Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 25
முதலிரவுக்கு அலங்காரம் செய்தது போல அறை முழுவதும் சிவப்பு நிற இதய வடிவ பலூன்களும், கட்டிலில் இதய வடிவத்தைச் சிவப்பு ரோஜா இதழால் அலங்கரித்து, வாசனை மெழுகுவர்த்தியோடு அவ்வறையே இரம்மியமாக இருந்தது.
கதவைச் சாற்றிவிட்டு அவர்கள் பையை அங்கிருந்த அலமாரியில் வைத்துவிட்டு, அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கும் மதுவிடம் சென்றவன், பின்னிருந்து அணைத்து “அழகா இருக்குல” எனக்கேட்க, “ஆமா. நமக்கு இப்படியொரு கொடுப்பினை இல்லனு நினைச்சேன், ஆனா..” என்றவளுக்கு வார்த்தை தொண்டையை விட்டு வரவில்லை.
“ம்ம். நானும் நினைச்சேன். என்னோட முன்கோபத்தால எல்லாத்தையும் பாலாக்கிட்டேனோனு.. இன்னும் கொஞ்சம் நான் முயற்சி பண்ணிருக்கனுமோனு”
“இன்னைக்கு பழசு எதுவுமே வேணாம் சித்தத்து. பெர்த் டே அதுவுமா உன்கூட இருக்குற இந்தப் பொக்கிஷமான நிமிஷங்களை பழச பேசிப் பாலாக்க வேண்டாம்”
“ம்ம்” என்றவன் அவளைக் கட்டிலில் அமரச் செய்து அவள் மடியில் தலைவைத்துப் படுத்தான். அவள் கைத்தானாக அவன் தலையில் உலாவ ஆரம்பித்தது.
“இந்த ஒரு மாசமும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” எனப் படுத்தவாக்கில் திரும்பி அவளை முத்தமிட, அவளுக்கோ அமரும்போது சேலை விலகியிருக்க அவன் கொடுத்த முத்தத்தை வாங்கிக் கொண்டது என்னவோ அவளின் நாபிக்குழிதான். பெண்ணின் மொத்த உணர்ச்சியையும் தூண்டும் இடமல்லவா! கண்களை இறுகமூடி உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டவளின் கைகள் அவன் முடியை இறுக்கமாகப் பற்றி, வயிற்றோடு அமிழ்த்தியது.
அவள் பிடி தளர மெல்ல அவள் வயிற்றிலிருந்து முகத்தை எடுத்தவன், கைகளால் அவ்விடத்தை தடவினான். அவ்விடம் முழுவதும் ஊசி போட்டுப் போட்டு ஆங்காங்க சில இடங்களில் கன்னிபோய் இருந்தது. முதல் முத்தம் எதிர்பாராமல் கொடுத்தது தான் ஆனால் இப்போது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக ஆழமாகக் கொடுத்தான்.
ஊசியால் குத்திக் குத்தி மறுத்துப் போயிருந்த அந்த இடம்கூட மன்னவனின் இதழ் முத்தத்தால் சிலிர்த்தது. அவன் முகத்தைப் பற்றி இழுத்து தன் முகம் காணச் செய்ய, அவன் முகமோ கசங்கி இருந்தது.
“ஏண்டி கடவுள் உன்னை இப்படி கஷ்டப்படுத்துறார். எதுக்கு?” என்றவனின் கை இன்னமும் அவள் நாபியை சுற்றி வலம் வந்தபடியே இருந்தது.
“பழகிடுச்சு விடு சித்தத்து”
“இப்போ நானும் சேர்ந்து உன்னைக் கஷ்டப்படுத்துறேனோ?”
“அப்படி எல்லாம் இல்ல” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள் அமர்ந்தவாக்கிலேயே.
மது “சரி என்கிட்ட ஏன் ஊருக்கு வரேனு சொல்லல?”என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு,
“நீயும் தான் சொல்லல. சரி சொல்லு. என்ன திடீர்னு என்னை பார்க்க இங்க ஓடி வந்துருக்க?”
“உன் பிறந்த நாள் அதுவுமா உன்னை பாக்காம இதுவரை இருந்ததே இல்ல. இன்னைக்கு வரமாட்டனு சொன்னா எனக்கு கஷ்டமா இருந்துச்சு அதான் வந்தேன்” எனக்கூற, மணியும் பன்னிரண்டு ஆகவும், ஆதவன் கூறியது ஞாபகம் வர, அங்குள்ள குளிர்சாதனப் பெட்டியைப் பார்க்க, குட்டியாக ஒரு கேக் இருந்தது கூடவே “சுகர்ஃபிரீ” என்ற வசனத்துடன் கூடிய ஒரு சிறிய குறிப்பு துண்டும். இருவரும் சேர்ந்து அவன் பிறந்தநாள் கேக்கை வெட்டிச் சாப்பிட்டனர். அவளுக்காகவே செய்யப்பட்ட சுகர்பீரி கேக் என்பதால் அவளும் தாரளமாகச் சாப்பிட்டாள்.
அவன் அவளுக்காக வாங்கிய மோதிரத்தை அவள் விரல்களில் போட்டுவிட்டு, மோதிரத்துடன் சேர்த்து அவளுக்கும் முத்தம் பதித்தான்.
“இன்னைக்கு உங்களுக்குத் தான் பெர்த்டே சித்தத்து. எனக்கில்ல”
“ம்ம். ஆனா நான் உனக்காகத் தான் வாங்கினேன். அத நல்லா பாரேன்” எனக்கூற வாங்கி உற்றுப் பார்த்தாள். அதில் இதய வடிவத்துக்குள் எஸ் என்ற எழுத்தும் எம் என்ற எழுத்தும் வளைவான எழுத்துகளால் இருக்க, இரு எழுத்தையும் இணைக்கும் ஒரு மெல்லிய வளைவான கோட்டை ஒரு குட்டி குழந்தைபோல வடிவமைத்திருந்தனர்.
அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டது. அவளை அழவிடக் கூடாது என்பதற்காகவே,
சித்தார்த் “சரி எங்க என் கிப்ட்?” என விளையாட்டாகக் கேட்டான்.
“இல்லாம வருவேனா?” என்றவள் அவள் பையைப் போய் எடுத்தாள். உள்ளே உள்ள கிப்ட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“என்ன?” எனக்கேட்க,
“உனக்கு கிப்ட் பண்ணனும். ஆனா மாமாக்கிட்யோ.. இல்ல ஆதுகிட்டயோ எனக்கு பணம் வாங்க மனசு வரல..” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தலையில் அடித்தவன்
“சாரிடீ சாரிடீ.. உன் தேவைக்குனு நான் ஒன்னுமே குடுத்துட்டு வரலயே! எனக்கு தோனலடீ.. இதுவரை பழக்கமே இல்லாததால எனக்கு அந்த ஞாபகமே வரல.. சாரி சாரி மதும்மா” என அவள் முகத்தைத் தாங்கி இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தான்.
“ஓ.கே ஓ.கே எனக்கு ஒன்னும் தேவைப்படல சித்தத்து. இனிமேல் உன்கிட்ட அடிச்சு பிடிங்கிருறேன் பாரு. ஆனா இப்போ என்னோட கிப்ட்டா இருக்கனும்னு நினைச்சேன் அதான் இது பிரிச்சு பாரேன்”
எனக்கூற அதைப் பிரிக்க ஆரம்பித்தான். முழுவதுமாகச் சுற்றி உள்ள வண்ணக்காகிதத்தை பிரிக்க, அதில் அழகிய புகைப்படச்சட்டம் இருந்தது. ஆனால் புகைப்படம் வெள்ளைக் காகிதத்தால் மறைக்கப்பட்டு இருக்க அவளைப் பார்த்துக் கொண்டே அந்த வெள்ளைக் காகிதத்தையையும் பிரிக்க, உள்ளே சித்தார்த் அழகிய குழந்தையை ஒரு கையில் ஏந்தியபடி, மறுகையால் அவளை அணைத்து பிடித்திருப்பது போல அவளே வரைந்திருந்தாள்.
அதைப் பார்த்தவன் எப்படி உணர்ந்தானெனத் தெரியவில்லை, ஆனால் அந்த முன்கோபியின் கண்ணிலிருந்து வடிந்தது கண்ணீர். அவளே அதைத் துடைத்துவிட இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனுக்கு இப்போதே அவளை ஆட்கொண்டுவிடும் வேகம், கையில் உள்ள போட்டோவை அங்கிருந்த மேஜையில் வைக்க, போட்டோ பட்டு அங்கிருந்த இசைஒலிப்பான் பாட ஆரம்பித்தது மெல்லிய இசையாக.
ஆதி அந்தம் தொட்டு.. மீதம் மிச்சம் இன்றி.. சேர்ந்தால் அது ஆலிங்கனம்!
அச்சம் வெக்கம் விட்டு.. அந்தரங்க பூஜை செய்தால் அது ஆராதனை..
இங்கே கெடாத கோலங்கள்.. நீ போடும் தாளங்கள்..
என் தேகம் இன்னும் தாளாது பூவை பூ.. வினோமா!
ஹை ராமா ஓர் வாரமாய் கண் மூட வில்லை உன் நியாபகமாய்..
கண் தூங்காமல் வாடும் நாட்களில் பூங்காற்றை நீ தூது வீடு..
அன்பே தென்றல் தீண்டிடாத தேகம் இது!
என்னை நூல் ஆடை போலே சூடும் நேரம் இது!
எனப் பாடல் ஒலிக்க, மோகமும், காதலும் கூட வெட்கமும், ஆடையும் பறந்தோட இனிமையாய் ஒரு ஆலிங்கனம் நடந்தேறியது.
காலையில் எழும்போதே அவன் கண்களில் பட்டது அவளது அழகிய குழந்தை முகம். அவனது ஆசையே அதானே தினமும்பொழுது விடிவதும், முடிவதும் அவள் முகத்தில் தான் என்பது. இன்று அவன் விருப்பப்படியே விடியச் சந்தோஷத்தில் மேலும் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு படுத்திருந்தான்.
அவனது இறுக்கத்தில் கண்விழித்தவள் அவனைப் பார்த்து மீண்டும் ஒரு முறை “ஹாப்பி பெர்த் டே சித்தத்து” என அணைத்துக் கொண்டவள், மெல்ல எழுத்து சென்று தன்னை சுத்தப்படுத்திவிட்டு வந்தாள். அவனும் தன்னை சுத்தம் செய்து கொண்டு அறைக்கே தேநீர் வரவழைத்து இருவரும் பேசிக்கொண்டே அந்த இனிமையான காலைப் பொழுதைத் தேநீருடன் கழித்தனர்.
மது “இன்னைக்கு எங்க போகலாம்?”
சித்தார்த் “எதே வெளிய வா? என்னத்துக்கு?”
“கோயம்புத்தூர் சுத்திப்பார்க்க?”
“அடியேய் நான் இன்னும் உன்னையே சரியா பார்க்கலடீ”
“ச்சீ டர்ட்டியா பேசாத”
“என்ன என்னடீ டர்ட்டி?” என அவன் எகிறிக்கொண்டு சண்டைக்கு வர அவளும் அவனுக்கு ஈடாக அவனிடம் மல்லுக்கு நின்றாள்.
“இப்போ என்னை சுத்திப் பார்க்க கூட்டிட்டு போவியா? மாட்டியா?” எனக்கோபமாகக் கேட்க, எழுந்து அவளை அணைத்துக்கொண்டவன்,
“நான் உன்னை பார்ப்பேனாம், நீ என்னை பார்ப்பீயாம்..” என இழுக்க,
“நம்மள ஊரே பார்க்குமா?”
“ஏய்”
“எனக்கு தெரியாது.. இன்னைக்கு வெளிய கூட்டிட்டு போற” என எழுந்து குளிக்கச் செல்ல அவனும் எழுந்து அவளுடனே நுழைந்து கொண்டான்.
நிமிடங்களில் முடியவேண்டிய குளியல் மணிக்கணக்கில் நீண்டு, இருவரும் வெளியேறிக் காலை உணவை முடித்துக் கொண்டு, அன்று முழுவதும் கோயம்புத்தூரில் காதல் பறவைகளாக வலம் வந்தனர். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். அவள் பார்வையிலேயே அவள் ஆசையை நிறைவேற்றி வைத்தான்.
அவன் கையைப் பற்றிக்கொண்டு ஆசையாகச் சுற்றினாள். இனி இந்தத் தருணங்கள் அனைத்தும் கிடைக்காது என உணந்தது போல அவனுடன் மேலும் மேலும் ஒட்டிக்கொண்டு சுற்றினாள். தானே அவனை எட்ட நிறுத்தப்போவதை அறியாமல் அவனை நொடி நேரம் கூடப் பிரியாமல் அவனுடனே இருந்தாள்.
மாலை சரியான நேரத்துக்கு அவளை இரயில் நிலையம் கூட்டி வந்தான். அவர்களுக்காகவே காத்திருந்தான் ஆதவன்.
ஆதவன் “கரெக்ட்டா வந்துட்டிங்களே! இப்போ தான் கால் பண்ண நினைச்சேன்”
மது “சாப்பிட்டியா ஆது”
“ஹ்ம்ம் ஆச்சு மது. மாமா ஆக போறேன்ல அதான் இன்னும் நிறைய சாப்பிட்டேன்”
சித்தார்த் “அல்ரெடி மாமாவா ஆயிட்டடா வேணும்னா கொஞ்சம் பொறு ஐஞ்சு நாள்ல திரும்பி வந்து தீயா உழைச்சு உனக்கு சித்தப்பா போஸ்ட் வேணா குடுக்குறேன்” எனச் சிரித்துக்கொண்டே கூற, அவன் கைகளில் அடித்தாள் மது.
“சும்மா இரு சித்தத்து. என்னடா மாமானு சொல்ற? என்ன விஷயம்?” எனச் சித்தார்த்திடம் ஆரம்பித்து, ஆதவனிடம் முடித்தாள்.
“அதுவா.. அது அகிலா திரும்ப மாசமா இருக்கா. அம்மா இப்போ தான் சொன்னாங்க. அதை தான் சொல்ல வந்தேன். ஆனா உன்புருஷர் என்னை சித்தப்பனா ஆக்குறதுல தீவிரமா இருக்காரு” என அவனும் கூறிச்சிரிக்க, அவளும் வெட்கத்தை மறைத்து,
“ஹே! சூப்பர்ல நான் திரும்ப அத்தை ஆக போறேன்” என முதலில் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தவளுக்கு சித்தார்த் என்ன கூறுவானோ என ஞாபகம் வரக் கலவரத்துடன் அவன் முகம் பார்த்தாள். ஆனால் அவள் நினைத்தது போல் அல்லாமல் அவன் முகமும் சந்தோஷமாக இருந்தது.
அவள் தன்னை கலவரத்துடன் பார்ப்பது புரிந்து “குழந்தைகள் மேல எனக்கு ஏண்டா கோபம் வர போகுது? நானும் திரும்ப திரும்ப மாமா ஆக போறேன் சந்தோஷமா இருக்கு. கூடிய சீக்கிரம் என்னை அப்பா ஆக்கிடுவியா?” எனக் குனிந்து அவள் காதருகில் கூற அவன் மீசை அவள் காதை உரசி, குறுகுறுக்க செய்து, அவள் முகத்தைச் சிவப்பாக்கியது.
ஆதவன் “சரிண்ணா டைம் ஆச்சு. நாங்க கிளம்புறோம். நீங்க வெள்ளிக் கிழமையா இல்ல சனிக்கிழமை வரீங்களா?”
“வெள்ளிக்கிழமை ஃபங்ஷன் முடியவும் கிளம்பிடுவேண்டா”
“சரிண்ணா பத்திரமா வாங்க” என்றவன் அவனை அணைத்துவிடுவிக்க, அவனைத் தனியாக அழைத்து வந்தான் சித்தார்த்.
“டேய் எதுவும் பிரச்சனையா? மது ஒன்னும் சொல்லல ஆனா அவள பார்த்தா எனக்கு அப்படி தான் தோனுது” எனக்கேட்க, மதுவை திரும்பிப் பார்த்தவன்,
“எனக்கு அப்படி இருக்குற மாதிரி தெரியலண்ணா, அப்படினாலும் நான் பார்த்துக்கிறேன், நீங்க வந்ததுக்கு அப்புறம் நீங்கத் தான் பார்த்துக்கிடனும்”
“ஹ்ம்ம். மே பீ எனக்கு போஸ்ட்டிங் சவுத் சைட் தான் இருக்கும்னு நினைக்கிறேன். எங்க போடுறாங்களோ அங்க ஷிப்ட் ஆகிட்டு லைஃப் லீட் பண்ண வேண்டியது தான். அவ என் பக்கத்துல இருந்தா நானே அவள நல்லா பார்த்துப்பேன். இப்போ தூரமா இருக்குறதால தான் என்ன பண்றாளோனு கொஞ்சம் பயமாவே இருந்தது. இன்னும் நாழு நாள் தானே வந்துருவேன்”
“சரிண்ணா.. ஆனா வேலைக்கு சேர்ந்து மதுவ உங்களோட கூட்டிட்டு போகும் முன்ன மாமா, அத்தைக்கிட்ட சமாதானம் ஆகிட்டிங்கனா அவளும் ஹேப்பியா ஆயிடுவா..” எனக்கூறவும், அவன் முகம் வேதனையில் சுருங்கியது.
“அன்னைக்கு நீ மட்டும் விஷயத்தை சொல்லலனா நான் என்னடா ஆயிருப்பேன்? மூணு நாள்ல உனக்கும், மதுவுக்கும் கல்யாணம்னு நீ சொன்ன போது கூட நான் நம்பலயேடா. உன் போன் காலுக்கு முன்ன கூட அந்த அஸ்வந்த் நாய்கிட்ட பேசிட்டு தாண்டா இருந்தேன். ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னானாடா?
நீ போட்டோ அனுப்பினபோது என் உயிரே என்கிட்ட இல்லடா. நீ சொன்னதால இன்னைக்கு மது என்கிட்ட, இதுவே நீயில்லாம வேற பையன பார்த்து என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிருந்தா.. இந்நேரம் நான் செத்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும்”
“அண்ணா!”
“உண்மை தானடா.. அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்? உனக்கே தெரியும் எனக்கு அந்த வீடும், அங்குள்ளவங்களும் எவ்ளோ முக்கியம்னு. அவங்கள தான என் குடும்பமா நினைச்சேன். அவங்க எல்லார் மேலயும் தான பாசத்தை வச்சேன். ஏன் என்னை எல்லாருமா சேர்ந்து ஒதுக்கி வச்சுட்டாங்க? நான் வேணாமா அவங்களுக்கு.. அவங்களாம் இல்லாம எனக்கு நான் அநாதை ஆயிட்ட மாதிரி ஃபீல் பண்ணேன் தெரியுமா? ஒரு ஐஞ்சு மாசம் அவங்க கூட இல்ல, அதுக்கு மொத்தமா என்னை விட்டுடுவாங்களா?”
“அண்ணா அவங்க அப்படி நினைக்கல.. ஆனா அந்தக் கட்டத்துக்கு அவங்க போக வேண்டிய நிலைமை”
“எங்கம்மா தான?” எனக்கேட்க, ஆதவன் கண்கள் மதுவை நோக்கியது. அவளோ அங்கு விளையாடிக் கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.
“அங்க என்னடா பார்க்குற? இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காதே உன்கிட்ட” எனக்கேட்கவும்,
“வாங்கண்ணா மது தனியா இருக்கா” என அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆதவன். ஒரு பெரும்மூச்சோடு அவனைப் பின்தொடர்ந்து வந்தான் சித்தார்த்.
இருவரும் இரயில் ஏறவும் இரயில் கிளம்பும்வரை நின்று அவர்களை வழியனுப்பி வைத்து அவன் பயிற்சிமையத்துக்கு சென்றான். இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீண்டும் தன்னவளிடம் சென்று விடும் மகிழ்ச்சியில் உற்சாகமாகச் சென்றான். மதுவும், ஆதவனும் சென்னைக்கு பயணித்தனர் அங்கு அவர்களுக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாது.
Last edited: