எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா 2

Lufa Novels

Moderator
கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர் சாத்விகாவும், பிரணவிகாவும். அவர்கள் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைந்த உடனேயே தன் வீட்டு வாசலில் நிற்கும் கருப்பு நிற பென்ஸ் காரைப் பார்த்ததும் பிரேக் போட்டது போல நின்றுவிட்டாள். காரணம் அந்த வாகனத்துக்குச் சொந்தக்காரன் மேல் உள்ள பயம்.


பிரணவிகா “ஏண்டி இந்த சிடுமூஞ்சி இங்க எதுக்கு வந்திருக்கு?”


சாத்விகா “அத்தானு சொல்லு எரும.. இப்படி என்னைத்தையாவது பேசிப் பேசி தான் வாங்கிக் கட்டிக்கிற”


“அவ கிடக்கான் ம..ராண்டி.. அவனலாம் அத்தான் பொத்தானு கூப்பிட முடியாது”


“உன் வாய் என்னைக்கும் குறையாது. டாக்டர்க்கு படிக்கிற பொண்ணு பேசுற மாதிரியா கேர்ள் பேசுற? இது மட்டும் அவர் காதுல விழுந்துச்சு”


“விழுந்தா எனக்கென்ன”


“விழுந்தா தெரியும்.. பேசாம வா..”


“கேட்டதுக்கு பதில் சொல்லுடி. இந்த சிடுமூஞ்சு எதுக்கு வந்திருக்கு?”


“எனக்கென்ன கேர்ள் தெரியும்? ஒருவேளை பாப்பாவ பார்க்க வந்திருக்கலாம்” எனக்கூறினாள்.


“இது ஒரு சாக்கு அவனுக்குப் பொழுதான்னைக்கும் வந்து உயிர எடுக்குறான்”


“அவர் வந்தா உனக்கென்ன? அவர் பாட்டுக்குப் பாப்பாவ பார்த்துட்டு கிளம்ப போறார்.. நீ தான் கேர்ள் ஒவ்வொரு தடவையும் எதாவது பண்ணி அவர் கிட்ட மாட்டிக்கிட்டு நிக்கிற”


“ஆமா.. நீ பார்த்த.. அவன பார்த்தாலே எனக்கு பதறுது..” எனப் பேசிக்கொண்டே வீடுவரைக்கும் வந்துவிட்டனர். வீட்டிற்குள் போகப் போனவளை பிடித்து இழுத்த பிரணவிகா..


“நீ உள்ள போ.. நான் பின்னாடி கூடி வரேன்.. இன்னைக்கு அவன் கண்ணுலயே மாட்டமாட்டேன்”


“என்னண்டோ போ” எனக்கூறி வீட்டிற்குள் தனியாக நுழைந்த சாத்விகா கூடத்தில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து “வாங்கத்தான்” எனக்கூற, மெல்லிய தலையசைப்பு மட்டும் தான்.


அவள் பின்னால் பிரணவிகாவை தேடிய கார்த்திகா, எப்போதும் போல இப்போதும் பதறிவிட்டார் அவளைக் காணாமல்.


“சாத்வி பிரணி எங்க?” எனப் பதட்டமாகக் கேட்க, அங்கிருந்தவன் முன் எதுவும் பேசமுடியாமல்,


“அ.. அது.. பிரண்ட் கிட்ட நோட்ஸ் வாங்க போயிருக்காம்மா”


“தனியா ஏன் போனா அப்பாகூட போயிருக்கலாம்ல. இப்படி தான் தினமும் எதாவது பண்ணி எனக்குப் பிரஸர் ஏத்துறா.. இன்னைக்கு வரட்டும் கால ஒடைக்கிறேன்” எனக் கோபமும், பதட்டமுமாகக் கூற, அங்குத் தன் அண்ணன் மகளைக் கைகளில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தவனோ நிதானமாக நிமிர்ந்து,


“தேவையில்ல அத்த! கிட்சன்ல தான் நிப்பா.. போய் பாருங்க” எனக்கூற, அடுப்படியில் நின்றவளோ மாட்டிக்கொண்ட எரிச்சலில், அடுக்களையிலிருந்து கூடத்திற்கு வந்தாள்.


கார்த்திகா “ஏண்டி எனக்குப் பிரஸர் குறையவே கூடாதுனு கங்கனம் என்னமும் கட்டிருக்கியா? வந்தா நேரா வீட்டுக்குள்ள வரமாட்டியா?” எனக்கேட்க, அவளோ தன் அக்காவின் குழந்தையான அஃஷராவை கொஞ்சிக் கொண்டிருந்தவனை முறைத்துக் கொண்டே,


“வாங்கத்தான்” எனக்கூற, அவளை நிமிர்ந்து கூர்மையான ஒரு பார்வை மட்டும் தான் பார்த்தான். அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் குனிந்துகொண்டாள் பிரணவிகா. அடுத்து தன்னிடம் தான் தாய் வருவாளெனக் கணித்த சாத்விகா, பிரணவிகாவையும் இழுத்துக் கொண்டு கடகடவென மாடிக்கு ஓடிவிட்டாள்.


“இன்னைக்கு நைட்டுக்கு சாப்பாடு கிடையாது உங்களுக்கு. வரட்டும் உங்கப்பா” என்றவர், வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார்.


மாடிக்கு ஓடிய பிரணவிகாவை பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை மீசைக்கடியில் கவனமாக ஒளித்தான் விஹான். ராகவேந்திரா குடும்ப வாரிசு. அவர்களின் அத்தனை பிஸ்னஸையும் ஒத்த ஆளாக நின்று கவனித்துக் கொள்பவன். ஆனால் அவனையே சுத்தலில் விடுபவள் தான் நம் பிரணவிகா.


“ஏன் விஹான் அவள என்ன பண்ணிங்க? உங்கள பார்த்தாலே தெரிச்சு ஓடுறா?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டாள் நிஹாரிகா. அவனோ மெல்லிய சிரிப்புடன் தோளைக் குலுக்கி விட்டு, மீண்டும் அஃஷராவுடன் ஒன்றிவிட்டான்.


அவனிடமிருந்து அவ்வளவு எளிதாக வார்த்தையை வாங்க முடியுமா? அவன் அப்படி இருப்பதால் தானே பல கோடி மதிப்புள்ள பிஸ்னஸ்கள் அத்தனையும் ஒருங்கே பார்க்கிறான். அவனின் சந்திப்பிற்காகப் பலர் காத்திருக்க அவனோ தன்னவளுக்காகக் காத்திருக்கிறான்.


“ஃபேக்ட்ரி விஷயம் தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே.. இன்னைக்கு சரியான டென்சன் அண்ணி. இந்தக் குட்டிம்மாவ பார்த்ததும் தான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகிடுக்கு..” என அஃஷராவை தூக்கி கொஞ்சி முத்தமிட்டான்.


“நம்பிட்டேன்” என நமுட்டு சிரிப்போடு கூறினாள் நிஹாரிகா. அவனுக்கும் சிரிப்பு வர அதைக் கவனமாக யாருக்கும் தெரியாமல் அடக்கிக்கொண்டு பின்னத்தலையை கோதினான்.


ஆம் அவனுக்கு அவனவளைக் காண வேண்டும். முன்பு கவின் வீட்டிற்கு அவன் வருவதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வமே. ஆனால் கொஞ்ச காலமாக அவன் மனதுக்குள் அமர்த்து அவனை ஆட்டிவைத்துக் கொண்டிருப்பவளை காண இப்போது அடிக்கடி இங்க வரக் காரணம் இந்தக் குட்டிம்மா தான். இவளைக் காண வருகிறேன் எனத் தன்னவளையும் காண வருகிறான். அதனாலே அஃஷரா குட்டிமேல் அவனுக்குப் பாசம் அதிகம். வரும்போதெல்லாம் ஒரு பை விளையாட்டு பொருள்களுடன் தான் வருவான்.


அண்ணன் மகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் போதே..


“அஃஷூ குட்டி” என்ற அழைப்போடு வீட்டுற்குள் நுழைந்தான் ஷிம்ரித் யாதவ். அவன் குறலைக்கேட்டதும் தலையைத் திருப்பித் தேட ஆரம்பித்தாள் அவனின் குட்டி இளவரசி.


“வாங்க மாப்பிள்ளை” எனக் கேட்ட கார்த்திகா, ஷிம்ரித்திற்கு காபி போட அடுக்களைக்குள் சென்றார்.


“பார்த்தீங்களா விஹான். அப்பா வாய்ஸ் கேட்டதும் திரும்புறத.. அவர் வந்துட்டா என்னைக் கண்டுக்கிறா இல்ல இந்தக் குட்டி கழுதை. அவரும் இவ வந்தபிறகு என்னைக் கண்டுக்கிறார் இல்ல” என அங்கலாய்ப்பாகக் கொலுந்தனிடம் புகார் கூறினாள் நிஹாரிகா.


“சும்மா அள்ளிவிடாதீங்க அண்ணி. அண்ணனுக்கு உங்களைக் கண்டுட்டா நாங்க யாரும் கண்ணுலயே தெரிய மாட்டோம்”


“அதெல்லாம் உங்க குட்டியம்மா வர வரைக்கும் தான். இப்போ எல்லாம் மாறிடுச்சு” என மனைவியுன், தம்பியும் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, அவனோ அவன் மகளுடன் தனி உலகத்தில் இருந்தான் ஆனால் காது மட்டும் இவர்களிடத்தில். அதில் நக்கல் புன்னகை மட்டும் இதழோரம்.


“என்ன அண்ணா! புகார் எல்லாம் பலமா இருக்கு?” எனக்கேட்க, அஃஷராவைப் பார்த்துக்கொண்டே,


“வந்ததும் மட்டும் தான் அஃஷூ குட்டிய கொஞ்சுறேன்.. அப்புறம் யார கொஞ்சுறேனு கேளு” எனக்கூறவும், வெட்கத்தில் ஷிம்ரித்தின் காலை நறுக்கென மிதித்தாள் நிஹாரிகா.


“நடத்துங்க நடத்துங்க புருஷனும், பொண்டாட்டியும்” எனக்கூறியவன் கிளம்ப ஆயத்தமாக,


“நில்லுடா.. சித்தப்பா காலையில கால் பண்ணினார்”


“ம்ம். அந்த சூர்யான்ஷ் தான்..”


“நான் கூப்பிட்டு பேசவா?”


“அதுக்கெல்லாம் அவ அடங்கமாட்டான்”


“முதல்ல பேசிப் பார்ப்போம். அப்புறம் என்ன பண்றதுனு முடிவு பண்ணலாம்”


“என்னமோ பண்ணுங்க. அனா அவன் நீங்க நினைக்கிற மாதிரியான ஆளெல்லாம் இல்ல”


“சரிடா நாளைக்கு நான் பேசிப் பார்க்குறேன். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்”


“பேசும்போது நானும் வரேன்”


“எதுக்கு? திரும்பவும் முட்டிக்கவா? அதெல்லாம் வேணாம் நானும் சித்தப்பாவும் போய் மீட் பண்றோம்”


“நீங்க எதுக்குண்ணா போகனும்? அவன வரச் சொல்லுங்க”


“காமன் ப்ளேஸ்ல மீட் பண்ணலாம் அது தான் சரியா வரும்”


“சரி பண்ணுங்க. அவன் சரிப்பட்டு வரலனா அப்புறம் என்னை யாரும் தப்பு சொல்லாதீங்க” என்றவன் அடுக்களையை நோக்கி “அத்தை, அம்மாச்சி போய்ட்டு வாரேன்” என்றவாறு கிளம்பிவிட்டான்.


“இவன் என்ன நிஹா இப்படி இருக்கான்? கொஞ்சமும் வளைஞ்சு கொடுக்குறான் இல்ல. இவ்ளோ விரைப்பா இருந்தா என்ன பண்றது?”


“கஷ்டம் தான். அவர பார்த்தாலே பிரணி தெறிச்சு ஓடுறா.. இப்போ கூட” என ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்துக்கு முன்னர் நடந்ததைக்கூற, சிரித்துக்கொண்டவன்,


“எங்க அந்த வாண்டு?” எனக்கேட்க,


“மேல தான்.. உங்க தம்பி கார் கிளம்பினதும் கீழ வரும் பாருங்க அந்த வாலு” என நிஹாரிகா கூற, அதே போல் விஹானின் வண்டி கிளம்பினதும் இருவரும் ஆர்ப்பாட்டமாகக் கீழே வந்தனர்.


“ஹாய் மாம்ஸ்” என்ற பிரணவிகா, ஷிம்ரித்தின் அருகே வந்து அமர, “வாங்க அத்தான்” எனக்கேட்டு நிஹாரிகா அருகில் அமர்ந்தாள் சாத்விகா.


“எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்?” எனக்கேட்க, காபியுடன் வந்துவிட்டார் கார்த்திகா.


“அவளுகளுக்கு என்ன மாப்பிள்ளை நல்லாத்தான் இருக்காளுங்க என் உயிரு தான் போகுது”


“பயப்படாதீங்க அத்தை. இந்த வருஷம் முடிஞ்சா அவங்க டாக்டர்ஸ்.. குழந்தைகள் இல்ல.. இன்னும் கைக்குள்ளயே அடக்கப் பாக்காதீங்கத்த அப்புறம் அவங்க வெளிய வொர்க் பண்ண போறப்போ சிரமம் தான். நானும் வரும் போதெல்லாம் சொல்றேன் கேட்குறீங்க இல்ல”


“அப்படி சொல்லுங்க மாம்ஸ்” என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பிரணி.


“இவ துடுக்கு தனத்தால எதுவும் பிரச்சனைய இழுத்துட்டு வந்துருவாளோனு தான் எனக்கு பயமே”


“அதெல்லாம் பிரணி சமத்தா இருப்பா.. அப்படி தான பிரணி” என அவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தாள். அப்போதே தெரிந்து விட்டது இன்னைக்கு எதோ பண்ணிட்டு வந்திருக்காளென.


கார்த்திகா முன்னால் எதுவும் கேட்க முடியாமல் அமைதியாக இருந்தான் ஷிம்ரித். சாத்விகா, பிரணவிகா இருவரும் இப்போது மருத்துவர் படிப்பில் நான்காம் வருடத்தில் இருப்பவர்கள். சாத்விகா அமைதியான, புத்திசாலியான எதார்த்தமான பொண்ணு.


ஆனால் இந்த பிரணவிகா வாலு. சேட்டைகளின் உச்சம். வாய் துடுக்கு அதிகம். யாரிடமும் இளகுவில் வம்பு இழுத்துவிடுவாள். படிப்பிலும் சுட்டி.. சேட்டையிலும் சுட்டி.


கார்த்திகா உள்ளே சென்றபிறகு, “சரி இன்னைக்கு காலெஜ்ல என்ன சேட்டை செஞ்சீங்க?” எனக் கேட்டான். ஏனெனில் சாதிவிகா, பிரணவிகா படிக்கும் காலேஜ் இப்போது ராகவேந்திரா குழுத்திற்கு சொந்தமானது.


அந்த மருத்துவமனையுடன் கூடிய கல்லூரி நிஹாரிகாவின் தாய்மாமா முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார்க்கு சொந்தமானது. அவர் சில பல தவறுகளை மருத்துவ மாணவிகளைக் கொண்டு செய்ததால் கைதாகி சிறையில் இருப்பதால் இக்கல்லூரி டிரெஸ்ட்க்கு சென்று, விலைக்கு வந்தது. அதை ராகவேந்திரா குழுமம் வாங்கி, விஹான் தான் நிர்வகிக்கின்றான்.


சாத்விகா “இன்னைக்கு தப்பா ஒன்னும் நடக்கல அத்தான். ஒரு நாளும் இல்லாத திருநாளா அம்மணி இன்னைக்கு அமைதியா தான் இருந்தா”


“அப்படியா?” எனப் பிரணவிகாவைப் பார்த்துக் கேட்டான் ஷிம்ரித். அவளோ இப்போதும் அவனைப் பார்க்காமல், அவன் கேட்பது காதில் விழாதது போல அஃஷராவை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.


“வாண்டு” என அழுத்தமாக ஷிம்ரித் கூற,


“அது.. அது.. காலையில கேண்டீன்ல இருக்கும்போது சுரேகா மேடம் என்னை டீஸ் பண்ணினாங்க வித் அவுட் எனி ரீசன். அதான்..”


“என்ன பண்ணீங்க?”


“அது..” என எச்சில் விழுங்கினாள் பிரணவிகா.


சாத்விகா “ஹே! எனக்குத் தெரியாம இது எப்போ நடந்துச்சு.. என் கூடத் தான கேர்ள் இருந்த?”


“அது நீ பேப்பர் சமிஷனுக்கு போனப்போ” எனக்கூறியவள் தொடர்ந்து,


“சுரேகா மேம் தான் ஈ.என்.டி பேப்பர் இன்சார்ச்.. லாஸ்ட் டைம் பெர்ஃபாமன்ஸ் வொஸ்ட்டா இருந்தது. இப்படி மினுக்கிட்டு, ஊர்சுத்துற நேரத்துக்குப் படிக்க வேண்டியது தான? வயசு பையனா இருக்கிறதால வாரத்துக்கு இரண்டு தடவ மேனேஜ்மெண்ட்கிட்ட போய் நின்னு மயக்குறதுனு சொன்னாங்க எனக்குக் கோபம் வந்துருச்சு..


அந்த மேம்க்கு உங்க தம்பி மேல ஒரு கண்ணு. அவர் கிட்ட வேற நான் அடிக்கடி மாட்டிட்டு வாங்கிக்கட்டுவேன்.. இந்தம்மாக்கு நான் அவர மயக்குறேனு நினைப்பு. அதுனால வேணும்னே இப்படி பேசுச்சு..


அதுக்கு நான்.. உ.. உங்களுக்குத் தில்லு இருந்தா.. நீங்க வேணா போய் மயக்குங்க.. எனக்கு அவர மயக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.. ஸ்டடீஸ்ல பிராம்ளம்னா ப்ரோபசர்க்கு அன்ஸ்சர் பண்ற மாதிரி பண்ணுவேன்.. பெர்சனலானா என்னோட டீலிங் வேற மாதிரி இருக்கும்னு ஹார்ஷ்ஷா பேசிட்டேன்.


அதுக்கு அந்த மேம் மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளைண்ட் பண்ண போறேனு சொல்லுச்சு..


அப்படியாவது அவர மடக்க டிரை பண்ணுங்க முடியலனா அவங்க அ.. அப்பாவ டிரை பண்ணுங்கனு சொன்னேன்” எனக்கூற,


“அடிப்பாவி” எனச் சாத்விகாவும், நிஹாரிகாவும் வாயில் கையை வைக்க, ஷிம்ரித் யாதவ்க்கு மூவரின் செய்கையும் சிரிப்பை உண்டாக்கியது.


ஷிம்ரித் “அப்போ என் சித்தப்பாவையும் நீ விட்டு வைக்கல” எனச் சிரித்துக்கொண்டே கேட்டான்.


“அது.. அது ஒரு ஃப்ளோல வந்துருச்சு.. உங்களுக்கு யாரு சொன்னா மாமூ? உங்க தம்பியா? இப்போ அதுக்கு தான் என்னைத் திட்ட வந்தாரா?” எனப் பாவமாகக் கேட்டாள்.


“அவனுக்கு இன்னும் விஷயம் தெரியாது. காலையிலருந்து அவன் வேற ஒரு டென்சன்ல இருந்தான் அதுனால சித்தப்பா தான் காலேஜ் போனாங்க. அந்த மேம் சித்தப்பாக்கிட்ட தான் இத சொல்லிக் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க” எனக்கூற, தலையில கையை வைத்தவள்,


“அய்யோ போச்சே! மாமாக்கும் தெரிஞ்சிருச்சா?”


“ம்ம்ம். அவர் தான் என்கிட்ட சொன்னார்”


“கோபமா இருக்காங்களா?”


“கொஞ்சம். இனி ஒழுக்கமா இருக்க சொல்லுனு சொன்னார்”


“இனி கவனமா இருக்கேன் மாமூ. ஆனா ப்ளீஸ் உங்க தம்பிக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க. அப்புறம் அவர் காதுல இரத்தம் வர அளவுக்கு அட்வைஸ் பண்ணுவார்”


“இவ்ளோ பயம் இருக்குல அப்புறம் ஏன் எதாவது பண்ற”


“அவர பார்த்தா மட்டும் தான் பயமே வருது.. மத்த நேரம் எல்லாம் மறந்துடுது” என அசடுவளிந்தாள்.


“சாத்வி.. இவள இன்னும் கொஞ்சம் கவனமா பாரு.. வர வர ஓவர் வாய்.. ஓவர் சேட்டை. இரண்டு பேரும் படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க” எனக் கொஞ்சம் கடுமையாகக் கூற, பிரணவிகாக்கு அழுகையே வந்துவிட்டது.


நிஹாரிகா “ஹேய் பிரணி! இதுக்கெல்லாம் அழலாமா? அவர் உன் நல்லதுக்கு தான சொல்றார்” எனப் பிரணவிகாவை சமாதானம் செய்தவள், ஷிம்ரித்தை முறைத்தாள்.


“இந்தப் பேச்சு தப்புடா. இதே மாதிரி இனி வேற இடத்துல பேசக்கூடாதுல அதான்” எனக்கூறியவன் தொடர்ந்து “சரி வாண்டு அழாத.. இனி இப்படி கம்ளைண்ட் உன் பேர்ல வரக் கூடாது சரியா?” எனக்கேட்க, சம்மதமாகத் தலை ஆட்டினாள்.
 
Top