எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 18

Fa.Shafana

Moderator
'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்!'

வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் திடீரென ஒலித்த பாடலில் கலகலவென சிரிக்கத் தொடங்கியவளை புரியாது பார்த்து வைத்தாள் வித்யா.

வித்யாவின் வீட்டில் தான் இருந்தார்கள். அவளுக்கு வளைகாப்பு முடிந்து கூட்டி வந்திருக்க இரண்டு மூன்று நாட்கள் அவளுடன் தங்கி இருக்கலாம் என்று வந்திருந்தாள் தர்ஷினி.

"இந்த பாட்டு மட்டும் சில வருஷத்துக்கு முன்னாடி வந்து இருக்கணும், செமயா இருந்திருக்கும். இந்த வரியை மட்டும் ஸ்டேட்டஸ்ல வெச்சு மஜா பண்ணி இருக்கலாம்" என்ற தர்ஷினியை நோக்கி,

"உனக்கும் அண்ணாவுக்கும் இடைல என்ன தான் நடந்தது?" என்று கேட்க,

மறுப்பாக தலையசைத்து புன்னகைத்தவளிடம் மீண்டும்,

"நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், ப்ளீஸ் என்கிட்ட மட்டும் சொல்லு" என்றாள்.

"நீ சொன்னா கூட பரவாயில்லை. பிகாஸ் தப்பு என் மேல இல்லை"

"அது எனக்குத் தெரியும். விதுரனுக்கும் அது தெரிஞ்சதுனால தான் இன்னைக்கு வர உங்க ஃப்ரெண்ட்ஸிப் தொடருது" என்றவளை ஏறிட்டு

"இல்லை அவனுக்கும் தெரியாது, இதுவரை அவன் இதைப்பற்றி கேட்டதே இல்லை பட் என் மேல தப்பு இருக்காதுன்னு அவனுக்கு நம்பிக்கை இருக்கு அதனால தான் எங்க ஃப்ரெண்ட்ஸிப் தொடருது" என்றாள்.

தர்ஷினியின் தாய் மாமன் பிள்ளைகள் தான் விபுனன், விதுரன் மற்றும் வித்யா.

விதுரன் வித்யா இருவரும் தர்ஷினியை விட ஒரு வருடம் மூத்த இரட்டையர். விபுனன் இவளை விட நான்கு வயது மூத்தவன்.

சிறு வயதில் இருந்தே விதுரன் மற்றும் தர்ஷினி இடையேயான நட்புப் பந்தமும் மற்றவர்களிடேயே இருந்ததை விட ஒருபடி மேலே தான் இருந்தது.

தன் இரட்டை சகோதரியை விட தர்ஷினியின் மேல் அன்பும் அக்கறையும் அதிகம் விதுரனுக்கு. அதில் சிறிதேனும் பொறாமை கொள்ளாது இருப்பாள் வித்யா.

தர்ஷினியின் தாய் மாலதிக்கு அண்ணன் ரகுநாத். அக்கா தங்கைகள் ஐந்து பேர், அவர்களின் பிள்ளைகள் என இவர்களது சற்றே பெரிய குடும்பம்.

ரகுநாத் தன் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு வந்திருந்தார். மற்றவர்கள் சொந்த ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் என இருக்க.. பண்டிகைகள், ஏதாவது விசேஷங்கள் என்றால் குடும்பமாக ஒன்று சேர்ந்து விடுவர்.

அப்படி ஒருமுறை வந்த விபுனன் தர்ஷினியிடம் அவள் மேல் தான் கொண்ட விருப்பத்தைக் கூறியிருக்க உடனே மறுத்திருந்தாள் அவள்.

பள்ளியின் இறுதியாண்டு, தொடர்ந்து கல்லூரி என்று படிப்பில் கவனமாக இருந்தவனுக்கு சில வருடங்களாக ஊருக்கு வர முடியாமல், உறவினர்களை சந்திக்க முடியாமல் இருந்தது.

அந்த வருடம் தர்ஷினியின் பெரியம்மா மகளின் திருமணத்துக்கு தன் குடும்பத்தோடு வந்தவனின் கண்ணில் விழுந்து கருத்தை நிறைத்தாள் தர்ஷினி.

அதுவரை அவளை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை அவன். விதுரனுடனான அவளது பிணைப்பு விபுனனை தள்ளி நிற்க வைத்தது மட்டுமல்லாது கள்ளங்கபடம் இல்லாமல் கலகலவென பேசிச் சிரித்து, துறுதுறுவென வளைய வரும் அவளை வைத்து குடும்பத்தில் மற்றப் பிள்ளைகள்,

"இன்னும் சின்னப்பிள்ள மாதிரியே இருக்கா. மெச்சூரிட்டியே இல்லை" என்று கூறிவதாலும் அவளை ஒருபடி கீழாகத்தான் பார்த்து வைப்பான் விபுனன்.

மற்றவர்களுடன் சேர்ந்து கேலி கிண்டல் செய்வதும், அவர்களைப் போலவே அவளிடம் வேலை வாங்குவதுமென்றே தான் இருப்பான்.

அதனாலேயே அனைவரிடமும் இருந்து ஒதுங்கியவள் தன் மீது அக்கறை கொண்ட விதுரனுடன் ஒட்டிக் கொண்டாள்.

"என்ன புதுசா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க அத்தான். உங்களுக்கு நான் எல்லாம் ஒரு பொருட்டே இல்லையே?" என்று கேட்டவளுக்கு பதில் கூறாமல் சில நொடிகள் நின்றவன்,

"அது முன்ன. இப்.. இப்போ உன்னைப் பிடிக்குது. லவ் பண்றேன். உனக்கும்.. நீயும் என்னை லவ் பண்ணுவியா?" என்றான்.

இதழ் வளைத்து கேலியாக சிரித்தவள்,

"இது லவ் இல்லை.. அட்ராக்ஷன், ஈர்ப்பு. ரொம்ப நாளைக்குப் பிறகு என்னைப் பார்த்ததுல உங்க மனதுக்குள்ள இப்படி ஒரு எண்ணம். அவ்வளவு தான். என்னைக்கா இருந்தாலும் நான் அதே தர்ஷினி தான். உங்க பார்வைல அப்ப எப்படி இருந்தேனோ அதே போல தான் இப்பவும் இருக்கேன்" என்றவள் விலகி நடந்தாள்.

ஆனால் அதன் பிறகு அங்கிருந்த ஒரு வாரமும் அவளை விட்டு அவனது பார்வை விலகவில்லை, விலக்கிக் கொள்ள முடியவில்லை.

'நான் போய் பேசினா எதிர்த்து பேசுவாளா? என் மனசுல காதல் வந்த மாதிரி அவ மனசுக்குள்ளயும் வர வைக்கிறேன். லவ் பண்ண வைக்கிறேன்' என்று நினைத்துக் கொண்டவனுக்கு அவளைப் பிடித்துத் தான் இருந்தது.

காதல் என்ற எல்லையைத் தொடாத ஒரு பிடித்தம் மட்டுமே அது என்று அவனுக்குப் புரியவில்லை.
அவளை அவள் இயல்பான குணத்துடன் ஏற்றுக் கொள்ளும் காதல் அவனுள் இல்லை.

ஊருக்குக் கிளம்பும் போது மீண்டும் வந்து தன் முன் நின்று முடிவு கேட்டவனை ஏறிட்டு,

"எதுவா இருந்தாலும் எங்க அம்மா அப்பா கிட்ட பேசுங்க" என்றாள் தர்ஷினி.

"அப்போ என்னைப் பிடிக்குமா உனக்கு?" என்றவனுக்கு பதில் கூறாமல் அவள் சென்று விட்டாள்.

அடுத்தடுத்து அவர்கள் சந்தித்துக் கொள்ளும் விதமாக சந்தர்ப்பங்களும் அமைய, மீண்டும் மீண்டும் தன்னிடம் வந்து நிற்பவனின் மீது ஒரு சலனம் வந்தது அவளுக்கும்.

ஆனாலும் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் தன் பெற்றோரிடம் அவனின் பெற்றோரை வைத்து பேசுமாறும் கூறியதுக்கு மாற்றமாக,

அவள் தன்னைக் காதலிப்பதாக குடும்பத்தில் இளையவர்கள் அனைவரிடமும் கூறி விட்டே அந்த முறை ஊருக்குச் சென்றான் விபுனன். அனைவருக்கும் கூறி பரப்பிவிட்டால் அவளை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் என்ற எண்ணம் அவனுக்கு.

ஆனால் அவளுக்கோ இப்படி அனைவருக்கும் தெரியும்படி செய்து விட்டானே என்ற வருத்தமும் பயமும்.

அவனுக்கு அவளா? என்ற எண்ணமே சிறியவர்களை இதைப்பற்றி பெரியவர்களிடம் கூறாமல் இருக்க வைத்தது.

ஆனால் இந்த காதல் விவகாரத்தை வைத்தே அவளை தங்களுக்கு வேண்டிய விதத்தில் வளைத்தனர். தாங்கள் உதவி செய்வதாகக் கூறி அவளிடம் வேலை ஏவி, உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.

விதுரனுக்கு இவை அனைத்தும் தெரிந்திருந்தாலும் அவன் தர்ஷினியிடம் எதுவும் கேட்கவில்லை.

தங்களது நட்பைப் போல அவர்களு காதல் என்று அவனது எல்லைக்குள் நின்று கொண்டான்.

இப்படியாக ஒரு வருடம் ஓடிய நிலையில் ரகுநாத்தின் தொழில் சரிவை சந்தித்து கடனுக்கு மேல் கடன் என்றாகி தற்கொலை வரை சென்றவரை, காப்பாற்றி மீட்டுக் கொண்டு வந்தனர்.

அவர் உடல்நிலை தேறி வரும் போது பிரச்சனை வேறு கோணத்தில் வடிவம் பெற்றிருந்தது.

ரகுநாத் கடன் வாங்கியவரை அறிமுகம் செய்து வைத்தது தர்ஷினியின் தந்தை வேலன். அவரின் நண்பர் ஒருவரை மைத்துனனுக்கு உதவும் விதமாக அறிமுகம் செய்து வைத்திருக்க; நண்பருடன் கூட்டு சேர்ந்து வட்டிக்கு விடுவதாகவும், வட்டித் தொகையில் ஒரு பங்கு வேலனுக்கும் கிடைப்பதாகவும், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் இலாபத்தை மட்டுமே பார்த்ததாகவும், ரகுநாத் தற்கொலை வரை செல்ல அவரும் ஒரு காரணம் என்றும் பலவாறு பேச ஆரம்பித்தனர் சில குடும்பத்தினரும், உறவினர்களும்.

இட்டுக்கட்டி பேசும் பேச்சில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல திகைத்து நின்றாலும், நண்பனது தொழிலில் தன் பங்கீடு இல்லை என்று தன் நிலை விளக்கம் கூறி தன்னை புரிய வைக்க முனைந்தார் வேலன்.

முதலில் நம்ப மறுத்தாலும் பிறகு வேலனை நம்பினார் ரகுநாத். குடும்பத்தில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களும் அவரை நம்பினார்கள்.

ஆனால் மனதில் விழுந்த விஷம் விருட்சமென வளர்ந்து நின்றது விபுனனின் மனதில்.

வேலனுக்கு சார்பாக யார் என்ன சொன்னாலும் ஆமோதிப்பாக பதில் கூறும் விபுனன் தன் மனதில் வஞ்சம் வைத்திருந்ததை யாரும் அறியவில்லை.

தர்ஷினியிடம் கூட அதைப் பற்றி எதுவும் பேசாமல், கேட்காமல் இருந்தவன் ஒருநாள் மனதில் இருந்ததை வெளிப்படுத்தியிருந்தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வந்த பண்டிகை ஒன்றுக்காக ரகுநாத் தன் மனைவி பிள்ளைகள் சகிதம் ஊருக்கு வந்திருந்தார். அவர்களுடன் விபுனனின் நண்பன் ஒருவனும்.

அனைவருமாகச் சேர்ந்து பழையவைகளை மீண்டும் தோண்டித் துருவி, ஆராய்ந்து, சாதக பாதகங்களை பேசுவது போல, ஆறுதல் கூறுவது போல மீண்டும் ஒரு முறை வேலன் குடும்பத்தினரை ரணப்படுத்தி விட்டிருந்தனர்.

அதன் தாக்கம் சிறிதும் குறையாமல் மனதைப் பிசைந்து கொண்டிருக்க தர்ஷினி உறங்க முடியாமல் எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள்.

அனைவருடனும் சேர்ந்து வேலன் குடும்பத்தினரும் தர்ஷினியின் பெரியம்மா ஒருவரின் வீட்டில் தான் தங்கியிருந்தனர் அன்று.

மாடியில் விபுனனும் அவனது நண்பனும் பேசும் குரல் கேட்க திரும்பிச் செல்லவென படி இறங்கியவளை அடைந்தது அவர்கள் பேசிக் கொண்ட விடயம்.

"உன் முடிவு இதானா?"

"ம்ம்.. அதுக்காக தான் காத்திட்டு இருக்கேன். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச உடனே நான் வந்து பேசுவேன்.
அவளை எனக்குத்தான் கொடுக்கணும், முடியாதுன்னா கொடுக்க வைப்பேன். என் மேல கொஞ்சம் லவ் இருக்கு அவளுக்கு. அதை வெச்சே என் பக்கம் இழுத்து மடிய வைக்கணும்.."

"பாவம்டா அவ"

"அட போடா.. பாவம் பார்த்தா நான் நினைச்சது என்னாகுறது. அந்தாள பற்றி கெட்ட விதமா எனக்குள்ள விழுந்தது அப்படியே தான் இருக்கு. யார் நம்பினாலும் நான் அந்த வேலன நம்பமாட்டேன். மேடைல வெச்சு அவர் கிட்ட நாக்கப் புடிங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு தான் தர்ஷினி கழுத்துல தாலியே கட்டுவேன்" என்றவனின் கூற்றில் ஆணி அடித்தது போல அப்படியே நின்றாள்.

"லவ்வு ன்னு சொன்னாலும் கொஞ்ச நாள் போகும் போதே அவ எல்லாம் எனக்கு செட்டாகவே மாட்டா சரியான லூசு மாதிரி இருக்கான்னு புரிஞ்சது. இங்க வரும் போது டைம் பாஸா இருக்கட்டும் பிறகு அவள விட்டுட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிட்டு தான் இருந்தேன். ஆனா அந்த வேலன மடக்க அவ பொண்ணு தான் துறுப்புச்சீட்டு. அவங்க கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு பிறந்தவ அவ. அவன்னா அந்த மனுஷனுக்கு உயிர். அவளை வெச்சே அந்தாள ஒரு ஆட்டு ஆட்டுறேனா இல்லையா பாரு"

"நீ ஆட்டி வைக்க உங்க வீட்டுல விடுவாங்களா? அதுவும் உன் தம்பி.."

"அதுக்குத்தான் தனிக்குடித்தனம் போறது. கல்யாணம் பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சமா அந்தாளோட சொத்தெல்லாம் எழுதி வாங்கிடுவேன். பிறகு லைஃப் நல்லா இருந்தா ஓகே இல்லையா ஒரு, ரெண்டு வருஷம் கழிச்சு டிவோர்ஸ் பண்ணிட வேண்டியது தான். ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகல்லைன்னு சொல்லிடுவேன். யார் கேட்பா.

எங்கப்பாவ அந்த நிலமைல பார்த்தது இன்னும் என் மனசுல இருக்கு. தன் தங்கச்சி மச்சான்னு எங்க அப்பா எல்லாத்தையும் மறந்திருக்கலாம். அவங்க சொல்றத நம்பலாம் ஆனா நான் முட்டாள் இல்லை, அந்தாள பழி வாங்கியே தீருவேன்"
என்று அறிவு மழுங்கிப் போய் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்க அவனெதிரே வந்து நின்றாள் தர்ஷினி.

அவளை அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆத்திரமும், தீர விசாரிக்காததும், சிலரின் போதனையும் விபுனனின் அறிவுக் கண்ணை மூடி இருக்க அதனால் கொண்ட ஆத்திரத்தால் பழி வெறி மட்டுமே அவனுள். சுற்றம் மறந்து பேச, அனைத்தையும் கேட்டு விட்டவள் அவன் முன்.

"சூப்பர் அத்தான்.. எங்கப்பாவ பழிவாங்க என்னை யூஸ் பண்ணிக்க நினைக்கிறீங்க பாருங்க. நீங்க எங்கேயோ போய்ட்டீங்க. உங்களை போல குரூரமான புத்திசாலியா இருக்குறத விட நான் இப்படி லூசாவே இருந்துடுறேன்.

இதுவரை எங்கப்பா விஷயமா எதுவுமே நீங்க என்கிட்ட பேசாம இருக்கவும் நீங்களும் அவரை நம்புறீங்கன்னு நிம்மதியா இருந்தேன். விதுரனைப் போல தான் நீங்களும்னு சந்தோஷப்பட்டேன். அவன் கால் தூசு அளவுக்கு கூட நீங்க இல்ல. என்ன ஈனப் புத்தி உங்களுக்கு?

என்னை வெச்சு எங்கப்பாவ டார்கெட் பண்ண யோசிச்சீங்களே உங்கப்பாவால பாதிக்கப்பட்ட யாராவது இதையே வித்யாவுக்கு பண்ணினா எப்படி இருக்கும் உங்களுக்கு?

லவ்வாம் லவ்வு! அந்த எழவு தான் இல்லைன்னு அப்பவே நான் சொன்னேனே. கேட்காம பின்னால வந்துட்டு, நான் உங்களுக்கு டைம் பாஸா? ஒரு தங்கச்சி அண்ணனா இருந்துட்டு இப்படி பேச வெக்கமா இல்ல? த்தூ..!"

நீங்கெல்லாம் மனுஷனே இல்லை இதுல எங்க இருந்து அண்ணனாகுறது?

என்னை உங்களுக்கு கொடுக்க முடியாதுன்னா கொடுக்க வைப்பீங்களா? எவ்வளவு சீப் மென்டாலிட்டி? ச்சீ.. உங்கப்பா அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளைன்னு நினைக்கவே கூசுது.

இப்போ இந்த நிமிஷமே போய் நீங்க பேசினத எல்லார்கிட்டேயும் சொல்ல முடியாம இல்லை. சொன்னா உங்களுக்கு சப்போர்ட் பண்றவங்களும் உங்களை கேவலமா பார்ப்பாங்க. ஆனா உங்க அம்மா அப்பாவுக்கு தான் கஷ்டம். நம்ம பையனான்னு நினைச்சே மருகிப் போவாங்க. அதுக்கு தான் யோசிக்கிறேன். இனிமே இந்த நினைப்போட என் கிட்ட பேச இல்லை என்னைப் பார்க்க கூட நினைச்சுடாதீங்க. உங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை" என்று படபடவென்று பேசியவள்,

திரும்பி அவனது நண்பனிடம்,

"நல்ல ஃப்ரெண்ட் உங்களுக்கு. வாழ்த்துக்கள்" என்று எள்ளல் குரலில் கூறிவிட்டு
படிகளில் இறங்கி ஓடினாள்.

மனது தகித்தது.
எப்படி எல்லாம் யோசித்து வைத்திருக்கிறான் என்று நினைக்கவே மனதை அச்சம் கவ்வியது.

தண்ணீர் எடுத்து வயிறு நிறையக் குடித்து விட்டு படுத்துக் கொண்டாள். மனதில் பல எண்ணங்கள்.

காலையில் எழும் போது மனது சமன்பட்டிருந்தது.
இத்தனை நாளைய ஏமாற்றம் என்பதை விட அவனிடம் இருந்து தப்பிவிட்டோம் என்ற நிம்மதியே மிதமிஞ்சி இருந்தது.
அவன்பால் காதல் என்று எப்போதுமே உருகியதில்லை.

ஆரம்பித்தில் அவனுக்கு தன் மீது காதலே இல்லை என்று நம்பியவளுக்கு அதன் பிறகான நாட்களில் பிடித்தம் இருந்தது தான் ஆனாலும் அவனை முழுவதும் ஏற்க மறுத்தது அவளது மனம் என்பதே உண்மை.

சிறு வயதில் இருந்தே அவன் அவளை நடத்திய விதம், அவளை அப்படி இருக்க வைக்க இதோ இப்போது அவனது சுயரூபம் தெரிந்ததும் தூக்கி எறிந்துவிட்டாள்.

காலையில் குளித்து விட்டு வந்தவளிடம் விபுனனின் சட்டையைக் கொடுத்த அவளது பெரியம்மா ஒருவரின் மகள்,

"விபு இந்த சேர்ட்ட அயர்ன் பண்ணி கேட்டான் தர்ஷினி. உன்னைத் தேடி வந்தான் போல நீ இல்லைன்னு என் கிட்ட.." என்றவளின் முன் கை நீட்டி தடுத்தவள்,

"அவர் என்னைத் தேடி வந்திருக்க மாட்டார் க்கா. உங்ககிட்ட தான் அயர்ன் பண்ண சொல்லியிருப்பார். இல்லை நானே தான் அயர்ன் பண்ணனும்னு சொன்னார்னா கொடுங்க பரவாயில்லை. கை கால் ஊனமானவங்களுக்கு பண்ற உதவி மாதிரி இதையும் பண்றேன்" என்று பட்டென்று கூற,

அவர்களின் முன் வந்தவன் கோபமாக சட்டையைப் பறித்தெடுத்து,

"உன்னைத் தானே அயர்ன் பண்ண சொன்னேன். அவகிட்ட ஏன் கொடுத்த?" என்று கேட்டுவிட்டுச் செல்ல,

இகழ்ச்சியான ஒரு புன்னகை தர்ஷினியிடம்.

"என்னாச்சு? உங்களுக்குள்ள சண்டையா?"

"அதை ஏன்க்கா என்கிட்ட கேட்குறீங்க? வழக்கமா அவர்கிட்ட தானே கதை கேட்டு எல்லாம் தெரிஞ்சுக்குவீங்க. இப்பவும் போய் கேட்டு அவர் யோக்கியதைய தெரிஞ்சுக்குங்க" என்றுவிட்டு செல்ல,

அடுத்து இளையவர்கள் போய் விபுனனிடம் பேசியும் அவன் எதுவும் கூறவில்லை.

தர்ஷினி துச்சமென தூக்கி எறிந்து பேசியதும், அவளது கோபமும், எங்கே தான் ஏதாவது பேசி அனைவரிடமும் அனைத்தையும் சொல்லி விடுவாளோ என்ற பயமும் அவனைக் குறுக வைத்தன.

இரவு அவள் பேசியவையும், அவனைக் குற்றம் சாட்டுவதாய் இருந்த நண்பனின் உபதேசமும் அவனை சற்றே நிதானிக்கவும் வைத்திருந்தன. அன்று மாலையே அவசர வேலை என தன் நண்பனுடன் கிளம்பிவிட்டான்.

விதுரனை வைத்து தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் அவன் அவர்களுக்குப் பிடி கொடுக்கவும் இல்லை; என்ன ஏதென தர்ஷினியிடம் கேட்கவும் இல்லை அவன்.

"வருத்தமா இருக்கா தர்ஷி? உன் மேல தப்பு இருக்காதுன்னு எனக்குத் தெரியும்டா. அண்ணா தான் ஏதோ பண்ணி இருக்கார்னு தெரியுது. எதுவா இருந்தாலும் நல்லதுக்கு தான்னு நினைப்போம். என்ன ஒன்னு நீ எங்க வீட்டுக்கு வர நாங்க கொடுத்து வைக்கல்ல" என்றதோடு முடித்துக் கொண்டான்.

இன்று இப்போது வரை வித்யா பல தடவை கேட்டிருக்க விதுரன் அந்த ஒரு நிகழ்வை மறந்துவிட்டதைப் போலவே தான் இருக்கிறான்.

அனைத்தும் கூறி முடிக்க பேயறைந்தைப் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

"விபுண்ணாவா? என்னால நம்பவே முடியல்லை தர்ஷினி" என்றவளது குரல் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது.

"இதுக்கு தான் நான் சொல்லல்லை. உங்க அண்ணாவ தப்பா சொன்னா நம்புவியா?" என்று சிரிக்க,

"அப்படி சொல்ல வரல்லை. உன்னை நம்பாம இல்லை. அவர் இப்படி எல்லாம் கீழ்தரமா யோசிச்சு.. ச்சே! என்றாள்.

"அது முடிஞ்ச கதை. விடு. எனக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு, லூசு மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டு அவர் தான் அப்படி யோசிச்சார். இப்போ நினைச்சா எனக்கு சிரிப்பு தான் வருது. சின்னப்புள்ளத்தனமா ப்ளான் போட்டிருக்கார்ல. அதுவும் ப்ளான் போட்டத ரகசியமா வெச்சுக்காம மொட்டை மாடில வெச்சு பேசி அதை நான் கேட்டு மொத்தமா சொதப்பிடுச்சு" என்று மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.

"உனக்கு வருத்தமே இல்லையா?" என்றாள் அவளை ஆழ்ந்து பார்த்த வித்யா.

"சத்தியமா இல்லை வித்யா. ஒரு உறவுக்கு அஸ்திவாரமே புரிதலும், நம்பிக்கையும் தான். அன்பு கூட அதுக்கு அடுத்து தான். உங்கண்ணாவுக்கு புரிதல் இல்லை, எனக்கு அவர் மேல இருந்த நம்பிக்கையையும் இல்லாம பண்ணிட்டார்.

எனக்கு ஏதோ ஒரு விடுதலை உணர்வு தான். ஆரம்பத்துல இருந்தே எனக்கு அவர் கிட்ட ஏதோ நெருடல் தான். நான் அம்மா அப்பா கிட்ட முதல் பேசலாம்னத விட்டுட்டு மத்தவங்க கிட்ட சொல்லி என்னை கார்னர் பண்ணினது, விதுரன் கூட இயல்பா இருக்குறதையும் தடுக்கப் பார்த்ததுன்னு எல்லாம் பொறில மாட்டிக்கிட்ட ஃபீல் தான். ஆனாலும் பிடிச்சிருக்குன்னு சொல்றார், நம்ம அத்தான் தானேன்னு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை. அது பொய்யாகும் போது ஒரு ரிலாக்ஸ் ஃபீல் தான் வந்துச்சு.

கல்யாணம் பண்ணி அவர் நினைச்சது நடக்குதோ இல்லையோ அது ரெண்டாவது. எங்கப்பா மேல தப்பே இல்லாம, இப்படி அவர பழிவாங்குற எண்ணத்துல கல்யாணம் பண்ணி என்னத்த வாழ்ந்துட முடியும்? எப்பவாவது எனக்கு உண்மை தெரியும் போது வாழ்க்கை நரகமா தான் இருந்திருக்கும். அதை விட முன்னாடி தெரிஞ்சது நல்லது தான்னு நினைச்சுக்கிட்டேன்.

அதோட விதுரன் அந்த நேரம் எனக்கு சப்போர்ட்டா இருந்தது எனக்கு பெரிய பலம். அவன் கேட்டு நான் சொல்லணும்னு தேவையே இல்லாம என்னை புரிஞ்சுக்கிட்டான்ல அந்த புரிதல் தான் எந்த ஒரு உறவுக்கும் பலம்.

என்னை மட்டும் இல்லை அவன் எங்கப்பா அம்மா எல்லாரையும் அந்தந்த டைம்ல புரிஞ்சுக்கிட்டான். அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?"
என்றவளின்,

அருகே திடுமென வந்து பாய்ந்து அமர்ந்து அவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான் விதுரன்.

அவனது அதிரடியில் பட் பட்டென அவனது தோளில் அடித்துக் கொண்டே,

"எரும எரும இப்படியா வந்து விழுவ? பயந்துட்டேன் பக்கி" என்றாள்.

"ஆமா நீ பயந்துட்டாலும். ஊர்ல உள்ள பேய் பிசாசு எல்லாம் இவளப் பார்த்து பயந்து ஓடுது. இவ என்னைப் பார்த்து பயந்தாளாம்" என்க நறுக்கென்று கிள்ளி வைத்தாள் அவனை.

"ஆ.. வலிக்குதுடி" என்று தேய்த்து விட்டவன்,

"நான் உன்ன புரிஞ்சுக்கிட்டு என்ன லாபம்? எனக்கு தலைவலிக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டு ஒரு டீ போட்டு கொடுக்குறியா நீ? இல்ல தலைய தான் மசாஜ் பண்ணி விடுறியா? என்று கேட்டான்.

"ஆமா.. இந்த பம்பரகட்ட மண்டைக்கு மசாஜ் ஒன்னு தான் குறையுது. போடா" என்று அவனைத் தள்ளி விட்டவள் எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.

"அண்ணா மிஸ் பண்ணிட்டார்" என்றாள் போகும் அவளைப் பார்த்து வித்யா.

"இல்லை வித்யா. நடந்த எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டா தானே. நான் வரும் போது அந்த பேச்சு தானே ஓடிட்டு இருந்தது? எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி சொல்லக் கூடாது.
இவ தப்பிச்சுட்டான்னு தான் நான் சொல்லுவேன். நம்ம அண்ணா இவ விஷயத்துல நல்லவரில்லைன்னு எனக்கு அப்பவே புரிஞ்சது" என்றான் விதுரன்.

"ஒருவேள இவளோட சாபம் தான் அண்ணாவோட லைஃப் இப்படியாச்சோ?" என்றாள்.

விபுனனின் திருமண வாழ்வு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதை வைத்து வித்யா கேட்க,

"நீ இன்னும் இவள புரிஞ்சுக்கவே இல்லை. அப்படி எல்லாம் சாபம் விடற ஆள் இவ இல்லை. இவளோட வாழ்க்கைல அண்ணாவோட சாப்ட்டர அப்பவே இழுத்து மூடிட்டா. அதுக்குப் பிறகு நினைச்சும் பார்த்திருக்க மாட்டா" என்றான் விதுரன். அவளை முழுதும் புரிந்தவன்.

"பேசாம நீயே இவள கல்யாணம் பண்ணிக்கடா" என்றவளை முறைத்துப் பார்த்தவன்,

"போய் உன் வாய்க்கால் வாயக் கழுவு. வயித்துல பிள்ளை இருக்கு இல்லைன்னா அடிச்சு தொவச்சிருப்பேன்" என்றான் பெருங்கோபம் கொண்டு.

"சாரி.. சாரிடா. ஏதோ ஒரு ஆர்வத்துல.." என்றவளுக்குமே தன் தவறு புரிந்தது.

"இவ கல்யாணம் ஏனோ தள்ளிப் போய்ட்டே இருக்கு ஆனா இவளுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமா, நல்லவனா ஒருவன் வருவான். ஆனா எனக்கும் இவளுக்கும் எங்களைப் போல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கவே மாட்டாங்க. ஃப்ரெண்ட்ஸிப்ப தாண்டி இவள வேற எப்படியும் யோசிக்கவே முடியாது என்னால" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே

"ஆத்தீ.. இந்த குரங்க காலம் பூரா என் தலைல கட்டி வைக்க ஐடியா பண்றியே உனக்கே இது நியாயமா வித்யா? நான் பாவமா இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே கையில் தேநீருடன் வந்தாள் தர்ஷினி.

அவளது கூற்றில் வித்யா சத்தமாக சிரித்துவிட,

"என் நேரம்டி. எவ்வளவு டேமேஜ் பண்ற?" என்றான் விதுரன்.

"நீ இல்லை டேமேஜ் ஆனது விபுண்ணா தான். பழி வாங்க ப்ளான் பண்ணிட்டு ரகசியமா வைக்கத் தெரியல்லைன்னு சொல்லி சிரிக்கிறாடா. எதிர்காலத்துல ஒரு ஆன்ட்டி ஹீரோவா ஆக இருந்தவர காமெடி பீஸாக்கி விட்டிருக்கா இவ" என்று சிரிக்க அவள் கூறியது புரிந்ததும் சத்தமாக சிரித்தாள் தர்ஷினி.

விதுரனிடம் அதுவரை இல்லாத நெருடல் இந்தக் கூற்றைக் கேட்டதும். அவனது யோசனையான முகத்தைக் கவனித்த தர்ஷினி அன்றிரவு அனைத்தையும் கூறி இருந்தாள்.

யூகித்தது தான் என்றாலும் இந்தளவுக்கு விபுனன் யோசிப்பான் என்று நினைத்திருக்கவில்லை விதுரன்.

"எல்லாம் நல்லதுக்கு தான் தர்ஷி. அண்ணன் மேல எனக்கு கோவம் வருத்தம் எல்லாம் இருக்கு. அது எப்பவும் இருக்கும். உன் விஷயத்துல அவர் அப்படி பண்ணி இருக்கவே கூடாது. அவரை கடவுள் பார்த்துப்பார். நீ இப்படியே சந்தோஷமா இருடா" என்றவன் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டான்.

"நான் சந்தோஷமாத்தான்டா இருக்கேன். எப்பவும் இருப்பேன். இருக்கணும், இல்லைன்னா உன்னையும் இருக்க விடமாட்டேனே" என்றவளின் சிரிப்பு அந்த இடத்தை நிறைத்தது.

எட்டி அவளது தலையில் குட்டியவனின் முகத்தில் புன்னகை.

அவளுக்கானவனின் விரைவில் வந்துவிட வேண்டும் என்று வேண்டுதல் அவன் மனதில்.
=================

மேலும் என் சிறுகதைகள் படிக்க :





 
Top