வர்ணங்கள் 2.
சூடான காபியுடன் கணவனது நினைவுகளும் ஆழமாக சுபாவின் உள்ளே இறங்கியது. எவ்வளவு வருஷங்கள் ஆனாலும் அவனது ஸ்பரிசம் உணர்ந்த மனம் அவனை மறக்காது தான். மகளின் முகத்தில் கணவனது சாயலையும் நெற்றியில் இருக்கும் அழுத்தமான மச்சமும் அவளது அந்தரங்க தருணங்களை மறக்க விட்டால் தானே...
இதோ சமீப காலமாக மலேசியாசியாவிலிருந்து இங்கே வந்து உடன் வேலை பார்க்கும் பிரணவ் இவளை திருமணம் முடிக்க ஆசை படுவதாக சொல்லிக்கொண்டு சுற்றி வருகிறான்.
அவனை மறுக்க காரணம் நிச்சயம் இல்லை. தியாவையும் தனது மகளாக ஏற்க அவன் தயார் தான். சுபாவின் அம்மாவுக்கும் அவன் தன் மகளை விரும்புவது தெரியும். அவருக்கு சம்மதம் என்றாலும் மகளின் மனம் புரிந்ததால் அமைதியாகி விட்டார்.
வேறு என்ன செய்ய இயலும்? நிறைய பெண்கள் சுபாவின் வயதில் திருமணம் செய்துகொள்ள கூட விருப்பம் கொள்வது இல்லை. தங்கள் மகளோ, ஆறு வயது மகளுக்கு தாய்.
தங்களது கையாலாகதனத்தில் மகளை பலிகடா ஆக்கிவிட்ட குற்ற உணர்ச்சியில், மகள் திருமணமாகி சென்ற ஒரே வருஷத்தில் கண் மூடி விட்டார் சுபாவின் அப்பா.
அம்மாவாயிட்டே.. மகளை தனியே தவிக்க விட்டு செல்ல முடியுமா.. தன் கணவர் அனுபவித்த குற்ற உணர்வுக்கு சற்றும் குறைவின்றி தானும் துக்கபட்டுக்கொண்டே மகளுடன் இருக்கிறார் சுபாவின் அம்மா.
தன் மடியில் சாய்ந்து உறக்கம் கொண்டிருக்கும் மகளின் முன் உச்சியில் முத்தமிட்டு, அவளை சோபாவில் படுக்க வைத்த சுபா காலை உணவை தயாரிக்கவென அடுக்களைக்குள் புகுந்தாள்.
மகளுக்கு ஸாண்ட்விச் செய்து டைனிங் டேபிளில் வைத்தவள், தங்கள் படுக்கை அறைக்குள் சென்று டவல் மற்றும் மாற்றுடயுடன் குளியல் அறைக்குள் புகுந்தாள்.
ஜெயந்தனுடன் இருக்கும் பொழுது, காலையில் அவனுக்கு காபி எடுத்து கொண்டு போவது என்றாலும் குளித்து, அலங்காரம் செய்து கொண்டுதான் அவன் முன்னால் செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் முகம் திருப்பிக் கொள்வான். காபியை கையால் கூட தொட மாட்டான்.
ஷவரின் முன் நின்றவளுக்கு தன் மீது விழும் நீர் துளிகளுடன் கண்ணீரும் சேர்த்து கன்னம் இறங்கியது. தனிமையில் உணர்வுகள் பேயாட்டம் போட்டாலும் இங்கே குளியல் அறையில் குளிக்கும் பொழுது மட்டும் தான் அழுவாள்.
வெளி உலகை பொறுத்தவரை, அவள் சிங்கிள் மதர். தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் அதிகம். அழகை ஆராதிக்கும் ஆண்களை துச்சமென பார்க்கும் சுபாவுக்கு ஆட்டிட்யூட் அதிகம்.
அவளது அந்த போக்கில் மயங்கியவன் தான் பிரணவ். அவன் நடத்தை சரியாக இருப்பதால் அவனை நண்பனாக மட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
இவ்வளவு சுபா புராணம் பாடுகிறேன். இன்னும் அவள் எப்படி இருப்பாள் என்று சொல்லவே இல்லையே!
பதினெட்டு வயதில் திருமணம் ஆகும் பொழுது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். கோதுமை நிறம். அழகு என்று அப்போது சொல்ல முடியாது. கொஞ்சம் சப்பை மூக்கு. குழந்தை முகம். கண்கள் நூறு கதைகள் பேசும். அதிக உயரம் என்று சொல்லிவிட முடியாது.
முகத்தில் எப்போதும் துறுதுறுப்பு. வாய் கொள்ளா பேச்சு. ஒரு இடத்தில பத்து நிமிடங்கள் அவளால் தொடர்ந்து நிற்க முடியாது. மான் குட்டி போல் துள்ளிய ஓட்டம். உதட்டில் உறைந்த சிரிப்பு. சுருட்டையில் இடுப்பு வரை அடர்த்தி முடி.
திருமணம் முடிந்து இரண்டு வருஷங்களில் சுபா கொஞ்சம் இளைத்து உயரமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் ஜெயனிடம் பயம். பிறகு, அவன் எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாலும் இவள் மட்டும் வாய் ஓயாது அவனிடம் பேசிக் கொண்டிருப்பாள்.
இவளது அருகாமை மட்டுமே அவனை வேகமாக குணப் படுத்தியது. அவனுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்து இருந்த செஸ், காரோம் விளையாடுவது, நீச்சல் எல்லாம் இவளுடன் இருக்கும் பொழுது தான் வெளிப்பட்டது.
சுபா வருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்னரே ஒரு மாதிரி சித்த பிரமை பிடித்தவன் போல் ஆனவன் ஜெயந்தன்.இவளது உயிரோட்டம் அவனுக்குள்ளும் பரவியதோ..இவளுடன் இணைந்த பிறகு அவனது மனோ நிலையில் நிறைய மாற்றங்கள்.
இவ்வளவு வருஷங்களில் சுபாவிடமும் நிறைய மாற்றங்கள்.. வயதுக்கு ஏற்ற படிக்கு உடலிலும்,மனா வளர்ச்சியிலும் , ஒரு பெண்ணாகவும், சிங்கிள் மதராகவும் அவளை காலம் நிறைய மாற்றிவிட்டது.முடியை பாதியாக வெட்டி விட்டாள். ஜெயந்தன் அவளது முடியை பிடித்து இழுத்து விளையாடிய ஞாபக அழுத்தம்தான் காரணம்.
குறும்பாய் சுழன்ற விழிகள் இப்போது அவளது புத்தி கூர்மையை சொல்கிறது. நிறைய பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது அமைதியாகி விட்டாள். நான்கு வார்த்தைகள் பேச வேண்டிய இடங்களில் ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். மகள் மட்டும் விதிவிலக்கு. சுபாவின் உண்மை முகம் அவள் மகளுக்கு மட்டும் தான்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத துணிவு. சிங்கப்பூரின் பெண்களுக்கான அங்கீகாரமும், சுதந்திரமும் அவளை வேகமாக மெருகேற்றிக் கொள்ள இன்னொரு காரணம்.
இந்தோனேஷியாவை தலைமை இடமாக கொண்ட கட்டிட நிறுவனத்தில் சிவில் இஞ்சினியராக வேலை செய்கிறாள். தலைமை பண்புடன் வேலை செய்யும் திறமை, நேர்த்தி இரண்டும் நன்றாக இருப்பதால் சம்பளமும் அதிகம், வேலையும் அதிகம். ஸ்மார்ட் ஒர்க்கர்.
அதனால் கொடுக்கப்படும் வேலைகளை அனாயாசமாக செய்து முடித்து விடுவாள். அலுவலகத்தில் இவளுக்கென ரசிகர்கள் உண்டு.
குளித்து முடித்து வந்தவள் ஹேர் ட்ரியர் வைத்து முடியை காய வைத்து, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும், வகுட்டில் குங்குமமும் வைத்துக் கொண்டாள். அவள் மனம் கணவனது நல்வாழ்க்கைக்காக வேண்டியது.வலது கை தாமாக கழுத்தை வருடியது.
தியாவும், சுபாவின் அம்மாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை. கடிகாரம் காலை மணி ஆறு என்றது. தியாவை எழுப்பி, பல் துலக்க அனுப்பியவள், அன்றைய சமையலுக்காக, குளிர் சாதன பெட்டியில் இருந்து காய்கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.
குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்து அம்மாவை அழைத்துக் கொண்டு நின்ற மகள் மீண்டும் .கணவனை ஞாபகப் படுத்த தலையை வேகமாக அசைத்து தனது நினைவுகள் அழுத்துவதிலிருந்து வெளியே வந்தாள் . இவையெல்லாம் தினமும் நடப்பவை தான்.தியாவுக்கு பள்ளிச் சீருடை அணிவித்து ,இரட்டை பின்னலிட்டு தயார் செய்தவள் , மீண்டும் வேகமாக சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் . தியாவுக்கு மதியம் உணவு பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள். ஆனால் ,தன்னால் அலுவலக கேன்டீனில் சாப்பிட முடியாது.
வேலைக்கு சேர்ந்த புதியதில் அலுவலகத்தில் சாப்பிட்ட உணவு அவளுக்கு படுத்தி எடுத்துவிட்டது. வாந்தி,காய்ச்சல் ..அப்பப்பா ..பட்ட துன்பம் போதும் என்ற எண்ணம். அதனாலேயே சமைத்து எடுத்துக்கொண்டு விடுவாள்.அத்துடன் இந்திய சமையல்.. அதன் ருசி தனிதானே . அலுவலகத்தில் சைனீஸ் தான் சுலபமாக கிடைக்கும்.
அம்மாவால் இவ்வளவு வேகமாக செய்ய முடியாது என்று அவர்களை "நீங்க லேட்டா எந்திருச்சு வந்தா போதும்ம்மா " என்றுவிட்டாள் .இரவு உணவை கண்டிப்பாய் அவளது அம்மா தான் தயாரிப்பார்.வேலை விட்டு வந்து குழந்தையுடன் அமர்ந்து அவளது பாடங்களை சொல்லிக்கொடுப்பதும்,அலுவலகத்தில் அடுத்தநாள் செய்யவேண்டியவற்றை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வதற்கும்தான் சுபாவுக்கு நேரம் இருக்கும்.
இன்று பிரணவ், பிசிபேலேபாத் கேட்டிருந்தான் என்று அவசரமாக ஞாபகம் செய்து கொண்டவள் அதற்கான தயாரிப்பில் இறங்கினாள் . மணி எட்டு அடிக்கவும்,அவளது அம்மா குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தார். அவருக்கு காபி வார்த்து கொடுத்தவள் தியாவுக்கு புத்தகங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தவள், தானும் ரசம் விட்டு சாதம் சாப்பிட்டு தியாவுடன் கிளம்பினாள்.
வெறும் பாலை குடித்திருந்த தியா அம்மா வைத்திருந்த சான்விச்சை பிரேக் பாஸ்ட் கார்ல சாப்பிட்டுக்கறேன் மா,,என்று கெஞ்சியது. லேசாக கோவம் எட்டிபார்த்தது சுபாவுக்கு.ஆனாலும்,மகளின் பாவனையில் மயங்கியவள், குழந்தையுடன் லிப்ட்டில் ஏறினாள். இருபதாவது தளத்தில் அவளது பிளாட்.
லிப்ட்டில் இன்னும் மூன்று பேர் நின்று கொண்டிருக்க,அவர்களை பார்த்து அறிமுகப் புன்னகை வீசியவாறே கார் பார்க்கிங் வந்து சேர்ந்தாள் சுபா. இன்று அலுவலகத்தில் அவளுக்காக என்ன காத்திருக்கிறதோ!
மகள் தியாவை பள்ளியில் விட்டுவிட்டு தனது காரை நேரே அலுவலகத்திற்கு திருப்பினாள் . அந்த பிரம்மாண்ட கட்டிடம் அவளை பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போல் மனதில் ஒரு தோற்றம் எழ சந்தோஷத்துடன் காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு லிப்ட் நோக்கி சென்றாள் சுபா . அவளது ஹீல்ஸ் சப்தம் கூட மெல்லிசைதான். ரொம்பவும் ரசித்து நடப்பாள். மெல்லிடை இல்லை .ஆனால் அடுத்தவரை ஆகர்ஷிக்கும் உடற்கட்டு.அத்துடன் கூடிய உயரம்.
சராசரி இந்தியப் பெண்களை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் சுபா உயரமே தான். ஆனாலும், கொஞ்சம் ஹீல்ஸ் வைத்துதான் காலணி அணிகிறாள். இதோ லிப்ட் பத்தாவது மாடியில் நிற்க சிலர் அங்கே இறங்கிக் கொண்டார்கள்.அலுவலகம் வந்ததும் நேரே அவளது மானேஜரை காணுமாறு அவரது அந்தரங்க காரியதரிசியிடமிருந்து நேற்றே மெயில் வந்து விட்டது.அதனால் பன்னிரண்டாம் தளத்தில் இறங்கினாள் .
அங்கே பிரணவ்வும் உட்கார்ந்து கொண்டிருந்தான். சுபா மனதில் 'என்னவாக இருக்கும்' என்று லேசான குழப்பம்,அதை அவள் முகம் காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்கு கொஞ்சம் சிரித்தபடிக்கு ,வந்து தனது நண்பனின் அருகே அமர்ந்து கொண்டாள் .
தோழி என்று சொல்லிக்கொண்டாலும்,அவளை திருமணம் செய்யக் கேட்டவனாயிட்டே . பிரணவ் சுபாவின் எழிலை லேசாக ரசிக்கவும் செய்தான். அவன் மனதில் பெருமூச்சு கிளம்பிற்று. இந்த பெண் என்னை திருமணம் செய்து கொள்ள ஏன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்?என்ற ஆயாசம்.
மேனேஜரின் காரியதரிசி நிதானமாக உள்ளே நுழைந்தவர் இருவருக்கும் முகமன் தெரிவித்துவிட்டு தனது வேலைகளில் மூழ்கிப்போனார்.
அவர் கைகளில் புது ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட கோப்புகள் இடம்பெற்றிருக்க எதிரே அமர்ந்திருந்த இருவருக்கும் ஆர்வம் தாங்கவில்லை. ஒருவேளை...இது சம்மந்தமாக அழைத்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு.
மானேஜர் இவர்கள் இருவரையும் அறைக்குள் அழைக்க ,இருவரும் காலைவணக்கத்துடன் அவர் முன் சென்று அமர்ந்து கொண்டார்கள். கொஞ்சம் யோசனையுடன் அவர்களை பார்த்தவர் " ஒரு டூ மோந்த்ஸ் நீ மலேசியா போகணும் சுபா ட்ரைனிங் எடுக்க.அண்ட் நீ..பிரணவ் சுபாவோட ஒர்க் சேர்த்து பாக்கணும். அவங்க வர வரைக்கும் "என்று நிதானமாக குண்டை இறக்கினார்.
அடுத்து செய்யப்போகும் வேலைக்காக என்பது சுபாவுக்கு புரிந்தது.ஆனால் ,குழந்தை தியாவையும்,அம்மாவையும் இங்கே சிங்கப்பூரில் விட்டு தான் மட்டும் எப்படி என்று அவளுக்கு தயக்கம். மேனஜரிடம் தனது நிலையை எடுத்து சொல்லி ,வேறு யாரையாவது அனுப்பும்படிக்கு அவள் கேட்டபொழுது,
அவரிடமிருந்து ஒரே பதில் தான்."சாரி சுபா ,வி காண்ட்".
பிராணவுடன் தனது இருப்பிடம் வந்தவளுக்கு மனம் முழுவதும் சோர்வு மிஞ்சியது. தனி ஆளாக இருந்தால் இத்தனை நேரத்திற்கு உற்சாகமாக கிளம்பியிருப்பாள். இந்த நிலையில் இதெல்லாம் தேவையா என்று தவித்தது அவள் மனம்.
'நிறுவனத்திற்கு தானும் ஒரு எம்ப்லாய் ,மறுத்து சொல்ல முடியாது.என்ன செய்யலாம்' என்ற யோசனையிலேயே அவளது காலைப் பொழுது முடிந்தது. மதியம் வரை யோசனையில் இருந்தவள் வேறு வழி இல்லை என்று தன்னை தேற்றிக்கொண்டாள். மதியம் நடந்த கிளையண்ட் மீட்டிங்கில் கேட்ட குரல் அவளுக்கு வெகுவாக பரிச்சயம் ஆனது போல தோன்ற, அதை பற்றி சிந்திக்கலானாள்.
ஒருவேளை அடுத்த வேலைக்காக சுமார் இரண்டு வருஷங்களுக்கு சுபா இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்ற ஊகம் பிரணாவிற்கு வந்தது. காரணம் தான் புரியவில்லை.வேறு யாரையும் இது தொடர்பாக நிர்வாகம் பரிசீலனை செய்யவில்லை என்பது அவனுக்கு நிச்சயம் தெரியும்.ஆனால் ஏன் ?என்றுதான் குழப்பம் .
தனது காதலின் நிலை என்னவாகும்?ஏற்கனவே பெண் ஒப்புக்கொள்ள மறுக்கும் பொழுது ,இதுவேறா என்று மனதிற்குள் பொங்கினான் பிரணவ். சுபா இந்தியாவின் ப்ராஜெக்ட் பற்றி யோசிக்கவே இல்லை. மலேசிய பயணம் குறித்தே அவளது கவலை. பிரணவ் அவளிருக்கும் நிலையில் எதுவும் சொல்லக்கூடாது என்று மௌனமாய் இருந்துவிட்டான் .
குன்னூரிலிருந்து அந்த கருப்புநிற கார் சென்னை நோக்கி பிரயாணம் செய்துக்கொண்டிருந்தது. அங்கே பின்சீட்டில் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டே பிரயாணத்தை தொடர்ந்தான் ஜெயந்தன். அவனது கவனம் கொஞ்சமும் சிதறவில்லை. நினைவு தெளிந்த பிறகு , யாரும் எதுவும் சொல்லாமலே தன்னை தொழிலுக்குள் மீண்டும் புகுத்திக்கொண்டான் அவன்.
இவ்வளவு வருஷங்கள் நிதானமாக இருந்ததற்கும் சேர்த்து இப்போது வேகப் பாய்ச்சல்கள் தான். வெளி உலகம் பொறுத்தவரை ஜெயந்தன் இவ்வளவு காலமாக மனக்கசப்பு காரணமாக வெளிநாட்டில் இருந்தவன் இப்போதுதான் இங்கே இந்தியா வந்திருக்கிறான். அதுவும் நிரந்தரமாக.
ஒரு விதத்தில் அது சரிதான்.அவனது காதல் மனைவி கன்யா இறந்த பொழுது அவர்கள் இருவரும் அயர்லாந்தில் தான் இருந்தார்கள். கன்யா நன்றாக பாடுவாள்.கூடவே பரத நாட்டியமும் ஆடுவாள். கல்லூரி விழாவில் அவளது நடனத்தில் லயித்தவன் மெல்ல அவளிடம் காதல்வயப்பட்டான். கன்யா இவர்கள் அளவுக்கு பணம் படைத்தவள் இல்லை.
ஜெயந்தனை கல்லூரியில் அநேக பெண்களுக்கு பிடிக்கும். அதே போல்தான் கன்யாவுக்கும். கனவு நாயகன் காதல் சொல்லவும் மறுக்க இடமின்றி அவளும் ஒப்புக்கொண்டாள் கன்யா வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை.
'பெரிய இடம் பிரச்சனைகள் வரும் என்று ஒதுங்கி கொண்டார்கள்'.கன்யாவுக்கு சொன்ன புத்திமதிகள் அத்தனையும் வீண்.
ஜெயந்தன் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. கன்யாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டவன் அயர்லாந்துக்கு மனைவியுடன் வந்துவிட்டான். ஜெயந்தன் குடும்பத்திற்கு அங்கேயும் தொழில்,சொத்துகள் உண்டு.அவற்றை தான் பார்ப்பதாக சொன்னவனை மறுப்பின்றி ஒத்துக்கொண்ட அவன் வீட்டினருக்கு அவன் மனைவியை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
இருவருக்கும் காதல் வாழ்க்கை..அப்பப்பா , திருமணமும் அதன் உறவும் இவ்வளவு வசந்தத்தை கொடுக்குமா!என்ற அளவில் இருக்க இருவருமே ஒருவருக்கு ஒருவர் தேனில் மூழ்கிய வண்டாகிப் போனார்கள். கன்யாவுக்கு அவள் உலகமே ஜெயந்தன் என்றாகிப்போனது. இருவருக்குமிடையே மூன்றாவது நபர் வருவதை அவள் ஒத்திப்போட விரும்பினாள் .
அதைப்பற்றி கணவனிடம் அவள் எதுவும் பேசவில்லை. அதிகபட்ச குழப்பம். ஜெயந்தன் வீட்டில் இல்லாத பொழுது நடனம் பயிற்சி செய்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென நெஞ்சு வலிப்பது போல் இருக்க கீழே விழுந்தவள் மீண்டு வரவில்லை. அப்போது அவள் மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள்.
ஜெயந்தன் வீடு வரும்பொழுது வீடு இருளில் மூழ்கி இருந்தது.அதற்குப்பிறகு அவன் வாழ்வும் கூட இருள் கவிழ்ந்தது. தன்னை தொலைத்தான் . மனைவியின் சடலத்தையும்,போஸ்ட்மார்ட்டம் ரிபோர்டையும் பார்த்தவனுக்கு தன்னிலை மறந்தது.அன்று சித்தம் கலங்கிப் போனவனை அவனது அப்பாவும் சித்தப்பாவும் தான் சென்று அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
அவனை மீண்டும் உணர்வு பெற வைத்தவள் சுபா. ஆனால் ,அவனுக்கு மனம் தெளிய ஆரம்பித்தவுடன் ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்த அவனது குடும்பத்தினர் அவன் சித்தம் முழுவதுமாக தெளியும் நேரத்தில் அவளது ஞாபகங்கள் வேண்டாமென அவளை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
மருத்துவ தேவைக்காக என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவன் சுபாவை தேடி கதறியதும் ,பிறகு முழுவதுமாக சித்தம் சரியான பிறகு மனைவியை மறந்ததும் ..ப்ச்..இப்போது அவன் நினைவுகளில் சுபா நிச்சயம் இல்லை. கன்யாவின் நினைவுகள் மட்டும்தான்.
ஆனாலும், அவனுடன் இழைந்த ,பெண்ணின் நுண்ணிய நூதன உணர்வுகளும் அவளது குரலும்,அவளுக்கான வாசனையும் அவனுக்குள் இப்போதும் உண்டு.அவள் கன்யா இல்லை என்பதும் அவனது உணர்வுகளுக்கு தெரியும். கனவில் அவனை கட்டி அணைப்பதும், தாராளமாக முத்தமிடுவதும் அவன் காதுகளில் மெல்லியதாக மந்திரிப்பது போல் பேசுபவளும் யார் அவள் ?
இரண்டு பெண்களின் நினைவுகளால் சிக்குண்டவன் வீட்டினரின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் முடிக்க இதுவரை மறுத்துக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் எவ்வளவு காலம்?
அவன் ஒரு அகம்பாவியோ,பணத்தின் பின்னால் ஓடுபவனோ கிடையாது. ஆனால் சுபாவுக்க்கு அதெல்லாம் தெரியாதே! அவனைப் பற்றி அவன் குடும்பம் பூசிய வர்ணத்தில் அவள் ஜெயனைப் பற்றி எப்படி யோசிக்கிறாள்?பணக்காரனாக இருப்பது மட்டும் வரம் இல்லை.நினைத்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கவும் வாய்க்கவேண்டுமே!ஜெயந்தனின் காதல் கைகூடுமா..எப்போது அவன் சுபாவை உணர்வான்? நினைவுகளும்,உணர்வுகளும் வேறு வேறு.கன்யா பற்றியது அவன் நினைவுகள்.ஆனால் ,சுபாவுடன்
உறைந்திருப்பது அவனது உணர்வுகளாயிற்றே.
காதல் நிச்சயம் மாயவலை தான். கணவனுக்காக மட்டுமே சுபாவின் அந்தரங்க உணர்வுகள் எழும் .ஆனால் இருவரும் சந்தித்துக் கொண்டாலும் சுபா கணவனை ஏற்றுக்கொள்வாளா என்பது சந்தேகமே!