Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 23
நாட்கள் அதுபோக்குக்கு வேகமாக ஓடியது பயிற்சி முடியும் தருவாயும் நெருங்கியது. பயிற்சி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருந்தது. அன்று சனிக் கிழமை இரவு சித்தார்த் அவனது அறையில் அவனது படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துத் தீவிர யோசனையில் இருந்தான்.
ஏனெனில் நாளை மறுநாள் திங்கள் கிழமை அவனுக்குப் பிறந்த நாள், திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாள். மதுவுடன் இருக்க ஒரு மனம் ஏங்கியது. ஆனால் பயிற்சியும் முடியும் தருவாய் அதாவது வியாழன் கிழமையுடன் பயிற்சி முடிய வெள்ளிக்கிழமை விழாவுடன் நிறைவடைகிறது. அதனால் ஒரு வாரமே இருக்க முழுவதுமாக முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்பலாமென ஒரு மனம் கூறியது.
ஒத்தையா இரட்டையா போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். இறுதியில் மனம் அவன் மதுவைத் தான் நாடியது. நாளைக்கு விடுமுறை தினம் தான, திங்கள் மட்டும் விடுப்பு எடுத்தால் இருநாட்கள் மதுவுடன் இருக்கலாமென நினைத்து நாளைக் காலைச் சென்னை செல்லும் இரயிலில் பதிவுசெய்துவிட்டான். பின் தான் நிம்மதியாகத் தூக்கம் வந்தது.
காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தவன் அவசர அவசரமாகக் கிளம்பி கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்தான். காலை 6 மணி இரயிலில் ஏறியிருந்தான் சித்தார்த். அவனவளைப் பார்க்க மனம் பரபரத்தது. அவளை இருக்கி அணைக்க, அவளுள் புதைந்து, கரைந்து கலந்துவிடத் துடித்தது.
அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டுமென நினைத்தவன் அவளிடம் தான் வருவதைக் கூறவில்லை. அவளை ஆனந்த ஆச்சிரியப்படுத்த (சர்ப்ரைஸ் பண்ண) நினைத்தவன் அவளிடம் பேசினாலே இரயில் சத்தமும், இரயில் நிலைய சத்தமும் அவளுக்குக் கேட்கும் என நினைத்து அன்று நண்பர்களுடன் வெளியே செல்வதாகக் குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு அவளிடம் பேசுவதை தவிர்த்தான்.
பயணம் முழுவதும் அவளுடன் சேர்ந்து இருக்கப்போகும் தருணத்தை நினைத்து, நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டு வந்தவனுக்கு கொஞ்சம் வெட்கம் கூட வந்தது. ஆண்களின் வெட்கம் அழகானதல்லவா! வெட்கத்தில் சிவந்த கன்னங்கள் அவனை மேலும் அழகனாகக் காட்டியது.
சென்னை எம்.ஜி.ஆர் சென்ரல் இரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் எண் 11ல் வந்து நின்றது அந்தத் தொடர்வண்டி. வண்டியிலிருந்து உற்சாகத்துடன் இறங்கினான் சித்தார்த். அதே நேரம் அதே இரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் எண் 2ல் நின்ற இரயிலில் ஏறிக்கொண்டிருந்தாள் மது அவளவனைக் காணவேண்டி கோயம்புத்தூர் செல்லும் வண்டியில்.
ஒரே இரயில் நிலையத்தில் இரு காதல்நெஞ்சங்கள் தங்கள் இணையை இரகசியமாகச் சந்திக்க எண்ணி, அவனிருக்கும் இடத்திற்கு அவளும், அவளிருக்கும் இடத்திற்கு இவனும் செல்ல வேண்டி ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு திசையில் பயணிக்க நினைக்க, காலம் அவர்களை இங்கயே சந்திக்க வைக்குமா? இல்லை இருவரின் ஆனந்த ஆச்சரியத்தை அதிரச்சியாக மாற்றுமா?
இரயிலிருந்து இறங்கியவன் வீட்டிற்கு செல்லும் முன் அவளுக்காக எதாவது வாங்க நினைத்து, அவளுக்குப் பிடித்தமானதை யோசித்துக்கொண்டே வெளியே வந்துகொண்டிருந்தான்.
அப்போது தான் மது கூறிய ஒரு பொருளை வாங்கிக் கொண்டு இரயில்நிலையத்திற்குள் நுழைந்த ஆதவனைப் பார்த்த சித்தார்த் ‘ஆது மாதிரி இருக்கு. இங்க என்ன பண்றான்?’ என் நினைத்தவன் அவனை அழைக்க, அவனுக்கோ அங்கிருந்த சத்தத்தில் காதில் கேட்கவில்லை.
மதுவை முன்னரே அனுப்பியிருக்க, இரயில் புறப்படும் நேரமும் நெருங்கியதால் ஆதவனும் விரைந்து செல்ல வேகமாக நடந்ததால், அங்குள்ள சத்தத்தாலும் ஆதுவும் சித்தார்த்தை பார்க்கவில்லை. அவன் வேகமாகச் செல்லச் சித்தார்த் இருந்த இடத்திலிருந்து ஆதவனை பிடிக்க இயலவில்லை. ஆதலால் ‘சரி எங்கோ போறான் போல, வீட்டுக்குப் போய் மதுவிடம் கேட்டால் தெரிந்துவிடும்’ என நினைத்தவன், மீண்டும் மதுவுக்கு என்ன வாங்குவது என்ற யோசனையோடே கிளம்பினான்.
மதுவும் ஆதவனும் சித்தார்த்தைக் காண கோயம்புத்தூரை நோக்கிப் பயணிக்க, ஜன்னலோரம் அமர்ந்து பின்னோக்கி செல்லும் மரங்களைப் பார்த்தவாறு அவள் பயணிக்க, மரங்களோடு சேர்ந்து நாமும் சற்று பின்னோக்கிச் சென்று காலையிலிருந்து என்ன நடந்தது எனப் பார்த்துவிட்டு வரலாம்.
காலையில் எழுந்ததிலிருந்து மதுவுக்கு எதுவுமே ஓடவில்லை. நாளை அவள் உயிராவனுக்கு பிறந்தநாள். நேற்று கேட்ட போதுகூட பயிற்சி முடியும் தருவாயில் இருப்பதால் முழுவதுமாக முடித்துவிட்டு தான் வருவேன் என அவன் கூறியிருக்க, இவளுக்குத் திருமணத்திற்கு பிறகு வரும் ஒரு நல்ல நாள் இருவரும் ஒன்றாக இருந்தால் நல்லா இருக்குமெனத் தோன்றிக்கொண்டே இருந்தது.
ஆதவனை அழைத்தாள். அவன் கைபேசியை எடுத்ததும் “ஆது! நாளைக்கு சித்தத்து பெர்த்டே டா”
“ஆமால நான் மறந்துட்டேன் நல்ல வேலை ஞாபகப்படுத்துன. எப்போ வரார்?”
“அவர் வரலயாம்டா”
“ஏன்?”
“வெள்ளிக்கிழமையோட டிரைனிங் முடியுதுலடா அதான் மொத்தமா முடிச்சுட்டு வரேனுட்டார்”
“அதுவும் சரித்தான்”
“எனக்கு அவர பார்க்கனும்டா”
“வீடியோ கால் பண்ணு”
“நேர்ல பார்க்கனும்டா”
“ஒரு வாரம் தான கொஞ்சம் பொறுடி வந்துருவார்”
“என்னால முடியாது. நம்ம போலாமா? சர்ப்பிரைஸ் பண்ணலாம்”
“அஹான்.. சர்ப்பிரைஸ். நடத்து நடத்து” எனக்கூற, வெட்கத்தில் சிரித்தவள்,
“போலாமாடா?”
“ம்ம்ம்..” என யோசித்தான்.
“என்னடா யோசிக்கிற?”
“கடைய பார்க்கனுமே! அதான்”
“ப்ளீஸ் டா”
“சரி நான் அப்பாக்கிட்ட கேட்குறேன்”
“சரி சரி கேளு. கண்டிப்பா வரணும்”
“என்னை விடு.. உன் வீட்டுல விடுவாங்களா? உன் அத்தை எதாவது சொல்லுமே?”
“மாமா கிட்ட கேட்டுப் பார்க்கனும்”
“சரி. நீ கேளு. நான் கடைய அப்பாக்கிட்ட பார்க்கச் சொல்றேன். பெரியப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்லுடி டிக்கெட் இருக்கானு பார்க்கலாம்” எனக்கூறி வைத்துவிட்டாள். காலையில் சாப்பிடும்போது இளங்கோவிடம் பேசினாள்.
“மாமா நாளைக்கு சித்தத்து பெர்த்டே. சித்தத்து வரலயாம். நான் போய்ப் பார்த்துட்டு வரட்டுமா?”
“அப்படியா! கடைய விட்டுட்டு நான் வரமுடியாதேம்மா”
“நான் ஆதுவ துணைக்கு கூப்பிடுறேன் மாமா. அவன் வருவான்”
“அப்படியா! சரிம்மா அவன் வந்தா போய்ட்டுவா. தனியாலாம் போக வேண்டாம்”
“சரிமாமா. ஆனா இதைச் சித்தத்து கிட்ட சொல்ல வேண்டாம். சர்ப்பிரைஸா இருக்கட்டும்” எனக்கூற சிரித்துக் கொண்டவர்.
“சரிம்மா” எனக்கூற, அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
மதியம் அவளை அழைக்க ஆதவன் வர, மதுவும் கிளம்பி ரெடியாக இருந்தாள். இருவரும் கிளம்ப ஆனந்த “இன்னாடி பொட்டியோட கிளம்பிக்கின? உங்கப்பன் வூட்டுக்கா போற?” என நக்கலாகக் கேட்டார்.
அவள் கிளம்புவதை அவரிடம் இப்போது வரைக்கு கூடக் கூறவில்லை. முதலில் அவள் சரியாகப் பேசுவதே இல்லை. என்ன சமையல் செய்ய வேண்டுமென எனக்கூறினால் செய்வாள் அதைத்தவிற இப்போது வரை வேற பேச்சுவார்த்தை இல்லை. அதனால் அவளும் கூறவில்லை.
“சித்தத்து வர சொன்னாங்க” எனக் கூறிவிட்டாள் அவரிடமிருந்து தப்பிக்கும் மார்க்கமாக.
“க்கூம்” எனச் சத்தம் மட்டும் கொடுத்து, என்ன ஏதுனு கேட்டுக்கொள்ளாமல் அவர் அறைக்குச் சென்றுவிட ஆதவனுடன் கிளம்பி வந்துவிட்டாள். இப்போது அவனுடன் சேர்ந்து அவளவனைக் காண ஓர் பயணம்.
பாதையும் தூரம்.. நான் ஒரு பாரம். என்னை.. உன் எல்லை வரை கொண்டு செல்வாயா?
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா பெண்ணே.. உன்னை நானும் விட்டுச் செல்வேனா?
தந்தை தந்த உயிர் தந்தேன்.. தாய் தந்த உடல் தந்தேன்.. உறவுகள் எல்லாம் சேர்த்த உன்னிடம் கண்டேன்!
மொத்தத்தையும் நீ கொடுத்தாய்.. ஆனால் முத்தத்திற்கோர் நாள் குறித்தாய்..
முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்.. முதல்முறை கண்ணில் வேர்த்தேன்..
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர்க்கொண்டேன்..
உன்னால் இருமுறை உயிர்க்கொண்டேன்..
சென்னை வந்த சித்தார்த்தோ கடைக்குச் சென்று அவளுக்காக ஒரு மோதிரத்தை வாங்கிக்கொண்டு அவளைத் தேடி ஆசையாக வந்தான். அவன் வீட்டுக்குள் நுழைய, ஆனந்தி தான் நின்றார் வீட்டில். சிந்து அவள் கணவருடன் மருத்துவமனை சென்றிருந்தாள்.
“சித்தார்த்து.. இன்னாய்யா இன்னைக்கு வந்துக்கின, நீ வரீனு உங்கப்பா கூடச் சொல்லல.. அவளும் ஒன்னியும் சொல்லல.. பெத்த ஆத்தானு ஒரு போனு போட்டுகினியா நீயி” என்றவர் அவன் பின்னால் மதுவைத் தேடினார். அவனைக் கூட்டிவரத்தான் சென்றிருப்பாளென நினைத்தார் போலும். அவனும் அதைக் கவனித்துக் கொண்டே,
“நான் யார் கிட்டயும் சொல்லலம்மா” என்றவனும் வீட்டிற்குள் மதுவைத் தேடினான். அவன் அம்மா சத்தத்திற்கே வந்திருக்க வேண்டிவள் தன் குரல் கேட்டும் இன்னும் வெளிவராமல் இருக்காளேயென.
“இன்னா அவள காணோம்?” என ஆனந்தியே ஆரம்பிக்க,
“தெரியல தூங்குவாளோ என்னவோ! நான் போய் பார்க்குறேன்” என அறையை நோக்கிச் செல்ல,
“அவ எங்க இங்கருக்கா.. நீ வரச் சொன்னனு சொல்லிட்டு அந்த ஓட்டல்கடைக்காரனோட ஊர்மேய போய்ட்டா போல. இன்னா நெஞ்சழுத்தம் பார்த்தியா?” எனப்பேச,
“அம்மா!” எனக் கத்தினான் சித்தார்த்.
“மெய்யாலுமேதாண்டா சொல்றேன். அந்த சீக்குக்காரி நீ வர சொன்னனு என்னாண்ட பொய் சொல்லிட்டு அவனோட தான் போனா. நீ என்னடான்னா என்னாண்ட வந்து கத்துற” எனக்கூறவும், ‘ஆது மட்டும் தான போனான் கூட மது இல்லையே அப்போ இவ எங்க போனா? காலையில பேசும்போது கூட சொல்லலயே’ என நினைத்தவன், அவளுக்கு அழைப்பு விடுக்க, அவளும் இரயில் சத்தம் கேட்கக் கூடாது என நினைத்து, போனை எடுக்கவே இல்லை.
ஆதவனுக்கு அழைக்க அவனும் அழைப்பை அணைத்துவிட்டு, “அண்ணா! கொஞ்சம் வெளிய வந்துருக்கேன்.. வேலை முடியவும் கால் பண்றேன்ண்ணா” எனக் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.
“போன எடுக்கலயா? எடுக்கமாட்டாடா.. அவனோட கொட்டமடிக்க போயிருக்கால”
“அம்மா! உனக்குக் கடைசியா சொல்றேன் இனி அவள பத்தி தப்பா பேசாத. அவ ஆதவனோட போயிருந்தாலும் தப்பான எண்ணம் அவங்களுக்கு இருக்காது. நீ எதையாவது தப்பா பேசாத. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இனி அவள பத்தி, அவ நடத்தைய பத்தி தப்பா பேசின நான் என்ன பண்ணுவேனே தெரியாது”
“சரிதாண்டா. என் வாய தான அடைப்ப சரி நான் கம்மினுருக்கே.. இம்மாம் பேசுறியே.. புருஷனு உன்னாண்ட சொல்லிகினு போனாளா உன் பொண்டாடி” எனக்கேட்க, தடுமாற்றம் தான் அவனுக்கு. அவனிடம் தான் அவள் எதுவும் கூறவில்லையே!
‘ஏண்டி நிம்மதியா உங்கூட இருக்கனும்னு லீவ போட்டு வந்தா.. இங்க ஒரு ஏழற இழுத்துவிட்டு எங்க போன நீ’ என மனதில் நினைத்தவன், அவரிடம் பதில்கூறாமல் மீண்டும் வெளியே கிளம்ப,
“பார்த்தீயா அவ பவுச.. இப்பவாது புரிஞ்சிகினு அவள அத்துவுட்டு வா.. நான் உனக்கு ரிச் பொண்ணா பார்த்துக் கட்டிவைக்கிறேன்” எனக்கூற, அங்கிருந்த தண்ணீர் குவளையை விட்டெறிந்துவிட்டு, முயன்றமட்டும் முறைத்துவிட்டு கடைக்குக் கிளம்பினான் தந்தையைப் பார்க்க.
கடைக்கு வந்தவனைப் பார்த்த இளங்கோவுக்கு அதிர்ச்சி. அதிலும் அவன் முகம் அத்தனை ரவுத்திரமாகச் சிவந்து இருந்தது.
“சித்தார்த்து.. வாப்பா.. இன்னாப்பா சொல்லிக்கினாம வந்திருக்க?” என்றார் அதிர்ச்சியாக.
“ஏன் சொல்லாம வரக்கூடாதா? மது எங்க? எங்க போனா அவ?” எனக் கோபமாகக் கேட்க,
“அது.. அது” என அவர் திணற,
“உண்மைய சொல்லுங்க.. அங்க அம்மா அசிங்கமா பேசுறாங்க அவளப்பத்தி” எனக்கூறவும், ஆனந்தி மேல அவ்வளவு கோபம் வந்தது இளங்கோவுக்கு.
“அவ கிடக்குறா வுடு. மதும்மா உன்ன பாக்கத்தான் கோயமுத்தூருக்கு போயிருக்கு. நீ இன்னாடானா இங்கன வந்து நிக்கீற” என வருத்தமாக அவர் கூற, இவன் முகம் பிரகாசமானது.
“அங்கயா போனா?”
“ஆமாப்பா அந்தாண்ட தான் போயிருக்கு. உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு என்னையும் சொல்லக் கூடாதுன்னுச்சு”
“சரிப்பா. நான் அங்கயே போய் பார்த்துக்கிறேன்” எனக் கிளம்பியவன் மீண்டும் வந்து “அம்மா மதுவ பத்தி அசிங்கமா பேசுறாங்க. இன்னைக்கு எனக்கு வந்த கோபத்துக்கு அடிச்சாலும் அடிச்சிருப்பேன். ஆனா பெத்த தாய அடிச்சுட்டானு பேச்சுவரும்னு அடக்கிட்டு வந்துட்டேன். இனியொரு வார்த்தை அவள பத்தி அவங்க தப்பா பேசினாங்கனா நல்லா இருக்காது. நீங்களே அடக்கி வச்சிக்கோங்க அதான் நல்லது. இல்ல என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்கவேண்டி வரும்” எனக்கூறி கிளம்பிவிட்டான்.
அவள் கோயம்புத்தூர் வரும்முன் அங்கு இருக்கவேண்டி விமானம் மூலமாக அங்குச் செல்ல முடிவெடித்து, கிடைத்த டாக்ஸியை பிடித்து விமானநிலையம் சென்றான். அவன் நேரத்து சரியாக அங்குக் கோயம்புத்தூர் செல்லும் விமானம் அடுத்து இருக்க, டிக்கெட் எடுத்துவிட்டு காத்திருந்தான். இருவரும் சந்திப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.