Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 26
சென்னையில் சிந்து வீட்டில் அவளின் மாமியார் தன் மகனிடம் ஆரம்பித்துவிட்டார்.
“இன்னாடா டாக்டர் சொல்லிக்கினாருனு தள்ளி இருக்கனும், ரெஸ்ட் எடுக்கனும்னு அம்மா வூட்டுக்கு போன உம்பொண்டாட்டி அங்கயே செட்டிலாயிக்கினாளா? வூட்டுக்கு திரும்பி வர தோனலயா அவளுக்கு” என மகனிடம் கேட்க அவனும்,
“இன்னைக்கு வர சொல்லிடுறேன் ம்மா” எனக்கூறி வேலைக்குக் கிளம்பியவன் அவளுக்கு அழைத்தான்.
சிந்து “ஹலோ என்னங்க.. வேலைக்கு ரெடியாய்யாச்சா?”
“ம்ம். ஆமா. இன்னா நீ இங்க வர ஐடியாலயே இல்லையா? அம்மா வேற நீ உங்கம்மா வூண்டாண்டக்கீறனு ஒரே பேஜாரு பண்ணுது. எனக்கும் நீயில்லாம போர்ராக்கீது. இன்னைக்கு வூட்டுக்கு வந்துரு” எனக்கூற,
“அங்க வந்த உங்கொம்மா என்னை வேலையா வாங்கும்ங்க”
“நீ வா நான் சொல்லிவைக்கீறேன்”
“ம்ம். சரி. வரேன்”
“சரி. வைக்கிறேன்” என அவனும் வைத்துவிட, இவள் அனைத்தையும் ஆனந்தியிடம் கூற,
“உம்மாமியாளுக்கு இன்னா நோவுங்கீறேன்? வேலை பார்க்க நோவுதோ.. வேலை பார்க்கவா நான் பெத்துவுட்டுருக்கேன். அதெல்லாம் ஒன்னியும் போவேணாம் இந்தாண்டையே இரு”
“அம்மா அவரு கூப்பிட்டாரு, சும்மா பேருக்கு இரண்டுநாள் அந்தாண்ட இருந்துட்டு வயறு நோவுதுனு வந்திருறேன், அப்பால அந்தாளும் அமைதியாகிரும். இல்லனா கிழவி எதாவது கன்பீஸாக்கிடுவா”
“சரி. கிளம்பு நான் கொண்டு வுட்டுட்டு, டாக்டர் வேலை பார்க்ககூடானு சொல்லிருக்காக, அவளுக்கு வயிறு நோவும் பார்த்து வச்சிக்கோங்கனு உன்மாமியாருக்கு உரைக்குற மாதிரி காதுல போட்டுட்டு வரேன்”
எனக்கூற, இருவரும் சிந்து வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். சிந்து வீட்டுக்குப் பக்கத்து வீடு தான் நகைக்கடைக்காரர் வீடு. அங்கு வாசலிலேயே நின்றிருந்த அந்த வீட்டுஅம்மா சரோஜா,
“இன்னா சிந்து. வூட்டுக்கு வந்துட்ட போல”
“ஆமாத்தை இன்னைக்கு தான் வாரேன்”
“ஆனந்தி சிந்துவ வுட்டுட்டு வா ஒரு சங்கதிக்கீது”
“ம்ம். வுட்டுட்டு போட்டு வாரேன் அத்தாச்சி” என்ற ஆனந்தியும், சிந்து மாமியாரிடம் நாசூக்காக மகள் ஓய்வில் இருக்க வேண்டுமெனக் கூறிவிட்டு சரோஜா வீட்டுக்கு வந்துவிட்டார்.
“இன்னா அத்தாச்சி? இன்னா சங்கதி?”
“உவ்வூட்டுல இன்னாதாண்டி நடக்குது?”
“எவ்வூட்டுல இன்னா.. ஒன்னுமில்ல.. எனக்கு ஒரு மட்டு இல்ல.. மருவாதி இல்ல.. எதுவுமில்ல எனக்கு”
“என் மகளத்தே உன்மகனுக்கு எடுக்குறேன.. ஆனா உம்மவேன் இப்படி பண்ணிப்புட்டான். சரி அத்தவுடு பழைய மேட்டரு, இன்னா உன்வூட்டுக்குள்ளாண்ட அந்த ஓட்டல்காரனை பொழங்கவுட்டுக்கின?”
“நான் இன்னா செய்ய அத்தாச்சி, அவளும் சட்டமா உள்ள குந்திக்கினா.. நானும் அவள வெரட்ட பாடா படுறேன் எங்க.. அவ்ளோட அவேனும் ஒட்டிக்கிட்டு வரான்”
“அதா ஆனந்தி, தெருக்குள்ள கலீஜா பேசுவருது.. கல்யாணம் கட்டிக வரை போனவன், கல்யாணத்தன்னைக்கு கூட உம்மவே தாலிய கட்டி வுட்டுப்புட்டு வர, அவன் கைய புடிச்சு உன் மருமவ அழுதா.. அத்த(அதை) நானே பார்த்தேன். இப்படி ஒன்னா கூத்தடிக்க நீயும் ஒத்துனு பேச்சு”
“எடு அந்த தொடப்பகட்டைய.. எவ சொன்னா நான் ஒத்துன? நான் விளக்குபுடிக்குறத எவ வந்து பார்த்துக்கினாளாம்? சொல்லு என்கிட்ட இன்னைக்கு கிழிச்சிடுறேன் அவள.. எம்மாதூரம் சொன்னேன் அந்தாளாண்ட.. அவன உள்ளவுடாதயானு உள்ளவுடாதயானு அந்தாளும் கேட்காம வுட்டுபுட்டான்.. என்னை பேசுறாள்களா..”
“அப்படி தான நடக்குது உவ்வூட்டுல.. இன்னைக்கு ரெண்டு பேரும் சோடி போட்டுகினு போறதயும் நானே பார்த்தேன்.. அப்போ பேசத்தன செய்வாளுக”
“அந்த சிக்கீக்காரி.. நெஞ்சழுத்தக்காரி.. அவ திமிருக்கு நானா ஆளு.. வரட்டும் அவ அப்பன் வீட்டுக்குத் தொறத்திவுடல நான் ஆனந்தி இல்ல.. உம்மவ தான் எனக்கு மருமவ அத்தாச்சி எழுதிவச்சிக்கோ நான் செஞ்சு காட்டுறேன்” எனச் சபதம் எடுத்துக்கொண்டு சென்றாள் ஆனந்தி.
முன்பே சரோஜா மகளைத் தான் சித்தார்த்துக்கு பார்த்திருந்தார் ஆனந்தி. நல்ல வசதியான குடும்பம். சிந்து திருமண சமயம் அவள் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்த சித்தாத்தைப் பார்த்துப் பிடித்து விட்டது அந்தப் பெண்ணுக்கு. அவள் அதை வீட்டிலும் கூற, அப்போது தான் ஆனந்தி தன் மகனுக்குப் போலீஸ் வேலை கிடைத்துவிட்டதென ஊரெல்லாம் கூறியிருக்க, அவர்களும் போலீஸ் மாப்பிள்ளையென ஆனந்தியுடன் பேசியிருந்தனர்.
சித்தார்த் வேலையில் சேரவும் திருமணம் எனப் பேசி முடிவு செய்து வைத்திருந்தார் ஆனந்தி. யாரிடமும் அவள் கலந்து கூடப் பேசவில்லை. தன் முடிவே இறுதியானது என நினைத்து அவர்களிடம் சம்மதமே கூறியிருந்தார். எல்லாம் கெட காரணம் மதுவும், அதற்குத் துணை நின்ற ஆதவன் மேலும் கட்டுக்கடங்காமல் கோபம் பொங்கியது.
அதே கோபத்தில் ஆதவனின் வீட்டுக்குச் செல்ல அங்க எழிலரசி மட்டுமே இருந்தார். ஆனந்தி வீட்டிற்குள் வர ‘இவங்க எதுக்கு இங்க வராங்க’ என நினைத்தவள்,
“வாங்கக்கா”
“ஆருக்கு ஆரு அக்கா? இந்த சொந்தம் கொண்டாடுற வேலை எல்லாம் என்னாண்ட வேணாம். உன் மவேன் கிட்ட சொல்லிப்புடு இனி அவேன் எவ்வூட்டு பக்கம் வரக்கூடாதுனு. எவ்வூட்டு ராங்கிக்கிட்ட அவேனுக்கு இன்னா பேச்சு?
வூட்டுக்குள்ளார வந்து கூத்தடிக்கிறான் உன் மவேன். இனி எவ்வூட்டாண்ட ஆராது வரட்டும் நாரடிச்சுடுறேன். ஊருல அத்தன சிறுக்கிகளுக்கும் எவ்வூட்டு சேதி தான் அவுலாக்கிடக்கு.
என் மூஞ்சு மேல கலீஜா பேசுறாய்ங்க சாவுகிராகிக. இது தான் உன் மவனுக்கு கடைசிதபா இனி வூட்டாண்ட வந்தா தொடப்பக்கட்ட பிஞ்சிரும் அவனுக்கு”
எனக் காட்டுகத்து கத்திவிட்டு, தன் வீட்டுக்கு வந்தவள் காளியாக அமர்ந்திருந்தார். அந்நேரம் இளங்கோ வீட்டுக்கு வர அவரிடம் ஒரு ஆட்டம் ஆடிவிட்டார் ஆனந்தி. அவரோ..
“இந்தாருடி மருமவ புள்ள நம்ம மவன பாக்கத்தே போச்சு. என்கிட்ட சொல்லிட்டு தான் போச்சு.. சித்தார்த்துக்கிட்ட நான் சொல்லிட்டேன். அவேனும் அங்க போய் அந்தப் புள்ளய பார்த்துட்டான். இப்ப திரும்ப வந்துக்கினுருக்குனு அவேந்தான் போன்போட்டு சொல்லிக்கினான்.
நேத்தீக்கு நீ பேசுனதுக்கே அவேன் அம்மாத்தரம் கத்தினான். சும்மா அந்தப் புள்ளைய பேசுற வேலை வச்சிக்கிடாத.. அத்து நம்மளுக்கு தான் நல்லதுக்குகில்ல.. புரியிதா?”
“நான் பேசுவேன்யா.. நான் பேசத்தே செய்வேன். வூட்டுக்குள்ளாண்ட மட்டும் அவ வரட்டும் அவள அப்பன் வூட்டுக்கு விரட்டிவிடல பாருயா”
“இந்தாடி இத்தனை தபா சொல்லிக்கினுருக்கேன் மறுக்கா மறுக்காத் துள்ளுற.. அவனுக்குக் கலியாணம் ஆகமுன்ன வேற, இப்போ அந்தப் புள்ளதே மருமவ புள்ள. அது இந்தாண்ட இருக்குறவரைதேன் எம்புள்ள எனக்கு.. எத்தாவது பேசி எம்புள்ள என்னயவுட்டு போனான் நான் மனுஷனா இருக்கமாட்டேன்”
“நான் ஏண்யா நம்மபுள்ளய விடப் போறேன், அந்த சீக்குக்காரிய விரட்டிவுட்டுட்டு நல்ல ரிச்புள்ளய பார்த்து கட்டிவைக்க போறேன்”
“அடியேய் கூறுகெட்டவளே.. உனக்கு கண்ணம்மாபேட்டை தாண்டி. கம்மினு இருந்தா இந்தாண்ட இரு, இல்ல அந்தபுள்ளைய எத்தாவது சொன்ன நீ மொத உங்கொப்பன் வூட்டுக்கு போனு நான் விரட்டிருவேன், இல்ல கிருஷ்ணாயில் ஊத்தி கொளுத்திவுட்டுருவேன். இனி எனக்கு என்மகன் தான் அவனுக்கு அப்பால தான் யாருமே. இனி உவ்வாய தொறந்த” என அவர் கழுத்தை இறுக்கி பிடித்துவிட்டார். ஆனந்தி கண்கள் கலங்கி, திணறும்போது தான் கழுத்திலிருந்து கையை எடுத்துத் தள்ளிவிட்டுவிட்டார்.
என்றும் தன் வார்த்தைகளை மட்டுமே கேட்கும் இளங்கோ இப்போ மகன் திருமணத்திற்கு பிறகு தன் பேச்சைக் காது கொடுத்தும் கேட்காததே அவருக்குக் கோபம் தான். ஆனால் இன்று அவரின் இந்த அவதாரம் ஆனந்திக்கு அதிர்ச்சி தான்.
இனி என்ன செய்வார்? தந்தை இல்லம் செல்ல வேண்டுமானால் எங்குச் செல்வது? அண்ணன் மகளை இந்தப் பாடு படுத்திவிட்டு அவர் வீட்டுக்கே செல்லமுடியுமா? இல்ல அவர் தான் இவர் செய்த காரியங்களை மன்னித்து, மறந்து உள்ளே அனுமதிப்பார்களா? ஆக அமைதியாக இருக்க வேண்டிய நிலை தான் ஆனந்திக்கு. ஆனால் அவரே நினைத்தாலும் அவர் வாய் அமைதியாக இருக்காதென்பது அனைவரும் அறிந்தவிஷயமே!
அவர் தள்ளிவிட்டுக் கீழே விழுந்த இடத்திலிருந்து அசையாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆனால் மனதிற்குள் பெரும் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. மகனைப் பற்றி நன்கு தெரியும், அவனுக்கு அவன் மதுவைத் தாண்டித் தான் அனைவருமேனு.
கணவன் துணை இருந்ததால் தான் ஆனந்தி இந்த ஆட்டம் ஆடினார். ஆனந்தியின் ஆட்டத்திற்கு முக்கிய காரணமே இளங்கோ தான். அவர் பொண்டாட்டியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடியதன் விளைவு தான் இவ்வளவும்.
திருமணமான புதிதில் அனைவரையும் போல ஆனந்தியை கண்டுகொள்ளாமல் அம்மாபிள்ளையாகவே இருந்தார் இளங்கோ. திடீரென அம்மா இறந்துவிட கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. அன்னை நிழலலே வாழ்ந்து பழகியவருக்குப் பெரும் இழப்பு தான். அதில் தான் அன்னைக்கு பதிலாக ஆனந்தியை பிடிப்பாகப் பற்றிக்கொண்டார். அன்று முதல் ஆனந்தி சொல்லே இறுதியானது.
சித்தார்த்தை வளர்க்க சிரமமாக இருக்கிறதெனக் குழந்தையை அவள் அம்மாவிடமே விட்டுவிட்டு வந்தபோது கூட, இளமையின் பிடியில் இருந்தவருக்கும் குழந்தையைவிட மனைவியே தேவையானவளாகிப் போனாள்.
பின் சிந்து பிறந்தபிறகு, ஆனந்திக்கு சிந்து தான் உலகமென மாறியது அதிசயத்திலும் அதிசயமே. இளங்கோவிற்கும் அவள் தான் உயிர் காரணம் சிந்து அப்படியே அவர் அம்மாவின் சாயல். அதனால் அவள் மட்டுமேயென இருவரும் இருந்துவிட, சிந்தார்த் அவர்களிடமிருந்து விலகியதே அவர்கள் உணரவில்லை சிந்து திருமணம் வரையிலுமே.
சிந்து சென்றபிறகு தான் தங்களுடன் கடைசிவரை இருக்கபோவது மகன் தானென உணர்ந்தனர். அப்போது தான் அவன் தங்களை விட்டுத் தொலைதூரத்தில் இருக்கிறானெனப் புரிந்தது. எட்டாக்கனி மேல் தானே நமக்கு ஆசை வரும். அதுபோல இப்போது இருவருக்கும் மகன் தான் வேணும் என்ற நிலை.
சிந்து திருமண விஷயத்திலேயே அண்ணன் குடும்பத்தின் மீது பலிவெறியில் இருந்த ஆனந்திக்கு இப்போது எதையாவது செய்து தன் மகனைத் தன்னுடன் இழுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள். அதற்கு அவர் உபயோகித்த விதம் தான் தவறு. அவர் செய்த தவறினால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டது. இரு காதல் உள்ளங்கள் வேதனையை அனுபவித்தது ஏன் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனந்தி விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருக்க, வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு இளங்கோ தான் சென்று கதவைத் திறந்தார். ஆது மதுவை விட்டுவிட்டு செல்ல, மது வீட்டுக்குள் நுழைந்தவள் கண்டது சுவற்றில் சாய்ந்து, தலை கலைந்து வித்தியாசமாக அமர்ந்திருந்த ஆனந்தியைத் தான். என்னவோ சரியில்லாத போல் இருந்தது.
என்னவெனக் கேட்க அவள் மனம் நினைத்தது தான் ஆனால் இளங்கோ “சாப்பிட்டியாம்மா?” எனக்கேட்க,
“ம்ம் சாப்பிட்டேன் மாமா. ஆது கடையில தான் சாப்பிட்டேன்”
“சரிம்மா போய் ரெஸ்ட் எடு. காலையில பேசிக்கலாம்”
“சரிங்க மாமா” என ஆனந்தியைப் பார்த்துக் கொண்டே தனதறைக்கு சென்றாள். ஆனந்தி இன்னும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த இளங்கோ “ஏய் ஆனந்தி ரூம்க்கு போய் தூங்கு” என மனம் பொறுக்காமல் கூறியும் கூட அசையல்லை. அந்த இடத்திலேயே கையில் தலையை வைத்துப் படுத்துவிட்டார்.
இளங்கோ அதற்கு மேல் இறங்கி வரவுமில்லை, வந்தால் மீண்டும் ஆனந்தியின் ஆட்டம் அதிகரிக்கும் என நினைத்திருப்பார் போலும். அவரும் அன்று கூடத்திலேயே ஆனந்திக்கு எதிராகச் சுவற்றை ஒட்டிப் படுத்துவிட்டார்.
காலையில் எழுந்து சமையல் செய்யவும் இல்லை. காலைக்கடனை மட்டும் முடித்துவிட்டு வாயிலில் சென்று அமர்ந்துகொண்டார். அன்று மது தான் எழுந்து காலைச் சமையலை செய்து மாமனார்க்கு கொடுத்தாள்.
“அத்தை சாப்பிடல மாமா?”
“அவளுக்கும் எனக்கும் லடாய். நீ எதுவும் அவளாண்ட பேச்சு குடுக்காதம்மா.. பசிச்சா போட்டு துண்ணுவா. சண்டை கிண்டை பிடிச்சா எனக்கு போனடிம்மா” என்றவரும் கடைக்குக் கிளம்பிவிட, வாசலிலேயே அமர்ந்திருந்தார்.
மதுவும் அவள் வேலைகளைப் பார்த்துக்கொண்டே இருக்க, ஆனந்தியின் கைபேசி மூணு நாழு முறை அழைத்து ஓய்ந்தது. அவர் எடுக்கவில்லை. மீண்டும் அழைப்பு வர அருகில் சென்று பார்த்தாள் சிந்துவின் பெயரைத் தாங்கி வந்திருந்தது அந்த அழைப்பு.
மனம் கேட்கவில்லை. கர்பமாக இருப்பவள் இத்தனை முறை அடிக்கிறாளேயெனக் கைப்பேசியை எடுத்துக்கொண்டு ஆனந்தியிடம் சென்றவள்.
“அத்தை.. சிந்து அண்ணி கால் பண்ணிட்டே இருக்காங்காங்க. இந்தாங்க” எனக்கொடுக்க, சிந்துவின் பேரைக் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழிப்பது போல் விழித்தவர், கைபேசியை இயக்கிக் காதில் வைத்தார்.
“ம்மா.. ம்மா.. எத்தனை தபா போனடிக்கிறேன் எங்க போன?”
“கவனிக்கலடி”
“ம்மா எனக்குக் காத்தலேலயிருந்து வவுருநோவுதும்மா.. அவரு வேலைக்குப் போய்ட்டார். நீ வரியா ஆஸ்பத்திரி போய்ட்டு வரலாம்” எனக்கூற, அவசரமாகக் கிளம்பி மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றனர்.