அத்தியாயம் - 2
பொன்னந்தி மாலையில் தும்பைப்பூ நிறத்தில் பனி தன்னை பூமியெங்கும் படரவிட்டு, நிலாப்பெண்ணை மோகிக்கச் செய்ய, அது ஒரு சுகமான குளிர்காலம். மார்கழியின் மயக்கும் குளிர் உடல் தொட்டணைக்க, பனிப் போர்வையோ தனக்குள் அனைவரையும் இழுத்துக்கொள்ள, அழகில் விஞ்சி நின்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்திருக்கும் மில் வேலே நகரம்.
இது பிரான்சிஸ்கோவில் உள்ள உலகப்புகழ் பெற்ற கோல்டன் கேட்டுக்கு, மிக அருகாமையில் இருக்கும் இடமாகும். இந்த கலிஃபோர்னியா நகரமானது, இசைக் கலைஞர்களையும், ஹாலிவுட் நடிகர்களையும், வர்த்தக பிரமுகர்களையும் கொண்ட அமெரிக்காவின் பொருளாதார நகரமாகும். தன்னை மிஞ்ச அழகு இல்லை என்று எண்ணச் செய்து, இங்கு வந்தோரை திரும்பிச் செல்ல நினைக்க வைக்காத மாய உலகம் தான், இந்த அமெரிக்கா. இந்த மாய உலகிற்குள் விரும்பியே விந்தை செய்து கொண்டிருந்தான், நம் நாயகன்.
மில் வேலே நகருக்கு சற்று வெளியே அமைந்திருக்கும் மூன்று அடுக்குமாடிக் கட்டிடம். அதை கட்டிடம் என்பதை விட மாளிகை எனலாம். அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில், ஒரு மாளிகை அமைப்பவன் கட்டாயம் சாமானியன் அல்ல. இவன் கடந்த மூன்று வருடங்களாக யூஎஃப்சி (UFC - Ultimate fighting championship) எனப்படும் உலகப் பிரசித்திபெற்ற குத்துச்சண்டை சாம்பியன். இது ஒரு வகை மிக்ஸ் மாசிலாஸ். அப்படிப்பட்டவன் எங்கனம் சாமான்யன் ஆக முடியும்?
அந்த மாளிகையின் பிரதான வாயிலில் இருந்து வீட்டின் நுழைவாயிலானது கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர். அந்த இடைவெளிக்குள் நன்கு பராமரிக்கப்பட்ட அகலமான தோட்டமும், ஒரு பக்கம் நீளமான நீச்சல் குளம், அதற்கு சற்று மேலே ஒரு பாஸ்கட் பால் கோர்ட், அங்கிருந்து இடப்புறம் நோக்கினால் பட்மின்டன் கோர்ட். வீட்டின் நுழைவாயிலின் வெளியே தாமரை இலை வடிவில் ஒரு தடாகம். தடாகத்தினுள் சிறிய மீன்களும், அல்லி மலரும் பூத்திருக்க, வீட்டுக்குள்ளே கண்ணைக் கவரும் அழகிய வேலைப்பாடுகள். லிவிங் ஏரியாவில் ஆளுயர ஸ்டாண்ட் ஒன்று நிறுத்தப்பட்டு, அதில் ஒவ்வொரு நாட்டிலும் சிறப்பு பெற்ற ஒவ்வொரு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொருட்கள் சொன்னது, அதன் சொந்தக்காரன் அத்தனை நாட்டையும் சுற்றி வந்த வித்தகன் என்று.
இப்படி அந்த மாளிகையின் உள்ளும் வெளியும் கோடி ரம்மியம் கொட்டிக்கிடந்தது. இந்த ரசனைக்குரியவனை கலாரசிகன் என எண்ண முடியாதவாறு, அபஸ்வரம் போல் ஒரு அகோரச் சத்தம்.
“ஓ! நோ சார்..! லீவ் மீ.. ஆஆ! ப்ளிஸ் சார்.. என்னை விட்டுருங்க. இனி இது போல் தவறு செய்யமாட்டேன். நோ..!"
அந்த கோர ஓசை வந்தது, இரண்டாம் மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து. முற்றிலும் இருட்டாக்கப்பட்டிருந்த அந்த அறையில் ஒளிக்காக மேஜையில் எரியும் லாம்ப் மட்டுமே. அதைத் தொடர்ந்து தன் உயரத்தைக் குறுக்கி அந்த சொகுசு சோபாவில் ஒருவன் அமர்ந்திருந்தான். அதன் தோரணையே அவன்தான் அங்கு நாயகன் எனச் சொல்லாமல் சொல்லியது. மற்றவனோ கையில் ஒரு கோப்புடன் அருகில் நின்று கொண்டு அங்கு நடப்பவைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் அதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். காரணம் அவன் தலைவனை மீறி ஒற்றை விரலை அசைத்தாலும், மறுகணம் தலையை அறுக்கவும் தயங்கமாட்டான். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனமோ..
‘டேய் தகப்பா.. எல்லாம் உன்னால வந்தது. உனக்கு நான் என்ன பாவம் செய்தேன்! சிவனேனு ஐந்து நாள் ஆபீஸ் போவது, மீதி நாள் பர்கர் சாப்பிடுவதும், வீக்கென்டில் ஒன் கோல் ஃபேசில் மூவி பார்ப்பதும், ஹாலிடே ஆனால், அக்கா பொண்ணோட சோட்டா பீம் பார்ப்பதுமா இருந்த என்னை, நீ உன் தோஸ்துக்கு உன்னை கர்ணன்னு நிரூபிக்க, வான்டட்டா என்னை சிங்கத்து வாயில் சிப்ஸ்சா போட்டுட்டியே...!
ஓ.. மை காட்! நாளுக்கு நாள்.. நம்ம உசுருக்கு இந்த ஊருல உத்தரவாதம் இல்லாமப் போகுது. இந்தாளு நம்மள மிதிப்பானா, இல்ல இந்த ஆளோட எதிரிகள் நம்மளப் போடுவானா ஒண்ணுமே தெரியலையே? வெள்ளைக்காரன், ஆப்பிரிக்காகாரன், நம்ம ஊருக்காரன்னு பாரபட்சமின்றி அத்தனை பேருட்டையும் ஒரண்டை இழுத்து வச்சிருக்கார். இதில ஆக்சன் சீன் வேற. இன்னைக்கு இந்த பம்பாய் ரசமலாய என்ன பண்ணப் போறார்னு தெரியலையே!'
என்று தன் பாஸின் நடவடிக்கையை மனதுக்குள் நினைத்து அங்கலாய்த்தவன், வேறு யாருமல்ல. அக்கண்யனின் ஆருயிர் நண்பன் அரவிந்தனின் தவப்புதல்வன், வருண் அரவிந்தன். பெயரைப் போலவே பொழியும் மழையானவன். அன்பிலும், தூய குணத்திலும் சூழ இருப்பவர்களை மகிழ்வித்துப் பார்ப்பதிலும், அவன் கொட்டும் மழை தான்.
ஆதலாலே தந்தையின் வாக்கை மீற முடியாது, இந்த ஒன்றரை வருடமாக அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத வெளிநாட்டு வாசத்துக்குள் சிக்கிக் கொண்டான்.
அதே நேரம் அவன் பாஸோ அவனைத் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். அந்தப்பார்வை சொன்னது, உன் மனம் நினைத்ததை நானறிவேன் என.
அந்த அழுத்தமான பார்வையில், ஒரு கணம் உள்ளுக்குள் நடுங்கித் தான் போனான், வருண். காரணம் ஒருவருக்குப் பார்வையாலே, எதிர்கால வினையைக் காட்ட, அந்த வித்தகனால் மட்டும் தான் முடியும். மறுகணம் தன் பார்வையைத் தனக்கு எதிரில் ஒருவனை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த தன் காட்சை நோக்கித் திருப்பியவன், பார்வையாலேயே சூடு பத்தலை என்று உணர்த்தினான்.
தலைவனின் பார்வையைப் புரிந்து கொண்டவர்கள், கீழே இருந்தவனை உயிர் சிதையும் வரை அடித்து நொறுக்கினர்.
“ஜி! என்னை மாஃப் கர்தீ ஜி! நீங்க டெண்டர் எவ்வளவு கோட் பண்ணி இருக்கிறீங்கனு மிஸ்டர். சர்மாவுக்குக் கூறினால், இந்தியாவில இருக்கும் என் பிள்ளைகளை வெல் செட்டில் செய்வதோடு, எனக்கு சொந்தமாக ஒரு கம்பெனி வைத்துத் தருவதாக ப்ராமிஸ் பண்ணியிருந்தார். பணத்திற்காக ஆசைப்பட்டு, தவறு செய்து விட்டேன். என்னை மன்னிச்சுடுங்கள் சார்!"
என்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான், அவன் மேனேஜர். ஆனால் அவனோ ஆக்ரோஷமாக எழுந்து நின்று அழுத்தமாக ஒரு பார்வை மட்டுமே பார்த்தான்.
அந்தப் பார்வையிலும் எழுந்து நின்ற அவன் நரசிம்ம தோற்றத்திலும், உள்ளுக்குள் நடுங்கி தான் போனான். எதிரிகளை நடுங்கச் செய்யும் தோற்றம் தான்.
ஆனால் மங்கையரின் மனதைக் கொல்லாமல் கொள்ளையடிக்கும் மன்மத தோற்றமும் கூட. வெண்ணெயில் சிறிது மஞ்சளை சேர்த்ததைப் போல் நிறத்தில், கரு விழிகளும், நீண்ட கூர் மூக்கும் தந்தையைப் போலவே, எனக்கு சிரிக்கத் தெரியாது என்று அழுத்தமாகக் கூறும் உதடுகளும், தாடைக்கு நடுவில் ஒரு பிளவு, அதை இன்றளவு பிறர் காண்பது மிக அரிது எனக் காட்டும் அடர் தாடியும், பிடரியைத் தொட்டு சற்று கழுத்தில் வடியும் நீண்ட முடி, அது ஹாப் போனி டெய்லில் அடங்கி இருக்க, அகன்று புடைத்த புஜங்களும், கழுத்தில் அவன் பெயர் நீல் வடிவில் டட்டு வடிவிலும், இடப்புறத் தோளில் இருந்து இட கை வரை விரிந்த டட்டுவும், நீண்ட அகன்ற கை கால்களுமாக ஆறரை அடி உயரத்தில் அசாத்திய தோற்றத்தில் 96 கிலோவில் அவன் ராட்சசனா? இல்லை.. ரட்சகனா? என அறியாத உருவத்தில், தன் தாய் தந்தையின் மொத்த அழகை தன்னில் இரட்டிப்பாகக் கொண்டு, 15 வருட வெளிநாட்டு வாசத்தில் மேலும் மெருகேறி, கட்டிளம் காளையாக திமிறிக் கொண்டிருந்தான், ‘சர்வேஷ் அக்கண்யன்!'
ஆம், அக்கண்யன் ஜனனியின் கடைக்குட்டி வாரிசு. தந்தைக்கு மிஞ்சாத வீரம், தீரம், ஆளுமை, அதிகாரம், கர்வம்! கூடவே இவன் பல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்த வித்தகன். எதிர்ப்பவர்களின் மரணம். மங்கையர்க்கு மன்மதனும் கூட.
“டைம் லைன்" என்ற உலகப் பிரசித்தி பெற்ற மெகசினில், இவன் பெயர் வராத மாதங்கள் இல்லையெனும் அளவு, சாணக்கியம் நிறைந்த சாகரமவன். படித்தது எம்பிஏ ப்ளஸ் பிலிம் மேக்கிங். பரம்பரைத் தொழிலோடு யூஎஃப்சி பாக்சிங், இந்தியாவின் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை, ப்ரோடியூசிங் முதல் பினான்சியல் வரை செய்கிறான். உள்ளூர் அழகி தொடங்கி, உலக மோடல் வரை இவன் மஞ்சத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் பரிதாபங்களும் உண்டு.
“ஓவ்! மன்னிப்பா?"
“ஜீ!"
“பாஸ்டட்! மன்னிப்பா? நானா? ஐ ஆம் சர்வேஷ். சர்வேஷ் அக்கண்யன். என்னோட அகராதியில நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை, தண்டனை மட்டும் தான். வாட் யு சே? பணத்துக்காக நீ எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சியா? உன்னைப் போல ஒருத்தனை மன்னித்து விட்டா, இதே பணத்துக்காக நீ இன்னொருத்தன ஏமாற்றுவ.
நெவர், எவர். ஒரு முறை மன்னிப்புக்கு தகுதி இருக்குனு தெரியாம, நான் வாழ்க்கைல கொடுத்த அப்பல்லோஜி கருப்புப் புள்ளியா பதிஞ்சு போச்சு. மறுபடியும் அதையே செய்வனா? ஹூம்.."
என்று நிதானமாகத் தன் இருக்கையில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவன். தன் காட்சை நோக்கி, கண்களால் கட்டளையிட்டான். இது தான் சர்வேஷ். அவனிடம் வார்த்தைகளுக்கு என்றுமே பஞ்சம். பார்வையால் பிறரை ஆட்டி வைப்பதில் வல்லவன்!
பார்வையின் அர்த்தம் புரிந்தவர்களாக, கீழே கிடந்தவனின் ஒற்றைக் கையை அந்த சொகுசு சோபாவின் கைப்பிடியில் ஒருவன் வைக்க. மற்றவன் அவனை சர்வேஷ் காலுக்கடியில் இழுத்துப் போட்டான். அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் உள்ள பழக் கூடையில் இருந்த சிறிய மேசைக் கத்தியை எடுத்தவன். எடுத்த வேகத்தில் அவன் உள்ளங் கையிலேயே அதை ஓங்கிக் குத்தினான். கை நரம்புகள் தெறிக்க, குருதி பீறிட்டுப் பாய, மற்றவனோ அலறித் துடித்தான்.
“இந்தக் கை தானே எனக்கு எதிராக துரோகம் செய்யத் துணிந்தது. இனி சாப்பிடக் கூட உனக்கு இந்தக் கை பயன்படக் கூடாது!"
அந்த சமயம் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்த அவன் சர்வன்டோ, நடுங்கும் கையை கட்டுப்படுத்த வகையறியாது கையிலிருந்த ப்ளாக் காப்பியை அவன் முன் இருந்த மேசையில் வைத்து விட்டு, பவ்யமாக தலைகுனிந்து நின்று கொண்டான்.
விழிதனை அவன் புறம் திருப்பி, (உரையாடல் ஆங்கிலத்தில் இங்கு தமிழில்)
“டேனி ஒரு பத்து நிமிடத்தில் வருவேன். எனக்கான உணவை தயார் செய்து வை. காட் இட்!"
“எஸ் சார்!"
அதே வேளை அங்கிருந்த அத்தனை பேரும் என்ன மாதிரி உணர்ந்தார்கள் என்று தெரிய வில்லை.
அந்த வெளிநாட்டுச் சமையல்காரனோ உள்ளுக்குள் நடுங்கிவிட்டான்.
‘என்ன மனிதன் இவன்? ஒருத்தன் குருதி வடிய துடித்துக் கொண்டிருக்கிறான், அந்த தாக்கம் சிறிதுமின்றி உணவைப் பற்றிப் பேசுகிறானே? ஹி இஸ் வேரி டேஞ்சரஸ்!' என்று எண்ணியவன் தன் பாஸின் குணமறிந்தவனாக, அவன் கட்டளையை சிரம் மேல் கொண்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான்.
“வருண், உனக்கு ஒன் ஹவர் டைம் தருகிறேன் அதற்குள் இந்த இடியட்டை இங்க இருந்து டிஸ்போஸ் பண்ணிரு, அண்ட் இவன் உடம்பில உயிர் மட்டும்தான் இருக்கணும். என்ன நான் சொன்னது புரிந்ததா..?"
என்றவன், அவன் பதிலை எதிர்பார்க்காது அந்த அறையை விட்டு வெளியேறினான். சிறிது நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவு மேசைக்கு வந்தவனோ, தனக்கு முன்னால் வந்து காத்துக்கொண்டிருந்த வருணை அழுத்தமாக நோக்க..
வருணோ, “ஐயம் டன் பாஸ்"
சிறு தோள் குலுக்களோடு, அங்கே இருந்த உணவை சிறிது ருசிபார்த்த மறுகணம், உணவு பிளேட் அந்த அறை முழுவதும் சிதறியது.
“டேனி..!"
“எஸ் சார்.." என்பது மட்டும் தான் தெரியும், அவன் கண்களில் பூச்சி பறந்தது.
‘ஆம்’ அடித்துவிட்டான்.
“யூ ஸ்டுப்பிட்! என்ன சாப்பாடு செய்து இருக்கிற? ஃபுட் நீ சாப்பிடுறதுக்கா? இல்ல.. நான் சாப்பிடவா? கோ மேன், இது அவ்வளவையும் எடுத்துட்டு போய் கொட்டி விட்டு, ஃப்ரஷ்ஷா செய்து விட்டு வா.." என்று கட்டளை பிறப்பித்தவன்,
மூன்றாம் மாடியில் இருக்கும் தன் பிரத்யேக நீச்சல் குளம் நோக்கிச் சென்றான். தன்னை சிறிது ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக ஆடைகளைக் கலைந்து விட்டு, நீச்சல் உடைக்கு மாறியவன், அங்கிருந்த ஷவரில் ஒரு முறை நன்றாக நனைந்தவன், நீருக்குள் பாய்ந்தான். 10 நிமிடங்கள் மூச்சைப் பிடித்து நீந்தியவன், வெளியே வந்த மறுகணம், அங்கே நின்ற வருணைப் பார்த்து வைத்தான்.
அவன் எதைக் கேட்கிறான் என்று அறிந்து காக்டெயில் கலந்திருந்த கிண்ணத்தை அவன் கையில் கொடுத்தவனோ, மனதுக்குள்ளேயே,
‘யோவ் அப்பா! நான் உனக்கு மகனாகப் பிறந்ததற்குப் பதிலா, மகளாகப் பிறந்திருக்கலாம்.
என்னை எங்கேயாவது கட்டியாவது கொடுத்திருப்ப. இப்ப பாரு, இந்த அமெரிக்காவில் வந்து நான் படாதபாடு படுகிறேன். இவர் தூங்கும் நேரம் தவிர, இவர் கூடவே சுத்த வேண்டியதா இருக்கே..!'
“வருண்.." என்று அழைத்த சர்வா, கையில் வைத்திருந்த காக்டெயிலை சிறிது சிறிதாக ரசித்து உள்நாக்கில் சுவைத்து, மிடறு மிடறாய் விழுங்கியவாறு,
“வருண், ஐ அம் வெரி ஹாட் அட் த மூமன்ட்! அன்ட் ஐ வான்ட் டு ரிலாக்ஸ் மை செல்ஃப் இமீடியட்லி..! சோ, ஹம்.. சீக்கிரமா லீனாவுக்கு கால் பண்ணி வரச் சொல்லு!"
என்றவன் வருணின் பதிலை எதிர்பாராது நீருக்குள் சென்று நன்றாக நீந்தி நீச்சல் குளத்துக்கு மேலே ஏறி வந்து, வருணின் தோள்மீது கை வைத்துத் தட்டி,
“என்ன வருண்? நான் சொன்னது புரிஞ்சுதா? இன்னும் ஹாஃப்பனவர்ல, அவள் என் ரூம்ல இருக்கணும்."
என்றவாறு வருணை நக்கல் பார்வையோடு, நோக்கி விட்டுச் சென்றான்.
சர்வா தனக்கு தினமும் கொடுக்கும் தண்டனைகளில் இன்றைய கோட்டா இது என, வருண் புரிந்து கொண்டான். இது அவனைப் பற்றி மனதுக்குள் கோபமாகப் பொரிந்து தள்ளும் போதெல்லாம், வருணுக்கு சர்வா கொடுக்கும் தண்டனை தான். ஆனால், அவனைத் திட்டுவதற்குப் பதிலாக வருணின் உள்ளமோ வேதனையில் ஆழ்ந்து போகும்.
தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த அன்பும், சாந்தமும் உருவான ஜனனி அத்தையின் மகன், இத்தனை கேடான குணம் கொண்டவன் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.
அதே சமயம், தான் சிறுவயதில் பார்த்த சர்வேஷ் இவன் இல்லை என்பதை, இங்கு வந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் உணர்ந்து கொண்டான். தன் சகோதரிகளைக் கூட நண்பர்களாகப் பார்க்க தயங்கிய சர்வேஷ், தன் மூத்த சகோதரியை அவன் அண்ணன் மணந்த போது கூட, நம் கூட வளர்ந்தவங்க நமக்கு சிஸ்டர் போல. உனக்கு இவங்களை திருமணம் செய்வதில் சம்மதமா என தன் தமையனைப் பார்த்து நேர்மையின் திருவுருவாகக் கேட்ட சர்வேஷ், தன் தாயைத் தவிர மற்ற பெண்களிடம் இடைவெளி விட்டுப் பழகும் சர்வேஷ், தன்னுடைய அம்மாவைக் கூட அத்தை என்ற சொல்லுக்கு மறுசொல் சொல்லாத சர்வேஷ் இவன் இல்லை என்பதில், அவனுக்கு எந்த ஐயமும் இல்லை.
ஆனால்.. இந்த சர்வேஷ் உருவாக, தன் குடும்பமும் ஒரு காரணம் என்பதில் மனம் குமைந்தது.
அந்த சர்வேஷ் பெண்களை மதிக்கத் தெரிந்தவன்! இவனோ பெண் பித்தன். மது, மாது என அனைத்திலும் கற்றுத் தேர்ந்தவன். இவன் அழகில் சுற்றாத பெண்கள் இல்லை எனலாம். ஏன் சென் பிரான்சிஸ்கோ சிட்டியின் சூப்பர் மாடல் லீனா, இவன் இன்றைய இரவின் நாயகி என்பது கசப்பான உண்மை.
‘காதலில் சுயம் இழக்கலாம்! சுயம் தொலைக்கலாமா?'
தன் நினைவுகளைக் கலைந்தவன், சர்வேஷ் இட்ட பணியை செய்வதற்காக, லீனாவுக்கு தகவல் அனுப்பிவிட்டான். அவன் இதைச் செய்யாவிடில் இதைவிட பெரிய தண்டனை அனுபவிக்க நேரும் என்பதை நன்கறிவான். அதே நேரம், தன் தந்தைக்கு அழைத்த வருணோ, அந்தப் புறத்தில் ஆன்சர் செய்ததும், குமுறத் தொடங்கினான்.
“ஹலோ.. மம்மி! எங்க இருக்காரு உங்க ஹஸ்பன்ட்? கூப்பிடுங்க அந்தாளை. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியாமல் விடமாட்டேன். என்ன நினைச்சுகிட்டு இருக்கார், அந்த ஆளு? நான் முடியாது முடியாதுனு சொல்ல சொல்ல என்னை அமெரிக்காவுக்கு துரத்திவிட்டு, அங்க உங்க கூட ஜாலியா ரொமான்ஸ் செய்றாரா. உங்க புள்ள இங்க படாதபாடு படுகிறேன். கூப்பிடுங்க மம்மி! உங்க ஆருயிர் கணவரை!”
“ஹாய் கண்ணா! என்னடா காலங்காத்தால காமெடி பண்றியா?"
“என்னாது காமெடி பண்றேனா? திஸ் இஸ் டூ மச் மம்மி. உங்களுக்கு தான் காலங்காத்தால, எனக்கு இப்போதான் நைட். நான் அமெரிக்கா வரும் வரை, கண்ணா ராஜானு கொஞ்சியது என்ன? இப்போ.. இங்க வந்ததும் நான் பைத்தியக்காரனா? பேசுவீங்க மம்மி, இதுவும் பேசுவீங்க இதற்கு மேலவும் பேசுவீங்க!"
“சரி சரி ஓவரா பொங்காதே! இதோ உங்க அப்பா வந்துட்டாரு. அவரிடமே கொடுக்கிறேன்."
தாயின் மீதான மற்றவர்களின் நிராகரிப்பை அறிந்தவன், முடிந்தளவு தன் வெறுப்பை தாயிடம் காட்டவோ அல்லது தன் முன்நிலையில் அவரை துக்கப்படவோ விடமாட்டான். அதே நேரம் சொல்ல வேண்டிய சமயம், அவர் பிழைகளை ஞாபகப்படுத்தவும் அவன் மறப்பதில்லை..!
அங்கே கவிதா கணவன் கையில் ஃபோனை வைத்து விட்டு, சமையல் அறைக்குள் புகுந்தாள். அந்தப் பக்கம் இருந்த வருணின் மனநிலை சொல்லவும் வேண்டுமா?
அன்னையின் வார்த்தையில் மேலும் கொதித்தவன், அரவிந்தன்...
“ஹலோ கண்ணா!" என்றதும்,
“யோவ் தகப்பா! உனக்கெல்லாம் மனசே இல்லையா? எப்படியா உன்னால கண்ணானு இவ்வளவு கூலா கூப்பிட முடியது. இப்படி ஒரு டெரர் பீஸ் கிட்ட என்னை மாட்டி விட்டுடீங்களே. நான் இங்க படாதபாடு படுறேன், உங்களுக்குத் தெரியுமா?"
என்று புலம்பியவன் மனநிலை அறியாதவனா அந்தத் தகப்பன்? வருண் அமெரிக்கா சென்ற நாளிலிருந்து இது தொடர்கதை தானே. அவன் புலம்புவதும், அரவிந்தன் வருணின் மனநிலையை மாற்றுவதும் தினமும் நடப்பது. ஆண் பிள்ளை தாயிடமே அதிகம் ஈடுபாடு என்பர். ஆனால், வருண் விஷயத்தில், அவன் தந்தையிடம் அதிகம் விருப்பம் கொண்டவன்.
“ஹா.. ஹா..! போதும் மகனே! ரொம்ப கோபப்படாத. அது உடம்புக்கு நல்லதில்ல. ஆமா, இன்றைக்கு அங்க என்ன ஆச்சு?"
“என்ன ஆச்சா? என்ன ஆகலைனு கேளுங்க?" என்றவன் நடந்ததை வரிசைப்படுத்தினான், ஒரு பெருமூச்சோடு.
“இது தினமும் நடப்பதுதானே கண்ணா? அவன் தினமும் யாரையாவது அடிப்பதும், நீ இப்படி புலம்புவதும். ஆனால் உன் குரலில் வேறு ஒன்னு இருக்கே. என்ன நடந்தது வருண்? அப்பா உனக்கு நண்பன் தானே, சும்மா சொல்லுடா!"
“அது.. டாடி அது.. இன்னிக்கும் எனக்கு பனிஷ்மென்ட்.."
“என்ன பனிஷ்மென்ட் கண்ணா, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா..!"
“அது வந்து.. வந்துபா.. அந்த சூப்பர் மோடல் லினாவ வரச் சொல்லுன்னு என் கிட்டவே சொல்கிறார். செகரட்ரி வேலை மட்டுமில்ல, கிட்டத்தட்ட இவருக்கு மாமா வேலையும் பார்க்கிறேன்!"
“வருண் என்ன பேசுகிற என்று தெரிஞ்சு தான் பேசுகிறியா? நீ தவறாப் பேசுறது என் அக்கண்யனின் மகனப்பற்றி. அவன் செய்ற ஒவ்வொரு செயல்களோட எதிர்வினையும் நமக்கு உரியது. தட் மீன்.. நாம செய்ததுக்கு அவன் அனுபவிக்கிறான்.
தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கிற ஒருவன், தன்னையும் துன்புறுத்துவான்! எதிர்ல இருக்கிறவனையும் துன்புறுத்தத் தான் செய்வான், வருண். சர்வாவோட மனநிலையை பொறுமையா ஹான்டில் பண்ணுவேன்னு தான், உன்னை அனுப்புவேன். நீயே இப்படி பேசலாமா?" என்று தந்தை அதட்டிய பின்பு தான், அவன் செய்த பிழை புரிந்தது.