கொஞ்ச நேரம் படுத்து எழும்பறீங்களா?” என்று அவரை அங்கிருந்து கிளம்பும்படியான கேள்வியைக் கேட்க,


அங்கை, “இரு சச்சு, தாத்தா இன்னும் சாப்டலை. கை அலம்பீட்டு வாங்க சாப்டலாம் மொத” என்றவர் லோபாவிடம்,


“ட்ரஸ் மாத்தரையா முத்ரா.. இல்ல முகம் மட்டும் அம்மா கழுவிவிடவா”


“ம்மா, நீ வா” என்று அங்கையை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.


அத்தனை சங்கடம் அவளுக்கு. ஒருவித கலவையான மனநிலையில் இருந்தவளுக்கு தனிமை அவசியமாய் பட, அங்கையுடன் அவள் அறைக்கு வந்தவுடன் தான் சற்று நிம்மதியானது.


அங்கை, “இங்க உட்கார் முத்ரா. வேற எங்க எல்லாம் காயம் இருக்கு? எப்போ அடி பட்டுச்சுடீ” என்று கலங்கிப் போய் பரிதவிப்பாகக் கேட்க,


“ம்மா.. என்னம்மா நீ” என்றவள் படுக்கையில் அமர்ந்தவாறு அங்கையை இடையோடுக் கட்டிக்கொண்டாள்.


மகளின் கன்னம் தடவியவர் மனது இப்போதும் வேகமாய் அடித்துக்கொண்டுதான் இருந்தது.


“நா சரியாதான் ரோட் க்ராஸ் பண்ணேன். ஆபோசிட்’ல கார் குறுக்க வந்துடுச்சு, பேலன்ஸ் மிஸ் ஆகி டூவீலர் என் மேல மோதிடுச்சு” என்க, அவள் தலையை வயிற்றோடு மேலும் அழுத்திக்கொண்டார் அங்கை.


உள்ளமெல்லாம் பதறியது. மகள் தன் கைக்குள் தான் இருக்கிறாள் என்ற நினைப்பு இருந்தாலும் அவளை தன் கருவறையிலேயே வைத்துப் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம் வந்தது போல் அத்தனை அழுத்தம் அங்கயற்கண்ணியிடம்.


“காயம் ரொம்ப ஆழமா.. வலி இன்னும் இருக்கா, முத்ரா? வேற எங்க அடி பட்டுருக்கு ” என்று அவளை ஆராய,


“கால்ல கொஞ்சம் வலி. வேற எங்கையும் இல்ல’ம்மா” என்றவள் கை அனிச்சையாய் வலதுபுற அல்லை நோக்கிப் போய் மென்மையாய் தடவிக்கொடுத்தது.


“மருந்து எப்போ போடனும்? என்ன டாக்டர் சொன்னாங்க?” என்க,


“நல்லா தூங்க சொன்னாங்க. காயம் மூனு வாரத்தில சரியாகிடும்னாங்க. வேற ஒன்னுமே இல்லை’ம்மா. உன் முத்ரா ரொம்ப நல்லா இருக்கா” என்று அங்கை முகத்தைப் பார்த்தவள் சிரிக்க,


அவள் கண்ணோடு கண் பார்த்து, “என் தங்கம் எப்போவும் சௌக்கியமா தான் இருப்பா” என்றவர் கண், கலங்கிச் சிரித்தது.


“சரி, முகம் கழுவிட்டு வா. சாப்ட எடுத்து வைக்கறேன். இல்ல, அம்மா கூட்டி விடுறேன் முத்ரா” என்றவர் வெளியேற, தலையை இருபுறம் அசைத்துக்கொண்டவளுக்கு அத்தனை சோர்வு.


படுத்தால் தேவலாம் என்பது போல் இருக்க, “சாப்டே தூங்கிக்கலாம். இல்ல அதுக்கு பேசும் இந்த மம்மி” என்றவள் ஓய்வறை சென்று தன்னை தயார் படுத்தியவள், மஷ்டட் எல்லோ ஸ்லீவ்லெஸ் கார்டிகன், ப்ளாக் ப்ளாசோ அணிந்தவள் கண்ணாடி முன்பு நின்று கை கட்டினைப் பார்த்தபடி இருந்தால்.


“நல்லா அடி வாங்கியிருக்கேன் போல. ம்ப்ச்ச், எனக்குனு வந்து சேருறானுங்க” என்க, அவள் அல்லையில் ஒரு சுருக் வலி.


பல்லைக் கடித்துக்கொண்டு, “ஸ்ஸ்” என்றவள் கவனம் எங்கோ சொல்ல, அதை மாற்றும்படியாக,


“அக்கா, சீக்கிரம் வா. பசிக்கிது” என்று கத்தினான், சச்சின்.


“வரேன், வரேன், வந்தேன்” என்றவள் உணவு மேசை விரைய, முருகானந்தம், மாணிக்கவாசகமும் அவளுக்குக் காத்திருக்க சச்சின் அவளின் வரவுக்காக அமர்ந்திருந்தான்.


மஷ்ரூம் பிரியாணி, தயிர் வெங்காயம், பன்னீர் டோ ப்யஜா (Paneer DO Pyaza), பாலக் (கீரை) சப்பாத்தி உடன் லோபமுத்ராவின் உயிரான ட்ரைகலர் பூந்தி லட்டு

(Tricolour Boondi ladoo coated in white sugar) என்று அங்கை அவர் கை பக்குவத்தைக் காட்டியிருக்க, பார்த்தவுடன் லோபாவின் கண்கள் லட்டைப் பார்த்து டாலடித்தது.


மாணிக்கவாசகம், சச்சின் இருவரும் சைவம். அங்கை திருமணத்திற்கு முன்னர் வரை அசைவ விரும்பி. மாணிக்கவாசகத்திற்காக அவரின் உணவாசையை விடுத்தவரின் சுவை அரும்புகள் மொத்தமும் மகளிடம் இடம் பெயர்ந்துவிட்டது போல்.


லோபமுத்ரா மட்டும் விதிவிலக்காக தீவிர அசைவ உணவுக் காதலி!


முருகானந்தத்தை மறந்தவளாக, “தாய் குலமே, ஐ லவ் யூ” என்று கத்தியவள் கைக்கு இரண்டு லட்டை எடுத்து அப்படியே சர்க்கரை உதிர உதிர வாயில் அடைக்க, அவள் கன்னம் பன்’னாக மாறியது


வழக்கம் போல், மகளின் செய்கையை ஒரு சிரிப்போடு பார்த்திருந்தார், மாணிக்கவாசகம்.


“பொறுமையா சாப்டு முத்ரா. சாப்பாடு சாப்டாம எடுத்தவுடனேயே ஸ்வீட் வேற” என்று கடிந்தவர் மாமனாருக்கு உணவைப் பரிமாறினார்.


லோபமுத்ராவைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்போடு, “அக்கா” என்று சச்சின் தாத்தைவை நோக்கி கண் காட்ட, அவரோ பெயர்த்தியின் செயலால் விழி விரித்து அமர்ந்திருந்தார்.


அவருக்கு பெயர‌ பிள்ளைகளின் இத்தகு இயல்பான செய்கைகள் புதிது. அவர் இருந்தால், இருவரும் தங்களுக்கு சுருண்டு ஒருவித அடக்கத்துடனேயே தான் இருப்பர்.


இன்று, பெயர்த்தியின் உடை, மொழி, செயல் என்று அவளின் இயல்புகள் அவரைக் கவர்ந்தது கண்களில் ஒரு கண்டிப்புடன்.


ஆனால், வாய் திறக்கவில்லை மனிதர்.


உள்ளதும் தன் வாயால் இனி பிரித்துத் தள்ளி வைக்க அவர் விரும்பவுமில்லை. இருந்தும், உள்ளூர பெயர்த்தியின் பால் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்தது.


டிபிக்கல், 40’ஸ் கிட்ஸ் எண்ணம்!

(Typical, 40’s Kids)


“ம்ம்.. அங்கை பன்னீர் வைக்காத. சாப்ட மாட்டார்” என்று மாமனார் தட்டில் உணவை வைக்கச் சென்றவரைத் தடுத்த மாணிக்கவாசகம்,


“தயிர் மட்டும் வெங்காயம் இல்லாம வை” என்றுவிட, அதுவே முருகானந்தத்திற்கு போதுமான அமிர்தமாக இருந்தது.


பொறுமையாக, அங்கை வைத்த அன்னத்தை உண்டவர் வயிர் நிறைந்ததைக் காட்டிலும் மனம் நிறைந்தது.


முருகானந்தம் கை நனைத்த கையுடன் அவரின் கார் ஓட்டுநர் வந்துவிட்டார்.


இத்தனை வருடங்களில் மருமகள் கையால் சாப்பிடும் அளவிற்கு வந்திருந்தவர் இன்னும் மகன் வீட்டில் தங்கியதில்லை.


தள்ளாத வயதிலும் தன் காலில் நிற்பவர், எப்போதும் சுய கௌரவம் பார்த்து இருப்பவரின் கர்வம் மொத்தமும் சரிந்தாலும் அவர் வளர்ந்த வளர்ப்பு சிலவற்றை ஏற்க மறுத்து முரண்டும்.


மகனே ஆனாலும் அவனைச் சார்ந்திருக்க, அவனோடு இருக்க முருகானந்தத்தின் மனது இடமளிக்காது.


அது வாசகத்திற்கு நன்கு தெரிந்தாலும் அங்கை பின்னர் அதைப் புரிந்துகொண்டு நடந்தார்.


ஆனால், முருகனின் பெயரப்பிள்ளைகள் அவ்வாறே புரிந்துகொண்டு அனுசரித்துச் செல்வார்கள் என்று நினைக்க முடியுமா?


விடைபெறும் முன், “பத்தரம் முத்ரா” என்று பெயர்த்தியின் தலையில் கை வைத்தவர் பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.


அது முருகானந்தத்தின் பழக்கம். எப்போது வந்தாலும் முத்ரா, சச்சின் இருவரையும் ஆசீர்வதித்து தாத்தாவின் சார்பாக அவர்களுக்கு என்று பணத்தைத் தராது போகமாட்டார்.


பத்து ரூபாயில் ஆரம்பித்தது இப்போது ஐநூற்றில் வந்து நிற்கிறது.


சச்சினுக்கும் தந்தவர் அவன் கன்னம் பற்றி, “வீட்டுக்கு வாடா கண்ணா. தாத்தா உன்ன எதிர்பார்பேன்” என்க, சன்ன புன்னகை மட்டும் அவனிடத்தில்.


“கெளம்பரேன்’ம்மா அங்கை” என்றவர் மருமகளிடம் சொல்லி மகனைப் பார்க்க, மாணிக்கவாசகத்தின் முகத்தில் இறுக்கம்.


“அப்பா போயிட்டு வரேன் வாசா” என்க, “ம்ம்” என்று மறுமொழி மட்டும்.


வெளியே புத்தம் புது சிவப்பு நிற மேக்னைட் நின்றிருந்தது. வாங்கி சில வாரங்கள் இருக்கலாம் என்று சொல்லும் படியாக அத்தனை பளபளப்பும் மினுமினுப்பும்.


முருகானந்தத்தின் தற்போதைய பிரிய வாகனம். பிரீமியர் பத்மினி துவங்கி இப்போது வரும் டாடா கார்ஸ் வரை அவர் ரசனையின் அலாதி ப்ரதிபலிக்கும்.


முருகானந்தத்திற்கு ஒருவகையான கார் காதல்!


சச்சின், “தாத்தா வாழ்றார் பார்” என்ற முத்ராவிடம் சொல்ல, அவளின் பார்வை அனிச்சையாய் அவர்களின் ஸ்விஃப்ட்’டில் நின்றது.


தம்பியைப் பார்த்தவள், “அடுத்த வருஷத்தோட இவனுக்கு வயசு பதினஞ்சு” என்று அவர்கள் காரைப் பார்த்துச் சொல்ல,


“அப்பா இவனை ரெடி பண்ணி இன்னும் பதினஞ்சு வருஷம் ஓட்டுவார். கம்முனு இருக்கா” என்றுவிட்டான்.


தந்தையைப் போல் பிள்ளை இல்லை போல!


முருகானந்தம், “பார்த்து இருங்க கண்ணுங்களா” என்று மீண்டு ஒருமுறை சொன்னவர் காரின் முன்புற இருக்கையில் அமர்ந்துகொண்டார்.


மாணிக்கவாசகம், “பார்த்து கூட்டிட்டு போ, தமிழ். கவனம்” என்று ஓட்டுநரிடம் சொல்லி, இரண்டொரு வார்த்தை பேசிய பின்னர் தான் கார் புறப்பட்டது.


முத்ராவும் சச்சினும் உள்ளே சென்றுவிட, வாசலில் நின்றிருந்த அங்கையிடம் அப்படி ஒரு சோகம். உம்மென்ற முகம் களையிழந்திருந்தது.


கேட்டை பூட்டிவிட்டு ஜீரோ வாட்ஸ்ஸை ஒளிரவிட்டபடி வந்தவர், “ஸ்கார்ப் கட்டாம வெளிய நிக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா” என்க,


“இந்த நேரம் போகலேனா என்னங்க? மழையும் இருட்டுமா இருக்கு, போகவே மூனு நாலு மணிநேரம் ஆகும். இந்த வயசுல மாமாவுக்கு எதுக்கு இத்தன சிரமம்” என்று தணிந்து பேச, மனைவியை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவரிடம் பெருமூச்சு.


“ஊட்டிக்குத் தான் போறார் அங்கை. நீ யோசிக்கும் போது, அவரப் பத்தி அவர் யோசிக்காம இருப்பாரா?” என்று உள்ளே சென்றவர் திரும்பி மனைவியைப் பார்த்து,


“இத்தன வருஷம் ஆகியும் நீயும் மாறல உன்னோட கண்ணோட்டத்தையும் மாத்திக்கல, இல்லை?” என்றவர் குரல் வறண்டிருந்தது.


அது அங்கைக்கும் புரிந்திருந்தது. இருந்தும் அவரால் அவரை மாற்றிக்கொள்ள முடியாது, மாற்றிக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை.


அவர் எப்போதும் என்றென்றும் அங்கயற்கண்ணி தான்.


வாசகத்தின் குரல் அங்கையை உணர்வுச் சுழலில் தள்ளியிருந்தது. எதை அவர் கடந்து வரப் பார்த்தாரோ அதுவே அவரைத் துரத்துவது போலானதொரு எண்ணம்.


பழைய நினைவுகள் வந்து மோத, முயன்று அதைத் தடுத்தபடி மனதோடு ஒரு போராட்டம் அங்கைக்கு.


காலம் சிறந்த மருந்தை அவருக்குத் தந்திருந்தாலும் காயத்தையும் வடுவையும் சுவடில்லாமல் ஆற்றியிருந்தாலும் அங்கை மாறவில்லை. நடந்தது எதையும் அவர் மறக்கவில்லை, மறுக்கவுமில்லை.


இதோ கணவனின் பேச்சில் இருந்த உட்பொருள் புரிந்தாலும் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.


தன்னுள் மூடி வைத்து பூதம் காப்பது போல் அதைக் காத்துக்கொண்டு தன்னையே தாழ்த்தி மௌனிப்பார் தவிர வெளியிடமாட்டார். அந்த கோபமும் ஆதங்கமும் எப்போதும் அங்கையிடம் நிரம்பி வழியும், மாணிக்கவாசகத்திற்கு.


போராட்டம் வலுவிழக்க கண்ணோரம் கசிந்த நீர் அவரின் முன்னொரு கால வாழ்க்கையை நிழலோட்டியது.


அவர் தாயாரின் முகம் மனக்கண்ணில். நெஞ்சில் சொல்லமுடியாத ஒரு வலி, ஊசியை வைத்துக் குத்திக் குத்தி ரணமேறியபடி இருந்த இடத்தை மேன்மேலும் குத்திக் கிழித்தபடியான ஒரு வலி.


“மன்னிச்சுரு’ம்மா என்னைய” என்று வாய்விட்டுச் சொன்னவரை சச்சினின் பேச்சு கலைத்தது.


எங்கோ சென்றவர் எண்ணம் நிகழ்வுக்குத் திரும்ப சில விநாடிகள் பிடித்தது.


ஒரு நெடுமூச்சோடு முகத்தை அழுந்தத் துடைத்தவர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வீட்டினுள் சென்றார்.


பெண்ணாய் பிறந்தால் சில உணர்வுகளை, வலிகளை, நினைவுகளை, நா துடித்தெழும் சொற்களை தன்னுளேயே மறைத்துப் புதைத்துக்கொள்ள பழகிக்க வேண்டும் தானே?!


அங்கை, ஆழப் புதைத்துக்கொண்டார். ஆனால், மெல்லத் தூசி தட்டினால் மேலெழும் ஆழத்தில் தான் அந்நினைவுகள் இருந்தன.


லோபா, தந்தையின் மடியில் படுத்திருக்க, சச்சின் கோபத்தில் குதித்துக்கொண்டிருந்தான்.


லோபமுத்ரா, “இப்போ அவங்க சொல்லிட்டு போனா என்ன போகலேனா என்னடா?” என்க,


“அதெப்படி? அம்மாகிட்ட சொல்லிட்டு போனா அத்தையோட நாக்கு சூசைட் பண்ணிக்குமா?” என்றான் கடுப்புடன்.


அதைக் கேட்ட அங்கை மகனிடம், “தப்பு சச்சு” என்று கண்டிக்க ஆரம்பிக்கும் முன்பே,


“அவன் கேட்டது சரிதான அங்கை? உன்கிட்ட பேசாதவங்களுக்கு தான் நீ விழுந்து விழுந்து பணிவிட பண்ணிட்டு இருக்க? அவசியமில்லாத ஆணி இதெல்லாம்” என்றுவிட்டார் மாணிக்கவாசகம்.


அவரின் அக்கா தான். அக்கா குடும்பம் தான். இருந்தும், மரியாதை தராத இடத்தில் மனைவிக்கு என்ன வேலையென்ற தார்மீக கோபம்.


லோபமுத்ரா, “கரெக்ட்” என்க,


“முத்ரா.. என்ன கரெக்ட். அவங்க நம்ம வீடு தேடி வந்திருக்காக. வந்தவளுக்கு உபச்சாரம் தான் பண்ணேன். என்கிட்ட சொல்லிட்டு போனா என்ன இல்ல உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?” என்றவர் நகர,


“அபச்சாரம் அபச்சாரம்” என்று லோபா நக்கலடிக்க,


சச்சின், “ஓ பணிவிடை மாதாவே.. உங்க கருணையால தான் இங்க கூடலூர்ல ச்சோன்னு மழை ஊத்துது போங்க” என்க, சத்தமாய் சிரித்துவிட்டாள் லோபா.


இரவு நேரம் நெருங்க நெருங்க அத்தனை அதீத குளிரும் மழையும் ஆட்டிப்படைத்ததுக் கூடலூரை.


இந்த ஆறு வருடங்களில் அவர்கள் அந்த சீதோஷ்ண நிலைக்குப் பழகியிருந்தாலும் சில நேரங்களில் எரிச்சல் தன்னால் மண்டிவிடும்.


இன்றும் அதே மனநிலையில் தான் இருந்தனர் வாசகத்தின் வீட்டார்.


“எந்நேரம் பார்த்தாலும், நொச மொசன்னு பேஞ்ச மணியுமா இருக்கியே, இந்த மானங்கெட்ட மழை” சன்னல் வழி மழையின் தீவிரத்தைப் பார்த்துக்கொண்டே சச்சின் சொல்ல,


“மழ வந்தாலும்.. வெயில் அடிச்சாலும்.. குளிர் வாட்டுனாலும் வடிவேலு காமெடி தான் நமக்கு மொத மைண்ட்ல வரும், இல்லை?” என்று சிலாகித்தபடி லோபா சொல்ல,


“நம்மல மனசு விட்டுச் சிரிக்க வைக்கற ஒரு நபர். அதுக்கே எத்தனை பாராட்டனும் அவர” என்று அங்கையும் இணைய, நேரம் கரைந்தது‌.


முருகானந்தம் ஊட்டி வீட்டிற்கு வந்துவிட்டாக செய்தி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்தபடி வந்த மாணிக்கவாசகம், “சச்சு உனக்கு எப்போ ஆபிஸ் போகனும்” என்க,


“லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்கேன்’ப்பா. அக்கா கூட இருக்கேன்” என்றவன்,


“நீங்க தான் அக்கா ஹாஸ்பிடல் இருக்கறப்போ என்னைய வரவேண்டாம்’னு சொல்லிட்டீங்களே. அதான் நேத்தே லீவ் அப்ளை பண்ணிட்டேன்” என்க,


அதைக் கேட்டு, “ஹாஸ்பிடல்’ல இருந்தியா முத்ரா?” என்று மீண்டும் அதிர்ந்தார், அங்கை.


அவர் ஏதோ அவள் விழுந்தவுடன் மருத்துவமனை சென்று கட்டிட்டு வந்துள்ளாள் என்ற வகையில் நினைத்திருக்க, இங்குக் கதையோ வேறாக இருக்கவும் அவருக்கு அதிர்வுகளின் அளவீடு கூடிக்கொண்டே இருந்தது.


‘போச்சு’ என்று மனதில் நினைத்தவள் தம்பியை முறைத்துக்கொண்டு, “அம்மா அது அப்பா வந்ததும் திரும்ப ஹாஸ்பிடல் போனத சொல்லுறான்” என்க, மாணிக்கவாசகத்திற்கும் அங்கையைப் பார்த்து பாவமாய் போய்விட்டது.


பாசத்தைப் பொழிந்து வளர்த்தவரிடம் பொய்களை வீசியாவது அவரை நோகாமல் இருங்கச் செய்ய அவர்கள் முயல, எங்கு முடிந்தது?


அங்கைக்கு அவர் வைத்த பாசமே அவரைப் பள்ளத்தில் தள்ளிய உணர்வு.


இன்னும் எத்தனை? என்ற கேள்வியின் அதிர்வோடு அமைதியெனும் உணர்வில் தனக்குள் நத்தையாய் சுருண்டு கொண்டார்.


அதன்பின் வால் பிடித்துத் திரிந்த பிள்ளைகளின் பேச்சை அவர் கேட்டாலும் மௌனமே பதில்.


இரவு உணவை முடித்த கையுடன் லோபாவிற்கான மருந்தை மாணிக்கவாசகம் தரவும், சத்தமில்லாது நான்கு மாத்திரைகளை முழுங்கிய மகளை பார்க்கப் பார்க்க அங்கையின் நெஞ்சே வலிவந்துவிட்டது.


விருட்டென்று எழுந்து சென்றவரின் கோபமும் ஆதங்கமும் மூவருக்கும் புரிந்துதான் இருந்தது.


வாசகம், “நா பேசினா இன்னும் அதிகமா அழுவா. நீயே போய் உங்க அம்மாவ சமாதானம் செய் முத்ரா” என்றவர் மகனைப் பார்த்தபடி ‘வாய மூடி இருக்கவும்’ என்று சைகை செய்ய,


“எங்க அம்மா, நான் பேசுவேன். சமாதானம் செய்வேன். உங்கள மாதிரி நடுவுல எஸ்கேப் ஆக மாட்டேன்” என்றவன் முகத்தைத் திருப்ப,


“உத வாங்குவ சச்சு நீ. அம்மாவ இன்னும் அழ வைக்கற மாதிரி ஏதாவது சொன்னா” என்று எச்சரித்த கையுடன் சோபாவிலேயே அமர்ந்துவிட்டார்.


அறையில் ஒரு நிலையில்லா அதிருப்தியான ஆதங்கத்துடன் அமர்ந்திருந்தார், அங்கை.


அவரைப் பார்த்த மாத்திரம் லோபமுத்ராவின் முகத்தில் மென்மை சூழ்ந்தாலும் மனதில் ஒரு பயம் இருந்தவண்ணமிருந்தது.


அதிலும் அங்கை அமர்ந்திருந்த விதம் அவளைத் தாக்க, மனதோடு ‘ஸாரி ம்மா’ என்றவள் அவரருகேச் சென்றாள்.


லோபமுத்ரா, “கோபமா அங்கை நங்கை?” என்று இயல்பாய் அங்கையை இடித்துக்கொண்டு அமர, முகத்தைத் திருப்பிக்கொண்டார்.


“எங்கம்மாவுக்கு கோபத்தை பாரேன்” என்றவள் மீண்டும் சீண்ட, வலிக்க அவள் தொடையில் தட்டினார் அங்கை.


“அப்பாவும் மகளும் என்னைய என்னான்னு நெனச்சுட்டு இருக்கீங்க? ஒரு வார்த்த சொல்லல?” என்றவர் கண்கள் கண்ணீரைச் சிந்திவிட்டது.


“ம்மா.. அம்மா.. இதுக்குத் தான் நாங்க சொல்லலை உன்கிட்ட. எதுக்கு அழற இப்போ? இங்க பாரு குட்டி ஸ்கிராட்ச் மேல் தோல் போயி.. அவ்வளவுதான். சரியாகிடும்” என்க,


“என்னடீ அவ்வளவுதான்? பெத்தவ என் வயிறு கலங்கிப் போய் நிக்குது. ஒன்னுகெடக்க ஒன்னுனா அய்யோனா வருமா அம்மானா வருமா? எத்தன அலச்சியமா பேசற முத்ரா” என்று கோபமாய் பேசியவர், கண்ணைத் துடைத்துக்கொள்ள சச்சின் வந்துவிட்டான்.


சச்சின், “எம்மோவ்.. காம் டவுன்” என்று அங்கையின் மறுபுறம் அருகில் அமர, “நீயும் சொல்லாம இருந்துட்ட தானடா சச்சு” என்று அவனிடமும் கோவித்துக் கோபமானார்.


“ஆக்சிடென்ட்’னு சொல்லலை.. ஹாஸ்பிடல்’ல இருந்தததையும் சொல்லலை.. வீட்டுக்கு வரோம்’னு சொல்லலை.. என் மகதான நீயி? இதுகூட எனக்குத் தெரியக் கூடாதா?” என்றவர் அழுகை கூடவும் பிள்ளைகள் தவித்தனர்.


அங்கையின் அமைதியை அவர்கள் எதிர்பார்த்திருக்க அவரின் வெளிப்படை உணர்வுடைப்பை எதிர்கொள்ள முடியாது தத்தளித்தனர்.


“அம்மா.. சரிம்மா.. ஸாரிம்மா.. ஒன்னுமில்லம்மா… அழுதாம்மா..” என்று ரக ரகமாய் அவர்கள் சொல்லிய சமாதானங்கள் அந்த தாயாருக்கு போதவில்லை.


அங்கை மகள் விபத்தில் சிக்கியுள்ளாள் என்பதிலேயே மொத்தமும் நடுங்கிப் பயந்திருக்க, அதில் அவள் காயத்தைப் பார்த்ததும் சர்வாங்கமும் ஓய்ந்து சாய்ந்துவிட்டது.


இதோ அருகில் அமர்ந்திருந்த லோபாவின் கையை இத்தனை சண்டையிலும் அவர் விடாது பிடித்துத்தான் அமர்ந்திருந்தார்.


அவர் உள்ளம் இத்தனை பெரிய அதிர்வை ஏற்காது போராட, இன்றைய நினைவுத் தாக்குதலுடன் மக்களும் கணவனும் தன்னிடம் சொல்லாதது வேறு அவரை வாட்டி கொள்ளியிட ஆரம்பித்திருந்தது.


சச்சின், “நீ அழுவேன்னு தான்’ம்மா அப்பா சொல்ல வேண்டாம்னார்” என்றுவிட, அதுவரை வெளியே அவர்களின் பேச்சுக்களில் கலக்காது அமர்ந்திருந்த மாணிக்கவாசகத்தின் வயிர் கலக்கமாகிவிட, மனைவியிருந்த அறை நோக்கி நடந்தார்.


“இந்த பையன” என்று மகனை மனதில் வறுத்தபடி பல்லைக் கடித்துக்கொண்டு முன்னேற,


அங்கயற்கண்ணி, “அவர் சொல்லுறது தான நீங்க கேட்பீங்க? நான் யாரு உங்களுக்கு எல்லாம்? ஒன்னுமில்லாதவ கிட்ட என்னத்த சொல்லிட்டுன்னு விட்டுட்டீங்க” என்று அந்த நேரத்தின் அதீதம் தந்த தகிப்பு தாங்காது அதீதமாய் அவர் பேசிவிட்டார்.


அதில் கோபமாய், “அங்கை” என்ற அரட்டலுடன் அறைக்குள் மாணிக்கவாசகம் வர,


அதைவிட மேலான குரலில், “ம்மா” என்று பிள்ளைகள் இரண்டும் அவரை இருபக்கமிருந்தும் அணைத்துக்கொண்டனர்.


“போங்கடா” என்றவர் சொன்னாலும் பிள்ளைகள் இரண்டின் கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு கண்ணீரோடுக் கணவனைக் காண, மாணிக்கவாசகத்தின் கோபமெல்லாம் போய் அங்கையை வெறித்தன அவர் பார்வை அம்புகள்.


அதில் அங்கையின் சஞ்சலங்கள் மொத்தமும் அமிழ்ந்து போய்விட்டது.



🌼


 

Shambhavi

Moderator
அத்தியாயம் - 07

முகத்தை அஷ்ட கோணலாக வைத்து அமர்ந்திருந்தான், அருளாளன்.

“இத்தன கஷ்டப் பட்டு நீ பார்க்கனுமா இத?” என்றபடி மயூரனின் தையலை பிரித்துக்கொண்டிருந்தான், டாக்டர் ஜீவன்.

அருள், “வேற யாரோடதப் பார்க்க? பார்க்கத் தான் விடுவீங்களா? தையல் போடுவாங்க சரி இதென்ன ஸ்டாப்ளர் போட்டிருக்காங்க?” என்றவன் கேள்விகளை அடுக்கிக் கொண்டு மயூரனை கூர்ந்து பார்க்க,

ஜீவா, “சூச்சர்ஸ் பதிலா ஸ்டாப்ளர் போடுவாங்க. அதிகம் தழும்பாகாம இருக்கும்” என்றான்.

ஜீவாவிடம், “செப்டிக் ஆகாத மாமா” என்றான் மயூரன் கண்ணைச் சுருக்கி.

அவனுக்கு அவன் கவலை!

ஜீவா, “நார்மலா இரு மயூரா, வலிக்கும்” என்றவன்,

“உனக்கு ப்ளாஸ்டிக் ஸ்டாப்ளர் தான் போட்டு இருக்காங்க. பேப்பர்ல அடிக்கற மெட்டல் ஸ்டாப்ளர் இல்ல” என்று சிரித்தவன் ஸ்டாப்ளரை அகற்றி, பஞ்சு வைத்துச் சிறு கட்டாகக் கட்டிவிட்டான்.

“நானும் ஸ்டாப்ளர்னு சொல்லவும் பேப்பருக்கு அடிக்கறதுனு நெனச்சேன்” என்று அருள் சிரிக்க,

“இது மெடிக்கல் பர்பஸ். நார்மலா இருக்கறது போட்டா, சோலி முடிஞ்சிடும்டா தம்பி” என்ற ஜீவா, கைகளைக் கழுவிக்கொண்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.

அருள், “அம்புட்டு தான? வேற எதாவது இருக்கா?” என்க,

“முடிஞ்சது. மூனு நாள் அப்புறம் வந்து ட்ரசிங் மட்டும் பண்ணுங்க. பிங்கர் சரியாக எப்டியும் மூனு வாரம் ஆகும் மயூரா. கேர் ஃபுல்” என்றவன் அருளிடம்,

“உன் பெரியம்மா உன் பொண்டாட்டியோட வீட்டுக்கு வர சொன்னாங்க, சாய்ந்தரம் வந்து சேர்” என்க, “அப்போ ஷஷ்டி கிட்ட நீயே சொல்லிடு அண்ணா” என்றுவிட்டான் அருள்.

ஜீவன் அருளின் பெரியப்பா கண்ணபிரானின் மகன். மதுரையில் மருத்துவம் படித்து அங்கேயே அவனின் வைத்தியத் தொழிலை செய்பவன்.

முறைத்தவனாக, “திரும்பவும் வம்பு பண்ணிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும்” என்க,

அருள் தலையைத் திருப்பிக்கொண்டு, “பண்ணிட்டாலும்..” என்று முணுமுணுக்க,

ஜீவன், “திருந்தாத நீ” என்றுவிட்டு மயூரனிடம்,

“நீ கேட்க மாட்டியாடா‌ இதெல்லாம்?” என்க, “என்ன மாமா மச்சானுக்குள்ள சண்டைய இழுத்துவிட பார்க்கறீயா ப்ரோ” என்று கடுப்படித்தான் அருள்.

“கேட்டு? எங்கக்கா ஒரு பக்கம் குத்த என் மாமன் மறு பக்கம் வெட்டவா? ஏன் ஜீவா மாமா” என்றவன் அருளிடம்,

முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு, “சரி தான மாமா” என்க, அருள் பார்த்த பார்வையில் சிரித்துவிட்டான் மயூரன்.

ஜீவா, “எப்டியோ, ஷஷ்டிய‌ போட்டு படுத்தாம இருந்தா சேரித்தான்” என்றவனிடம் சில நிமிடங்கள் பேசிய பின்னர் கிளம்பினர்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் மயூரன், “ஷஷ்டிய இன்னும் அருள் சார் சமாதானம் செய்யல போல” என்க, அருளிடம் மௌனம்.

மயூரனின் பார்வை மொத்தமும் அருளிடம் தான். அவனுக்கு நன்றாகத் தெரியும் இன்னும் இருவருக்கும் எதுவும் சரியாகவில்லை என்று.

அவன் கணிப்பு இப்போது வரை தவறவில்லை. இருந்தும், இவர்களை அவன் கணித்த கணிப்பு தான் சுட்டது.

அக்கா - மாமாவே ஆனாலும் ஒரு அளவிற்கு மேல் அவனாலும் அவர்களுள் சென்று பேச முடியாது தவித்தான் என்றால் ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பார்கள்’ என்ற ஆயாசமும் எழாமல் இல்லை.

பழத்தைப் புசிக்க அது முதலில் கனிய வேண்டும் அல்லவா?

அருள், ஷஷ்டியை விரும்பித் தான் திருமணம் செய்தான். ஆனால், ஷஷ்டி?

இப்போது வரை அவளுக்கு அவன் மீது விருப்பமும் இருந்தது, விலகலும் இருக்கிறது.

காரணம் தெரிந்தாலும் காத்திருப்புகள் தந்த வலியின் வீரியம் இன்னும் கூடியபடி தான் இருக்கிறதே தவிர இடைவேளையைக் குறைக்கும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை.

அருளின் முகத்தில் தெரிந்த அழுத்தம் மயூரனைக் கவனிக்க வைத்தது.

அருளை இயல்பாக்க, “பார்த்துக்க மாமா, திரும்ப அவ அழுதா..” என்று இழுத்து நிறுத்த,

கூர்மையாய் மயூரனை பார்த்தவன், “சீவிடுவியா‌ என்ன” என்க,

மயூரன், “சூழ்நிலை அமைந்தால்” என்றான் தோளைக் குலுக்கிக்கொண்டு.

அவன் பாவனையில் மொட்டென மலர்ந்த புன்னகையுடன், “க்ராதகா! வாடா மொத. இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு வந்தா பேச்சப் பாரு” என்றவன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு அவர்களின் டிப்பார்மெண்ட் ஸ்டோர் நோக்கிப் பயணித்தான்.

மதுரையின் முதன்மை வணிக இடத்தில் அமைந்திருந்தது, ‘ஆனந்தம் டிப்பார்மெண்ட் ஸ்டோர்’ஸ்.

மூன்று தளங்களில் மளிகை, வீட்டு உபயோக பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள் என்று மொத்தமும் அடங்கியிருக்க அதில் திணறிக்கொண்டிருந்தார், பெரியசாமி.

“ஏன்டா சுரேஷு பாத்தர பண்டத்த எல்லாம் தூசி தட்டி வைக்க சொன்னா, இன்னும் ஒன்னும் ஆவல. இந்த பொம்பள ஆளுங்ககிட்ட வேலய வாங்குடான்னு எத்தன முறை சொன்னாலும் செய்யாம கல்லாட்டம் நில்லு” என்றவர் கத்த,

“அண்ணே, மேல கம்பு பெக்கெட் எல்லாம் அடுக்கியாச்சு‌. குடோன்’ல இருந்து அரிசி லோடு ஏறக்கீடவா?” என்ற ஒரு பணியாள கேட்டு நிற்க,

“ஐயா மணியண்ணே கடையில இருந்து மளிக லிஸ்டு அனுப்பியிருக்காவ. பொருளில்லாம பையலுக கட்டிக்கொடுக்காம நிக்குறானுவ. வந்து ஒரு எட்டு பாருங்க” என்று இன்னொருவரும்,

“ஸார், இந்த பொம்பள கூட எல்லாம் என்னால வேல செய்ய முடியாது! என்னைய வேல சொல்ல அவ யாரு? நா என்ன பொட்டலம் போடவா இங்க வந்தேன்” என்று ஒரு நடுத்தர பெண் வந்து நிற்க, முழி பிதுங்கியது அவருக்கு.

பெரியசாமிக்குத் தொழிலில், கொள்முதல் பிரிவில் இருந்த ஆர்வம் மேலாண்மை பிரிவில் சுழியம். திறம்படக் கடையை நடத்தும் சூச்சமத்தை இன்றளவும் அவரால் பிடித்துக்கொள்ள முடியவில்லை.

ஆனந்தம் ஸ்டோர்ஸ் - பெரிசாமியின் தந்தை மேகநாதனால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.

அவர் இருந்தவரை அவரும் அவருக்கு பின் பெரியசாமியும் என்றிருக்க, அது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது மரகதவல்லியின் வார்த்தைகளால்.

மேகநாதனின் மறைவிற்கு பின் மரகதவல்லி பார்த்துக்கொண்ட கடை தற்சமயம் சரிபாதியான பங்கீட்டில் அருளாளனும் பெரியசாமியும் கவனித்துக் கொள்கின்றனர்.

அருளாளன் தான் பெரும்பாலும் மேலாண்மையைக் கையாள்வான். இன்று மயூரனை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டி இருந்த இடைவேளையில் இத்தனை இடைஞ்சல்களைச் சந்திக்க நேர்ந்துவிட்டது பெரியசாமிக்கு.

பெரியசாமி நின்றிருந்த நிலையைப் பார்த்த மயூரன், “மாமா, உங்க மாமா லாக் ஆகிட்டார்” என்றவன் சிரிக்கவும் அருள் விரைந்து கடையினுள் சென்றிருந்தான்.

“என்னாச்சு? வேல எல்லாம் சொல்லிட்டு தான போனேன்” என்றவன் கடுமையாய் பேசவாரம்பிக்கவும் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது.

வேலையைப் பிரித்துவிட்டவன், “அவங்க உங்களுக்கு மேல இருக்கறவங்க. மளிகை கடையில பொட்டலம் தான் போடுவாங்க, போட இஷ்டமில்லேனா வேல செஞ்ச பணத்தை வாங்கிட்டு வேற எடம் பாருங்க” என்றுவிட்டான் அந்த பெண்மணியிடம்.

அத்தனை கடுமை அருளிடம். பெரியசாமியும் மயூரனும் அவனை வேடிக்கை தான் பார்த்தனர். இருவருக்கும் அத்தனை கடுமையெல்லாம் வரவே வராது.

கோபம், கடுப்பு எல்லாம் வந்தாலும் மற்றவரின் மனம் நோகாது பார்த்துப் பக்குவமாய் பேசும் ரகம் தந்தையும் மகனும். அதற்கு அப்படியே நேர் மார், அருளாளன்.

அதனால் தான் அவனின் வியாபாரம் பிசிரில்லாது சுத்தமாய் சொல்கிறது.

இரண்டு மணிநேரம் அவன் சுழன்றடித்து வந்தமரவும், பெரியசாமி, “ஒட்டுக்கா மூனு நாலு பேர் வந்து நின்னு இது என்ன அது என்னனா ஒன்னும் ஓட மாட்டேங்கிதுடா அருளு” என்க,

மயூரன், “உங்கள பொருள் வாங்க, பிடிக்க அனுப்புனா நல்லா பண்ணுவீங்க. இங்க உங்காந்து மேனேஜ் பண்ண சொன்னா மட்டும் ப்ரியங்கா மோகன் மாதிரி டான்ஸ் ஆடுங்க’ப்பா” என்றவன் அருளிடம்,

“இனி அப்பாவ வெளிய அனுப்பாதீங்க மாமா. இங்கையே இனி கடைய பார்த்துக்கட்டும்” என்றான் முறைப்பாக.

“வெளியூர் போகாம இருக்க முடியாது அப்பு. அப்பாவுக்கு பழகீடுச்சு. ஷஷ்டிய வந்து பார்த்துக்க சொன்னா அவ மாட்டேங்கறா” என்றவர் அருளைப் பார்க்க, அவன் முகத்தில் இறுக்கம்.

சமயம் பார்த்து மகளின் பதிலை போட்டுடைத்திருந்தார், பெரியசாமி.

அருள், “வீட்டுக்குள்ளையே இருக்கறதா எண்ணமா மாமா அவளுக்கு?” என்க,

பெரியசாமி, “கோபப் படாதய்யா. புள்ளையும் வெசப்படுறா” என்றவர்

“அப்பு, நீ வேணா அக்காகிட்ட சொல்லி நம்ம கடைய வந்து பார்த்துக்க சொல்லுய்யா. அருளும் இங்கனையும் அங்கனையுமா ஓடிகிட்டு கெடக்கான வேற” என்க, மயூரன் மாமனைத் தான் பார்த்தான்.

ஷஷ்டியைப் பற்றி எங்கு சுற்றி எங்கு வந்தாலும் அனைத்தும் வந்து முட்டி நின்றது, அருளிடம் தான்.

அருள், “நான் பேசிக்கறேன் மாமா. விடுங்க” என்றவன் வேலையில் ஈடுபட, பெரியசாமி கொள்முதல் பொருட்களைச் சரிபார்க்கச் சென்றுவிட்டார்.

மயூரனுக்கு இதெல்லாம் ஆகாத வேலை. மடிப்பு கலையாத சட்டையில் தலை கலையாத இடத்தில் அலுங்காது குலுங்காது வேலைப் பார்க்க விரும்பும் ரகம் அவன்.

அதற்குத் தக்க வேலையையும் அமைத்துக்கொண்டான் என்பது வேறு கதை.

மணி ஒன்றாகவும் அருள், “அப்பு, ஷஷ்டிக்கு கால் பண்ணி நா மதியம் சாப்ட வரலைன்னு சொல்லிடு” என்க, அவனும் அழைத்தான்.

ஆனால் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைக்க, அதேதான் நடந்தது.

“வேலையா இருப்பா போல மாமா, கால் கட் பண்ணுறா. மெசேஜ் பண்ணிட்டேன்” என்றவன் இயல்பாய் இருந்துவிட, அங்கு ஷஷ்டி பொடுபொடுப்பாக அமர்ந்திருந்தால்.

மாலை போல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது அவன் கருப்பட்டி.

கருப்பட்டி, ஷிஹ் ட்ஷு (Shih Tzu) வகை நாய். ஷஷ்டிக்காக அவன் வாங்கி, அவள் மறுத்து பின் அவனே ஆசையாய் வளர்க்கும் அவன் குட்டி பையன்.

கருப்பட்டி அருளின் காலை சுற்றிவந்து தூக்க உந்த, “மாமா மொத காஃபி குடிச்சிட்டு அந்த கருவாயன தூக்கு. காலேல பிடிச்சு என் மடியே கதின்னு கெடந்தவன ஒரு அதட்டு போட்டவுடன உன் கிட்ட தாவிட்டான் பாரு” என்றவளை அருளிடம் போட்டுக்கொடுப்பது போல் மெல்லிய குரலில் குழைத்தது.

“சேரிடா சேரிடா.. அவ கெடக்கா.. நாம உள்ளாற போகலாம்” என்றவன் கருப்பட்டியை தூக்கிக் கொண்டே உள்ளே செல்ல, அது மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தது ஷஷ்டியை.

“சோறு போடுன்னு என்கிட்ட தான நைட் வருவ, வீச்சுக்கறடீ கச்சேரிய” என்றவள் அருளுக்கான காபியுடன் அறைக்குள் சென்றால்.

“கெளம்பு ஷஷ்டி, பெரியம்மா வீட்டுக்கு போகனும். அப்டியே மீனாட்சி ஆத்தாவையும் பார்த்துட்டு வரலாம்” என்க, அமைதியாய் இருந்தால் பெண்.

“ம்ப்ச்ச், என்ன தான்டி உன் ப்ரச்சனை? மூஞ்ச தூக்கி வெச்சிட்டு ஒன்னும் பேசாம இருந்தா நா என்னத்த நெனக்க?” அவன் கத்த, அவள் அசையவில்லை.

“ஷஷ்டி” என்று அவள் கையை வலிக்கப் படிக்கவும்,

“அத்த” என்றாள் பதிலாய்.

அதிலேயே மொத்தமும் அடங்கிவிட்டது‌. பெருமூச்சுடன் அமர்ந்துவிட்டான், அருளாளன்.

“நீ கெளம்பு, நா பார்த்துக்கறேன்” என்றவன் மயூரனுக்கு அழைத்தான்.

“கெளம்பி ரெடியா இருடா. நாங்க வரோம்” என்க,

மயூரன், “நாங்களா? வெளிய போறீங்களா மாமா? நா எதுக்கு நந்தியா” என்க,

“என்னைய டென்ஷன் பண்ணாம கெழவியையும் கூட்டிட்டு கெளம்பி இரு. மீனாட்சி கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்றவன் வைக்கவும், அவன் அம்மாவை நினைத்து அத்தனை கோபம் பொத்துக்கொண்டு வந்தது அருளுக்கு‌.

“எல்லாம்.. ஆணவம்” என்றவன் தயாராகி, ஷஷ்டி, வண்ணக்கிளி மயூரனுடன் மதுரையைச் சுற்றிவிட்டு இரவு பதினொரு மணி போல தான் வீட்டிற்குள் நுழைந்தான், விரிந்த சிரிப்புடன்.

ஷஷ்டியின் மனதும் நிறைந்து மலர்ந்திருக்க, அவளிடமும் ஒரு விகசித்த சிரிப்பு அலங்கரித்தது அந்நேரத்தில்.

இதோ ஒரே வாரத்தில் ரேணுகாவின் கோரிக்கையை நிறைவேற்றக் கிடா வெட்டை ஏற்பாடு செய்துவிட்டார் பெரியசாமி.

கிடா வெட்டிற்கான அழைப்பு பெரியசாமியின் அங்காளி பங்காளி துவங்கி ஊரையே அவர் அழைத்திருக்க‌ அக்காவின் வீட்டிற்கு இன்னும் அவர் போகவும் இல்லை அழைப்பும் விடுக்கவில்லை.

வருடம் இரண்டு கடந்திருந்தாலும் அவர் மகள் அங்கு மருமகளாகியிருந்தாலும் மரகதம் வீசிய வார்த்தைகளின் வீரியம் இன்னும் பெரியசாமியிடம் குறைந்தபாடில்லை.

அருளை நேற்று அவன் அலுவலகத்திலேயே முறையாய் சென்று அழைத்துவிட்டார். மகளிடமும் காலையில் அலைபேசியில் பேசியாகிவிட்டது.

இருந்தும், மொத்தமாய் ஒதுக்கவும் முடியாது சேர்ந்து இணைக்கவும் முடியாது பாசம் எனும் தளை நடுவில் பிசுறாய் பிணைந்திருந்தது.

பெரியசாமிக்கு அத்தனை மறுதலிப்பு. உள்ளம் தவித்துப் பிசைந்தது ஒரு முடிவெடுக்க முடியாது.

மரகதவல்லி, பெரியசாமியின் அக்கா. பெயருக்குத் தக்க அத்தனை ஆளுமை, அதிகாரம், தைரியம் நிறைந்தவர்.

நிறைகள் பல இருந்தாலும் பெரும் குறை அவர் பேச்சும் அதில் அவர் வீசும் வார்த்தைகளும்.

அப்படி அவர் வீசிய கூர் வார்த்தைத் தாக்குதல் அருளாளன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருந்தது, ஷஷ்டியின் மனநிலையை மாற்றியிருந்தது, தம்பி பெரியசாமியுடனான உறவு விரிசலடைய வைத்திருந்தது!

அவையெல்லாம் யோசித்தபடி இருந்த பெரியசாமியின் நிலையுணர்ந்த
வண்ணக்கிளி, “ஏய்யா அவள கூப்படலேனா விடேன். என்னத்துக்கு இத்தன வெசனப்படுற சாமி” என்று மகனின் தெளிவில்லா முகம் கொடுத்த கலக்கத்துடன் சொல்ல,
ரேணுகா வாயே திறக்கவில்லை.

“ஷஷ்டி கண்ணாலத்துக்கு பின்ன வார மொத விசேடம் ஆத்தா. அதென் ரோசனையா இருக்கு” என்று நெஞ்சைத் தடவியபடி சொல்ல,

“இருக்கட்டுமே, என்னத்த இருக்கு. அந்த கழுத வாயடங்காம என்னத்தையாவது வந்து பேசுவா, நாமலும் கேட்டுக்கிட்டே வா இருக்க முடியும். ஆங்காரி பொறந்தூடு வேணுமுனா வாரா” என்றவர் பாக்கை இடித்து வெற்றியோடு சேர்ந்து வைத்து மெல்ல ஆரம்பித்திருந்தார்.

மாமியாரை ஆயாசமாய் பார்த்தபடி நின்றிருந்தார் ரேணுகா.

வண்ணக்கிளியின் பேச்சு ஆளுக்குத் தக்க பேசுவதாக இருக்கும். ஆனால், அதன் பின்னான சூட்சுமத்தை அவர் மட்டும் தான் அறிவார்.

ரேணுகா உட்பட வண்ணக்கிளியின் பேச்சு அனைத்தும் அவர் எங்கு இருக்கிறாரோ அங்கிருப்போரின் பக்கமாகத் தான் பேசுவார் என்ற கணிப்பிருக்க, அது அப்படி அல்ல என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு யாருக்கும் அங்குப் பக்குவம் பற்றவில்லை.

பெரியசாமியின் யோசனை பெரும் போராட்டமாக மாறியிருக்க, “நீங்க ரொம்ப யோசிக்காதீங்க மாமா. நானும் ஷஷ்டியும் வரோம். அம்மாவ உங்களால கூப்ட முடியலேனே விடுங்க. சும்மா போட்டு ஒழப்பிக்காதீங்க” என்று அருளாளன் சொல்லிய பின்னர் தான் அவருக்குக் கொஞ்சம் சமனான உணர்வு.

🌼
 
Last edited:

Shambhavi

Moderator
அத்தியாயம் - 08

சொந்த பந்தத்துடன் ஆளும் பேருமாய் கோவிலில் முன் மண்டபத்தில் குழுமி இருந்தனர் மயூரன் வீட்டார்.

மதுரைவீரன் பொம்மி திம்மி (வெள்ளையம்மாள்) சகிதம் காட்சி தர, பரவசத்துடன் காணப்பட்டார் வண்ணக்கிளி.

அவர்கள் வாழ்வியலோடு கலந்த (தெய்வ) மனிதர், மதுரைவீரன்.

பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னாலும், அவர் அவர்களின் காவல் தெய்வம்!

இன்றளவும் தங்கள் குலதெய்வத்திற்கு அடுத்த இடத்தில் மிகுந்த பயபக்தியுடன் கைக்கூப்பி ‘வீரரே’ என்று உள்ளார்ந்து வணங்கி உருகும் மக்களை அவர் காக்காது இருந்ததில்லை.

முறுக்கிய மீசையும் ஓங்கிய கையில் வீச்சரிவாளுமாக காட்சி தந்தவரைப் பார்த்தாலே மிரட்டும் தோற்றம் தான்.

இரட்டை கிடாக்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து, வீரனுக்குப் படைக்கப்பட்ட பூமாலையை அவைகளின் கழுத்து போட்டு ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்தனர்.

உறவில் இருந்த பெரிய தலைகள், பெரியசாமி, அருள், மயூரன் நின்றிருக்க வீரனிடம் வைத்து எடுத்துவரப்பட்ட அரிவாளால் கிடாக்கள் வெட்டப்பட்டன.

“ஆத்தா, மொத ரத்ததை மயூரென் கையால படைக்கச் சொல்லு” என்று மூத்தவர் உறவினர் சொல்ல, அதன்படி ஒரு சிறிய அளவிலான பத்திரத்தில் கைகள் நடுங்க அதைக் கொண்டு வீரனின் முன்பு வைத்தான், மயூரன்.

‘இதெல்லாம் நமக்குத் தேவையா முருகேசா?’ அவன் மைண்ட் வாயிஸ் ஓட, பாட்டுச் சப்தம் அவன் காதை அடைத்தது.

மயூரனுக்கு அவைகள் துடி துடித்து இறந்துபோனதைப் பார்த்ததும் மனதில் பாரமேறிய உணர்வு.

ரேணுகா, “அப்பு, முன்னாடி விழுந்து கும்புடு” என்க,

“சூதானம் சாமி” என்ற பெரியசாமி மகளையும் மருமகனையும் அவ்வாறு விழுந்து எழப் பணித்தார்.

அதன்பின் அவ்விரு கிடாவின்‌ எந்த ஒரு பாகமும் வீணாகாது சமையலானது.

ஒரு சிறிய கரும்பு பந்தல் அமைத்துச் சுருட்டு, சாராயத்தை முதலில் மயூரனின் கையால் படைக்க வைத்தார் வண்ணக்கிளி.

பின்னர் சமைத்த உணவுகளை அருள், ஷஷ்டி, மயூரன், பெரியசாமியின் கையால் பெரிய வாழையிலையில் தாராளமாக வைக்கச் சொல்லியவர் ரத்தம் இருந்த பாத்திரத்தைப் பூசாரியிடம் சொல்லி அகற்றினார்.

“ஏ குடும்பத்தோட இப்போ இருக்கறாப்புல எப்பவும் காவலா இருய்யா வீரா” என்று கயெடுத்து வணங்கிய வண்ணக்கிளி கண்கலங்கிவிட்டார்.

“எல்லாம் கருப்பு தென். இனி ஒன்னும் எம் புள்ளங்க கிட்ட நெருங்காது” என்றபடி ரேணுகாவுடன் வணங்கி எழுந்தார், பெரியசாமி.

ரேணுகாவிற்கு அத்தனை நிறைவும் திருப்தியும். அதிலும் மயூரனின் கையாலேயே அனைத்தும் செய்ய வைத்தது அவரை சமனாக்கியது போல் இருந்தது.

மயூரனும் அருளும் முதலில் அமர்ந்து உண்ணவாரம்பித்தவுடன்
விருந்தும் தீர்த்தமும் அமோகமாய் ஆரம்பித்துக் கலை கட்டியிருந்தது.

மயூரன், “ஷஷ்டி, தண்ணி கொண்டு வா” என்க, அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

வேறொருவர் வந்து தண்ணீரை மயூரனுக்குத் தர, அப்போதுதான் அவன் ஷஷ்டியின் நடவடிக்கையா கவனிக்க ஆரம்பித்தான்.

விருந்தை முடித்த கையோடு ஆண்கள் ஊர் வம்பிற்குத் தயாராகி அருகில் இருந்த மண்டபத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு வாய் மணக்க கதையடிக்க ஆரம்பித்திருந்தனர்.

ஷஷ்டி, சென்ற வாரம் மயூரனிடம் பேசியது. அதன் பின் தம்பியிடம் இன்னும் அவள் பேசவில்லை. அத்தனை கோபம் அவனிடம். அதை மௌனம் என்ற போர்வையினுள் அடக்கியிருந்தாள்.

ரேணுகா, “ஷஷ்டி, போய் மயூரனுக்கு மோரும் மாத்திரையும் கொடு. இன்னும் மாத்தர முழுங்காம ஆடிட்டு இருக்கான் பாரு” என்று மகளை அனுப்பினார்.

அதைக் கவனித்த மயூரன் அமைதியாய் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க,

“மோரு” என்று கொண்டு வந்த தட்டை அவர்கள் அருகில் வைத்துவிட்டுச் சென்றவள் இருவரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

மயூரனுக்கு அவளின் செயல் இன்னும் புரியவில்லை.

இதில் அருள், “நீ நெல்லு, நா புல்லு” என்றான் சொல்லும் மனைவியின் ஒதுக்கத்தை உள்வாங்கியபடி.

மயூரன், “நீங்க வம்பிழுத்தீங்க சரி. என்கிட்ட ஏன் இவ பேசாம இருக்கா, மாமா” என்று அருளிடம் கேட்டுவிட,

அவனை முறைத்துக்கொண்டு, “எனக்கு நல்லது பண்ணுறேன்னு கெழவியும் நீயும் ‘எம் வூடு, என் கோட்டை’னு தெலுங்க படி டைட்டில் எல்லாம் சொன்னீங்களே, நியாபகம் இருக்கா?” என்க, ஒரு அசட்டுச் சிரிப்பு மயூரனிடம்.

“கொச்சுட்டாளா?”

“இல்லையா? அதுதான்டா ஆரம்பப் புள்ளியே” என்று அருள் அவர்களின் பேச்சை மேலோட்டமாய் கூற, மனசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான் மயூரன்.

“நா இப்டி யோசிக்கவே இல்ல மாமா. ஷஷ்டி எதையும் மனசுக்குள்ளையே வெச்சுக்க மாட்டா இல்ல” என்க,

“ம்ஹூம், அவ அவளுக்குள்ளையே எல்லாத்தையும் போதைக்க ஆரம்பிச்சு வருஷம் ரெண்டாச்சு” என்றான்‌ தூரத்தில் செல்லும் மனைவியை வெறித்தபடி.

மயூரன் புருவஞ்சுருங்கியவனாக, “என்ன சொல்லுறீங்க” என்றான் அதீத கேள்வியாய்.

“உன் அத்த” என்றுவிட்டான் ரத்தின சுருக்கமாக.

இன்னுமே குழம்பித் தான் போனான் மயூரன்.

ஷஷ்டி, கலகலப்பும் துருதுரு பண்பும் குழியிட்டி வெடிக்கும் சரவெடி பெண். மனதில் எதையும் வைக்காது பட்டதைப் பட்டென்று பேசும் ரகம்.

“என் மனசு வெள்ளையா தெளிவா இருந்தா தான் என் முகம் வயசானாலும் கலையா ரிங்கில்ஸ் ப்ரீயா (wrinkles free) இருக்கும்” என்பவளிடம் இப்போது பெரும் மாற்றங்கள்.

அதற்கு அன்றைய தினம் அவளின் உள்ளக்கிடங்கில் இரண்டு வருடமாய் அப்பியிருந்த ‘அப்போ இங்க எனக்கு ஒன்னுமே இல்லிய்யா அப்பத்தா’ என்றவள் கேள்வியே சான்று.

மனதில் இருப்பதை மூடி மூடி மறைத்து அவளுள்ளேயே உழன்று கொண்டிருப்பவளை என்ன சொல்லித் தான் அருள் மீட்டெடுப்பான்?

அவளாகப் புரிந்து நடந்தால் தான் அவளின் மனக் கேள்விகளுக்கான விடையறிந்து வெளியேற முடியும்.

அருளும் அவன் வாழ்க்கையைத் துவங்க முடியும்!

“இவ இன்னுமா அத்தையோட வார்த்தைய பிடிச்சு தொங்கறா? என்ன மாமா?” என்று மயூரன் குரலை உயர்த்தியிருந்தான்.

மெல்ல அவனின் கோபம் ஏற ஆரம்பிக்கவும் அருளுக்கு அருள் வந்துவிட்டதைப் போல் மயூரனின் முதுகில் சுல்லென்று ஒன்றை வைத்தான்.

“மாமா” என்றவன் கத்த,

“புள்ளைய எதுக்குடா அடிக்கற” என்று வந்துவிட்டார் வண்ணக்கிளி.

“ம்ம்.. உன்னைய என்னால அடிக்க முடியாதே கெழவி. அதன் இவன அடிச்சு என் வெறிய குறைக்கறேன்” என்றவன் முகத்தில் அத்தனை கோபம்.

“நானென்னடா சாமி பண்ணேன். அம்மத்தா ஏ ராசாவுக்கு ஒத்தாசை தானப்பு செய்யுவேன்” என்று முகத்தைத் தூக்கி வைத்தபடி சோகமாய் நின்றிருந்த வண்ணக்கிளியைப் பார்க்கப் பார்க்க அருள் வெறியானான்.

“உன்னைய இங்கனக்குள்ளையே போட்டு அமுத்திபுடுவேன் கெழவி. வயசுக்கு தக்கன பேச்சா பேசுத? ஓ பேத்தியா மொதல்லையே ஆடுவ, நீயி இந்தாடி ஆத்தா சலங்கையினு‌ மேக்கொண்டு அவள ஆட விடுற மாதிரி பேசி வைக்குதா?”

திருதிருவென முழித்துக்கொண்டு, “அது.. ராசா ஷஷ்டியும் நீயும் ஒன்னா போகுறதுக்குத் தானய்யா அம்மத்தா ஏற்பாடு பின்னியேன்” என்றார் பாவமாய்.

மயூரன், “என்ன அப்பத்தா பண்ண இப்போ?” என்க, அவர் கண்ணை உருட்டினார்.

“ஏ வூடு ஓ வூடுன்னு அன்னிக்கு நீ கூட்டு ஒரண்டையே இன்னும் பைசல் ஆவாம கெடக்கு. இப்போ என்னத்த பண்ணி வெச்ச நாரதர் கெழவி” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அருள் கேட்க,

“அது.. உங்காத்தா ஆத்த மாட்டாமா சொன்னாளா.. அதென் உம் பொண்டாட்டிய கொஞ்சநா நம்மூட்டுக்கு அனுப்பி வையி…ஈஈ” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வண்ணக்கிளியின் காதை பிடித்துத் திருக்கிவிட்டான், அருளாளன்.

நிச்சயம் பலமாகத் தான் அவன் திருகி இருப்பான் என்பது வண்ணக்கிளியின் முகமும் அவரின் அலறலுமே காட்டிக்கொடுத்தது.

மயூரன், “மாமா.. விடு மாமா” என்றவனைப் பிடித்துத் தடுக்க,

“அவனவன் கல்யாணம் பண்ணுறதுக்கே தலைகீழ நின்னு இல்லாத வித்தைய காட்டி கல்யாணத்த பண்ணி.. வம்பாடு பட்டு அடி வய்த்த கட்டிகிட்டு முக்கிட்டு கெடந்தா, கெழவி கையில அப்போ அப்போ தொட்டுக்கற மாந்தார எல ஊரறுகாயக் கூட மொத்தமா புடிங்கி குப்பையில வீசியிருக்க நீயி.. உன்னிய” என்றான் மூச்சு வாங்க நிற்க, மயூரனுக்கு அருளின் அவஸ்தைப் பேச்சு புரிந்ததும் அப்படி ஒரு சிரிப்பு.

அதில் அருளின் கோபம் மேலும் மூழ, “என் வாழ்க்கையில கும்மியடிக்கவே ஆத்தாலும் மகளும் கும்பூ பாண்டா மாதிரி இருந்துட்டு என்ன என்ன வேல பார்க்கறீங்க” என்றவன் சத்தத்தைக் கேட்டு வந்த ஜீவாவும் மயூரனும் தடுக்கத் தடுக்க, வண்ணக்கிளி கதறக் கதற அவரின் இரு காது தண்டட்டியையும் கழற்றி எடுத்துவிட்டான்.

“இத போட்டுக்கிட்ட தான இல்லாத ஆட்டம் ஆடுற.. இனி ஆடுவ நீயி? தலைய திருப்பீடுவேன் திருப்பி.. கெழவி” என்றவனுக்கு அத்தனை கடுப்பு.

“அய்யோ.. அய்யோ..‌ ஏ தண்டட்டிய புடுங்கிட்டானே.. ஏ ராசா போன பின்ன எம்மோட உசுரா இருக்கறது அதான” என்று ஒப்பாரியைக் கூட்ட,

“ஒன் சங்க புடிச்சுடுவேன் கெழவி, வாய அமுக்கு” என்று அருளும் கத்த,

“டேய் அருளு நா கண்ணீரும் கம்பலையும் சொல்லுதென் கேட்டுக்கோ.. ஏ தண்டட்டியவே புடுங்கிப்புட்டியே ஒனக்கு பொறக்கறது அம்புட்டும் பொட்டப் புள்ளையதென் பொறக்கும் பாரு..” என்று அவர் அடுத்த தலைமுறைக்கான விதையைப் பெயரனிடம் தூவிவிட்டபடி சாபமிடுவதைப் போல் சொல்ல,

“நீதான் அதுக்கு வழியில்லாம பண்ணிட்டியே கெழவி.. இதுல பெருசா சாபம் வுடுற” என்க, ஜீவா சப்தமாய் சிரித்துவிட்டான்.

ஜீவா, “காரியத்துல கூறியா இருக்கானுங்கடா” என்க,

“நீ என்ன முற்றும் துறந்தவனா? வந்துட்டான் கிண்டலடிச்சிட்டு” என்றவன்,

“என் பொண்டாட்டி உன் வீட்டுக்கு வந்தா, ஒ புல்லாக்கு, ஒனப்புத்தட்டு, கோப்பு, லோலாக்கு, குச்சி அம்புட்டையும் கழட்டு கடாசிடுவேன் பாத்துகிடு..” என்று மிரட்டலாய் சொல்ல, சற்று அடங்கினார் வண்ணக்கிளி.

ஷஷ்டி அவர்கள் பேச்சைக் கேட்கிறாள் என்று தான் அருள் சற்று சப்தமாய் பேசியது.

அவன் என்ன தான் அவனை இயல்பாகக் காட்டிக்கொண்டாலும் அவனுள் இருக்கும் அழுத்தங்கள் ஏராளம்.

ஷஷ்டி, அவன் மனைவியாகும் முன்னர் அவன் ஆருயிராய் நேசித்த, நேசிக்கும் காதல் பெண்.

அவளை அவனோடு அவன் இணைத்துக்கொண்டாலும் அந்த இணைப்பிற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளுள் இன்னும் இன்னும் தகர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

அவன் எண்ணம் முழுவதும் அவனின் பழைய ஷஷ்டியாய் அவள் அவனோடு இருக்க வேண்டும் என்பதே.

நிச்சயம் அவளின் தற்காலிக கூட்டில் இருந்து வெளியேறுவாள் மரகதவல்லியின் பேச்சைத் தாண்டிக்கொண்டு!

வண்ணக்கிளியை முறைத்துக்கொண்டு நின்ற அருளை ஜீவா தள்ளிக்கொண்டு சென்றான்.

அவர்கள் நகர்ந்ததும் மயூரன்,
“ஏன் ஷஷ்டி, நா ஒரு மூனு மருமகள எதிர்பார்க்கலாமா?” என்க,

கூச்சமோ வெட்கமோ அல்ல மயூரனின் பேச்சோ ஏதோ ஒன்றின் தாக்கம் ஷஷ்டியை சூழ்ந்துகொண்டு உள்ளூர நெளிய வைத்தது.

அதன் விளைவாக மயூரனின் செயலை தனதாக்கியிருந்தாள் அவள்.

மயூரனின் மண்டையில் பலமாய் கொட்டியவள், “மூடிட்டு போய் உட்காரு” என்றுவிட்டு மண்டப திண்ணையில் அவள் அமர,

“நா ஏன் வாய மூடனும். நீ தானடீ என்னோட பேசாம இருந்த? சும்மா வெளையாட்டுக்கு பேசுறதெல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சு இப்படி தான் இருப்பியா? பல்லக் கழட்டீடுவேன் பாரு” என்றவன் கோபம், அவளை இயல்பாக்கியது.

அதைவிட, அருளின் வார்த்தைகள் அவளுள் எதையோ நெகிழ்த்தி ஆசுவாசமடைய வைத்திருந்தது‌.

“அடி வேணுமா ஷஷ்டி உனக்கு? மாமாகிட்டவும் சரியா இல்ல, என்னோடவும் சரியா பேசல நீ.. என்ன ஓடுது உனக்குள்ள? கண்ட கஸ்மாலத்தையும் போட்டு உருட்டாத” என்றவன் வண்ணக்கிளி வரவும்,

“இந்த அப்பத்தா பெத்த குந்தாணிக்கிழவி சொல்லுறதெல்லாம் காதுல வாங்காத இனி” என்க, “ஆத்தே” என்று பதறி அவன் வாயை அடைக்க வந்தார் வண்ணக்கிளி.

“ஏன்டா அவள வம்புக்கு இழுக்குத. இங்கன அவ இல்லாட்டியும் சேதி அவ காதுக்கு போய் சேருற மாதிரி தன் ஏற்பாடு பண்ணியிருப்பா ஆங்காரி.. கம்முனு கெட சாமி” என்று மகளை அறிந்தவராகச் சொல்ல, ஷஷ்டியிடம் ஒரு வெற்றுச் சிரிப்பு.

“இல்லேனா மட்டும் உம் மகளுக்கு வாய் கொறவோ கெழவி” என்றாள் வெறித்த பார்வையோடு.

பாட்டியும் பெயரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

விஷயம் பெரியது என்று மட்டும் புரிந்தது மயூரனுக்கு.

“அதான் தெரிஞ்ச கதையாச்சே. இந்த அப்பாத்தா பேசுனதையெல்லாம் நீ கேட்டுக்கிட்டு வீட்டுப் பக்கம் வராம இருப்பியா?” என்க, வண்ணக்கிளி அதிர்ந்து போய் பெயரனைப் பார்த்தார்.

வண்ணக்கிளி, “ஏத்தா சஷ்டி.. என்னத்தடி நெனப்புல வெச்சுட்டு இருக்க. அன்னிக்கே கூறுகெட்டு பேசாதென்னு சொன்னனா இல்லியா” என்று பெயர்த்திய அவர் கடிய, அவள் மனதில் சில கருத்துக்கள் ஆழப் பதிந்துவிட்டதே.

ஷஷ்டி அமைதியாக இருக்க, “இவ ஆவமாட்டா சாமி, ஒ ஆத்தா கிட்ட சொல்லி வேப்பலை அடிக்கத் தான் செய்யனும்” என்று முறைப்பாகச் சொல்லவும், வண்ணக்கிளியை முறைக்கும் முறையானது ஷஷ்டிக்கு.

மயூரன், “ஷஷ்டி, நாரயண நாராயண” என்று நாரதர் போல் அவன் கையை வைத்துக் காட்ட, மலர்ந்து சிரித்தாள் பெண்.

அந்த சிரிப்பு ஒன்று போதாதா அவளைச் சார்ந்தவர்களுக்கு.

“அவ்வளவுதான் நான் இனி நிம்மதியா சென்னை போவேன்.” என்றவன் ஷஷ்டியின் அருகில் அமரவும்,

ஷஷ்டி, “நீ புல்லு மேஞ்சிட்டு வந்து ரெஸ்ட் எடுத்த.. என்னமோ நான் சோகமா இருந்தனால இங்க வந்த மாதிரி பேசுற” என்க,

“ரெண்டும் தான் காரணம்” என்றான் தோளைக் குலுக்கி.

“புல்லு மேய்க்கறவன்” என்று சிரிக்க,

“சொல்லிக்கோ, எனக்கென்ன” என்றவன் அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு வண்ணக்கிளியிடம் வம்பு வளர்த்தான்.

பெரியசாமி அவனை அலைபேசியில் அழைக்கவும், “அப்பத்தாவும் ஷஷ்டியும் இங்க தான் இருக்காங்க ப்பா.. நீங்க பாருங்க” என்றவன்,

வண்ணக்கிளியிடம், “வந்தவுக சொல்லிட்டு போக உன்னைய தேடுறாங்களாம் அப்பத்தா. அப்பா கூப்டார்” என்க,

“எவனா இருந்தாலும் நா இருக்கற எடத்துக்கு வந்து சொல்லிட்டு போகட்டும்..” என்று கழுத்தைத் திருப்ப,

“கெழவிக்கு கொழுப்பு பாரு” என்றவள்,

அவர் ஒட்டிய கன்னத்துத் தோலைக் கிள்ளியபடி, “ஒ தண்டட்டிய ஏ புருஷேன் கழட்டுனதுல தப்பே இல்லத்தா” என்றுவிட்டாள்.

அதில் கெழவிக்கு ஒரு மர்ம புன்னகை வேறு.

அலைபேசியில் பார்வை வைத்திருந்த மயூரனின் முகத்தில் யோசனை ரேகை.

புருவங்கள் நெறித்தவன் வந்திருந்த மின்னஞ்சலையே பார்த்தபடி இருக்க, “என்னடா?”
என்று அவன் தோளில் அடித்தாள், ஷஷ்டி.

“ம்ம்.. ஆப்பு ஆன் தி வே” என்றவன் கண்ணை மூடிக்கொண்டு பெருமூச்சொறிந்தான்.

நெறித்த புருவங்களில் ஒரு சிறு வலி. மூடிய கண்களுக்குள் காரணமின்றிய அவளின் பின்பம்.

விடையறியா கேள்வியாய் அவன் மனதிலேயே வட்டமிட்டு ரீங்கரித்துக் கொண்டிருந்தாள், லோபமுத்ரா.

அந்த ரீங்கார நாதம் தாங்காது தன்னிலை உணரமுடியா பெருந்தவிப்புடன் மயூரன்.

தலையை உலுக்கிக்கொண்டு தெளிந்தவன் மனது தெளிவில்லாது அலை பாய்ந்தது.

“என்ன சாமி? முகோம் கலக்கமா இருக்கு” வண்ணக்கிளி பெயரனின் முகம் பற்றிக் கேட்க,

சோகமாய், “உன் பேரனுக்கு மாத்தல் போட்டுடாங்க அப்பாத்தாவ்” என்றவன் அவர் தோளில் சாய்ந்துக்கொள்ள,

“ஆத்தே, எங்கன போட்டிருக்கானுவ? இந்த சர்காரு உத்தியோகமுனு வந்தானாவே ஊரூரா சுத்தராப்படி தான போடுவானுவ, எடுபட்ட பயளுவ” என்றவர் பொறும,

அவர் பாவனையில், “ஏய் கெழவி” என்று கலகலத்துச் சிரித்தாள் ஷஷ்டி.

வண்ணக்கிளியின் சடவும் பேச்சு அத்தனை இயல்பாக்கியது அவளை.

ஷஷ்டி, “எங்க ட்ரான்ஸ்பர் அப்பு?” என்க, மயூரனிடம் மௌனம்.

அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எல்லாம் அவன் மச்சக்காரியை நினைத்தான பெரும் தவிப்புகளின் கோர்ப்பு.

“டேய் கேட்கறேன்ல” என்க,

மயூரன், “கூடலூர்” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பது அவனுக்கே தெரியாத போது அவனை அவன் காதலை நோக்கிக் கட்டி இழுத்துச் சென்றது அவனின் பேராவல் பெருவெளி!


🌼
 
Top