வந்து விடு வெண்ணிலவே
அத்தியாயம் - 1
அந்த பெரிய பங்களாவின் வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய விச்வநாதனும், தேவகியும் அந்த பங்களாவுக்குள் நுழைந்தனர். சோபாவில் அமர்ந்து இருந்த சிவராமன் இவர்களையும் பார்த்ததும் பார்த்ததும் எழுந்து அவர்களை நோக்கி விரைந்தார்.
“வா விஸ்வநாதா எப்படி இருக்க? இவ்வளவு நாள் கழிச்சு தான் உனக்கு எங்க ஞாபகம் வருதா? தேவகி நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் அண்ணா” என்றார் தேவகி.
“கமலம் இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு?”
“அடடா வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க? தேவகி நீ என்ன இப்படி இளைச்சிட்ட?” என விசாரித்தார் கமலம்.
அதெல்லாம் ஒன்னுமில்லை வயசாகிடுச்சு இல்ல அதான்”
“என்ன சாப்பிடற?” என வந்தவர்களை உபசரித்தார் கமலம்.
“அதெல்லாம் இருக்கட்டும் நீ இப்படி வந்து உட்காரு” என அவரை தடுத்தார் தேவகி.
“தேவகி ஆண்ட்டி உங்களுக்கா வயசாகிடுச்சு நோ சான்ஸ். இந்த உடான்ஸ் தானே வேண்டாம். அதெல்லாம் கிடையாது இப்ப கூட யாராவது உங்களை பார்த்தா மலருக்கு அக்கானு சொல்லுவாங்க என்றபடி வந்து அமர்ந்தான் சூர்யா.
சூர்யா சிவராமன் கமலம் தம்பதியின் மைந்தன்.
“சும்மா என்னை ஓட்டாதேப்பா. நீ எப்படி இருக்க பிசினஸ் எப்படி போகுது?”
“எல்லாம் நல்ல போகுது. வெயிட் பிரபு அண்ணி வெளிய போயிருக்காங்க. சுஜிதா காலேஜ்க்கு போயிருக்கா இதை தானே அடுத்து கேட்க வந்தீங்க” என்றான் சூர்யா.
“ஆமாப்பா உன்னோட குறும்பும் துறுதுறுப்பும் மாறவே இல்ல அப்படியே இருக்கு” என்றார் தேவகி.
“அப்புறம் ஆண்ட்டி வீட்ல மலர், பூஜா, சுருதி, ப்ரித்வி எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லாருக்காங்க சூர்யா. அப்புறம் நம்ம மலருக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம். வர்ற புதன்கிழமை கல்யாணம் நீங்க எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்” என்றார் விஸ்வநாதன்.
“என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க நாங்க இல்லாமலா? கண்டிப்பா நாங்க வருவோம். என்ன ஆண்ட்டி எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம மலருக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு பத்திரிகைய நீட்றீங்க” என்றான் சூர்யா.
“அதெல்லாம் இல்ல சூர்யா. திடீர்னு அமைஞ்ச சம்மந்தம். அவளை ஒரு கல்யாண வீட்ல பார்த்து பிடிச்சு போய் வந்தாங்க. ஒரே வாரத்துல கல்யாணம் பேசி முடிச்சாச்சு. அதான் ஒன்னும் சொல்ல முடியலை” என்றார் தேவகி.
“அதனால என்ன ஆண்ட்டி அதெல்லாம் பரவாயில்லை ஆனா மலர் இன்னும் டிகிரி கூட முடிக்கலை. அதுக்குள்ள எதுக்கு அங்கிள் அவளுக்கு கல்யாணம். அவ படிச்சு முடிச்சு அவ சொந்த கால்ல நிக்கட்டுமே” என தன் கருத்தை சொன்னான் சூர்யா.
“இல்லப்பா நான் முதல்ல மலருக்கு முடிச்சா தான் அடுத்தடுத்து என்னோட கடமைய என்னால சரியா செய்ய முடியும். அவளும் படிப்பு முடியட்டுமேனு தான் சொன்னா ஆனா அதுக்கு அப்புறம் எங்களை புரிஞ்சுக்கிட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா”
“சரி சிவராமா இன்னும் நிறைய பேருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியது இருக்கு. அதனால நாங்க கிளம்பறோம். கல்யாணத்துக்கு முதல்லயே வந்துடுங்க நீங்க தான் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்றார் விஸ்வநாதன்.
“கண்டிப்பா விஸ்வநாதா நாங்க எல்லாத்தையும் பார்துக்கிறோம். கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தலாம் கவலைப்படாம போய்ட்டு வா” என தன் நண்பனை வழியனுப்பினார் சிவராமன்.
“அம்மாடி மலர் அப்பாவுக்கு குடிக்க மோர் கொண்டு வாம்மா.”
“இதோ கொண்டு வர்றேன் அப்பா” என்றபடி உள்ளிருந்து வெளியே வந்தாள் மலர்.
அவள் கொடுத்த மோரை அருந்திவிட்டு “என்னடா முகமெல்லாம் வாடியிருக்கு”
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.”
“இல்ல மலர் எனக்கு தெரியும் என்னோட பொண்ணை.”
“அப்பா, அது வந்து உங்களை, அம்மாவை, தம்பி, தங்கச்சிகளை விட்டுட்டு போறது கஷ்டமா இருக்கு.”
“விட்டுட்டு எங்கமா போயிடப் போற, கல்யாணத்தை பண்ணிட்டு சந்தோசமா வாழத்தான போறே கவலைப்படாதே.”
“சரி அப்பா.”
“போ அக்கா நீ ரொம்ப மோசம், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா தானே எங்களுக்கு ரூட் க்ளியர் ஆகும். நீ இப்படி இருந்தா எப்படி?” என்றாள் பூஜா.
“அடிப்பாவி” என்றபடி மலர் பூஜாவை துரத்த சுருதியும் இனைந்து கொள்ள அங்கு கலகலவென சிரிப்பலை பரவியது.
விரைவிலேயே இந்த சிரிப்பு அடங்கி அந்த குடும்பம் பரிதவிக்கப் போவது அறியாமல் அவர்கள் ஆனந்தமாக இருந்தனர், விதி அவர்களை பார்த்து சிரித்தது.
அன்று கல்யாண மண்டபமே அலங்காரத்தால் ஜொலித்தது. மணமகள் அறையில் அலங்காரத்துடன் இருந்த மலரை அவளது தோழிகள் கேலி செய்து கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு தான் இவ நமக்கு சொந்தம் நாளைக்கு இவள் மாப்பிளையோட மாடிக்கு சொந்தம்.”
“ச்சீ போங்கடீ இப்படி எல்லாமா பேசுவீங்க?”
“ஆமாடீ அம்மா. உனக்கு என்ன கவலை? கல்யாணம் ஆகப் போகுது. படிக்கணும் எக்ஸாம் பாஸ் பண்ணனும்னு ஒரு கவலையும் இல்லை நல்ல வாழ்கைதான்டி உனக்கு. எனக்கும் இருக்காங்களே படிப்பு முடிஞ்சா தான் கல்யாணம்னு. கொடுத்து வச்சவ தான்டி நீ” என பெருமமூச்சு விட்டாள் நீபா.
“சிவராமா, கமலா வாங்க வாங்க. சூர்யா சுஜிதா எல்லாரும் அப்பொழுதே வந்துட்டாங்க. நீங்க என்ன இவ்வளவு லேட்.”
“அது ஒன்னும் இல்ல விஸ்வநாதா கமலா கிளம்புறா கிளம்புறா இவ்வளவு லேட்ஆக்கிட்டா” என்றார் சிவராமன் சிரித்துக் கொண்டே.
“அட நீங்க வேற சும்மா இருங்க நான் ரூம்ல போய் மலரை பார்த்துட்டு வர்றேன்” என்றபடி கமலம் மலர் இருந்த அறைக்குச் சென்றாள்.
“மலர் நீ இந்த அலங்காரத்துல ரொம்ப அழகா இருக்க.”
“தேவகி ஆண்ட்டி வாங்க, ஆண்ட்டி என்ன இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க?”
“அது ஒன்னும் இல்ல மலர், உங்க அங்கிள் மேக்கப் பண்ணி கிளம்ப லேட் ஆக்கிட்டாரு. அவருக்கு என்னமோ தான் தான் மாப்பிளைனு நினைப்பு.”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அவருக்கு என்ன ஆண்ட்டி குறைச்சல். அவரும் மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு தானே இருக்காரு.”
“ஆமாண்டி அம்மா நீ உங்க அங்கிளை விட்டுக்கொடுப்பியா?”
“அப்புறம் ஆண்ட்டி வித்யா அக்கா சுஜிலாம் வந்திருக்காங்களா?”
இல்லம்மா வித்யா வரலை. அவள் பையன் சுதிருக்கு உடம்பு சரியில்லை. அதனால அவள் வரலை. பிரபு ஆபீஸ் போயிருக்கான். சுஜியும், சூர்யாவும் எங்க கூட வந்து இருக்காங்க. சரி மலர் நீ ரெடி ஆகு” நான் தேவகியைப் பார்த்துட்டு வர்றேன் என்றார்.
சரி இந்த குடும்பத்தின் நெருக்கத்தை பற்றி ஒரு சிறிய முன்னுரை.
சிவரமனும் விஸ்வநாதனும் பள்ளி நாட்களில் இருந்து நெருங்கிய நண்பன். சிவராமன் தான் விஸ்வநாதனுக்கு தேவகியை மணமுடித்து வைத்தது. அதன் பிறகு தான் அவர்கள் நிலை சிறிது உயர்ந்தது. அதன் பின் சிவராமன் கமலம் திருமணம் நடந்தது.
சிவராமனுக்கும், விஸ்வநாதனுக்கும் குழந்தைகள் பிறந்தார்கள். இரு குடும்பகளும் மேலும் நெருங்கி சொந்தங்கள் போல பழகினார்கள்.
சிவரமனுக்கு தன் மகள் மலரை சூர்யாவுக்கு முடிக்க வேண்டும் என ஆசை. விஸ்வநாதனுக்கும் அதே ஆசை எனினும் இது இரு குடும்பங்களின் நட்பை பாதித்து விடக்கூடாது என இதனை தங்களுக்குள்ளேயே புதைத்து கொண்டனர். சவராமனுக்கோ விஸ்வநாதனின் எண்ணம் தெரியாது. சிவராமனுக்கோ விஸ்வநாதனின் எண்ணம் தெரியாது. எனவே இரு குடும்பங்களின் உறவும் நட்பாகவே இருக்கிறது.
மணவறையில் மணமகன் வந்து அமர்ந்து, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சிறிது நேரத்தில் மணமகள் வரவழைக்கப்பட்டாள். மலர் மாலைகளோடு தேவதையாக மணவடையில் வந்து அமர்ந்தாள். விஸ்வநாதன் மகளின் அழகை பெருமிதத்தோடு பார்த்தார்.
ஐயர் மந்திரத்தை கூறிக் கொண்டிருந்தபோது மண்டப வாசலில் போலீஸ் ஜீப் நுழைந்தது.
போலீஸை கண்டு விஸ்வநாதன் பதறினார்.
“கல்யாணத்தை முதல்ல நிறுத்துங்க” என்றார் அங்கு வந்த காவல் துறை அதிகாரி.
“என்ன சார் இது நல்லது நடக்கப் போற இடத்துல வந்து அபசகுணமா பேசுறீங்க?” என பதறியபடி அங்கு வந்தார் விஸ்வநாதன்.
“என்ன சார் நீங்க உங்க பொண்ணா அது? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது மாப்பிள்ளைய பத்தி தீர விசாரிக்க மாட்டீங்களா?” என கோபமாக கேட்டார் அந்த அதிகாரி.
“என்ன சார் சொல்றீங்க?” என பதறினார் விஸ்வநாதன்.
“உங்க பொண்ணுக்கு நீங்க பார்த்த மாப்பிள்ளையோட பேரு என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார் அந்த அதிகாரி நக்கலாக.
“அவரு பேரு திவாகர்” என்றார் விஸ்வநாதன் குழப்பத்துடன்.
“இல்ல சார் நீங்க நினைக்கிற மாதிரி அவனோட உண்மையான பெயர் திவாகர் கிடையாது அவன் பெயர் மணிகண்டன். அவன் இதுக்கு முன்னாடி ஏழு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி ஏமாத்தி இருக்கான். நானே இவனை ரெண்டு தடவை வேற கேஸ்ல அரஸ்ட் பண்ணிருக்கேன்” என்றவர் விஸ்வநாதனிடம் பழைய செய்தித்தாள்களை நீட்டினார்.
‘பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி காதல் மன்னன் கைது’ என அதில் திவாகரின் புகைப்படம் இருந்தது.
வந்திருந்த அதிகாரி மணிகண்டனை கைதி செய்தார்.
“இனியாவது பொண்ணுங்களுக்கு ஒழுங்கா விசாரிச்சு கல்யாணம் பண்ணுங்க” என்றுவிட்டு அங்கிருந்து சென்றார்.
திருமணம் நின்ற அதிர்ச்சியில் அனைவரும் இருந்தனர்.
“ஐயோ என் பொண்ணு கல்யாணம் நின்னுடுச்சே. நானே என் பொன்னு வாழ்க்கைய நாசம் பண்ணிட்டேனே இனி நான் என்ன பண்ணுவேன்” என ஆரற்றினார் விஸ்வநாதன்.
அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் நின்ற மலர் பதறி தந்தையிடம் ஓடி வந்தாள்.
“அப்பா விடுங்க எனக்கு ஒன்னும் இல்லப்பா. எனக்கு எந்த வருத்தமும் இல்ல நான் சந்தோசமா தான் இருக்கேன். நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பிச்சிட்டேன் அவ்ளோ தான் விட்ருங்க. உங்களுக்கு எதாவதுனா என்னால தாங்க முடியாது. டென்ஷன் ஆகாதீங்கப்பா” என அழுதாள் மலர்.
“இல்லம்மா உன்னோட வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன். நான் என் பொண்ணை எப்படி கரை சேர்க்க போறேன்? இனி அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா? சிவராமா பார்த்தியாடா என் பொண்ணை” என அழுதபடி மயங்கி சரிந்தார்.
“ஐயோ! அப்பா உங்களுக்கு என்னாச்சி கண்ணை திறந்து பாருங்கப்பா” என கதறினாள் மலர்.
கமலம் தேவகியை அணைத்தபடி நின்றார்.
சூர்யா வேகமாக ஓடி வந்து தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து அவரை எழுப்பினான்.
“அங்கிள் ஒன்னுமில்லை நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சுதேனு சந்தோசபடுங்க” என அவரை தேற்ற முயன்றான் சூர்யா.
“ஐயோ என் பொண்ணோட கல்யாணம் மணவறை வந்து நின்னுபோச்சே இனி அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலே கேட்காம போயிட்டனே?” என அழுதார்.
“டேய், விசுவநாதா முதல்ல அழறதை நிப்பாட்டு உன் பொண்ணோட கல்யாணம் நிக்கலை. குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றார் சிவராமன்.
“நீ என்ன சொல்ற சிவராமா?” என்றார் குழப்பமாக.
“டேய் சூர்யா போய் அந்த தாலியை எடுத்து மலர் கழுத்துல கட்டு” என தன் மகனுக்கு கட்டளை இட்டார் சிவராமன்.
“அப்பா நான் சொல்றதை கொஞ்சம்” என தயங்கினான் சூர்யா.
“நீ ஒன்னும் பேசாதே. போய் மலர் பக்கத்துல உட்காரு. நீ உண்மையாவே உன் அப்பா மேல மதிப்பு வச்சிருக்கேனா மலர் கழுத்துல தாலிய கட்டு” என்றார்.
தந்தையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் மலர் கழுத்தில் தாலியை கட்டினான் சூர்யா.
“டேய் சிவராமா நீ என் குடும்ப மானத்தை காப்பாத்திட்ட. நீ மட்டும் இல்லனா நான் இந்நேரம் குடும்பத்தோட தற்கொலை பண்ணிருப்பேன். நீ எனக்கு செஞ்ச உதவிய எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.” என நண்பனிடம் தன் நன்றியை தெரிவித்தார் விஸ்வநாதன்.
“நீ வேற சும்மா இருடா மலர் எங்க வீட்டு மருமகளா வர நாங்க குடுத்து வச்சிருக்கணும். எங்க தேடினாலும் இப்படி ஒரு நல்ல பெண் என் பையனுக்கு கிடைக்க மாட்டா. அதனால எல்லாம் நன்மைக்கேனு எடுத்துக்கோ” என்றார் சிவராமன்.
“இங்க பாருப்பா சூர்யா, நீ உங்க அப்பா வார்த்தைக்காக தான் என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்கேன்னு தெரியுது ஆனாலும் ஒரு தகப்பனா நான் சொல்லறது என் கடமை அவளை கண் கலங்காம பார்த்துக்கோ” என்றார் கெஞ்சலாக.
“கவலைப்படாதீங்க அங்கிள் இனி மலர் என் பொறுப்பு என் கடமைய நான் சரியா செய்வேன்” என்றான் சூர்யா.
“சரிசரி அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல எல்லாரும் வாங்க சாப்பிட போகலாம்” என அனைவரையும் அழைத்துச் சென்றார் கமலம்.
அனைவரும் உணவை முடித்து விட்டு மண்டபத்தை காலி செய்துவிட்டு சிவராமனின் வீட்டிற்கு கிளம்பினர்.
வீட்டிற்கு செல்லும் வழியில் கமலம் அலைபேசியில் அழைத்து வித்யாவை ஆரத்தி கரைத்து வைக்க சொன்னார்.