எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூந்தென்றலாய்.. பூஞ்சாரலாய்..3

அத்தியாயம் - 3

அடுத்த மூன்று நாட்களில் ராதாவின் இன்டர்ணல் தேர்வுகள் முடிந்திருந்தது. செமஸ்டர் தேர்வாக இருந்திருந்தால், தேர்வு முடிந்தவுடன் லீவ் இருந்திருக்கும்.

ஆனால், இது இன்டர்ணல் தேர்வு தான் என்பதால் விடுமுறை எல்லாம் இல்லை. கல்லூரிக்கு சென்று தான் ஆக வேண்டும்! பட், அந்த ரூல்சை எல்லாம் ஃபாலோ செய்யும் மன நிலையில் ராதா இல்லை.

இந்த வட்டம் ஃபெயிலாகி விடக் கூடாது என்று மிகவும் கடினப்பட்டு, தன்னையும் வருத்தி, பிடிக்காத பாடத்தை எல்லாம் கண் முழித்து படித்து களைத்து போய் விட்டாள் ராதா.

எனவே, இரண்டு நாட்கள் கல்லூரிக்கு லீவ் போட்டு விட்டாள். அவள் இந்த நான்கு நாட்களாக உழைத்ததின் விளைவாக கண்களுக்கு கீழே கருவளையம் உருவாகி இருந்தது. எனவே, தந்தையின் திட்டுக்களையும் மீறி கல்லூரிக்கு முழுக்கு போட்டுவிட்டாள்.

போட்ட பின்னர் தான் 'யேயா... லீவ் போட்டோம்' என்று வருந்தி விட்டாள். அவள் அவ்வாறு வருந்தியதற்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்த அவளின் பெரியப்பா காசிநாதன்!

கண்ணபிரானின் சொந்த அண்ணன்! மிகவும் பாசக் கார அண்ணன் என்று எல்லாம் புகழாரம் சூட்டிவிட முடியாது! மிகவும் மோசக்கார அண்ணன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

அவர் சென்னையில் ரங்கநாதன் தெருவில் அமைந்திருக்கும் பெரிய துணிக்கடையின் சொந்தக்காரர். பகட்டான பேர்வழி!

தங்களின் தாய் தந்தை இறந்த பின்னர் அவரின் சொத்தில் முக்கால்வாசியை ஸ்வாஹா செய்து விட்டு, நஷ்டத்தில் ஓடிய மெடிக்கல் கடையையும், இப்போது கண்ணபிரான் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறிய வீட்டையும் மட்டும் அவருக்கு கொடுத்து விட்டு மற்ற அனைத்தையும் தன் வசப் படுத்திக் கொண்டார்.

இதை கண்ணபிரான் கவனித்திற்கு கொண்டு செல்லாமல் கவனமாய் காயை நகர்த்தி இருந்தார். கண்ணபிரான் தந்தை மற்றும் தாயின் இழப்பில் இருந்து மீண்டு வந்து இதை கவனித்து கேட்ட போது "உனக்கு ரெண்டு பொட்ட பிள்ளைங்க தானடா.(அப்போது ராதா பிறந்திருக்கவில்லை) எனக்கோ நாலு பொட்ட பிள்ளைங்கடா.. அதுங்கள எப்படி நான் கரை சேர்ப்பேன்! தயவு செஞ்சு கொஞ்சம் எனக்கு கருணை காட்டுடா!!!" என்று தம்பியின் கரங்களை பற்றி நீலிக் கண்ணீர் வடித்து தந்திரமாக பிழைத்துக் கொண்டார்.

அண்ணனின் கண்ணீரைக் கண்ட கண்ணபிரானும் அதன் பிறகு சொத்துக்காக அவரிடம் போய் நிற்கவில்லை. நஷ்டத்தில் ஓடிய மெடிக்கல் கடையை தூக்கி நிறுத்தி பிழைக்கவே சில வருடங்கள் ஓடிப் போய் விட்டன.

அதன் பின்னர் வருகின்ற வருமானத்தை சேர்த்து, மருந்துக் கடை கடனில்லாமல் இந்த நாள் வரை நடத்திக் கொண்டு வருகிறார். நஷ்டமடைந்த கடையை காப்பாற்றுவதற்கு கூட யாரிடமும் கடன் வாங்கவில்லை அவர்.

கண்ணபிரானிற்கு ஆகாத விஷயம் என்றால் அது கடன் தான். கடன் வாங்கவும் பிடிக்காது! கொடுக்கவும் பிடிக்காது! அது அவரின் வாழ்க்கையில் அவருக்கு அவரே எழுதிக் கொண்ட நியதி!

தானாக உழைத்து சம்பாதித்து கூட பணம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கடன் வாங்கினால் அவருக்கு அறவே பிடிக்காது! அது மிக மிக கெட்ட பழக்கம். வேண்டாத பழக்கமும் கூட என்று எண்ணுபவர்!

அன்று தம்பியின் வீட்டிற்கு மதிய வேளையில் தன் மனைவி தையல்நாயகியுடன் வருகை தந்திருந்தார் காசிநாதன்.

"வாங்க..." என்று அவரை வரேற்றனர் தெய்வானை தம்பதியினர். மதிய வேளை என்பதால் கண்ணபிரானும் வீட்டில் உணவுக்காக வந்திருந்தார்.

அவர்களுக்கு இரண்டு பிளாஸ்டிக் சேர்களை கூடத்தில் எடுத்துப் போட்டார் தெய்வானை. அதை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே அமர்ந்தார் தையல்நாயகி.

அமர்ந்தது மட்டும் அல்லாது,"என்ன கொழுந்தனாரே.. இன்னும் பிளாஸ்டிக் சேர் தான் வச்சு இருக்கீங்க போல! ஒரு நல்ல சோஃபாவ வாங்கி போட்டா என்ன?" என்று அவர்களின் நிலையை குத்திக் காட்ட, தெய்வானை காதில் போட்டுக் கொள்ளாதவராக அதை கண்டு கொள்ளாது காஃபியை கலந்து எடுத்து வந்தார்.

நிச்சயம் தங்களின் வீட்டில் தன் கணவனின் அண்ணன் வீடு கை நனைக்க மாட்டார்கள் என்று அவருக்கு நன்கு தெரியும். ஆகையால் தான் சாப்பிடுங்கள் என்று வாய் வார்த்தையாக கூட கூறாமல் காஃபியை கலந்து கொண்டு வந்தார். மதிய வேளை என்றும் பாராது.

அதை எடுத்துக் கொண்டவர்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள்.

தையல்நாயகியின் பேச்சை தெய்வானை கண்டு கொள்ளாதது போல், கண்ணபிரானும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், தையல்நாயகி விடவில்லை.

"என்ன கொழுந்தனாரே? சோஃபா வாங்கிப் போட்டுடலாம் தானே?" என்று விடாமல் கேட்க, "வாங்கிடலாம் அண்ணி. வசதி வாய்ப்பு வந்தா நிச்சயம் வாங்கிடலாம்" என்றதோடு விட்டு விட்டார்.

"க்கும்... வசதி வாய்ப்பு எப்ப வந்து.. நீங்க எப்போ வாங்கி.. நாங்க எப்போ உங்க வீட்டுல வந்து சோஃபால உட்காருறது. பேசாம வேற தொழில பாருங்க" என்று ப்ரீயாக அறிவுரை வழங்க, அங்கே ஒரு அமைதி.

தன் அண்ணியின் பேச்சு எப்பொழுதும் இது மாதிரி தான் இருக்கும் என்று தெரிந்தமையால் கண்ணபிரான் எதுவும் திருப்பிப் பேசாமல் தன் அண்ணனிடம் "என்ன விஷயமா வந்திருக்கீங்கண்ணே?" என்று கேட்டு பட்டென்று விஷயத்திற்கு வந்தார்.

"அதுவா... நம்ம ஸ்வேதாவுக்கு கல்யாணம் பேசி இருக்கோம். மாப்பிள்ள சொந்தமா ஒரு டெக்ஸ்டைல் மில் வச்சு நடத்தி வர்றாரு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணம். அதான் பத்திரிக்கை வச்சிட்டு போலாம்னு வந்தோம்" என்றதும் அங்கே ஒரு கனத்த அமைதி நிலவியது.

சொந்தத் தம்பி! அவருக்கு ஒரு தகவல் கூட திருமணத்தை பற்றி முன்பே சொல்லவில்லை! நிச்சயம் எல்லாம் முடிந்ததா? அதுவும் தெரியவில்லை! இருந்தாலும், இவர்கள் இப்படி இருக்க வேண்டாம் என்று வழக்கம் போல் எண்ணம் எழாமல் இல்லை தெய்வானைக்கும் கண்ணபிரானுக்கும்.

"என்னடா பத்திரிக்கைய வாங்காம நிக்கிற? வாங்கிக்க" என்ற காசிநாதனின் குரலில் நடப்பிற்கு வந்தவர் மனைவியை ஒரு பார்வை பார்க்க, இருவரும் ஒரு சேர அவர்கள் நீட்டிய தாம்பாளத் தட்டை வாங்கிக் கொண்டனர்.

அந்த நேரம் தான் எழுந்து வெளியே வந்தாள் ராதா. அவர்களின் குரல் கேட்ட உடனே எழுந்து விட்டாள் தான். இருப்பினும், வெளியே வரப் பிடிக்கவில்லை.

வந்தால் இவளின் வாய் சும்மாக இருக்காது. கண்டிப்பாக தையல்நாயகியின் பேச்சிற்கு எதாவது மறு பேச்சு பேசுவாள். அது கண்ணபிரானிற்கு பிடிக்காது. தெய்வானையும் திட்டுவார். எனவே, அறைக்குள்ளேயே அடங்கிக் கொண்டாள்.

தன் பெரியம்மா பேசியது அனைத்தும் கேட்டது தான். அதற்கெல்லாம் பல்லைக் கடித்துக்கொண்டு இந்நேரம் வரை அமைதியாய் உட்கார்ந்து இருந்தாள்.

ஆனால், ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் போல் இருந்தது. முகம் கழுவினால் சற்று தேவலாம் போல் இருக்கும் என்று எண்ணியவள் வெளியே வந்திருந்தாள்.

தனக்கு ஆகாத பெரியம்மாவையும், பெரியப்பாவையும் கண்டவள் "வாங்க" என்று மட்டும் கூறி தன் போக்கில் அவர்களை கடந்து பின்னால் இருக்கும் பேத் ரூமிற்கு சென்று விட்டாள்.

தங்களை மதிக்காமல் வெறும் "வாங்க" என்று மட்டும் ராதா கூறிச் சென்றது தையல்நாயகிக்கு பொறுக்கவில்லை. உடனே ஆரம்பித்து விட்டார்.

"என்ன தெய்வா.. உன் சின்ன மக வெறும் வாங்கன்னு கேட்டுட்டு அவ பாட்டுக்கு போய்ட்டா? மாரியாதையா நடந்துக்க மாட்டாளாமா?" என்று தன் பேச்சை ஆரம்பிக்க, வெளியே முகம் கழுவிக் கொண்டிருந்த ராதாவிற்கு அப்படி ஒரு எரிச்சல் வந்தது.

முகத்தில் குளிர்ந்த நீரை எடுத்து அடித்துக் கழுவியவள் தன் எரிச்சலை போக்க முயன்றாள்.

தெய்வானை, "அவளுக்கு கொஞ்சம் முடியல அண்ணி. அதான் டல்லா இருக்கா?" என்றார் சாமாளிப்பாக!

"முடியலயா? பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே" என்றார் முகம் கழுவி பளிச்சென்ற முகத்துடன் வந்து நின்றவளை கண்டு!

"அம்மா எனக்கு ஒரு டீ" என்று அன்னையிடம் கேட்ட ராதா அறைக்குள் செல்லப் போக, "இதென்ன அம்மாவ வேலைக்கு ஏவிட்டு ரூமுக்கு உள்ள போய் படுத்துக்குற பழக்கம்? நீ போய் போட்டுக்க மாட்டியா?" என்று தையல்நாயகி அதற்கும் ஆரம்பிக்க,

'எதுவும் பேசிவிடாதே' என்று தன்னிடம் சைகை காட்டும் தந்தையின் பார்வையையும் மீறி, "ஏன் பெரியம்மா... உங்களுக்கு எங்க வலிக்குது? நான் என் அம்மாவை தான் டீ போட்டுத் தரச் சொன்னேன். நீங்க ஏன் இதுல தலையிடுறீங்க?" என்று அவள் பட்டென்று கேட்க, தெய்வானை தையல்நாயகியை சங்கடமாக பார்த்தார்.

"எனக்கு ஏன்டி ஆத்தா வலிக்கப் போகுது. நீ பொறுப்பா இருக்கணுமேன்னு சொன்னேன். பொறுப்பா, லட்சணமா வாய் பேசாம எங்க வீட்டு பொண்ணுங்க மாதிரியும், உன் அக்காளுங்க மாதிரியும் இருந்தேன்னா தான் நல்ல மாப்பிள்ளை அமையும்" என்றவர்,

"அதுவும் நீ பேசுற வாய்க்கு எந்த மகராசன் அமையப் போறானோ? எங்க ஸ்வேத்தாவுக்கு நல்ல வரன் வந்திருக்கு. ஏன் தெரியுமா? அவ தங்கம். ஒரு வாய் எதிர்த்து பேச மாட்டா! நாங்க அம்பது பவுன் நகையும் பத்து லட்சம் ரொக்கமும் கொடுத்து அவளை கட்டுறோம்" என்றார் டாம்பீகமாக!!!!!!!!!!!!!

கண்ணபிரான் மகளை முறைத்தார். அவரின் முறைப்பே சொல்லாமல் சொல்லியது ' பாத்தேல்ல. இதுக்கு தான் பேசாதன்னு சொன்னேன்' என்பதை போல!

ஆனால், அதற்கெல்லாம் ராதாவின் வாய் அடங்கவில்லை. "ஏன் பெரியம்மா.. ஸ்வேதா அக்காவை தங்கம்னு சொல்றீங்க? வாய் பேச மாட்டான்னும் சொல்றீங்க? அப்பேர் பட்ட குணம் இருக்கும் போது நீங்க எதுக்கு அம்பது பவுன் நகையும் கொடுத்து, டென் லாக்ஸ் பணமும் கொடுத்து அக்காவை கட்டுறீங்க?" என்று படாரென கேட்டு விட வந்தவர்களும் வாய் அடைத்து போனார்கள். வீட்டில் இருந்தவர்களும் வாய் அடைத்து போனார்கள்.

தையல்நாயகி புசுபுசுவென கோபமாக எதோ சொல்ல வர, "நயாகி... வந்த வேலைய முடிச்சோமா கிளம்பினோமான்னு இல்லாம இதென்ன சின்ன பொண்ணு கிட்ட போய் பேச்சை வளத்துட்டு இருக்க. வா போவோம்" என்று மனைவியை கிளப்பினார் காசிநாதன்.

அவருக்கும் தன் தம்பியின் சின்ன மகளைக் கண்டால் ஆகாது தான். அதுவும் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விஷேச வீட்டில் அனைவரின் முன்பும் சொத்து குறித்த பொதுவான பேச்சு வரும் போது எங்கேயோ பேச்சு திசை மாறி, கண்ணபிரானின் இன்றைய நிலை குறித்து பேச்சு வர, அதற்கு காசிநாதனும் எதோ மட்டம் தட்டி பேசி விட,

"நாங்க இன்னைக்கு இப்படி இருக்கோம்னா அதுக்கு நீங்க தான் பெரிப்பா காரணம். தாத்தா சொத்தை முக்காவாசி நீங்க அமுக்கிகிட்டு நட்டத்துல ஓடுன மெடிக்கலை மட்டும் எங்கப்பா தலைல நேக்கா கட்டி விட்டீங்க"

"உங்க குள்ளநரி புத்தி அன்னைக்கு எங்க அப்பாக்கு இல்லாம போச்சு. இன்னைக்கும் இல்லாம போச்சு. அப்படி இருந்திருந்தா இந்நேரம் உங்க மேல கேஸ் போட்டு அவரு பங்கு சொத்தை எல்லாம் போராடி வாங்கி இருப்பாரு" என்று விட்டாள் மூச்சிரைக்க!

கூடி இருந்த சபை மொத்தம் அதிர்ச்சியாய் பார்த்தாலும், "இதென்ன சிறு பெண் இப்படிப் பேசுகிறாள்" என்று எல்லோரும் ராதாவை தான் பேசினார்கள். காசிநாதனையும் ஜாடையாக பேசாமல் இல்லை!

அடுத்த வீட்டு மக்களுக்கு அடுத்தவர் விஷயம் காதில் விழுந்தது என்றால் அது வாயில் நுழைந்து ஒன்று இரண்டாகி, இரண்டு ஆறாகி, ஆறு அறுவதாகும் வரை அதையே பேசி ஊதி பரப்பி விடுவார்களே!!!!!

அது போல் தான் காசிநாதனின் விஷயத்திலும் நடந்தது. அன்று அஞ்சாமல் அனைவர் முன்பும் பொட்டில் அடித்தார் போல் பேசிய ராதாவை கண்டு காசிநாதனுக்கு சற்று பயம் தான் இன்றளவும்!

பின்னே அவள் பேசிய விஷயம் அப்படி ஆகிற்றே!!!! (ஆனால், அந்தப் பேச்சிற்கு அவள் கண்ணபிரானிடம் பிரம்பால் அடி வாங்கியது தனிக் கதை!)

தன் தம்பி கோர்ட் கேஸ் என்று போனால் அவன் பங்கு சொத்தை கொடுத்துத் தானே ஆக வேண்டும்!

ஆகையால், ராதாவிடம் என்றும் அவ்வளவாக பேச்சை வைத்துக் கொள்ள மாட்டார் காசிநாதன். இன்று மனைவி வாயை விட்டு அது பெரிய அளவில் பிரச்சனையை உண்டு பண்ணி விட்டால் வேறு மாதிரி தன்னை நோக்கி பாதிப்பு வந்து விடுமோ என்று அஞ்சியவர் மனைவியின் வாயை மூடச் சொல்லி அவரைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

கிளம்பும் போதும், "உன் மக வாயை கட்டிவை. இல்லைன்னா நல்ல மாப்பிள்ளை வராது" என்று சொல்லிச் செல்ல, "அது எங்க பிரச்சனை பெரிமா. நீங்க ஸ்வேதா அக்கா கல்யாணத்தை கவனிங்க" என்று சூடாக திருப்பிக் கொடுத்தவளிடம் வேறு எதுவும் பேச முடியாமல் முறைத்தபடி தன் கணவனுடன் கிளம்பி விட்டார் தையல்நாயகி!!!!

அவர்கள் சென்ற பிறகு மகளிடம் கண்ணபிரான் கத்தோ கத்தென்று கத்தி அவளைத் திட்டித் தீர்க்க, அதை எல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியேற்றி விட்டு அன்னை குடுத்த சூடான டீயை கண் மூடி அனுபவித்த படி குடித்தாள்.

"குடிக்கிறத பாரு.. அந்தப் பேச்சு அவுங்க கிட்ட பேசிட்டு, இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கா இவ. அவுங்க சொன்ன மாதிரி எந்த மவராசன் இவள கட்டிக்கிட்டு லோல் படப் போறானோ" என்று ஓய்ந்து போய் அமர்ந்து விட்டார் கண்ணபிரான்.

"விடுங்க.. அவ என்ன பண்ணுவா? உங்க அண்ணியும் ஒழுங்கா வாயவிடாம இருந்திருக்க வேண்டியது தானே? அவுங்க பேசப் போய் தான் இவ பேசுனா! இல்லைன்னா நம்ம ராதா அமைதி தான்" என்று மகளுக்கு சப்போர்ட் செய்தார்.

அவருக்கு மகள் பேசுவது தவறென்று இதநாள் வரை தோன்றியதில்லை. தான் பேசினால் எப்படியும் கண்ணபிரான் சண்டைக்கு வந்து குதிப்பார். 'எதற்கு அவர்களை பற்றின பேச்சு? நாம் உண்டு நம் வேலை உண்டு என இருப்போம். முடிந்ததை பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை' என்று வாயடைத்து விடுவார்.

ஆனால், மகளின் வாயை அவரால் அடக்க முடியவில்லை. அவரால் மட்டுமல்ல.. எவராலும் அடக்க முடியாது என்பது வேறு விஷயம்!ஆகையால், ராதாவை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் தெய்வானை!

யார்.. என்ன.. என்றும் பாராது தைரியமாக பேசுபவளை கண்டு கண்ணபிரானுக்கு அதிக பயம்! ஆம்! பயம் தான்! எங்கே இன்று தன் அண்ணி சொல்லிச் சென்றதை போல அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையாதோ என்று பயம் கொள்ள ஆரம்பித்து விட்டார்.

"கடவுளே.. என் பொண்ணுக்கேத்த நல்ல மகாராசனை நீ தான் எங்க கண்ணுல காண்பிக்கணும்" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

"உன் பெண்ணிற்கு நான் அனுப்பி வைக்கப் போகும் அந்த நல்
ல மகாராசன் நரேந்திரன்!" என, கடவுள் சொல்லியது பாவம் அவர் செவிகளை அப்போது எட்டவில்லை!!!!!!
 
Top