வர்ணங்கள் 3
கேன்டீனில் தேனீர் அருந்தியவாறே காலையில் அலைபேசியில் பிரணவுக்கும் தனக்குமான உரையாடலை அசைப் போட்டாள் . அவனது பேச்சில் அவன் மனதில் இருக்கும் குழப்பங்களும் ,பயமும் அப்பட்டமாய் தெரிந்தது. அவன் ஏன் தன்னையே சுற்றி வருகிறான் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. எத்தனையோ முறை,தனது மனதில் எந்த ஆணுக்கும் இடமில்லை. என்னைபொறுத்தவரை நான் தியாவின் அம்மா .அவளைத்தவிர வேறு எதற்கும் எனது வாழ்க்கையில் இடமில்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டாள் .
'அவன் புரிந்தும் ஏனோ புரிந்தது போல நடந்தது கொள்ள மாட்டேன்' என்கிறான், எனில் இவள் என்ன செய்ய முடியும்?
இதோ இன்று காலையிலேயே அழைத்தவன் ,"சுபா,நீங்க மலேசியா போகலைன்னு சொல்லிடறீங்களா? மலேசியா போனா நிச்சயம் இந்தியாவுல ஆரம்பிக்கிற நம்ம கம்பனி ப்ராஜெக்ட்டுக்காக நீங்க குறைந்தது ரெண்டு வருஷமாவது அங்கே போகணும்.எனக்கு உங்களை பார்க்காம..எப்படி சொல்றதுன்னே தெரியல.நீங்க என்னை நிரந்தரமா விட்டு போற மாதிரி, என்னை மறந்துட்டு ...ப்ச், நீங்க போக வேணாமே! "என்று வேண்டுகோள் விடுத்தான்.
அவன் பேசியதை முழுவதும் கேட்டவளோ அவனுக்கு ஏதுவான எந்த பதிலையும் செப்பவில்லை. அவளது மனதில் ஏகத்துக்கும் எரிச்சல் மண்டியது. இவனை அருகே விட்டதே தவறு என்று மனதில் நொந்துகொண்டாள்.அவன் விடுவதாக இல்லை.
" இப்போ நீங்களும் குழந்தையும் இங்கே இருக்கீங்க. உங்கள பாக்க முடியுது. நீங்க நாம் கல்யாணம் செஞ்சுக்க இன்னும் ஓகே சொல்லல.ஆனாலும் உங்களை நா என்னோட பேமிலியா தான் பாக்குறேன்" பெண்ணின் மௌனத்தை படிக்க முயன்றவன் தானே தொடர்ந்தான்.
ஆனால் சுபா தயங்கவில்லை."சாரி டு செ திஸ் பிரணவ், என்னோட பேமிலி என்னோட அம்மாவும் ,என்னோட மகளும் தான்.வேற யாருக்கும் நியூ அட்மிஷன் கொடுக்குற ஐடியா இல்லே .உங்களுக்கு புரியலன்னா நம்மோட பிரெண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம்" என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
மலேசியா அலுவலகத்தில் இந்த வார இறுதியில் ரிப்போர்ட் செய்தாக வேண்டும். அதனால் இன்னும் இரண்டு நாட்களில் தனது அம்மா மற்றும் மகளுடன் அவள் மலேசியா செல்லவேண்டும்.அதற்காக தேவையானவற்றை பேக் செய்யத் தொடங்கினாள் சுபா .அலுவலகத்தில் விடுப்பு சொல்லியாயிற்று. அம்மாவையும் தியாவையும் ஒரு மாதம் கூட தங்க வைத்துக்கொள்ள அலுவலகத்தில் சரி என்று விட்டார்கள். ஆனால் இருவருக்குமான தங்கும் செலவை அவள்தான் ஏற்றாக வேண்டும்.
தியாவுக்கும் இந்த ஒரு மாதம் பள்ளி விடுமுறை என்பதால்தான் சுபா இப்படி திட்டமிட்டதே! அம்மாவுக்கும் தியாவுக்கும் மிகவும் சந்தோசமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கக்கூடும்.வார இறுதி விடுமுறை நாட்களில் மலேசியாவை சுற்றி பார்க்கவும் முடியும் என்று திட்டமிட்டாள் பெண் .
குட்டி தியாவின் சந்தோஷத்தை சொல்லவே வேண்டாம். கூட படிக்கும் நண்பர்களில் பலரின் உறவினர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் விடுமுறைக்கு சென்றுவிட்டு பரிசுப்பொருட்கள் பற்றி பள்ளியில் பேசும்பொழுது தியாவுக்கு ஏக்கமாக இருக்கும். இப்போது அவளும் விடுமுறைக்குஅங்கே செல்வது அவளை தலைகீழாக நடக்க வைத்து.அதனாலேயே சிறுமியின் உற்சாகம் கரை புரண்டுஓடியது. அதை வேறு சமாளித்தாக வேண்டும் . சுபா தனது குழந்தையின் சந்தோஷத்தை கண்டு மனம் கனிந்தவளாக வேலைகளை செய்தாள் .
நல்லவேளையாக அவளது அம்மா தனது லக்கேஜுகளை தானே பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டார்.
பிரணவிடம் சுபா எதுவும் நேராக சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லையென்றே அவள் நம்புகிறாள். அலுவலகத்தில் தெரிந்து கொண்டால் தெரிந்து கொள்ளட்டும். அத்துடன் என் வாழ்க்கையில் அவனது இடம் என்ன என்று புரிந்தால் இன்னமும் நல்லது என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
தனது மகளின் நடவெடிக்கைகளில் தன்னை மறந்து சந்தோசம் கொண்டார் சுபாவின் தாயார். அவள் வாய்விட்டு சிரித்து எவ்வளவு காலம் ஆயிற்று? இதோ,இந்த தியாவுடன் பேசும்பொழுதும் விளையாடும் பொழுதும் தனது மகளின் முகத்தில்தான் எத்தனை உற்சாகமும் சிரிப்பும்.வெளியே நிறையபேருக்கு சுபா சிரிக்கத் தெரிந்தவள் என்பதும் அவளுடன் இருப்பவர்களையும் தனது வேடிக்கை பேச்சுகளால் சிரிக்க வைப்பாள் என்பதுவும் தெரியும்?
ஆற்றாமையில் அவரது பெற்ற வயிறு துடித்தது. ஒற்றை மகளின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டோமே .என்று மருகினார். அதே சமயம் ஜெயந்தனின் வீட்டினர் மீது அளவுகடந்த வெறுப்பு அவருக்கு உண்டு.மகள் ஜெயந்தனை உயிருக்கும் மேலாக காதலிக்கிறாள் என்று அவருக்கு நன்றாக தெரிந்ததாலேயே அந்த வெறுப்பு பலமடங்காகியது. அப்படி என்ன அந்தஸ்து பைத்தியம் அவர்களுக்கு பிடித்து இருக்கிறதோ. வீட்டு மருமகளை வீட்டை விட்டு அனுப்பும் அளவிற்கு!
வழக்கம் போல தூங்கும் பொழுது அந்த பெண்மையின் கதகதப்பை ஜெயந்தன் உணர்ந்தான். அந்த பெண் கன்யா தான் என்று அவன் நினைத்தாலும், நிழல் போல் மனதில் புரிபடும் அந்த உருவம் அவனுக்கு புதியது. இவ்வளவு நாட்களில் அந்த உருவத்தை அவன் உணர்ந்தது இல்லை. ஹும் ..நிச்சயமாக இல்லைதான். தெளிவடையாத அந்த முகம் யாருடையது என்று மனம் குழம்பினான் ஜெயந்தன்.
சென்னையின் புழுக்கம் அவனது தூக்கத்தையும் கெடுத்தது.
ஏ சி யையும் மீறி அவனுக்கு வியர்த்தது.கனவினால் வியர்வையா அல்லது சென்னையின் சீதோஷ்ண நிலை காரணமா என்று அவனால் முடிவுக்கு வர முடியவில்லை.அவனது மனம் அந்த பெண்ணை காண வேண்டும் என்று துடித்தது.அதே சமயம் அவளது தீண்டலுக்கு பழகிய உடல் அவளை தேடியது. கன்யா...எண்டு பெருங்குரலில் கத்தினான்.
யாருமற்ற அந்த சென்னை வீடு இவனது குரலை எதிரொலித்தது.வேலைக்கு வருபவர்கள் காலையில் தான் வருவார்கள்.இல்லையென்றால் இவனது இந்த நடவடிக்கை பேசு பொருளாகி இருக்கக்கூடும். நிம்மதியற்ற இரவுகளை தொடர்ந்து சில வருஷங்களாக அவன் அனுபவிக்கிறான் . தனது கடந்த சில வருஷங்களில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்று சொல்வதற்கு அவனை சுற்றியுள்ளவர்கள் தயாராக இல்லை.
ஆனால் ,தன்னால் கடந்து வர முடியாத ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டிருப்பது அவனை உறுத்தியது. தொழிலை பொறுத்தவரை அவன் பாயும் புலிதான்.தைரிய லட்சுமியும், விஜய லட்சுமியும் அவனுக்கு வெற்றிகளை வாரி கொடுக்கிறார்கள். அவனது தனிமனித சொத்து மதிப்பே பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். ஆனால் ஏதோ ஒன்று.அவனுக்கு ஆட்டம் காண்பிக்கிறது.
அவனது பெற்றோரிடம் நிறையமுறை கேட்டுப்பார்த்துவிட்டான்' கன்யாவின் இறப்புக்கு பிறகு என்ன நடந்தது?
தான் இந்தியாவுக்கு எப்படி வந்து சேர்ந்தான் என்றெல்லாம். அவர்கள் பதில் தர தயாராக இல்லை. தான் கனவில் வரும் பெண் தனது மனைவி கன்யா இல்லை எனில் இவள் யாராக இருக்கக்கூடும்?எப்படி கன்டுபிடிக்க முடியும் என்று யோசிக்கும் பொழுது தலைவலி ஆரம்பித்துவிட்டது. பழைய விஷயங்களை யோசிக்க கூடாது எண்டு மருத்துவர் எச்சரிக்கை செய்துதான் அனுப்பினார். அதனால் என்ன பயன்?தன்னை மறக்க விடாமல் படுத்தும் அந்த கனவு சுந்தரி யாராக இருக்கக் கூடும்?என்றெல்லாம் யோசித்தவாறே மெல்ல தூங்கத் தொடங்கினான்.
சிங்கப்பூரில் தனது மகளின் அருகே படுத்து உறங்கி கொண்டிருந்த சுபாவுக்கு இப்போது தான் புரை தட்டியது. இப்போதெல்லாம் இதுபோல் அடிக்கடி நிகழ்கிறது. எழுந்து அமர்ந்து நெஞ்சை நீவிக்கொண்டவள் மனமும் தனது கணவனை நினைத்து ஏங்க தொடங்கியது.
இதோ கணவன் இப்போது இங்கே எனது அருகே இருந்திருந்தால்,இந்த இரவில் அவன் ஒருபுறமும்,தான் ஒருபுறமுமாக நடுவில் தியாவை அணைத்துக்கொண்டு படுத்து உறங்கி இருக்கலாம். அந்த காட்சி சங்க கால இலக்கியங்களில் வருணனையை ஒத்திருந்திருக்கும் என்று யோசித்தவளுக்கு அந்த இரவிலும் புன்னகை பூத்தது.அவளது மனமும் உடலும் கணவனின் அணைப்பை தேடுவது அப்பட்டமான உண்மை
ஆனால்,கனவில் கூட நெருங்க முடியாத கணவனின் நிழலை நினைவில் எப்படி பிடிக்க முடியும்? அவளது உடலோ இந்த நொடி எனக்கு என் கணவனின் அணைப்பு வேண்டும்,உயிரை உருக வைக்கும் அவனது முத்தம் வேண்டும் என்று அடம்பிடிக்க கன்னத்தில் அவளது கண்ணீர் உருண்டு வழிந்தது. அதை துடைத்துக்கொள்ள கூட அவளுக்குத் தோன்றவில்லை.
இப்போது தான் சுபாவுக்கு இருபத்தெட்டு வயது ஆகிறது. சந்தோஷங்களை விடுத்து தனிமையில் வாழும் வயது இல்லை. அப்படி இருக்கும் பொழுது தனக்கு ஏன் இந்த விதி என்று நொந்துகொண்டாள். பெரிய பிரச்சனை இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தடையாக இருப்பது அவளது மனமே! சிந்தையாலும் அவளால் இன்னொரு ஆண்மகனை ஏற்றுக்கொள்ள நிச்சயம் முடியாது.
ஆனால் கணவன் மீது தான் கொண்டுள்ள காதல்..அதற்கு விடிமோட்சமே இல்லையே? ஒருவேளை கணவன் தனது முன்னே வந்து நின்றால் தான் எப்படி நடந்து கொள்வோம் என்று அந்த அர்த்த நடு ஜாமத்தில் அதி முக்கிய சந்தேகம் முளைத்தது பெண்ணுக்கு. தனது தலையை தட்டிக்கொண்டவள் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் உறங்கிப்போனாள் .