எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூந்தென்றலாய்.. பூஞ்சாரலாய்..8

அத்தியாயம் - 8

காசிநாதன் மற்றும் தையல்நாயகியின் கடைசி மகள் ஸ்வேதாவின் திருமணம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது.

மிகப் பெரிய மண்டபம்! அதற்கு ஏற்ப மிகப் பெரிய மக்கள் கூட்டம் திரண்டு இருந்தது! மிகப் பெரிய பணக்கார வர்க்கத்தின் திருமணம் என்பதால் ஆடம்பரத்திற்கும் ஆட்டத்திற்கும் அளவில்லாமல் இருந்தது.

முகூர்த்த நேரம் முடியும் முன்னே ராதாவின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். மூவர் மட்டுமே வந்திருந்தார்கள். கீதா மற்றும் லதாவிற்கு காசிநாதன் தம்பதியினர் பத்திரிக்கை வைத்திருக்கவில்லை.

அதற்கு தையல்நாயகி தான் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஸ்வேதாவிற்கு இந்த வரன் பார்த்து முடித்திருந்த பொழுதே இதனை தம்பியிடம் தெரிவிக்க வேண்டும் என்று மனைவியிடம் சொன்னார் காசிநாதன். தையல்நாயகி அதனை ஒப்புக்கொள்ளவில்லை.

"உங்க பஞ்சப்பாட்டு பாடுற தம்பிக்கெல்லாம் இப்ப சொல்லணும்னு என்ன அவசியம்? பொறுமையா மத்தவங்களுக்கு எப்ப பத்திரிக்கை வைக்கிறோமோ அப்பயே சொல்லிக்கலாம். இல்லனா உங்க தம்பி குடும்பத்து வாய்ல தேவை இல்லாம நாம அரை படுவோம். கருவி கருவியே வெந்து போய்டுவாங்க" என்று இளக்ககாரமாக சொல்லி கணவனை தடுத்து விட்டார் தையல்நாயகி.

காசிநாதனும் மனைவி கிழித்த கோட்டை தாண்டாதவராதலால் அவரின் சொல்லை தட்டும் தைரியம் இருக்கவில்லை. அதே சமயம் தம்பி வீட்டிற்கு பத்திரிக்கை கொடுத்து வந்த பிறகு அவரின் மூத்த இரு மகள்களுக்கும் பத்திரிக்கை வைக்கலாம் என்று சொல்ல தையல்நாயகி அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை.

"உங்க தம்பிக்கு வச்சதே சும்மா பேருக்கு சம்பிரதாய முறைக்கு தான். இப்ப போய் வச்சுட்டு வந்ததுக்கே பாத்தீங்களா.. அந்த ராதா கழுதை என்ன பேசி பேசினான்னு..." என்று கடுப்பாய் சொன்னவர்,

"அவ அளவுக்கு அக்காளுங்க இல்ல தான். இருந்தாலும் எதுக்கு அதுங்களுக்கு வச்சிக்கிட்டு. கொஞ்சம் வசதி வாய்ப்பு இருந்து போய் வச்சா பரவால்ல. அதுங்க ரெண்டு பேரை கட்டிக் கொடுத்த குடும்பமும் உங்க தம்பி வீட்டளவு தான். அதுக்கு ஏன் நாம வீடேறி போய் பத்திரிக்கை வைக்கணும்? நம்ம வீட்டு கல்யாணத்துக்கு எல்லாரும் கிராண்டா வருவாங்க. அதுவும் இல்லாம ரொம்ப ரொம்ப பெரிய மனுஷங்க எல்லாம் வருவாங்க. உங்க தம்பி குடும்பம் ஒன்னுமில்லாம சிம்பிளா வந்து நிப்பாங்க. அதை நாலு பேரு கவனிச்சு நம்ம கிட்ட கேட்பாங்க. 'நீங்க மட்டும் நல்லா வசதி வாய்ப்போட இருக்கீங்க! உங்க தம்பி இன்னும் இப்படியே இருக்காரு'ன்னு.. தேவையா... ஒன்னும் வேண்டாம்" என்று முடிவாக கட்டளையிட்டார் கணவருக்கு. காசிநாதனும் மனைவியின் சொல்லை தட்டாத கணவாராய் நடந்து கொண்டார்.

திருமண சடங்குகள் முடிந்ததும் அனைவரும் வரிசையாக வந்து நின்று பரிசினை கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ள ராதாவின் குடும்பத்தினரும் அந்த வரிசையில் நின்றனர்.

தெய்வானைக்கு அத்தனை வருத்தமும் கோபமும் வந்தது! இப்படி வரிசையில் நிறுத்தி வைக்கப் பட வேண்டிய உறவா நாங்கள்? என்று தோன்ற அங்கே இருந்து எப்போதடா கிளம்புவோம் என்று இருந்தது அவருக்கு.

கண்ணபிரானுக்கும் அதே நிலை தான். அதுவும் ஒன்று இரண்டு உறவுக்காரர்கள் வேறு இவர்கள் காலையில் வந்திருப்பதை பார்த்துவிட்டு "என்னப்பா கண்ணா.. அண்ணன் மவ கல்யாணத்துக்கு இப்படி கடைசியா வந்து நிக்கிற.. முன்ன இருந்து எல்லாம் எடுத்து நடத்தறது இல்லையா? நீ தம்பி காரணாச்சே... உடன் பங்காளிப்பா நீயி... நீயே இப்படி வரலாமா" என்று கேட்டிருக்க அதனை எல்லாம் கேட்டு நொந்து போனார்.

அந்த உறவுக்காரரின் பேச்சிற்கு என்ன பதில் சொல்வது என்று சங்கடப்பட்டு போன கண்ணபிரான் "கொஞ்சம் கடையில வேலை அதனால தான்" என்று சொல்லி சமாளித்து இருந்தார்.

"என்னப்பா பெரிய வேலை? உன் மெடிக்கல் கடைல" என்று அந்த உறவுக்காரர் சற்று நக்கலாகவும் கேட்டிருக்க, கண்ணபிரான் ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டார்.

ஆனால், ராதவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவர் வந்து "முன்ன நின்னு நடத்துறது இல்லையா" என்று கேட்ட பொழுதே அவளுக்கு கோபம் சுறுசுறுவென வந்து விட்டிருந்தது!

அவர் அடுத்து "உன் மெடிக்கல் கடைல" என்று இழிவாக சொன்னதும் கோபம் பொங்கியே விட்டது அவளுக்கு.

பிறகென்ன?

பாயும் அருவியாக பாய்ந்து விட்டாள் அவரிடம்.

"அதென்ன மாமா உன் மெடிக்கல் கடையிலன்னு அவ்வளவு நக்கலா சொல்றீங்க?..." என்று ஒற்றை புருவம் உயர்த்தி தீர்க்கமாக கேட்டவள்,

"அந்த மெடிக்கல வச்சு தான் எங்க அப்பா எங்க மூணு பேத்தையும் வளர்த்து ஆளாக்கி இருக்காரு. அது மட்டும் இல்ல.. காசி பெரியப்பா நஷ்டத்துல ஓடின மெடிக்கல தான் எங்க அப்பா தலைல கட்டினாரு. அந்த நஷ்டத்தில ஓடின மெடிக்கல் கடையயும் தூக்கி நிறுத்தி எங்க அப்பா எங்கள ஆளாக்கி இருக்காரு. ஆனா நீங்க என்னடான்னா அவ்வளவு இளக்காரமா பேசுறீங்க?" என்று தீயாய் பேசியவள்,

"ராதா" என்று கண்ணபிரான் அதட்டுதையும் பொருட்படுத்தாது மேலும் வெடித்தாள்.

"நீங்க சும்மா இருங்கப்பா.. இந்த மாதிரி பேச்சு எல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்கறதுனால தான் நம்மல இன்னும் இன்னும் பேசுறாங்க. குனிஞ்சுக்கிட்டே இருந்தீங்கன்னா குட்டிக் கிட்டே தான் இருப்பாங்க" என்றவள் அவரைப் பார்த்து

"அப்புறம் என்ன சொன்னீங்க?? கூடப் பிறந்த தம்பிகாரன் ஆச்சே... உடன் பங்காளின்னா???" என்று சொல்லி எள்ளலாய் உதட்டை வளைத்தவள்,

"அந்த நினைப்பு நீங்க பெருமையா பீத்துற காசிநாதன் பெரியப்பா குடும்பத்துக்குள்ள தெரிஞ்சிருக்கணும்? யாரோ மூணாவது மனுஷங்களுக்கு குடுக்குற மாதிரி எங்க வீட்டுக்கு வந்து வேண்டா வெறுப்ப்பா பத்திரிக்கை வச்சிட்டு போறாங்க. அது மட்டும் கிடையாது ஸ்வேதா அக்காவுக்கு கல்யாணம்னு எங்களுக்கு அவங்க பத்திரிக்கை வைக்க வந்த அன்னைக்கு தான் தெரியும். இதுல எங்க இருந்து முன்ன நின்னு நாங்க கல்யாணத்தை நடத்த?? முறையா சொல்லாத மனுஷங்களுக்கு எங்க அப்பா வந்து எல்லாம் கரக்ட்டா முறையா பண்ணனுமா???? எப்படி இருக்கு உங்க மேல் வர்க்கத்து நியாயம்?" என்று அந்த உறவுக்காரரே கதறி ஓடி விடும் அளவுக்கு பேசி விட்டிருந்தாள் ராதா!

"அம்மாடி.. தெரியாம எதோ வாய்க்கு வந்ததை பேசிட்டேன் ஆத்தா. ஆளை விடு. எதோ கண்ணபிரான பாத்ததும் பேசிட்டேன். நீ இருக்கேன்னு மறந்து போனேன். என்னைய ஆளை விடுத்தா" என்று அவர் அங்கிருந்து நொடிப் பொழுதில் நகர்ந்து விட்டாலும்,

"இந்த புள்ள பேசுற பேச்சுக்கு எந்த புள்ள மாட்டப் போறானா.. புருஷனை என்ன பாடு படுத்தப் போறாளோ" என்று தன் போக்கில் சொல்லி விட்டுச் சென்றிருந்தார் அவர்.

அதைக் கேட்டு கண்ணபிரான் ராதாவை அடிக்கும் பார்வை பார்க்க அந்தப் பார்வைக்கு எல்லாம் அசரவில்லை ராதா. அசரும் ரகமும் இல்லையே அவள்.

"இப்ப என்ன எதுக்குப்பா முறைக்கிறீங்க? அவர் பேசினது மட்டும் நல்லா இருந்ததா? சொல்லப்போனா இந்நேரம் நான் பேசினத நீங்க பேசி இருந்தீங்கன்னா நான் பேச வேண்டிய அவசியமே வந்திருக்காது" என்று கோபமாக சொல்ல,

"வாயை மூடிக்கிட்டு இரு ராதா. பொது இடம்னு பாக்காம உன்ன அறஞ்சுற போறேன்" என்று பல்லை கடித்தார் கண்ணபிரான்.

"அரைங்க! எனக்கு ஒன்னும் பயமில்லை! ஏன்னா நான் பேசினதுல எந்த தப்பும் இல்ல" என்றாள் மிடுக்குடன்.

விட்டால் இருவருக்கும் இங்கேயே முட்டிக் கொள்ளுமோ என்று பயந்து போன தெய்வானை "சும்மா இரு ராதா" என்று மகளை அதட்டி அவளின் வாயை அடைத்தவர்,

"என்னங்க நீங்க போய் சாப்பிட்டு வாங்க. அப்புறம் போய் போட்டோ எடுத்துக்கலாம்" என்று கணவரை அங்கிருந்து கிளப்பி இருந்தார்.

இந்த பேச்சு வார்த்தை நடந்ததை நரேந்திரனின் குடும்பத்தினரும் கவனித்து இருந்தனர்.

ஆம்!

நரேந்திரன் குடும்பம் தான்! அவர்களும் வருகை தந்திருந்தனர் இத்திருமணத்திற்கு.

தையல்நாயகியின் தூரத்து உறவினர் தான் மயில்வாகனம். ஒரு வகையில் தையல்நாயகிக்கு தம்பி முறை அவர்!

வீட்டிற்கு வந்து தையல் நாயகி பாத்திரிக்கை வைத்து சென்றிருக்க அதை மறுக்க முடியாமல் வந்திருந்தனர்.

குமுதாவிற்கு இந்தத் திருமணத்திற்கு வர விருப்பமே இல்லை. தையல்நாயகி கணவரின் தூரத்து உறவுக்கார முறையாக இருந்தாலும் அவ்வப்போது விசேஷங்களில் கூடும் பொழுது அவரைக் கண்டிருக்கிறார் குமுதா!

மிகவும் அலட்டல் பேர்வழி என்று குமுதாவிற்கு அவரை அவ்வளவு பிடிக்காது. பணத்திமிருடன் நடந்து கொள்ளும் அவரையும், அதே பணத் திமிருடன் தங்களை ஒரு படி கீழாக நடத்தும் அவரையும் சுத்தமாய் பிடிப்பதில்லை.

ஆனால் என்ன செய்ய? பெயருக்காக அவர்கள் பத்திரிக்கை வைத்து சென்றிருக்க நாமும் பெயருக்காக தலையை காட்டி விட்டு வரலாம் என்று மயில்வாகனம் சொன்னதை தட்ட முடியவில்லை குமுதாவால்.

ஏற்கனவே அவரின் மூத்த மூன்று பெண்களின் திருமணத்திற்கும் தையல்நாயகி பத்திரிக்கை வைத்து சென்றிருந்தார் தான்! ஆனால் குமுதா வர பிரியப்படவில்லை.

மயில்வாகனமும் மனைவியின் பிடித்தமின்மையில் வந்திருக்கவில்லை. ஆனால், இம்முறை பத்திரிக்கை வைக்க வந்த போதே,

"ஏற்கனவே மூணு பொண்ணுங்க கல்யாணத்துக்கு வீடேறி வந்து பத்திரிக்கை வச்சிட்டு தான் போனேன் தம்பி. என்ன குறையோ குத்தமோ.. நீங்க மூணு கல்யாணத்துக்கும் தலை காட்டல! உன் சம்சாரம் வரலைன்னாலும் நீயாச்சும் வந்திருக்கலாம். இல்ல நீங்க வந்தா உங்க குடும்ப வசதி வச்சு யாரும் எதும் பேசிடுவாங்கன்னு வராம இருந்தீங்களோ என்னவோ?" என்று நாசுக்காக அவர்களை கீழிறக்கி பேசியவர்,

"என்னவோ.. என் கடமையை நான் சரியா தான் பண்ணனும்னு நினைக்கிறேன். அதனால தான் கடைசி பொண்ணு கல்யாணத்துக்கு மட்டும் ஏன் சொல்லாம விடுவானேன்னு மறுபடியும் வீடேறி வந்து சொல்லிட்டு போறேன்! வரதும் வராததும் உங்க விருப்பம்" என்று அலட்டி விட்டு சென்றிருந்தார்.

அவரின் கூற்றை கேட்ட மயில்வாகனத்திற்கும் படு சங்கடமாகப் போய்விட்டது. 'மூணு பொண்ணுங்க கல்யாணத்துல ஒரு பொண்ணு கல்யாணத்துக்காகவாச்கும் போயி தலைய காட்டிட்டு வந்து இருக்கலாம்' என்று எண்ணிக் கொண்டவர்,

தையல்நாயகி பேசி விட்டு சென்றதில் முகம் கடுக்க நின்றிருந்த குமுதாவிடம் "இந்த ஒரே ஒரு கல்யாணம் தானே குமுதா.. போயிட்டு வந்துரலாமே.. ஏன் நாயகி அக்கா கிட்ட குறை வைக்கணும்? அதுவும் இதான் அவங்க வீட்ல கடைசி கல்யாணம் வேற" என்று மனைவியிடம் ஏதேதோ காரணங்களை அடுக்கி சமாதானம் செய்து அழைத்து வந்திருந்தார்.

அப்படி இருந்தும் குமுதாவிற்கு வர விருப்பம் இல்லை தான். வேண்டா வெறுப்பாக கிளம்பிய அன்னையின் முகம் கண்டு நரேந்திரன் கூட சொல்லிப் பார்த்து விட்டான் தந்தையிடம்.


"அம்மாவுக்கு இந்த கல்யாணத்துக்கு போக பிடிக்கவே இல்லையேப்பா! நாம ஏன் இப்படி பிடிக்காமல் போகணும்" என்று.

அவரோ "எனக்கும் தான் பிடிக்கல நரேன். நாயகி அக்கா கொஞ்சம் பந்தா ஆளு தான். ஆனா உறவாகி போய்ட்டாங்களே. ஏற்கனவே அவுங்க மொத மூணு பொண்ணுங்களுக்கு நடந்த கல்யாணத்துக்கும் நம்ம போகல. அதெல்லாம் மறந்துட்டு இப்ப மறுபடியும் வீடு ஏறி வந்து கடைசி கல்யாணம்னு சொல்லிட்டு பத்திரிக்கை வச்சிட்டு போறாங்க. எப்படி தவிர்க்க முடியும்? நல்லாவா இருக்கு?" என்று அவனிடமே கேட்க, அவனுக்கும் தந்தையின் கூற்றில் இருந்த நியாயம் புரிந்து தான் இருந்தது.

குமுதாவிற்கும் அந்த நியாயம் புரிந்து இருந்ததால் தான் திருமணத்தில் தலை காட்ட சம்மதம் சொல்லி இருந்தார். இதோ இப்போது வந்தும் விட்டார்கள்.

ராதாவின் குடும்பத்தினர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் தான் நரேந்திரன் குடும்பமும் அமர்ந்து இருந்தனர்.

முதலில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் ராதா குரலை உயர்த்தி பேச ஆரம்பித்ததில் அவர்களின் கவனம் தானாகவே இவர்கள் மேல் படிந்து இருந்தது.

அதுவும் நரேந்திரன்... அவனுக்கும் அன்று அலுவலகம் விடுமுறை தினம் தான் என்பதால் அவனும் பெற்றோருடன் வந்திருந்தான் அத்திருமணத்திற்கு.

வந்த இடத்தில் அவன் தன் மனதிற்கினியவளை காண்போம் என்று எண்ணி இருக்கவில்லை.

"யாருடா இந்த பொண்ணு.. சும்மா சரவெடியா வெடிக்கிறா" என்று அசட்டையாக எண்ணி தான் பார்வையை திருப்பினான். ஆனால் நிச்சயம் அவன் அவளை அங்கே எதிர் பார்க்கவில்லை!

பார்த்த நொடி இனிமையாய் அதிர்ந்து தான் போனான் ஒரு நொடி. "இவளா?" என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டவன், அந்த பேச்சை முடியும் வரை கேட்டு விட்டு "சாதாரண வெடி இல்ல.. சரவெடி பொண்ணு தான் போலயே" என்று எண்ணிக் கொண்டான்.

மேலும் அவளிடம் டோஸ் வாங்கிய அந்த ஆளைக் கண்டு "நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டு போறாரு" என்று அந்த உறவுக் காரருக்காக பரிதாப பட்டவன் அவளின் அன்னை அவள் பெயர் சொல்லி உச்சரித்ததை கண்டு "ராதா தான் பேரா.." என்று எண்ணிக் கொண்டான்.

மடை திறந்த வெள்ளமாய் ராதாவின் மடமட பேச்சை கேட்டு அவனுக்கு ஆச்சர்யமாக கூட இருந்தது. தான் சிக்னலில் பார்த்த பெண்ணா இவள் என்று ஒரு புறம் சிந்தனை பிறக்க, மற்றொரு புறம் தன் பிறந்தநாள் அன்று கோவிலில் கைகளில் குழந்தையை தூக்கிக் கொண்டு அன்னைத் தோற்றத்தில் அழகாய் நின்றிருந்த பெண்ணா இவள்? என்றும் தோன்றியது.

ஆனாலும் அவளின் பேச்சை கேட்டவனுக்கு எதுவும் தவறாக தோன்றவில்லை. அவள் முகத்தில் தென்பட்ட சீற்றம் கூட எதோ ஒரு வகையில் நியாயமான முறையில் தான் தெரிந்தது இவனுக்கு.

தார்மீக கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கணக் கச்சிதமாக தானே பேசிகிறாள் என்று தோன்ற அவளை குளிரும் நிலவாகவும் சுட்டெரிக்கும் சுடராகாவும் உணர்ந்தான் நரேந்திரன்.

ஏனோ அவளின் இந்த குணாதசியம் அவனை இன்னுமே அவளிடம் ஈர்த்தது. எந்த வித வெளிப்பூச்சும் இல்லை அவளிடம்! கண்ணாடி போல் காட்டியதை திரும்ப பிரதிபலிக்கும் ரகம் அவள் என்று உணர்ந்து கொண்டான்.

ஒரு வகையில் அது நல்லதிற்கு தானே என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால்!

"மனசுக்குள்ள வச்சு வச்சு ஓவர் திங்க் பண்ணி காம்ப்ளிகேட் பண்ணிக்கிறதுக்கு இப்படி பேசுறது பெட்டர்" என்று அவளின் பேச்சுக்கான நேர்மறை சிந்தனைகளை தனக்குள் பட்டியலிட்டான் நரேந்திரன்.

ஆக மொத்தம் ராதாவை அவன் நேசித்தான்! அவளின் குணாதிசயத்தையும் நேசித்தான்!

இவன் இப்படி ஒரு எண்ணத்தில் அவளை நினைத்துக் கொண்டிருக்க, குமுதாவோ இல்லம் வந்ததும் வராதாதுமாக, "ஆத்தாடி.. இன்னைக்கு நம்ம சேருக்கு முன்னாடி உக்காந்து இருந்த பொண்ணு என்னமா பேசினா அவருகிட்ட.. அப்பாடி.. ஆடிப் போய்ட்டேன். கொஞ்சம் தில்லான பொண்ணு தான். அவுங்க அப்பா மிரட்டினதை கூட பொருட்படுத்தாம நல்லா பேசி தள்ளிட்டா" என்று ஆச்சர்யமாய் புலம்பியவர் மேலும்,

"அவுங்க அப்பா அடிச்சிடுவேன்னு சொல்றாரு... அதுக்கும் பயப்படலங்க அந்த பொண்ணு.. திண்ணக்கமா நான் பேசினதுல எந்த தப்பும் இல்லேன்னு சொல்லிட்டா... நெஞ்சுரம் ஜாஸ்தி தான்" என்று கணவரிடம் சொன்னவர்,

"நல்லா தைரியமா தான் பேசினா. ஆனா, எல்லார் முன்னாடியும் இப்படி பேசினா என்ன நினைப்பாங்க? கொஞ்சம் பெரியவங்க சொன்னதை கேட்டிருக்கலாம். பாவம் அவ அப்பா. ரொம்ப தர்ம சங்கடமா போச்சு அவருக்கு." என்றும் சொல்ல நரேந்திரன் தான் அன்னையின் பேச்சை கேட்டு சற்றே தவித்து போனான்.

நேரடியான சந்திப்பு இல்லை என்றாலும் இதான் அன்னை அவளை முதலில் பார்ப்பது. அப்படி பார்த்த அன்றே இரு வேறு விதமான கருத்துக்களை அன்னையிடம் பெற்றிருந்தாள் ராதா.

ஒரு புறம் அவளின் பேச்சு தைரியம் மிகுந்த நிமிர்வான பேச்சு என்று எண்ண வைத்தாலும், மற்றொரு புறம் இப்படியும் அனைவர் முன்பும் எதையும் யோசிக்காமல் உள்ளதை அப்படியே சொல்லி விட வேண்டுமா? என்ற கண்ணோட்டமும் இருந்தது குமுதாவிற்கு.

அன்னையின் கூ
ற்றை எல்லாம் கேட்டுக் கொண்டவன் "அம்மாக்கு அவளை பிடிக்கனும் கடவுளே" என்று வேண்டிக் கொண்டான் தனக்கு பிடித்தவளை எண்ணி!


 
Top