அன்று கட்சி அலுவலகமே அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் அடுத்து வரப்போகும் பாராளுமன்ற தேர்தலைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கத் தான் முதல்வரின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் எடுபடிகள் என வரிசையாக ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அனைவரும் வந்துவிட்ட நிலை தான். அமைச்சர்கள் முதற்கொண்டு அனைவரும் கூடிவிட்டனர் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள்.
அப்போது தான் பாதுகாவலர்கள் படைசூழ கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தது முதல்வரின் வண்டி. முதல்வர் இறங்குவதற்கு முன்பு அவ்வண்டியிலிருந்து இறங்கினான் வெறும் 23 வயதிலிருக்கும் ஒரு இளைஞன். ஆங்கிலத்தில் ஆட்-மென்-அவுட்னு சொல்லுவாங்களே அது போல அந்த இடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாதவன்.
அடர் நீல நிற ஜீன்ஸூடன் வெள்ளை நிறத்திலான ஒரு டீசர்ட், அதற்கு மேல் ஒரு நீல நிற டெனிம் சர்ட் அதில் பட்டன்கள் போடப்படாமல் உள்ளுருக்கும் அந்த வெள்ளை டீசர்ச் தெரியும் படி போட்டிருந்தான்.
முழுக்கை சட்டையை முட்டி வரைக்கும் மடித்து விட்டு, இடது கையில் ஒரு ரேஸ் மோடோ கடிகாரம், அதேகையில் கடிகாரத்துடன் சேர்ந்து ஒரு கருப்பு நிற மணிகள் கோர்த்த பிரேஸ்லெட்டும், ஸ்கெச்சர்ஸ் ஸ்போட்ஸ் ஷூம் கூடவே சன்கிளாஸூம் அணிந்து மாடலிங் அலுவலகம் செல்லக்கூடியவன் வழிமாறி கட்சி அலுவலகத்திற்குள் புகுந்தது போல தோற்றம்.
காரிலிருந்து இறங்கியவன் அவ்விடத்தை சுற்றிலும் தன் கண்களை சுழற்றியவன் குனிந்து காருக்குள் இருந்த தன் பெரியப்பாவை வெளியே வரும்படிக் கூறினான் விராஜ் ராகவேந்திரா. ராகவேந்திரா குடும்பத்தின் கடைசி வாரிசு. குறும்பும், விளையாட்டுத்தனமும் மிக்க இளைஞன்.
பொறியியல் படிப்பை சில பல அரியர்களுடன் முடிக்காமல், நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டர், பப் என சுகந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தவன் வழி தவறி போய் விடக்கூடாது என்பதற்காக அவனின் செல்ல பெரியம்மா கல்பனா தான் அப்போது எம்.பியாக சந்தோஷ் நாராயணனிடம் கெஞ்சிக் கூத்தாடி சேர்த்துவிட்டார்.
தம்பி மகனை தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டார் அவரும். முதலில் ஏனோ தானோவெனத் தான் அவருடன் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு மனிதர்களை கணிக்கும் குணம் அதிகமாக இருக்க, ஒரு பார்வையில் கணித்து விடுவான் அவர்களின் குணநலன்களை.
தன் பெரியப்பாவிடம் தவறான நோக்கோடு அவரின் அரசியல் வாழ்க்கையையே அழிப்பதற்காக பழகவரும் சில விஷக்கிருமிகளை ஆரம்பத்திலேயே கணித்து அவரிடம் கூற, அவரோ அனைவரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்காத என கூறிவிட்டார்.
பின்னாளில் அவர்கள் மூலம் சில இன்னல்கள் வரும்போது தான் விராஜின் மீது சந்தோஷ்க்கு நம்பிக்கையே வந்தது. விராஜூம் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பெரியப்பாவுக்கு உதவியாகவும் இருக்க ஆரம்பித்தான். அவருடன் கூடவே இருந்து அரசியல் அவனுக்கு பழகிபோய்விட்டது.
இன்று சந்தோஷ் நாராயணன் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு முடிவையும் அவனிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுப்பதில்லை. பல நேரங்களில் அவரின் எண்ணங்களை விட விராஜின் எண்ணங்கள் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. சிஷ்யனாக பெரியப்பாவிடம் வந்து சேர்ந்தவன் இன்று பெரியப்பனுக்கே குருவாகி போனான்.
பெரியப்பனும், மகனும் அந்த கட்சி அலுவலகத்திற்குள் புலி போல சென்றனர். அங்கு ஏற்கனவே பலர் அமர்ந்திருக்க, இவர்களைக் கண்டதும் தன்னால் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
முதலில் முகமனில் ஆரம்பித்து, சில பல கட்சி சம்பந்தமான விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப்பட்டு, முக்கிய பேச்சுக்கு திரும்பியது அவர்களின் கவனம்.
சந்தோஷ் “பாராளுமன்றத் தேர்தலில் இந்த தடவை நம்ம 40க்கு 40உம் அடிக்கனும்”
“ஆமாம் தலைவரே! ஆமாம் தலைவரே!” என கூட்டமாக ஒலி எழுப்பினர்.
“என்ன பண்ணலாம்.. யாருக்கும் ஐடியா எதுவும் இருந்தா சொல்லுங்க?கூட்டணி வைக்கலாமா? இல்ல தனியா நிக்கலாமா?”
“கூட்டனி இல்லாம நாம தனியா நின்னாலே ஜெயிக்கலாம் தலைவரே. ஆளுங்கட்சிக்கு தான் வோட் விழும் தலைவரே” என்றார் ஒருவர்.
“தலைவரே அந்த ___ கட்சி நம்ம கூட்டனிக்கு ரெடியா இருக்கு போல. இப்போ அவங்கள சேர்த்துக்கிட்டா எதிர்கட்சி இன்னமும் வீக் ஆகிடும்”
“இல்ல தலைவரே அவன் சொல்றது தான் சரி”
“இல்ல இப்படி பண்ணலாம்”
என ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை பதிவு செய்து கொண்டே இருந்தனர். அதற்குள் குடிப்பதற்கு டீயும், சிற்றுண்டியும் வர, டீ இடைவெளிக்கு பிறகு பேசலாம் என சந்தோஷ் நாராயணன் அவரின் அறைக்குள் வந்துவிட்டார் விராஜூடன்.
“என்ன விராஜ் என்ன பண்ணலாம்? நீ ஒரு ஐடியா வச்சிருப்பியே சொல்லு?”
“நீங்க என்ன பெரியப்பா நினைக்கிறீங்க?”
“மகேஷ்வரன் சொல்ற போல அந்த ____ கட்சி கூட கூட்டணி வைக்கலாம்னு தான் தோனுது”
“அதே தான் பெரியப்பா நானும் நினைக்கிறேன். அந்த கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இப்போ பஞ்சாயத்தாகிடுச்சு.. இனி எதிர்கட்சியோட சேரமாட்டானுங்க தனியா நின்னா தேவையில்லாம வோட் பிரியும். கூட்டு சேர்த்துட்டா 40ம் நம்ம கைவசம் தான்”
“ம்ம்”
“அது மட்டுமில்ல அடுத்த எம். எல். ஏ எலெக்ஷன்லயும் நமக்கு யூஸ் ஆகும்”
“அதான் நானும் யோசிச்சேன். சரி பேசுவோம்” என இருவரும் மீண்டும் அங்கு சென்று இவர்கள் முடிவைக்கூற, அதுவும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்து வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமானது.
“யார் யார் நிக்க நினைக்கிறீங்களோ அவங்களாம் ரிசப்ஷன்ல ஃபார்ம் இருக்கும் வாங்கி ஃபில் பண்ணி கொடுங்க தலைமை கலந்தாலோசித்து முடிவு பண்ணும். வந்துருக்க எல்லாருக்கும் மதிய உணவு ஏற்பாடு பண்ணிருக்கு அதுலயும் பங்கெடுத்துக்கோங்க லெட்ஸ் எஞ்சாய்” என எனக்கூறிய விராஜ் தொடர்ந்து,
“பெரியப்பா கிளம்பலாம் இப்போ கிளம்பினா தான் இன்னைக்கு டெல்லி கிளம்ப சரியா இருக்கும்” எனக்கூற சந்தோஷ் நாராயணும் விராஜூடன் கிளம்பிவிட்டார்.
விருந்தும் முடிந்து அனைவரும் கிளம்பிவிட்டனர். வீட்டிற்கு வரும் போது காரில் சென்று கொண்டிருந்தவனுக்கு ஒரு அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. அழைப்பை நிறுத்தியவன் மீண்டும் யாருக்கோ அழைத்து “சக்ஸஸ்” என மட்டும் கூறிவிட்டு வேறெதும் பேசாமல் வைத்துவிட்டான்.
*******
அடைக்கப்பட்ட அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் சூர்யான்ஷ். அவன் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. பலிவெறி அவனை ஆட்டிப்படைத்தது. விஹான் மட்டும் இப்போ அவன் கையில் கிடைத்தால் அவனை கொல்லக்கூட தயங்க மாட்டான் அவ்வளவு ஆத்திரத்தில் இருந்தான்.
காரணம் இன்று அவனது அழகுசாதன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து. ராகவேந்திரா குழுமத்திற்கு சொந்தமான ஷரா அழகுசாதன தொழிற்சாலையில் இவன் ஏற்படுத்திய பொருள் சேதத்தை விட பல மடங்கு பொருள் சேதம் உண்டாக்கிவிட்டான் விஹான்.
இப்படி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் குடும்பம் அரசியல் பின்புலம் உள்ள குடும்பமென்று தெரியும். நியாயமாக நடப்பவர்கள் என்றும் தெரியும் அதனால் இப்படியான எதிர்விளைவை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
ஆனால் அவன் தெரிந்த வைத்துள்ளது ராகவேந்திரா குடும்பத்திலுள்ள மூத்த தலைமுறையினரைப் பற்றித்தான். ஆனால் இளைய தலைமுறை ஒன்றுக்கு பத்தாக திருப்பி கொடுக்கும் என்று அவன் அறிந்திருக்காத பலன் தான் அவனது லாரா நிறுவனத்தின் சேதாரத்திற்கு காரணம். அவன் மனதில் இன்று காலை நிகழ்வு தான் படமாக ஓடியது.
இன்று காலையில் ஒரு பெரிய காஃபிஷாப்பில் விமலேஷ், ஷிம்ரித்தும் காத்திருக்க, அந்த இடத்திற்கு வந்தான் சூர்யான்ஷ். அங்குள்ளவர்களை எல்லாம் குள்ளமாக்கியபடி, ஆறடி உயரத்தில் அண்ணன், தம்பி மூவருக்கும் குறையாத கம்பீரத்தோடு, அழுத்தமான நடையோடு, அமர்ந்திருப்பவர்களை எடைபோட்ட படி வந்து அவர்களுக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்தான்.
ஷிம்ரித் “ஹலோ சூர்யான்ஷ்” என கைகளை நீட்ட, ஒரு நிமிடம் யோசித்துவிட்டே அவனுடன் கைகுலுக்கினான் சூர்யான்ஷ். கூடவே தானாகவே விமலேஷ்க்கும் தானே கைகுலுக்கினான்.
ஷிம்ரித் “என்ன சாப்பிடுறீங்க? காஃபி சொல்லவா?”
சூர்யான்ஷ் “நோ. தங்க்ஸ். என்ன விஷயமா என்னை பார்க்க கூப்பிட்டுங்க?”
விமலேஷ் “ஏன்ப்பா உனக்கு தெரியாதா நாங்க எதுக்கு கூப்பிட்டுருப்போம்னு” எனக்கேட்க, தோள்களை குலுக்கிய சூர்யான்ஷ்,
“எனக்கென்ன தெரியும்? அழைச்சது நீங்க தான். சோ நீங்க தான் சொல்லனும்” என்றான் அழுத்தமாக.
ஷிம்ரித் “ஓ.கே சூர்யான்ஷ். நேரா விஷயத்துக்கு வாரேன். உங்களுக்கும் விஹானுக்கும் என்ன பிரச்சனை? ஏன் எங்க ஃபேக்டரில ஃபயர் ஆக்ஸிடெண்ட் பண்ணீங்க?”
சூர்யான்ஷ் “வாட் நான் பண்ணேனா? இது என்ன புது கதையா இருக்கு? எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”
விமலேஷ் “இவ்ளோ நாளா நாங்க தொழில் பண்றோம் இப்படி ஒரு நாளும் நடந்ததில்ல. அந்த அளவுக்கு எதிரிகளும் இல்ல.. அவங்களுக்கு அவ்ளோ தைரியமும் இல்ல” எனக்கூற இடி, இடியென சிரித்தவன்,
“சரித்தான். அப்போ தைரியமான ஆள் நான் தானா? அதான் என்னை கூப்பிட்டிங்களோ? உங்க தாட்ல ஒன்னு கரெக்ட் ஒன்னு தப்பு. எஸ் நான் தைரியமான ஆள் தான் ஆனா நான் அத பண்ணல”
“ஆனா நீங்க தான் பண்ண சொன்னதா செஞ்ச ஆளு சொல்லிட்டானே” எனக்கேட்க, சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
ஆம்! அழகு சாதன தொழிற்சாலையில் தீவிபத்தை ஏற்படுத்திய பெருமாள் என்பவனை பிடித்துவிட்டனர். தொழிற்சாலை சாலை இருக்கும் இடத்திலுள்ள மற்ற கட்டிடங்களில் உள்ள கண்காணிப்பு காமெராவில் தேடி அவனது முகத்தை கண்டுபிடித்து இப்போது அவனையும் கண்டுபிடித்தாகிவிட்டது.
ஷிம்ரித் “அவனை நாங்க தான் கண்டுபிடிச்சோம் இன்னும் போலீஸ்ல கூட சரண்டர் பண்ணல. அவன சரண்டர் பண்ணி உங்க மேலயும் கம்ப்ளைண்ட் பண்ண முடியும்”
சூர்யான்ஷ் “தென் டூ இட். எனக்கு அதுல இருந்து எப்படி வெளிய வரதுனு தெரியும்”
ஷிம்ரித் “அது எங்களுக்கும் தெரியும். பணம் பாதாளம் வரையும் பாயும்னு. அதான் நாங்களும் இங்க வந்தது. என்ன தான் உங்க பிரச்சனை?”
சூர்யான்ஷ் “உங்க தம்பி விஹான் தான். அவன் தான். எங்கப்பா வந்து உங்க கம்பெனிய கேட்டதுக்கு எவ்ளோ திமிரா பதில் சொல்லி எங்கப்பாவ அசிங்கப்படுத்திருக்கான். அதோட எங்க ப்ராடெக்ட் சேல் கம்மியாகுறதுக்கு அந்த ப்ராடெக்ட் சேல் தான் காரணம்”
ஷிம்ரித் “நாங்க ரன் பண்ற கம்பெனிய சேல் பண்ண எங்களுக்கு விருப்பம் இல்லாம இருக்கும் போது நான் எப்படி சேல் பண்ண முடியும்? எங்களுக்கு அது மூலமா நல்ல லாபம் வரும் போது ஏன் சேல் பண்ணனும்? உங்க ப்ராடெக்ட் சேல் கம்மியா ஆச்சுனா உங்க மார்க்கெட்டிங்க நீங்க தான் இம்புரூவ் பண்ணனும் அத விட்டுட்டு நல்ல மார்க்கெட் இருக்க கம்பெனிய விலைக்கு வாங்குறது என்ன நியாயம்?”
சூர்யான்ஷ் “அத நார்மலா சொல்லிருந்தா எனக்கு இவ்ளோ கோபம் வந்திருக்காது. ஆனா அவன் எங்கப்பாவ நடத்தின விதம் தான் இப்போ நான் இப்படி பண்ண காரணம்”
ஷிம்ரித் “அவன் என்னா பேசினானு தெரியல. ஆனா வயசுக்கு மரியாதை கண்டிப்பா கொடுத்திருக்கனும். ஒருவேலை என் தம்பி தப்பா பேசியிருந்தா அவனுக்காக உங்கப்பாக்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி இந்த மாதிரி பண்ணாம உங்க மார்க்கெட்டிங்ல கவனம் செலுத்துங்க” எனக்கூறவும், விமலேஷ் மட்டுமல்ல சூர்யான்ஷூமே திகைத்துவிட்டான்.
நானா நீயா என மல்லுக்கு நின்னா அவனும் ஒரு கை பார்த்திருப்பான் ஆனால் ஷிம்ரித் இப்படி பேசவும் அவனுக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
சூர்யான்ஷ் “செம்ம கோபத்துல தான் இருந்தேன் ஆனா நீங்க இப்படி மன்னிப்பு கேட்கும் போது என்ன பேசுறதுனு தெரியல. சரி இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். ஆனா என் மார்க்கெட்ட உயர்த்தி உங்க மார்க்கெட்டை குறைக்காம விட மாட்டேன். நேர் வழியில மோதுறேன்.. நீங்களே உங்க கம்பெனிய எங்கிட்ட கொடுப்பீங்க பாருங்க” எனக்கூறியவன் விருவிருவென சென்றுவிட்டான்.
விமலேஷ் “ஏண்டா நீ மன்னிப்பு எல்லாம் கேட்ட, அன்னைக்கு அவன் அப்பன் அவ்ளோ திமிரா பேசினான் அதான் விஹானும் அவனுக்கு தக்கன பதில் சொன்னான்”
ஷிம்ரித் “இந்த ஒரு மன்னிப்பு பிரச்சனையை சால்வ் பண்ணும்னா.. சொல்றதுல தப்பு இல்லப்பா.. அதுவும் நான் என்ன சொன்னேன் என் தம்பி தப்பா நடந்திருந்தா மன்னிச்சிடுனு தான் சொன்னேன்.. இப்போ தான் அவன் தப்பா பேசலயே.. விடுங்க சித்தப்பா” எனக்கூறியவர்களும் பிரச்சனை முடிந்தது என கிளம்பிவிட்டனர்.
விமலேஷ்க்கே தெரியாமல் அவரிடமிருந்த ஹிடன் கேமரா மூலமாக இவை அனைத்தையும் அங்குள்ள மடிக்கணினி மூலமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஹான், அவனுக்கோ திகுதிகுவென வந்தது. ‘எதற்கு தன் அண்ணன் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்தவன் அவன் அப்படியிருக்கும் போது தன் அண்ணன் ஏன் மன்னிப்பு கேட்டு அவன் முன் தலை குனிய வேண்டும்?’ என நினைத்த அன் சூர்யான்ஷ்ஷை என்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்து, உடனே விராஜ்ஜூக்கு அழைத்தான்.
விராஜ்ஜூம், விஹானும் மற்றவர்கள் போல ஒற்றுமையாக அண்ணண்டா.. தம்பிடா என பாசமாக இருக்கும் அண்ணன் தம்பி எல்லாம் கிடையாது. சாதாரணமாக சின்ன வயதிலிருந்தே சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் கோபம்கார சண்டைச்சேவல் தான் இருவரும்.
பாசம் இருக்கும் ஆனால் ஒருநாளும் வெளிப்படுத்தியது கிடையாது. அதற்காக ஒருவரை ஒருவர் அடுத்தவர்களிடம் விட்டுக்கொடுப்பதும் கிடையாது. அடிச்சாலும் பிடிச்சாலும் அவர்களுக்குள் தான் மூணாவதாக ஒருவர் வரும் போது இருவரும் ஒன்னுசேர்ந்து மூணாவதாளை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள்.
விஹானிடமிருந்து அழைப்பு வரவும் புருவம் சுளித்து யோசித்தான் விராஜ். பொதுவாக அவன் அழைப்பதே கிடையாதே என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்றான்.
விராஜ் “சொல்லுடா என்ன கால் எல்லாம் பண்ணிருக்க?”
விஹான் “காரணம் எல்லாம் கேட்காத.. நான் சொல்ற மட்டும் செய்”
விராஜ் “அதான என்னைக்கு என்ன மதிச்சு எதுவும் சொல்லிருக்க.. காரணம் சொல்லு செய்றதா வேணாமானு முடிவு பண்றேன்” எனக்கூறவும் நெற்றியை தடவி கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், அனைத்தையும் கூறினான். அதில் விராஜூக்கும் கோபம் வர,
“சொல்லிட்டேல விட்டுறு இனி அவன என்ன பண்றேனு மட்டும் பாரு”
“இப்போதைக்கு இத மட்டும் பண்ணு. அவன் அப்பறமும் ஆடினா.. அடுத்த அடி அடிக்கலாம். அதிகபிரசங்கி வேலை பார்க்காத நான் சொன்னத மட்டும் செய் போதும். வேலைய முடிச்சுட்டு கால் பண்ணு”
“சரி. வேலை முடியவும் கால் பண்றேன்” எனக்கூறி அழைப்பை நிறுத்தியவன் அடுத்து அழைத்தது ஒரு பிரபலமான ரவுடிக்கு. விராஜூக்காக எதையும் செய்யும் அவன் விஸ்வாசி. அவனுடம் கூறி லாரா அழகுசாதன தொழிற்சாலையில் தீவைத்து பெரும்பாலான பொருட்களை சேதப்படுத்திவிட்டான்.
பிரச்சனையை முடிக்க ஷிம்ரித் முயற்சிக்க, அண்ணனும் தம்பியுமாக சேர்ந்து பிரச்சனையை பெரிதாக்கி விட்டனர். இனி என்ன நடக்க போகிறதோ!