அத்தியாயம் - 6
“என்னம்மா நீங்க? காலையில இருந்து நாலு மணி நேரமா இப்படி பூஜை அறையிலேயே இருக்கிறீங்களே! நல்லாவா இருக்கு, எழுந்து வெளிய வாங்கம்மா."
மௌனம், நீண்ட மௌனம். நேற்றிலிருந்து ஜனனியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மௌனம் மட்டுமே பதில்.
“அம்மா!" ஆத்வீக் குரலை உயர்த்தவும்,
“ஆத்வீக்.!" என்ற அக்கண்யனின் மிரட்டும் குரல் அவனைத் தடை செய்ய,
“அப்பா!" தந்தையை ஆத்விக் இரஞ்சலாக அழைக்கவே, மனைவியின் மனவோட்டம் புரிந்தவன்,
“விடு ஆத்விக். அவளுக்கு அதுதான் பிடிச்சி இருக்குனா, அதையே செய்யட்டும்."
என்றவன் ஜனனியை உறுத்து விழிக்க, கணவனின் பார்வையில் தலை கவிழ்ந்தாள்.
“அப்பா இப்படி சொன்னா எப்படி? ரெண்டு நாளா அவன் வரமாட்டானானு இவங்க தான் தவம் இருந்தாங்க. ஓகே, வந்ததும் இங்க வரல. நேற்று வருவான்னு நம்புனாங்க. நேற்றும் வரல. பட் இன்னைக்கு கண்டிப்பா வருவான், வருவான் என்ன அங்கிருந்து புறப்பட்டுட்டானு இப்போ தானே வருண் மெசேஜ் செய்தான். இன்னுமே அம்மா இப்படி இருந்தா என்ன அர்த்தம்?"
“சோ! அதுக்கு என்ன செய்யச் சொல்ற ஆத்விக். அவளும் அவளோட பிடிவாதமும் ஒரு பக்கம்னா, அவள் ரத்தத்தில் இருந்து வந்த அதே பிடிவாதம் தான், அவள் மகன் ரத்தத்தில் இருக்கு.
நீங்க சொல்லி நான் என்ன வர்றதுன்னு நேற்று அவன் வரல. பட் இன்னைக்கு அவன் வருவான்னு, நம்ம எல்லாருக்கும் தெரியும்!"
“அதுதான்பா சொல்றேன். வராதவனுக்காக அன்னைக்கு அவ்வளவு பண்ணுனாங்க. இப்போ என்னன்னா காலைல தாத்தாவோட திதி பூஜை முடிந்ததுல இருந்து, பூஜை அறையில வந்து உட்கார்ந்துக்கிட்டு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடித்தா எப்படி?"
இலங்கை வரேன் என்று முரண்டு பிடித்தவனை, தந்தை மூர்க்கணாங்கயிறு கட்டி இழுத்து வராத குறையாக அழைத்து வந்திருக்க, தாயோ அசையாது சிலை போல் இருக்கிறார் என்பதில், அவனுக்குப் பெரும் ஆதங்கம்.
இருக்காதா பின்னே! மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், சொந்த வீட்டில் கால் பதிக்கும் தமையனுக்காக, உடன் பிறந்தவன் இதயம் துடித்தது. அதும் எப்பேற்பட்ட பிரிவு! நினைக்கவே ஆயாசமாக இருந்தது.
இவர்கள் இங்கு வழக்காடிக் கொண்டிருக்க, வீட்டு மதிலுக்குள் ரேஞ்ச் ரோவர் ‘கிரீச்' என்ற சத்தத்தோடு நிற்க. உள்ளிருந்தவர்களுக்கு அந்த ஒலி, சர்வேஷ் வந்துட்டான் என்பதைச் சொல்லியது.
“அம்மா, சர்வா வந்துட்டான். வாங்கம்மா ஆரத்தி எடுக்க."
ஆத்விக்கின் பரபரப்பான குரலுக்கும், ஜனனி அசையவில்லை. அக்கண்யனோ அழுத்தமாக,
“ராகவிமா, நீ போய் ஆரத்தி எடு."
வேதனையோடு தன் அத்தையைப் பார்த்தவள், நேரம் கடத்தாது ஆரத்தி தட்டோடு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நொடிகள் பிந்தினாலும், புயல் கரையைக் கடந்து விடும் என்பதை அறியாதவளா, அவள்.
சர்வாவை நெருங்கிய ராகவியோ, நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஓங்குதாங்கான உருவத்தோடும், உடையைத் தாண்டிப் புடைத்த புஜங்களோடும், தாடி, மீசை, தலை முடியை ஒரு ரப்பர் பேண்டுக்குள் அடக்கிய விதம் என தன் முன் நிற்கும் ராட்சச உருவத்தில், வாயைப் பிளந்து விட்டாள்.
ராகவி சற்றே ஜாலி பேர்வழி. எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் குணமுடையவள். அவளின் இந்தத் தோற்றத்தை கண்ட சர்வா, இதழ் கரையோரம் மெல்லிய புன்னகை பூத்தது. இருப்பினும் இரும்பு உருகாது என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டவன், எங்கோ பார்வையை பதித்துக் கொண்டு,
“நகருங்க!" என்றான் இறுக்கமாக.
சட்டென விழியோரம் தேங்கி நின்ற விழி நீர், சர்ரென அவள் கன்னங்களில் இறங்கத் தொடங்கியது.
எனினும் எதிரே இருந்தவன் முகத்தில் இளக்கம் தெரியவில்லை. ஆனால், ராகவிக்குப் பின்னிருந்த ஆத்விக்கின் முகம் முழுவதும் புன்னகையில் பூத்திருந்தது. மனைவியின் அழுகை தம்பியின் இறுக்கம் எல்லாம் கடந்து, தமையன் வந்து விட்டான் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் மிஞ்சி இருக்க.
“ராகவி, என்ன இது? குழந்தை பிள்ளை மாதிரி அழுதுக்கிட்டு?"
அவளை அதட்டியவன், கற்பூரத்தை பற்ற வைக்க, அவர்களை ஒரு கையில் தடுத்தவன்..
“இதுக்கெல்லாம் அவசியம் இல்லை!" அழுத்தமாக மறுக்க,
“நீ வாய மூடுடா, தடியா!"
என்ற ராகவியின் குரல் அன்பெனப் பாய்ந்து வர,
பின் இருந்த ஆத்விக் வாய்விட்டுச் சிரித்தான் என்றால், சர்வேஷ் உக்கிரமாக முறைத்தான்.
அங்கு அக்கண்யன் வெறும் பார்வையாளர் மட்டுமே. பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறானே, வருண் எப்படியோ அப்படியே சர்வேஷூம் ராகவிக்கு. என்ன வருணைக் காட்டிலும், சர்வேஷின் மீது எப்போதுமே ராகவிக்கு ஒரு பயமும், மரியாதையும் இருக்கும்.
அதே நேரம் அவள் வாய் அவள் சொன்ன பேச்சை என்றும் கேட்பதில்லை. இங்கு இப்படி இருக்க, மூன்று வருடங்கள் கழித்துக் கேட்ட மகன் குரலில் அந்தத் தாய் உள்ளம் துடிக்க, உடம்பெல்லாம் மயிர் கூச்செறிந்து பெற்ற வயிறு துடிதுடிக்க, வியர்வையில் குளித்து மூர்ச்சையாகி விடும் நிலையில்.. பூஜை அறையில் தவம் கிடந்தாள், ஜனனி அக்கண்யன்.
கவனம் எங்கு இருப்பினும் மனைவியை கவனித்துக் கொண்டிருந்தவன் பார்வையில் இது தப்பவில்லை. ஆனால், சில காயங்களுக்கு வலிக்க, வலிக்க மருந்திட வேண்டியதன் அவசியம் உணர்ந்தவன் அமைதி காக்க,
“உஷ்!.. போதும் ராகவி! அமைதியா ஆரத்தி எடு."
“வேண்டாம்னு சொல்றேன்ல"
வழமையான அவன் உறுமலில் ஆரத்தி தட்டோடு ராகவி இரண்டு எட்டு பின்னே நகர, அவளை இறுக்கிப் பிடித்த ஆத்விக்,
“நீ எடு. நான் சொல்றேன்ல, நீ எடுடி!"
அவன் மிக அமைதியான குரலில் அழுத்தமாகக் கூறிட, அந்த தொனியில் தம்பி அமைதி அடைந்தான். விழியில் பெருகிய விழிநீரை துடைக்க மறந்த ராகவி, ஆரத்தி எடுத்து விட்டு திலகமிட எட்ட முனைந்தாள்.
அவளுக்கு எட்டவும் இல்லை, அவன் குனியவும் இல்லை. கணவனைப் பாவமாக ஒரு பார்வை பார்க்க, ஆத்விக் லேசாக மனைவியை அவன் உயரத்துக்கு தூக்கிப் பிடிக்கவும், சர்வேஷ் சிரித்து விட்டான்.
அங்கு கல்லாக சமைந்திருந்த பெண் அகலிகையோ, கேட்டும் கேட்காத வண்ணம் மௌனித்திருந்தாள்.
“தடியா! கொஞ்சம் குனிஞ்சா தான், என்னவாம். கிரீடம் இறங்கிடுமோ?"
“ஆமா.. கிரீடம் இறங்கிட்டா, தூக்கி மாட்ட முடியாது!"
அவனும் கிண்டலோடு கூறி விட்டு வீட்டுக்குள் வர, ஆத்விக் சர்வேஷை பாய்ந்து அணைத்துக் கொண்டான். சர்வேஷ் திருப்பி அணைக்கவில்லை. ஆனால், மிக நெகிழ்ந்து போயிருந்தான்.
தமையனின் உடல் மொழியில் அவனைக் கண்டு கொண்டவன்,
“நீ ஹக் பண்ணாத, இப்படியே பிடிவாதமா இரு. பட்.. நான் எப்பவும் உனக்கு அண்ணனா தான் இருப்பேன். தடுக்க நினைக்காத ராஸ்கல்!"
ஆத்விக் வாயை மூடும் முன், அண்ணனை இடையோடு பிடித்து இரண்டடி மேலே தூக்கி இருந்தான்.
“விடுடா டேய்! கீழ போட்றாதடா விடுடா!"
“இஸ் இட்?"
அப்படியே இன்னும் சற்று மேலே தூக்கியவன்..
“சின்ன வயசுல நீங்க தூக்கும் போது, நான் இப்படி பயப்படலையே! இப்ப என்ன பயமா? 96 கிலோ இருந்து ரெண்டு கிலோ கூடி 98 கிலோ இருக்கேன். உங்களை தூக்க முடியாதா என்ன?" என்றதும்,
“ஹா.. ஹா.." ஆத்விக் வாய்விட்டுச் சிரிக்க,
அக்கண்யன் நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின் பிள்ளைகளின் இணக்கத்தில் நெகழ்ந்து இருந்தான் எனில், ஜனனியோ சிலையென இருந்த தன் நிலையை மாற்றவில்லை. கேலி கிண்டலோடு ஆத்விக்கை சர்வேஷ் இறக்கி விட, ஆத்விகோ அவனை அழுத்தமாகப் பார்த்து,
“அம்மாடா!" இப்போது சர்வேஷிடம் அழுத்தமான அமைதி.
“அம்மா சர்வா!" மீண்டும் அவனிடம் அமைதி. “சர்வா!" ஆத்விக் குரல் உயர்த்தவும்,
அதுவரை சிலையாக இருந்தவள், அமர்ந்த நிலையில் மயங்கிச் சரிந்தாள். மனைவியில் கண் வைத்திருந்த அக்கண்யன்,
“ஜனனி!" என்ற கூவலோடு அவளை நெருங்கும் முன், சர்வேஷ் சிறுகுழந்தையென தன் தாயைக் கைகளில் ஏந்தியவன், நீண்ட இருக்கையில் கிடத்தி, அவர் தலையை தன் மடியில் ஏந்திக் கொண்டவன்,
“அண்ணி பாருங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க. டாக்டருக்கு தானே படிச்சீங்க? ஒருத்தவங்க மயங்கி விழுந்தா, உடனே ட்ரீட்மென்ட் பண்ணனும்னு தெரியாதா?”
அவன் உரக்கக் கத்தவும் பதறியவள், மெடிக்கல் கிட்டைக் கொண்டு வர ஓடினாள். அன்னையை நெருங்க நினைத்த ஆத்விக்கை, நெருங்காதே என அக்கண்யன் கண்ணைக் காட்ட, அவனும் அமைதி காத்தான். தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதைப் போல், அன்னையின் மூர்ச்சையில், மகனின் மூர்ச்சையான உணர்வுகள் உயிர் பெற்றது.
“அண்ணா, தண்ணிய எடுத்துட்டு வாங்க"
நீரை லேசாக எடுத்து அவள் முகத்தில் தெளித்தும், மயக்கநிலை கலையாது இருக்க, இப்போது மகன் பதறி விட்டான்.
“அண்ணி!" அவன் மீண்டும் உரக்கக் கத்தவும், ராகவி பதறி அடித்துக் கொண்டு வந்து தன் அத்தையை பரிசோதித்து விட்டு,
“பிரஷர் இன்க்ரீஸ் ஆகியிருக்கு, ஆத்விக். ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விடுவோம். என்கிட்ட அத்தைக்கு தேவைப்படுமேன்னு வாங்கி வச்ச மெடிசின் இருக்கு. இருங்க." என்றவள் ஊசியில் மருந்தை ஏற்ற,
“அண்ணி, அவங்களுக்கு தான் ஊசி பிடிக்காதுல?"
“அதுக்குன்னு இப்படியே விடச் சொல்றியா?"
அது வரையில், தன் அன்னையின் தலையை நெஞ்சோடு அணைத்துப் பிடித்த நிலையை மகன் மாற்றவில்லை. ராகவியோ நொடியில் மருத்துவம் பார்த்து முடிக்க, நீண்ட நேரத்தில் கண்விழித்த ஜனனி கண்டது, தன்னைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்த தன் மகனையே. அவன் பரந்த இதயத்திற்குள், தாயோ குருவியாகி மகனில் அடைக்கலமாகி இருக்கும் விந்தையைப், பார்க்க அத்தனை ரம்யமாக இருந்தது. நடுங்கும் விரல்களை மெதுவாகத் தூக்கி, மகன் முகத்தை நடுக்கத்தோடு வருடி, அந்த விரல்களை தன் உதட்டில் ஒத்தி முத்தமிட்டு,
“கண்ணா அ.. அம்மாஆஆ...” திணறியவள்,
“இந்த அம்மாவ.. மன்னிப்பியா?"
அப்படியே அன்னையின் முகத்தை தன் நெஞ்சோடு புதைத்து, அவள் தலையை தன்னோடு பிடித்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், தாயின் தலை மீது நாடியைப் பதித்து கண்மூடிக் கொண்டான். மகன் வாய் திறந்து பேசாத ஆயிரம் வார்த்தைகளை, அவன் இதயம் அந்தத் தாயிடம் பேசியது. இதயத்தின் பாஷைகளை விடவுமா, அன்னையிடம் மகன் வாய் வழி பேசி விட முடியும்.
“தெரியல? மன்னிப்பேனா, மறப்பேனா, பேசுவேனா, பேசமாட்டேனான்னு தெரியல? அங்கிருந்த வரைக்கும் எப்படியோ! இனி எதுவுமே தெரியல. உங்களை வெறுக்க முடியுமா, முடியாதா? இல்ல.. அம்மான்னு கூப்பிட முடியுமா, முடியாதா? உங்கள நேசிக்க முடியுமா, முடியாதா? இல்ல.. ஒரு மகனா உங்ககிட்ட உரிமை எடுக்க முடியுமா? முடியாதா? இப்படி எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை. எதையும் கேட்காதீங்க. ஆனா இனியும் உங்களை விட்டு விலகிப் போக மாட்டேன். போகவும் முடியாதுன்னு தோணுது.
அங்க இருக்கும் போது இருந்த வெறுப்பும், வைராக்கியமும் இதோ இப்படி உங்களைப் பார்த்தா ஒடஞ்சிடும்னு தான், இங்க வராம இருந்தேன். ஆனா.. உங்க புருஷனை வைச்சு அதையும் சாதிச்சிட்டீங்க!"
அவன் குரல் அழுத்தமாக, இறுக்கமாக, உருக்கமாக மாறி மாறி வந்தாலும், அன்னையின் தலையை மட்டும் நெஞ்சில் இருந்து அகற்ற அனுமதிக்கவில்லை. மேலும் அவனோ,
“அக்கண்யனோட ரத்தம் எப்படி ஜனனிய வெறுக்கும். முயற்சிக்கிறேன், உங்களை உங்களுக்காக மட்டும் நேசிக்க முயற்சிக்கிறேன். உங்கள.. உங்களுக்காக மட்டும் மன்னிக்க முயற்சிக்கிறேன். உங்களுக்காக மட்டும் மறக்கவும் முயற்சிக்கிறேன்."
என்றவன் அழுகையில் குலுங்கும் தாயை அணைத்த வண்ணம், தலையை பின்னால் சாய்த்து அமைதி காக்க,
ஜனனியோ.. மகனின் ஒவ்வொரு வார்த்தையிலும் மீண்டும் மறு ஜனனம் எடுத்தாள். அவன் வார்த்தை கொடுத்த அழுத்தம், அவளை அழ வைத்து, நெகிழ வைத்து, சிரிக்க வைத்து, உணர்வுகளை கொப்பளிக்க வைத்தது. பேச மாட்டானா என்றவன் பேசி விட்டான். தொட மாட்டானா என்ற மகன், தாயைச் சேயென நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். உருக மாட்டானா என்றவன், உன் உயிர் உருகக் கரைகிறான். இதை விட பெற்ற தாய்க்கு என்ன வேண்டும். மகனின் மறுபுறம் வந்தமர்ந்த அக்கண்யனும், தன் பரந்த கையில் இருவரையும் ஒரு சேர அணைத்து,
“இனாஃப்! இனி இந்த பேச்சு வேண்டாம். அவ உன் அம்மா, நீ அவனுக்கு மகன். உங்க ரெண்டு பேருக்கும் இடையில யாரும் வர மாட்டாங்க. உங்க ரெண்டு பேருக்கும் எப்போ பழையபடி இருக்கணும்னு தோணுதோ, அப்போ அவளோட சர்வேஷா மாறிக்கோ!"
இப்படி அத்தனை நேரம் அவர்களுக்குள் நீடித்த மோன நிலையை,
“அண்ணி!" என்ற பரபரப்பான கவிதாவின் அழைப்பு கலைக்க, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மன நிலையில் பரபரக்கத் தொடங்க,
இதை எதிர்பார்த்தேன் எனும் மனநிலையில், அக்கண்யன் ஒருவன் மட்டுமே இருந்தான்.
இத்தனை நேரம் இருந்த ஒரு இதத்தை கவிதாவின் வருகை அபஸ்வரமாகக் கலைக்க, கவிதா அண்ணி என்ற அழைப்போடு ஜனனியிடம் விரைய, அத்தனை நேரம் தாயை அணைத்துப் பிடித்திருந்தவன், அவர் பிடியை விட்டு விலகி முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான். அவன் உடலோ நாண் பூட்டிய வில்லாக விறைத்து நிற்க, ராகவியின் உள்ளம் அடித்துக் கொள்ளத் தொடங்கியது.
அதற்கு ஏற்ப கவிதா சர்வேஷை நெருங்க, நெருங்க, அவன் வெளுத்த முகம் உக்கிரத்தை படிப்படியாகப் பூசிக் கொண்டது. பார்வையை சிறிதும் தாழ்த்தவோ, விலக்கவோ இல்லாது அவரை உறுத்து விழித்தான்.