எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பூந்தென்றலாய்.. பூஞ்சாரலாய்..11

அத்தியாயம் - 11

ராதாவின் தலையில் நான்கு முழம் மல்லிகை சரத்தினை சூடினார் தெய்வானை.

கண்ணாடியின் முன் அமர்ந்திருந்த மகளின் முகத்தை பார்த்து "அழகா இருக்கடி ராதா. இதுவரை இவ்வளவு மல்லிகை பூவெல்லாம் நீ வச்சு நான் பாத்ததே இல்ல தெரியுமா?" என்று சிலாகித்து சொல்ல தாயின் சிலாகிப்பிற்கு மாறாக ராதாவின் முகத்தில் சிடுசிடுப்பு மட்டுமே இருந்தது.

கடுகடுத்த முகத்துடன் கண்ணாடியில் தன் முகம் பார்த்துக் கொண்டவள் "ஆமா.. பெரிய அழகு. போம்மா" என்று முகத்தை சுருக்கினாள் ராதா.

மகளின் மோவாயை பற்றி தன்னை பார்க்க வைத்தவர் அவளின் நெற்றியில் பொட்டினை ஒட்டியவாரே "ராதா உன் கோபம் எனக்கு புரியாம இல்ல. ஆனா இந்த சம்மந்தம் ரொம்ப நல்ல இடம்டி. பையன் தங்கமான குணமாம். அதான் உங்க அப்பா இந்த இடத்தை முடிச்சே ஆகனும்னு இருக்கார்" என்றதும் ராதா அன்னையை முறைத்தாள்.

"என்னடி முறைக்கிற?"

"பின்ன என்னமா? உன் புருஷன் தான் என் வாழ்க்கைக்கு சங்கூதுறாருன்னா நீயும் அவரோட சேர்ந்து ஒத்து ஊதுற? நீ வேணும்னா பாரு.. உன் புருஷன் பிளான் பண்ணிட்டார்! என்னை இங்க இருந்து பேக் பண்ணாம விட மாட்டார். ஒரே அடியா மூட்டை முடிச்சை கட்டி என்னை கிளப்பி விட்டுட்டு அவர் தினமும் வீட்ல சண்டை போடாம ஜாலியா இருக்க பிளான் பண்ணிட்டார்" என்று கடுப்பில் ராதா பேச தெய்வானைக்கு மகளை எண்ணி பாவமாக இருந்தது.

அவள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து போராடி என்ன செய்தும் கண்ணபிரானின் உள்ளம் ஒரு இஞ்ச் கூட அசையவில்லை.

"முடியவே முடியாது" என்று அவர் பிடியில் அவர் உறுதியாக நின்று விட ராதா இம்முறையும் தோற்று தான் போனாள் தந்தையிடம்.

தந்தையின் கல் மனதை எண்ணி கண்ணீர் லிட்டர் கணக்கில் அவளுக்கு வெளியேறி இருந்தது. ஆனாலும் மகளின் லிட்டர் கணக்கான கண்ணீரை கண்டெல்லாம் கண்ணபிரான் மாறவில்லை. அவளை வேலைக்கும் செல்ல அனுமதிக்கவுமில்லை.

அருகில் இருக்கும் பிரைமரி ஸ்கூலுக்கு தமிழ் ஆசிரியையாக பணி புரிய சொன்ன போது ராதா உறுதியுடன் நோ சொல்லி விட்டாள்.

"எனக்கு பிடிச்சதை.. கிடைச்சதை பண்ண விடாம நீங்க சொல்ற ஸ்கூல்ல என்னால போய் டீச்சரா வேலை செய்ய முடியாது" என்றே உறுதியாக சொல்லி விட்டாள் கோபத்துடன்.

கண்ணபிரானும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. சொல்லப் போனால் மகளின் இந்த முடிவில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான்.

"நல்லது. ரொம்ப நல்லது. ஸ்கூல் வேலைக்கும் போகலேன்னு சொல்லிட்ட. அப்புறம் என்ன? இனி கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் என்னோட கடமை. அதை செய்றேன்" என்றவர்,

மேலும், "ஒழுங்க மரியாதையா நான் பாக்குற மாப்பிள்ளைக்கு ஒத்து வந்து உன் பொண்ணை அடக்க ஒடுக்கமா நடந்துக்க சொல்லு. இல்லேன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்" என்று ஸ்டார்ட்டிங் பாயின்ட்டிலேயே மனைவியிடம் கறாராக சொல்லி விட ராதா மொத்தமாக உடைந்து விட்டாள்.

கல்யாணமா... என்று நெஞ்சை பிடித்தவள் அந்த ஷாக்கில் இருந்து வெளியே வருவதற்குள் கண்ணபிரான் சுட சுட அவளுக்கு மாப்பிள்ளையை தேடி தேர்ந்தெடுத்து இருந்தார்.

இன்று பெண் பார்க்கும் நிகழ்வு. அதற்கு தான் அவளை தயார் செய்து கொண்டிருந்தார் தெய்வானை. ராதாவின் புலம்பல்களை கேட்டு அவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும் அவரால்? வழக்கம் போல் அமைதி தான் அவரின் நிலை.

இப்போது மகளின் கோபம் கண்டு பாவமாய் அவளைப் பார்த்தவர் அவளின் கன்னம் பற்றி "ஏன் ராதா இவ்வளவு வருத்தப் படுற? அப்பா உன்னை வேலைக்கு விடாதது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா இந்த வரன் ரொம்பவே நல்ல இடம்டி. அம்மாக்காக ஒத்துக்க. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்" என்றார் தாய்ப் பாசத்துடன்.

"ஆமா.. போம்மா.. என்ன நல்ல வரன். நல்ல இடம்? எந்த இடத்தில கட்டிக் கொடுத்தாலும் எல்லாரும் எதிர் பார்க்குற ஒரே விஷயம் பொண்ணு சமைக்குமா? அடுத்து ஒரு குழைந்தை! இது மட்டும் தான். இந்த இடமும் அதுக்கு விதி விலக்கா இருக்க போகுதா?"

மகளின் கேள்வியில் தெய்வானை தலையில் கை வைத்து விட்டார். இவ்வளவு விவரமாக ஆழமாக யோசிக்க கூடிய மகளை எண்ணி மனம் வலித்தது.

"டி.. ராதா.. அம்மா சொல்றேன் தான.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும். உனக்கு அந்த மாப்பிள்ளை பொருத்தமா இருப்பாருடி" என்றவர்

"ஒரு வேளை மாப்பிள்ளை வீட்ல உன்னை வேலைக்கு போக விட்டா?" என்று கொக்கி போட்டு நிறுத்த,

"விட்டா..." எனும் கேள்வி அவளுக்கும் தோன்ற பரபரப்புடன் நிமிர்ந்து அமர்ந்தாள் ராதா.

"விடுவாங்களா ம்மா?" என்று கண்ணில் சிறு கனவுடன் கேட்கும் மகளை கனிவாகப் பார்த்தவர்,

"விட்டா உனக்கு நல்லது தானே ராதா. மாப்பிள்ளையும் ஐ.டி. தான். படிச்சு வேலைக்கு போறாரு. அவருக்கு நீயும் வேலைக்கு போறதை விரும்பலாம் தானே" என்று கேட்க,

"அம்மா இப்படி எல்லாம் சொல்லி என் பிஞ்சு நெஞ்சுல நம்பிக்கையை விதைக்காதமா. அப்புறம் இது நடக்காம போச்சுன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்"

"அதெல்லாம் ஒரு கஷ்டமும் இருக்காது. தங்கமான இடம் தான் நம்ம லதா மாமியார் சொல்லி இருக்கது. எனக்குத் தெரிஞ்சு வேலைக்கு போக வேண்டாம்னு சொல்ல மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். நீ ஏன் கவல படுற. பேசிப் பாத்திடுவோம். அப்பாவையே கேட்க சொல்வோம்" என்றதும் அன்னைக்கு பெரிய கும்பிடாய் போட்டு விட்டாள் ராதா.

"ஆத்தா தாயே... இதுவரை நீ சொன்னதெல்லாம் சூப்பர். ஆனா எண்டிங்ல சொன்ன பாரு.... அப்பாவையே கேட்க சொல்வோம்னு... அங்க தான் மகா தப்பு பண்ற! உன் புருஷனை கேட்க சொன்னோம்னு வையி.. அம்புட்டு தான். உள்ளதும் பிச்சுக்கும். நானே வந்திருக்க அந்த மாப்பிள்ளை கூட தனியா பேசும் போது கேட்டுக்கிறேன். நீ இதை பத்தி உன் வூட்டுக்கார் கிட்ட மூச்சு விடாம இருந்தாலே போதும்" என்று மூச்சு விடாமல் ராதா பேச,

"ஆத்தாடி... சரிடி அப்பா .. நான் எதுவும் சொல்லல. நீ பேசு" என்று தெய்வானையும் வாய் மூடிக் கொண்டார். மனதிற்குள் மகளின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்னும் வேண்டுதலும் இருந்தது.

ஒரு வழியாக ராதாவை தயார் செய்தவர் "இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவுங்க எல்லாம் வந்துடுவாங்க. நீ இரு. நான் வந்ததும் வெளிய போகலாம்" என்றவர் வெளியேறி விட, ராதா கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை நன்றாக பார்த்தாள்.

"அழகா தான் இருக்கோம்" என்று அவளுக்கு அவளே கமென்ட் அடித்துக் கொண்டு தனது சின்ன டச் போனை எடுத்து ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டாள்.

சரியான நேரத்தில் கண்ணபிரானின் இல்லத்தில் வந்து நின்றது நரேந்திரன் குடும்பத்தின் வாகனம். நரேந்திரன் தான் மாப்பிள்ளை!

அன்று அவன் தாயிடம் "ராதா.." என்று கூறியதும் குமுதாவிற்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை.

"யாருடா அந்த ராதா?"

"நம்ம காசிநாதன் மாமா கல்யாணத்துல பாத்தோமேமா.. ஒருத்தரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாளே.. அவ தான்" நரேன் விளக்கமாய் சொன்னதும் விளங்கி விட்டது குமுதாவிற்கு.

"என்னது அந்தப் பொண்ணா?" என்று தான் அவர் கேட்ட முதல் கேள்வியே.

சற்றே அதிர்வை தாங்கிய குரலில் கேட்டவர் மகனை பார்க்க "ஆமாமா. அவ தான். ரெண்டு வருஷமா அவ நினைப்பிருக்கு. சிக்னல்ல அடிக்கடி பாத்திருக்கேன். ரெண்டு வருஷம் முன்ன என்னோட பிறந்தநாள் அன்னைக்கு என் கல்யாணம் பத்தி கேட்டப்ப எனக்கு அவ நினைப்பு தான் மா வந்தது. ஆனா அன்னைக்கு என்னால க்ளியரா பதில் சொல்ல முடியல. அவ மேல என்ன அபிப்ராயம் இருந்ததுன்னு கூட எனக்கே புரியல. அதான் அன்னைக்கு நான் எதுவுமே சொல்லல. ஆனா இன்னைக்கு தெளிவா தான்மா சொல்றேன். எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு" என்றான் தன் மனதை தாயிடம் மறைக்காமல்.

குமுதாவிற்கு மகனின் விருப்பம் மேல் வருத்தமோ கோபமோ இல்லை. மாறாக குழப்பம் மட்டுமே. அந்தப் பெண்ணை முதல் முறையாக கண்ட போதே அவள் பேசிய விதம் கண்டு சற்றே திகைத்திருந்தார் தான். ஆனால் அவள் அன்று பேசியவையில் இருந்த தார்மீக கோபமும் புரியாமல் இல்லை அவருக்கும். ஆனாலும் மனம் முரண்டியது. மகனின் அமைதியான குணத்திற்கு முன்னாள் அவளின் அதிரடியான பட் பட் எனும் பேச்சு எடுபடுமா என்று யோசிக்க அன்னையின் யோசனையில் அவரின் கை தொட்டவன்,

"என்னமா ஆச்சு? உங்களுக்கு இஷ்டம் இல்லையா?"

"ச்சே ச்சே.. அப்படி இல்ல நரேன். அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் ஒத்து வருமான்னு தான் நான் யோசிக்கிறேன். அவ நல்ல பொண்ணு தான். ஆனா முகத்துக்கு நேரா ஏதா இருந்தாலும் பட் பட்னு பேசக் கூடிய பொண்ணு. நீ அமைதியான ஆளு. எப்படி சரி வரும்?"

"அவ நெருப்பா இருந்தா நான் நீரா இருந்துட்டு போறேனேமா" என்றான் தாயை கண்டு புன்னகையுடன்.

குமுதாவிற்கு மகனின் மனம் தெக்கத் தெளிவாக புரிந்து விட்டது. அவன் முடிவே செய்து விட்டான் என்று அவனின் நெருப்பும் நீருமான விளக்கத்தை வைத்து புரிந்து கொண்டவர் அதற்கு மேல் குழம்பவில்லை. யோசிக்கவுமில்லை.

மனதிற்கு பிடித்தவளோடு தான் வாழ்க்கை சிறக்கும். பிடிக்காத ஒரு பெண்ணோடு திருமணம் செய்து வைத்தால் மகனின் வாழ்வு மகிழ்வாக இருக்காது என்று ஒரே எண்ணத்துடன் எந்த வித குழப்பமும் இல்லாமல் ராதாவைப் பற்றி உறவுக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் விசாரித்த வரையிலும் யாரும் எதுவும் மோசமாக கூறவில்லை. எல்லோரும் நல்ல குடும்பம் தான் என்றார்கள். அதோடு வசதியில் சற்று கம்மி என்றார்கள். அவ்வளவு தான். ஆனால் ராதாவைப் பற்றி ஒருவர் கூட தவறாக கூறவில்லை. அதுவே குமுதாவிற்கு போதுமானதாக இருந்தது.

மேலும் லதாவின் மாமியார் வேதவள்ளியும் குமுதாவின் சொந்தம் தான் என்பதால், குமுதா ராதாவின் வீட்டினர் பற்றி விசாரித்தது அறிந்து குமுதாவிற்கு அழைத்து பேசியிருந்தார் அவர்.

"நல்ல குடும்பம் தான் குமுதா. பொண்ணும் படு சுட்டி. கெட்டிக்காரி. அப்பன் ஏமாளி. ஆனா அவ விவரம். ஆனா என்ன உன் வசதிக்கு இருக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா நல்ல குடும்பம். என் மருமக கொஞ்சம் அமைதி. அந்தப் பொண்ணு துடுக்கானவ. ஆனா எந்த வம்பு தும்புக்கும் போனதில்ல. நீ பாத்துக்க" என்றவர்,

"இதே பொண்ணு தான் வேணும்னா சொல்லு. இந்த இடத்தை உனக்கு முடிச்சு கொடுக்கிறது என் பொறுப்பு" என்றும் ஆணித்தரமாக கூறி விட குமுதாவும் கணவரிடம் பேசி விட்டு சொல்வதாக கூறி இருந்தார்.

மயில்வாகனம் விஷயம் அறிந்து மகனின் தோள் தட்டி "சபாஷ்டா நரேன். எங்களுக்கு வேலையை மிச்சம் பண்ணிட்ட" என்று கிண்டலாக சொன்னாலும் அவருக்கும் மகிழ்ச்சி தான்.

நவீனும் அண்ணனின் விருப்பத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள "என் அண்ணனுக்கும் காதல் நோய் வந்ததில் பெருமை கொள்கிறான் இந்த தம்பிகாரன்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளாத குறை தான்.

குமுதா வேதவள்ளியிடம் உறுதியாக ராதாவை தங்கள் இல்லத்தின் மூத்த மருமகளாக ஏற்றுக் கொள்வதில் சம்மதம் என்று கூறி விட அதற்கடுத்து எல்லாம் ஜெட் வேகம்.

வேதவள்ளி தெய்வானைக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட கண்ணபிரானும் மயில்வாகனம் குடும்பம் பற்றி விசாரித்து அகமகிழ்ந்து போனார்.

அவர்கள் தரமுள்ள அமைதியான குணமான குடும்பம் என்பதே கண்ணபிரானின் மனதை கவர்ந்திருந்தது.

அதற்கு மேலும் அவரும் தாமதிக்கவில்லை. இன்று பெண் பார்க்கும் வைபவம் வரை வந்து விட்டது.

வந்திருந்த எல்லோரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர் கண்ணபிரான் தம்பதியினர். அவர்கள் பக்கம் சொந்தமாக ராதாவின் இரு அக்காக்களும் லதாவின் மாமியார் வீடு மட்டுமே வருகை தந்திருந்தனர்.

காசிநாதனுக்கு கண்ணபிரான் சொல்லவில்லை. தெய்வானைக்கு சொல்ல விருப்பம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ராதா தந்தையிடம் உறுதியாக அவர்களை அழைக்கவே கூடாது என்று சொல்லி விட்டாள்.

"அவுங்க என்னத்தை நமக்கு சொல்லிட்டாங்கன்னு நாம அவுங்களுக்கு சொல்லணும்? அதுவும் என்னோட பொண்ணு பாக்குற விஷயத்தை. உறுதியா சொல்லக் கூடாதுப்பா நீங்க?" என்று அத்தனை ஆவேசத்துடன் சொன்னவள்,

"நம்ம கீதா லதா.. ரெண்டு பேரோட பொண்ணு பாக்குறது, நிச்சயம் பண்றது, கல்யாணம்னு எல்லாத்துக்கும் சொன்னோம் தானே? குடும்பமா வந்தாங்களா அவுங்க? உங்க அண்ணன் மட்டும் கல்யாணத்துக்கு பேருக்கு வந்துட்டு தலையை காட்டிட்டு போனார் தானே. எந்த முறையும் ஒழுங்கா கூட செய்யல. கால்ல சுட தண்ணியை கொட்டிக்கிட்டவர் மாதிரி வந்ததும் வேக வேகமா கிளம்பிட்டார். நம்ம வீட்ல சாப்பிட கூட இல்ல. அப்பேற்பட்டவருக்கு நாம எதுக்கு சொல்லணும்" என்று தந்தையிடம் கோபமாய் பேசி இருந்தாள் ராதா.

கண்ணபிரான் மகளின் ஆட்டத்தை அமைதியாய் பார்த்து மட்டுமே இருந்தார். எந்த ஒரு பதிலும் கூறவில்லை. அதிலேயே ராதாவிற்கு புரிந்து போனது அவர் அண்ணனிடம் விஷயத்தை சொல்லப் போகிறார் என்று.

தந்தையை முதல் முறையாக வெறுப்பு கலந்து முறைத்தவள் "அப்போ நீங்க உங்க அண்ணன் கிட்ட சொல்ல தான் போறீங்க? இல்லப்பா?" என்று கேட்க,

"ஹ்ம்ம். ஆமா. அவுங்க எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. அவுங்க அப்படி பண்ணிட்டாங்கன்னு நாமளும் அவுங்களை மாதிரியே பண்ணனும்னு அவசியம் இல்ல. என் கடமைல இருந்து நான் தவருறதை விரும்பல. நான் சொல்றதை சொல்ல தான் போறேன். வரதும் வராததும் அவுங்க விருப்பம்" என்று கண்ணபிரான் முடிவாக சொல்லி விட,

"அப்ப நானும் நீங்க பாக்குற மாப்பிள்ளை முன்னாடி வந்து நிக்க மாட்டேன் ப்பா. உறுதியா நிக்க மாட்டேன்" என்று ஆக்ரோஷமாய் சொன்ன ராதா தந்தை தன்னை முறைப்பதை பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தாள்.

"உங்க மேல.. அம்மா மேல சத்தியமா.. நீங்க எந்த மாப்பிள்ளை பாத்தாலும் அவன் முன்னாடி நான் வந்து நிக்க மாட்டேன். ரூமுக்குள்ள தான் நிப்பேன். நீங்க என்னை கொன்னே கூட போட்டாலும் பரவாயில்ல. அடிச்சு உதைச்சாலும் பரவாயில்ல. நான் வர மாட்டேன். வெளிய வரவே மாட்டேன்" என்று ஆவேசமாய் அழுத்தமாய் மிக மிக வலி மிகுந்த குரலில் சொன்னவள், இறுதியாக சொன்னவை கண்ணபிரானையே கதி கலங்க வைத்தது.

"நீங்க மட்டும் உங்க அண்ணன் கிட்ட எனக்கு பொண்ணு பாக்குற விசயத்தை சொன்னீங்கன்னா நான் காலத்துக்கும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். காலத்துக்கும் உங்க வீட்ல உங்க மகளா இருந்திடுவேன். பெத்த கடமைக்கு எனக்கு சோறு போடுவீங்க தானே. எப்படியும் என்னை சுயமா நான் ஆசப் பட்ட வேலைக்கு விட மாட்டீங்க. அதனால நான் உயிரோட இருக்கிற வரைக்கும் எனக்கு நீங்களே பொருப்பேத்துக்கங்க" என்றவள்,

"நான் சொல்றதை விளையாட்டுக்கு மட்டும் எடுத்துக்காதீங்க.. அப்புறம் இதென்ன வாழ்க்கைன்னு அந்த வாழ்க்கைக்கான முடிவை நான் தேட வேண்டியதா இருக்கும்" என்று மிரட்டி விட்டு அறைக்குள் சென்று விட்டாள் ராதா.

மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தனர் கண்ணபிரான் தம்பதியினர். தெய்வானை மகளின் பேச்சையும் இறுதியான முடிவையும் கேட்டு கண்ணீரை கொட்டி இருந்தார்.

ஷாக்கில் இருந்து மீளாமல் அமர்ந்திருந்த கணவரிடம் "அவ எதைங்க இவ்வளவு தூரம் நம்ம கிட்ட கேட்டிருக்கா? அவ ஆசைப் பட்ட சின்ன வயசு வாழ்க்கை,வீடு...படிப்பு, வேலை, இப்படி எதுவுமே நாம பண்ணலங்க. ஏன் இப்ப கல்யாணம் கூட அவ சம்மதம் இல்லாம தான் பண்றோம். இப்ப அவ என்ன பெருசா கேட்டுட்டா? உங்க அண்ணனுக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றா. குறிப்பா நீங்க தெரியப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறா. அவ்வளவு தானே. உங்க அண்ணனும் ரொம்ப நல்லவர் இல்ல. எனக்கும் நீங்க சொல்றதுல உடன்பாடு இல்ல" என்று முதல் முறையாக கணவரிடம் தன் மனம் திறந்து சொல்லி விட்டவர்,

"இனிமேல் உங்க இஷ்டம் தான். ஆனா நம்ம ராதா சும்மா பிடிவாதமா இதை சொல்லிட்டு போறான்னு நினைக்காதீங்க. அவ மனசுல காயம் ஜாஸ்தி. நினைச்ச படிப்பில்லை. வேலையும் நீங்க பாக்க விடல. இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்றவளை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ண வைக்கிறீங்க. இப்படியே ஒவ்வொண்ணும் பண்ணீங்கன்னா அவ வாழ்கையை வெறுத்து தப்பான முடிவு தான் எடுப்பா. தயவு செஞ்சு அவ சொல்றதை இந்த ஒரு வாட்டியாச்சும் கேளுங்க. உங்க அண்ணனுக்கு சொன்னிங்கன்னா நானும் ராதா எடுக்க வேண்டிய முடிவை தான் எடுக்கணும்" என்று விரக்தியுடன் சொல்லி விட்டு செல்ல கண்ணபிரான் உரைந்தே போனார்.

மனைவி மகள் என இருவருமே மிகவும் நொந்து போய் தன்னிடம் உயிரை விடும் அளவிற்கு பேசி விட்டு செல்வதில் அவர்களின் மனக் காயம் புரிய கூடவே ராதாவின் பேச்சும் மனதில் அபாய சங்கை ஊத அண்ணனுக்கு சொல்லவே வேண்டாம் என்று முடிவு செய்து அவர்களுக்கு எந்த ஒரு தகவலும் பகிரவில்லை இந்த நொடி வரை.

வீட்டிற்குள் எல்லோரும் வந்து அமர்ந்து அறிமுக பேச்சுக்கள் விசாரிப்புகள் முடிந்த பின்னர் நரேந்திரன் "நான் ராதா கிட்ட பேசணும்" என்று சபையில் சொல்லி விட அவளும் 'அதுக்கு தான் நானும் வெயிட்டிங். சீ
க்கிரம் வாடி மாப்பிள்ளை' என்று மனதிற்குள் கமென்ட் அடித்து வெளியே அமைதியான புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தாள்.







 
Top