பலத்த இடியின் ஓசையை கேட்ட அனைவருக்கும் திக்கென்று இருந்தது. இதுவரை மழையில் கடற்பயணம் மேற்கொள்ளாத அவர்களின் மனதில் சிறு கிலி பிடித்தது.
காலையிலிருந்து மனதின் சஞ்சலத்தில் உழன்றுக் கொண்டிருந்த சக்தி, "மழை வந்தா நம்ம பயணத்திற்கு எதுவும் தடை வராதே அமர்..?" என சந்தேகத்துடன் வினவினான்.
ரங்காவும் யோசனையுடன், "இப்படி இடி, மின்னல்ன்னு இருக்கே. கண்டிப்பா மழை வர வாய்ப்பிருக்கு தான்" என்றான்.
மழையில் கப்பலை செலுத்துவது எவ்வளவு கடினம் என்று அனுபவத்தால் உணர்ந்திருந்த அமர், "அதான் நானும் யோசிக்கிறேன். காலைல இருந்தே வெயில் தான் இருந்தது. இப்ப தான் மழை வர மாதிரி இருக்கு” என்றவன் கையில் இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு, “நாம இன்னும் ரெண்டு மணி நேரத்துல பாண்டிச்சேரி போய்டுவோம். மழை வந்தாலும் நமக்கு பிரச்சனை இல்ல" என்றான். அவன் சொன்னதை கேட்ட சக்தியும், ரங்காவும் நிம்மதி அடைந்தனர்.
அவர்களின் நிம்மதி பறிப்போவது மட்டுமில்லாமல் அவர்களின் பயணமே தடைப்பட போவதை அறியாமல் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த "சமுத்திரா" பெட்டியை சுற்றி விலோ, ஷிவன்யா, ப்ரதீப் மூவரும் அமர்ந்திருந்தனர்.
விலோவின் அருகில் இருந்த ப்ரதீப், "அந்த பெயரை படிச்சது போதும். அதுல என்ன இருக்குன்னு பார்க்கலாம். திற விலோ" என்றான்.
பெயர் படித்ததற்கே விலோச்சனாவிற்கு உடலெல்லாம் சிலிர்த்தது. மேலும் அந்த பெட்டியின் மேல் வாள், மீன், கப்பல், கொள்ளைக்காரன் போன்ற படங்கள் அச்சிடப்பட்டிருந்ததையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், “உனக்கு எதுவும் வித்தியாசமா தோணலையா ப்ரதீப்..? ஷிவ் உனக்கு?” என்று இருவரையும் கேட்டுவிட்டு அந்த அறையையும் அவர்கள் அனைவரையும் ஒருமுறை சுற்றி பார்த்தாள்.
ப்ரதீப்பிற்கும் இடியின் ஓசை பகீரென்று தான் இருந்தது. இருந்தாலும் அதனை வெளி காட்டாமல், “எனக்கு எதுவும் தோணலயே விலோ. நீ இந்த பெட்டியை எடுத்துட்டு வந்த, அதுமேல சமுத்திரான்னு எழுதிருக்கு. அதை வாசிச்சிட்டு நீ பேபேன்னு முழிச்சிட்டு இருக்க” என்றான் சாதாரணமாக.
“அப்ப அந்த பயங்கரமான இடி?” என்று விலோவின் கேள்விக்கு,
“உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு விலோ. ரிசார்ட் உள்ள வரப்ப கால் ஸ்லிப் ஆனதுக்கே அவ்வளவு பேசுன. இப்ப இந்த இடிக்கும் இவ்வளவு யோசிக்கிற..” என்ற ஷிவன்யா பேசிக்கொண்டே அவளிடமிருந்து பெட்டியை வாங்கி திறக்க முயன்றாள்.
"வேணாம் ஷிவ். அதை திறக்காத" என விலோ தடுக்க,
ப்ரதீப், "இடி இடிச்சதும் பயந்திட்டியா விலோ.." என அவளை கிண்டல் செய்தவன், “இதை திறக்க முடியல..” என்ற ஷிவன்யாவிடமிருந்து பெட்டியை வாங்கி திறக்க முயற்சித்தான்.
“ஒருவேளை இதுக்குள்ள பேய் எதாவது இருக்குமோ..?” என்று ஷிவன்யா விலோவை பார்த்து பயமுறுத்தினாள்.
“ஹான்! இருக்கும் இருக்கும். நீங்க ரெண்டு பேர் தான் பக்கத்துல இருக்கீங்க. இதுக்கு மேல எதுக்கு தனியா அது வேற வரணும்” என்ற ப்ரதீப் பேசிக்கொண்டே, பெட்டியை சிறத்தையெடுத்து திறந்துவிட்டான். பல வருடங்களாய் திறக்கப்படமால் இருந்த பெட்டி என்பதால் ‘க்ரீச் க்ரீச்’ என்ற சத்தத்துடன் திறந்துக் கொண்டது.
விலோவிற்கு மனதில் பயமும் பதட்டமும் இருந்தாலும் 'அப்படி உள்ளே என்ன தான் இருக்கிறது' என்பதை அறியும் ஆவலும் இருக்க, ப்ரதீப் மற்றும் ஷிவன்யாவுடன் சேர்ந்து அந்த பெட்டியை எட்டி பார்த்தாள்.
மரப்பெட்டியை இரண்டாக திறந்ததும் இடப்பக்கம் சில குறிப்புகள் எழுதியிருக்க வலப்பக்கம் ஒரு வரைப்படமும் அதற்கு கீழ் பல வண்ணங்களில் காயின்கள் மற்றும் பகடை அடைக்கப்பட்டு இருந்தது.
அதனை பார்த்துவிட்டு அங்கிருந்த குறிப்புகளை பார்க்க தொடங்கினர்.
அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், மர்மங்கள், மாயங்கள் என அனைத்தும் நிறைந்த சாகச விளையாட்டான “சமுத்திரா”வை விளையாட நீங்கள் தயாரா?
சமுத்திராவின் இலக்கை நோக்கிய பயணத்தில் பதினைந்து குமிழ்களை கடந்து எல்லையை அடைய வேண்டும். எல்லையை அடைந்த பின், அவர் 'சமுத்திரா' என்கிற மந்திர வார்த்தையை உச்சரித்து நிறைவு செய்ய வேண்டும்.
அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில், இவ்விளையாட்டினால் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள் என அனைத்தும் மாயமாய் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
ஒருவேளை நீங்கள் விளையாட்டை தொடராமல் பாதியிலே நிறுத்தினாலோ? அல்லது உங்களால் விளையாட்டை முடிக்க முடியாமல் போனாலோ? இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே தொடரும் தொடர்கதையாகிவிடும்.
இவ்விளையாட்டை விளையாடி முடிவை காண வாழ்த்துக்கள்!!!”
என்று அச்சிடப்பட்டிருந்த குறிப்பை வாசித்து முடித்த மூவரும் அங்கிருந்த வரைப்படத்தை பார்த்தனர்.
அந்த குறிப்பில் சொல்லபட்டதை போல் அந்த விளையாட்டு பெட்டியின் வலப்புறத்தில் ஒரு வரைபடம் இருந்தது. அதில் பதினைந்து குமிழ்கள் இருந்தன. ஒவ்வொரு குமிழுக்கும் முறையே 1, 2 என்று வரிசையாக எழுதப்பட்டு கடைசியாக 15வது குமிழிற்கு மட்டும் “சமுத்திராவின் இலக்கு” என்று பதியப்பட்டிருந்தது.
"ஏதோ கேம் மாதிரி இருக்கு. அதுவும் அந்த குறிப்புகள் ரொம்ப பயங்கரமா இருக்கு", என விலோ சொல்லிக்கொண்டே அதனை கலக்கத்துடன் பார்த்தாள்.
ப்ரதீப், "நீ ஜுமாஞ்சி, ஜத்துரா படம் பாத்திருக்கியா விலோ? அதுலயும் இப்படி தான கேம் வரும்"
விலோ அதிர்ச்சியுடன், "அப்ப அதுல வர மாதிரி இதுலயும் ஏதாவது வில்லங்கம் வரும்னு சொல்லுறியா?"
ப்ரதீப் விலோவை பார்த்து உதட்டை பிதுக்கி, "தெரியலையே.." என்றான்.
அதுவரை அவர்களின் பேச்சினை கேட்டுக்கொண்டிருந்த ஷிவன்யா, "சினிமாக்காரங்க ஆயிரம் கட்டுகதைய வைத்துதான் படம் எடுப்பாங்க. அதெல்லாமா நம்புறீங்க? அண்ட் அந்த ரெண்டு படமும் புக்கை தழுவி தான் எடுக்கப்பட்டது. எல்லாமே மனுஷங்களோட கற்பனை தான்" தீர்க்கமான குரலில் ஷிவன்யா கூறினாள்.
“அண்ட். இப்பலாம் அந்த மாதிரி போர்ட் கேம்ஸ் அமேசான்லயே நிறைய கிடைக்குது. அதை அடிப்படையா வெச்சி நிறைய கேம்ஸ் எப்பவோ வந்துடுச்சி விலோ” என்று விளக்கவும் செய்தாள் ஷிவன்யா.
“நிஜமா வா சொல்லுற ஷிவ். அப்ப இதுனால ஒன்னும் ஆகாதா..” என்றவளுக்கு அமேசானை திறந்து அதில் இருந்த விளையாட்டினை காட்டினாள். ப்ரதீப்பும் அதனை வாங்கி பார்த்தான்.
“இருந்தாலும் இப்ப நம்மகிட்ட இருக்க விளையாட்டு அதுல இல்லையே..” என்ற விலோ, “நாம இதை மூடி வெச்சிடலாம்” என்றாள்.
ப்ரதீப், "நீ தான கேம் விளையாடலாம்னு ரொம்ப நேரமா கூப்பிட்ட? இதையே விளையாடலாம்" விளையாட்டு வினையாக போவதை அறியாமல் அவன் கூறினான்.
"இதுவா..? முடியவே முடியாது. நீயும் தான அந்த குறிப்புகளை படிச்ச..? நிச்சயமா எதாவது இருக்கும். இது வேண்டாம்" என்று கூறி விலோ அதனை மூட முயல,
ஷிவன்யா ஆர்வத்துடன், "லெட்ஸ் ப்லே விலோ. அப்படி ஒன்னும் இதுல இருக்காது. நான் தான் சொல்றனே" என விலோவை பார்த்து அழைத்தாள்.
"நோ ஷிவ். எதுவும் இல்லனாலும் பரவாயில்லை. நாம இத விளையாட வேண்டாம்" என்று உறுதியுடன் மறுத்தாள்.
"சரி சும்மா அந்த டைஸை பார்த்துட்டு வெச்சிடுறேன். பார்க்கவே சிவப்பு கலர்ல அழகாயிருக்கு" என்ற ஷிவன்யா அந்த பெட்டியில் இருந்த பகடையை எடுத்து பார்க்க, "பார்த்துட்டு வெச்சிடனும்" கண்டிப்பான குரலில் விலோ கூறினாள்.
மடிக்கணினியில் வேலை பார்த்தாலும் இவர்களையும் ஒரு பார்வை பார்த்த சக்திக்கு அவர்கள் அமர்ந்து பேசுவது மட்டுமே தெரிந்தது.
ப்ரதீப், "பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அத கொடு நான் உருட்டிவிடுறேன்.." என ஷிவன்யாவின் கையில் இருந்த பகடையை பறிக்க வந்தான்.
"ஏய்.." என்று ஷிவன்யா உணரும் முன் ப்ரதீப்பின் கைப்பட்டு ஷிவன்யாயின் கரத்தில் இருந்த பகடை விழ, மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். கீழே விழுந்த பகடை சில முறை உருண்டுவிட்டு மூன்று என்ற எண்ணில் நின்றது.
"ஏதுக்கு ப்ரதீப் இப்படி பண்ண? இதனால என்னென்ன வருமோ?" பீதியுடன் பகடையை பார்த்த விலோ நிமிர்ந்து ப்ரதீப்பை பார்த்து திட்ட தொடங்க,
"ஹே விலோ! நான் அந்த டைஸ அவகிட்ட இருந்து வாங்கி சும்மா உன்னை மிரட்டலாம்னு தான்.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
அந்த பெட்டியினுள் இருந்த நீலநிற காயின் தானாக நகர்ந்து, இரண்டு கட்டங்களை தாண்டி மூன்றில் சென்று நின்றது. மூவரும் வெறித்த பார்வையுடன் அதனை பார்த்தனர். ‘காயின் தானாகவே நகருமா?’ என்று யோசித்துக் கொண்டே சுற்றியும் பார்த்தனர். அந்த பெட்டியில் நீர் குமிழ் போல் இருந்த வட்டத்தில் எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது!
"சமுத்திர உலகத்தின் வழிகாட்டி உங்களை வரவேற்க காத்து கொண்டிருக்கிறான்..!"
அதனை படித்த மூவருக்கும் திக்கென்று இருந்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துவிட்டு அந்த அறையையும் சுற்றி சுற்றி பார்த்தனர்.
அவர்கள் இருந்த அறையின் வலப்புறத்தில் இருந்த கதவு லேசாக திறக்கப்பட, பயந்து போன விலோ ஷிவன்யாவை ஒட்டி அமர்ந்துக்கொண்டாள்.
சில நிமிடங்கள் கடந்தும் எதுவும் அங்கு விசித்திரமாகவோ வித்யாசமாகவோ தோன்றவில்லை. எனவே, “ச்ச காத்துக்கு கதவு ஆடிருக்கு..” என்ற விலோ ஆசுவாசமாக, ஷிவன்யாவும் ப்ரதீப்பும் அவளை பார்த்து சிரித்தனர்.
ஷிவன்யா, "நான் தான் சொன்னனே! எல்லாமே கற்பனை தான். இதெல்லாம் சும்மா. எனக்கு தெரிஞ்சு இதுல பேட்டரி இருக்கும். அதான் அந்த க்ளுஸ் வருது போல" என்று அந்த பெட்டியை தூக்கி அடியினில் பார்த்தாள். ஆனால் அங்கு பேட்டரி இருப்பத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை.
விலோ சந்தேகத்துடன், "நீ மூன்று போட்டதும் எப்படி அந்த காயின் சரியா நகர்ந்தது?"
சரியான கேள்வி தானே? அவள் மூன்று போடாமல் வேறொரு எண் போட்டிருந்தாலும் அந்த காயின் நகர்ந்திருக்க வாய்ப்பிருக்கு தானே! அது எப்படி என்ற கேள்விக்கு தான் ஷிவன்யா இடம் பதிலில்லை. அவர்கள் அனைவரையும் சுற்றி மீளமுடியாத மாயவலை பின்ன தொடங்கியதை அவர்கள் தான் அறியவில்லை!
ஷிவன்யாக்கு அடுத்து அந்த பகடையை யாரும் உருட்டவில்லை. அந்த காயின் எப்படி தானாகவே நகர்ந்தது என்று தான் மூவரும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
“நாம மறுபடி ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த முறையும் காயின் தானாகவே நகருதானு பார்க்கலாம்” என்று விலோ ஆலோசனையாக சொன்னாள்.
“பயம் போய்டுச்சி போல..” என்று ப்ரதீப் சிரித்தான்.
பத்திரிகையாளரான விலோச்சனா இயல்பிலே துணிச்சல் நிறைந்தவள் தான். அதனாலே தனியாக சென்று அந்த இருட்டு அறையில் இருந்த பெட்டியையும் தூக்கி வந்துவிட்டாள். பயம் ஒரு புறம் இருந்தாலும் இப்பொழுது இதனை முழுவதுமாக அறிந்துக்கொள்ளும் ஆவல் மேலோங்க பகடையை எடுத்து உருட்டிவிட்டாள்.
அதில் நான்கு விழுந்தது. இம்முறை, அந்த பெட்டியில் இருந்த சிவப்பு நிறத்தில் இருந்த காயின் தானாகவே நகர தொடங்கியது. அதன் பின் அந்த நீர் குமிழின் வடிவத்தில் மறுபடியும் எழுத்துக்கள் தோன்ற ஆரம்பமாகியது. அதனோடு அவர்களுக்காக காத்திருக்கும் சோதனைகளும் தொடங்க ஆரம்பமாகியது!
அதனையே கண்ணிமைக்காமல் பார்த்த மூவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. “இது எப்படி தானாவே நகருதுன்னு தான் புரிய மாட்டிங்குது..” என்று புலம்பிய விலோ அந்த குமிழுக்குள் மின்னிய எழுத்துக்களை வாசிக்க தொடங்கினாள்.
"பசியில் இருக்கிறான்
புசிக்க வருகிறான்"
விலோ வாசித்து முடித்ததும் ப்ரதீப், "எப்படியும் எதுவும் வரப்போகிறதில்லை. அதுக்குள்ள வருகிறான்! வரப்போகிறான்! வந்துக் கொண்டிருக்கிறான்ன்னு நம்மளவிட பயங்கரமா உருட்டுதே.." என்று கிண்டலுடன் சொன்னான். அதனை கேட்ட ஷிவன்யாவும் விலோவும் சிரித்துவிட்டனர்.
“இப்ப என்னோட டர்ன்..” என்று பகடையை எடுக்க கையை நீட்டிய பிரதீப் விலோவின் பின் புறம் பார்த்துவிட்டு அவளின் கைப்பற்றி, “விலோ..” என்ற அலறலுடன் அவளை அவன்பக்கம் இழுத்தான்.
அவனது அலறலை கேட்ட அனைவரும் அங்கு பார்க்க, ராட்சத முதலை ஒன்று கோர பற்கள் தெரிய தன் வாயை திறந்துக்கொண்டு மெல்ல அவர்களை நோக்கி ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது.
"சீக்கிரம் சீக்கிரம் இந்த சோபால ஏறுங்க" என்று முதலையை பார்த்த அதிர்ச்சியில் அனைவரும் பதட்டத்துடன் கத்திக் கொண்டே அங்கிருந்த சோபாவில் ஏறி நின்றுக் கொண்டனர்.
"இவ்வளவு பெரிய முதலை இங்க எப்படி வரும்? ஏற்கனவே கப்பல்ல இருந்திருக்கா?" சக்தி சொல்லிக் கொண்டிருக்க,
"கைஸ் இந்தப்பக்கம் பாருங்க" என்று ரங்கா கைகாண்பித்த இடத்தினில் பார்த்தனர்.
திடமான சொரசொரப்பு சதைகளையும் கூரான கோரபற்களையும் வேட்டையாட துடிக்கும் பளபளப்பு கண்களும் என நான்கு கால்களை தளத்தில் பதிந்து ஊர்ந்தவண்ணம் மேலும் மூன்று முதலைகள் அவர்களை நெருங்கி வேறொரு பக்கமிருந்து வந்துக் கொண்டிருந்தது.
அதனை பார்த்தவர்களின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. அவர்களின் இதயத்தின் ஓசை அவர்களுக்கே கேட்கும் அளவிற்கு துடித்துக் கொண்டிருந்தது.
இப்பொழுது சிந்திக்க நேரமில்லை என்று நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட அமரன், "இதுக்கு மேல இங்க இருந்தா விபரீதமா எதாவது நடந்துவிடும். எல்லாரும் எதிர்ல இருக்க மினி தியேட்டர்க்கு உள்ள போயிடலாம்" என்று இவர்களின் அறைக்கு நேரெதிரே இருந்த பெரிய அறையை கைக்காட்டினான்.
'ப்ரதீப் மட்டும் இழுக்கவில்லை என்றால் என்னவாகிருக்கும்..?' என்று நினைக்கவே பயந்த விலோ நடுக்கத்துடன் ரங்காவின் கையை இறுக்கமாக பற்றினாள். அவளின் கையை தட்டிக்கொடுத்து கொண்டே, "சரியா சொன்ன அமர். நான் விலோவை முதல்ல இங்கிருந்து கூட்டிட்டு போறேன். நீ ஷிவ்வை கூட்டிட்டு வா" என்று சக்தியை பார்த்தவன், "என்ன யோசிக்கிற சக்தி?" என்றான்.
இன்னமும் அங்கு நடந்துக் கொண்டிருந்ததை நம்ப முடியாத நிலையில் இருந்த சக்தி, "இதுங்க எப்படி இங்க.." என்று ஆரம்பிடித்தவனை முடிக்க விடாமல், "இப்ப அத யோசிக்க நேரமில்லை. நம்ம தப்பிக்க பார்க்கணும் சக்தி" என்று சொன்ன ரங்கா விலோவின் கையை பற்றி அந்த மினி தியேட்டரை நோக்கி ஓடினான்.
அவனின் வேகத்திற்கு விலோவும் ஓட, அவர்களை பிடிக்க முயன்ற முதலைகளிடம் சிக்காமல் சென்றவர்களை பார்த்த மற்ற நால்வருக்கும் பயத்தில் துடித்துக் கொண்டிருந்த இதயம் வெளியே வந்துவிடும் போல் இருந்தது.
இந்த பக்கம் இருட்டாக இருந்த அறைக்குள் வந்த விலோ மற்றும் ரங்கா உள்ளே சென்று கதவினை அடைத்துக் கொண்டனர். அவ்வறையின் வாசலில் சிறு விளக்கு ஒன்று மட்டும் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த அறையின் உள்ளே இருளே முழுவதுமாக ஆட்சி செய்துக் கொண்டிருந்தது. "உனக்கு எதுவும் ஆகலையே விலோ..?" என்று பார்வையால் அவளின் தலை முதல் பாதம்வரை ஆராய்ந்தவன் அவளை கட்டிக்கொண்டான். அவனின் அணைப்பில் இருந்தவள், “என..எனக்கு ஒன்றும் இல்லை ரங்ஸ்..” என்றவள் யோசனையுடன் அவனை பார்த்தாள்.
சிறு வெளிச்சத்தில்அவளின் யோசனை படிந்த முகத்தை பார்த்தபடி, "ஷிவ்வை அமர் பத்திரமா கூட்டிட்டு வருவான். நீ கவலை படாத.." என அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்தவன் கதவை லேசாக திறந்து அவர்களை பார்த்தான்.
"ஹ்ம்ம் ப்ரதீப் அடுத்து நீ போ. உன் பின்னாடி ஷிவ் வருவா. அவளுக்கு பின்னாடி நான் வரேன்" - அமர்.
ப்ரதீப், "நானா..? முடியாது முடியாது. முதல்ல போறவங்களை தான் முதலை பிடிக்கும். நீ போ" என அந்த நேரத்திலும் எதுகை மோனையுடன் அமருடன் வாதிட்டான்.
"சக்தி! நீ போறியா?" என்று அமர் கேட்க. சரி என்று தலையசைத்தவன் சைகையில் கதவை லேசாக திறந்து வைக்குமாறு அந்தப்பக்கம் இருந்த ரங்காவிடம் தெரிவித்தான்.
சோபாவில் இருந்து அவனின் வலதுக்காலை கீழே இறக்க, முதலைகள் அவனை நோக்கி வர தொடங்கியது. பின் காலை மேலே எடுத்துவிட்டு அமரனை பார்த்தான். அவனின் பார்வை புரிந்தவன் போல், ஷிவன்யாயின் கரங்களை இறுக்கமாக பற்றியவன் சோபாவிலிருந்து இறங்கி அமரன் ஓட தொடங்கினான்.
முதலைகள் அதன் கவனத்தை அந்த பக்கம் திருப்ப சக்தி ப்ரதீப்புடன் இந்தப்பக்கம் இறங்கி எதிரேயிருந்த அறையை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
ஒருவழியாக முதலைகளை இப்படி அப்படி என்று ஏமாற்றி நால்வரும் அந்த அறைக்குள் ஓடி வந்து கதவை அடைத்துக் கொண்டனர்.
ஷிவன்யாயை கட்டியணைத்த விலோ பரிதவிப்புடன், "உனக்கு எதுவும் ஆகலையே ஷிவ்?" என்று வினவ,
"இல்லை.." என்ற ஷிவன்யாயும் அவளின் நடுக்கம் நீங்கும்வரை விலோவை அணைத்து விடுவித்தாள்.
"எப்பா என்ன ஓட்டம்" என்ற அமரன் மூச்சுவாங்கியபடியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.
அவர்களின் ஓட்டம் இப்பொழுது தான் துவங்கியது! இன்னும் பல தூரம் ஓட வேண்டியிருக்கு என்று அறியவில்லை!
ப்ரதீப், விலோ, ஷிவன்யா மூவர் மட்டும், ‘இது அந்த விளையாட்டினால் வந்த விளைவோ..?’ என்று யோசிக்க தொடங்கினர்.
இதே சாதாரண நேரமென்றால், "முதலைய பார்த்ததும் எங்களையெல்லாம் விட்டுட்டு உன்னோட ஆளை மட்டும் கூட்டிட்டு வந்துட்ட..?" என ரங்காவிடம் சண்டைப் பிடித்திருப்பான் ப்ரதீப். ஆனால், ‘அவர்களால் தான் இந்த நிலையோ..?’ என்ற எண்ணத்தில் உளன்றுக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருந்தான்.
“இந்த முதலையெல்லாம் எப்படி இங்க வந்துச்சி..?” என்று ரங்கா யோசித்தப்படியே சக்தியை கேட்டான்.
"இந்த ரூம்ல இருந்து மேல போறதுக்கும், கீழ போறதுக்கும் வழி இருக்கு. நாம கீழ போய் மாஸ்டர் கிட்ட தான் விசாரிக்கனும் டா" என்று சொன்ன சக்தியை நெருங்கினாள் விலோ.
"ச.. சக்தி!" என்று மெல்ல அழைத்தவள் பயத்தினால் முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைத்துக்கொண்டே அந்த விளையாட்டினை பற்றி அவர்களிடம் கூறினாள். “அதுல இருந்து தான் முதலை வந்திருக்கணும்” என்று அவளின் சந்தேகத்தையும் சேர்த்துக் கூறினாள்.
கேட்டுக்கொண்டிருந்த ரங்கா, சக்தி சிரிக்க. சுவரில் சாய்ந்த வாக்கிலே கண்களை மூடியிருந்த அமரன் கூட சிரித்துவிட்டான். சிரிப்பவர்களை பார்த்த ப்ரதீப்பும் விலோ கூறியதற்கு வழி மொழிந்தான்.
“எப்படி எப்படி? விலோ எடுத்துட்டு வந்த பெட்டில முதல்ல காயின் தானாவே நகர்ந்துச்சி. இப்ப அதுல இருந்து முதலையும் வந்திருக்கா..? ம்ம்ம் அப்புறம்..?” என்று ரங்கா நக்கலாக கேட்டான்.
“நீ என்னை நம்பலயா ரங்ஸ்”
“கண்டிப்பா நம்பல விலோ. நீ மட்டும் தனியா எதாவது சொல்லிருந்தா கூட யோசிச்சிருப்பேன். நீயும் ப்ரதீப்பும் சேர்ந்து சொல்லுறது தான் டௌட்டா இருக்கு..” என்ற ரங்கா நம்ப மறுத்து தாடையை தடவியபடி கூறினான்.
“எதாவது ப்ராங் பண்ண ட்ரை பண்ணுறீங்களா டா. அப்படி மட்டும் இருந்துச்சி ப்ரதீப் நீ காலி டா..” என்று சக்தி உருமினான்.
அனைவரும் படித்து அவரவர்களின் துறையில் முன்னேறி கொண்டிருப்பவர்கள். அதனால் இதனை போன்ற விஷயங்களை அவர்களால் எளிதில் நம்பமுடியவில்லை.
“சரி டா. நீங்க எங்களை நம்ப வேணாம். உங்க நம்பிக்கை நட்சத்திரம் ஷிவன்யாவை வேணும்னா கேளுங்க..” என்று அவளை ப்ரதீப் கைகாட்டினான்.
"ஷிவ்! நீ சொல்லு.. இப்படி நடக்க அந்த விளையாட்டு தான் காரணம்னு நீயும் நம்புறியா?" - ரங்கா
குழப்பம் நிறைந்த விழிகளால் ரங்காவை ஏறிட்ட ஷிவன்யா, "எனக்கு சரியா சொல்ல தெரியல ரங்கா. இவங்க மாதிரி எனக்கும் சந்தேகம் இருக்கு. ஆனா நான்தான் முதல்ல அந்த விளையாட்டை ஸ்டார்ட் பண்ணேன். எனக்கு எதுவும் வரலயே?" என்று மற்றொரு சந்தேகத்தை கிளப்பினாள்.
‘அவள் கூறுவதும் சரிதானே! அவளுடைய ஆட்டத்திற்கு வராதது! விலோவினுடைய ஆட்டத்திற்கு மட்டும் எப்படி வரும்..?’ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. அதற்கான பதில் அவர்களுக்காக அங்கேயே காத்துக் கொண்டிருந்தது!
"தட்ஸ் இட். இது எந்த விளையாட்டும் கிடையாது! எந்த மேஜிக்கும் கிடையாது! நாம முதல்ல கீழ போகலாம்" என சக்தி அனைவரையும் துரிதபடுத்தினான்.
அமைதியாக இருந்த அமரன் விலோ, ப்ரதீப் மற்றும் ஷிவன்யாவின் முகத்தை பார்த்தான். அவனிற்கு
இவர்கள் விளையாடுவது போல் தெரியவில்லை. எனவே,
“கொஞ்சம் வெயிட் பண்ணு சக்தி” என்று சக்தியை நிறுத்தியவன்,
“என்ன நடந்துச்சு..? தெளிவா சொல்லுங்க.." சுவரில் சாய்ந்திருந்தவாறே கேட்ட நொடி, நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் ப்ரதீப்பும் விலோவும் கூறி முடித்தனர்.
சக்தி, "இதெல்லாம் நீ நம்புறியா அமர்?"
“தெரியல டா. இவங்க சொல்லுற அந்த பெட்டியை பார்த்தா தான் எதுவும் உறுதியா சொல்ல முடியும். அந்த பெட்டி வெளிய தான இருக்கு..?”
உயிர் பயத்தில் அனைத்தையும் வெளியே விட்டுவிட்டு வந்தவர்கள் "ஆம்" என்றனர். கதவின் துவாரத்தின் வழியே பார்த்த ரங்கா, “அங்கேயே தான் இருக்கு. ஆனா முதலையும் இருக்கு. நாம கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்” என்றான்.
சுவரில் சாய்ந்திருந்த அமரனுக்கு எதுவோ வித்தியாசமாக தோன்ற கண்களால் அவ்வறையை அலசினான். அங்கு கதவருகில் சிறு விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருக்க அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அப்பொழுது தான் அந்த அறையின் மாற்றத்தை உணர்ந்தவன், ‘இங்க சுவர் இருக்காதே! அப்படினா நான் எதுமேலயோ சாய்ந்து நின்னுட்டு இருக்கேன்..’ என்ற நினைப்புடன் அவ்வளவு நேரம் சாய்ந்து நின்றவன் சற்று தள்ளி வந்தான்.
“இந்த ரூம்ல ஏதோ சரியில்லை. இங்க எதுக்கு அந்த சின்ன லைட் மட்டும் எரியுது. ஒரு நிமிஷம். யாரும் அசையாதீங்க.." என்றபடி அந்த அறையில் இருந்த சுவிட்ச் போர்டு பக்கம் அமரன் சென்றான்.
“என்னடா சரியில்லை..?”
"என்னடா..?"
"என்னாச்சு அமர்..?"
என்று தன்னை நோக்கி வந்த கேள்விகளுக்கு "ஷ்ஷ்ஷ்.." என்று வாயினில் விரல்வைத்து அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்த அனைத்து விளக்குகளையும் ஒளிரவிட்டான்.
அதுவரை இருளினில் மூழ்கி இருந்த அந்த பெரிய அறை, விளக்குகளின் உபயத்தால் பளிச்சென்று தெரிந்தது. சட்டென்று வந்த விளக்கின் வெளிச்சத்தில் கூசிய கண்களை தேய்த்து சரி செய்தவர்கள் அமரனின் விழி போகும் திசையை நோக்கினர்.
உடல் சிலிர்க்க அனைவரின் கண்கள் மட்டுமின்றி அதரங்களும் அதிர்ச்சியில் விரிய, அங்கிருந்த மாமிச உருவத்தை இமைசிமிட்டாமல் நெஞ்சம் படப்படக்க வெறித்து பார்த்தனர்.