அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் 12.
ராதாவிடம் நரேன் பேச வேண்டும் என்று பொதுவாக சபையில் சொல்லிவிட கண்ணபிரானுக்கு தான் என்னவோ போல் இருந்தது. இயல்பிலே சற்று கட்டுப் பட்டியாய் இருந்து பழகி விட்டவருக்கு ராதாவை நரேனோடு பேச அனுமதிக்க மனம் வரவில்லை. 'இன்னும் பூ கூட வைக்கலையே... எல்லாம் பேச்சுவார்த்தையில தான இருக்கு?' என்பது முதல் யோசனையாக இருந்தாலும், ராதா பாட்டுக்கு வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் தங்களிடம் பேசுவது போல் வருங்கால மாப்பிள்ளையான நரேனிடமும் பேசி வைத்தால் என்ன செய்வது?
மாப்பிள்ளை குடும்பம் மிகவும் அமைதியானவர்கள் என்று விசாரித்ததில் தெரிய வந்திருக்க அது வேறு மனதை முரண்டியது. கணவர் யோசிப்பதை பார்த்த தெய்வானையோ, அவர் காதில் ரகசியமாய், "என்னங்க அதான் மாப்பிள்ளை கேட்குறார்ல்ல?" என்று இழுத்தார். அவ்வளவு நேரம் நரேனோடு தனியாக பேசும் பொழுது கல்யாணத்திற்கு பின்பு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற தன் ஆசையை கூறிவிட வேண்டும் என கற்பனை பண்ணி வைத்திருந்த ராதாவோ, தன் அப்பா தயங்குவதை பார்த்து முகத்தில் இருந்த புன்னகையை அப்படியே உதிர்த்து விட்டாள். அவள் முகத்தை அடிக்கடி நோட்டமிட்ட நரேனின் கண்ணிலும் இது படத் தவறவில்லை. "அவளுக்கும் என் கூட பேசணுமா?" என்றவன் மனதில் புதிய ஆர்வம் பூக்க கண்ணபிரான் என்ன சொல்லப் போகிறார் என்று அவரை அழுத்தமாய் பாக்க ஆரம்பித்து விட்டான்.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த நவீன் கிண்டலாய், "அண்ணா எதிர்கால மாமனார் கிட்ட எல்லாம், நோக்கு வர்ம கலைய காட்டாத. பொண்ணு கொடுக்காம போயிடப் போறாரு!" என்று சொல்ல, நாசுக்காய் தம்பியின் காலில் கிள்ளிய நரேன், "ரொம்ப நல்லவன்டா நீ!" என்று முனங்க, "இல்லையா பின்ன?" என்ற இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டான் நவீன்.
அன்று இரு குடும்பத்திற்கும் பொதுவான ஆள் என்பதால், லதாவின் மாமியார் வேதவள்ளியே சபையில் அனைத்து பேச்சுவார்த்தையையும் நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு தன்னால் ராதாவின் திருமணம் முடியப் போவதில் அவ்வளவு பெரிய கர்வம். இந்த இடம் முடிந்து விட்டால், 'அவங்க மூணாவது பொண்ணு என்னால தான் நல்லா இருக்கா!' என்று சொல்லிக் காட்டிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக தான் இவ்வளவு டாம்பிகமும்!
அது புரிந்தாலும் பெண் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தெய்வானை கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டார். வேதவள்ளி கண்ணபிரனிடம், "அட என்ன அண்ணே நீங்க... இப்போ அந்த காலம் மாதிரியா? நிச்சயத்துக்கு முன்னாடியே பொண்ணு மாப்பிள்ள பேசி பிடிச்சா தான மேற்கொண்டு எல்லாம் பண்றாங்க? ஏன் என் பையனே லதா கூட பேசிட்டு தான கல்யாணத்துக்கு முடிவு சொன்னான்!" என்று நீட்டி இழுத்து கூற, கண்ணபிரான் எப்படியோ அரை மனதாய் தலையாட்டி விட்டார். இதனால் ராதா நரேன் இருவரும் வீட்டின் புழக்கடை பக்கம் தனியாக பேசும் பொருட்டு அனுப்பி வைக்கப் பட்டனர்.
ஆனால் அவர்களை கண்காணிப்பதற்கு ஒரு வயசான பாட்டியும் வாசலில் உட்கார வைக்கப்பட்டிருக்க அவரை பார்த்து நரேனுக்கு சிரிப்பு தான் வந்தது. ராதாவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் மறையாமல் அவன் முகத்தில் இருந்த சின்ன ஸ்மையிலும், அமைதியும் அவனை ஒரு மாதிரி தனித்து காட்டியது. ஸ்மைலிங் ஃபேசோடு இருக்கும் ஆண்கள் எப்பொழுதுமே சார்மிங்காக இருப்பார்கள்.
அந்த எண்ணத்தில் லேசாய் உதட்டை குவித்தவள், 'பரவாயில்ல ஆள் பாக்க ஸ்மார்ட்டா தான் இருக்காரு!' என்று எண்ணிக் கொண்டு, "மக்கும்!" என தொண்டையை செரும, நரேன் திரும்பிப் பார்த்தான். 'பேசணும்னு சொல்லிட்டு எதுவுமே பேசாம இருக்கீங்களே?' என்ற பார்வை ராதாவின் கண்ணில் தெரிய பட்டென கேட்டு விட்டான்.
"உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டோ?" அவன் கேள்வியில் "ஹான்?" என்று இழுத்த ராதா, கண்ணை உருட்டி அவனை புரியாமல் பார்க்க, நரேனுக்கு அவளை அள்ளிக் கொஞ்ச தோன்றியது. பயங்கர அப்பாவியான ரியாக்ஷன் கொடுத்த ராதா, "ஏன் அப்படி கேக்குறீங்க?" என்றாள் பளிச்சென்று.
"இல்ல பேசணும்னு சொன்னதுக்கே அந்த யோசனை பண்ணாரே... அதுக்கு தான் கேட்டேன்!" என்றவன் சொல்ல ராதா உடனே, "பின்ன யோசிச்சு தானே எல்லாம் பண்ண முடியும்? என் அப்பா அப்படித்தான்...!" என விட்டு கொடுக்காமல் பேசியவள், "ஆமா நீங்க எங்க ஒர்க் பண்றீங்க?" என்று நார்மலாக பேச ஆரம்பித்தாள்.
அவளிடம் சின்ன பதட்டமோ அல்லது தடுமாற்றமோ கூட தெரியவில்லை. ஏதோ முடிவோடு இருப்பவள் போல அவள் கேள்விகள் அனைத்தும் பயங்கர டைரக்டாக இருந்தது. நரேனும் அதில் தானே விழுந்தான்? அவள் நேரடியான பேச்சு அவனை மேலும் ரசிக்க வைத்தது. எந்த இடத்தில் ஒர்க் பண்ணுகிறேன் என்று சொன்னவன் தன்னுடைய பொசிஷன் என்ன என்பதையும் விளக்கமாய் சொல்ல அனைத்தையும் ராதா உன்னிப்பாய் கேட்டுக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவள் தான் சொல்வதற்கெல்லாம் 'ம்ம்' கொட்டி தலையாட்டுவது நரேனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"எப்போடா இந்த தங்கத்தை கட்டி வீட்டுக்கு தூக்கிட்டு போவோம்?" என்று கைகள் வேறு பரபரப்பது போல் இருக்க கையை இறுக்கியபடி ஒரு புன்னகையோடு ராதாவை பார்த்துக் கொண்டிருந்தான். வேண்டிய விஷயங்களை கேட்டுக்கொண்ட ராதாவோ, "என்கிட்ட நீங்க ஏதாவது கேட்கணுமா?" என்று இழுக்க நரேன் இல்லை என்ற தலை ஆட்டினான். "எல்லாமே உங்க அப்பா சொல்லிட்டாரு!"
"ஆமால சொல்லி இருப்பாங்களோ? ஆனா உங்கள பத்தி எனக்கு எதுவும் விளக்கமா சொல்லல... அதனால தான் நான் கேட்டேன்!" என்றவள் தான் விசாரித்ததை அர்த்தப்படுத்த நரேன் சிரித்து, "இட்ஸ் ஓகே!" என்று என்னவோ சொல்ல வருவதற்கு முன்பே ராதா அவனை நிறுத்தி,
"நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்!" என்று பீடிகை போட நரேன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, "சொல்லு ராதா!" என்றான். "இல்ல... இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் கன்ஃபார்ம் ஆகி, எல்லாம் பாசிட்டிவா முடிஞ்சுட்டா... கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போகலாமா?" என்றவள் கேட்க நரேனின் முகத்தில் சட்டென குழப்பம்! அதைக் கண்ட ராதாவும்,
"எனக்கு ஹவுஸ் ஃவைபா இருக்க விருப்பம் இல்ல. மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்பறம் நானும் வொர்க் பண்ணனும்னு விரும்புறேன்!" என்று சொல்ல அதில் அழுத்தம் அதிகமாய் இருந்தது. சில நிமிடங்கள் அமைதி காத்த நரேன், "இதை எதுக்கு ராதா என்கிட்ட கேக்குற?" என்று ஒரு கேள்வி கேட்டானே பார்க்கலாம்…..
ராதா அவனை வியப்பாய் பார்த்து, "உங்க கிட்ட தானே கேட்க முடியும்?" என்றாள் விளங்காமல்.
"இல்ல என்கிட்ட கேட்க என்ன இருக்கு? வேலைக்கு போகணும்ன்றது உன்னோட விருப்பம். அதுக்கு நான் பெர்மிஷன் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது ராதா. உனக்கு பிடிச்சிருந்தா நீ போ! அஸ் அ ஹஸ்பண்டா ஐ வில் ஆல்வேஸ் சப்போர்ட் யு!" என்றவன் அப்பொழுதே கணவன் என்ற எதிர்கால உரிமையையும் சேர்த்து எடுத்துக் கொள்ள அந்த நொடி ராதா அவனைப் பார்க்கும் பார்வையில் பெரிய மாற்றம் வந்துவிட்டது.
வளவளவென்று பேசும் ராதாவையே வாயடைக்க வைத்த நரேன் அவள் பேச்சு வராமல் நிற்பதைக் கண்டு, "ஆர் யூ ஓகே ராதா?" என்று கேட்க ராதா தலையை சிலுப்பிக் கொண்டு, "அப்போ உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை அப்படித்தானே?" என்றாள் க்ராஸ் செக் பண்ணுவது போல். அதில் நன்றாகவே சிரித்து விட்ட நரேன்,
"எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது... ஐயம் டோட்டலி ஓகே வித் தட்!" என்று சொல்ல ராதா உடனே, "இப்போ ஓகேன்னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு அப்பறம் எங்க அப்பா உங்க கிட்ட என்னை வேலைக்கு அனுப்ப கூடாதுன்னு சொன்னா மனசு மாறிட மாட்டீங்களே?" என்று கேட்க நரேன் கையை கட்டிக் கொண்டு கன்னத்தில் கை வைத்து யோசித்தான்.
'என்ன இப்போதான் எனக்கு பிரச்சனை இல்லைன்னு சொன்னாரு இப்ப இவ்வளவு யோசிக்கிறாரு?' என்று ராதா அவனை விடாமல் பார்க்க அவன் பட்டென்று நிமிர்ந்து, "நீ ஸ்ட்ராங்கா இருக்கியா?" என்று கேட்க, அவளும் உடனே, "ஆஃப் கோர்ஸ் நான் ஸ்ட்ராங்கா தான் இருக்கேன்... எனக்கு வேலைக்கு போகணும்னு அவ்வளவு ஆசையா இருக்கு. பட் இப்ப கூட எங்க அப்பா என்னை அலோவ் பண்ண மாட்டாரு!" என்று புலம்ப நரேன் அவளிடம்,
"நீ ஸ்ட்ராங்கா இருந்தேன்னா போதும்.. உங்க அப்பா பெர்மிஷன், என் பெர்மிஷன்னு யாரோடதும் உனக்கு தேவை கிடையாது!" என்று உறுதியாக சொல்ல ராதா தன்னை மீறி பெருமூச்சு விட்டு விட்டாள். அவள் வாழ்வில் விரும்பிய ஒரு விஷயம் என்றால் வேலைக்கு சென்று சுயமாய் சம்பாதிக்க வேண்டும் என்பது தான்!
அதில் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நரேன் சொன்ன பின்னால் அவளுக்கும் இந்த திருமணத்தில் என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது?
சொல்லப் போனால் இப்பொழுது அவள் சீக்கிரமாக திருமணம் செய்யும் மெண்ட்டாலிட்டிக்கு வந்து விட்டாள். "தேங்க்ஸ்!" என்று ராதா ஒரு புன்னகையோடு சொல்ல, 'இந்த ஸ்மைல பார்க்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வேண்டியதா போச்சு?' என்று எண்ணிய நரேன், "அப்போ ஓகேவா உனக்கு?" என்று கேட்க அவன் மனம் தாறுமாறாய் அடித்துக் கொண்டது.
அவன் கேள்வியில் கண்ணோடு கண் கலந்த ராதா, "முழு சம்மதம்!" என்று சொல்லிவிட்டு, "நான் உள்ள போறேன்!" என்று நாசுக்காய் மறுபடியும் ஹாலுக்கு வந்து விட தனியாக நின்ற நரேனோ அவள் போய் விட்டாளா என்று எட்டிப் பார்த்துவிட்டு, "யாஹூ!" என்று எம்பி குதித்தான்.
"என் ராதாவுக்கு என்னை புடிச்சிருக்கு என்னை புடிச்சிருக்கு...!" என்று சிரித்தவன் நெஞ்சில் கைவைத்து, "யூ ஆர் எ ஒன் லக்கி மேன் டா!" என்று சிரித்தவன் வாசலில் அமர்ந்திருந்த கிழவியின் கன்னத்தை பிடித்து கொஞ்சி விட்டு தன் உற்சாகத்தை குறைத்து நார்மலாக உள்ளே நடந்து செல்ல,
"என்ன மாப்பிள்ளை பையன் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு போறான்... அப்படி இந்த ராதா என்னத்த சொல்லிட்டு போனா?" என்று கிழவி கன்னத்தில் கை வைத்து யோசித்தது. ராதா நரேன் உள்ளே வந்து தங்களுடைய சம்மதத்தை தெரிவித்த பின்னால் வேதவள்ளிக்கு தலையில் க்ரீடம் வைக்காத குறை தான்.
"அப்பறம் என்ன இப்பவே பூவெச்சிடலாம்!" என்று ஊக்கியவர் குமுதாவின் கையால் ராதாவின் தலையில் மேலும் பூவை சுட வைத்து புதிய பந்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ள கண்ணபிரான் மற்றும் தெய்வானைக்கு நெஞ்சம் நிறைந்து போனது. "எல்லாம் நல்லபடியா நடக்கணும் கடவுளே!" என்று தெய்வானை மனதில் வேண்டிக் கொள்ள கண்ணபிராணுக்கோ மகள் எந்த அழிச்சாட்டியமும் செய்யாமல் சம்மதித்தது கடவுளே இறங்கி வந்து வரம் கொடுத்தது போல் இருந்தது. கூடவே சற்று குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டது.
"நம்ம பொண்ணு நம்ம சொல்றத தான் கேப்பா... ஆனா அவ வாய்க்கு பயந்து தான் ஒவ்வொரு தடவையும் அதட்டி மிரட்டி அவள காயப்படுத்துற மாதிரி இருக்கு!" என்று எண்ணிக் கொள்ள என்னைக்கு நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்? கல்யாணத்திற்கு எந்த முகூர்த்தம் பார்க்கலாம் என்று விரிவாக பேச்சு நடத்தப்பட்டு அடுத்த மாதம் இறுதியில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
நரேனின் குடும்பம் விடைபெற்று சென்ற பொழுது நரேனின் கண்கள் ராதாவை தேட அவளோ தன் அறைக்குள் அத்தனை குஷியாக நடந்து கொண்டிருந்தாள். "ஐ ஜாலி... அம்மா சொன்னது உண்மை தான். அப்போ வேலைக்கு போறதுக்கு கல்யாணம் தான் ஒரே அவுட்லெட்டா இருந்திருக்கு. இத புரிஞ்சுக்காம இவ்வளவு நாள் டைம் வேஸ்ட் பண்ணிட்டியே ராதா. கொஞ்சம் சீக்கிரமா கல்யாணம் பண்ணி இருந்தா சீக்கிரமாவே வேலைக்கு போய் இருக்கலாம்ல?" என்று கன்னத்தில் கை வைத்து யோசித்தவள்,
"சச்ச எல்லாரும் அவர மாதிரி இருக்க முடியுமா? அவர் பேரு நரேன் தானே... வெறும் நரேன் தானா... இல்ல எக்ஸ்ட்ரா பேரு இருக்குமா? ஐயோ அத கேக்க மறந்துட்டோமே?" என்று வருத்தப்பட்டு கொள்ள நரேனோ தான் தேடிய மங்கை கண்ணுக்கு எட்டாத சின்ன ஏமாற்றத்தில் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
ஆனால் அவன் மனம் இந்த திருமணம் கைகூடி வந்ததில் பூரித்துப் போய் இருந்தது. வீட்டுக்கு வரும் வழியில் குமுதா மகனிடம் விசாரித்தார். "ராதா நல்லா பேசினாளா நரேன்?"
"பாருங்களேன்ப்பா அம்மாவுக்கு இப்பவே மருமக மட்டும் தான் மனசுல இருப்பாங்க போல. அம்மா உங்க கண்ணுக்கு நாங்க எல்லாம் தெரியுறோமா?" என்று நவீன் குமுதாவின் முகத்திற்கு முன்னால் வந்து தன் முகத்தை காட்ட அவரோ அவன் கண்ணம் தள்ளி, "விளையாடாம இருடா இவன் ஒருத்தன். நீ சொல்லுடா நரேன்!" என்று மூத்த மகனிடம் கதை கேட்க நரேன் புன்னகையோடு, "ரொம்ப நல்லா பேசுனாம்மா... அவ அவ்வளவு பேசுவான்னு நானே எக்ஸ்பெக்ட் பண்ணல!" என்றான் புன்னகையோடு.
"ஓஹோ கதை அப்படி போகுது!" என்று நவீன் கிண்டல் அடிக்க குமுதா அவன் தொடையில் தட்டி அடக்கி, "இதுக்கு முன்னாடி கூட ஒரு சின்ன பயம் மனசுல இருந்துட்டே இருந்துச்சு நரேன். நீ அமைதியான குணம்... ஆனா ராதா படபடன்னு பேசக்கூடிய பொண்ணு. ரெண்டு பேருக்கும் செட் ஆகுமோ ஆகாதோன்னு மனசுக்குள்ள குழப்பிட்டே இருந்தேன். ஆனா இன்னைக்கு நேரடியா பேசி பார்த்தப்போ ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறாடா!" என்று பாராட்டு பத்திரம் வாசிக்க இருப்பினும் அவர் முதலில் சொல்லிய வார்த்தைகள் திருப்தியின்மையாய் இருந்தது.
"அம்மா அண்ணிய இப்போவே ஓவரா புகழ்றீங்களே... அவங்க வந்ததுக்கு அப்பறம் என்னையும் அண்ணாவையும் கழட்டி விட்டுட்டு அவங்க கூட கூட்டணி வச்சுட மாட்டீங்களே... ஏன் கேக்குறனா அப்படி ஒரு ஐடியா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. நான் போய் அண்ணி கூட மொதல்ல ஜாயின் பண்ணிக்கிறேன். அதுக்கப்பறம் உங்க ரெண்டு பேரையும் போனா போகுதுன்னு எங்க டீம்ல சேர்த்துக்குறோம்!" என்று சொல்ல மயில் வாகனம் இவர்கள் பேசியதை கேட்டு சிரித்து, "அப்ப நான் என்னடா பண்றது மகனே?" என்க,
"அப்பா நீ எல்லா நேரமும் என் கட்சி தான்பா... சோ உனக்கு ஆல்ரெடி சீட் ரெடி. கவலைப்படாத!" என்று சிரிக்க, "அப்பாவை அருமையா புரிஞ்சு வச்சிருக்கடா!" என்று மயில்வாகனமும் சின்ன மகனை கிண்டலாக கூற பேச்சுவார்த்தைக்கு நடுவே, வீட்டிற்கும் வந்து விட்டார்கள். அன்று இரவு லைட்டாக உணவை முடித்துக் கொண்டு நவீன் சீக்கிரமாகவே தூங்க சென்றுவிட மயில் வாகனமும் சிறிது தலைவலியாக இருக்கிறது என்று மாத்திரை போட்டு விட்டு படுத்து விட்டார். ஹாலில் குமுதா மட்டுமே அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, நரேன் அவர் அருகே வந்து அமைதியாக அமர்ந்தான்.
"என்னடா தூங்கலையா மணி பத்தாச்சு?" என்று குமுதா கேட்க நரேன் சலுகையாய் அவர் மடியில் சாய்ந்த படி, "இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா... நானும் இங்கேயே இருக்கேன்!" என்று சொல்ல குமுதா மகனின் தலை கோதி, "ஏதாவது சொல்லனுமாடா?" என்று கேட்க, நரேன் தன் அம்மாவின் முகம் பார்த்து, "எனக்கு ராதாவை ரொம்ப புடிச்சி இருக்கும்மா!" என்று கூற மகனின் கன்னம் தட்டிய ராதா, "அதை நீ சொல்ல வேற செய்யணுமா... உன் முகமே காட்டிக் கொடுக்குதுடா. எங்களுக்கும் அவள ரொம்ப புடிச்சிருக்கு!" என்று சொல்ல,
"உங்க மருமகளுக்கு கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போகணுமாம்... விடுவீங்க தானேன்னு அத்தன கொஸ்டின் கேட்டு என்னை ஒரு வழி ஆக்கிட்டா!"
"அது என்னடா நீ விடறது? ராதாவுக்கு விருப்பம் இருந்தா அவ தாராளமா போகட்டும்!" என்று குமுதா சொல்ல நரேன் உடனே, "நவீன் சொன்ன மாதிரி மருமக கட்சிக்கு இப்பவே தாவிட்டீங்க போல?" என்று கிண்டல் பண்ண குமுதா சிரித்தபடி, "அப்படி இருந்தாலும் என்னடா தப்பு... மாட்டு பொண்ணா இருந்தாலும் அவ நம்ம வீட்ல வாழ வரப்போற பொண்ணு. உங்களுக்கு ஒரு அக்காவோ தங்கையோ இருந்தா எப்படி நடத்துவோமோ, அப்படித்தான் அவளையும் நடத்தணும். அதுல ஓரவஞ்சகம் பார்க்குற மாமியார் மாதிரியெல்லாம் நான் இருக்க மாட்டேன்!" என்று சொல்ல நரேன் புன்னகித்து, "அப்போ
க்ரேட்டஸ்ட் மாமியாரா இருப்பீங்க நீங்க!" என்றான் ஆத்மார்த்தமாக.