கண்ணுக்கெட்டிய வரை கரையில்லாத கடலை வெறித்து பார்த்த அமரனின் மனதிற்குள் தோன்றியது ஒன்றுதான். ‘என்னால் இதனை தவிர்த்திருக்க முடியும்! மேலே வந்தவுடனே கரைக்கு திரும்பிருக்க வேண்டும். ஆனால்..’ என்று யோசித்தவனிற்கு தன் மீதே கோபம் வர அவனுக்குள்ளே அரற்றிக் கொண்டிருந்தான்.
அவனின் உணர்வுகளை ஓரளவு புரிந்துக்கொண்ட ஷிவன்யா அவனின் தோளில் கைவைத்து, “ஃபீல் பண்ணாதீங்க அமர். அடுத்து என்னனு பார்க்கலாம்” என அவனை அழைத்துச் சென்றாள்.
சுற்றிலும் உவர் நீரால் சூழப்பட்டு இருளில் மூழ்கியிருந்த கடலை பார்த்திருந்த அனைவரின் முகத்திலும் அச்சத்தின் சாயலே!
‘இது எந்த உலகம்..? இங்கிருந்து எவ்வாறு தப்பிக்க..? முதலில் தப்பிக்க முடியுமா..? அப்படியே தப்பித்தாலும் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த உலகத்திற்கு எப்படி செல்ல..?’ என்ற பலகேள்விகள் அவர்கள் முன் பூதாகரமாக எழுந்தது.
அவர்களின் அருகில் வந்த அமரன், “அந்த கேம் நம்மள கொஞ்சம் கொஞ்சமா உள்ள இழுத்துருக்கு. நாம தான் கவனிக்கல..” என சொல்லிவிட்டு பெருமூச்சுடன் அமர்ந்தான்.
“புரியுற மாதிரி சொல்லு டா..” - ப்ரதீப்.
“முதல்ல ஆமை வந்ததே நமக்கு தெரியல. சோ, விலோ அடுத்து விளையாடிருக்கா. அப்ப தான் நாம முதலைகிட்ட இருந்து தப்பிக்க மேல வந்தோம். இங்க பார்த்தா நம்ம கப்பலே மாறியிருந்துச்சு. ஆனா, நாம அப்ப வங்ககடல்ல தான் இருந்தோம். நான் அங்கயிருந்த லைட்ஹவுஸ் பார்த்தேன். எதாவது பிரச்சனைனா கப்பலை திருப்பிடலாம்னு கூட நினைச்சேன். ப்ச், அடுத்தடுத்து பூதம், வௌவால் வந்ததுக்கு அப்புறம் லைட் ஹோஸ் தெரியல. எல்லாமே நம்ம கையை மீறி போயிடுச்சு. இப்ப நாம நம்ம உலகத்துல இருந்து வேற எங்கயோ முழுசா வந்துட்டோம்..” என்று சொன்ன அமரனின் குரலில் வெறுமையே இருந்தது.
அவன் கூறியதை கேட்டபடியே,
‘எங்காவது கரை தெரிகிறதா..?’ என இருட்டில் சுற்றி பார்த்த அனைவருக்கும் எதுவும் தெரியவில்லை. “விடிஞ்சதும் பார்க்கலாம்!” என்று அமர் சொன்னான். ஆனால், ‘இந்த உலகத்தில் விடியல் என்ற ஒன்று இருக்கா..?’ என்ற எண்ணனும் அவனுக்குள் எழுந்தது.
“நாம வேற எங்கேயோலாம் போய் மாட்டிக்கல அமர். இந்த விளையாட்டோட முடிவே சமுத்திரத்தின் இலக்குன்னு தான அந்த போர்டுல போட்டிருக்கு. சோ, நாம எதை நோக்கியோ தான் போய்க்கிட்டு இருக்கோம். இந்த கேமை தொடர்ந்து விளையாடினா மாட்டும் தான், நாம எதை நோக்கி போய்ட்டு இருக்கோம்னு நமக்கு புரியும்!” என ரங்கா அவனுக்கு புரிந்தவரை பகிர்ந்தான்.
“அடப்பாவிகளா! நான் என்னோட வீட்டை பார்த்து போயிருப்பேன். ட்ரிப்ன்னு என்னை கூட்டிட்டு வந்து இப்படி ஊர் பேர் தெரியாத காட்டுல.. ச்சி கடல்ல மாட்டி விட்டீங்களேடா..” என்று புலம்பிய ப்ரதீப், “அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..” என்று சலிப்பாக கூறினான்.
“இருங்க பாய்! இந்த கேமை ஃபுல்லா முடிச்சா நம்ம உலகத்துக்கு போயிடலாம்..” என்று அமரன் சொல்ல, “ஐயோ! இதுல இருந்து அடுத்து என்னலாம் வருமோ..” என ப்ரதீப் பீதியுடன் சொல்லிவிட்டு, “இதோ இவதான் எல்லாத்துக்கும் கரணம். இவ தான் அங்க போய் அதை எடுத்துட்டு வந்தா..” என விலோவை முறைத்தான்.
“நீ தான என்னை போக சொன்ன..?” என விலோவும் முறைக்க,
“வாய மூடு. நான் சொன்னா..? நீ போவியா..”
“நீ வாயை மூடு..”
“நீ வாயை மூடு..”
“ஐயோ! ரெண்டு பேரும் வாயை மூடுங்க..” என கத்திவிட்டான் சக்தி. பின்பு தான் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே நின்றிருந்தனர்.
அணிந்திருந்த வெள்ளை சட்டை முழுவதும் குறுதியால் நிறைந்திருக்க அனைவரின் கலக்கம் நிறைந்த முகத்தையும் பார்த்த சக்தி, “இப்ப என்னாகிடுச்சு? ஜாலியா ட்ரிப் போக பிளான் பண்ணோம். இப்ப தெரியாத்தனமா இதுல மாட்டிக்கிட்டோம் அவ்வளவு தான..? நமக்கு தான் தப்பிக்க அந்த கேம் இருக்கே? அப்புறம் என்ன?” என்றான் நம்பிக்கையாக.
“டேய் சக்தி! நீ இருக்க நிலைமைல.. இப்ப இவ்வளவு பேசனுமா?” என்று அவனை அதட்டிய ரங்காவிடம், “கைல தான் டா அடிப்பட்டுருக்கு. ஒரேடிய பாசத்தை பொழியாதீங்க..” என சக்தி கடுப்பானான்.
“ஒருவேளை என்னோட ஆளு இந்த உலகத்துல கூட இருக்கலாம். அதனால கூட நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம் போல..” என ப்ரதீப் யோசனையுடன் சொல்ல,
“ச்சீ இந்த நேரத்துல கூட உன்னோட புத்தி போகுது பாரு” - விலோ
“உனக்கென்னம்மா ரங்கா இங்கேயும் இருக்கான். இங்க இருந்து தப்பிச்சு நம்ம உலகத்துக்கு போக முடியலனா கூட, இந்த உலகத்துலேயே கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஜாலியா இருப்பீங்க. நாங்க அப்படியா..” என்று சலித்தப்படியே ப்ரதீப் சொன்னான். அவர்கள் இருவரின் பேச்சு நண்பர்களை ஓரளவு இயல்புக்கு திரும்ப வைக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினர்.
‘ஹ்ம்ம்.. வழக்கம் போல இவங்க பேசியே பொழுதை போக்குவாங்க..’ என அவர்களை சலிப்புடன் பார்த்த ஷிவன்யா பதட்டத்துடன் தனியாக அமர்ந்திருந்த மார்ட்டினிடம் வந்தாள். “எல்லாம் சரியாகிடும் மார்ட்டின். நம்ம ஊருக்கு நாம சீக்கிரமே போய்டுவோம்” என அவரை தேற்றினாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவர், “விக்டர் மத்தவங்களை கூட்டிட்டு வர கீழ போனான். ஆனா இன்னும் வரல..” என குழப்பமாகவும் பரிதவிப்புடனும் சொன்னார்.
‘நாம நம்மள பற்றி மட்டுமே யோசிச்சிட்டு நம்ம கூட வந்தவங்களை மறந்துட்டோமே..’ என்ற எண்ணம் அந்நேரம் தான் நண்பர்களின் கூட்டத்திற்கு வந்தது.
“அவங்களையும் மேல கூட்டிட்டு வந்து நம்ம கூடவே வெச்சிக்கலாம் டா. கீழே முதலை வேற இருந்துச்சு. இப்ப வௌவாலும் அங்க இருந்து வந்திருக்கு..” என்ற சக்தி சொன்னவுடன், “நானும் ப்ரதீப்பும் போறோம்” என்றபடி அமரன் எழுந்தான்.
அப்பொழுது கப்பலின் உள்ளேயிருந்து இரத்தக்கறை படிந்த உடையில் வெளிறிய முகத்துடன் விக்டர் வந்தான். “என்னாச்சு விக்டர்? மத்தவங்க எங்க?” என்ற மார்ட்டினின் கேள்விக்கு,
கலங்கிய கண்களை துடைத்த விக்டர், “அ.. அலெக்ஸ் இஸ் நோ மோர்” என்றபடி மார்ட்டினின் கையை பிடித்து அழுகையில் குலுங்கினான். (அவர்களுள் பயணம் செய்த அலெக்ஸ் என்ற மாலுமி இறந்து விட்டதாக கூறினான்)
“வா.. வாட்..??!!” என அனைவருமே அதிர்ந்தனர்.
“ஆமா. கீழ இரத்த காயத்தோட அவன்..” என்றவனால் மேலே சொல்ல முடியவில்லை.
“ரிச்சார்ட் அண்ட் டேனியல் என்ன ஆனாங்க..?” என மேலும் அவர்கள் குழுவில் இருந்த இருவரை பற்றி குரல் நடுங்க மார்ட்டின் கேட்டார். “அவங்களை என்னால கண்டுபிடிக்க முடியல மாஸ்டர். எங்க இருக்காங்கன்னு தெரியல..” என்ற விக்டர்,
“கப்பலை கரைக்கு விட்டுடலாம்..?” என மார்ட்டினிடம் மன்றாடினான். அவன் கீழே சென்றபின் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் மார்ட்டின் அவனுக்கு விளக்கினார்.
அனைத்தையும் கேட்ட விக்டர் நண்பர்களிடம் வந்து, “இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டும் தான். உங்களால ஒரு உயிர் போயிடுச்சு.. இப்ப நாம எல்லாரும் திக்கு திசை தெரியாம மாட்டிக்கிட்டு இருக்கோம். இது எல்லாத்துக்கும் நீங்க தான் முழுகாரணம்..!” என அவர்களிடம் ஆக்ரோஷமாக கத்திவிட்டு சற்று தள்ளிச்சென்று அமர்ந்தான்.
இப்பொழுது சக்திக்கு கோபம் வரவில்லை. அவனை பார்க்க பார்க்க குற்றவுணர்ச்சி தான் அதிகமாகியது. ‘எங்களால உருவான பிரச்னையை நாங்களே சரி செய்கிறோம் என விராப்பாக பேசியது தான் தானே..’ என்ற எண்ணம் அவனின் மனதை அறுத்தது.
விக்டரை அப்படி பார்க்கவே நண்பர்கள் குழுவிற்கு சங்கடமாக இருந்தது. ஆனால், அவர்களை மீறி நடந்த ஒன்றுக்கு அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
‘இது தான் விதியென்றால், இது எதற்காக நமக்கு நடக்க வேண்டும்? அவர்களால் திறக்க முடியாத பெட்டியை தங்களால் மட்டும் எப்படி திறந்து இப்படி ஒரு மீளா அகழியில் மாட்டிக்கொள்ள முடிந்தது..?’ என்ற எண்ணம் தோன்ற எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் அருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
‘பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிய கதையாக..’ ஆர்வத்துடனும் துடுக்குத்தனதுடனும் ஆரம்பித்த விளையாட்டின் விளைவால் ஒரு உயிர் போனது அவர்களை மனதளவில் நொறுக்கிக் கொண்டிருந்தது.
மார்ட்டினிற்குமே இது அதிர்ச்சி தான். ‘இதனால் இவ்வளவு விளைவுகள் வரும் என்று தெரிந்திருந்தால் கையில் கிடைத்த பொழுதே மீண்டும் கடலில் வீசியிருப்பேனே..!’ என்று அவரும் நினைத்துக் கொண்டார். அதிர்ந்து நின்ற நண்பர்களின் நிலையை பார்த்தவர், “அலெக்ஸ், விக்டரோட நெருங்கிய நண்பன். அதான் அலெக்சோட இறப்பை அவனால ஏத்துக்க முடியல. விக்டர் ரொம்பவே உடைஞ்சிட்டான். நீங்க எப்படியாவது இந்த விளையாட்டை முடிக்க பாருங்க. நான் விக்டரை பார்த்துக்குறேன்” என சொல்லிவிட்டு விக்டருடன் சென்று அமர்ந்தார்.
இப்போதைக்கு அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை அந்த சமுத்திரா விளையாட்டு மட்டும் தான். ‘முடிந்தளவு எந்த தடைகள் வந்தாலும், அதனை தகர்த்தெறிந்து அந்த விளையாட்டினை முடித்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் எழுந்தது.
“அடுத்து நான் போடுறேன்” என்று தானாகவே முன்வந்தான் ரங்கராஜன். அவனிடம் பகடையை கொடுத்தான் அமரன்.
‘என்ன வருமோ?’ என கண்களில் கலவரம் சூழ அவனை கலக்கத்துடன் விலோ பார்க்க, அவளின் கையை ஒருமுறை அழுத்தி பிடித்து ஆறுதல் அளித்த ரங்கா பகடையை உருட்டினான்.
ஐந்தாவதாக விளையாட வந்த ரங்காவிற்கு ஐந்து என்றே அந்த பகடையில் விழுந்தது. பின் அனைவரும் அந்த விளையாட்டு போர்டை தான் பார்த்தனர்.
அந்நேரம் மஞ்சள் நிறத்தில் இருந்த காயின் முன்னிருந்த நான்கு பெட்டிகளை கடந்துச் சென்று ஐந்தாம் இடத்தில நின்றது. உடனே அந்த நீர் குமிழில் எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது.
கொள்ளையடிக்கும் கூட்டம் வரப்போகிறது!
காப்பாற்றிக்கொள்!
என்பதை வாசித்து முடித்ததும், “ஹே! கொள்ளையடிக்கும் கூட்டம்னா பைரேட்ஸ் (கடற்கொள்ளையர்கள்) தான? இங்க பைரேட்ஸ் வர போறாங்களா..? அப்ப நம்ம தலை ஜாக் ஸ்பரோ.. சாரி கேப்டன் ஜாக் ஸ்பரோ வருவாங்களா..” என்று ஆர்பாட்டமாக ஆர்பரித்தான் ப்ரதீப்.
“டேய் அவர் படத்துல தான நடிச்சாரு. இப்ப அதை மாதிரி யாரோ வர சான்ஸ் இருக்கு. ஆனா இது எதை காப்பாத்திக்க சொல்லுதுன்னு தான் புரியல?” என யோசித்த ரங்கா கப்பலின் மேல் தளத்திற்கு வரும் வாயிலை தான் பார்த்தான். ஆனால், அங்கு யாரும் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை.
“அதுல கூட்டத்தோட வரப்போகுதுனு போட்டிருக்கே ரங்கா. அப்படினா நம்ம கப்பல்ல இருந்து வர வாய்ப்பில்லை..” என சக்தி சொன்னான்.
விக்டருடன் அமர்ந்திருந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மார்ட்டின் அவர்களின் அருகில் வந்து “என்ன வந்தது?” என்று வினவினார்.
“பைரேட்ஸ் வரபோராங்க..” என ரங்கா சொன்னதும் அவரின் முகம் கலவரமானது. உடனே விக்டரிடம் இதனை தெரியப்படுத்த அவனும் மார்ட்டினை போல் தான் பதட்டமடைந்தான்.
மார்ட்டின் விக்டரிடம் சில விஷயங்களை கூறி அவனை கீழே அனுப்பிவிட்டு நண்பர்களிடம் வந்தார். “உடனே நம்ம கப்பல்ல இருக்க எல்லா லைட்ஸையும் ஆப் பண்ணுங்க. சீக்கிரம் எங்கயும் எந்த விளக்கும் எரிய கூடாது. ஃபுல்லா இருட்டா தான் இருக்கனும்” என்று அனைவருக்கும் கட்டளைகளை பிறப்பித்தவண்ணம் அனைத்து விளக்கையும் அணைக்க முயன்றார்.
“இவர் என்னடா ஓவரா சீன் போடுறாரு..”
“சும்மா இரு ப்ரதீப்” என்று அவனை அதட்டிய அமரன் அனைத்து விளக்கையும் அணைத்தான். பின் அனைவரும் இருட்டில் ஒரே குழுவாக அமர்ந்துக் கொண்டனர்.
“டேய்! என்னடா நடக்க போகுது? எதுக்கு நாம இப்ப இருட்டுக்குள்ள இப்படி உட்கார்ந்து இருக்கோம்..?” என்று சக்தி கத்தினான்.
“ஷ்” என்று செய்கை செய்த அமரன், “கொஞ்ச நேரம் பேசாம இருக்கனும்” என்று சொல்லிவிட்டு சுற்றியும் பார்வையால் அலசினான்.
தூரத்தில் ஒரு கப்பல் கருப்புநிற பறக்கும் பாய்களுடன் வந்துக் கொண்டிருந்தது. அதில் அபாயகரமான எலும்புக்கூடு முத்திரையும் பதிந்திருந்தது.
“ரைட்டு. சைத்தான் கப்பல்ல வருது..” என இருட்டில் அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டம் சொல்லிக்கொண்டே மெல்ல எட்டி அந்த கொள்ளைக்கார கப்பலை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“எப்படித்தான் நமக்குனே ஒரு ஒருத்தனா கிளம்பி வரானோ..” என அவர்களையே பார்த்தபடி ப்ரதீப் சொல்ல,
“சின்ன திருத்தம். நாம தான் இப்ப அவங்க உலகத்துக்கு வந்திருக்கோம்..” என ஷிவன்யா கூறினாள்.
“ப்பா செம்ம காமெடி..” என்ற ப்ரதீப், “நாம அவங்களுக்கு தெரிவோமா..?” என மேலும் எட்டிப்பார்த்தான்.
“நீ வாய மூடிட்டு அமைதியா உட்கார்ந்தா தெரிய மாட்டோம்..” என்று அமர் ப்ரதீப்பின் கழுத்தை இறுக்கி பிடித்து கீழே அமரவைத்தான்.
“டேய் விடுறா.. அவனுங்க வரதுக்குள்ள நீயே கொன்னுடுவ போல..” என கத்தினான்.
“ஷ்! அமைதியா இருங்க..” என மார்ட்டின் அமைதிபடுத்தினார்.
கடலின் காரிருளை விலக்கிய படி, ஆர்ப்பரித்து சீறிக்கொண்டிருக்கும் அலைகளை கிழித்துக்கொண்டு பாய்ந்து வந்துக் கொண்டிருந்தது கருப்புநிற பாய்களையுடைய கொள்ளைக்கார பாய்மரக்கப்பல். என்ன தான் நண்பர்களுடன் சகஜமாக வாயடித்து கொண்டிருந்தாலும்,
விளக்கு வெளிச்சத்தில் மிதந்து வந்து கொண்டிருந்த கொள்ளைக்கார கப்பலை தான் அனைவரும் திகிலுடன் கண்ணை சிமிட்டாமல் பார்த்தனர்.
அந்த கொள்ளைக்கார கப்பலில் சிலரின் நடமாட்டம் தெரிந்தது. அதிலும் தொலைநோக்கு கருவியும் அந்த கப்பலில் பொறுத்தியிருக்க அதனையே கவனித்து கொண்டிருந்தனர்.
‘ஏற்கனவே, சக்திக்கு அடிபட்டது; அதோடு ஒரு உயிரும் போயிருக்க.. கொள்ளைக்கார கூட்டத்தின் கண்ணில் பட கூடாது!’ என மனதோடு கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் விலோச்சனா.
அவளின் மன்றாடலை கடவுளும் பரிசீலித்தார் போன்று, இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த கொள்ளைக்கார கப்பல் வேறொரு திசைக்கு திரும்ப தொடங்கியது.
கொள்ளைகரர்களையே பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அப்பொழுது தான் நிம்மதியே வந்தது. “அப்பாடா திரும்பிட்டானுங்க. நிஜமாவே போய்டுவங்கல..” என சந்தேகமாகவே சக்தி கேட்டான்.
“அப்படி தான் தெரியுது..” என வேறொரு பக்கம் செல்ல தொடங்கிய கப்பலையே பார்த்தான் ரங்கா.
“நாம அடுத்து போடலாமா..” என பகடையை கையில் வைத்துக் கொண்டிருந்த ஷிவன்யா கேட்டாள்.
“அவங்க இன்னும் கொஞ்ச தூரம் போகட்டும் ஷிவ். இல்லனா அடுத்து ஏதாவது வரதுல நாம இவங்ககிட்ட திரும்பி மாட்டிக்க போறோம்” என்று ரங்கா சொல்லிவிட அனைவரும் அமைதியாக கொள்ளைகரர்களின் கப்பலையே பார்த்தனர்.
மார்ட்டினின் அருகில் அமர்ந்திருந்த ஷிவன்யா, “மார்ட்டின்! நம்ம உலகத்துல பைரேட்ஸ் எப்படி பட்டவங்க..? நீங்க அவங்கள பார்திருக்கீங்களா..?” என்றாள். அவளின் கேள்வி அனைவருக்கும் ஆர்வத்தை தூண்ட அனைவரும் மார்ட்டினின் முகத்தை தான் பார்த்தனர்.
“பைரேட்ஸ் ரொம்ப பயங்கரமானவங்க. அவங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கவே இருக்காது..” என கொள்ளைக்காரர்களை பற்றி தொடங்கும் பொழுதே அவர்களை பற்றி எதிர்மறையாக கூறினார் மார்ட்டின்.
“நம்ம ரோட்ல நடக்குற வழிப்பறி கொள்ளைக்காரங்க மாதிரி தான் அவங்களும். என்ன! ரோட்ல நடக்குறதுல நமக்கு உதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா, அவங்க கிட்ட மாட்டுனா வாழ்க்கையே போய்டும்.. நம்மகிட்ட இருக்க பணம், பொருள்ன்னு மட்டும் வாங்காம.. கப்பலோட கடத்திட்டு போய் நம்மகிட்டயே பேரம் பேசுவாங்க. நாள் கணக்கா பட்டினி போடுவாங்க. சைக்கோ தனமானவங்க..” என்று மார்ட்டின் வருத்தமாக கூறினார்.
அவர் அவருடைய அனுபவத்தை கூறுகிறார் என்று அனைவருமே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“அப்படி அவங்க உங்க கப்பலை தாக்க வந்தா.. என்ன பண்ணுவீங்க..? அவங்க வரது உங்களுக்கு எப்படி தெரியவரும்..?” மேலும் ஷிவன்யா கேட்க, “இதை வெச்சி கட்டுரை எழுத போறீயா என்ன..?” என விலோ கேட்டாள்.
ஆனாலும், ஷிவன்யாவின் கேள்விக்கு மார்ட்டின், “கடல் கொள்ளைக்காரங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு இல்லை. அவங்களுக்கு முக்கிய இடங்கள் இருக்கும் அங்க தான் இருப்பாங்க. உதாரணமா கல்ப் ஆப் ஏடென்ல இருப்பாங்க. அந்த இடத்தை தாண்டி போறதுக்கு நமக்கு அங்க இருக்க அரசே பாதுகாப்புக்கு ஆட்கள் அனுப்புவாங்க. இருந்தாலும் அவங்களையும் தாண்டி பைரேட்ஸ் தாக்க வருவாங்க..”
“பைரேட்ஸ் வரபோறது நமக்கு சிக்னல் மூலமாவே தெரிஞ்சிடும். அந்த மாதிரி நேரத்துல.. விளக்கு எல்லாத்தையும் அணைச்சிடுவோம். அவங்க முதல்ல நம்ம கப்பல்ல ஏற தான் முயற்சி செய்வாங்க. அதுனால, கப்பலை சுத்தி வலுக்குற மாதிரி ஒரு திரவத்தை ஊற்றி வைப்போம். முள் வேலி அமைப்போம். அப்புறம் அவங்க கண்ணுலயே லேசர் லைட்டால அடிப்போம்” என கடல் கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் முறையை பட்டியலிட்டார்.
“அப்படி இது எல்லாம் முயற்சி பண்ணியும் உங்களால அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியலனா என்ன பண்ணுவீங்க..?” - விலோ.
“நம்ம கப்பலையே பதுங்கு குழி இருக்கும். விக்டரை அதை சரிபார்க்க தான் கீழ அனுப்பினேன். அந்த குழி குள்ள போய் அடைஞ்சிடுவோம். நம்ம கப்பலுக்கு சொந்தமானவங்க வந்து கூட்டிட்டு போராவரைக்கும் அதுக்குள்ளேயே இருப்போம். அப்படியும் கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக்கிட்டா பேரம் பேசி தான் மீட்க படுவோம்”
கப்பலில் வேலை செய்தால் வருமானம் எவ்வளவு அதிகமா அதே அளவு ஆபத்தும் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. அதற்கு மேல் மார்ட்டினிடம் வேறு கேள்விகள் யாரும் கேட்கவில்லை.
“டேய் மச்சான் அமர். கடற்கொள்ளையர்கள் என்ன இவர் சொல்லுற மாதிரி அவ்வளவு மோசமானவங்களா டா..? இப்ப போனவங்களும் திரும்பி வருவாங்களா?” என பயத்துடன் அமரனின் கரத்தை பற்றிக்கொண்டான் ப்ரதீப்.
“நமக்கு படத்துல காட்டுறது எல்லாமே ஒரு ஹீரோ வர்ஷிப் மாதிரி தான் டா காட்டுவாங்க. ரௌடிய்யா இருக்கட்டும் திருடனா இருக்கட்டும்.. அவங்க மேல நமக்கு பரிதாபம் வர வைக்குற மாதிரி தான் எடுப்பாங்க”
“ஆமா. சினிமா காரனுங்க என்னைக்கு உண்மையா மக்களுக்கு தேவையானதை படமா எடுக்குறாங்க..? ஒன்னு நடிகன் போலீஸா இருப்பான். இல்லை ரௌடியா இருப்பான். படம் புல்லா சண்டை வரும்..” என ஷிவன்யா சொல்ல அனைவரும் சிரிப்புடன் சக்தியை தான் பார்த்தனர். சமீபத்தில் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த படத்தின் கதையை தான் ஷிவன்யா கூறினாள். அதற்கு எதுவும் கூறாமல் சக்தி அமைதியாகவே இருந்தான்.
“உங்களுக்கு சுனில் ஜேம்ஸ் தெரியுமா..?” என்ற ரங்கா அனைவரையும் பார்த்தான். அமர் மட்டுமே தெரியும் என்று கூறினான்.
“யார் டா அவங்க..?” - ப்ரதீப்.
“அவர் நம்ம நாட்டுல இருக்க சரக்கு கப்பலோட கேப்டனா இருந்தார். 2013ல அவங்க ஆப்பிரிக்க நாட்டுல இருக்க டோகோல போய்க்கிட்டு இருக்கப்ப, அவங்களை கொள்ளைக்கார கப்பல் கூட்டம் தாக்கி அவங்களோட பணம், பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அவங்களையும் தாக்கிட்டு டோக்கோ கிட்ட நிப்பாட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க” என்று ரங்கா சொல்ல சொல்ல அனைவரும் கதை கேட்கும் ஆவலில் இருந்தனர்.
“கூட இருந்த ரெண்டு க்ரு மேம்பர்ஸ்கு செம்ம காயம். சோ அங்க இருந்த போலீஸ் கிட்ட காம்பலைன்ட் கொடுக்க போயிருக்காங்க. அவங்க நீங்க தான் பைரேட்ஸ்கு உதவி பண்ணிங்கன்னு சொல்லி ஜெயில்ல அடைச்சிட்டாங்க. சரியான உணவு இல்லாம, 20 பேர் இருக்க வேண்டிய இடத்துல 80 பேர் இருக்கவெச்சி.. அதுலாம் ரொம்ப கொடுமை..” என்று ரங்கா நிறுத்த, சுற்றியிருந்த அனைவரின் கண்களும் அவனை தான் பார்த்தது.
“இதுல இன்னும் என்ன கொடுமைன்னா..? ஜூலைல நடந்த இந்த சம்பவம் மீடியாவுக்கு தெரியவந்ததே அக்டோபர்ல தான். கிட்டத்தட்ட நாலு மாசமா அங்கயே தான் மாட்டிக்கிட்டு இருந்தாரு.. அப்புறம் அவரோட வைஃப் தான் இந்திய தூதரகம் கிட்ட ரொம்ப போராடினாங்க..” என சொல்லும் பொழுதே இடையிட்ட விலோ,
“அவங்..அவங்க திரும்பி வந்துட்டாங்க தான ரங்ஸ். அவருக்கு எதுவும் ஆகலையே..” என கண்களின் கண்ணீர் கட்ட பயத்துடன் அவனின் கரத்தை பற்றினாள்.
அவளின் நிலையை பார்த்தவனிற்கு ‘ஏன் தான் இதை சொன்னோமோ..’ என்றானது.
“ஹ்ம்ம் வந்துட்டாங்க விலோ. ஹாப்பி எண்டிங் தான்” என அதோடு நிறுத்திக்கொண்டான்.
“இல்ல.. எதோ இருக்கு. முழுசா சொல்லு ரங்ஸ்” என அவனை உளுக்கினாள்.
“எவ்வளவு போராடியும் அவரை மீட்க முடியல.. டிசம்பர் மாசம் அவரோட ஒரு வயசு கூட முடியாத குழந்தை இறந்ததும் தான் பிரச்சனை ரொம்ப பெருசா மாறுச்சு..”
“கடவுளே..” என விலோ அதிர்ச்சியுடன் கூற,
“அதுக்கு அப்புறம் அவரோட வைப் பிரதமர் கிட்ட, ‘என்னோட புருஷன் வரமா குழந்தையை வாங்க மாட்டேன்’ன்னு போராட்டம் பண்ணி அப்புறம் தான் அவரை விடுவீச்சாங்க..” என்று ராங்க முடித்ததும் அமைதியே ஆட்கொள்ள அனைவரும் உறைந்திருந்தனர்.
‘எப்படிப்பட்ட சூழலில் அனைவரையும் சிக்கவைத்து விட்டேன்..?’ என விலோ தான் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
“இதுலாம் உனக்கு எப்படி டா தெரியும்..?” என்ற ப்ரதீப்பின் கேள்விக்கு, “கூகிள்ல இல்லாததே இல்லை டா. அண்ட் போலீஸ்னா சில நியூஸ் தெரிஞ்சிருக்கணும்” என ரங்கா தோளை குலுக்கினான்.
“ஹ்ம்ம். சுனில் ஜேம்ஸ் கதை இன்னும் எந்த இயக்குனருக்கும் தெரியல போலயே. தெரிஞ்சா இவருக்கும் ஒரு பையோபிக் எடுக்க கிளம்பிடுவாங்க..” என்று ஷிவன்யா கிண்டலுடன் சொன்னாள்.
“நமக்கே இப்ப தான ஷிவ் தெரியும். இதை மாதிரி படம் வந்தா தான மத்தவங்களுக்கும் இப்படிப்பட்ட ஆளுங்க இருக்கங்கன்னு தெரிய வரும். நீ எப்ப பார்த்தாலும் சினிமாவை பற்றி தப்பாவே சொல்லு..” என்று விலோ அவளை அதட்டினாள்.
“ஹ்ம்ம். கதைலாம் முடிஞ்சிடுச்சு. வாங்க நாம அடுத்த ரவுண்டு விளையாட போகலாம்..” என அனைவரையும் திசை திருப்பினான் அமர்.
“இப்ப போனவங்க திரும்பி வர வாய்ப்பிருக்கா..?” என அவர்களின் கண்ணைவிட்டு மறைந்து வெகு தொலைவு சென்றிருந்த கொள்ளைக்கார கப்பலை பார்த்தபடியே சக்தி கேட்டான்.
“ஏன் டா..?” என்று அவனை பார்த்து கேட்ட ப்ரதீப், “கடவுளே.. இனி இந்த விளையாட்டு முடியுற வரைக்கும் நான் அந்த கொள்ளைக்கார கும்பல் கண்ணுல படவே கூடாது. எப்படியாவது நான் அவங்ககிட்ட மாட்டிக்காம காப்பாத்து..” என இருண்ட வானத்தை நோக்கி வேண்டினான்.
அவனின் வேண்டுதலை கேட்ட ஷிவன்யா, “எவ்வளவு சுயநலம் ப்ரதீப்..?”
“நான் மட்டும் என்ன தனியாவா இருக்கேன். நானும் இந்த கப்பல்ல தான இருக்கேன். எல்லாரையும் சேர்த்து வேண்டிக்கிட்டது தான்!” என சமாளித்த ப்ரதீப்பிற்கு ‘தான் ஏன் தன்னை பற்றி மட்டும் வேண்டிக் கொண்டோம்..?’ என மனதில் உறுத்தியது.
அடுத்து ஆடுவதற்காக பகடையை கேட்டு ஷிவன்யாவிடம் கையை நீட்டினான் சக்தி. ஆனால், அவளோ அவனிடம் கொடுக்காமல் மற்றவர்களின் முகத்தை பார்த்தாள்.
“நீ போட வேண்டாம் சக்தி. ஏற்கனவே உனக்கு அடிப்பட்டிருக்கு தான?” - ப்ரதீப்
“பரவால. உங்க எல்லாரையும் தனியா மாட்டிவிட மாட்டேன். நானும் விளையாடுறேன். எது வந்தாலும் எல்லாரும் ஃபேஸ் பண்ணலாம்” என்று பகடையை ஷிவன்யாவிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
“சக்தி சொன்னா கேளு..” என்று அவனை தடுக்க வந்த அமரனை நிமிர்ந்து பார்த்தவன்,
“இப்ப நாம எல்லாரும் இங்க வந்திருக்கோம். இன்னும் போக போக இதை விளையாடுறவங்களை மட்டும் வேற எங்கயாவது கூட்டிட்டு போய்டுச்சினா, என்ன பண்ணுவீங்க..? என்னால நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம.. உங்களை விட்டுட்டு தனியா இருக்க முடியாது!” என சக்தி சொன்னதும் யாராலும் மறுக்க முடியவில்லை.
இப்பொழுது விளக்கை உபயோகிக்க முடியாது என்பதால் சக்தியின் கைபேசி வெளிச்சத்தில் பகடையை உருட்டிவிட்டான்.
பகடையில் ஒன்று என்று வர பச்சை நிற காயின் ஒன்றில் சென்று நின்றது. அங்கிருந்த குமிழிலும் எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது.
உனக்கான விளையாட்டை,
மீண்டும் விளையாட..
ஓர் சந்தர்ப்பம்..!
என அதில் வந்ததை வாசித்த விலோ,
“அப்படினா நீ மறுபடி போடணும் போல சக்தி. உனக்கு அடிபட்டிருக்குனு போனஸ் கொடுக்குது. இப்படி எல்லாருக்கும் கொடுத்தா சீக்கிரமா முடிச்சிட்டு நம்ம ஊரை பார்த்து போகலாம்” என்ற விலோ மறுபடி பகடையை சக்தியின் கையிலேயே கொடுத்தாள்.
அதனை வாங்கி சக்தி மீண்டும் உருட்டுவிட, இம்முறை ஆறு விழுந்தது. ஏற்கனவே ஆறில் இருந்த ப்ரதீப்பின் பிங்க் நிற காயினையும் தாண்டி ஏழில் சென்று நின்றது சக்தியின் பச்சைநிற காயின். அடுத்த நொடி எப்பொழுதும் போல் அந்த குமிழுக்குள் எழுத்துக்கள் தோன்றியது.
சக்தியின் அருகில் அமர்ந்திருந்த ப்ரதீப்பும் விலோவும் அதில் வந்த குறிப்பை வாசிக்க தொடங்கினர்.