“ரம்யா இந்த உணவு எனக்கானது. இதை வீசுறதில் ஒன்னும் முழுகிடுறதில்லை தான். ஆனால் யுத்தத்தில் செல்லடிபட்டு வன்னியில நான் தங்கியிருந்த அனாதை இல்லத்தில் உறவுகளை இழந்து ஐந்து வயது சிறுமியாக சுற்றிக்கொண்டிருந்த போது..
ஒருவேளை உணவுக்காக ஒவ்வொரு வீடு வீடாக தட்டிக் கையேந்தியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு பருக்கை சோறுக்காக ஒரு நாள் முழுவதும் வயிற்றில் ஈரத் துணியை கட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன். ஆம் இந்த உணவில் ஒரு பகுதி கெட்டுவிட்டது தான் ஆனால் எனக்கொன்றும் இது புதிதில்லைடி. நான் மூன்று நேரமும் கெட்டுப்போன உணவுகளை குப்பையிலிருந்து எடுத்துண்டு என் பசியை ஆற்றிக் கொண்ட நாட்களும் உண்டு. அப்போது என்னை ஆதரிக்க யாரும் இல்லை. என்னைப் போன்ற பல ஈழத் தாயின் பிள்ளைகள் யுத்தத்தால் மாண்டு போன சமயமது. அந்த ஐந்து வயதில் என்னால் யாரிடம் போய் உதவி கேட்க முடியும்? எனக்கு யாரைத் தெரியும்?
உனக்கொன்று தெரியுமா ரம்யா? நான் தங்கியிருந்த வன்னி ஆசிரமத்தில் செல்லடி பட்டதில் பல பிள்ளைகள் இறந்து போனாங்க. அந்த சமயம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நான் அணிந்திருந்த ஆடைகளிலும் தீப்பற்றிக் கொண்டது. எங்கள் ஆசிரமத்தில் வேலை செய்யும் முதிய பெண்மணி, தன் உடம்பில் ரத்தம் ஒழுக ஒழுக தீப்பற்றிய என் ஆடையை அகற்றிய பின் தான் உயிர் இழந்தாங்க. அப்போது நான் என் அருகில் இறந்து கிடந்த ஒரு அக்காவின் ட்ரெஸ்சை தான் கழட்டிப் போட்டுக்கொண்டேன். இந்த வறுமையும் வலியும் எனக்கு ஒன்றும் புதிதில்லைடி.
ஏன் இங்க கொழுப்பு ஆசிரமத்துக்கு வந்த பின்பும் எத்தனை நாள் ஒரு பிடி சோற்றுக்கு நான் ஒரு நாள் முழுவதும் வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருப்பேனு தெரியுமா? யாராவது விருந்தினர்கள் வரமாட்டாங்களா ஒரு வேளையாவது சுடு சோறு உண்ண மாட்டோமானு. என்னால் அதையெல்லாம் மறக்க முடியாது ரம்யா.
நீ கூட அடிக்கடி ஏன்டீ மூன்று வேளை சாப்பாடும் நேரத்துக்கு சாப்பிட்டு விடுகிற ஒரு வேலையை கூட ஸ்கிப் பண்ணுவதில்லைனு என்னை கிண்டல் செய்வியே. அது ஏன்னு தெரியுமா? எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு முழு நாளில் மூன்று வேளையும் உணவு உண்டதே மிக அரிது. வறுமையில் கொடிது இளமையில் ஏழ்மை! அதை முழுதாக வாழ்வில் அனுபவித்தவள் நான்.
பசி! ஹம்.. அதை நன்கு உணர்ந்ததால தான் எந்த வேலையும் உணவு உண்ணாது இருப்பதே இல்லை. ஏனோ.. மீண்டும் அந்தப் பசியை அனுபவித்து விடுவனோனு ஒரு பயம்!"
அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்தவள் தாவி அணைத்து “ஐயோ..ஆ.. சத்தியமா முடியல சாத்வி. ரொம்ப வலிக்குதுடி! நீ உன் வேதனையச் சொல்ல சொல்ல தாங்க முடியல. எப்படி இத்தனை ரணத்தை அனுபவித்த பின்னும், அதை சாதாரணமாகச் சொல்கிற?"
என விடாது கதறியவளை அணைத்து ஆறுதல் படுத்துவதற்குள், சாத்வி படாதபாடு பட்டுவிட்டாள்.
“சொல்லாத! மறுபடியும் இதை சொல்லாத. என்னால் தாங்க முடியலடி. நான் ஏதோ சாதாரண விஷயம்னு இத்தனை நாள் உன்னை கேலி செய்தேன். ஆனால் உன் ரணம் பெரிது. அதன் வடுவும் பெரிது. என்னை மன்னிச்சுடுடி. நான் கண்டிப்பா இனி உணவு விஷயத்தில இதை ஃபாலோ செய்வேண்டி. ப்ராமிஸ் உணவை நான் வீசவும் மாட்டேன்டி. ஐ அம் வெரி சாரிடி"
“அச்சோ! என்ன ரம்யா இது? சின்னப் பிள்ளை மாதிரி? உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னை நான் சந்தித்த நாளிலிருந்து, சிரிக்காத நாளே இல்லை. என்னை அதிகமாய் சிரிக்க வைத்தவள், நீ தான். நீயே அழலாமா?"
“போடி இப்படியே சொல்லிக் கொண்டுரு"
தோழியின் மனநிலையை மாற்றும் பொருட்டு,
“சரி, சரி வா கிளம்பு. ஆஃபீஸுக்கு போகலாம் சாயங்காலம் அப்போதுதான் சீக்கிரமே வரமுடியும். இல்லைனா, இன்னைக்கும் வார்டன்ட்ட திட்டு தான் வாங்கணும்."
என்றவள் தன் தோழி சகிதம் ஆஃபிஸுக்குப் புறப்பட்டாள். இங்கே பெண்ணவளோ ஒருபிடி அன்னத்தையும் அமிர்தமாக எண்ண,
அவள் மனதைக் கவரப் போகும் மாயவனோ உணவை ருசிக்கவோ, புசிக்கவோ அல்லாது மொத்தத்தையும் குப்பைக்கு இரையாக்கி, காமம் எனும் சொர்க்கத்தில் மூழ்கி இருந்தான்.
ஆனால் அவன் வாழ்வை காதலெனும் வர்ணம் மாற்றி அமைக்கும் வேளையில் அவன் முற்கால நிந்தனைகள், எதிரியாக மாறி அந்த வித்தகனுக்கும் சித்தம் துடிக்க வைக்கும்.
வேதம் சொல்லும் வேல் விழியால் வினை களைவாளா? அல்ல வெறுப்பாளா? தொடரும் கர்மாவை உலகில் வெல்பவன் யார்?