“உன்னை எப்படி அப்பாவுக்கு முழுசா தெரியுமோ? அது போல அவனையும் தெரியும். தூரம் இருந்தா மட்டும் என்ன? நான் எப்பவும் உங்களுக்கு அப்பா தான்!"
அதே நேரம் தொலைபேசியில் தமையனை ஆதவ் அழைக்க,
“ஆதவ் ஃபோன்லப்பா"
“ஹம்.. பேசு"
அழைப்பை ஏற்கவும்
“ஆது அண்ணா, நம்ம சர்வா ஏர்போர்ட்ல லேண்ட் ஆயிட்டானாம். வருண் மெசேஜ் பண்ணி இருக்கான்"
“இப்போ தாண்டா அப்பாவும் நானும் பேசிட்டு இருக்கோம். நீயும் கரெக்ட் டைம்ல கால் பண்ற!"
“அண்ணா அம்.. அம்மா"
அவன் குரல் கம்ம,
“ஸ்டுப்பிட்! இப்ப என்ன அழ போறியா?"
“அண்ணா!"
வார்த்தைகள் இன்றி அண்ணனையே துணைக்கு அழைக்க,
“விடு ஆதவ்! நடக்கிறது நடந்தே ஆகும். நானும், அப்பாவும் இருக்கோம், முடிஞ்சளவு மேனேஜ் பண்றோம். என்ன? அம்மா தான் டிஸப்பாயின்மென்ட் ஆகுவாங்க. விடிஞ்சதுல இருந்து ராகவியும் அம்மாவும் வீட்டையே ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ல தாத்தாவோட திவசம் வேற வருது. இந்த வருஷம் சர்வேஷ் இருக்கணும்னு, அம்மா ரொம்ப பிரியப்படுறாங்க."
“என்ன பண்றது, ஆதுண்ணா? இப்ப என்னாலயும் வர முடியாது. நான் ஒரு ஃப்ரீ-மெடிக்கல் கேம்ப்ல இருக்கேன். என்னோட ப்ரெசென்ட் இங்க இல்லனா, இந்த கேம்ப்போட நோக்கம் ஸ்பாயில் ஆயிடுமே!"
“அதான் நானும், அப்பாவும், அரவிந்த் மாமாவும் இருக்கோமே! முடிஞ்சளவு மேனேஜ் பண்றோம்."
துளி அமைதிக்குப் பின்..
“அண்ணா சர்வேஷ் வருவான்னு நினைக்கிறீர்களா?"
“வாய்ப்பு இல்ல, ஆதவ்"
“அண்ணா!" என்றவன் குரல் மீண்டும் கமற.
“விடு மேன், பாத்துக்கலாம். பட் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகுதுனு மட்டும் மனசு பேசுது."
“நடக்கணும் அண்ணா! அவனுக்குக் கண்டிப்பா நல்லது நடக்கணும். ரொம்ப அனுபவிச்சுட்டான்!"
“சரிடா! நீ வேலையப் பாரு. அப்பப்போ இங்க இருக்க ஸ்டேட்டஸ் என்னன்னு பார்த்து உனக்கு மெசேஜ் பண்றேன். அண்ட் அனி, அனா ரெண்டு பேருக்கும் ரொம்ப பெருசா எக்ஸ்பிளைன் பண்ணாத. கன்சிவா இருக்க பொண்ணுங்க, இதை நினைச்சு ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்காம!"
“ஹம்.. ஓகே அண்ணா."
அவன் அழைப்பைத் துண்டிக்கவும் அது வரையிலும் தன் பெரிய மகனை அசையா பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவன் நெற்றியில் முத்தமிட்டு தோளில் தட்டிவிட்டி விட்டுச் சென்றான்.
தந்தையின் ஒற்றை முத்தம் கோடி ரூபா கொடுத்தாலும் ஈடாகாதென்று, பாசத்தில் நனைந்த மகனுக்கு மட்டுமே தெரியும.
இவர்கள் ஆளுக்கோர் மனநிலையில் இப்படி சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவர்கள் எண்ணங்களின் நாயகன்..
“வருண் டிரைவருக்கு கால் பண்ணிட்டியா?"
“எஸ் பாஸ். வெளிய நிற்கிறாரு."
“ஓகே!" என்றவன் வந்திருந்த BMW வில் ஏறி அமர, டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த வருணிடம்,
“பார்ம் ஹவுஸ் போ!"
“அதிர்வாக.. “வாட்!" எனவும்.
“என்னா வாட் மேன்?"
“இல்ல... உங்களுக்காக வீட்டுல.."
“வாட் ஐ சே டு யூ, வருண்?"
அவன் மீண்டும் தயங்க,
“சொன்னதச் செஞ்சா, என்னோட வரலாம்! இல்ல.. இப்படியே இறங்கிப் போய் சேரு!"
அதற்குப்பின் அவன் பேசவில்லை. ஆனால் மனம் வேதனையில் அடித்துக் கொண்டது. ‘காலையிலிருந்து எத்தனை மெசேஜ், எத்தனை ஃபோன் கால்? அதிலும் தன் அத்தையின் குரலில் தான் எத்தனை துள்ளல்? இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்வாரா?' கண்ணாடி வழியே வருணைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,
“என்ன வருண் ஃபீல் பண்ற போல?"
“இல்ல பாஸ் அத்.. அத்தை.."
அவன் முடிக்கும் முன்,
“வருண்!" அழுத்தமாக அழைத்தவன்...
“பெயின் இஸ் காமன். எஸ்! வலிகள் எல்லாருக்கும் பொதுவானது, வருண். அதுக்கு ஆம்பள, பொம்பள, சின்னவங்க, பெரியவங்க வித்யாசம் தெரியாது. பிள்ளைகளுக்காக பெத்தவங்க அழுவது இல்லையா? அது மாதிரி என்னோட வலிக்காக, உன் அத்தை கொஞ்சம் காயப்படட்டுமே!"
அவன் குரலின் குரூரத்தில் வருணின் உள்ளம் யாருக்காக வருந்துவது எனத் தெரியாது தவிக்க, மேலும் பேச்சு வளர்க்க விரும்பவில்லை. வாகனத்தின் ஜன்னல் வழியே கடந்து போகும் பாதைகளில் சர்வேஷ் பார்வை பதிந்தது.
பல வருடங்களுக்கு முன் தாய், தந்தையோடு வலம் வந்த சில இடங்கள், அதன் தடங்கள் இன்னும் பசுமையாக அவன் நெஞ்சில் புதைந்து கிடந்தன.
காத்திருக்காத நேரம் நகர்ந்து செல்ல, அன்று இரவு நேரம் ஏங்கித் தவித்த நெஞ்சங்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியது.
‘ஒரு கரையில் அழும் அன்னையைத் தேற்றுவதா? தன் குடும்பத்தால் தானே என வேதனையில் வாடி இருக்கும் மனைவியைத் தேற்றுவதா? இரு கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்திருக்கும் வருணைத் தேற்றுவதா? இல்லை.. தனக்குள் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் தந்தையைத் தேற்றுவதா?’ எனத் தெரியாது தவித்துப் போனான்.
“ப்ளீஸ் அம்மா, சாயங்காலத்தில் இருந்து இப்படி அழுதுட்டு இருந்தா, என்ன அர்த்தம்?"
ஐனனி இயலாமையோடு அவனைப் பார்க்க,
“என்னம்மா?"
“எனக்கு புரியாமலா கண்ணா? ஆனா.. புரிய வேண்டியவனுக்குப் புரியலையே. அதற்கு நானும் ஒரு முக்கிய காரணம் தானே. அவன் எத்தனையோ முறை வேண்டாம்னு சொன்னான். நான் தான் கட்டாயமாப் பிடிச்சு வைத்தேன்."
“நீங்க என்ன கெட்டதாம்மா நினைச்சு செஞ்சீங்க? ஏதோ ஆகிப் போச்சு!"
ராகவியும் ஜனனி கைகளை பிடித்துக் கொண்டு..
“அழாதீங்க அத்தை. உங்க கண்ணீருக்கு நாங்களும் ஒரு காரணம்னு நினைக்கும் போது, ரொம்ப வலிக்குது."
அவள் ஒரு புறம் விசும்ப, வருண் மறுபுறம் மௌனமாக கண்ணீர் வடிக்க,
தன்னையே நொந்து கொண்ட ஜனனி,
“எதுக்கு இப்போ, ஆளாளுக்கு உட்கார்ந்து அழுதுட்டு இருக்கீங்க?"
தன் விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டு,
“இப்போ என்ன என் பையன் வரல. அவ்வளவு தானே? வராமலா போயிருவான். இன்னும் ரெண்டு நாள்ல மாமாவோட நினைவு நாள் வருது. அன்னைக்கு என் சர்வா கையால சாம்பிராணி போட்டு படையல் வைப்பேன்!"
“அத்தை!"
“நடக்கும் வருண். என்னோட அத்தான் நடத்தி வைப்பாரு!"
அக்கண்யன் விழுக்கென நிமிர்ந்து ஜனனியை முறைக்க, அந்த விழிகளைத் தானும் சளைக்காது பார்த்தவள்,
“அமெரிக்கால இருந்து இலங்கைக்கு வர வச்சவருக்கு, கல்கிஸ்ஸைல இருத்து இந்த வீட்டுக்குள்ள வர வைக்க முடியாதா என்ன?"
“ஹம்.." பெரு மூச்சோடு எழுந்த அக்கண்யன், ஜனனியை நெருங்கி மெதுவாக அவள் கை பிடித்து எழுப்பியவன்,
“என் பொண்டாட்டியை நான் சமாதானப் படுத்திக்கிறேன் ஆது. நீ வருணையும், ராகவியையும் பாரு!"
மனைவியோடு படிகளில் ஏறியவன் திரும்பி வருணை அழைத்து,
“நாளைக்கு காலைல சர்வேஷைப் பார்க்க, நானும் வாரேன்."
“மாமா அது.." அவன் இழுக்கவும்.
“ரெடியா இரு, வருண்!" என்றதோடு செல்ல, இன்றைய தினமே அங்கு களைகட்டிய களியாட்டங்களை நினைத்து, வருண் மனதுக்குள் மத்தளம் வாசிக்கத் தொடங்கியது.
இப்படியே அந்த நாள் கழிய,
அடுத்த நாள் விடியலில், இலங்கையின் கல்கிஸ்ஸையில் அமைந்திருக்கும் அந்த ஆடம்பர கெஸ்ட் ஹவுஸ், இரவெல்லாம் விண்ணைத்தொடும் வேடிக்கையில் ஆட்டம், பாட்டம், மங்கைகளின் கொஞ்சல் என விடிய விடிய ஓய்வின்றி சலசலக்க, விடியலை நெருங்கும் நாழிகையில் இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை மாலினியோடு அறைக்குள் நுழைந்த சர்வா விடியும் வரை அந்த மூடப்பட்ட அறையில் இச்சைக்குள் மூழ்கிச் சுகித்திருந்தான்.
மாலினி, சர்வேஷ் இந்தியா வந்த காலத்தில் பப்பில் அறிமுகமானவள். வெள்ளைகார அழகிகளே கொஞ்சி ஆராதிக்கும் அழகனைக் கண்டு, மாலினி மயங்காமல் இருந்தால் தான் அதிசயம்.
அதிலும் 96 கிலோ வெயிட்டில் கட்டுமஸ்தான தோற்றத்தில், பிடரி முடி, டேட்டூ என ஆறே முக்கால் உயரத்தில் இருப்பவன் மீது பிரமிப்பே அதிகம். குறுகிய காலத்தில் சினிமாத்துறையில் அவள் ஒன்றும் அத்தனை பிரசித்தம் பெறவில்லை. அப்போது அவளுக்கு அளிக்கப்பட்ட போதனை ‘ஒரு புளியங்கொம்பை பிடித்து முன்னேறு' அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவள், சர்வேஷை பயன்படுத்த நினைத்தாள். அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை என்பதை அவள் அறியாள்.
அவன் முரட்டுக் குணம் அறிந்தவள், சர்வேஷ் போன்ற டாப் செலிபிரிட்டியை மிஸ் பண்ணத் தயாராக இல்லை. அவன் பெயரோடு தன் பெயர் இணைத்து பேசப்படுவதை கௌரவமாக எண்ணியவள், சர்வேஷ் எனும் புளியங்கொம்பை பிடித்து கரணம் பாயத் திட்டமிட்டாள். ஆனால், அவன் ஈசனின் ருத்திரத்தை பெயரில் கொண்டவன் என்பதை, அந்த ஆடம்பர பொம்மை மறந்து போனது.
“ஹாய்! டார்லிங் ஹேவ் அ குட் டே!"
ஒரு அன்னிய ஆடவனின் அருகில் ஆடையின்றி இருக்கிறோம் என்ற கூச்சம் சிறிதும் இன்றி, சர்வாவின் மார்பு முடிகளை கையால் அளந்த வண்ணம் மையலாகக் கூறினாள். அவனோ.. அவளை அருவருப்புடன் அற்பமாக ஒரு பார்வை பார்த்து,
“வாட்? ஹேவ்வ குட் டேயா? என்னோட நாள் நல்லதா அமையுது, இல்ல.. அது வில்லங்கமா அமையுது! அதத் தெரிஞ்சிட்டு, நீ என்ன பண்ணப் போற?" என்றான் ஏற்பட்ட அருவருப்பை, சிறிதும் மறைக்காது முகத்தில் காட்டியவாறு.
‘யம்மா.. முசுடு! என்ன இப்படி பேசுறான்?'
மாலினி அதிர்ந்தது என்னமோ ஒரு நிமிடம்தான். அந்த ஒரு நிமிட அதிர்வும், தன் அழகின் மீது அவளுக்கிருந்த அலாதியான கர்வம் அடிபட்டதனாலேயே. இலகுவில் தன்னை சமாளித்துக் கொண்டவள்,
“என்ன சர்வா இப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்காகத் தானே ஷூட்டிங்னு பொய் சொல்லி, ஸ்ரீலங்கா வரை வந்து, ஒரு ஃபுல் டே உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணி இருக்கேன். நேற்று நைட்டை ஹேப்பியா என்னோட ஸ்பென்ட் பண்ண பிறகும், இப்படி சொல்லலாமா?"
அவள் மயக்கும் குரலில் பேச, அந்த வார்த்தையில், அந்த தொனியில்.. அவன் கொண்ட கோபத்துக்கு அளவே இல்லை. ‘ஏமாற்றம், பொய், துரோகம்' மூன்றே வார்த்தை போதுமே, அவனை அரக்கனாக்க.
கண்கள் சிவக்க வேண்டாத ஏதோ நினைவுகளை எண்ணி கோபத்தில் நடுங்கும் தன் கட்டுமஸ்தான உடலை கட்டுபடுத்தும் வகையறியாது, தன்னோடு ஒட்டி இருந்தவளை ஒரே அறையாக அறைந்து தள்ளினான்.
இந்தக் கோபம் அவனின் மிகப் பெரிய பலவீனம். சட்டென்று கை நீட்டி விடுவான். கை நீட்டுவதில் மட்டும் இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்ப்பது, அவன் அகராதியிலேயே இல்லை. அவன் அடித்த வேகத்தில், தன்னை போர்த்தியிருந்த போர்வையோடு கீழே விழுந்தவள், அவனை அதிர்ந்து பார்த்தாள்.
அவனோ எதையும் முகத்தில் காட்டாது, டவலை இடுப்பில் கட்டிக் கொண்டே,
“ஹவ்.. டேர் யூ? என்ன தைரியம் இருந்தால் என்னிடம் இந்த வார்த்தையை சொல்லுவ? உன்னை நான் என்னோட ஒருநாள் இரவு செலவழின்னு சொன்னேனா? உனக்கு என்கிட்ட தேவை இருந்துச்சு, தேடி வந்த!" என்றவன் அவள் உடலை சுட்டிக்காட்டி,
“எனக்கு இது தேவை.. அக்ஸப்ட் பண்ணிட்டேன்."
அவளோ செய்வதறியாது, உடனே தன் ஆடைகளை அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து தன்னை திருத்திக் கொண்டு வெளியே வர, மாலினியை உக்கிரமாக நோக்கி, ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக்கொண்டு, அப்போதும் அவளை விடுவதில்லை என்பதை போல,
“என்ன நினைச்ச, இவன் அமெரிக்கால இருந்து வந்திருக்கிற ஏமாந்த சோணகிரி, ருசி கண்ட பூனை! உடலைக் காட்டி ஏமாற்றி விடலாம்னா?
உன்னை விட அழகிகளைப் பார்த்தவன்டி இந்த சர்வா. நீ என்ன நினைக்கிறனு எனக்கு நல்லாவே தெரியும்!"
“ஐய்யோ சர்வா! என் ஸ்டேட்டஸை பார்த்து பொறாமைப்பட்ட யாரோ, உங்க கிட்ட என்னைத் தவறா கதை கட்டி இருக்காங்க. நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல. உண்மையைச் சொல்ல வேணும்னா, உங்களை விரும்புறேன்."
“ஏய்!" உறுமியவன்,
“என்ன சொன்ன, காதலா? அதுவும் உங்கிட்டவா? அதுக்கு அர்த்தம் தெரியுமா, உனக்கு? நான் ஒன்னும் யோக்கியனில்ல! பட் என் பிறப்புக்கு அந்தத் தகுதி இருக்கு மாலினி. லிசன் உன்னோட இந்தப் பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. இந்த ஃபீல்டில உன்னோட அழக மட்டுமில்ல இளமையையும் ஆயுதமாக்கிறனு நல்லாவே தெரியும். இந்த சித்து விளையாட்டெல்லாம் என்கிட்ட வேணாம்!"
அவள் முகத்தில் ஒரு ஹிந்திப் படத்திற்கான பட வாய்ப்பு அக்ரிமெண்ட்டை தூக்கி எறிந்து,
“இதை எடுத்துக்கிட்டு ஒழுங்கா ஊர் போய்ச் சேரு. இனி உன்னை நான் பார்க்கக்கூடாது, காட் இட்!"
அவசரமாகத் தலையாட்டியவள், கிடைத்த வரை லாபம் என ஓடி விட்டாள். அதுவரை நேரமும் இழுத்துப் பிடித்த மூச்சை, நிதானமாக வெளியிட்டவன்...
சப்தமில்லா ஆழிக்குள் அசைந்தாடும் அலைகளை, தன் அறை ஐன்னல் வழியாக நோட்டம் விட்டான்.
“ச்சே! ஸ்ட்ரஸ் ரிலீவ் பண்றேன், கண்ட கருமத்தை மறக்கிறேனு, வேண்டாத வேலை எல்லாம் செஞ்சு, வர்ற ஒவ்வொருத்திக்கும் தேவையில்லாத எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு. கருமம்! இன்னையோட இந்தப் பழக்கத்தை விட்டுத் தொலையணும்!"
வாய் விட்டே புலம்பியவன், இனி வாழ்க்கையில் தீண்டப் போகும் முதலும் கடைசியமான பெண், அவன் மனைவி மட்டுமே! அப்படியே உடல் களைப்பில், தன் பஞ்சு போன்ற மெத்தையில் உடலை சாய்த்துக் கொண்டான்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் சிகைக்குள், ஒரு முரட்டு கரம் மெதுவாக வருடிக் கொடுக்க, நீண்ட வருடம் கழித்துக் கிடைத்த சுகம், அதோடு கடைசியாக இந்த சுகம் கிடைத்த தினம் இரண்டும் ஞாபகம் வர, படக்கென விழிகளைத் திறந்தவன் இரு விழிகளும் கருஞ்சாந்தாகச் சிவந்திருந்தது. அந்த முகத்தில் ஏகத்துக்கும் உணர்வுகள் அலை பாய,
“ஹவ் ஆர் யூ சர்வேஷ்!"
“ப்ப்.. ஃபைன் டேட்"
தந்தையின் அழுத்தமான குரலை, அலட்சியம் செய்ய முடியவில்லை.
“கிவ் மீ சம் டைம் டேட்"
குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்த சர்வேஷ், வெறும் ஷார்ட்சை மட்டும் அணிந்து, வெற்றுடலை டவலால் துடைத்துக் கொண்டே வந்தவன் தந்தையிடம்,
“லிவிங் ஏரியால போய் பேசுவோம் வாங்க." என்றதோடு, தந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
ஏனோ வேற்றுப் பெண்ணோடு சல்லாபித்த அந்தப் படுக்கையில் தந்தையை அமர வைப்பது கூடத் தீண்டாமை எனக் கருதினான். அந்த தீண்டாமையை, தானுமே செய்து பிழைக்கின்றோம் என்று அறிவான்.
ஆனால், அவன் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு தீண்டாமையின் நிகழ்வை ஒழிக்க, அவன் ஓடிய பாதை தான் அங்கே பிழையாகியது. அக்கண்யனோ, தன் முன்னே அமர்ந்திருக்கும் மகனின் நெஞ்சத்தில் பச்சை குத்தியிருந்த அக்கண்யன் என்ற தன் பெயரை கர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் மகன் உருவத்தை கண்களுக்குள் உள்வாங்க, உள்வாங்க நெஞ்சம் கர்வத்தில் விம்மித் தணிந்தது.
ஆண் பிள்ளைகள் இருவரும் ஜனனியில் மிகப் பிரியம்! சர்வேஷூம் அவ்வழியே! ஆனால் ஆதவ் அன்னையை உடும்பாக அப்பிக்கொள்ள, அதில் சர்வேஷுக்கு என்றும் பொறாமை இருக்கும். அதை ஈடுகட்ட அக்கண்யனை, இவன் உடும்பாக அப்பிக் கொள்வான்.
சர்வேஷுக்கு, அக்கண்யன் என்பவன் பிதா, குரு, ஹீரோ அப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்றோ உறவின் நடுவில் பள்ளம் விழுந்துவிட்டது. இருந்தும் நெஞ்சின் ஈரம் காய்ந்து விடுவதில்லை.
“டேட்!" தகப்பன் பார்வையில் அவன் இரும்பு உள்ளம் உருகியது.
“அப்பா! சொல்லு சர்வேஷ்!" ஆழ்ந்த குரலில் கடையிதழோரம் புன்னகையில் துடிக்க,
“அப்பா! ஹூம்ம்.. கொஞ்சம் வயசான ஃபீல். டேட் கொஞ்சம் யூத்தா இருக்கு. அக்கண்யனுக்கு தான் வயசாகாதே!"
“ஹா.. ஹா..! மை டியர் கிரேசி பாய்!"
வெகு நாளைக்குப் பின், இருவர் உள்ளமும் லேசாக உணர,
“ஹெவ் ஆர் யூ டேட்?"
“எனக்கு என்ன குறை, என் ஜனனி இருக்கும் போது?" அழுத்திச் சொல்ல, அவன் இறுகிப் போனான். அதுவரை இருந்த இலகுத்தன்மை காற்றில் கரைய,
“சோ.."
“சோ.. நீ சொல்லு."
தனக்கே தன் கேள்வியை திருப்பிவிட்ட தந்தையின் சாணக்கியத்தனத்தில், மீண்டும் இதழ் பிரியா புன்னகையே தோன்ற...
“என்ன வேணும் டேட்?"
“எப்போ வீட்டுக்கு வார சர்வேஷ்?"