எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 16

Fa.Shafana

Moderator

அந்த நகரத்தின் குடியிருப்புப் பகுதியை ஒட்டி இருக்கும் அந்தப் பூங்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

சிறுவர்கள் அவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுத் திடலில் விளையாடிக் கொண்டிருக்க பெரியவர்கள் சிலர் அவர்களுடன் இருந்தார்கள்.

பூங்காவின் ஒரு எல்லையில் இருந்த மரத்தினடியில் கையில் ஒரு புத்தகத்துடன் கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த வெங்கடேசன் புத்தகத்தை வாசிப்பதும் தூரத்தில் தெரிந்த விளையாட்டுத் திடலைக் கவனிப்பதுமாக இருந்தார்.

"ஹலோ வெங்கடேசன் சார்" என்ற குரலில் அவரின் கவனம் தன்னருகே அமர்ந்த மகேந்திரனிடம் திரும்பியது.

"ஹலோ சார்" என்று அவருடன் பேச ஆரம்பித்தார்.

மகேந்திரன் அந்த ஊருக்கு புதிதாக குடி வந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். ஒரு மாதத்திற்கு முன் தான் வெங்கடேசனின் அறிமுகம் கிடைத்தது அவருக்கு.

வெங்கடேசன் அறிமுகமான நாளிலிருந்தே பல விடயங்களை பகிர்ந்து கொள்ளவும், கலந்து பேசவும் ஆரம்பித்திருந்தனர்.

அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு என பல விடயங்களில் அவர்கள் இருவரின் பார்வையும் கருத்தும் ஒருமித்தே இருந்தன.

"இந்த புத்தகத்த படிச்சி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறேன் மகேந்திரன் சார், நீங்களும் படிச்சு பாருங்க நல்லா இருக்கும்" என்றவரிடம்

"லாஸ்ட் வீக் ஒரு புத்தகம் கொடுக்குறேன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா சார்?" என்றார்.

"ஓ.. சொல்லி இருந்தேனா? என்ன புத்தகம்னு மறந்துட்டேனே. உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்?" என்றார் அவரிடமே.

இந்த ஒரு மாதத்தில் வெங்கடேசன் தருவதாகக் கூறி மறந்து போன நான்காவது புத்தகம் அது.

வாரத்தில் ஓரிரு நாட்கள் அந்தப் பூங்காவிற்கு வரும் மகேந்திரன் வெங்கடேசனை சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்துடனே இருப்பார் அவர். பேச்சினூடே புத்தகம் தருவதாகக் கூறுபவர் பின்னர் தராமலிருக்க,
இன்றும் அதையே கூறியவரிடம் முன்னையதைக் கேட்க மறந்துவிட்டதாக கூறிபவரை புரியாமல் பார்த்த மகேந்திரன்,

"ஏதோ காலநிலை மாற்றம் பத்தின புத்தகம்னு தான் சொன்னீங்க, வேற எதுவும் சொல்லல்லையே. சரி அதை விடுங்க சார் இதை படிச்சிட்டு கொடுங்க" என்றார் மகேந்திரன்.

பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்களைக் கலைத்தது,

"அப்பா..!" என்ற குரல்.

"வெற்றி.. என்னப்பா?" என்ற வெங்கடேசன்,

"என் இளைய மகன் சார்,
வெற்றி இவர் தான் மகேந்திரன் சார்" என்றார் இருவரிடமும் அறிமுகம் செய்து வைக்கும் விதமாக.

"ஹலோ சார். அப்பா உங்களை பற்றி சொல்லி இருக்காங்க. இன்னைக்கு தான் மீட் பண்ண கிடைச்சிருக்கு. சந்தோஷம் சார்" என்றான்.

"உங்களைப் பற்றியும், உங்க அண்ணா, அக்கா பற்றியும் அப்பா நிறைய சொல்லி இருக்காங்கப்பா. போலீஸ், டீச்சர், டாக்டர்னு ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைல நாட்டுக்கு சேவை செய்துட்டு இருக்கீங்க" என்றவரிடம் பதில் கூற முடியாது விழித்துக் கொண்டு நின்றான் அவன்.

"சார் அது வந்து.." என்றவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்றே தெரியாமல் இருக்க, அவனின் அலைபேசி ஒலித்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ சார். வைஃப் தான்" என்றவன் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ ஸாரா.. அப்பா இங்க பார்க்ல தான் இருக்கார். நான் கூட்டிட்டு வரேன்"

"..."
"இல்ல.. இல்ல பிரச்சனை எதுவும் இல்ல. இங்க கொஞ்சம் இருந்துட்டு நான் கூட்டிட்டு வரேன். நீ பாப்பாவ பாரு"
என்றவன் அழைப்பைத் துண்டிக்க.

"உட்காருங்க வெற்றி" என்ற மகேந்திரனுக்குள் ஏதோ ஒரு நெருடல்.

சட்டென எழுந்த வெங்கடேசன் தனக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனும் விதமாக சிறுவர்களுக்கான திடலை நோக்கி நடக்க ஆரம்பிக்க,

"அப்பா.." என்றான் வெற்றி.

"நீங்க பேசிட்டு இருங்க நான் ஒரு சுத்து நடந்துட்டு வரேன்" என்றவர் நடையைத் தொடர, ஓய்ந்து போய் மகேந்திரன் அருகே அமர்ந்தான் வெற்றி.

"என்னாச்சு வெற்றி?" என்ற மகேந்திரனிடம்,

"என் பொண்ணுக்கு ரெண்டு வயசு சார். அவளை வெளியே சைக்கிள்ல வெச்சு தள்ளிட்டு இருந்தவர் அவளை அப்படியே விட்டுட்டு இங்க வந்திருக்கார். அவ அழுற சத்தம் கேட்டு என் வைஃப் வந்து பார்த்தா சைக்கிள்ல இருந்து விழுந்து கால்ல காயம். நல்லவேளயா கேட்ட (நுழைவாயில்) மூடிட்டு வந்திருக்கார். இல்லைன்னா பாப்பா ரோட்டுக்கு வந்திருப்பா" என்றான் ஆயாசமாக.

"புரியல்லை வெற்றி. ஏன் இப்படி?" என்றார் மகேந்திரன்.

"உங்க கிட்ட சொல்றதுல என்ன சார்" என்றவன் படபடவென்று அனைத்தையும் கூற ஆரம்பித்தான்.

வெங்கடேசன் நன்றாகப் படிக்கக் கூடியவராக இருந்தும் வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டவர்.

பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தவர் ஊரில் இருந்த தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் தானும் திருமணம் செய்து கொண்டவருக்கு மூன்று பிள்ளைகள்.

மூவரையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல தொழிலில் அமர்த்த வேண்டுமென்பது அவரது ஆசை, கனவு, இலட்சியம்!

ஆனால் நடந்தது அனைத்தும் தலைகீழ்.

வெற்றியும் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் திடீரென சுகவீனமுற்ற அவனைது தாய் இறந்து விட்டார்.

மூத்தவன் ராமதாஸ் படிப்பில் நாட்டமில்லாதவன் தொடர்ந்து படிக்க முடியாதென்றும் ஏதாவது வேலைக்குப் போக இருப்பதாகவும் ஏற்கனவே வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருந்தான். மனைவியின் திடீர் மறைவு வெங்கடேசனை கலங்க வைத்திருக்க மகனுடன் போராட முடியாமல் அவனது விருப்பம் என்று விட்டுவிட்டு, இளையவர்கள் கனகாவும் வெற்றியும் அவரது ஆசையை நிறைவேற்றுவர் என்று நம்பி இருந்தார்.

ஆனால் ராமதாஸின் நண்பன் மூர்த்தியின் மேல் காதல் கொண்டிருந்த கனகா படிப்பில் கோட்டை விட்டிருக்க, கல்லூரியில் சேருமளவுக்கு மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறவில்லை.

மனதளவில் மேலும் உடைந்து போனார் வெங்கடேசன்.

எது எப்படியோ மூர்த்தி அவன் பெற்றோரை அண்டி இருக்காமல் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடியுமானால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக வெங்கடேசன் கூறி இருக்க, யாரும் எதிர்பாராத விதத்தில் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் கனகா.

இரண்டு வருடங்களுக்குள் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் உடலளவிலும் மனதளவிலும் சோர்வுற்றார் வெங்கடேசன்.

அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வெற்றியை வந்து சேர்ந்தாலும் படிப்பைக் கைவிடவில்லை அவன்.

உடல் தேறிய வெங்கடேசன் பழையபடி வேலைக்குச் செல்ல வெற்றி படிப்பில் கவனம் செலுத்தினான்.

அவனுக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு இறுதி நாள்..
போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக காவல்துறையினர் ராமதாஸையும் மூர்த்தியையும் கைது செய்துவிட்டதாக செய்தி வர மூர்ச்சையாகி விழுந்தார் வெங்கடேசன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு உடல்நிலை தேறினாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது.

தன்னைப் போல ஏதேதோ பேச ஆரம்பித்தார். தானும் தன் பிள்ளைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகவும் தனக்குள்ளே உருவகப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

மனப் பிறழ்வு!
அவரது ஆழ்மன ஆசைகளும், ஏக்கங்களுமே இந்நிலைக்கான காரணமென மருத்துவர்கள் கூறினர்.

ஓரளவுக்கு மேல் மருத்துவமும் கை கொடுக்கவில்லை. ஆரம்பித்தில் இருந்ததை விட இந்த ஐந்து வருடங்களில் சிறிது தேறி இருந்தாலும் முற்றாக குணமாகவில்லை அவர்.
அப்படி முற்றிலும் குணமாகும் வாய்ப்பும் இல்லை!

அனைத்தையும் கூறி முடிக்கும் வரை வெற்றியின் பார்வை வெங்கடேசனிடமே இருந்தது. அவரைக் கவனித்துக் கொண்டே தான் இருந்தான்.

"ரொம்ப வருத்தமா இருக்கு வெற்றி.." என்றார் மகேந்திரன்.

"எங்க அப்பாவோட நிலமை யாருக்கும் வரக்கூடாது சார். அவருக்குக் கிடைக்காத படிப்பும் தொழிலும் எங்களுக்குக் கிடைக்கணும்னு ஆசைப்பட்டார். ஒரு அப்பாவா நியாயமான ஆசை தான்.

ஆனாலும் நம்ம தலையெழுத்து எப்படி எல்லாமோ இருக்கும் போது, அது எதுவும் தெரியாம நாமளே ஏதாவது ஆசைப்பட்டு அது நடக்காம போகும் நேரம் ஏமாற்றமும் ஏக்கமும்னு மனசு கஷ்டப்பட்டு இருந்ததும் கெட்டு, மனசும் உடம்பும் நோய்வாய்ப்பட்டு.. எதுக்கு சார் இதெல்லாம். நமக்குன்னு என்ன இருக்கோ அது நம்மளை வந்து சேரட்டும் அது வரை நாம முயற்சி செய்துட்டு மட்டும் இருப்போம்னு இருக்கணும் சார்.

நமக்குக் கிடைக்காதது பிள்ளைகளுக்குக் கிடைக்கணும், நம்மளை விட நல்லா நம்ம பிள்ளைகள் வாழணும்னு எல்லாம் கற்பனை கோட்டை கட்டவே கூடாது சார். நேர்மறைகள் போல எதிர்மறைகளும் சேர்ந்தது தான் வாழ்க்கைன்னு மனச தேத்திக்க தெரியணும். எது வந்தாலும் அதை ஏத்துக்கணும், கடந்து வரணும்.

பிள்ளைகள் விஷயத்துல நாம ஆசைப்பட்டா மட்டும் போதுமா? அதை நிறைவேத்துற அளவுக்கு நம்ம பிள்ளைகள் இருக்காங்களான்னு யோசிக்கணும்.

பெத்தவங்களுக்கு பிள்ளைகள் மேல அக்கறையும், அவங்க எதிர்காலத்த பத்தின கனவும் கற்பனையும் ஆசையும் இருக்கணும் தான் சார் ஆனா அது எல்லாம் ஒரு அளவுக்கு தான்.

இல்லைன்னா அதனால பாதிக்கப்படுறது எங்க அப்பாவ போல பெத்தவங்க மட்டுமில்ல, தங்களோட ஆசைகளுக்காக பிள்ளைகள போட்டு பாடா படுத்துற பெத்தவங்க கிட்ட சிக்கித் தவிக்கிற பிள்ளைகளும் தான்.

நமக்கு என்ன விதிச்சதோ அது நம்மளை வந்து சேரும். அது மட்டும் தான் வந்து சேரும். அதை விட அதிகமாவும் இல்ல, குறைவாவும் இல்ல" என்றான் வெற்றி.

"உண்மை தான் வெற்றி. எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கணும். அதிகப்படியான எதிர்பார்ப்பும் அது கிடைக்காம போகும் போது வரும் ஏமாற்றமும், ஏக்கமும் ஒருத்தரை எந்தளவுக்கு மனதளவுல பாதிக்கும்னு கண்கூடா பார்த்துட்டேன்" என்றவர்,

"நீங்க டாக்டர்னு.." என்றார் கேட்க வந்ததை கேக்கத் தயங்கிய மகேந்திரன்.

"இல்லை சார். சாப்ட்வேர் கம்பெனில வேலை. போதுமானளவு வருமானம். சொந்த ஊர விட்டு இங்க வந்துட்டோம். அப்பாவுக்கு அங்க இருக்க, இருக்க நிகழ்வுகளோட தாக்கம் அதிகமாகிச்சு. ஊர்ல எல்லாருக்கும் எல்லாம் தெரியும். இவர் சொல்றத மறுத்துப் பேச ஆள் இருக்கும் போது, தான் சொல்றது தான் உண்மைன்னு நம்ப வைக்கணும்னு ஒவ்வொருத்தரா போய் சொல்ல ஆரம்பிச்சார். அதனால மத்தவங்களுக்கும் கஷ்டம், சட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசுறவங்களால அப்பாவுக்கு கஷ்டம் எனக்கும் கஷ்டம். என்ன இருந்தாலும் எனக்கு அப்பா இல்லையா? யாராவது ஏதாவது சட்டுன்னு சொல்லும் போது ரொம்ப கஷ்டமாகிடும் சார்.

அதான் இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன். சொந்த ஊர் நமக்கு ஆதரவா இருந்தா அங்கேயே இருக்கலாம். இல்லைன்னும் போது விட்டுட்டு வரத் தான் தோனிச்சு சார்.

இங்க வந்த கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருந்தது. ஆஃபிஸ் டைம்ல இவர் கூட இருக்க ஒருத்தர வெச்சிருந்தேன். எங்க வீட்டு பக்கத்துல தான் அவரும். அவர் தான் இந்த பார்க்குக்கு கூட்டிட்டு வந்து பழக்கினது. அப்பா அவர் கிட்ட கேட்டு அவர் கூடவே லைப்ரரி, பக்கத்துல கடைகளுக்கு எல்லாம் போக வர ஆரம்பிச்சார்.

அப்பாவுக்கு புத்தகங்களோட நேரம் போகும் போது பேச்சுத் துணைக்கு ஆள் தேவப்படல்லை. அதுவும் பழக்கம் இல்லாதவங்கன்னு தானாக போய் பேசவும் தயக்கம் அவருக்கு. இருந்தும் ஏதேச்சையா புதுசா யாராவது பேசிப் பழக ஆரம்பிச்சா உங்க கிட்ட சொன்ன மாதிரி தான் பிள்ளைகள பற்றி சொல்லி வைப்பார். என் கிட்ட யாராவது விசாரிச்சா நான் உண்மைய சொல்லிடுவேன். ஆரம்பத்துல கொஞ்சம் சங்கடமா இருக்கும் இப்போ பழகிடுச்சு. பிள்ளைகளால தானே அவருக்கு இந்த நிலமை. அப்போ அவரோட ஒரு பிள்ளையா அவருக்காக நான் எல்லாம் செய்யணும்ல சார்" என்றான்.

"தன்னை நல்லவிதமா, கௌரவமா காட்டிக்கிறதுல அவருக்கு ஒரு திருப்தி. அவரோட கற்பனை உலகம் அழகா இருக்கு. அதுலயே வாழுறார் அவர்"

"ம்ம்.. அதான் உண்மைன்னு நினைச்சிட்டு இருக்கார். அப்படியே இருக்கட்டுமே சார். யாருக்கும் அவரால பாதிப்பு இல்லையே. என்ன ஒன்னு சில நேரங்கள்ல, செஞ்சிட்டு இருக்குற வேலைய சட்டுன்னு மறந்துடுவார். இப்போ அப்படியானதுல தான் பாப்பாவ விட்டுட்டு வந்திருக்கார்.

பாப்பாவ வெச்சுட்டு இவர் டிவி பார்த்துட்டு இருந்திருக்கார். ஸாரா கிட்சன்ல இருந்திருக்கா எப்போ பாப்பாவோட வெளிய வந்தார், பாப்பாவோட சைக்கிள எடுத்தார்னு தெரியல்லை. இனிமேல் கேட் லாக் பண்ணி வைக்கணும்" என்றான்.

"ம்ம்.. பாப்பாவ ரோட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா ரிஸ்க் ஆகிடும்ப்பா" என்றார்.

"ஸாரா அப்பா மேல ஒரு கண் வெச்சுட்டே தான் இருப்பா. ஏதோ இன்னைக்கு மிஸ்ஸாகிடுச்சு. இந்த பார்க்குக்கு மட்டும் தான் அடிக்கடி வருவார். வரதா இருந்தா சொல்லிட்டு தான் வருவார். சில நேரம் ஸாராவும் பாப்பாவும் வருவாங்க. என்ன தான் நாம பார்த்தாலும் கண் மறையும் நேரம்னு இருக்கு இல்லையா சார் அப்படித்தான் இன்னைக்கு நடந்து அவ ரொம்ப பயந்துட்டா"

"உங்க வைஃப்க்கு இந்த ஊர் தானா?"

"ம்ம்.. ஆமா சார். ஸாராவோட பெரியப்பா பையனும் நானும் ஒரே டிபார்ட்மென்ட்ல தான் வேலை. என்னைப் பற்றி, அப்பாவைப் பற்றி தெரியும். ஸாராவுக்கு கல்யாணத்துக்கு பார்க்கவும் அவங்க வீட்டுல பேசி இருக்கான். கடவுளோட அருள அவ மூலமா எங்களுக்குக் காட்டி இருக்கார்.

அப்பாவை ரொம்ப நல்லா, அன்பா பார்த்துக்குவா. இவருக்கும் அவ மேல தனி பாசம். அவளையும் படிச்சி வேலைக்குப் போய் இருக்கலாம்னு சொல்லி, நான் வேலைக்குப் போனா உங்களை யார் பார்த்துக்குறதுன்னு அவ சொல்லி அவங்களுக்குள்ள செல்ல சண்டை எல்லாம் வரும். நான் ஓரமா நின்னு வேடிக்கை பார்க்குறதோட சரி" என்று புன்னகைக்க

"ம்ம்.. சண்டைய வேடிக்கை பார்க்குற ஆள்" என்று ஸாராவின் குரல் கேட்டது.

"சார் என் வைஃப்" என்று எழுந்தவன்,

"அப்பா சொல்லுவாரே மகேந்திரன் சார்" என்று அறிமுகப்படுத்திகனான்.

"ஹலோ சார்" என்றவள்,

"நீங்க வந்து ரொம்ப நேரமாச்சு. பாப்பாவும் உங்க ரெண்டு பேரையும் தேடி ஆரம்பிச்சுட்டா. அதான் சும்மா கூட்டிட்டு வந்தேன்" என்றாள் வெற்றியிடம்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க வெங்கடேசனும் வர சேர்ந்தே கிளம்பினார்கள்.

"நாளைக்கு சந்திக்கலாம் சார்" என்று கூறிவிட்டு தன் பேத்தியைத் தூக்கிக் கொண்ட வெங்கடேசனையும் தன்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு விடைபெற்றுக் கொண்ட வெற்றி மற்றும் ஸாராவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் மகேந்திரன்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

எது எப்படி என்றே தெரியாத வாழ்க்கை ஓட்டத்தில் எதைக் குறித்தாவது வைக்கும்
அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது அதன் வலி ஆழ்மனதில் பெரும் வடுவாக மாறி விடுகிறது. சிலர் கடந்து வந்தாலும் கடக்க முடியாமல் அதற்குள்ளே மூழ்கி வருந்துபவர்களும் உண்டுள்ளவா?

ஆசைப்படுவதிலும் எதிர்பார்ப்பதிலும் என்ன பிழை? என்றால்,
அதீதமான கற்பனையென்பது சில நேரங்களில், சில விடயங்களில்
எண்ணப்பிழையல்லவோ!
================

சிறுகதை வாசித்துவிட்டு பெற்றவராக பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஆசை எதிர்பார்ப்பு நியாயம் தானே என்ற எண்ணம் உங்களுக்குள் எழலாம்.. உண்மை தான்!

ஆனால் இந்த வெங்கடேசன் போன்ற ஒரு தாயை சந்தித்திருக்கிறேன் நான். இந்தளவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் சிறியதோர் பாதிப்பு இருந்தது அவருக்கு. இதே போன்று கற்பனை செய்து பேசக் கூடியவராக இருந்தார் அவர்.
அதை மையமாக வைத்தே இந்த சிறுகதை.

சிசிறுகதை பற்றிய உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!

==================
மேலும் என் சிறுகதைகள் படிக்க :

====≠====≠====≠====
எனது முகநூல் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்:

 
Top