மாயம் 27
சரணும், சாராவும் பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பினர். அந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை சரணும் நியதியும் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் பூங்காவில் பகிர்ந்துகொண்டனர். முதலில் சரண், "நிதி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவா பேரு 'சாரா' கிடையாது 'சரஸ்வதி'யாம். நாங்க டீல் சைன் பண்ண போனோம்ல அவர் சொல்லிதான் தெரியும். 'சரஸ்வதி'ன்னு பேர் வச்சிக்கிட்டு 'சாரா', 'போரா'ன்னு சொல்லிக்கிட்டிருக்கா" என்று கூறி அவன் சிரிக்க அவளோ, "எனக்கு இது ஏற்கனவே தெரியும்டா" என்று பதிலளித்தாள்.

உடனே, "நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?" என்று கேட்கவும் அவள், "இப்படி கிண்டல் பண்றீல அதான் சொல்லல" என்று கூறவும் அவன் முகத்தில் அசடு வழிந்தது. உடனே அவன், "உனக்கு ஒண்ணு தெரியுமா அந்த 'ராட்சசி'யோட நடவடிக்கைல நிறைய வித்யாசம் தெரியுது. முன்னமாதிரி என் மேல எறிஞ்சிவிளாம ரொம்ப சாஃடா பேசுறா. அவா..." என்று ஆரம்பித்தவன் அங்கு சாரா செய்த அனைத்தையும் உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருக்க நியதி அவனை ஒரு புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அந்தப் புன்னகையால் சற்று குழம்பியவன் அவளை பார்த்து, "ஏன் சிரிக்குற?" என்று கேட்க அவளோ, "அவங்க மாறுனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியல ஆனா நீ கண்டிப்பா மாறிட்ட" என்று கூற அவன் அவளை லேசாக முறைதான். "நீ சொல்றதெல்லாம் பாத்தா மேடம்கு உன்மேல 'சம்திங் சம்திங்' இருக்கோன்னு தோணுது" என்று கூறி அவள் கண்சிமிட்ட அவனோ, "அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீயா எதையாவது கற்பன பண்ணாத....ஆமா உனக்கு இங்க எப்படி போச்சி? வேல நிறைய இருந்திருக்கும்ல?" என்று அவன் கேட்டான்.
"ஆமாடா முதல்ல கஷ்டமா இருந்தது, ஆனா அதுக்கப்பறம் பழகீருச்சி...டேய் உன்னோட ஃரெண்டு கெமிக்கல் அனலிஸ்ட்டா இருக்கான்னு சொல்லீருக்கீல. அவன்கிட்ட இதக்குடுத்து டெஸ்ட் பண்ண சொல்றியா?" என்று கூறியவள் தன் கையில் வைத்திருந்த பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.
அதைப் பார்த்து, "என்னடி பவுடர் மாதிரி இருக்கு?" என்று கேட்க அவளோ, "ஆமாடா...இதப்பத்தி எனக்கு தெரியனும்" என்று கூறினாள். "இது எங்க கிடைச்சது?" என்று வினவ நியதியோ, "இப்போதைக்கு கேக்காத. பிறகு சொல்றேன்" என்று கூறவும் சரண் அந்தப் பேச்சை விட்டான். சிறிதுநேரம் அவர்கள் பேசி சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
சாராவின் பிறந்தநாள் இன்னும் இரண்டே நாட்களில் வரவிருந்தது. அவளுடைய பிறந்தநாளன்று ஒரு பெரிய விழாகொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் கலந்துகொள்வதற்காக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சாரா தன்னுடைய பிறந்தநாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தாள், ஏனென்றால் சரண் மீது கொண்ட காதலை அன்றுதான் அவனிடம் தெரிவிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தாள். ஒருபுறம் சந்தோஷம் இருந்தாலும், மறுபுறம் ‘சரண் அதை ஏற்றுக்கொள்வானா?’ என்ற பயமும் அவள் மனதில் இருந்தது.
அதே சமயம் விராஜுக்கு சாராவின் பிறந்தநாள் விழாவைப் பற்றிய செய்தி தெரியவந்தது.

அவன் தன்னுடைய பி.ஏ.விடம், "மிஸ் சாராவோட பிறந்தநாள் எப்போ?" என்று கேட்க அவனோ, "இன்னும் டூ டேஸ்ல சார்... ஆனா அந்த பார்ட்டிக்கு அவங்க குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேட்டிவ்ஸ் மட்டும் தான் இன்வைட் பண்ணீருக்காங்க" என்று கூறவும் விராஜின் முகம் மாறியது. சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தவன், "பரவா இல்ல இதுவும் நல்லதுக்கு தான்" என்று கூறி குரூரமாகப் புன்னகைத்தான். அவனுடைய மனதில் பயங்கரமான திட்டம் ஒன்று தோன்றியது.
சரணும் நியதியும் மதியஉணவின்போது, "நிதி நீ ஒரு பவுடர் குடுத்தீல, அத என் ஃரெண்டுகிட்ட டெஸ்ட் பண்ண அன்னைக்கே கொடுத்துட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் அது என்னங்குறத சொல்லீருவான். அதனால நாம அவன மீட் பண்ணனும். ரெடியா இரு" என்று கூறவும் நியதி 'சரி' என தலையசைத்தாள். அதைப் பற்றி அறிந்துகொள்ள நியதி மிகவும் ஆவலாக இருந்தாள்.
அன்று மாலை அவர்கள் இருவரும், சரணின் நண்பனான ரகுவை கஃபேயில் சந்தித்துப் பேசினர்.

"இந்த பவுடர் என்னது மிஸ்டர் ரகு?" என்று நியதி கேட்க அவனோ அதனுடைய பெயரைக் கூறிவிட்டு, “உலகத்துலயே மோசமான ட்ரக்ஸ்ல இதுவும் ஒண்ணு. அத யூஸ் பண்ணா ஹாலூசினேஷன் உண்டாகும் அதாவது இல்லாதத இருக்குறமாதிரி காட்டும். அதிக அளவுல தினமும் பயன்படுத்தினா கோமாவுக்கு போறதுக்கு கூட சான்ஸ் இருக்கு. இது டிரக் டீலர்ஸ் இல்லாட்டி டிரக்ஸ் யூஸ் பண்றவங்ககிட்ட மட்டும் தான் இருக்கும். உங்ககிட்ட எப்படி?" என்று ரகு கேட்க நியதியும் சரணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "நான் சொல்றத சொல்லீட்டேன்" என்று அவன் அங்கிருந்து கிளம்பினான்.
அவர்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தபோது, "அத தயவுசெஞ்சி தூக்கி எரி. அவன் சொல்லும்போதே எனக்கு மயக்கம் வந்திருச்சி....ஏய் உனக்கு இது எங்க கிடைச்சது?" என்று அவன் விசாரிக்க முதலில் மௌனமாக இருந்தவள், பின் நடந்த அனைத்தையும் விவரித்தாள். அவள் ஒவ்வொரு விஷயமாகக் கூறும்போதே சரணின் கண்கள் அதிர்ச்சியால் விரிந்தன.
உடனே அவன், "இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட ஒருவார்த சொல்லல" என்று சிறு கோபத்துடன் கேட்க அவள் எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். "அதுனால தான் அன்னைக்கு பேய் அது இதுன்னு கேட்டுட்டு இருந்தியா?" என்று அவன் வினவ, 'ஆம்' என்று மட்டும் தலையசைத்தாள். "இத அங்க இருக்குற யாரோ யூஸ் பண்றாங்களோ?" என்று சந்தேகத்துடன் கேட்க அவளோ, ‘யாரா இருக்கும்?’ என்று எண்ணினாள்.
சிறிதுநேரம் தீவிர யோசனையில் ஆழ்ந்தவளுக்கு ஏதோ பொறிதட்ட, "ஒருவேள அவங்க பயன்படுத்துறது தெரியக்கூடாதுங்குறதுக்காக ‘பேய்’ன்னு சொல்லி திசைதிருபுறாங்களோ?" என்று தனக்கு தோன்றியதைக் கூறினாள். அவனோ, "அப்படிக் கூட இருக்கலாம். முதல்ல இத ரஞ்சித்சார்ட்டப்போய் சொல்லு. அவர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுப்பாரு" என்றதும் அவள் ஒப்புக்கொண்டாள்.
மறுநாள் காலை நியதி ரஞ்சித்தை தேடிச்சென்றபோது அவன் தன் வீட்டிலுள்ள அலுவலக அறையில் வேலை செய்துகொண்டிருந்தான். அனுமதிபெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தவள் காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு தான் சொல்லவந்த விஷயத்தைக் கூறத் துவங்கினாள். தன் கையில் வைத்திருந்த அந்த பவுடர் பாக்கட்டை காட்டி, "ரஞ்சித் இது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க அவன் புரியாமல் அவளையும் அந்த பாக்கட்டையும் பார்த்தான்.
"இது ஒரு மோசமான ட்ரக். இங்க இருக்குற யாரோதான் இத பயன்படுத்துறாங்க" என்று தான் கண்டுபிடித்ததை ரஞ்சித்திடம் கூறினாள். அவள் கூறியதைக் கேட்டவன் முதலில் புரியாமல் விழிக்க, "இல்ல நியதி அதுக்கு வாய்ப்பே இல்ல. அந்த பழக்கம் இங்க யாருக்குமே கிடையாது...ஆமா இது உனக்கு எங்க கிடைச்சது?" என்று அவன் கேட்க, "பேக் யாட்ல உள்ள அந்த பெரிய மரம். அந்த பேய பாத்ததா சொன்னேன்ல அதே மரத்துப் பக்கத்துல இருந்துதான் கிடைச்சது" என்று பதிலளித்தாள். சிறிது நேரம் யோசித்தவன், "வீடு முழுக்க சி.சி.டி.வி கேமெரா இருக்கு. அதுல பாத்தா தெரிஞ்சிரும்" என்று கூறியவன் நியதியோடு சி.சி.டி.வி கேமெரா கண்ட்ரோல் ரூமிற்குச் சென்றான்.

நேற்றுக்கு முந்தையதினத்தின் பேக் யார்டிற்குரிய இரவுநேரக் காணொளியை ஓடவிட்டு பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் கையில் ஒரு மூட்டையை சுமந்துகொண்டு சென்றது. திடீரென அதனுடைய கால் இடரவும் அந்த மூட்டை கீழே விழ அதிலிருந்து சிறிதளழவு வெள்ளைப் பொடி விழுந்தது. அதே நேரம் அந்த உருவத்தின் முகம் அப்போது தெரிந்தது. அதைக் கண்டதும், "இது பாண்டியன் ஆச்சே" என்று அதிர்ச்சியுடன் கூறினான். பாண்டியன் வேறுயாருமல்ல அங்கு பணிபுரியும் தலைமை தோட்டக்காரன்.
அப்போது அவன் மனதில் மற்றொரு எண்ணமும் தோன்றியது. உடனே நியதி பேய்யைக் கண்டதாகக் கூறிய அந்த நாளிற்குரிய சி.சி.டி.வி. பதிவையும் காட்டுமாறு பணிக்க அங்கிருந்தவனும் அவ்வாறே செய்தான். அதில் எந்தஒரு பேயின் உருவமும் தெரியவில்லை ஆனால் அதற்கு மாறாக அவர்கள் சென்றதும் ஒரு உருவம் அந்த மரத்திலிருந்து குதிப்பது தெரிந்தது. அதுவும் வேறுயாரும் அல்ல அதே பாண்டியன்தான் என்பது அதில் நன்றாகத் தெரிந்தது.
அதனைக் கண்டதும் ரஞ்சித்தின் முகம் கோபத்தால் சிவக்க, "பாண்டியன்" என்று ஆக்ரோஷமாகக் கத்த, நியதி பயந்துவிட்டாள். வெளியே வேலை செய்துகொண்டிருந்த அனைத்து வேலையாட்களும் அஞ்சி நிற்க மறுநொடியே அவனுடைய மெய்காப்பாளர்களால் ரஞ்சித்தின் முன்னால் பாண்டியன் நிறுத்தப்பட்டான். தன் அவுட் ஹவுஸிலுள்ள பெரிய ஹாலில் ரஞ்சித் பெரிய சோஃபாவில் அமர்ந்திருக்க அவனுக்கருகே போடப்பட்ட மற்றொரு சோஃபாவில் நியதி அமர்ந்திருந்தாள்.

நியதியிடமிருந்து வாங்கிய வெண்ணிறப் போடி வைக்கப்பட்டிருந்த பாக்கட்டை அவன் முன் இருந்த டீபாயில் போட்டுவிட்டு, "இது என்னன்னு தெரியுதா?" என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக்கேட்டான்.
அதைக் கண்டதும் பாண்டியனின் முகம் மாற அவன் படபடக்க ஆரம்பித்தான். "எனக்...தெரி...யாது..." என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, "பொய் சொல்லாத...அன்னைக்கு அந்த மரத்துக்கு பின்னால நின்னதும் நீதான?" என்று அவன் கேட்க பாண்டியனுக்கு உடல் அனைத்தும் வியர்த்துக்கொட்டியது. 'அதுவும் தெரிஞ்சிருச்சா' என்று அவன் தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தபோது, "இதெல்லாம் நீ யார் சொல்லி பண்ற?" என்று அடுத்த கேள்வி ரஞ்சித்திடமிருந்து பிறந்தது. அவன் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே நின்றுகொண்டிருக்க, "உனக்கு இதெல்லாம் சரிவராது..." என்றவன் கண்ணால் சைகை செய்ய அருகிலிருந்த மெய்காப்பாளன் பாண்டியனருகே ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து வந்து அவன் முதுகில் அடிக்கவும் நியதி அதிர்த்தாள்.
"ரஞ்சித் என்ன பண்றீங்க. அவன அடிக்காம போலீஸ்கிட்ட ஒப்படைச்சிருங்க" என்று கூறவும். "இல்ல நியதி இந்த மாதிரி ஆட்களுக்கு என் ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட்" என்று கூற அந்த பாண்டியன் மீது மேலுமொரு பலத்த அடி விழுந்தது. உடனே அவனுடைய வாயிலிருந்து குருதி வழிவதைப் பார்த்த நியதி, "தயவுசெஞ்சி இப்படி பண்ணாதீங்க. ப்ளீஸ்..." என்று அழுத்தமான குரலில் கூறவும் ரஞ்சித் தன் மெய்காப்பாளர்களை பார்த்து சைகை செய்ய அவர்கள் பாண்டியனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
சற்று தீவிரமான யோசனையிலிருந்தவனைப் பார்த்து, "என்ன ஆச்சு ரஞ்சித்?" என்று நியதி வினவினாள். "இத யாரு செஞ்சிருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று அவன் கூற நியதி கேள்வியாக ரஞ்சித்தை நோக்கினாள். "இது அந்த விராஜோட வேலதான். ஆரிய அவமானப் படுத்துறதுக்காக என்ன பயன்படுத்துறான். நான் அதுக்கு கண்டிப்பா விடவேமாட்டேன்" என்று உறுதியான குரலில் கூறினான்.
பின் நியதியைப் பார்த்து, "ஐ அம் சாரி நியதி. நீ சொல்றத அன்னைக்கே கேட்டிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது..." என்று அவன் மன்னிப்பு கோரவும், "இட்ஸ் ஓகே ரஞ்சித். இப்பயாவது தெரிஞ்சுசே. அதுவே போதும்" என்று பதிலளித்தாள்.
அதே சமயம் விராஜ் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்தபோது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. புன்முறுவலுடன் அந்த அழைப்பை எடுத்தவன் அதை துண்டித்தபோது கோபத்தின் உச்சிக்கே சென்றான். உடனே தன்னுடைய கையில் வைத்திருந்த கைபேசியை கோபத்துடன் சுவற்றில் வீசி எரிய அது சுக்குநூறாக உடைந்து தரையில் விழுந்தது. "ஒரு வேலைய கொடுத்தா ஒழுங்கா கூட செய்யத்தெரியால. இர்ரெஸ்பான்சிபிள் இடியட்ஸ்" என்று கோபத்தில் உறுமினான்.
அன்று சாராவின் பிறந்தநாள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அவளுடைய தந்தை ராஜாராமனிடமிருந்து வீடியோ கால் வந்தது. "மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃ த டே பிரின்சஸ்" என்று தன் வாழ்த்துக்களைக் கூறவும் அவள் தன் நன்றியைத் தெரிவித்தாள். "எப்படி இருக்க? அப்பா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா" என்றவரிடம் அவளும், "ஐ டூ மிஸ் யூ பா. எனக்கு உங்க நியாபகமாவே இருக்கு" என்று சிறு வருத்தத்துடன் கூறினாள்.

"உன் பிறந்தநாளுக்கு உன்கூட இருக்கமுடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு" என்று அவர் சோகத்துடன் கூறவும் மகளோ, "உங்க உடம்பு சரியானதும் நீங்க இந்தியா வாங்க. இப்போதைக்கு நீங்க அங்கயே ரெஸ்ட் எடுங்க பா" என்று அறிவுரை கூறினாள். பின், "உன் லைஃ எப்படி போகுது?" என்று அவர் கேட்க அவளோ, "ரொம்ப நல்லா போகுது. இந்தியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க..." என்று கூறிக்கொண்டே சென்றாள்.
மகளுடைய பேச்சில் சற்று மாறுதலை உணர்ந்த அவர், "யாரையாவது காதலிக்கிரியா சரஸ்?" என்று கேட்க அவள் சட்டென தன்னுடைய பேச்சை நிறுத்தினாள். அவள் மௌனமாக இருப்பதைக் கண்டவர் அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அவள் மெல்ல புன்னகைக்க, "ஹூ இஸ் தாட் லக்கி மேன்?" என்று கேட்டார். அவள், "சரண்" என்று பதிலளித்துவிட்டு அவர்களின் முதல் சந்திப்பிலிருந்து பெங்களூர் சென்றதுவரை அனைத்தையும் தன் தந்தையிடம் விவரித்தாள்.
அவள் சொன்னவிதத்திலிருந்தே அவருக்கும் சரணைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. மேலும் அன்று மாலை நடக்கவிருக்கும் பிறந்தநாள் விழாவில் தன்னுடைய காதலை அவனுக்குத் தெரிவிக்கப் போவதாகக் கூறினாள். உடனே, "ஆல் தி பெஸ்ட் பிரின்சஸ்" என்று வாழ்த்தினார். சிறிதுநேரம் பேசிவிட்டு சாரா இணைப்பை துண்டித்தாள். தன்னுடைய டேபிள் டிராயரிலிருந்து கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அதைப் பார்த்தவாறே படுக்கையில் சாய்ந்தாள். அது வேறு எதுவுமல்ல சரண் தவறவிட்டதாக நினைக்கும் அதே கடிகாரம். தன்னுடைய பிறந்தநாள் விழாவில் அதை சரணுக்கு அணிவித்து காதலை தெரிவிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.
மாலை பிறந்தநாள் விழாவிற்கு அவளுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் வருகைதந்தனர். விழா ஏழு நட்சத்திர ஹோட்டலில் ரூஃப் டாப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரா அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீளமான கவுன் ஒன்றை அணிந்து அதற்கேற்றாற்போல் டைமென்ட் நெக்லஸ்ஸும் அணிந்திருந்தாள்.

சரண் அவளையே மெய்மறந்து பார்த்தவாறு நின்றான். நியதிதான் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தாள். அவர்கள் சாராவிற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சாராவின் பார்வை சரணை விட்டு அகலவில்லை. அங்கு ஆரியனும் வருகைதந்து வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு பரிசையும் கொடுத்தான். கேக்கை வெட்டிமுடித்துவிட்டு அனைவரும் அந்த பார்ட்டியில் சந்தோஷமாக ஆடிக்கொண்டிருந்தபோது சரணை சாரா அழைத்ததாக வெயிட்டர் கூறவும் அவன் அவளைப் பார்க்கச் சென்றான். "மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃ தி டே மேடம்" என்று கூற அவள், "தாங்க் யூ" என்று மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தாள்.
பின், "உன் கைய நீட்டு நான் உனக்கு ஒரு கிஃட் குடுக்கணும்" என்றவளிடம், "மேடம் இன்னைக்கு உங்களுக்கு தான பிறந்தநாள். நான் தான் உங்களுக்கு கிஃட் குடுக்கணும். நீங்க குடுக்க போறேன்னு சொல்றீங்க?" என்று கேட்டான். உடனே அவள், "இது என் ஸ்டைல். கைய நீட்டு..." என்றவாறு அவனுடைய கையைப் பிடித்தாள். அந்த கடிகாரத்தை அவனுக்கு அணிவித்தபோது ஆச்சரியத்தால் அவளைப் பார்த்தான். பின் அவனுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், "ஐ லவ் யூ சரண்" என்று கூற அவன் மேலும் திகைத்தான்.

அவன் பேச்சிழந்து நிற்கும்போது, "உனக்கு இது அதிர்ச்சியா இருக்கும்னு தெரியும். எனக்கு உன்ன எப்படி பிடிச்சதுன்னே தெரியல. ஆனா நீ என் லைஃல வந்தா நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று கூறினாள். அவள் கூறுவதைக் கேட்டு அப்படியே உறைந்து நின்ற சரணிடம், "நீ உன்னோட முடிவ இப்பவே சொல்லணுங்கிற அவசியம் இல்ல. மெதுவா யோசிச்சி நல்ல முடிவா சொல்லு" என்றாள். எதுவும் சொல்லாமல் சிலையாய் நின்றவன் அங்கிருந்து நியதியிடம் வந்தான்.
அவனைப் பார்த்ததும், "என்னடா மேடம் என்ன சொன்னாங்க? என்ன ஆச்சி ? ஏன் இப்படி இருக்க?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சரணிடமிருந்து எந்த பதிலும் வராததால், "டேய் நான் உன்கிட்டதான் கேக்குறேன்..." என்று வினவ, "அவா என்ன லவ் பண்றாளாம்" என்றதும் நியதி ஆச்சரியமடைந்தாள். மிகவும் மகிழ்ச்சியுடன், "அதுக்கு நீ என்னடா சொன்னா?" என்று கேட்டவுடன், "நான் ஒண்ணும் சொல்லல அப்படியே வந்துட்டேன்" என்று கூறவும் நியதிக்கு கோபம் உண்டாயிற்று.
"லூசு...ஏன்டா எதுவும் சொல்லல?" என்று கேட்க அவனோ, "இல்ல நிதி அவங்க ஸ்டேட்டஸ் வேற என்னோடது வேற. அது செட்ஆகாது" என்று கூறினான். "என்ன செட்ஆகாது?" என்று கோபத்துடன் கேட்கவும், "நான்தான் உன் விஷயத்துல பாக்குறேன்ல. மறுபடியும் அதே தப்ப நானும் செய்யவா? வேண்டாம் நிதி" என்று மட்டும் கூறினான். உடனே அவள், "டேய் என் விஷயம் வேற, உன்னோடது வேற. அவங்களே உன்கிட்ட வந்து லவ்வ சொல்லீருக்காங்க. மிஸ் பண்ணீராத. பொறுமையா நிதானமா யோசிச்சி ஒரு முடிவ சொல்லு…அவங்க ரொம்ப நல்லவங்கடா" என்று கூற சரணும் யோசிக்கத் துவங்கினான்.
சரணும் நியதியும் பேசுவதை ஆரியன் நோக்கினான். அவன் ‘வியூ பாயிண்ட்’ என்று கூறப் படும் அந்த உயரமான இடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த பார்ட்டி நடக்கும் அதே இடத்தில்தான் இருந்தது. அங்கிருந்து சென்னை நகரத்தின் மொத்த அழகையும் பார்க்க முடியும். இயற்கை அழகை ரசிப்பதற்காக அங்கு சென்றவன் நியதியைக் கண்டதும் அவளை ரசிக்கத் துவங்கினான்.
அப்போது பின்னிருந்து யாரோ ஆரியனின் வீல் சேரை காலால் ஓங்கி உதைக்க அவன் தடுமாறி கீழே விழச்சென்றான். அப்போது அவன் பாதுகாப்புக்காக போடப்பட்ட கம்பியை பிடித்துக்கொள்ள அந்த வீல் சேர் மட்டும் அதிக சத்தத்துடன் கீழே விழுந்தது. அது விழும் சத்தம் கேட்டு அந்த பார்ட்டியிலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மேலே நோக்கியபோது அந்த உயரமான இடத்திலிருந்து ஆரியன் தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதைக் கண்டதும் நியதியின் கண்களிலிருந்து தன்னையறியாமலே தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. பிரம்மை பிடித்தவள் போல் ஆரியனையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள். அவளருகே இருந்த சரண் ஒரு நொடிகூட தாமதிக்காமல் ஆரியனைக் காப்பாற்ற அந்த இடத்திற்கு விரைந்தான். அங்குள்ள கம்பிகளை இறுக்கமாக பிடித்திருந்த ஆரியனின் கை மெல்ல நழுவத்துவங்கியது. அவனுடைய விரல்கள் ஒவ்வொன்றாக அந்த கம்பியிலிருந்து நழுவ இறுதியில் ஒரு விரலால் மட்டும் கம்பியை பிடித்திருந்தான். சிறிதுநேரத்தில் அவனுடைய கடைசி பிடியும் நுழுவியது.
மாயங்கள் தொடரும்...
****************************************************************************************
வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை இந்த கருத்துத் திரியிலும் பதிவிடலாம் 

Link
https://www.narumugainovels.com/threads/21888/