எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 20

S.Theeba

Moderator
தன் செல்ல மகன் வினு எங்கேயிருப்பான். நிச்சயம் அந்த கிரஷ்ஷைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகவே அவனைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால், அவளை மூன்று நாட்களாகக் காணாது எவ்வளவு தவிச்சுப் போயிருப்பான். அழுதிருப்பானே என்ற நினைவே அவளை ரொம்பவும் கலங்க வைத்தது.

காயத்திரியை அனுமதித்திருந்த அறைக்குள் அவளின் மகன் வினுவுடன் நுழைந்தான் தமிழினியன். அவனின் பின்னாலேயே அந்த நிர்வாகியும் பொலிஸ் அதிகாரியும் நுழைந்தனர். அவளைக் கண்டதும்”அம்மா” என்று கூவி அழைத்தான் அவளது குழந்தை. சோர்வுடன் படுத்திருந்தவள் "அம்மா" என்ற தன் மகனின் அழைப்புக் குரல் கேட்கவும் உள்ளம் பாசத்தில் தவிக்க சந்தோஷத்தில் கண்களைத் திறந்து பார்த்தாள். தமிழினியனின் கைகளைப் பிடித்தபடித் தன் மகன் நிற்பதைப் பார்த்ததும் "வினுக்குட்டி..." என்று தன் இடக்கரத்தை நீட்டி அழைத்தாள். உள்ளே வந்ததுமே அவள் அருகில் செல்ல முயன்ற குழந்தை அவளின் உடலில் போடப்பட்டிருந்த கட்டுக்களையும் பூட்டியிருந்த மருத்துவ உபகரணங்கள், வயர்களையும் பார்த்ததும் பயத்தில் தமிழினியனின் கைகளைப் பற்றியபடி நின்றுவிட்டான். எனினும் அவள் கைநீட்டி அழைக்கவும் மெதுவாக அவளருகே சென்றான். "அம்மா இது என்ன? ஏன் இப்படிலாம் இருக்கு?" என்று கேட்டான்.
“அம்மாவுக்கு ஒன்றுமில்ல குட்டி. அம்மா வழுக்கி கீழே விழுந்திட்டன். இதெல்லாம் சும்மா.. அம்மா நாளைக்கே குட்டிகூட விளையாடுவேன்” என்று அதற்குப் புரிகின்ற விதத்தில் ஆதரவாகவும் இதமாகவும் விளக்கினாள்.
"அம்மா நீ வரல. வினுக்குட்டி அழுதன்"
"ஓ செல்லக்குட்டி அம்மாவும் உன்னைக் காணல என்று அழுதன்." என்று கூறவும் அவள் பற்றியிருந்த கைகளில் குனிந்து முத்தமிட்டது குழந்தை. அவளும் தன் மகனின் கைகளைப் பற்றி மென்மையாக முத்தமிட்டாள்.

அந்த பாசம் பிணைப்பை அங்கு வந்திருந்தவர்கள் குழப்ப மனமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர். மகனுடன் பேசிவிட்டு நிமிர்ந்தவள் அப்போதுதான் அங்கே நின்ற நிர்வாகியைக் கவனித்தவள் அவரி டம் "ஐ ஆம் சாரி மேடம், நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. உங்களுக்கு ரொம்ப சிரமத்தைத் தந்திட்டேன். வெரி வெரி சாரி மேடம்."
"இட்ஸ் ஓகேமா. நாங்களும் பயந்திட்டோம். இப்ப நாட்டில் நடக்கிற சம்பவங்களை நினைச்சால் வேறு மாதிரித்தான் சிந்திக்கத் தோணுது. அந்த வகையில் நீங்க வேறு எதுவும் பிரச்சினை இல்லாமல் தப்பியதே நிம்மதி. உங்களுக்கு என்ன ஆச்சோ என்று ரொம்ப கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எப்போதும் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். அப்புறம் உங்க ஹஸ்பன்ட் இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தது உங்களுக்கு எவ்வளவு ஆறுதல்… ம்ம்… அவர் மீண்டும் வந்ததே ரொம்ப சந்தோஷம்." என்றார்.
அவர் ஹஸ்பன்ட் எனவும் அதிர்ந்து போனாள். கோபி வந்திருக்கிறாரோ என்று அங்கிருந்தவர்களுள் தேடினாள். ஆனால், அவன் இல்லை எனவும், அப்படியென்றால் அவர் யாரைக் குறிப்பிடுகின்றார் என்று குழம்பினாள். அவரோ தமிழினியனைப் பார்த்தபடியே பேசியதைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் என்ன இனியனைப் பார்த்தல்லவா என் கணவர் என்கிறார். ஐயையோ அவன் என்ன நினைப்பான் என்று பதறியவள் அதனை மறுப்பதற்கு முயன்றாள். அப்போது தமிழினியன் கண்களால் ஏதோ சொல்லவும் புரியாமல் குழம்பினாள். அந்த நேரத்தில் மீண்டும் அவர் பேசவும் அவர் கூறவருவதை செவிமடுத்தாள்.
"உங்க ஹஸ்பன்டை வினுவுக்கு யாரென்றே தெரியலை. அப்புறம்தான் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பல நாட்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றும் அதனால்தான் அவனுக்கு அப்பாவைத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். பட் எனக்கு கொஞ்சம் மனசு தெளிவாகல. சின்னக் குழந்தை விடயம்.. அதுதான் நான் நேரில் வந்தேன். என்னவோ... இதுவரை நாளும் நீங்க பிரிஞ்சிருந்தது போதும். இனிமேலாவது பையனின் சந்தோஷத்துக்காக ரெண்டு பேரும் சண்டை போடாமல் ஒற்றுமையா சேர்ந்து வாழ்ந்தால் எனக்கும் சந்தோஷமே" என்று இருவருக்கும் பொதுவாகப் பேசினார்.

காயத்திரிக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் புரிந்தது. தமிழினியன்தான் ஏதோ காரணத்துக்காக அவரிடம் அப்படிக் கூறியிருக்கிறான். எனவே இப்போது அதனை மறுத்துப் பேசினால் அவனுக்கு சங்கடமாகிவிடும். அத்தோடு அவனை இவர்கள் தப்பாக நினைத்து விடுவார்கள் என்று சிந்தித்தவள் எதுவும் கூறாது பொதுப்படையாகத் தலையாட்டி வைத்தாள்.

கூடவந்திருந்த பொலிஸ் அதிகாரியும் அவளிடம் விசாரணைக்கென சில தகவல்களைப் பெற்றவர் அவனிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.

எல்லோரும் சென்றதும்,
"சாரி காயூ, நான்..." என்று அவன் பேச ஆரம்பிக்கவும், அவனது கால்களைக் கட்டிக் கொண்ட வினு
"அம்மா... அப்பாம்மா…. வினுவோட அப்பா வந்திட்டாரு. வினு அப்பா கூடத்தான் இருப்பன். தாரா, மினி அப்பா போல வினு அப்பாம்மா. அப்பா வினு கூட விளாட வருவிங்கதானே.." என்று அவனிடம் கேள்வி கேட்டது குழந்தை.
அதிர்ந்து போய் குழந்தையைப் பார்த்தனர் இருவரும்.
அப்போதுதான் அவனுக்கு தான் செய்த இமாலயத் தவறு புரிந்தது. பெரியவர்களைத் திருப்திப்படுத்தப் போய் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் மனதில் அப்பா தன்கூட உள்ளார் என்ற ஆசையை விதைத்து விட்டேனே. இப்போது போய் குழந்தையிடம் நான் உன் அப்பா இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். அந்தப் பிஞ்சு மனம் அதனைப் புரிந்து கொள்ளுமா? புரிந்தாலும் தான் அதனை ஏற்கும் பக்குவம் இல்லையே என்று தவித்தான். அந்தக் குழந்தையின் ஏக்கமான பேச்சு அவனைக் கட்டிப் போட்டது.

காயத்திரியைப் பரிதாபமாகப் பார்த்தான். அவளும்
"வினு, இது உன் அப்பா..." இல்லை என்று சொல்லப் போனாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவன், அவள் பேச்சை இடைமறித்தான். "வினுப்பையாவுடன் விளையாட இந்த அப்பா ரெடி" என்றான். அவனைக் கேள்வியாக நோக்கியவளிடம் கண்களால் அமைதியாக இருக்குமாறு சாடை காட்டினான்.

தொடர்ந்து தன் அம்மா, அப்பாவுடன் கலகலவெனப் பேசிக்கொண்டிருந்தது குழந்தை. இரவாகவும் வெளியே சென்று எல்லோருக்கும் உணவை வாங்கி வந்தவன் குழந்தைக்கு ஊட்டி விட்டான். வைத்தியரின் ஆலோசனைப்படி காயத்திரிக்கும் எளிமையான உணவை வாங்கி ஊட்டி விட்டான்.

அது மிகப் பெரிய வைத்தியசாலை. பல சத்திர சிகிச்சை நிபுணர்களைக் தன்னகத்தே கொண்டது. எனவே வெளியூரில் இருந்து நோயாளிகளுடன் கூட வருபவர்களுக்கென பல விடுதிகளும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்தவன் வினுவோடு அங்கே சென்று தங்கினான்.

மறுநாள் காலையில் காயத்திரியை சென்று பார்த்தவன் அவள் கூடவே இருந்து கவனித்தான். தொடர்ந்து வைத்தியசாலையிலேயே வினுவை வைத்திருக்காமல் அருகிலிருந்த பார்க்கிற்கும் வைத்தியசாலையில் இருந்த சிறுவர் பூங்காவிற்கும் அழைத்துச் சென்றான். நான்கு நாட்களில் காயத்திரி தேறியதும் அவளது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

தனது வீட்டிற்கு வந்ததுமே அவனை இழுத்துக் கொண்டு அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற வினு அங்கேயிருந்த சிறுமியிடம் இது என் அப்பா என்று அறிமுகப்படுத்தினான். அந்தத் தெருவிலிருந்து அவனுடன் கூட விளையாடும் நண்பர்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினான்.
வீட்டிற்கு வந்த அன்று மாலையில் வினு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் விளையாடச் சென்று விட்டான், காயத்திரி தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மனந்திறந்து அவனிடம் கூறினாள்.

அவளைக் கோபி முதலில் டெல்லிக்குத் தான் அழைத்துச் சென்றான். அங்கே இருவரும் நண்பர் ஒருவரின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அங்கிருக்கும் வரை கோபி அவள்மீது அன்பாகவே இருந்தான். அவள் கொண்டு சென்ற பணம் தீரவும் தனது சொந்த ஊரான திருச்சிக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கேதான் அவனது குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். நடுத்தர வர்க்கத்திலும் குறைவான வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் கோபி மீது கொண்ட காதலால் அந்த வசதியிலும் சந்தோஷமாகவே வாழ்ந்தாள்.

சில நாட்கள் அவளிடம் எல்லோரும் பாசத்தையே பொழிந்தனர். கொஞ்ச நாளில் இப்படியே எவ்வளவு நாள்தான் உன் பெற்றோரைப் பிரிந்திருப்பது அவர்களிடம் பேசுமாறு கூறினார்கள். தன் தாயைப் பற்றித் தெரிந்திருந்ததால் அவரிடம் பேசப் பயந்தாள். எனினும் கோபி வீட்டினரின் வற்புறுத்தலால் தாயாரைத் தொடர்பு கொண்டாள். ஆனால், தனக்கு மகள் என்று யாருமில்லை என்று கூறிப் பேச மறுத்துவிட்டார். கோபி வீட்டினரும் சகுந்தலாதேவியிடம் பேச முயன்றனர். ஆனால் தங்கள் மகள் செத்துவிட்டதாகவும் இனித் தொடர்பு கொண்டால் ஏதாவது காரணம் காட்டி ஜெயிலில் போட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார்.

அதன்பிறகுதான் கோபியினதும் அவனது வீட்டவர்களினதும் சுயரூபம் தெரியவந்தது. அவளைக் கல்யாணம் செய்தால் சொத்துக் கிடைக்கும், சகுந்தலா தேவியின் செல்வாக்கும் பயன்படும். அதன்மூலம் சொகுசாக வாழலாம் என்பதாலேயே அவளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அது கிடைக்காது எனவும் அவளைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். எவ்வளவு தான் கொடுமைப் படுத்தினாலும் இதுதான் தன் வாழ்வு என்று பொறுத்தே வாழ்ந்தாள்.
ஆனால், இவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் அதற்குத் தான் தகப்பனே இல்லை என்றும் யாருக்கோ இந்தக் குழந்தையை சுமக்கின்றாள் என்றும் பழி சுமத்தினான் கோபி. அந்த ஊரே அவளைத் தூற்றும்படி கதை பரப்பினான். இறுதியில் அவள் நான்குமாத பிள்ளை வயிற்றோடு இருக்கும்போது வேறு ஒருத்தியைத் தாலி கட்டி அழைத்து வந்துவிட்டான். அதற்கு அவனது வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். காயத்திரியை வெளியே துரத்தி விட்டான். அந்த ஊரில் யாருமே அவளுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவள் கெட்டுப் போனவள்.

அங்கிருந்து புறப்பட்ட அவள் தன் தாயைத் தான் தேடி வந்தாள். ஆனால், கோபி வீட்டினரின் பழிசொல்கூடப் பரவாயில்லை என்னும் அளவுக்கு அவளது தாய் அவளை அவமானப்படுத்தி வீட்டுப் படியேறக் கூட விடாது துரத்திவிட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் வீதியில் நின்றவளை ஆதரித்தவர் கங்கா அம்மா. இவளை சிறுவயது முதல் வளர்த்தவர். இவர்களின் வீட்டில் பலகாலம் வேலை செய்பவர். அவரே இவளை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான பெங்களூர் வந்தார். அங்கே வீட்டு வேலைகளுக்குச் சென்று அவளைப் பராமரித்தார். அக்கம் பக்கத்தினரிடம் காயத்திரியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகக் கூறிவிட்டார். வினு பிறந்தபிறகும் இருவரையும் தன்னால் முடிந்தவரை நன்றாகவே பார்த்து வந்தார். ஆனால், விதி தொடர்ந்தும் அவள் வாழ்வில் விளையாடியது. திடீரென நோய்வாய்ப்பட்ட கங்காம்மா வினுவுக்கு ஐந்து மாதம் இருக்கையில் தன்னுயிரை விட்டார். நோயில் படுத்திருக்கும் போதே தன் பேரில் இருந்த சிறு வீட்டை அவள் பெயருக்கு எழுதிவைத்து விட்டார்.

குழந்தையுடன் துணையின்றித் தவித்தாள் காயத்திரி. இருந்த ஒரே ஆதரவும் மறைந்துவிடவும் ஆதரவுக்கு யாருமின்றி தனியே தவித்தாள். அங்கே பழக்கமான ஒரு பெண்ணின் உதவியுடன் வேலை ஒன்றைத் தேடிக் கொண்டு இப்போது வரை வாழ்கின்றார்.

தன் கதையை அவள் கூறி முடிக்கவும் "ஏன் காயூ... அவ்வளவு கஷ்டத்திலும் உனக்கு எங்கள் நினைவே வரவில்லையா?" என்று வேதனையுடன் கேட்டான் தமிழினியன்.
"இனியா, உங்களை எப்படிடா நான் மறப்பேன். கோபி என்னைக் கெட்டவள் என்று சொன்னதற்கு அவன் ஆதாரமாகக் கூறியது என்ன தெரியுமா...? உங்கள் மூவரில்... மூவரில்... யாரோ ஒருத்தன்தான் இந்தக் குழந்தைக்குக் காரணம் என்று வாய் கூசாமல் சொன்னான். அந்த நேரத்தில் உங்களில் யாரின் உதவியை நான் நாடினாலும் நாளை அதனைத் தான் சொன்ன பழிக்கு ஆதாரமாக்கி விடுவான். என்னால் உங்களுக்கு எந்த அவமானமும் வரக்கூடாது என நினைத்தேன். அதுதான்டா காரணம்" என்றாள் மிகுந்த கலக்கத்துடன்.

மறுநாளே தமிழினியன் அவளை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டான். காயத்திரியின் வீட்டை வாடகைக்கு விடுவதற்கும் ஏற்பாடு செய்தான். வரமறுத்த காயத்திரியை சமாதானப்படுத்த பெரும் பிரயத்தனப்பட்டான். தான் பெங்களூரிலேயே இருந்து விடுவதாகப் பிடிவாதம் பிடித்தாள். ஆனால், அவளது தலையில் அடி பலமாகப் பட்டிருப்பதால் தொடர்ந்து அவள் ஓய்விலேயே இருக்கவேண்டும். அத்தோடு அடிக்கடி வைத்திய ஆலோசனையைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும். எனவே வினுவை வைத்துக்கொண்டு அவளால் தனியாக இருக்க முடியாது என்பதால் அவளிடம் கெஞ்சினான். அவள் பிடிவாதமாக இருக்கவும் அவளை அதட்டியே இங்கு அழைத்து வந்தான். ஆனாலும் தான் யார் வீட்டிலும் தங்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாள். எனவே புறப்படும் முன்னரே லக்ஷ்மனுக்குத் தகவல் தெரிவித்தவன் அவளைத் தங்க வைக்க வீடொன்றையும் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தான். அவன் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் அவளைத் தங்கவைத்தான். உதவிக்கு ஒரு அம்மாவை வீட்டோடே இருக்குமாறு ஏற்பாடும் செய்தான். தானும் அடிக்கடி அவர்களைப் போய் பார்த்து வந்தான். அங்கே செல்லும்போதெல்லாம் வினு இவனை அப்பா என்று பாசமாக அழைத்து அவனுடன் ஒட்டிக் கொள்வான். இதனைப் பார்த்து அங்கிருந்தவர்களும் இவனைக் காயத்திரியின் கணவர் என்றே தீர்மானித்தனர்.

காயத்திரியை அடிக்கடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளையும் பெற்று வந்தனர்.
 
Top