“அதிகாலை மழைதானா!
அவனோடு இனி நானா!
இது நான் கேட்ட காலங்கள் தானா!
இதிகாசம் இது தானா!
இவளோடு நடந்தேனா!
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா!
உயிரே! உயிரே! உறையும் உயிரே!
இனிமேல் நீதானா!”
என அவ்வறையை நிறைத்து கொண்டிருந்தது மெல்லிய ஒலி. அதில் தூக்கம் கலைந்தவன் மெல்ல எட்டி படுக்கைக்கு அருகில் உள்ள மேஜையிலிருந்த தன் கைப்பேசியை எடுத்தான் விஹான் ராகவேந்திரா. ராகவேந்திரா குடும்பத்தின் நடு வாரிசு.
ராகவேந்திரா குடும்பத்தில் மூத்தவர் சந்தோஷ் ராகவேந்திரா புகழ்பெற்ற அரசியல்வாதி, மக்களின் அமோக ஆதரவில் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர். அவரின் ஒற்றை வாரிசு ஷிம்ரித் யாதவ் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கிறான்.
சந்தோஷ் நாராயணனின் தம்பி விமலேஷ் ராகவேந்திரா அவரின் மூத்த மகன் தான் விஹான் ராகவேந்திரா. ராகவேந்திரா குழுமத்தின் அத்தனை தொழில்களையும் இப்போது நிர்வகித்துக் கொண்டிருப்பவன்.
சிரிப்பு என்றால் எந்தக் கடையில் விற்கும் எனக் கேட்பவன். அவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்குச் சமம், அவ்வளவு அளந்து அளந்து பேசுபவன். தேவை இல்லாமல் அவன் வாயிலிருந்து ஒத்த வார்த்தை வாங்கி விட முடியாது அழுத்தமானவன். அதீத புத்திசாலித்தனமும், ஆளுமையும் நிறைந்தவன்.
அவனது முக்கிய குணமே கோபம். மூக்குக்கு மேல கோபம் வரும். ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்பவன், அது தவறும் பட்சத்தில் அவனுக்கு வரும் கோபத்தில் எதிரிலுள்ளவர்கள் பஷ்பமாகிவிடுவார்கள்.
அவனுக்குப் பிடித்தவர்களிடமும், குடும்பத்தாரிடமும் அவனுக்குப் பாசம் அதிகம், ஆனால் அதையும் கூட அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. மாறாக அவர்களுக்கு மட்டும் அறிவுரையோ, ஆலோசனையோ வழங்குவான் அது மட்டும் தான் அவனளவில் பாசத்தை வெளிப்படுத்துவது.
காலையிலேயே தன் உறக்கத்தை கலைத்த அலைப்பேசியை கடுப்புடன் பார்க்க, அதில் அவனது பி.ஏ வெங்கட் அழைத்துக்கொண்டிருந்தான். அதைப் புருவம் சுளித்துப் பார்த்தவன் அதை ஏற்று காதில் வைக்க, அந்தப்பக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்தான்.
“வாட்? எப்படி எப்படி ஆச்சு? எல்லா சரியா இருக்கும்போது எப்படி ஃபயர் ஆகும்?” எனக் கேட்டான் கடினமான குரலில். அந்தப்பக்கம் உள்ளவனோ பயந்து பயந்து,
“ஷார்ட் சர்க்யூட் ஆகிருக்கும் போல சார்”
“டேமிட்.. எந்த செக்ஸன்ல”
“லிப்ஸ்டிக் செக்ஸன் சார்”
“மெஷின்ஸ் டேமேஜ் இருக்கா?”
“இல்ல சார் அவ்ளோ இல்ல ஆனாலும் கொஞ்சம் ஸ்பாஸ் ஆகியிருக்கு”
“நான் வரேன்” அவசர அவசரமாக எழுத்து தன்னை சுத்தம் செய்துவிட்டு கீழே வர விஷயம் விமலேஷ் காதுக்கும் வந்ததோ அவரும் ரெடியாக இருந்தனர்.
இருவரும் அவர்களது அழகுசாதன நிறுவனமான ஷரா நிறுவனத்திற்கு விரைந்தனர். நிறுவனத்திற்குள் நுழைந்த காரைப் பார்த்ததும் வேக வேகமாக ஓடிவந்தான் விராஜ்ஜின் பி.ஏ வெங்கட்.
“வெங்கட். ஹவ் இஸ் திஸ் பாஸிபில்?”
“ச.. சார். இட்ஸ் பிளாண்ட் ஃபயர் ஆக்ஸிடெண்ட்” என வெங்கட் கூற,
“டேமிட்..” எனக் கால்களைத் தரையில் உதைத்தான் விஹான்.
விமலேஷ் “எப்படி சொல்ற?”
வெங்கட் “சிசிடிவி ஃபுட்டேஜ்ல இருக்கு சார். ஒருத்தன் மாஸ்க் போட்டு வந்து எலக்ரிகல் யூனிட்ல ஷார்ட் சர்க்யூட் பண்ணிருக்கான்”
விஹான் “செக்யூரிட்டி எல்லாம் ம..ரு புடிங்” எனக் கோபமாகக் கத்த ஆரம்பிக்கும் போதே,
விமலேஷ் “விஹான்” என அழுத்தமாக அழைக்க,
விஹான் “சாரி டேட்” என்றவனுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவது சிரமமாகத்தான் இருந்தது.
வெங்கட் “இன்ஸூரன்ஸ் கிளைம் பண்ண போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணிட்டேன் சார்”
விஹான் “யார் மேல ரிப்போர்ட் பண்ணின?”
வெங்கட் “ஃபுட்டேஜ் காட்டி கம்ப்ளைண்ட் பண்ணினேன். யாரையும் குறிப்பிட்டு பண்ணல”
விஹான் “அந்த சூர்யான்ஷ் மேல கம்ப்ளைண்ட் பண்ணிருக்க வேண்டியது தான. அவன தவிற யாரும் இந்த வேலைய பார்த்திருக்க மாட்டாங்க”
வெங்கட் “ஆனா நம்ம கிட்ட அவன் தான் பண்ணினானு புரூஃப் இல்லையே சார்”
விஹான் “இவன் இப்படி எதாவது பண்ணிட்டே இருக்குறதுக்கு.. அவன..”
விமலேஷ் “ஷிம்ரித் கிட்ட பேசி, சட்டப்படி அவன என்ன பண்ணலாம்னு பார்ப்போம். அவன மாதிரி நம்மளும் கீழ இறங்கி போக வேணாம் விஹான். கொஞ்சம் பொருமையாக இரு”
விஹான் “அண்ணா காம்ப்ரமைஸ் பண்றேனு தான் சொல்லுவாங்க டேட்.. இவன சும்மா விடக் கூடாது”
விமலேஷ் “முதல்ல அவன் கிட்ட என்ன பிரச்சனைனு பேசிப் பார்ப்போம். அப்புறம் என்ன பண்றதுனு முடிவு பண்ணலாம்” எனப் பேசிச் சமாளித்து அலுவலக அறைக்குள் அழைத்து வந்தார்.
அறைக்குள் இருந்தவனுக்கோ இன்று நடந்ததை ஜீரணிக்கும் மனநிலை இல்லை. அடிப்பட்ட பாம்பைப் போலக் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் மூளை முழுவதும் அவன் எதிராளியான அந்த சூர்யான்ஷ் தான் இப்போது இருந்தான்.
சென்னையில் பத்து வருடங்களுக்கு முன்னதாக ராகவேந்திரா குழுமத்தால் துவங்கப்பட்டது ஷரா அழகுசாதன நிறுவனம். முதலில் அனைத்து நிறுவனம்போல இதுவும் பிரபலமாவதற்கு மிகவும் சிரமப்பட்டது தான்.
ஆனால் ஷரா அழகுசாதனங்களின் தரம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. அதன் உற்பத்தி திறன் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஏன் பொருட்களுக்கு அதிக தட்டுப்பாடு இருக்கும் அளவுக்கு ஷரா அழகுசாதன நிறுவனம் மேலே மேலே முன்னேறியது.
அதன் முன்னேற்றம் ஏற்கனவே முன்னனியிலிருந்த லாரா அழகுசாதன நிறுவனத்தின் விற்பனை திறனைப் பெரிதும் பாதிக்க, அந்நிறுவனம் பலத்த யோசனைக்கு மத்தியில் ஷரா நிறுவனத்தை விலைக்கு வாங்க விஹானை அணுகினர்.
அவனோ தங்களது நிறுவனம் விற்பனைக்கு அல்ல என்பதை தெளிவாகவும், கோபமாகவும் ஏன் கொஞ்சம் திமிராகவும் கூற, லாரா நிறுவத்தின் வாரிசான சூர்யான்ஷ்க்கும், விஹானுக்கும் முட்டிக் கொண்டது.
அன்று முதல் இருவருக்கும் போட்டா போட்டி தான். அதிக லாபத்தில் இருந்த தன் பொருட்களின் விலையைக் கனிசமாகக் குறைத்து, மக்களிடையே விளம்பரப் படுத்தினான் சூர்யான்ஷ்.
விஹானோ அதிக லாபத்தில் பொருட்களை விற்கவில்லை. ஷரா நிறுவனத்தின் அழகுசாதனங்கள் அதிக விலைதான் என்றாலும் பொருட்கள் விற்பனைக்குக் குறைவில்லை, ஏனெனில் அதன் தரம் அப்படி. அது தான் சூர்யான்ஷ்க்கு உள்ள கோபமே. எனவே இருவரும் முட்டிக் கொண்டும், மோதிக்கொண்டும் தான் இருந்தனர்.
தொழிலில் ஏற்படும் போட்டிக்காகத்தான் சூர்யான்ஷ் ஷரா நிறுவனத்தைச் சேதப்படுத்தினானா என்று கேட்டால் இல்லை.. அதுமட்டும் காரணமல்ல. விஹான் மேல் சூர்யான்ஷ்க்கு தீர்க்கப்படாத வேறொரு பகையும் காரணம்.
அந்தப் பகையை மனதில் வைத்துத் தான் விஹானுக்கு குட்டி குட்டி குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தவன் இன்று இப்படி நிறுவனத்தையே அழிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டான். இனியும் அவனை அப்படியே விட்டால் சரிவராது என்ற எண்ணம் தான் இப்போது விஹானுக்கு.
அப்பா எப்படியும் நேரடியாக அவனிடம் மோத விடமாட்டார். ஷிம்ரித்திடம் கொண்டு சென்று பிரச்சனையைச் சுமூகமாக முடிக்கத்தான் பார்ப்பார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவன் தான் இப்போது எதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தான்.
*******
விடியற்காலை சூரியன் தன் வேலையை அழகாக ஆரம்பிக்க, அதுவரை சூழ்ந்துள்ள பனி கொஞ்சம் கொஞ்சமாக விலகும் வேலையில் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள் கைகளை மேலே தூக்கி சோம்பலை முறிக்க, அவளைப் பின்னோடு சேர்த்து இழுத்து தன் மேல் படுக்க வைத்தவன் அவள் பின்னங்கழுத்தில் அழுத்தமான, ஆழமான முத்தம் வைக்க, அவன்மேல் படுத்திருந்தவள் திரும்பி அவனைப் பார்ப்பதற்காக அவன் மேலிருந்து உருண்டு கீழ வர.. “அய்யோ! அம்மா!” எனப் பலத்த சத்தம்.
அந்தச் சத்தம் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் சாத்விகா. ‘காலையில என்னடா சத்தம்’ என நினைத்துத் தன் அருகில் படுத்திருக்கும் பிரணவிகாவை தேட அவளைக் கட்டிலில் காணவில்லை.
“அய்யோ! அம்மா!” எனத் திரும்பவும் ஈனசுரத்தில் மீண்டும் கேட்க எட்டி படுக்கைக்குக் கீழே பார்க்க, அங்கே பிரணவிகா குறுக்கை வளைத்துக் கொண்டு வலியில் முனங்கிக்கொண்டிருந்தாள்.
பார்த்தவுடனே தெரிந்துவிட்டது தூக்கத்தில் உருண்டு விழுந்திருக்கிறாளென. அதில் சிரிப்பு வரத் தன்னையும் மீறி விழுந்து விழுந்து சிரித்தாள் சாத்விகா.
“அடியேய்! ஒருத்தி விழுந்து கெடக்கேன் சிரிக்கிற நீ.. தூக்கிவிடுடி..” எனப் பற்களைக் கடித்துக் கொண்டு கத்தினாள் பிரணவிகா.
“ஓ.கே ஓ.கே சாரி. இரு வரேன்” என அப்போதும் சிரிப்பை அடக்கியபடியே வந்து அவள் எழுவதற்கு உதவி புரிந்தாள்.
“ஆஹ். குறுக்குல நல்ல அடி” என வலியில் பிரணவிகா கூற,
“இன்னைக்கு என்ன கனவு கண்ட?” எனச் சிரித்துக்கொண்டே கேட்டாள் சாத்விகா.
“அதுவா” என ஆரம்பித்து, தன் வலியைக் கூடப் பின்னுக்கு தள்ளிவிட்டுத் தன் கனவைத் தன் உடன்பிறப்புக்குக் கூறிக்கொண்டிருந்தாள்.
“ஹே கேர்ள்.. தினமும் தான் அவன் உன் கனவுல வாரான்.. ஆனாலும் ஒரு நாளும் முகத்த காட்ட மாட்றான். பேசாம நீ விஹான் அத்தானை நினைச்சுக்கிட்டே படு. அவராவது கனவுல வராரானு பார்க்கலாம்” எனக் கேலி பேச,
“போடி இவளே.. அந்த சிடுமூஞ்சியயா? நெவர் அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும் பிரணவிகாவுக்கு அவளோட பிரின்ஸ் தான் வேணும்”
“அவன் தான் யாரு? நீயும் பல வருஷமா அவன பத்தி புலம்பிப் புலம்பி எனக்குப் புளிச்சே போச்சு”
“லேட்டா வந்தாலும் என் பிரின்ஸ் லேடஸ்ட்டா வருவான் பாரு”
“இனி பிரின்ஸ் அப்படி பேர் வச்சிருக்கவன தேடி பிடிச்சு தூக்கிட்டு தான் வரணும் போ”
“பேர் இல்லடி மேட்டர் ஆளு தான் மேட்டர். நல்ல ஆறடி உயரம் இருக்கனும். என்ன மாதிரியே கலரா இருக்கனும். வில்லு மாதிரிப் புருவம் இருக்கனும். கத்தி மாதிரி மூக்கு இருக்கனும். கல்லு மாதிரி பாடி இருக்கனும்”
சாத்விகா “ஏன் எதாவது போருக்குப் போகப் போறியா அவன கூட்டிட்டு? வில்லு.. கத்தி.. கல்லு.. கடப்பாறைனுட்டு” எனச் சிரித்தாள். அவளை முறைத்தாள் பிரணவிகா.
சாத்விகா “நீ சொல்லுற பத்து பொருத்தமும் பக்காவா ஒருத்தர் கிட்ட இருக்கு.. சொன்னா அடிப்ப.. நான் கிளம்புறேன்”
“யார்டி அது. சொல்லு சொல்லு”
“வேற யாரு உன் ஆளு தான். விஹான் அத்தான்”
“எடு செறுப்ப நாயே! அவனுக்கு முதல்ல பேசத் தெரியுமாடி.. சிரிக்க தெரியுமாடி.. ஒரு ரோபோவ எல்லாம் என்னால கட்டிக்க முடியாது. எனக்கு வரவன் எனக்குப் போட்டியா பேசனும். என்னைச் சிரிக்க வச்சுட்டே இருக்கனும்”
“எனக்கென்னமோ அதெல்லாம் நடக்குற மாதிரி தெரியல. விஹான் அத்தான் உன்னை விடமாட்டார் பார்”
“போடி போடி பைத்தியமே.. அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது”
“அது சரி. அப்போ உனக்குப் பிடிச்ச மாதிரியே அமைய வாழ்த்துக்கள்”
“என்னை விடு உன் ஆளு என்ன சொல்லுறான்?”
“விடு கேர்ள். காலங்காத்தால அவன பத்தி பேசாத. எனக்கு டென்சன் ஆகிடும்”
“ஒரு பச்ச மண்ண பக்கத்துல வச்சிட்டு, நைட்டெல்லாம் அவனோட மெஜேஜ்ல ரொமான்ஸ் பண்ணிட்டு, காலையில அம்பி மாதிரி ஆக்ட் விடுறியா?”
“ஆமா ரொமான்ஸ் ஒன்னு தான் குறைச்சல். நைட்டெல்லாம் சண்டை”
“ஏண்டி?”
“சொல்ல முடியாது நீ அவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவ”
“அப்போ தப்பு உன் மேல தான்” எனப் பிரணவிகா கூற,
“இட்ஸ் அப் டு யூ” எனத் தோள்களை உலுக்கிவிட்டு குளிக்கச் சென்றாள் சாத்விகா.
சாத்விகா, பிரணவிகா இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்களுக்கு மூத்தவள் ஒருத்தி இருக்கிறாள் நிஹாரிகா. மூவருக்கும் தகப்பன் ஒன்று தாய் வேறு. ஆனால் நிஹாரிகா தங்களுடன் வந்தபிறகு மூவரையும் தன் குழந்தையாகப் பார்ப்பவர் தான் கார்த்திகா. இந்த வீட்டின் உயிர்நாடி. அவரின் உயிர் அவர் கணவன் கவின். கவினின் அம்மா பரமேஸ்வரி.
கவினுக்கு இரு தங்கைகள் இருவரையும் ராகவேந்திரா குடும்பத்தில் தான் மணமுடித்துக் கொடுத்திருந்தனர். முதலமைச்சரான சந்தோஷ்க்கு கல்பனாவையும், விமலேஷ்க்கு கவிதாவையும் மண முடித்துக் கொடுத்திருந்தனர்.
கல்பனாவின் மகன் ஷிம்ரித்யாதவும் கவினின் முதல் தாரத்து மகள் நிஹாரிகாவும் காதலித்து, பல தடங்கல்களைக் கடந்து வாழ்வில் இணைந்துள்ளனர் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இப்போது ஒரு மாதம் தான் ஆகிறது. இருவரும் மாவட்ட ஆட்சியர்கள். நிஹாரிகா குழந்தைபேறு விடுமுறையில் இருக்க, ஷிம்ரித் யாதவ் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கிறான்.
(இவர்களுக்குத் தனியாக ஒரு கதை சிறையாடும் மடக்கிளியே என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதியுள்ளேன். அந்தக் கதை படிக்கவிட்டாலும் இந்தக் கதை புரியும். ஒரே கதை மாந்தர்கள் தான் ஆனால் கதை வேறு)
இரண்டாம் தங்கை கவிதாவுக்கு இரு மகன்கள் விஹான், விராஜ். விஹானுக்கு பிரணவிகா மேல் பாசமோ, ஈர்ப்போ, இல்லை காதலோ எதோ ஒன்று உள்ளது அதையும் அவன் அனைவரிடத்திலும் ஒரு இக்கட்டாண சூழலில் வெளிப்படுத்தி இருந்தான். ஆனால் அவளின் எதிர்பார்ப்புக்கு அவன் சரியானவனல்ல என்பது அவளது கருத்து.
சின்னவன் விராஜூம், சாத்விகாவும் காதலர்கள் தான். ஆனால் அவர்களுக்குள் இப்போது என்ன விரிசலோ!
இவர்களை மையமாக வைத்துத் தான் இந்தக் கதையே. யார் யாரை மணமுடிக்க இருக்கிறார்கள். யார் காதல் கூடும்? யார் காதல் பிரியும்?